search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    திருவள்ளூர் அருகே சாலையில் நாற்று நட்டு கிராம மக்கள் நூதன போராட்டம்- சாலை அமைக்க கோரிக்கை
    X

    திருவள்ளூர் அருகே சாலையில் நாற்று நட்டு கிராம மக்கள் நூதன போராட்டம்- சாலை அமைக்க கோரிக்கை

    • சாலையை பயன்படுத்த முடியாத நிலையில் பொதுமக்கள் தவித்து வருகிறார்கள்.
    • பெண்கள் உள்பட சுமார் 50-க்கும் மேற்பட்டோர் சாலை அமைத்து தரக்கோரி சேறும் சகதியுமான சாலையில் நாற்று நட்டு நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    திருவள்ளூர்:

    திருவள்ளூரை அடுத்த கொட்டையூர் ஊராட்சிக்குட்பட்டது இந்திரா நகர். இப்பகுதியில் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்திரா நகரில் கடந்த 15 ஆண்டுக்கு முன்பு சாலை அமைத்து உள்ளனர். தற்போது இந்த சாலைகள் அனைத்தும் சேதமடைந்து குண்டும், குழியுமாக மாறிவிட்டன. சாலைகளே தெரியாத அளவுக்கு அனைத்து ஜல்லி கற்களும் பெயர்ந்து மண்சாலையாக மாறி உள்ளது.

    எனவே இந்த பகுதியில் புதிதாக சாலை அமைத்து தரவேண்டும் என்று அப்பகுதி மக்கள் அதிகாரிகளுக்கு பலமுறை கோரிக்கை விடுத்தனர். ஆனால் இதுவரை சாலை அமைக்கப்படவில்லை.

    இந்த நிலையில் கடந்த சில நாட்களாக பெய்துவரும் மழை காரணமாக சாலை இருந்த இடம் முழுவதும் தண்ணீர் தேங்கி சகதியாக மாறிவிட்டது. மேலும் அப்பகுதியில் கழிவு நீரும் தேங்கி நிற்கிறது.

    இதனால் அந்த சாலையை பயன்படுத்த முடியாத நிலையில் பொதுமக்கள் தவித்து வருகிறார்கள். குழந்தைகள், முதியோர் சேறும், சகதியுமான சாலையில் நடந்து செல்லவே பயப்படும் நிலை உள்ளது.

    இந்த நிலையில் அப்பகுதி பெண்கள் உள்பட சுமார் 50-க்கும் மேற்பட்டோர் சாலை அமைத்து தரக்கோரி சேறும் சகதியுமான சாலையில் நாற்று நட்டு நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் சாலை வசதி கோரி ஆர்ப்பாட்டம் செய்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து பொதுமக்கள் கூறும்போது, எங்கள் பகுதியில் சாலை அமைத்து 15 ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. தற்போது இந்தசாலை பெயர்ந்து சாலை இருந்த இடம் தெரியாத அளவில் காணப்படுகிறது.

    தற்போது பெய்து வரும் மழையால் சாலைகள் அனைத்தும் கழிவு நீருடன் கலந்து சேரும் சகதியுமாய் மாறி போக்குவரத்துக்கு லாயக்கற்று உள்ளது. இதனால் நோய் தொற்று ஏற்பட அபாயம் உள்ளது. சாலை வசதி கேட்டு ஊராட்சி அலுவலகம். ஒன்றிய அலுவலகம், மாவட்ட நிர்வாகத்திடம் பலமுறை புகார் தெரிவித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை என்றனர்.

    Next Story
    ×