search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    ஆக்கிரமிப்புகளை அகற்றாமல் தடுப்பு கால்வாய் அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு-மறியல்
    X

    ஆக்கிரமிப்புகளை அகற்றாமல் தடுப்பு கால்வாய் அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு-மறியல்

    • பொது மக்கள் தங்களது கோரிக்கையை வலியுறுத்தி மீஞ்சூர்- வடசென்னை அனல் மின் நிலையம் செல்லும் சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
    • அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் எங்களது போராட்டம் தொடரும் என்றனர்.

    பொன்னேரி:

    மீஞ்சூரை அடுத்த அத்திப்பட்டு புதுநகர் பகுதியில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன.

    100-க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் செயல்பட்டு வருகின்றன. வல்லூர், கொண்டக்கரை, குருவி மேடு, கவுண்டர்பாளையம், வெள்ளி வாயில் சாவடி உள்ளிட்ட பல கிராமங்களில் இருந்து வெளிவரும் மழை நீர் அத்திப்பட்டுபுதுநகர், தாங்கல் வழியாக சென்று கொசஸ்தலை ஆற்றில் கலக்கிறது.

    அத்திப்பட்டு புதுநகர் தாழ்வான பகுதி என்பதால் ஒவ்வொரு ஆண்டும் மழைக்காலங்களில் வெள்ள நீர் குடியிருப்புக்குள் புகுந்து பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகிறார்கள். இதனை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர்.

    இதைத்தொடர்ந்து தாங்கல் பகுதியில் கன மழையின் போது வெள்ள நீர் ஊருக்குள் புகாமல் இருக்க தடுப்பு கால்வாய் அமைக்க முடிவு செய்யப்பட்டது. இதற்கு வல்லூர் தேசிய அனல் மின் நிலைய சமூக மேம்பாட்டு நிதி ரூ.50 லட்சம் ஒதுக்கப்பட்டு 50 அடி அகலத்திற்கு சுமார் 400 மீட்டர் தூரம் தடுப்பு கால்வாய் அமைக்கப்பட உள்ளது.

    ஆனால் அந்த பகுதி சுமார் 1½ கிலோ மீட்டர் இருப்பதாக தெரிகிறது. ஆனால் முழுவதும் அமைக்காமல் 400 மீட்டர் தூரத்துக்கு 50 அடி அகலத்திற்கு மட்டும் தடுப்பு கால்வாய் அமைப்பதால் எந்த பயனும் இல்லை எனவும் 100 அடி அகலத்திற்கு சுவர் அமைக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகிறார்கள்.

    இந்த நிலையில் நீர் நிலையில் ஆக்கிரமிப்புகளை அகற்றாமல் தடுப்பு கால்வாய் அமைக்கும் பணி நடைபெற்றதாக தெரிகிறது. இதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இடத்தை முறையாக அளவீடு செய்து தூர்வாரி ஆழப்படுத்த வேண்டும் என்றுய கூறி அத்திப்பட்டு புதுநகர் மேற்கு பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கடந்த இரண்டு வாரமாக கட்டுமான பணி நடை பெறும் இடத்தை முற்றுகை யிட்டு தொடர்ந்து வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர்.

    இதற்கிடையே பொது மக்கள் தங்களது கோரிக்கையை வலியுறுத்தி மீஞ்சூர்- வடசென்னை அனல் மின் நிலையம் செல்லும் சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    மீஞ்சூர் போலீசார் விரைந்து வந்து பேச்சு வார்த்தை நடத்தி கலைந்து போகச்செய்தனர். இந்த விவகாரம் தொடர்பாக அத்திப்பட்டு முதல் நிலை ஊராட்சி தலைவர் சுகந்தி வடிவேல், துணைத் தலைவர் கதிர்வேல், வார்டு உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் போலீஸ் நிலையத்திலும் புகார் செய்தனர்.

    இதுகுறித்து பொதுமக்கள் கூறும்போது, முறையாக அளவீடு செய்து முழுவதும் தடுப்பு சுவர் அமைக்க வேண்டும். ஒன்றரை கிலோ மீட்டர் தூரம் உள்ள தாங்கல் பகுதியில் 400 மீட்டர் தூரம் மட்டுமே தடுப்புச் சுவர் கட்டுவதால் மழைக் காலங்களில் சுவர் இடிந்து விழுந்து மீண்டும் அத்திப்பட்டு புதுநகர் தண்ணீரில் மூழ்கும் அபாயம் உள்ளது.

    மேலும் தாங்கல் பகுதியை தூர் வார வேண்டும். இது குறித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் எங்களது போராட்டம் தொடரும் என்றனர்.

    Next Story
    ×