என் மலர்tooltip icon

    திருவண்ணாமலை

    விவசாயத்தையும், கிராம கைவினை பொருட்கள் தயாரிப்பு தொழிலையும் அரசு வேலையாக அறிவித்து கிராம மக்களை அரசு ஊழியர்களாக பணியாற்ற செய்ய வேண்டும்.

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை அண்ணாச்சிலை அருகில் நேற்று இரவு நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசினார்.

    அப்போது அவர் கூறியதாவது:- தமிழகத்தில் உள்ள நீர்நிலைகள் எல்லாம் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள. ஏழை எளிய மக்கள் பலரும் அங்கு வசித்து வருகின்றனர். அவர்களிடம் அரசியல்வாதிகளும், அதிகாரிகளும் பணம் வாங்கி கொண்டு பட்டா கொடுத்துள்ளனர்.மேலும் மின்சாரம், குடிநீர் இணைப்பு கொடுத்துள்ளனர். அவர்கள் மழைவெள்ள காலங்களில் பாதிக்கப்படுகின்றனர்.

    நாம் தமிழர் கட்சி ஆட்சிக்கு வந்தால் நீர்நிலைகளை இனிமேல் ஆக்கிரமிக்க விட மாட்டோம். நமது பொருளாதாரம் கிராமங்களில் உள்ளது. அதனை மீட்டெடுக்க வேண்டும். வேலை வாய்ப்பு இல்லாததால் கிராம மக்கள் நகரங்களை நோக்கி வருகின்றனர். இதனால் நகரம் போக்குவரத்து நெருக்கடியில் சிக்கித் தவிக்கிறது. இதற்கு தீர்வு காண கிராமங்களில் தொழில் வாய்ப்பை ஏற்படுத்த வேண்டும்.

    மக்கள் நகரங்களை நோக்கி வருவதை தடுக்க வேண்டும். கிராமங்களில் விவசாயம் மற்றும் கால்நடைவளர்ப்பு உள்ளிட்ட தொழில்வாய்ப்பை சரியாக பயன்படுத்தினால் கிராம மக்கள் பொருளாதாரம் மேம்படும்.

    விவசாயத்தையும், கிராம கைவினை பொருட்கள் தயாரிப்பு தொழிலையும் அரசு வேலையாக அறிவித்து கிராம மக்களை அரசு ஊழியர்களாக பணியாற்ற செய்ய வேண்டும்.

    தற்போது ஆடு, மாடு வளர்க்க ஆட்கள் தேவை என்று விளம்பரம் வருகிறது. இதை நாங்கள் சொன்னால் ஏற்றுக் கொள்ளாத மக்கள் கார்ப்பரேட் கம்பெனிகள் சொன்னால் கேட்கிறார்கள்.

    நம் நாட்டில் எல்லா வளமும் உள்ளது. இங்கு கிடைக்கும் பொருட்களை சந்தை படுத்த வேண்டும். இதற்காக குறிஞ்சி அங்காடி, மருதம் அங்காடி உள்ளிட்ட அங்காடிகள் செயல்படுத்தப்படும். தென் மாவட்டங்களில் பனை மரங்கள் அதிகம் உள்ளது அதிலிருந்து கிடைக்கும் பதநீர், பனை ஓலை உள்ளிட்டவைகள் மூலம் மக்கள் வருமானம் ஈட்டமுடியும்.

    தமிழக மக்களை 50ஆண்டுகளுக்கும் மேலாக திராவிட கட்சிகள் ஏமாற்றி வருகின்றன. எங்களுக்கு ஒரு வாய்ப்பு கொடுங்கள். தமிழகத்தை தலை சிறந்த மாநிலமாக மாற்றி காட்டுகிறோம்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    அ.தி.மு.க. மற்றும் தி.மு.க. தேர்தல் அறிக்கையை ஒப்பிட்டுப் பார்க்கும்போது அ.தி.மு.க.வின் தேர்தல் அறிக்கை மிகவும் சிறப்பாக உள்ளது என்று பா.ஜ.க. தேசிய பொதுச் செயலாளர் சிடி ரவி கூறியுள்ளார்.

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலையில் பா.ஜ.க. தேசிய பொதுச் செயலாளர் சி.டி.ரவி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    தமிழகத்தில் முதல்அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்அமைச்சர் ஓ .பன்னீர்செல்வம் ஆகியோர் சிறப்பாக ஆட்சி செய்து வருகின்றனர். எடப்பாடி பழனிசாமி பொறுப்பேற்றபோது 2 அல்லது 3 வாரத்தில் இந்த ஆட்சி கவிழ்ந்து விடும் என்று பெரும்பாலானோர் தெரிவித்தனர். ஆனால் அவர் கடந்த 4ஆண்டுஆட்சியை சிறப்பாக நடத்தியுள்ளார்.

    தமிழகத்தில் அ.தி.மு.க. தலைமையில் வலுவான கூட்டணி அமைந்துள்ளது. அ.தி.மு.க. மற்றும் தி.மு.க. தேர்தல் அறிக்கையை ஒப்பிட்டுப் பார்க்கும்போது அ.தி.மு.க.வின் தேர்தல் அறிக்கை மிகவும் சிறப்பாக உள்ளது. அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் என்ன செய்ய போகிறோம் என்று முழுமையாக தெரிவித்துள்ளனர். ஆனால் தி.மு.க.வினர் அப்படி எதையும் சொல்லவில்லை.

    2006 முதல் 2011 வரை தி.மு.க. ஆட்சி எப்படி நடைபெற்றது என்று மக்களுக்கு தெரியும். ஒரு நாளைக்கு 16 மணி நேரம் மின்வெட்டு ஏற்பட்டது. தமிழக மக்கள் மின்வெட்டை விரும்பவில்லை. ஒருவேளை தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் மின் தடை மீண்டும் தொடரும்.

    தி.மு.க. வாரிசு அரசியல் செய்து வருகிறது. தி.மு.க. என்றால் வாரிசு, பணம், கட்டப்பஞ்சாயத்து என்றுதான் அர்த்தம். தி.மு.க. என்பது கார்ப்பரேட் கம்பெனி.

    தனது குடும்பத்தினர் வருமானத்தைப் பெருக்கிக் கொள்ளவே அவர்கள் ஆட்சிக்கு வர பார்க்கிறார்கள். அவர்கள் மக்கள் நலனை கருத்தில் கொள்ளவில்லை. அ.தி.மு.க., பா.ஜ.க. மற்றும் கூட்டணியில் உள்ள கட்சியினர் மக்கள் நலனில் அக்கறை கொண்டவர்கள்.

    தமிழக மக்கள் கட்ட பஞ்சாயத்து, நில அபகரிப்பு போன்றவற்றை விரும்பவில்லை.

    தமிழக வளர்ச்சிக்கு பாஜக உறுதுணையாக இருந்து வருகிறது. நாங்கள் 20 தொகுதியில் மட்டும் போட்டியிடவில்லை. எங்கள் கூட்டணியில் உள்ள கட்சியினர் 234 தொகுதிகளிலும் போட்டியிடுகிறார்கள். நாங்களும் அவர்களுக்கு ஒத்துழைப்பு அளிக்கிறோம். அவர்களும் எங்களுக்கு ஒத்துழைப்பு அளிக்கிறார்கள். 234 தொகுதியிலும் நாங்கள்தான் வெற்றி பெறுவோம்.

    வருமான வரித்துறை என்பது யாருடைய தலையிடும் இல்லாத சுதந்திரமான துறை. அவர்களுக்கு ஏதாவது தகவல் கிடைத்து இருக்கும். அதனால்தான் சோதனை செய்கிறார்கள்.

    கருப்பு பணம் வைத்திருப்பவர்கள்தான் வருமான வரித்துறையை கண்டு கவலைப்பட வேண்டும். எ.வ.வேலுவிடம் கருப்பு பணம் இருக்கிறதா? நீட் தேர்வினால் தமிழக மாணவர்கள் பயன் பெற்று வருகின்றனர். முதல் 3 இடத்தில் தமிழக மாணவர்கள் தான் உள்ளனர்.

    இவ்வாறு அவர் கூறினார். 

    தானிப்பாடி அருகே 300 லிட்டர் சாராயம் பறிமுதல் செய்ப்பட்டது. இதுதொடர்பாக 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
    தண்டராம்பட்டு:

    தண்டராம்பட்டு அருகிலுள்ள தானிப்பாடி பகுதியில் போலீஸ் இன்ஸ்பெக்டர் தனலட்சுமி, சப்-இன்ஸ்பெக்டர் முத்துகுமாரசாமி மற்றும் அதிரடி படை போலீசார் சாராய தடுப்பு சோதனையில் ஈடுபட்டனர். அப்போது விற்பனைக்காக வைத்திருந்த 300 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக மலையனூர் செக்கடி சென்னம்மாள் (வயது 55), ரெட்டியார்பாளையம் வாசுகி (43), காமராஜர் நகர் காமாட்சி (43), பீமாரப்பட்டி பட்டன் (55), பழனி (52) ஆகியோரை கைது செய்தனர்.
    அதிமுக சார்பில் தற்போது எம்எல்ஏ-வாக இருக்கும் தூசி. கே.மோகன், திமுக சார்பில் ஒ. ஜோதி மோதும் செய்யாறு தொகுதி கண்ணோட்டம்.
    அதிமுக சார்பில் தற்போது எம்எல்ஏ-வாக இருக்கும் தூசி.கே. மோகன், திமுக சார்பில் ஒ. ஜோதி, மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் மயில்வாகனன்,  நாம் தமிழர் கட்சி சார்பில் பீமண், அமமுக சார்பில் மா.கி.  வரதராஜன் ஆகியோர் நிறுத்தப்பட்டுள்ளனர்.

    அதிமுக வேட்பாளர் தூசி.கே. மோகன் சொத்து மதிப்பு

    1. கையிருப்பு- ரூ. 2,00,000
    2. அசையும் சொத்து- ரூ. 47,36,515
    3. அசையா சொத்து- ரூ. 2,69,00,000

    திமுக வேட்பாளர் ஒ. ஜோதி சொத்து மதிப்பு

    1. கையிருப்பு- ரூ. 70,000
    2. அசையும் சொத்து- ரூ. 15,39,330.78
    3. அசையா சொத்து- ரூ. 26,80,000

    செய்யாறு அதிகப்படியான விவசாய நிலங்களை கொண்டுள்ள தொகுதி. இங்கு சிப்காட் தொழிற்பேட்டை உருவாக்கப்பட்டு பல முன்னணி தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. இதன் மூலம் மாவட்டத்திற்கு அதிகளவில் வருவாய் ஈட்டக்கூடிய தொகுதியாக செய்யாறு சட்டமன்ற தொகுதி திகழ்கிறது.

    விவசாயிகளும், கூலி தொழிலாளர்களும் அதிகளவில் உள்ளனர். இத்தொகுதியில் செய்யாறு, வெம்பாக்கம், ஆகிய 2 தாலுகாவில் செய்யாறு, வெம்பாக்கம், அனக்காவூர் ஆகிய 3 ஒன்றியங்களும், திருவத்திபுரம் நகராட்சியும் அடங்கியுள்ளன.

    இங்கு வன்னியர், முதலியார், சமூகத்தை சேர்ந்தவர்கள் அதிகளவில் உள்ளனர். மேலும் முஸ்லிம்கள் உள்பட இதர பிரிவினர்களும் உள்ளனர்.

    கடந்த 2016-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் தூசி கே.மோகனும், தி.மு.க. கூட்டணி கட்சியில் இடம் பெற்ற காங்கிரஸ் கட்சி சார்பில் வேட்பாளராக எம்.கே. விஷ்ணுபிரசாத், மக்கள் நலக்கூட்டணியின் சார்பில் தே.மு.தி.க. வேட்பாளராக டி.பி.சரவணன், பா.ம.க. சார்பில் கே.சீனிவாசன் உள்ளிட்ட 15 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இதில் தூசி கே.மோகன் வெற்றி பெற்றார். 

    பொதுமக்கள் எதிர்பார்ப்பு

    செய்யாறு தொகுதியிலும் அரசு பொறியியல் கல்லூரி, அரசு மகளிர் கலைக்கல்லூரி அமைக்க வேண்டும். செய்யாறை தலைமையிடமாக கொண்டு செய்யாறு,வெம்பாக்கம், ஆரணி, சேத்துப்பட்டு, வந்தவாசி ஆகிய தாலுகாவை உள்ளடக்கி புதிதாக மாவட்டம் உருவாக்க வேண்டும் என்பது பொதுமக்களின் முக்கிய எதிர்பார்பாகும்.

    செய்யாறு தொகுதி

    மேலும் திருவோத்தூர் வேதபுரிஸ்வரர் கோவிலை சுற்றுலா மையமாக்க வேண்டும். செய்யாறு மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் டாக்டர் உள்பட காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும். மருத்துவ கல்லூரி மற்றும் வேளாண் கல்லூரி அமைக்க வேண்டும்.

    வெம்பாக்கம் தாலுகாவில் புதியதாக தீயணைப்பு நிலையம் மற்றும் போலீஸ் நிலையங்கள் உருவாக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என செய்யாறு தொகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

    தேர்தல் வெற்றி

    1952- தர்மலிங்கம்- காங்
    1957- ராமச்சந்திரன்- காங்
    1962- கோவிந்தன்- தி.மு.க.
    1967- கோவிந்தன்- தி.மு.க.
    1971- கோவிந்தன்- தி.மு.க.- 1977- புலவர் கோவிந்தன்- தி.மு.க.
    1980- பாபு ஜனார்த்தனம்- தி.மு.க.
    1984- முருகன்- அ.தி.மு.க.
    1989- அன்பழகன்- தி.மு.க.
    1991- தேவராசு- அ.தி.மு.க.
    1996- அன்பழகன்- தி.மு.க.
    2001- பி.எசு.உலகரசன்- பா.ம-.க
    2006- விஷ்ணுபிரசாத்- காங்
    2011- முக்கூர் என்.சுப்பிரமணியன்- அ.தி.மு.க.
    2016- கி.மோகன்- அ.தி.மு.க.

    2016 தேர்தல்

    தூசி மோகன்- அ.தி.மு.க.- 77,766
    விஷ்ணுபிரசாத்- காங்கிரஸ்- 62,239
    ஸ்ரீனிவாசன்- பா.ம.க.- 37,491
    சரவணன்- தே.மு.தி.க.- 10,855
    பாஸ்கரன்- பா.ஜ.க.- 2,388
    மோகன்- சுயே- 1,300
    வேலாயுதம்- சுயே- 1,080
    ராஜேஷ்- நாம் தமிழர்- 974
    எ.மோகன்- சுயே- 532
    அமுதா- சுயே- 491
    ஸ்ரீதர்- சுயே- 443
    சவுந்தரபாண்டியன்- சுயே- 295
    ரவி- எஸ்பி- 287
    மதி- சுயே- 282
    பிரேம்குமார்- சுயே- 142
    நோட்டா- - 2,248
    திருவண்ணாமலையில் பவுர்ணமி கிரிவலம் செல்ல தொடர்ந்து 13-வது மாதமாக இந்த மாதமும் தடை விதிக்கப்பட்டுள்ளது. எனவே பக்தர்கள் கிரிவலம் செல்ல வரவேண்டாம் என கலெக்டர் கேட்டுக் கொண்டுள்ளார்.
    திருவண்ணாமலையில் மாதந்தோறும் பவுர்ணமி நாளில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் சென்று வழிபடுவது வழக்கம். ஆனால் கடந்த ஆண்டு மார்ச் 24-ந்தேதி முதல் கொரோனா ஊரடங்கு உத்தரவு நடைமுறையில் இருப்பதால் கிரிவலம் செல்ல தடை செய்யப்பட்டது.

    இந்நிலையில் பங்குனி மாத பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரம் வரும் 28-ந்தேதி அதிகாலை 3.22 மணிக்கு தொடங்கி 29-ந்தேதி அதிகாலை 1.29 மணிக்கு நிறைவடைகிறது.

    இதற்கிடையில் தொடர்ந்து 13-வது மாதமாக இந்த மாதமும் பக்தர்கள் கிரிவலம் செல்ல தடை செய்யப்பட்டுள்ளதாக கலெக்டர் சந்தீப் நந்தூரி அறிவித்துள்ளார்.

    எனவே திருவண்ணாமலையில் கிரிவலம் செல்ல பக்தர்கள் யாரும் வரவேண்டாம் என அவர் கேட்டுக் கொண்டுள்ளார். ஆனால் அண்ணாமலையார் கோவிலில் வழக்கம் போல் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதி உண்டு.

    மேலும் பவுர்ணமி நாளில் தடை உத்தரவை மீறி பக்தர்கள் கிரிவலம் செல்வதை தடுக்க கிரிவலப் பாதையில் பல்வேறு இடங்களில் தடுப்புகள் அமைத்து போலீசார் கண்காணிக்க உள்ளனர்.
    பின்னர் அத்திப்பட்டில் 100 சதவீத வாக்களிக்க வலியுறுத்தி மகளிர் குழுவினர் இந்தியா வரைபடத்தில் பச்சை மிளகாய் கொண்டு விழிப்புணர்வு கோலம் வரைந்திருந்தனர். அதை கலெக்டர் சந்தீப் நந்தூரி பார்வையிட்டார்.

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாது மலை ஊராட்சி ஒன்றியம் குட்டகரை, புளியாங்குப்பம் மலை கிராமங்களில் உள்ள வாக்குச்சாவடி மையங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னேற்பாடு பணிகள் குறித்து மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான சந்தீப் நந்தூரி நேரில் சென்று பார்வையிட்டார்.

    குட்டக்கரை மலை கிராமத்திற்கு சென்று கிராம வாக்குச்சாவடி மையத்தை பார்வையிட்டார். அங்கு சாய்வு தளம், குடிநீர், கழிவறை, மின்சாரம் மற்றும் அடிப்படை வசதிகள் செய்யப்பட்டு உள்ளதா? என்று ஆய்வு செய்தார்.

    இதைத்தொடர்ந்து நம்மியம்பட்டு ஊராட்சி புளியாங்குப்பம் மலை கிராமத்திற்கு காரில் செல்ல முடியாததால் பைக்கில் 3 கி.மீ. தூரம் செங்குத்தான மலைப் பாதையில் பயணம் செய்து மலைக்கிராம வாக்குச்சாவடி மையத்தில் கலெக்டர் ஆய்வு மேற்கொண்டார்.

    பின்னர் அத்திப்பட்டில் 100 சதவீத வாக்களிக்க வலியுறுத்தி மகளிர் குழுவினர் இந்தியா வரைபடத்தில் பச்சை மிளகாய் கொண்டு விழிப்புணர்வு கோலம் வரைந்திருந்தனர். அதை கலெக்டர் சந்தீப் நந்தூரி பார்வையிட்டார்.

    கலெக்டர் சந்தீப் நந்தூரி பார்வையிட்ட காட்சி

    பின்னர் ஜமுனாமரத்தூர் தாலுகா அலுவலகத்தில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் வாக்களிப்பது சம்பந்தமாக செயல்விளக்கம் அளித்தார்.

    ஜவ்வாது மலை மலையில் உற்பத்தியாகும் உணவுப் பொருட்களால் வரையப்பட்ட வண்ணக் கோலத்தில் கையெழுத்திட்டு தேர்தல் கையெழுத்து இயக்கத்தை தொடங்கி வைத்தார். மேலும் அரிசியில் 100 சதவீதம் வாக்களிக்க வலியுறுத்தி வரையப்பட்ட ஓவியத்தை பார்வையிட்டார்.

    பின்னர் ஜமுனாமரத்தூர் பஸ் நிலையத்திலிருந்து தேர்தல் விழிப்புணர்வு பேரணியை தொடங்கி வைத்தார்.

    இதில் மகளிர் திட்டம் இயக்குனர் சந்திரா, உதவி கலெக்டர் (பயிற்சி) அமித்குமார், துணை கலெக்டர் (பயிற்சி) அஜிதா பேகம் மற்றும் தேர்தல் அலுவலர்கள், பணியாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    எனது நிறுவனங்களில் வருமானவரித்துறை சோதனையில் ரூ.3.50 கோடி கைப்பற்றப்பட்டதாக செய்தி வெளியானது. ஆனால் ஒரு பைசா கூட அவர்கள் கைப்பற்றவில்லை என்று எ.வ.வேலு கூறினார்.
    திருவண்ணாமலை:

    தமிழக சட்டசபை தேர்தலையொட்டி பல்வேறு இடங்களில் தேர்தலில் பணப்பட்டுவாடாவை தடுக்க வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொள்கின்றனர்.

    திருவண்ணாமலை மாவட்ட தி.மு.க. செயலாளர் எ.வ.வேலு, திருவண்ணாமலை சட்டசபை தொகுதியில் தி.மு.க. வேட்பாளராக போட்டியிடுகிறார்.

    பண பட்டுவாடாவுக்கு ஏற்பாடு நடைபெறுவதாக வந்த புகாரையொட்டி எ.வ.வேலுவுக்கு சொந்தமான கல்வி நிறுவனங்கள், தொழில் நிறுவனங்கள் மற்றும் வீடுகள் உள்பட 18 இடங்களில், வருமானவரித்துறையினர் நேற்றுமுன்தினம் காலை 11 மணியளவில் சோதனையை தொடங்கினர். 100-க்கும் மேற்பட்டோர் சோதனையில் ஈடுபட்டனர்.

    மு.க.ஸ்டாலின் திருவண்ணாமலையில் தேர்தல் பிரசாரம் செய்து கொண்டிருந்த நிலையில் இந்த சோதனை நடந்ததால் பரபரப்பை ஏற்படுத்தியது.

    2-வது நாளாக நேற்றும் சோதனை தொடர்ந்தது. நேற்று மாலை 5 மணியளவில் சோதனை முடிவுக்கு வந்தது. சுமார் 30 மணி நேரம் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தியுள்ளனர்.

    இதேபோல் சென்னை ஆழ்வார்பேட்டையில் எ.வ.வேலுவுக்கு சொந்தமான இடத்தில் நடைபெற்ற சோதனையும் நிறைவுபெற்றது.

    இச்சோதனையில் ஆவணங்கள் மற்றும் பணம் கைப்பற்றப்பட்டதா? என்பது குறித்த எந்த தகவலையும் வருமானவரித் துறையினர் தெரிவிக்க மறுத்துவிட்டனர். ரூ.3½ கோடி பறிமுதல் செய்யப்பட்டதாக வருமான வரித்துறையினர் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

    எ.வ.வேலு வீட்டில் சோதனையை முடித்துக்கொண்டு கணக்கில் காட்டப்படாத வருமானம் குறித்த ஆவணங்கள் மற்றும் முக்கிய ஆவணங்களுடன் வருமான வரித்துறையினர் திருவண்ணாமலையில் இருந்து சென்னைக்கு 8 வாகனங்களில் புறப்பட்டு சென்றனர்.

    அதில் பணம் பரிமாற்றம் குறித்த தகவல்கள் அடங்கியுள்ளதாக கூறப்படுகிறது. இந்த ஆவணங்கள் அனைத்தும் தேர்தல் கமி‌ஷனிடம் இன்று ஒப்படைக்கப்பட உள்ளன.

    அவற்றை சரிபார்த்த பின் டெல்லி தலைமை தேர்தல் கமி‌ஷன் அலுவலகத்திற்கு அறிக்கை அனுப்பி வைக்கப்படுகிறது. அந்த அறிக்கையின்படி டெல்லி தலைமை தேர்தல் கமி‌ஷன் நடவடிக்கை எடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இதனால் திருவண்ணாமலை சட்டசபை தேர்தல் திட்டமிட்டப்படி ஏப்ரல் 6-ந்தேதி நடக்குமா? அல்லது ரத்து செய்யப்படுமா? என்ற கேள்விகுறி எழுந்துள்ளது.

    சோதனை குறித்து எ.வ.வேலு நிருபர்களிடம் கூறியதாவது:-

    “வருமான வரித்துறையினர் 110 பேர் எனக்கு சொந்தமான இடங்களில் கடந்த 2 நாட்களாக சோதனை நடத்தினர். பலமுறை தேர்தலில் நான் போட்டியிட்டபோது சோதனைக்கு வராத வருமானவரித்துறையினர் இப்போது வரக்காரணம், திருவண்ணாமலையில் போட்டியிடும் பா.ஜ.க. வேட்பாளரை வெற்றிபெற வைக்கத்தான்.

    எனது நிறுவனங்களில் ரூ.3.50 கோடி கைப்பற்றப்பட்டதாக செய்தி வெளியானது. ஆனால் ஒரு பைசா கூட அவர்கள் கைப்பற்றவில்லை” என்றார்.
    திருவண்ணாமலை தொகுதியில் தீவிர பிரசாரம் செய்து வந்த எ.வ.வேலு வருமான வரி சோதனை காரணமாக இன்று பிரசாரத்திற்கு செல்லவில்லை.
    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை தொகுதியில் போட்டியிடும் தி.மு.க வேட்பாளர் எ.வ.வேலு வீடு, கல்வி நிறுவனங்களில் வருமான வரி சோதனை நடந்து வருகிறது. இதனால் அவர் கல்லூரி வளாகத்தில் உள்ள அவருடைய வீட்டில் உள்ளார். அவரது மகன்கள் கம்பன், குமரன் மற்றும் குடும்பத்தினர் உள்ளனர்.

    கடந்த சில நாட்களாக திருவண்ணாமலை தொகுதியில் தீவிர பிரசாரம் செய்து வந்த எ.வ.வேலு வருமான வரி சோதனை காரணமாக இன்று பிரசாரத்திற்கு செல்லவில்லை.

    திருவண்ணாமலை மாவட்டம் சாத்தனூர் அருகே குளிக்க சென்ற தாய்- மகள் குட்டையில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.
    தண்டராம்பட்டு:

    திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு அருகிலுள்ள சாத்தனூர் பள்ளிகூடத் தெருவை சேர்ந்தவர் பெருமாள் (வயது 40). கூலித்தொழிலாளி. இவரது மனைவி சென்னம்மாள் (35). இவர்களுக்கு 2 மகள்கள் உண்டு. மூத்த மகள் மோனிஷா (12), ஏழாம் வகுப்பு படித்து வந்தாள்.

    நேற்று முன்தினம் சென்னம்மாளும், மகள் மோனிஷாவும் துணி துவைப்பதற்காக அருகிலுள்ள குட்டைக்கு சென்றுள்ளனர். அங்கு சென்னம்மாள் துணி துவைத்துக் கொண்டிருந்த போது மோனிஷா தண்ணீரில் இறங்கி குளித்ததாக கூறப்படுகிறது. அப்போது எதிர்பாராத விதமாக தண்ணீரில் சிக்கிய மோனிஷா உயிருக்கு போராடினாள்.

    அவளை காப்பாற்றுவதற்காக சென்னம்மாள் தண்ணீரில் இறங்கி உள்ளார். அவரும் தண்ணீரில் மூழ்கியுள்ளளார். இதை அக்கம் பக்கத்தினர் பார்த்து ஓடி வந்து இருவரையும் மீட்டு சாத்தனூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்தனர்.

    ஆபத்தான நிலையில் இருந்த அவர்களை திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே தாய், மகள் இருவரும் பரிதாபமாக இறந்துவிட்டனர்.

    இதுகுறித்து சாத்தனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    பாமக- திமுக நேருக்குநேர் மோதும் வந்தவாசி தொகுதி கண்ணோட்டம்
    அதிமுக கூட்டணியில் பா.ம.க.-வுக்கு இந்தத் தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. அக்கட்சியின் சார்பில் எஸ். முரளிசங்கர், திமுக சார்பில் எஸ். அம்பேத்குமார், மக்கள் நீதி மய்யம் சார்பில் சுரேஷ், நாம் தமிழர் கட்சி சார்பில் பிரபாவதி, அமமுக சார்பில் பி. வெங்கடேசன் போட்டியிடுகின்றனர்.

    பா.ம.க. வேட்பாளர் எஸ். முரளிசங்கர் சொத்து மதிப்பு

    1. கையிருப்பு- ரூ. 1,00,000
    2. அசையும் சொத்து- ரூ. 26,70,000
    3. அசையா சொத்து- ரூ. இல்லை

    வந்தவாசி தொகுதி பல்வேறு வரலாற்று சிறப்புகளை கொண்டதாகும்.

    வந்தவாசி போர்

    மன்னர்கள் கோட்டை கட்டி ஆண்டதும் 1760-ல் நடந்த போரில் ஆங்கிலேயர்கள் பிரெஞ்சுக்காரர்களை வெற்றி கொண்டு ஆங்கிலேய ஆதிக்கத்திற்கு அடிகோலியதும் வந்தவாசியில்தான் என்பது வரலாற்று நிகழ்வாகும். இநத போர் வந்தவாசி கோட்டையை கைப்பற்ற நடந்து போராகும்.

    ஆங்கிலத் தளபதி அயர்கூட் தலைமையிலான படையை பிரெஞ்சு தளபதி தாமஸ் ஆர்தர் லாலி தலைமையிலான படையை தோற்கடித்தது. இதையடுத்து இந்தியாவில் பிரெஞ்சுக்காரர்கள் வீழ்ச்சி அடைந்தனர். இந்த வெற்றிதான் ஆங்கிலேயர்களின் மாபெரும் வெற்றிக்கு வழிவகுத்தது. இதன் தொடர்ச்சியாகவே இந்தியாவை 187 ஆண்டுகள் ஆங்கிலேயர்கள் ஆட்சி செய்யும் நிலை உருவானது.

    வந்தவாசி தொகுதி

    வந்தவாசி பகுதியில் பழமை வாய்ந்த கோவில்களும், ஜைன கோவில்களும், சீயமங்கலம் குகைக்கோவிலும் உள்ளன.

    இந்த தொகுதிக்கு உட்பட்ட வெண்குன்றம் கிராமத்தில் சுமார் 1500 அடி உயரம் கொண்ட தவளகிரி ஈஸ்வரர் கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் கார்த்திகை தீபத் திருவிழா வெகு பிரசித்தி பெற்றதாகும். மேலும் தென்னாங்கூரில் உள்ள பாண்டுரங்கன் கோவில், மாம்பட்டு முத்துமாரியம்மன் கோவில் மற்றும் புகழ்பெற்ற மசூதிகள் தேவாலயங்கள் உள்ளன.

    கோரைப்பாய்

    பல வருடங்களாக பின்தங்கிய நிலையில் உள்ள இந்த தொகுதியில் மக்கள் விவசாயத்தையே பெரிதும் நம்பியுள்ளனர். விவசாயம், கைத்தறி நெசவாளர்கள், கோரைப்பாய் நெசவு தொழிலாளர்களும் நிறைந்த தொகுதியாகும் மற்றும் நெல், கரும்பு, நிலக்கடலை அதிகம் பயிரிடுகின்றனர். வந்தவாசி கோரைப்பாய் புகழ் பெற்றதாகும்.

    வந்தவாசி தொகுதி

    திருவண்ணாமலை மாவட்டத்தின் எல்லைப்பகுதியில் உள்ள இந்த தொகுதி இதுநாள் வரையிலும் தொழிற்சாலைகள், தொழிற்பேட்டைகள் இன்றி பின் தங்கியுள்ளது. வந்தவாசி தொகுதியை பொறுத்த வரைவில் வன்னியர்களும், ஆதிதிராவிடர்களும் பெருமளவில் உள்ளனர். முதலியார்கள், முஸ்லிம்கள், ஜைனர்கள், நாயுடு, ரெட்டியார் மற்றும் இதர இனத்தவர்களும் உள்ளனர்.

    மொத்த வாக்காளர்கள் 2,39,760 பேர், ஆண்கள் 1,18,230 பேர், பெண்கள் 1,21,439 பேர், மூன்றாம் பாலித்தனவர்கள் 1.

    2011-ம் ஆண்டு தொகுதி சீரமைப்பில் பெரணமல்லூர் சட்டமன்ற தொகுதி கலைக்கப்பட்டதுடன் அந்த தொகுதியில் இருந்து கிராமங்கள் செய்யாறு, வந்தவாசி சட்டமன்ற தொகுதிகளில் சேர்க்கப்பட்டது. வந்தவாசி தொகுதியில் வந்தவாசி நகராட்சி, வந்தவாசி ஒன்றியம், தெள்ளார் ஒன்றியம், தேசூர் மற்றும் பெரணமல்லூர் ஆகிய பேரூராட்சிகள் உள்ளன.

    280 வாக்குச்சாவடிகள்

    கொரோனா தொற்று பரவல் காரணமாக ஆணையத்தின் உத்தரவுபடி 1000-க்கும் மேற்பட்ட வாக்காளர்கள் நிறைந்த வாக்குச்சாவடிகள் இரண்டாக பிரிக்கப்பட்டது. இதனால் வந்தவாசி தொகுதியில் தற்போது 280 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

    வந்தவாசி தொகுதி

    வந்தவாசி தொகுதி 1952-ம் ஆண்டும், 1957-ம் ஆண்டும் இரட்டை உறுப்பினர்களை கொண்ட பொதுத் தொகுதியாக இருந்தது. பின்னர் 1962-ல் தனித் தொகுதியாக மாற்றப்பட்டது.

    தி.மு.க. 8 முறை வெற்றி

    1962-க்கு பிறகு கடந்த தேர்தல்களில் தி.மு.க. ஒரு இடைத்தேர்தல் உள்பட 8 முறையும் அ.தி.மு.க. 4 முறையும், காங்கிரஸ், பா.ம.க. தலா ஒருமுறையும் வெற்றி பெற்றுள்ளன.

    பொதுமக்கள் எதிர்பார்ப்பு

    வந்தவாசி அரசு மருத்துவமனையை தரம் உயர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் தொகுதியில் உள்ள அனைத்து மருத்துவமனைகளிலும் போதிய டாக்டர்களை நியமிக்க வேண்டும். தெள்ளார்- கொடுங்காலூர் ஊராட்சிகளில் இயங்கி வரும் ஆரம்ப சுகாதார நிலையங்களை தரம் உயர்த்தி அரசு மருத்துவமனையாக மாற்ற வேண்டும். வந்தவாசி தொகுதியை பொது தொகுதியாக மாற்ற வேண்டும். வேலை வாய்ப்புகளை பெருக்குவதற்காகவும், பொருளாதாரம் மேம்படுவதற்கும் இந்த பகுதியில் சிப்காட் தொழிற்பேட்டை நிறுவ வேண்டும்.

    வந்தவாசி தொகுதி

    விவசாயிகள் நிறைந்த பகுதி என்பதால் விவசாய கல்லூரி, விவசாய ஆய்வு மையம் அமைக்க வேண்டும். வந்தவாசி தொகுதியில் நெசவாளர்கள் அதிகமாக உள்ளதால் நூற்பாலை அமைக்க வேண்டும். இப்பகுதியில் உள்ள பெரும்பாலான ஏரிகளை தூர்வார வேண்டும். மேலும் ஏரிப்பகுதிகள் சீரமைக்கப்பட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்று பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

    வந்தவாசி தொகுதி
    வந்தவாசி தொகுதி

    1951 சோமசுந்தரகவுண்டர்- பொதுநலகட்சி
    1957 ராமசந்திர ரெட்டி- காங்கிரஸ்
    1962 முத்துலிங்கம்- தி.மு.க.
    1967 முத்துலிங்கம்- தி.மு.க
    1971 ராஜகோபால்- தி.மு.க.
    1977 முனுசாமி- அ.தி.மு.க.
    1980 குப்புசாமி- அ.தி.மு.க.
    1984 ஆறுமுகம்- காங்கிரஸ்
    1989 தனராசு- தி.மு.க.
    1991 சி.கே. தமிழரசன்- அ.தி.மு.க.
    1996 பாலா ஆண்டான்- தி.மு.க.
    2001 முருகவேல் ராசன்- பா.ம.க.
    2006 ஜெயராமன்- தி.மு.க.
    2011 குணசீலன்- அ.தி.மு.க.
    2016 அம்பேத்குமார்- தி.மு.க.
    கொலை செய்துவிடுவேன் என்று மிரட்டியதால் மனம் உடைந்த இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
    செய்யாறு:

    செய்யாறு தாலுகாவை சேர்ந்தவர் ராஜேஷ் (வயது 25). இவர், சிப்காட்டில் பணிபுரியும் 20 வயது இளம் பெண்ணை 4 ஆண்டுகளாக காதலித்து வந்ததாக தெரிகிறது. அப்போது ராஜேஷ், இளம் பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறி உல்லாசமாக இருந்ததாக கூறப்படுகிறது.

    இதில் அந்த பெண் கர்ப்பமானார். இதனையடுத்து இளம்பெண், காதலனிடம் திருமணம் செய்து கொள்ளும்படி கூறியுள்ளார். திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்த ராஜேஷ் இதைப்பற்றி வெளியில் சொன்னால் கொலை செய்துவிடுவேன் என்று மிரட்டியதாக தெரிகிறது. இதனால் மனம் உடைந்த இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

    இதுகுறித்த புகாரின் பேரில் செய்யாறு போலீசார் வழக்குப்பதிவு செய்து, ராஜேசை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    செய்யாறு அருகே வாலிபரை கொடூரமாக கொலை செய்து கை, கால்களை கட்டி பிணத்தை ஏரியில் வீசியுள்ளனர். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    செய்யாறு:

    வெம்பாக்கம் தாலுகா பூதேரி ஏரியில் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் அழுகிய நிலையில் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் பிணம் தண்ணீரில் மிதப்பதாக மோரணம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, தண்ணீரில் மிதந்த வாலிபரின் உடலை மீட்டனர். அப்போது உடலில் பல்வேறு இடங்களில் காயங்கள் கிடந்தன. எனவே, அவரை கொடூரமாக கொலை செய்து கை, கால்களை கட்டி பிணத்தை ஏரியில் வீசியிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.

    அதை தொடர்ந்து போலீசார் உடலை பிரேத பரிசோதனைக்காக செய்யாறு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, வாலிபர் கொலை செய்து ஏரியில் வீசியது யார்? என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். வாலிபர் ஏரியில் பிணமாக மீட்கப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    ×