என் மலர்tooltip icon

    ஐ.பி.எல்.(IPL)

    போளூர் தொகுதி
    X
    போளூர் தொகுதி

    அதிமுக- திமுக நேருக்குநேர் போதும் போளூர் தொகுதி கண்ணோட்டம்

    திமுக சார்பில் தற்போது எம்எல்ஏ-வாக இருக்கும் கே.வி. சேகரனும், அதிமுக சார்பில் அக்ரிகிருஷ்ணமூர்த்தியும் நேருக்குநேர் பலப்பரீட்சை நடத்துகிறார்கள்.
    போளூர், திருவண்ணாமலை மாவட்டத்தில் மத்திய பகுதியிலும், இந்த மாவட்டத்தின் 4-வது பெரிய நகரம். பல்லவர்கள் ஆட்சிக்கு முன்பு முக்கிய நகரமாக விளங்கியது. 1951-ம் ஆண்டு போளூர் சட்டமன்ற தொகுதி உருவானது.

    போளூர் தொகுதியில் போளூர் ஒன்றியத்தில் உள்ள 94 கிராமங்களும், சேத்துப்பட்டு ஒன்றியத்தில் உள்ள 76 கிராமங்களும், பெரணமல்லூர் ஒன்றியத்தில் உள்ள 48 கிராமங்களும் என 218 கிராமங்கள் உள்ளன.

    போளூர் தொகுதி

    மொத்தம் 2 லட்சத்து 42,915 பேர் உள்ளனர். இதில் ஆண்கள் 1 லட்சத்து 19,269 பேர், பெண்கள் 1 லட்சத்து 23,642 பேர், மூன்றாம் பாலினத்தவர் 40 பேர் உள்ளனர்.

    இந்த தொகுதியை பொறுத்தவரை வன்னியர் சமூகத்தை சேர்ந்தவர்கள் 30 சதவீதமும், ஆதிதிராவிடர் சமூகத்தை சேர்ந்தவர்கள் 25 சதவீதமும், இதர பிரிவினர் 45 சதவீதமும் உள்ளனர்.

    போளூர் தொகுதி

    இங்கு விவசாயம், நெசவு தொழில் அதிகளவில் உள்ளன. போளூர் பகுதியில் மாம்பட்டு, எழுவாம்பாடி, வில்வாரணி, ஒண்ணுபுரம், அல்லியாளமங்களம் போன்ற கிராமங்களில் நெசவு தொழில் உள்ளது. இங்கு தயாரிக்கும் வேட்டி, சேலை, லுங்கிகள் சென்னை உள்ளிட்ட பெருநகரங்களுக்கு அனுப்பப்படுகின்றன.

    மேலும் போளூர் பகுதியில் தொழிற்சாலைகள் எதுவும் இல்லாததால் இங்குள்ள இளைஞர்கள் வேலைக்காக சென்னை மற்றும் பெங்களூருவுக்கு கூலி வேலைக்கு அதிகளவில் சென்றுள்ளனர்.

    போளூர் தொகுதி

    இந்த தொகுதியில் கடந்த 1952-ம் ஆண்டு முதல் 2016-ம் ஆண்டு வரை நடந்த 15 தேர்தல்களில் தி.மு.க. 7 முறையும், அ.தி.மு.க. 4 முறையும், காங்கிரஸ் 3 முறையும், காமன்வெல்த் கட்சி ஒரு முறையும் வெற்றி பெற்றுள்ளன.

    போளூர் தொகுதியில் கடந்த முறை 285 வாக்குச்சாவடி மையங்கள் இருந்தன. தற்போது கொரோனா தொற்று பரவல் காரணமாக தேர்தல் ஆணையத்தின் உத்தரவுப்படி 1000-க்கும் மேற்பட்ட வாக்காளர்கள் நிறைந்த வாக்குச்சாவடிகள் பிரிக்கப்பட்டன. இதனால் தற்போது 48 வாக்குச்சாவடிகள் கூடுதலாக அமைக்கப்பட்டு மொத்தம் 333 வாக்குச்சாவடி மையங்களாக உயர்ந்துள்ளது.

    போளூர் தொகுதி

    போளூர் ஒன்றியத்தில் 7 வாக்குச்சாவடிகளும், சேத்துப்பட்டு ஒன்றியத்தில் 11 வாக்குச்சாவடிகளும் என 18 வாக்குச்சாவடிகள் பதற்றமானவையாக அறிவிக்கப்பட்டு உள்ளது. அங்கு கூடுதல் போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

    நிறைவேற்றப்பட வேண்டிய பிரச்சினைகள்

    போளூரை அடுத்த பாக்மார்பேட்டையில் தொழிற்பேட்டை அமைக்க அரசு முன் வந்தது. ஆனால் இன்று வரை அமைக்கவில்லை. போளூரில் அரசு பெண்கள் கலைக்கல்லூரி அமைத்து தர வேண்டும். போளூர் பெரிய ஏரிக்கு செய்யாற்றில் இருந்து மஞ்சளாறு வழியாக மழைநீர் வந்து சேருகிறது. குடிநீர் பற்றாக்குறை தீர பெரிய ஏரிக்கு கூடுதல் நீர்வழித்தடம் அமைக்க வேண்டும்.

    ஜவுளி பூங்கா அமைக்க வேண்டும். போளூரை நகராட்சியாக அந்தஸ்து உயர்த்த வேண்டும். வசூர் கிராமத்தில் உள்ள விதை நெல் ஆராய்ச்சி மையத்தை மேம்படுத்த வேண்டும். மொடையூரில் கற்சிற்ப கலையை மேம்படுத்த சிற்பிகளுக்கு வசதி ஏற்படுத்தி தர வேண்டும்.

    திருமலையில் பல ஆயிரம் ஆண்டு பழமை வாய்ந்த சமணர் (ஜெயின்) ஆலயம், ஆவணியாபுரம் வைணவ கோவில், போளூர் சுயம்பு சம்பத் கிரி லட்சுமி நரசிம்ம சுவாமி கோவில் போன்றவற்றை சுற்றுலாதல மாக மாற்றி வரும் பக்தர்களுக்கு தேவையான வசதிகள் செய்து தர வேண்டும்.

    போளூர் தொகுதி

    போளூர் பஸ் நிலைத்தை விரிவாக்கம் செய்ய வேண்டும். போளூரில் விளையாட்டு மைதானம் அமைத்து தர வேண்டும். தொகுதியில் உள்ள சாலை வசதிகள் உள்பட அடிப்படை வசதிகள் மேம்படுத்த வேண்டும். விவசாய கல்லூரி அமைக்க வேண்டும். எம்.ஜி.ஆர்., காமராஜர், அண்ணா, இந்திராகாந்தி ஆகிய தலைவர்கள் போளூரில் தங்கிய பயணியர் மாளிகை தொடர்ந்து பல ஆண்டுகளாக சீரமைக்கப்படாமல் மூடியே உள்ளது.

    அதை சீரமைத்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும். போளூர் தாலுகாவில் மக்கள் தொகை வளர்ச்சிக்கு ஏற்ப அடிப்படை வசதிகள் மேம்படுத்த வேண்டும். பெண்ணையாறு செய்யாறு இணைப்பு திட்டம் கொண்டு வர வேண்டும். முடையூரில் சிற்ப கல்லூரி அமைக்க வேண்டும்.மேற்கண்டவை உள்பட பல கோரிக்கைகள் பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

    திமுக சார்பில் தற்போது எம்எல்ஏ-வாக உள்ள கே.வி. சேகரன் மீண்டும் போட்டியிடுகிறார். அதிமுக சார்பில்  அக்ரி கிருஷ்ணமூர்த்தி போட்டியிடுகிறார்.

    போளூர் தொகுதி
    போளூர் தொகுதி

    1951- மாணிக்கவேல் நாயக்கர்- பொது நல கட்சி
    1957- அண்ணாமலை- சுயேச்சை
    1962- கேசவ ரெட்டியார்- தி.மு.க.
    1967- குப்பம்மாள்- தி.மு.க.
    1971- சீனிவாசன்- தி.மு.க.
    1977- சுப்பிரமணியன்- அ.தி.மு.க.
    1980- பலராமன்- காங்கிரஸ்
    1984- ஜெ.ராசாபாபு- காங்கிரஸ்
    1989- ராஜேந்திரன்- தி.மு.க.
    1991- வேதியப்பன்- அ.தி.மு.க.
    1996- எ.ராசேந்திரன்- தி.மு.க.
    2001- நளினி மனோகரன்- அ.தி.மு.க.
    2006- விஜயகுமார்- காங்கிரஸ்
    2011- எல். ஜெயசுதா- அ.தி.மு.க.
    2016- கே.வி. சேகரன்- தி.மு.க.
    Next Story
    ×