என் மலர்
திருவண்ணாமலை









எடப்பாடி பழனிசாமி இன்று மதியம் ஆரணியில் அமைச்சர் சேவூர் ராமச்சந்திரனை ஆதரித்து பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:-
தி.மு.க. ஆட்சியில் எப்போது மின்சாரம் இருக்கும், எப்போது வரும் என்று தெரியாமல் இருந்தது. ஆனால் அ.தி.மு.க. ஆட்சியில் மின்சாரம் தட்டுப்பாடு இல்லாமல் வழங்கப்பட்டு வருகிறது.
அண்ணா மறைவிற்கு பின்னர் நெடுஞ்செழியன்தான் முதல்வராக வந்திருக்க வேண்டும். ஆனால் குறுக்கு வழியில் கருணாநிதி முதல்வரானார். நான் குறுக்கு வழியில் முதல்வராக பொறுப்பேற்கவில்லை. அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் என்னை முதல்-அமைச்சராக தேர்ந்தெடுத்தனர் என்றார்.
மேலும் எடப்பாடி பழனிசாமி பேசியபோது, அ.தி.மு.க. மீண்டும் ஆட்சிக்கு வந்தால் ஆரணியை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டம் உருவாக்கப்படும் என்று உறுதியளித்தார்.
சட்டமன்ற தேர்தல் வருகிற 6-ந்தேதி நடக்கிறது. இதையொட்டி அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்-அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார்.
அவர் அ.தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து ஓட்டு சேகரித்து வருகிறார்.
நேற்று அவர் கள்ளக்குறிச்சி, விழுப்புரம் மாவட்டத்தில் பிரசாரம் செய்தார்.
இன்று காலை திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி தொகுதியில் போட்டியிடும் பா.ம.க. வேட்பாளர் முரளிசங்கரை ஆதரித்து பிரசாரத்தில் ஈடுபட்டார்.
வந்தவாசி பகுதி கிராமங்கள் நிறைந்த பகுதி. பெரும்பாலானவர்கள் விவசாயிகள் விவசாய தொழிலாளர்கள். அனைவருமே விவசாயத்தை நம்பி தான் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். நூற்றுக்கு 70 சதவீதம் பேர் விவசாயத்தை நம்பி வாழ்கிறோம். விவசாயத்தையும் விவசாயிகளையும் காப்பது அரசின் கடமை.
இதற்காக அம்மாவுடைய அரசு பல்வேறு திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகிறது. நீர் மேலாண்மை திட்டத்தின் கீழ் குடிமராமத்து பணிகள் செய்யப்பட்டு வருகிறது. தமிழகத்தில் 40 ஆயிரம் ஏரிகள் உள்ளன. பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள 6 ஆயிரம் ஏரிகள் ரூ.1300 கோடி செலவில் குடிமராமத்து பணிகள் செய்யப்பட்டு உள்ளன. இதனால் கோடை காலத்திலும் ஏரிகள் நிரம்பி வழிகிறது. கோடை காலத்தில் தண்ணீர் இல்லாமல் இருந்த குளங்கள் தற்போது தண்ணீர் நிரம்பி காட்சியளிக்கின்றன. இந்த திட்டத்தின் மூலம் கோடை காலத்திலும் விவசாயிகளுக்கு தண்ணீர் கிடைக்கிறது. குடிநீர் கிடைக்கிறது.
நான் ஒரு விவசாயி என்பதால் இந்த திட்டத்தை நிறைவேற்றி உள்ளேன். விவசாயிகளுக்கு உயிர் நீர். தண்ணீர் இருந்தால்தான் விவசாயம் செய்ய முடியும். பருவமழை காலங்களில் ஆறு மற்றும் ஓடைகளில் உள்ள தண்ணீரை சேமிக்க அரசு நடவடிக்கை எடுத்தது. ஓடைகளின் குறுக்கே தடுப்பணைகள் கட்டப்பட்டு தண்ணீர் சேமிக்கப்பட்டுள்ளன. திமுக ஆட்சியில் இந்த திட்டங்களை செய்தார்களா?.
உழவன் செயலி மூலம் விவசாயிகள் பயிர்கள் பூச்சிகளால் தாக்கப்பட்டு இருந்தால் அதனை படம்பிடித்து அனுப்பினால் அவர்கள் என்ன மருந்து தெளிக்க வேண்டும் என்பதை தெரிந்து கொள்ள முடியும்.
மேலும் மார்க்கெட் கமிட்டிகளில் உள்ள விலைப்பட்டியல் அறிந்துகொள்ள முடிந்தது. விவசாயிகள் பயன்பெற அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு 2647 கோடி இழப்பீடு வழங்கி உள்ளது. புயல் வெள்ளம் போன்றவற்றால் பாதிக்கப்படும் போது அவர்களுக்கு அரசு துணையாக நிற்கும். பயிர் காப்பீடு திட்டத்தின் மூலம் ரூ.9300 கோடி இழப்பீடு தொகை வழங்கப்பட்டுள்ளது.
இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் அதிக அளவு பயிர் காப்பீட்டுத் தொகை வழங்கப்பட்டுள்ளது. இப்படி விவசாயிகளுக்கு பக்கபலமாக அரசு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. கூட்டுறவு சங்கங்களில் விவசாயிகள் கடன் ரூ.12,110 கோடி தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் 16 லட்சத்து 43 ஆயிரம் விவசாயிகள் பயனடைந்துள்ளனர்.
பிற கட்சிகள் தேர்தலில் வெற்றி பெற்ற பிறகுதான் வாக்குறுதியை நிறைவேற்றுவார்கள். ஆனால் நாங்கள் தேர்தலுக்கு முன்பே விவசாய கடனை தள்ளுபடி செய்துள்ளோம். கண்ணை இமை காப்பது போல அரசு விவசாயிகளை காத்து வருகிறது.
மின்மோட்டார் சொட்டு நீர் பாசனம் போன்றவற்றிற்கு மானியம் வழங்கப்படுகிறது. இந்தியாவிலேயே சொட்டு நீர் பாசனத்திற்கு அதிகளவு தமிழகத்தில்தான் மானியம் வழங்கப்பட்டுள்ளது.
விவசாய உற்பத்தி 100 லட்சம் மெட்ரிக் டன்னாக உயர்த்தப்பட்டு தமிழகம் மத்திய அரசின் விருதைப் பெற்றுள்ளது. மு.க.ஸ்டாலின் ஒன்றுமே செய்யவில்லை என்கிறார். ஒன்றுமே செய்யவில்லை என்றால் எப்படி விருது கிடைக்கும். தொடர்ந்து 5 ஆண்டுகளாக மத்திய அரசின் விருதை பெற்றுள்ளோம். விவசாயிகளுக்கு டிராக்டர் உள்ளிட்ட பொருட்கள் வாங்க மானியம் வழங்கப்படுகிறது. பண்ணை குட்டைகளை அமைத்துத் தருகிறோம்.
உணவு உற்பத்தியை பெருக்க வேண்டும். அதே நேரத்தில் அவர்களுக்கு போதிய விலை கிடைக்க வேண்டும். இதற்காக இரட்டிப்பு உற்பத்தியை அரசு கடைபிடித்து வருகிறது.
மக்காச் சோளப் பயிர்கள் பூச்சிகளால் பாதிக்கப்பட்டபோது ரூ.48 கோடியில் பூச்சி மருந்து தெளிக்கப்பட்டது. விவசாயிகளுக்கு அனைத்து வகையிலும் பக்கபலமாக இருந்து கஷ்ட காலத்தில் மீட்டு எடுத்து வருகிறோம்.
ஸ்டாலின் போலி விவசாயி என்கிறார். யாராவது போலி விவசாயி இருக்கிறார்களா?. நமக்கு நாமே திட்டத்தின் மூலம் ஸ்டாலின் ஊர் ஊராக சென்று மக்களைச் சந்தித்தார். தலைவாசலுக்கு சென்ற அவர் கரும்பு தோட்டத்திற்குள் கான்கிரீட் சாலை அமைத்து பேண்ட் முழுக்கை சட்டை போட்டுக் கொண்டு சென்று பார்வையிட்டார். உண்மையான விவசாயியாக இருந்தால் அவர் இப்படி செய்வாரா? ஆனால் அவர் நம் மீது பழி போடுகிறார். நான் 75 ஆண்டுகளாக விவசாயி. எனது தாத்தா அப்பா நான் பரம்பரை பரம்பரையாக விவசாயம் செய்து வருகிறோம்.
தோட்டவேலை தெரியும். மம்பட்டி பிடித்த கை எனது கை. டிராக்டர் ஓட்ட தெரியும். எனது தந்தை விவசாயத்தை கற்று தந்திருக்கிறார். எந்த பயிர் எந்தபட்டத்தில் விதைக்க வேண்டும் என்பதை அறிந்து இருக்கிறேன். ஸ்டாலின் விவசாயிகளைக் கொச்சைப்படுத்தி பேசுகிறார்.
விவசாயிகளை அவமானப்படுத்தி கொச்சைப்படுத்தி வரும் மு.க.ஸ்டாலினுக்கு தக்க பாடம் புகட்ட வேண்டும். குழந்தையை தாய் பார்ப்பது போல விவசாயிகள் பயிர்களை பார்ப்பார்கள். பயிர் வாடினால் அதுக்கு என்ன மருந்து அடிக்க வேண்டும் என்ன உரம் இட வேண்டும் என பார்த்து பார்த்து செய்வார்கள்.
ஸ்டாலினுக்கு இதெல்லாம் தெரியாது. திட்டமிட்டு பொய் பிரசாரம் செய்து வருகிறார். அவருக்கு விவசாயிகள் யார் என்பதை காட்ட வேண்டும்.
விவசாயிகளுக்காக இந்த அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. ஏழை விவசாயிகளுக்கு அரசு நிலம் வாங்கி வீடு கட்டிக் கொடுக்கும். தாழ்த்தப்பட்டவர்கள் ஏற்கனவே அரசு வீடுகள் பெற்றிருந்தாலும் அந்த வீடுகள் சேதமடைந்திருந்தால் அவர்களுக்கும் வீடுகள் கட்டித் தரப்படும்.
தேர்தல் அறிக்கையில் பல்வேறு வாக்குறுதிகளை அளித்து இருக்கிறோம். ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஆண்டுக்கு 6 சமையல் கியாஸ் சிலிண்டர்கள் இலவசமாக வழங்கப்படும்.
சுய உதவிக்குழுவினர் கூட்டுறவுக் கடன் தள்ளுபடி செய்யப்படும். 100 நாள் வேலை திட்டம் 150 நாட்கள் ஆக உயர்த்தப்படும். முதியோர் உதவித்தொகை ஊனமுற்றோர் மாற்றுத்திறனாளிகள் உதவி தொகை உயர்த்தி வழங்கப்படும்.
18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு ஓட்டுனர் பயிற்சி அளித்து லைசென்ஸ் பெற்று தரப்படும். ரேசன் பொருட்கள் வீடு தேடி வரும். உழவர் மானியம் ரூ 7,500 வழங்கப்படும். இஸ்லாமிய அமைப்புகளுக்கு பாதுகாப்பாக அதிமுக அரசு செயல்பட்டுக்கொண்டிருக்கிறது. அதிமுக ஆட்சியில் ஜாதி மத கலவரங்கள் எதுவும் இல்லை. இங்கு சட்டத்தின் ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது. ஹஜ் யாத்திரை நிதி ரூ.10 கோடியாக உயர்த்தி வழங்கப்படும். சென்னையில் ஹஜ் பயணிகள் கட்டிடம் ரூ.5 கோடியில் கட்டப்படும்.
இஸ்லாமியர்களுக்கு பாதுகாப்பாக இருப்பது போன்று முக ஸ்டாலின் பொய் பிரச்சாரம் செய்து வருகிறார் அப்துல் கலாம் ஜனாதிபதி ஆக அவருக்கு திமுக ஓட்டு போடவில்லை. அப்துல் கலாமை ஜெயலிதா ஆதரித்தார். அவரை இந்தியாவின் முதல் குடிமகனாக அமரவைத்து அழகு பார்த்த கட்சி அதிமுக. அமைச்சர்களுக்கு அரசு தொடர்ந்து பாதுகாப்பாக இருக்கும். அனைவரும் அதிமுகவிற்கு ஆதரவு தாருங்கள்.
இவ்வாறு அவர் பேசினார்.
அதைத் தொடர்ந்து செய்யாறில் அ.தி.மு.க. வேட்பாளர் தூசி மோகன், ஆரணியில் அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன், போளூரில் முன்னாள் அமைச்சர் அக்ரி.கிருஷ்ணமூர்த்தி ஆகியோரை ஆதரித்து பிரசாரம் செய்தார்.

திருவண்ணாமலை:
தமிழக சட்டமன்ற தேர்தல் அடுத்த மாதம் 6-ந் தேதி நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு கடந்த 12-ந் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்கி நடைபெற்று வந்தது.
நேற்று வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாள் என்பதால் ஏராளமான வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்தனர்.
திருவண்ணாமலை சட்டமன்றத் தொகுதியில் பா.ஜ.க. வேட்பாளர் உள்ளிட்ட சிலர் நேற்று வேட்புமனு தாக்கல் செய்தனர்.
இந்தநிலையில் திருவண்ணாமலை சட்டமன்ற தொகுதியில் போட்டியிடுவதற்காக தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் மாநில தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி தாலுகாவை சேர்ந்த சக்கரபாணி, கலசபாக்கம் தாலுகா மேல் சோழங்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த ராஜேந்திரன் ஆகிய 2 விவசாயிகளும் நேற்று திருவண்ணாமலை வந்தனர்.
பின்னர் அவர்கள் திருவண்ணாமலை தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரிடம் வேட்புமனு தாக்கல் செய்ய திருவண்ணாமலை பெரியார் சிலை அருகில் இருந்து நடந்து வந்தனர்.
அப்போது 2 விவசாயிகளும் திடீரென தங்களின் ஆடைகளை கழற்றிவிட்டு நிர்வாணமாக சாலையில் நடந்து வந்தனர். இதை பார்த்த பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர் .
அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் விரைந்து வந்து அவர்கள் மீது துணிகளை போர்த்தி அவர்களை வேட்புமனுதாக்கல் செய்ய செல்லவிடாமல் தடுத்து நிறுத்தினர்.
இதையடுத்து அவர்கள் தரையில் அமர்ந்து திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களுக்கு ஆதரவாக மற்ற விவசாயிகளும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதைத்தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட அய்யாக்கண்ணு உள்பட 16 பேரை போலீசார் கைது செய்தனர்.
பாராளுமன்ற தேர்தலின்போது மத்திய மந்திரி அமித்ஷா தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில நிர்வாகிகள் 10 பேரை டெல்லிக்கு அழைத்து சிறு குறு விவசாயிகளுக்கு அளித்த பென்ஷன் ரூ.6 ஆயிரத்தை அனைத்து விவசாயிகளுக்கு அளிப்பதாகவும், விவசாயிகளின் விளைபொருட்களுக்கு 2 மடங்கு விலை தருவதாகவும், கோதாவரி-காவிரி இணைப்பை அறிவித்து நிதி ஒதுக்குவதாகவும் வாக்குறுதி அளித்தார்.
ஆனால் அவர் முதல் கோரிக்கையை தவிர மற்ற எந்த கோரிக்கையையும் நிறைவேற்றவில்லை.
இதனை கண்டித்தும், மேலும் மத்திய அரசு புதிதாக கொண்டு வந்த 3 வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெற வேண்டும் என்பதை வலியுறுத்தியும் சட்டமன்ற தேர்தலில் பா.ஜ.க. போட்டியிடும் திருவண்ணாமலை சட்டமன்ற தொகுதியில் போட்டியிட முடிவு செய்து வந்தோம்.
பா.ஜ.க.ஆட்சியில் பயிர்களுக்கு லாபகரமான விலை கிடைக்காமல் விவசாயிகள் சட்டை, வேட்டி, துண்டு, கோவணம் போன்றவற்றை இழந்து விட்டதை தெரிவிக்கும் வகையில் விவசாயிகள் அரை நிர்வாணம் மற்றும் முழு நிர்வாணமாக சட்டமன்ற உறுப்பினர் பதவிக்கு போட்டியிட மனு தாக்கல் செய்ய வந்தோம் .
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த நிலையில் நிர்வாணமாக வந்த விவசாயிகள் சக்கரபாணி, ராஜேந்திரன் ஆகிய 2 பேர் மீது 5 பிரிவுகளில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






