என் மலர்
திருவள்ளூர்
- வாகனங்களில் செல்பவர்கள் மற்றும் நடந்து செல்லும் பொது மக்களை நாய்கள் கூட்டமாக துரத்தி கடிக்கின்றன.
- கடந்த ஒருவாரத்தில் திருத்தணியில் 10-க்கும் மேற்பட்டோரை தெரு நாய்கள் கடித்து உள்ளன.
திருத்தணி:
திருத்தணி நகராட்சியில் மொத்தம் 21 வார்டுகள் உள்ளன. இங்குள்ள தெருக்களில் சுமார் 50-க்கும் மேற்பட்ட தெரு நாய்கள் சுற்றி வருகின்றன.
நாய்கள் சாலை நடுவிலேயே படுத்து தூங்குவதாலும், அவ்வப்போது வாகனங்கள் செல்லும்போது ரோட்டின் குறுக்கே ஓடுவதாலும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் நிலை ஏற்பட்டு வருகிறது.
மேலும் வாகனங்களில் செல்பவர்கள் மற்றும் நடந்து செல்லும் பொது மக்களை நாய்கள் கூட்டமாக துரத்தி கடிக்கின்றன. இதனால் பொதுமக்களும், சிறுவர்களும் தெருக்களிலும், சாலையிலும் செல்லவே அச்சப்படும் நிலை உள்ளது.
நேற்று மட்டும் மேட்டு தெரு மற்றும் பழைய தர்மராஜா கோவில் தெருவில் 2 ஆண்களை நாய்கள் விரட்டி, விரட்டி கடித்து குதறின. இதில் பலத்த காயம் அடைந்த அவர்கள் திருத்தணி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று சென்றனர்.
கடந்த ஒருவாரத்தில் திருத்தணியில் 10-க்கும் மேற்பட்டோரை தெரு நாய்கள் கடித்து உள்ளன. நாய்களின் அச்சுறுத்தலால் வெளியே செல்ல பொது மக்கள் தவித்து வருகிறார்கள். தங்களது குழந்தைகளையும் வெளியே அனுப்ப பயந்தபடி உள்ளனர்.
எனவே திருத்தணி நகராட்சியில் சுற்றிதிரியும் நாய்களை கட்டுப்படுத்த நகராட்சி நிர்வாகம் மற்றும் கால்நடைத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
- பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமியை தரிசனம் செய்தனர்.
- அமைச்சர் சேகர்பாபு நேற்று இரவு பவானி அம்மன் கோவிலுக்கு வந்து தங்கி இருந்தார்.
பெரியபாளையம்:
திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியம், பெரியபாளையத்தில் உள்ள ஆரணி ஆற்றங்கரையில் பிரசித்தி பெற்ற சுயமாக உருவான அருள்மிகு பவானி அம்மன் திருக்கோவில் உள்ளது.
இக்கோவிலில் 14 வாரங்கள் ஆடித்திருவிழா நடைபெறும். இந்நிலையில், பக்தர்கள் தங்களது வேண்டுதல் நிறைவேற இக்கோவிலுக்கு சனிக்கிழமை இரவு குடும்பத்துடன் வந்து தங்கி இருந்து ஞாயிற்றுக்கிழமை தங்களது நேர்த்தி கடனை செலுத்தி விட்டு செல்வர்.
இந்நிலையில் இன்று ஆடி மாதத்தின் முதல் ஞாயிற்றுக்கிழமை என்பதால் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் இக்கோவிலுக்கு வந்து நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்துவிட்டு தங்களது நேர்த்தி கடனை செலுத்தி விட்டு சென்றனர்.
தர்ம தரிசனம், கட்டண தரிசனம், சிறப்பு தரிசனம் உள்ளிட்ட பல்வேறு தரிசன வரிசைகளில் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமியை தரிசனம் செய்தனர்.
இந்நிலையில் தமிழக இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு நேற்று இரவு இக்கோவிலுக்கு வந்து தங்கி இருந்தார். இன்று சுவாமி தரிசனம் செய்துவிட்டு புறப்பட்டு சென்றார். திருக்கோவிலுக்கு தரிசனம் செய்ய வந்த அவருக்கு கோவில் சார்பாக சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
- பொது மக்கள் தங்களது கோரிக்கையை வலியுறுத்தி மீஞ்சூர்- வடசென்னை அனல் மின் நிலையம் செல்லும் சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
- அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் எங்களது போராட்டம் தொடரும் என்றனர்.
பொன்னேரி:
மீஞ்சூரை அடுத்த அத்திப்பட்டு புதுநகர் பகுதியில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன.
100-க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் செயல்பட்டு வருகின்றன. வல்லூர், கொண்டக்கரை, குருவி மேடு, கவுண்டர்பாளையம், வெள்ளி வாயில் சாவடி உள்ளிட்ட பல கிராமங்களில் இருந்து வெளிவரும் மழை நீர் அத்திப்பட்டுபுதுநகர், தாங்கல் வழியாக சென்று கொசஸ்தலை ஆற்றில் கலக்கிறது.
அத்திப்பட்டு புதுநகர் தாழ்வான பகுதி என்பதால் ஒவ்வொரு ஆண்டும் மழைக்காலங்களில் வெள்ள நீர் குடியிருப்புக்குள் புகுந்து பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகிறார்கள். இதனை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர்.
இதைத்தொடர்ந்து தாங்கல் பகுதியில் கன மழையின் போது வெள்ள நீர் ஊருக்குள் புகாமல் இருக்க தடுப்பு கால்வாய் அமைக்க முடிவு செய்யப்பட்டது. இதற்கு வல்லூர் தேசிய அனல் மின் நிலைய சமூக மேம்பாட்டு நிதி ரூ.50 லட்சம் ஒதுக்கப்பட்டு 50 அடி அகலத்திற்கு சுமார் 400 மீட்டர் தூரம் தடுப்பு கால்வாய் அமைக்கப்பட உள்ளது.
ஆனால் அந்த பகுதி சுமார் 1½ கிலோ மீட்டர் இருப்பதாக தெரிகிறது. ஆனால் முழுவதும் அமைக்காமல் 400 மீட்டர் தூரத்துக்கு 50 அடி அகலத்திற்கு மட்டும் தடுப்பு கால்வாய் அமைப்பதால் எந்த பயனும் இல்லை எனவும் 100 அடி அகலத்திற்கு சுவர் அமைக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகிறார்கள்.
இந்த நிலையில் நீர் நிலையில் ஆக்கிரமிப்புகளை அகற்றாமல் தடுப்பு கால்வாய் அமைக்கும் பணி நடைபெற்றதாக தெரிகிறது. இதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இடத்தை முறையாக அளவீடு செய்து தூர்வாரி ஆழப்படுத்த வேண்டும் என்றுய கூறி அத்திப்பட்டு புதுநகர் மேற்கு பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கடந்த இரண்டு வாரமாக கட்டுமான பணி நடை பெறும் இடத்தை முற்றுகை யிட்டு தொடர்ந்து வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர்.
இதற்கிடையே பொது மக்கள் தங்களது கோரிக்கையை வலியுறுத்தி மீஞ்சூர்- வடசென்னை அனல் மின் நிலையம் செல்லும் சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
மீஞ்சூர் போலீசார் விரைந்து வந்து பேச்சு வார்த்தை நடத்தி கலைந்து போகச்செய்தனர். இந்த விவகாரம் தொடர்பாக அத்திப்பட்டு முதல் நிலை ஊராட்சி தலைவர் சுகந்தி வடிவேல், துணைத் தலைவர் கதிர்வேல், வார்டு உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் போலீஸ் நிலையத்திலும் புகார் செய்தனர்.
இதுகுறித்து பொதுமக்கள் கூறும்போது, முறையாக அளவீடு செய்து முழுவதும் தடுப்பு சுவர் அமைக்க வேண்டும். ஒன்றரை கிலோ மீட்டர் தூரம் உள்ள தாங்கல் பகுதியில் 400 மீட்டர் தூரம் மட்டுமே தடுப்புச் சுவர் கட்டுவதால் மழைக் காலங்களில் சுவர் இடிந்து விழுந்து மீண்டும் அத்திப்பட்டு புதுநகர் தண்ணீரில் மூழ்கும் அபாயம் உள்ளது.
மேலும் தாங்கல் பகுதியை தூர் வார வேண்டும். இது குறித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் எங்களது போராட்டம் தொடரும் என்றனர்.
- குருபூஜை விழா 37-ம் ஆண்டாக இன்றுடன் மூன்று நாட்களாக நடைபெற்றது.
- பல்லாயிரக்கணக்கான பக்தர்களுக்கும் அறுசுவை உணவு அன்னதானமாக வழங்கப்பட்டது.
பெரியபாளையம்:
திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியம்,வெங்கல் அணைக்கட்டு திருவிழா எனப்படும் மும் முனிவர் குருபூஜை விழா 37-ம் ஆண்டாக இன்றுடன் மூன்று நாட்களாக நடைபெற்றது.
இதை முன்னிட்டு வெள்ளிக்கிழமை மாலை கணபதி பூஜையுடன் மூன்று நாள் திருவிழா துவங்கியது. எனவே, ஸ்ரீ நவசக்தி விநாயகர், ஸ்ரீ செண்பகா தேவி அம்மன், ஸ்ரீ ஜெய் ஆஞ்சநேயர், மும்முனிவர் சுவாமிகளுக்கு அபிஷேகம், அலங்காரம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. சனிக்கிழமை மாலை வெங்கல் மும்முனிவர் திருக்குற்றாலம் மெளன குரு சுவாமி படம் மற்றும் செண்பகாதேவி அம்மன் உற்சவர் ஆகியவற்றின் ஊர்வலம் அம்மணம்பாக்கம் கூட்டுச்சாலையில் இருந்து புறப்பட்டு அணைக்கட்டுக்கு வந்தடைந்தது. இன்று காலை அம்மணம்பாக்கம் அணைகட்டு ஸ்ரீ நவசக்தி விநாயகர், ஸ்ரீ வெங்கல் மும்முனிவர் திருக்குற்றால மௌன குரு சுவாமிகள் மற்றும் ஸ்ரீசெண்பகா தேவி அம்மன் உள்ளிட்டவைகளுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
பின்னர் உற்சவர் ஸ்ரீசெண்பகாதேவி அம்மன் ஊஞ்சல் சேவை நடைபெற்றது. இதை தொடர்ந்து பக்தர்களுக்கு அருட்பிரசாதமாக திருமாங்கல்யகயிறு, மஞ்சள், குங்குமம், விபூதி உள்ளிட்டவை வழங்கப்பட்டது. கோவிலுக்கு வந்திருந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்களுக்கும் அறுசுவை உணவு அன்னதானமாக வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில், சுற்று வட்டாரத்தைச்சேர்ந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தங்களது குடும்பத்துடன் இக்கோவிலுக்கு
வந்து தரிசனம் செய்தனர். இந்த அணைக்கட்டு திருவிழா துவங்கியபின் தான் பெரியபாளையம் ஸ்ரீ பவானி அம்மன் திருக்கோவிலின் ஆடித்திருவிழா துவங்கியதாக பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை விழா குழு தலைவர் எம்.கணேசன், செயலாளர் டி.ஆர்.நந்தகோபால், பொருளாளர் டி.கணேசன், கௌரவத் தலைவர் சீனிவாசன் மற்றும் உறுப்பினர்கள் விழா குழுவினர்கள் பல்வேறு கட்சியை சேர்ந்த முக்கிய பிரமுகர்கள், கிராம பொதுமக்கள் சிறப்பாக செய்திருந்தனர்.
- பொன்னேரி பஜார் பகுதியில் ரவுடிகளின் அட்டகாசம் தொடர்ந்து நீடித்து வருகிறது.
- ஆலோசனை கூட்டத்தில் பொன்னேரி பகுதியில் உள்ள 100-க்கும் மேற்பட்ட வியாபாரிகள் கலந்து கொண்டனர்.
பொன்னேரி:
பொன்னேரி பகுதியில் உள்ள வியாபாரிகளிடம் ரவுடிகள் அட்டகாசம் அதிகரித்து வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு மது போதையில் ரவுடி கும்பல் ஏராளமான கடைகளை அடித்து உடைத்து ரகளையில் ஈடுபட்டனர்.
இதே போல் கடந்த வாரம் முட்டை கடை ஒன்றும் சூறையாடப்பட்டது. வியாபாரிகளை கத்தி முனையில் மிரட்டி பணம் பறிப்பதும் அதிகரித்து உள்ளது.
இது பற்றி போலீசில் புகார் செய்தும் ரவுடி கும்பல் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று தெரிகிறது. மேலும் புகார் செய்யும் வியாபாரிகளையும் குறி வைத்து ரவுடிகள் மிரட்டும் சம்பவம் நடந்து வருகிறது. இது தொடர்பாக போலீசாரி டம் வியாபாரிகள் கூறும் போது, கண்டு கொள்வதில்லை என்று கூறப்படுகிறது. இதனால் பொன்னேரி பஜார் பகுதியில் ரவுடிகளின் அட்டகாசம் தொடர்ந்து நீடித்து வருகிறது.
கடைகளை குறிவைத்து திருட்டு சம்பவங்களும் அதிரிக்க தொடங்கி உள்ளன. எனவே ரவுடிகளை அடக்க போலீசார் அதிரடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வியாபாரிகள் கோரிக்கை விடுத்து வந்தனர். இந்த நிலையில் பொன்னேரி நகர அனைத்து வியாபாரிகள் சங்கம் சார்பில் அவசர ஆலோசனைக் கூட்டம் தனியார் திருமண மண்டபத்தில் தலைவர் பத்மநாபன் தலைமையில் நடைபெற்றது.
அப்போது, ரவுடிகளின் அட்டகாசம், கடைகளில் திருட்டு உள்ளிட்ட செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வியாபாரிகள் வலியுறுத்தினர்.
மேலும் இதுபற்றி போலீசாரிடம் பலமுறை புகார் அளித்தும், நடவடிக்கை எடுக்காத போலீசாருக்கும் கண்டனம் தெரிவித்தனர்.
இந்த நிலையில் ரவுடிகள் அட்டகாசத்தை தடுக்க வேண்டும், பொன்னேரி பகுதி வியாபாரிகளுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் மற்றும் ரவுடிகள் விஷயத்தில் நடவடிக்கை எடுக்காத போலீசாரை கண்டித்து வருகிற 25-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) அனைத்து வியாபாரிகளும் ஒரு நாள் கடையடைப்பு மற்றும் பொன்னேரி பழைய பஸ் நிலையத்தில் உள்ள அண்ணாசிலை அருகில் ஆர்ப்பாட்டம் நடத்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்த ஆலோசனை கூட்டத்தில் பொன்னேரி பகுதியில் உள்ள 100-க்கும் மேற்பட்ட வியாபாரிகள் கலந்து கொண்டனர்.
- நெடுஞ்சாலை துறை அதிகாரி பாலச்சந்தர் பார்வையிட்டு ஆக்கிரமிப்பை அகற்றும்படி கூறினார்.
- அகற்றாவிட்டால் நெடுஞ்சாலைத்துறை ஜேசிபி இயந்திரம் மூலம் அகற்றப்படும் என எச்சரிக்கப்பட்டது.
பொன்னேரி:
பொன்னேரி அடுத்த வேண்பாக்கம், பொன்னேரி-திருவொற்றியூர் சாலை மாதா சிலை அருகில் தனிநபர், துணைமின் வாரிய செயற்பொறியாளர் அலுவலகம் மற்றும் நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான இடத்தை ஆக்கிரமிப்பு செய்து கட்டிட வேலைகள் நடைபெற்றது. அப்போது, அப்பகுதி பொதுமக்கள் மற்றும் மின் செயற்பொறியாளர் அலுவலக ஊழியர்கள் முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்து வந்த பொன்னேரி போலீசார் மற்றும் நெடுஞ்சாலை துறை அதிகாரி பாலச்சந்தர் பார்வையிட்டு ஆக்கிரமிப்பை அகற்றும்படி சம்பந்தப்பட்ட நபரிடம் கூறினர். இது நெடுஞ்சாலைத்துறை, மற்றும் மின்சார அலுவலகத்திற்கு சொந்தமான இடம் எனவும், ஆக்கிரமிப்பை அகற்றாவிட்டால் நெடுஞ்சாலைத்துறை ஜேசிபி இயந்திரம் மூலம் அகற்றப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்தனர். இதனையடுத்து முற்றுகையிட்ட மக்கள், மின் ஊழியர்கள் கலைந்து சென்றனர். இச்சம்பவத்தால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
- மோட்டார் சைக்கிளை ரஞ்சித் ஓட்டினார். பின்னால் சந்தோஷ் அமர்ந்திருந்தார்.
- காயம் அடைந்த சந்தோசை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக கொண்டு சேர்த்தனர்.
பூந்தமல்லி:
பூந்தமல்லி அடுத்த நசரத்பேட்டை, அகரமேல் பகுதியை சேர்ந்தவர் ஏழுமலை. இவரின் மகன் சந்தோஷ் (23), லேத் மெஷின் ஆபரேட்டராக வேலை செய்து வந்தார். இவரது நண்பர் ரஞ்சித். இருவரும் கடந்த சில தினங்களுக்கு முன்பு வேலை முடித்துவிட்டு வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர்.
மோட்டார் சைக்கிளை ரஞ்சித் ஓட்டினார். பின்னால் சந்தோஷ் அமர்ந்திருந்தார். பூந்தமல்லி - பெங்களூரு நெடுஞ்சாலை, பூந்தமல்லி அருகே சென்று கொண்டிருந்தபோது முன்னால் சென்ற இருசக்கர வாகனத்தின் மீது ரஞ்சித் ஓட்டி சென்ற வாகனம் மோதியதில் நிலை தடுமாறி இருவரும் கீழே விழுந்தனர். இதில் சந்தோசுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.
இதையடுத்து காயம் அடைந்த சந்தோசை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக கொண்டு சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த சந்தோஷ் நேற்று இரவு மூளை சாவு அடைந்தார். இதையடுத்து அவரது பெற்றோர் சந்தோசின் உடல் உறுப்புகளை தானம் செய்ய முன்வந்த நிலையில் இறந்து போன சந்தோசின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டது.
இச்சம்பவம் குறித்து ஆவடி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
- நகராட்சி நிர்வாக துறையில் இதுவரை இல்லாத அளவிற்கு நிறைய பணியிடங்கள் உருவாக்கப்பட்டுள்ளது.
- கோரிக்கைகள் நிறைவேற்ற படிப்படியாக நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.
பூந்தமல்லி:
தமிழ்நாடு நகராட்சி - மாநகராட்சி துப்புரவு ஆய்வாளர் மற்றும் துப்புரவு அலுவலர்கள் சங்கத்தின் மாநில பொறுப்பாளர்கள் புதிதாக பதவி ஏற்றுள்ள நகராட்சி நிர்வாக இயக்குநர் சிவராசாவை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.
மேலும் நகராட்சி நிர்வாக துறையில் இதுவரை இல்லாத அளவிற்கு நிறைய பணியிடங்கள் உருவாக்கப்பட்டுள்ளது என்றும் அதற்கு தமிழக முதலமைச்சர், நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் ஆகியோருக்கும் மற்றும் உயர் அலுவலர்களுக்கும் நன்றி தெரிவித்ததுடன் அப்பணியிடங்களை விரைந்து நிரப்பிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர்.
பின்னர் நகராட்சி நிர்வாக இயக்குநரிடம் அவர்கள் கோரிக்கை மனு ஒன்றை அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:- ஒரே துறையில் பணியாற்றிய போதும் நகராட்சி துப்புரவு அலுவலர்களுக்கும், மாநகராட்சி துப்புரவு அலுவலர்களுக்கும் இடையே உள்ள ஊதிய முரண்பாடுகளை களைய வேண்டும். மண்டல அளவில் துப்புரவு அலுவலர்களுக்கு பதவி உயர்வு வேண்டும்.
நகராட்சிகளில், மாநகராட்சிகளில் பணிபுரியும் நகர்நல மருத்துவர்களுக்கு மருத்துவம் சார்ந்த பணிகளும், துப்புரவு அலுவலர்களுக்கு பொது சுகாதார பணிகளையும் ஒதுக்கி பணி பகிர்வு செய்திட வேண்டும்.
பல நகராட்சிகளில் துப்புரவு அலுவலர் பணியிடங்களும் தோற்றுவிக்கப்பட்டுள்ளன. அதே சமயம் நகர்நல அலுவலர் பணியிடமும் தோற்றுவிக்கப் பட்டுள்ளன. இதனால் பணி பகிர்வில் குழப்பம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. நகராட்சிகளின் திடக்கழிவு மேலாண் பணிகளை பொது சுகாதாரத் துறை சார்ந்த மருத்துவர்களை கொண்டு கவனிக்கும் நிலை தவிர்க்கப்பட வேண்டும். மேலும், நகராட்சி, மாநகராட்சிகளில் ஏற்கெனவே சானிடரி இன்ஸ்பெக்டர்கள் எனப்படும் சுகாதார ஆய்வாளர்கள் பணிபுரிந்து வரும் போது பொது சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு துறை மூலம் நகர்ப்புற மருத்துவ மையங்கள் துவங்கப்பட்டு அவற்றில் புதியதாக 500 சுகாதார ஆய்வாளர்களை (ஹெல்த் இன்ஸ்பெக்டர்) நியமித்து உள்ளனர். இதனால் ஒரே நகர்ப்பகுதிகளில் இரு துறைகளின் சுகாதார ஆய்வாளர்கள் பணிபுரிய வேண்டியுள்ளது.
இதன்மூலம் நகர்ப்புற உள்ளாட்சிகளின் சுகாதார ஆய்வாளர்களான சானிடரி இன்ஸ்பெக்டர்கள் பணிகளில் பொது சுகாதாரத்துறை சார்ந்த சுகாதார ஆய்வாளர்களின் பணி குறுக்கீடு ஏற்படும். துப்புரவு அலுவலருக்கு திடக்கழிவு மேலாண்மை பணிகளை ஆய்வு செய்ய, பொது சுகாதார பணிகளைக் கவனிக்க, ஜீப் வாகனம் வழங்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும். காலியாக உள்ள துப்புரவு அலுவலர் பணியிடங்களை விரைவில் நிரப்பிட வேண்டும் என்றும் மாநில தலைவர் ஆல்பர்ட் அருள்ராஜ், செயலாளர், செந்தில்ராம் குமார், பொருளாளர் இளங்கோ, தலைமையிடத்து செயலாளர் கோவிந்த ராஜூ ஆகியோர் அந்த கோரிக்கை மனுவில் தெரிவித்து உள்ளனர். கோரிக்கைகளை கனிவுடன் பரிசீலித்த நகராட்சி நிர்வாக இயக்குநர், கோரிக்கைகள் நிறைவேற்ற படிப்படியாக நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று தெரிவித்தார். இச்சந்திப்பின் போது நகராட்சி நிர்வாக கூடுதல் இயக்குநர் விஜயகுமார் உடனிருந்தார்.
- மணியின் அலறல் சத்தம் கேட்டு அவ்வழியாக வந்தவர்கள் மப்பேடு போலீசுக்கு தகவல் அளித்தனர்.
- மப்பேடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவாலங்காடு அடுத்த சின்ன மண்டலி கிராமத்தைச் சேர்ந்தவர் மணி (23). இவர் உடற்பயிற்சி கூட பயிற்சியாளர்.மணி மப்பேடு பகுதியில் உடற்பயிற்சி கூடம் நடத்தி வருகிறார். நேற்று இரவு உடற்பயிற்சி முடிந்த பின் வீட்டிற்கு தனது இருசக்கர வாகனத்தில் கிளம்பினார்.
அப்போது மணியை 4 பேர் கொண்ட மர்ம கும்பல் வழிமறித்து கட்டை மற்றும் அரிவாளால் சரமாரியாக தாக்கினர். மணியின் அலறல் சத்தம் கேட்டு அவ்வழியாக வந்தவர்கள் மப்பேடு போலீசுக்கு தகவல் அளித்தனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த சப்-இன்ஸ்பெக்டர் சக்திவேல் மற்றும் போலீசார் படுகாயம் அடைந்த மணியை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தது. மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து மப்பேடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- கலவரத்தை கட்டுப்படுத்த தவறியதாக மத்திய-மாநில பாஜக அரசுகள் மீது எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி உள்ளனர்.
- சார்பு நீதிமன்றம் முன்பு வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பொன்னேரி:
மணிப்பூரில் இரு பிரிவினரிடையே நடந்த கலவரத்தில், இரண்டு பழங்குடியின பெண்களை நிர்வாணப்படுத்தி மானபங்கம் செய்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. கலவரத்தை கட்டுப்படுத்த தவறியதாக மத்திய-மாநில பாஜக அரசுகள் மீது எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டுகின்றன. ஆங்காங்கே போராட்டங்களும் நடைபெறுகின்றன.
அவ்வகையில், பெண்களை நிர்வாணப்படுத்தி மானபங்கம் செய்த நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், மணிப்பூர் அரசு மற்றும் மத்திய அரசை கண்டித்தும் பொன்னேரி அனைத்து வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் சார்பு நீதிமன்றம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் 50க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் கலந்து கொண்டனர்.
- இந்து அன்னையர் முன்னணியின் சார்பில் உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
- திருவள்ளூர் கிழக்கு மாவட்ட இந்து முன்னணி துணைத் தலைவர் மோகன் சுவாமி தலைமை தாங்கினார்.
திருவள்ளூர் மாவட்டம், சோழவரம் ஒன்றியம், பெருமாள்குப்பம்-மல்லியங்குப்பம் ஊராட்சியில் உள்ள இந்து அன்னையர் முன்னணி அமைப்பின் சார்பில் இன்று மாலை மஞ்சள் நீர் ஊர்வலம் நடைபெற்றது. இன்று ஆடி வெள்ளிக்கிழமையின் முதல் வாரம் என்பதால் இந்த ஊராட்சியில் உள்ள கிராம தேவதையான காணியம்மன் கோவிலில் இருந்து, விரதம் இருந்த நூற்றுக்கணக்கான பெண்கள் மஞ்சள் நீர் குடங்களை பயபக்தியுடன் தலையில் சுமந்த வண்ணம் மாட வீதிகளின் வழியாக ஊர்வலமாக சென்று மீண்டும் கோவிலை வந்தடைந்தனர்.
பின்னர், மூலவர் அம்மனுக்கு மஞ்சள் நீர் அபிஷேகம் செய்தனர். இதன் பின்னர் இந்து அன்னையர் முன்னணியின் சார்பில் உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதைத்தொடர்ந்து மூலவருக்கு அலங்காரம் மகா தீபாராதனை உள்ளிட்டவை நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிகளுக்கு, திருவள்ளூர் கிழக்கு மாவட்ட இந்து முன்னணி அமைப்பின் மாவட்ட துணைத் தலைவர் மோகன் சுவாமி தலைமை தாங்கினார். மாவட்டச் செயலாளர் குமார், ஆரணி பேரூர் தலைவர் ரங்கநாதன், ஆரணி பேரூராட்சி மன்ற 15-வது வார்டு உறுப்பினர் குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில், சிறப்பு அழைப்பாளராக இந்து முன்னணி அமைப்பின் மாநில பொதுச் செயலாளர் பரமேஸ்வரன் கலந்து கொண்டார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பெருமாள்குப்பம்-மல்லியங்குப்பம் ஊராட்சியில் உள்ள இந்து அன்னையர் முன்னணி அமைப்பினரும், கிராம பொதுமக்களும் சிறப்பாக செய்திருந்தனர்.
- காப்பு கட்டி விரதம் இருந்த பக்தர்கள் பயபக்தியுடன் முளைப்பாரியை சுமந்து ஊர்வலமாக சென்றனர்.
- ஞாயிற்றுக்கிழமை காலை கூழ் ஊற்றும் நிகழ்ச்சியும், மாலை பொங்கல் வைக்கும் நிகழ்ச்சியும் நடக்கிறது.
பெரியபாளையம்:
திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியம், மாகரல் கிராமத்தில் பழமை வாய்ந்த அருள்மிகு ஸ்ரீ பவானி அம்மன் கோவில் ஒன்று உள்ளது. இந்த கோயிலில் ஆண்டுதோறும் ஆடி மாதம் முதல் வாரத்தை முன்னிட்டு கூழ் ஊற்றும் நிகழ்ச்சியும், முளைப்பாரி ஊர்வலம் செல்லும் திருவிழா நிகழ்ச்சியும் விமரிசையாக நடைபெறும்.
அவ்வகையில் இன்று ஆடி மாதம் முதல் வாரத்தை முன்னிட்டு கூழ் ஊற்றுதல் மற்றும் முளைப்பாரி ஊர்வலம் செல்லும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. இதை முன்னிட்டு மூலவர் அருள்மிகு ஸ்ரீ பவானி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், சிறப்பு அலங்காரம், மகா தீபாராதனை உள்ளிட்டவை நடைபெற்றது. இதை தொடர்ந்து ஆலய வளாகத்தில் இருந்து காப்பு கட்டி விரதம் இருந்த ஏராளமான பக்தர்கள் தங்களது தலையில் பயபக்தியுடன் முளைப்பாரியை சுமந்து கொண்டு கோவிலில் இருந்து சிவன் கோவில் தெரு, பிள்ளையார் கோவில் தெரு, பொன்னியம்மன் கோவில் தெரு, பஜனை கோவில் தெரு, எம்ஜிஆர் தெரு உள்ளிட்ட முக்கிய தெருக்களின் வழியாக ஊர்வலம் சென்று வந்தனர்.

இதன் பின்னர், முளைப்பாரிக்கு மகாதீபாரதனை காண்பிக்கப்பட்டது. பின்னர், முளைப்பாரியை அல்லாரம் குளத்தில் கரைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில், எல்லாபுரம் ஒன்றிய குழு உறுப்பினர் கோடுவெளி குழந்தைவேலு உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர். இன்று மாலை ஆடிப்பூர விசேஷ தீபாராதனை நடைபெறுகிறது. நாளை மாலை பதிபூஜையுடன் தீபாராதனை நடைபெறுகிறது.
ஞாயிற்றுக்கிழமை காலை கூழ் ஊற்றும் நிகழ்ச்சியும், மாலை பொங்கல் வைக்கும் நிகழ்ச்சியும், அதை தொடர்ந்து பூக்களாலும், மின்விளக்குகளாலும் அலங்கரிக்கப்பட்ட அம்மன் திருவீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. அன்று இரவு பாரத மாதா நாடக சபாவின் தெருக்கூத்து நிகழ்ச்சி ஆசிரியர் கோவர்தனன் தலைமையில் நடைபெறுகிறது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மாகரல் கிராம பொதுமக்களும், பக்தர்களும் சிறப்பாக செய்துள்ளனர்.






