என் மலர்tooltip icon

    ஐ.பி.எல்.(IPL)

    கீழ்பென்னாத்தூர் தொகுதி
    X
    கீழ்பென்னாத்தூர் தொகுதி

    திமுக- பாமக மோதும் கீழ்பென்னாத்தூர் தொகுதி கண்ணோட்டம்

    அதிமுக கூட்டணியில் பா.ம.க.-வும், திமுக-வும் நேருக்குநேர் மோதும் கீழ்பென்னாத்தூர் தொகுதி கண்ணோட்டம்
    திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த 2011-ம் ஆண்டு புதிதாக உருவாக்கப்பட்ட தொகுதி கீழ்பென்னாத்தூர் தொகுதி ஆகும்.

    1952-ம் ஆண்டு முதல் 2011-ம் ஆண்டு வரை திருவண்ணாமலை சட்டமன்ற தொகுதியில் கீழ்பென்னாத்தூர் அடங்கி இருந்தது. கடந்த 2011-ம் ஆண்டு மறுசீரமைப்பின் போது கீழ்பென்னாத்தூர் சட்டமன்ற தொகுதி புதிதாக உருவாக்கப்பட்டது.

    அதிமுக கூட்டணியில் பா.ம.க.-வில் செல்வகுமார், திமுக-வில் கு. பிச்சாண்டி, மக்கள் நீதி மய்யம் கட்சியில் சுகானந்தம், நாம் தமிழரில் ரமேஷ்  பாபு, அமமுக-வில் பி.கே.எஸ். கார்த்திகேயன் நிறுத்தப்பட்டுள்ளனர்.

    பா.ம.க. வேட்பாளர் செல்வகுமார் சொத்து மதிப்பு

    1. கையிருப்பு- ரூ. 2,00,000
    2. அசையும் சொத்து- ரூ. 4,17,787.30
    3. அசையா சொத்து- ரூ. 9,00,000

    திமுக வேட்பாளர் கு. பிச்சாண்டி சொத்து மதிப்பு

    1. கையிருப்பு- ரூ. 1,06,850
    2. அசையும் சொத்து- ரூ. 32,99,546.51
    3. அசையா சொத்து- ரூ. 2,90,95,000

    திண்டிவனம்- பெங்களூரு நெடுஞ்சாலையில் உள்ள கீழ்பென்னாத்தூரை தலைமையிடமாக கொண்டு செயல்படும் கீழ்பென்னாத்தூர் சட்டமன்ற தொகுதியில் கீழ்பென்னாத்தூர், துரிஞ்சாபுரம், ஆகிய ஒன்றியங்களும் கீழ்பென்னாத்தூர் வேட்டவலம் ஆகிய பேரூராட்சிகளும் உள்ளன.

    கீழ்பென்னாத்தூர் தொகுதியை பொறுத்த வரை வன்னியர்கள் அதிகளவில் உள்ளனர். அதற்கு அடுத்தபடியாக ஆதிதிராவிடர், யாதவர், நாயுடு, முதலியார், ரெட்டியார், மற்றும் பல்வேறு சமூகத்தினரும் உள்ளனர்.

    இந்த தொகுதி விவசாயம் நிறைந்த தொகுதி ஆகும். எந்தவித தொழிற்சாலைகளும் இல்லை. விவசாயம் தவிர கூலி வேலைக்குச் செல்லும் தொழிலாளர்கள் உள்ளனர். பிழைப்புக்காக வெளிமாநிலங்களுக்கும், சென்னை, பெங்களூரு, கோவை, திருப்பூர் உள்பட பல்வேறு பெறுநகரங்களுக்கும் கிராமப்புறங்களைச் சேர்ந்தவர்கள் சென்று வரும் நிலை உள்ளது.

    இந்த தொகுதியில் ஆசிரியர் பயிற்சி நிறுவனம், கலை மற்றும் அறிவியல் கல்லூரி உள்ளது. பெயர் சொல்லும் அளவுக்கு பொறியியல் கல்லூரிகளோ, பெரிய அளவிலான எந்தவொரு கல்லூரி நிறுவனங்களோ இல்லை.

    கீழ்பென்னாத்தூர் தொகுதி

    கீழ்பென்னாத்தூர் தொகுதியில் கடந்த தேர்தலில் 285 வாக்குசாவடி மையங்கள் இருந்தன. இந்த நிலையில் கொரோனா தொற்று பரவல் காரணமாக தேர்தல் ஆணையத்தின் உத்தரவுபடி 1000-க்கும் மேற்பட்ட வாக்காளர்கள் நிறைந்த வாக்குசாவடிகள் இரண்டாகப் பிரிக்கப்பட்டது. இதனால் தற்போது 60 வாக்கு சாவடிகள் கூடுதலாக அமைக்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் மொத்தம் 345 வாக்குசாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

    கீழ்பென்னாத்தூர் தொகுதியில் கடந்த 2011-ம் ஆண்டு முதல் முறையாக நடந்த தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் ஏ.கே. அரங்கநாதனும், தி.மு.க. சார்பில் கு.பிச்சாண்டியும் போட்டியிட்டனர். இதில் ஏ.கே. அரங்கநாதன் வெற்றி பெற்றார்,
    2016-ம் ஆண்டு நடந்த தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் கே. செல்வமணியும், தி.மு.க. சார்பில் கு.பிச்சாண்டியும் போட்டியிட்டனர். இதில் பிச்சாண்டி வெற்றி பெற்று எம்.எல்.ஏ. ஆனார்.

    கீழ்பென்னாத்தூர் தொகுதியில் தொழிற்சாலைகள் இல்லாததால் வருமானத்திற்கு வழியின்றி பிறமாவட்டங்கள் மற்றும் பிற மாநிலங்களுக்கு இளைஞர்கள் செல்கின்றனர். எனவே, இங்கு தொழிற்சாலை அமைக்க வேண்டும்.

    ஆவூரில் 1000-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் எந்திரங்கள் மூலம் கோரைப்பாய் செய்யும் தொழிலில் பலவகை டிசைன்களை கொண்டு பாய் முடைகின்றனர். இது அனைவராலும் ஈர்க்கப்படுவதால் தமிழகம் மட்டுமல்லாமல் பிற மாநிலங்களுக்கும் அனுப்பப்படுகின்றன. இங்கு பாய் முடையும் தொழில் பூங்கா அமைக்க வேண்டும். நெசவாளர்களுக்கு இலவச மின்சாரம் வழங்குவது போன்று பாய் முடையும் தொழிலில் உள்ளவர்களுக்கும் இலவச மின்சாரம் வழங்க வேண்டும் என பாய்முடைவோர்கள் எதிர்பார்க்கின்றனர்.

    கீழ்பென்னாத்தூர் தொகுதி

    கீழ்பென்னாத்தூரை தலைமையிடமாக கொண்டு தாலுகா அலுவலகம் மற்றும் இதர அரசுத்துறை அலுவலகங்கள் உள்ளன. இங்கு சார்நிலை கருவூலம் இல்லை. இதனால் பல்வேறு சிரமங்களுக்கிடையே பொதுமக்கள் மற்றும் அரசு பணியில் உள்ளவர்கள் 18 கிலோ மீட்டர் தூரமுள்ள திருவண்ணாமலைக்கு சென்று செலான் தொகை கட்ட வேண்டிய நிலைமை உள்ளது. இதனால் பணமும், நேரமும் விரயமாகிறது. இதனை தவிர்க்க கீழ்பென்னாத்தூரில் சார்நிலை கருவூலம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பை உருவாக்கும் வகையில் தொழிற்கூடங்கள் அமைக்கப்பட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்று கீழ்பென்னாத்தூர் தொகுதி மக்கள் எதிர் பார்க்கின்றனர்.

    2016 தேர்தல்

    கு.பிச்சாண்டி- தி.மு.க.- 99,070
    செல்வமணி- அ.தி.மு.க.- 64,404
    எதிரொலிமணியன்- பா.ம.க.- 20,737
    ஜோதி- சிபிஐ- 4,613
    தேவேந்திரன்- பிஎஸ்பி- 1,273
    சுப்பராயன்-  பா.ஜ.க.- 1,209
    ராஜாங்கம்- சுயே- 798
    ரமேஷ்பாபு- நாம் தமிழர்- 776
    நோட்டா- 1,164

    தேர்தல் வெற்றி

    2011- ஏ.கே.அரங்கநாதன்- அ.தி.மு.க.
    2016- கு.பிச்சாண்டி- தி.மு.க.
    Next Story
    ×