search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    எவ வேலு
    X
    எவ வேலு

    எ.வ.வேலு வீடு, கல்லூரியில் 30 மணி நேரம் நடந்த வருமானவரித்துறை சோதனை

    எனது நிறுவனங்களில் வருமானவரித்துறை சோதனையில் ரூ.3.50 கோடி கைப்பற்றப்பட்டதாக செய்தி வெளியானது. ஆனால் ஒரு பைசா கூட அவர்கள் கைப்பற்றவில்லை என்று எ.வ.வேலு கூறினார்.
    திருவண்ணாமலை:

    தமிழக சட்டசபை தேர்தலையொட்டி பல்வேறு இடங்களில் தேர்தலில் பணப்பட்டுவாடாவை தடுக்க வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொள்கின்றனர்.

    திருவண்ணாமலை மாவட்ட தி.மு.க. செயலாளர் எ.வ.வேலு, திருவண்ணாமலை சட்டசபை தொகுதியில் தி.மு.க. வேட்பாளராக போட்டியிடுகிறார்.

    பண பட்டுவாடாவுக்கு ஏற்பாடு நடைபெறுவதாக வந்த புகாரையொட்டி எ.வ.வேலுவுக்கு சொந்தமான கல்வி நிறுவனங்கள், தொழில் நிறுவனங்கள் மற்றும் வீடுகள் உள்பட 18 இடங்களில், வருமானவரித்துறையினர் நேற்றுமுன்தினம் காலை 11 மணியளவில் சோதனையை தொடங்கினர். 100-க்கும் மேற்பட்டோர் சோதனையில் ஈடுபட்டனர்.

    மு.க.ஸ்டாலின் திருவண்ணாமலையில் தேர்தல் பிரசாரம் செய்து கொண்டிருந்த நிலையில் இந்த சோதனை நடந்ததால் பரபரப்பை ஏற்படுத்தியது.

    2-வது நாளாக நேற்றும் சோதனை தொடர்ந்தது. நேற்று மாலை 5 மணியளவில் சோதனை முடிவுக்கு வந்தது. சுமார் 30 மணி நேரம் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தியுள்ளனர்.

    இதேபோல் சென்னை ஆழ்வார்பேட்டையில் எ.வ.வேலுவுக்கு சொந்தமான இடத்தில் நடைபெற்ற சோதனையும் நிறைவுபெற்றது.

    இச்சோதனையில் ஆவணங்கள் மற்றும் பணம் கைப்பற்றப்பட்டதா? என்பது குறித்த எந்த தகவலையும் வருமானவரித் துறையினர் தெரிவிக்க மறுத்துவிட்டனர். ரூ.3½ கோடி பறிமுதல் செய்யப்பட்டதாக வருமான வரித்துறையினர் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

    எ.வ.வேலு வீட்டில் சோதனையை முடித்துக்கொண்டு கணக்கில் காட்டப்படாத வருமானம் குறித்த ஆவணங்கள் மற்றும் முக்கிய ஆவணங்களுடன் வருமான வரித்துறையினர் திருவண்ணாமலையில் இருந்து சென்னைக்கு 8 வாகனங்களில் புறப்பட்டு சென்றனர்.

    அதில் பணம் பரிமாற்றம் குறித்த தகவல்கள் அடங்கியுள்ளதாக கூறப்படுகிறது. இந்த ஆவணங்கள் அனைத்தும் தேர்தல் கமி‌ஷனிடம் இன்று ஒப்படைக்கப்பட உள்ளன.

    அவற்றை சரிபார்த்த பின் டெல்லி தலைமை தேர்தல் கமி‌ஷன் அலுவலகத்திற்கு அறிக்கை அனுப்பி வைக்கப்படுகிறது. அந்த அறிக்கையின்படி டெல்லி தலைமை தேர்தல் கமி‌ஷன் நடவடிக்கை எடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இதனால் திருவண்ணாமலை சட்டசபை தேர்தல் திட்டமிட்டப்படி ஏப்ரல் 6-ந்தேதி நடக்குமா? அல்லது ரத்து செய்யப்படுமா? என்ற கேள்விகுறி எழுந்துள்ளது.

    சோதனை குறித்து எ.வ.வேலு நிருபர்களிடம் கூறியதாவது:-

    “வருமான வரித்துறையினர் 110 பேர் எனக்கு சொந்தமான இடங்களில் கடந்த 2 நாட்களாக சோதனை நடத்தினர். பலமுறை தேர்தலில் நான் போட்டியிட்டபோது சோதனைக்கு வராத வருமானவரித்துறையினர் இப்போது வரக்காரணம், திருவண்ணாமலையில் போட்டியிடும் பா.ஜ.க. வேட்பாளரை வெற்றிபெற வைக்கத்தான்.

    எனது நிறுவனங்களில் ரூ.3.50 கோடி கைப்பற்றப்பட்டதாக செய்தி வெளியானது. ஆனால் ஒரு பைசா கூட அவர்கள் கைப்பற்றவில்லை” என்றார்.
    Next Story
    ×