என் மலர்
திருவள்ளூர்
- நேற்று இரவு பாலாஜி குடும்பத்துடன் குடிசை வீட்டில் தூங்கினார்.
- பாலாஜி, அவரது மகள் விகிதாவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
திருத்தணி:
திருத்தணி அடுத்த வி.சி.ஆர். கண்டிகை கிராமத்தைச் சேர்ந்தவர் பாலாஜி(வயது30). கட்டிட தொழிலாளி. இவரது மனைவி ராதா. இவர்களுக்கு 2 மகன்களும், விகிதா(7) என்ற மகளும் உள்ளனர். விகிதா அருகில் உள்ள பள்ளியில் 2-ம் வகுப்பு படித்து வருகிறார்.
இந்த நிலையில் நேற்று இரவு பாலாஜி குடும்பத்துடன் குடிசை வீட்டில் தூங்கினார். நள்ளிரவில் வீட்டுக்குள் வந்த பாம்பு ஒன்று பாலாஜியையும், அவரது மகள் விகிதாவையும் கடித்து சென்று விட்டது.
இதில் விஷம் ஏறியதில் அவர்கள் இருவரும் வாயில் நுரை தள்ளிய நிலையில் மயங்கினர். இன்று அதிகாலை ராதா மற்றும் அவரது மகன்கள் எழுந்தபோது பாலாஜியும், விகிதாவும் பாம்பு கடித்ததில் மயங்கிய நிலையில் கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
உடனடியாக அவர்களை மீட்டு திருத்தணி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.
அங்கு பாலாஜி, அவரது மகள் விகிதாவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர்களது உடல் நிலை மிகவும் மோசமாக உள்ளது. இதுகுறித்து திருத்தணி போலீசார் விசாரித்து வருகின்றனர்.
- சாலையை பயன்படுத்த முடியாத நிலையில் பொதுமக்கள் தவித்து வருகிறார்கள்.
- பெண்கள் உள்பட சுமார் 50-க்கும் மேற்பட்டோர் சாலை அமைத்து தரக்கோரி சேறும் சகதியுமான சாலையில் நாற்று நட்டு நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவள்ளூர்:
திருவள்ளூரை அடுத்த கொட்டையூர் ஊராட்சிக்குட்பட்டது இந்திரா நகர். இப்பகுதியில் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்திரா நகரில் கடந்த 15 ஆண்டுக்கு முன்பு சாலை அமைத்து உள்ளனர். தற்போது இந்த சாலைகள் அனைத்தும் சேதமடைந்து குண்டும், குழியுமாக மாறிவிட்டன. சாலைகளே தெரியாத அளவுக்கு அனைத்து ஜல்லி கற்களும் பெயர்ந்து மண்சாலையாக மாறி உள்ளது.
எனவே இந்த பகுதியில் புதிதாக சாலை அமைத்து தரவேண்டும் என்று அப்பகுதி மக்கள் அதிகாரிகளுக்கு பலமுறை கோரிக்கை விடுத்தனர். ஆனால் இதுவரை சாலை அமைக்கப்படவில்லை.
இந்த நிலையில் கடந்த சில நாட்களாக பெய்துவரும் மழை காரணமாக சாலை இருந்த இடம் முழுவதும் தண்ணீர் தேங்கி சகதியாக மாறிவிட்டது. மேலும் அப்பகுதியில் கழிவு நீரும் தேங்கி நிற்கிறது.
இதனால் அந்த சாலையை பயன்படுத்த முடியாத நிலையில் பொதுமக்கள் தவித்து வருகிறார்கள். குழந்தைகள், முதியோர் சேறும், சகதியுமான சாலையில் நடந்து செல்லவே பயப்படும் நிலை உள்ளது.
இந்த நிலையில் அப்பகுதி பெண்கள் உள்பட சுமார் 50-க்கும் மேற்பட்டோர் சாலை அமைத்து தரக்கோரி சேறும் சகதியுமான சாலையில் நாற்று நட்டு நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் சாலை வசதி கோரி ஆர்ப்பாட்டம் செய்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து பொதுமக்கள் கூறும்போது, எங்கள் பகுதியில் சாலை அமைத்து 15 ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. தற்போது இந்தசாலை பெயர்ந்து சாலை இருந்த இடம் தெரியாத அளவில் காணப்படுகிறது.
தற்போது பெய்து வரும் மழையால் சாலைகள் அனைத்தும் கழிவு நீருடன் கலந்து சேரும் சகதியுமாய் மாறி போக்குவரத்துக்கு லாயக்கற்று உள்ளது. இதனால் நோய் தொற்று ஏற்பட அபாயம் உள்ளது. சாலை வசதி கேட்டு ஊராட்சி அலுவலகம். ஒன்றிய அலுவலகம், மாவட்ட நிர்வாகத்திடம் பலமுறை புகார் தெரிவித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை என்றனர்.
- கடந்த 1 மணி நேரத்திற்கும் மேலாக ரெயிலை நிறுத்தி வைத்திருப்பதால் பயணிகள் கடும் அவதி அடைந்தனர்.
- எண்ணூர் ரெயில் நிலையத்தில் ஒன்றன் பின் ஒன்றாக ரெயில்கள் நிறுத்தப்பட்டுள்ளது.
திருவள்ளூர்:
சென்னை-கும்மிடிப்பூண்டி புறநகர் ரெயில் பழுது காரணமாக எண்ணூர் அருகே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. எண்ணூர் ரெயில் நிலையத்தில் உயர்மின் அழுத்த கோளாறு காரணமாக புறநகர் ரெயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது.
கடந்த 1 மணி நேரத்திற்கும் மேலாக ரெயிலை நிறுத்தி வைத்திருப்பதால் பயணிகள் கடும் அவதி அடைந்தனர்.
ரெயில் சேவை பாதிப்பால் கல்லூரி மாணவர்கள், பொதுமக்கள், அலுவலகம் செல்பவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். இதனால் ஆத்திரமடைந்த பயணிகள் பொன்னேரி ரெயில் நிலையத்தில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
எண்ணூர் ரெயில் நிலையத்தில் ஒன்றன் பின் ஒன்றாக ரெயில்கள் நிறுத்தப்பட்டுள்ளது.
கும்மிடிப்பூண்டி செல்லும் புறநகர் ரெயில் சேவை பாதிப்பால் பயணிகள் போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
- இது எங்கள் ஆட்சி, எனக்குத்தான் முதல் மரியாதை கொடுக்க வேண்டும் என கூறி கலாட்டா செய்ததாக புகார்.
- சம்பந்தப்பட்ட ஊராட்சிமன்ற தலைவரின் கணவரை அழைத்து பேசுவதாக போலீசார் கூறி உள்ளனர்.
பெரியபாளையம்:
திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியம், கொமக்கம்பேடு ஊராட்சியில் பழைமை வாய்ந்த மாரியம்மன் திருக்கோவில் உள்ளது. இந்நிலையில், இந்த கோவிலை மணி குடும்பத்தினர் பல ஆண்டு காலமாக பராமரித்து வருகின்றனர். மேலும், இக்கோவிலில் நடைபெறும் பூஜைகளில் மணி குடும்பத்தினருக்கு முதல் மரியாதையும் கிராம மக்கள் வழங்கி வருகின்றனர்.
இந்நிலையில், கடந்த 22-ம் தேதி இக்கோவிலில் ஆடிப்பூரத் திருவிழா நடைபெற்றது. அப்பொழுது அங்கு வந்த ஊராட்சிமன்ற தலைவர் வெங்கடேஸ்வரியின் கணவரும், திமுக பிரமுகருமான தங்கராஜ் பிரச்சனை கிளப்பியுள்ளார். 'இந்த ஊராட்சி மன்றத்தின் தலைவராக எனது மனைவி பதவி வகித்து வருகிறார். மேலும், தமிழகத்தில் எங்கள் கட்சி ஆட்சி செய்து வருகிறது. எனவே, எனது குடும்பத்தின் சார்பில் தான் முதல் பூஜையும், எனக்குத்தான் முதல் மரியாதையும் கொடுக்க வேண்டும். இல்லை என்றால் திருவிழாவை நிறுத்த வேண்டும்' என்று கூறி கலாட்டா செய்தாராம்.
இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அங்கிருந்த பக்தர்களும், பொதுமக்களும் தங்கராஜிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது மணி குடும்பத்தினர் திருவிழா அமைதியாக நடைபெற வேண்டும் என்றும் எனவே அனைவரும் அமைதியாக இருங்கள், தற்போது ஆடிப்பூரத் திருவிழா பிரச்சனை இன்றி சுமூகமாக நடக்கட்டும் என்று ஊர்பொதுமக்களிடமும், அங்கிருந்த பக்தர்களிடமும் வேண்டுகோள் விடுத்தனர். இதன் அடிப்படையில் தங்கராஜ் குடும்பத்தினர் முதல் பூஜை செய்து மரியாதையைப் பெற்றுக்கொண்டனர்.
இனி ஆடி மாதம் மூன்றாவது ஞாயிற்றுக்கிழமை (06.08.2023) அன்று இக்கோவிலில் கூழ் ஊற்றும் நிகழ்ச்சி வெகு விமரிசையாக நடைபெறும். இதற்கான ஏற்பாடுகளை நேற்று கிராம மக்களும், மணி குடும்பத்தினரும் செய்து வந்தனர். அப்பொழுது அங்கு வந்த தங்கராஜ், கூழ் ஊற்றும் நிகழ்ச்சியில் எனக்குத் தான் முதல் மரியாதை வழங்க வேண்டும். இனிமேல் கோவில் நிர்வாகத்தை ஊராட்சிமன்ற தலைவரின் கணவர் என்ற முறையில் என்னிடம் ஒப்படைக்க வேண்டும் என்று கூறினாராம்.
இதனால் அதிர்ச்சி அடைந்த கிராம மக்களும், பக்தர்களும் உடனடியாக ஊர் கூட்டம் நடத்தினர். இக்கூட்டத்திற்கு வருமாறு தங்கராஜ்க்கு மணி குடும்பத்தினரும், கிராம மக்களும் அழைப்பு விடுத்தனர். ஆனால், தங்கராஜ் ஊர் கூட்டத்தில் பங்கேற்க மாட்டேன் என்று கூறி புறக்கணித்து விட்டார். கூழ் ஊற்றும் நிகழ்ச்சியை எனது அறிவுரையின் படி நடத்த வேண்டும். இல்லை என்றால் பிரச்சனை நடைபெறும் என்று தங்கராஜ் கூறினாராம்.
இதனால் இன்று மதியம் கிராம மக்கள் மணியின் குடும்பத்திற்கு ஆதரவு தெரிவித்தும், கூழ் ஊற்றும் நிகழ்ச்சி பிரச்சனை இன்றி நடைபெறவும் உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று கூறி வெங்கல் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், கூழ் ஊற்றும் திருவிழா நிகழ்ச்சிக்கு போதிய போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும் என கிராம மக்கள் மனு ஒன்றையும் காவல் நிலையத்தில் அளித்தனர். எனவே, போலீசார் சம்பந்தப்பட்ட ஊராட்சிமன்ற தலைவரின் கணவரை அழைத்து பேசுவதாகவும், உரிய பாதுகாப்பு நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதி கூறினர். இதனை அடுத்து கிராம மக்கள் அனைவரும் அமைதியாக கலைந்து சென்றனர். இப்பிரச்சினையால் சுமார் ஒரு மணி நேரம் காவல் நிலையத்தில் பரபரப்பு நிலவியது.
- பொன்னேரி பகுதியில் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டன.
- பொன்னேரி பகுதி பரபரப்பாக காணப்படுகிறது.
பொன்னேரி:
பொன்னேரியில் வியாபாரிகள் தொடர்ந்து ரவுடிகளால் தாக்கப்படும் சம்பவம் நடந்து வருகிறது.மேலும் கடைகளை குறிவைத்து கொள்ளை மற்றும் மிரட்டி பணம் பறித்தல் சம்பவங்களும் நீடித்து வருகின்றன.
இதுகுறித்து வியாபாரிகள் பலமுறை போலீசில் புகார் செய்தும் ரவுடிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. மேலும் புகார் செய்யும் வியாபாரிகளை ரவுடி கும்பல் மிரட்டும் சம்பவங்களும் அதிகரித்து வந்தது. இதனால் பொன்னேரி பகுதியில் வியாபாரிகளும், பொது மக்களும் அச்சம் அடைந்து வருகிறார்கள்.
இந்த நிலையில் வியாபாரிகளுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும், வியாபாரிகளை அச்சுறுத்தும் ரவுடிகள் மீது போலீசார் கடும் நடவடிக்கை எடுக்க என்று கூறி பொன்னேரியில் கடைஅடைப்பு போராட்டம் நடத்த வியாபாரிகள் முடிவு செய்தனர்.
அதன்படி இன்று பொன்னேரி பகுதியில் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டன.
பொன்னேரியி சுற்று வட்டார பகுதியில் உள்ள வேண்பாக்கம் திருவாயர்பாடி, பொன்னேரி பஜார் வீதிஉட்பட இடங்களில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கடைகளும் மூடப்பட்டு இருந்தன. இதனால் அப்பகுதி முழுவதும் வெறிச்சோடி காணப்பட்டது.
இதற்கிடையே ரவுடி கும்பல் மீது நடவடிக்கை எடுக்ககோரி வியாபாரிகள் சங்க தலைவர் பத்மநாபன் தலைமையில் பொன்னேரி அண்ணாசிலை அருகே நடைபெற்றது. அப்போது, வியாபாரிகளுக்கு பாதுகாப்பு வழங்கவும் ரவுடிகள் அட்டகாசத்தை ஒடுக்கவும் போலீசார் ரோந்துவரவும் கோஷங்கள் எழுப்பப்பட்டன.
இதில் பொதுச் செயலாளர் அப்துல் காதர் பொருளாளர் பிரகாஷ் சர்மா உள்பட சுமார் 500-க்கும் மேற்பட்ட வியாபாரிகள் கலந்து கொண்டனர். இதனால் பொன்னேரி பகுதி பரபரப்பாக காணப்படுகிறது.
- கடந்த 3 நாட்களுக்கு முன்பும் அவர்களுக்கிடையே மோதல் ஏற்பட்டது.
- போலீசார் விரைந்து வந்து பலராமனின் உடலை மீட்டு பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
திருத்தணி:
திருத்தணி அருகே உள்ள விநாயகபுரம் கிராமத்தை சேர்ந்தவர் பலராமன்(வயது48). கூலித்தொழிலாளி. இவரது முதல் மனைவி ஏற்கனவே பிரிந்து சென்றுவிட்டார். இதைத்தொடர்ந்து பலராமன் பள்ளாங்குப்பம் பகுதியை சேர்ந்த ஆனந்தி என்பவரை 2-வதாக திருமணம் செய்து வாழ்ந்து வந்தார்.
பலராமனுக்கு மது பழக்கம் உள்ளது. அடிக்கடி அவர் மதுகுடித்து வீட்டுக்கு வந்தார். இதனால் கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டது.
கடந்த 3 நாட்களுக்கு முன்பும் அவர்களுக்கிடையே மோதல் ஏற்பட்டது. இதனால் கோபம் அடைந்த ஆனந்தி கணவரை பிரிந்து தாய்வீட்டுக்கு சென்றுவிட்டார். இதனால் மனமுடைந்த பலராமன் அளவுக்கு அதிகமாக மதுகுடித்து வந்து வீட்டில் படுத்தார். பின்னர் அவர் வெளியே செல்லவில்லை.
இந்நிலையில் பலராமன் வீடு பூட்டியே கிடந்ததால் சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினர் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது உடல் அழுகிய நிலையில் பலராமன் இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். கூடுதல் மதுபோதையில் அவர் இறந்து இருப்பது தெரியவந்தது.
இதுகுறித்து திருத்தணி போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து பலராமனின் உடலை மீட்டு பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
- பழவேற்காட்டில் நிரந்தர முகத்துவாரம் ஏற்படுத்தி தர வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.
- கோட்டையை நோக்கி போராட்டம் நடத்தப்படும் என்று மீனவ கிராமமக்கள் தெரிவித்து உள்ளனர்.
பொன்னேரி:
பழவேற்காடு பகுதியை சுற்றி உள்ள 69 மீனவ கிராமங்களை சேர்ந்த மீனவ மக்களின் வாழ்வாதாரமாக பழவேற்காடு எரியும், கடலும் இணையும் முகத்துவாரம் உள்ளது. இந்த முகத்துவாரம் அடைபட்டு மணல் திட்டுக்களாக மாறும் காலங்களில் எளிதில் படகுகளில் கடலுக்குள் செல்ல முடியாமலும், மீன்வளம், இறால் உள்ளிட்டவை கிடைக்காமல் மீனவர்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகிறார்கள்.அவ்வப்போது அடைபடும் முகத்துவாரத்தை சொந்த செலவில் தற்காலிகமாக மீன்வர்களே தூர்வாரி வந்தனர். எனவே பழவேற்காட்டில் நிரந்தர முகத்துவாரம் ஏற்படுத்தி தர வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.
இதைத்தொடர்ந்து மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் ஒப்புதல் வழங்கிய நிலையில் கடந்த வாரம் பழவேற்காட்டில் நிரந்தர முகத்துவாரம் அமைக்க லைட் ஹவுஸ் பகுதியில் அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. இந்தப் பணிகளை 3மாதங்களில் திட்டமிடப்பட்டு இருந்தது.
இந்த நிலையில் வனத்துறையினரில் உரிய அனுமதிபெறாமல் பழவேற்காடு முகத்துவார பணி நடைபெற்றதாக தெரிகிறது. இதைத்தொடர்ந்து வனத்துறை அதிகாரிகள் முகத்துவார பணிகளை தடுத்து நிறுத்தினார். அப்போது அதிகாரிகள் கூறும்போது, வனத்துறையில் முறையாக அனுமதி பெறாமல் பணி நடைபெறுகிறது. மீறி பணிகள் நடைபெற்றால் எந்திரங்கள் பறிமுதல் செய்யப்படும் என எச்சரிக்கை விடுத்தனர். இதனால் முகத்துவார பணி நிறுத்தப்பட்டு உள்ளது.
இதற்கு பழவேற்காடை சுற்றி உள்ளல் 69 மீனவர் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர். இது தொடர்பாக அவர்கள் ஆலோசனை கூட்டம் நடத்தி தீர்மானம் நிறைவேற்றினர் இரண்டு வாரத்திற்குள் பணிகள் தொடங்கப்படவில்லை என்றால் கோட்டையை நோக்கி போராட்டம் நடத்தப்படும் என்று மீனவ கிராமமக்கள் தெரிவித்து உள்ளனர்.
- 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
- பொன்னேரி சுற்றுவட்டார பகுதியில் 13 இடங்களில் பாஜகவினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பொன்னேரி:
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் திமுக அரசின் மக்கள் விரோதப் போக்கை கண்டித்தும், மணல் கொள்ளை, கஞ்சா, மற்றும் கள்ளச்சாராய விற்பனையை தடுக்க கோரியும், விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் ஆர்.எம்.ஆர். ஜானகிராமன் தலைமையில் பொன்னேரி சுற்றுவட்டார பகுதியில் 13 இடங்களில் பாஜகவினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதில் மாவட்ட செயலாளர் நந்தன், ஆன்மீகப் பிரிவு மாநில செயலாளர் குமார், நகர தலைவர் சிவகுமார் மற்றும் நிர்வாகிகள் பிரபு,கந்தன், பி. கே. பாஸ்கர், வேல்மாரியப்பன், கோட்டி, ரமேஷ்,பாலாஜி,சங்கர், ஸ்ரீதர்,விஜயசங்கர், ராஜு, பவித்ரா, சுகன்யா உள்ளிட்ட நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
- திருச்சபைகளின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம், ரெவரண்ட் ஜெகநாதன் தலைமையில் நடைபெற்றது.
- 500க்கும் மேற்பட்ட கிறிஸ்தவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பொன்னேரி:
மணிப்பூர் மாநிலத்தில் இருதரப்பின் இடையே ஏற்பட்ட கலவரத்தில் கிறிஸ்தவ தேவாலயங்கள், வீடுகள் பள்ளிகள், அடித்து நொறுக்கப்பட்டு, தீக்கிரையாக்கப்பட்டதை கண்டித்து மீஞ்சூர் பஜார் வீதியில் மீஞ்சூர் வட்டார அனைத்து கிறிஸ்தவ திருச்சபைகளின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம், ரெவரண்ட் ஜெகநாதன் தலைமையில் நடைபெற்றது ஆர்ப்பாட்டத்தில் ஆதித்தமிழர் விடுதலை இயக்க பொதுச்செயலாளர் வினோத் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார்.
இதில் மீஞ்சூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இயங்கி வரும் ரோமன் கத்தோலிக், இ.சி.ஐ, சி.எஸ்.ஐ, சர்ச் ஆஃப் காட், ஏஜி, ஏசிஏ, சர்ச் ஆப் கிரைஸ்ட், பெந்தகொஸ்தே திருச்சபை உட்பட 50 திருச்சபைகள் 500க்கும் மேற்பட்ட கிறிஸ்தவர்கள் உட்பட மீஞ்சூர் பேரூர் தலைவர் ருக்குமணி மோகன்ராஜ் திமுக நகரச் செயலாளர் தமிழ்உதயன், துணைத் தலைவர் அலெக்சாண்டர்,அருட்தந்தை அருளப்பா, போதகர்கள் பால் உதயசூரியன் ஜான் ரமேஷ், நெகமியாஜெபராஜ், ஜான் வில்லியம்ஸ், ஜான் ராய், யாபேஸ், ராபர்ட், மாற்கு, ராஜேஷ், ஆகியோர் கலந்துகொண்டு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
- கடந்த 2015-ம் ஆண்டு ஏற்பட்ட பெரு வெள்ளத்தின்போது மொன்னவேடு-ராஜ பாளையம் தரைப்பாலம் பலத்த சேதமடைந்தது.
- மழை காலத்திற்கு முன்பு இந்த மேம்பால பணியையும் முடிக்க வேண்டும் என்று கிராம மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
திருவள்ளூர் மாவட்டம், பூண்டி அருகே உள்ளது ஒதப்பை கிராமம். இந்த கிராமத்தில் திருவள்ளூர்- ஊத்துக்கோட்டை சாலையில், கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே தரைப்பாலம் உள்ளது.
சென்னையின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் முக்கிய ஏரிகளில் ஒன்றான பூண்டி ஏரி பருவமழை காலத்தில் நிரம்பும்போது உபரி நீர் கொசஸ்தலை ஆற்றில் திறந்து விடப்படும் இதில் வெள்ளம் கரைபுரண்டு ஓடும்போது ஒதப்பை தரைப்பாலம் தண்ணீரில் மூழ்குவது வழக்கமாக உள்ளது.
பூண்டி ஏரியில் உபரி நீர் திறக்கப்படும் போதெல்லாம் பாதுகாப்பு கருதி வலுவிழந்த ஒதப்பை தரைப்பாலத்தில் போக்குவரத்து தடைசெய்யப்படும்.
அவ்வாறு போக்குவரத்து தடை செய்யப்பட்டால் ஒதப்பை மற்றும் அதனை சுற்றியுள்ள சீத்தஞ்சேரி, மயிலாப்பூர், பென்னலூர்பேட்டை, தேவேந்தவாக்கம், பெருஞ்சேரி, அனந்தேரி உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் அதிக அளவில் பாதிக்கப்பட்டு வரும் நிலை உள்ளது. அவர்கள் மருத்துவம் உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளுக்கு திருவள்ளூர் வந்து செல்ல சீத்தஞ்சேரி வனப்பகுதி வழியாக வெங்கல், தாமரைப்பாக்கம் வழியாக சுமார் 30 கி.மீ., தூரம் சுற்றி செல்லும் சூழல் நிலவி வருகிறது.
இதேபோல் நாகலாபுரம், சத்தியவேடு உள்ளிட்ட ஆந்திர மாநில பகுதிகள், ஊத்துக்கோட்டை பகுதியில் இருந்து திருவள்ளூருக்கு வரும் பொதுமக்கள், வாகன ஓட்டிகள், பெரியபாளையம், தாமரைப்பாக்கம் வழியாக சுமார் 40 கி.மீ., தூரத்துக்கு மேல் சுற்றிக்கொண்டு வரும்நிலை காணப்படுகிறது.
எனவே ஒதப்பையில் கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே உயர்மட்ட பாலம் அமைக்க வேண்டும் என்று சுற்றி உள்ள கிராம மக்கள் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வந்தனர்.
இதைத்தொடர்ந்து ஒதப்பையில் இருந்து திருவள்ளூர் மார்க்கமாக செல்லும் வகையில் ரூ.12.10 கோடி மதிப்பில் ஒரு உயர்மட்ட பாலம் அமைக்கும் பணி கடந்த 2019-ம் ஆண்டு நவம்பரில் தொடங்கப்பட்டது. இதேபோல் அருகில் ஊத்துக்கோட்டை மார்க்கமாக செல்லும் வகையில் சுமார் ரூ.13.89 கோடி மதிப்பில் மற்றொரு உயர்மட்ட பாலம் அமைக்கும் பணி கடந்த 2020-ம் ஆண்டு நவம்பரில் தொடங்கியது.
இந்த 2 உயர்மட்ட பால பணிகள் தொடங்கி 3½ ஆண்டுகள் ஆகியும் இன்னும் முடிவடையாமல் உள்ளது. பணிகள் ஆமை வேகத்தில் நடைபெற்று வருகிறது. வருகிற பருவமழைக்கு முன்னர் மேம்பால பணியை முடிக்க வேண்டும் என்று கிராம மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
இதைப்போல் மொன்னவேடு, ராஜபாளையம், எறையூர், மெய்யூர், கல்பட்டு, ஏனம்பாக்கம், ஆவாஜிபேட்டை, மாளந்தூர், செம்பேடு, மூலக்கரை உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்தவர்கள் மருத்துவம், கல்வி, பணி உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளுக்கு மொன்னவேடு-ராஜபாளையம் இடையே கொசஸ்தலை ஆற்றில் உள்ள தரைப்பாலத்தை கடந்து திருவள்ளூர் மற்றும் சென்னை பகுதிகளுக்கு செல்ல வேண்டும்.
கடந்த 2015-ம் ஆண்டு ஏற்பட்ட பெரு வெள்ளத்தின்போது மொன்னவேடு-ராஜபாளையம் தரைப்பாலம் பலத்த சேதமடைந்தது.
இதையடுத்து அப்பகுதியில் கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே உயர்மட்ட பாலம் அமைக்கும் பணி கடந்த 2020-ம் ஆண்டு தொடங்கப்பட்டது.
இந்த பணியும் தற்போது வரை முடிவடையாமல் நீடித்து வருகிறது. மழை காலத்திற்கு முன்பு இந்த மேம்பால பணியையும் முடிக்க வேண்டும் என்று கிராம மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
இதுதொடர்பாக கிராம மக்கள் கூறியதாவது:-
ஒதப்பை மேம்பாலம், மொன்னவேடு-ராஜபாளையம் கிராமங்களுக்கு இடையே மேம்பாலப்பணி தொடங்கப்பட்டு 3 ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் இன்னும் முடிவடையாமல் உள்ளது. பணிகள் மெத்தனமாக நடந்து வருவதால் மழைக்காலங்களில் பொதுமக்கள் பல்வேறு இன்னலுக்கு ஆளாகும் நிலை உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் இதே நிலையே காணப்படுகிறது. வடகிழக்கு பருவமழை தொடங்கும் முன்பு பணிகளை முடிவுக்கு கொண்டு வந்தால் மட்டுமே பூண்டி உபரி நீர் பெருக்கெடுக்கும்போது பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் சிரமம் இல்லாமல், திருவள்ளூர்- ஊத்துக்கோட்டை சாலையில் செல்லமுடியும். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேம்பால பணிகளை துரிதப்படுத்த வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
- குடிநீர் இல்லாமல் அவதிபட்டு வந்த பொதுமக்கள் ஊராட்சி மன்ற தலைவர் ராஜா என்பவரிடம் முறையிட்டுள்ளனர்.
- 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் செங்குன்றம்- ஆவடி நெடுஞ்சாலை ஈஸ்வரன் நகர் அருகே திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
செங்குன்றம்:
செங்குன்றத்தை அடுத்த பம்மது குளம் ஊராட்சிக்கு உட்பட்ட காட்டுநாயக்கன் நகர் உள்ளது. இங்கு நூற்றுக்கு மேற்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த பொதுமக்கள் வசித்து வருகிறார்கள். இந்த நகரில் கடந்த ஒரு வாரமாக குடிநீர் வழங்கப்படவில்லை என தெரிகிறது. குடிநீர் இல்லாமல் அவதிபட்டு வந்த பொதுமக்கள் ஊராட்சி மன்ற தலைவர் ராஜா என்பவரிடம் முறையிட்டுள்ளனர். அவர் சரிவர பதில் கூறவில்லை என தெரிகிறது.
இதனால் இன்று காலை 8.30 மணி அளவில் 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் செங்குன்றம்- ஆவடி நெடுஞ்சாலை ஈஸ்வரன் நகர் அருகே திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் இருபுறங்களிலும் வாகனங்கள் தடுத்து நிறுத்தப்பட்டன. போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்து செங்குன்றம் இன்ஸ்பெக்டர் ஜெகநாதன் மற்றும் போலீசார் ஊராட்சி மன்ற தலைவர் ராஜா ஆகியோர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். உடனடியாக குடிநீர் வழங்க ஏற்பாடு செய்வதாக உறுதியளித்ததால் ஒரு மணி நேரம் நடைபெற்ற சாலை மறியல் விலக்கிக் கொள்ளப்பட்டது.
இந்த சாலை மறியலால் 2 மணி நேரம் ஆவடி- செங்குன்றம் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
- புட்லூர் அம்மன் கோவிலில் பக்தர்கள் கூட்ட நெரிசலை பயன்படுத்தி நகை பறிக்கும் சம்பவம் அதிகரித்து உள்ளது.
- கடந்த ஒரு வாரத்தில் மட்டும் ஏராளமானோரிடம் நகை பறிப்பு சம்பவம் நடந்து இருப்பதாக கூறப்படுகிறது.
திருவள்ளூர்:
ஆடி மாதம் பிறந்ததை முன்னிட்டு அம்மன் கோவில்களில் பெண்கள் சிறப்பு வழிபாடு செய்து வருகின்றனர். இதனால் அனைத்து அம்மன் கோவில்களிலும் தினந்தோறும் கூட்டம் காணப்படுகிறது.
திருவள்ளூரை அடுத்த புட்லூரில் உள்ள ஸ்ரீ அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது. வழக்கமான நாட்களை விட ஆடி மாதம் முழுவதும் சிறப்பு தரிசனம் செய்ய திரளான பெண்கள் வந்து செல்வது வழக்கம்.
இந்த நிலையில் புட்லூர் அம்மன் கோவிலில் பக்தர்கள் கூட்ட நெரிசலை பயன்படுத்தி நகை பறிக்கும் சம்பவம் அதிகரித்து உள்ளது. தினந்தோறும் பெண்பக்தர்கள் தங்களது நகையை பறிகொடுக்கும் நிலை ஏற்பட்டு உள்ளது.
ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாளான நேற்று பல்வேறு இடங்களில் இருந்து புட்லூருக்கு ஏராளமான பக்தர்கள் வந்திருந்தனர். இதனால் காலை முதலே கோவிலில் கூட்டம் அலை மோதியது.
அப்போது கூட்ட நெரிசலை பயன்படுத்தி புதுச்சேரி மாநிலம், ரெட்டியார்பாளையம் பகுதியை சேர்ந்த கலாவதி என்பவர் அணிந்து இருந்த 4 பவுன் செயினை மர்மகும்பல் பறித்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் இது குறித்து திருவள்ளூர் தாலுகா போலீசில் புகார் செய்தார்.
இதே போல் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் ஏராளமானோரிடம் நகை பறிப்பு சம்பவம் நடந்து இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் பெரும்பாலானோர் இது பற்றி போலீசில் புகார் கொடுக்காமல் சென்று உள்ளனர். இதனால் மர்ம கும்பலின் கைவரிசை அதிகரித்து உள்ளது.
எனவே ஆடிமாதத்தையொட்டி புட்லூர் அம்மன் கோவிலில் போலீசார் கூடுதல் கண்காணிப்பில் ஈடுபடவேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.






