என் மலர்
திருவள்ளூர்
- பொன்னேரி பகுதிகளில் குரங்குகள் செய்யும் அட்டகாசத்தை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- வீடுகளில் புகுந்தும் பொருட்களை எடுத்துச் செல்கிறது.
பொன்னேரி:
பொன்னேரியை அடுத்த வேண்பாக்கம், திருவாயர்பாடி, வேம்பட்டு, காந்திநகர், மெதுர், பொன்னேரி ரெயில் நிலையம், பொன்னேரி தாலுகா அலுவலகம் உள்ளிட்ட பகுதிகளில் 10-க்கும் மேற்பட்ட குரங்குகள், தங்களின் குட்டிகளுடன் அட்டகாசம் செய்து வருகின்றன.
பஜாரில் உள்ள கடைகளின் உள்ளே புகுந்து தின்பண்டங்களை எடுத்துக் கொண்டும், பழக்கடைகளில் பழங்களை எடுத்துக் கொண்டும் செல்கின்றன. அந்த குரங்குகளை பொதுமக்கள் விரட்டினால் அவை அவர்களை கடிக்க வருகின்றன. இதனால் பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர்.
மேலும் சிறுவர்கள் கையில் வைத்துள்ள தின்பண்டங்களையும் குரங்குகள் பறித்து கொண்டு செல்கின்றன. இதனால் வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் கடும் அவதிக்கு உள்ளாகியு உள்ளனர்.
இதுகுறித்து அவர்கள் கூறுகையில், 'பொன்னேரி பகுதிகளில் குரங்குகள் செய்யும் அட்டகாசத்தை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கடைகளில் தின்பண்டங்களை தொங்கவிட முடிவதில்லை. வீடுகளில் புகுந்தும் பொருட்களை எடுத்துச் செல்கிறது. எனவே வனத்துறையினர் கூண்டு வைத்து குரங்குகளை பிடித்து வனப்பகுதியில் கொண்டு விட வேண்டும்' என்றனர்.
- அரசு மருத்துவமனை பணியாளர்கள் 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு போராட்டம் நடத்தினார்கள்.
- மருத்துவமனையில் பாதுகாப்பு வேண்டும் என கோரியும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவள்ளூர்:
மேற்குவங்காள மாநிலம் கொல்கத்தாவில் மருத்துவக் கல்லூரியில் இரவு பணியில் இருந்த முதுகலை 2ம் ஆண்டு மருத்துவம் படித்து வந்த பெண்பயிற்சி டாக்டர் ஒருவர் கல்லூரி வளாகத்தில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார்.
பெண் பயிற்சி மருத்துவர் கொலை செய்யப்பட்டதை கண்டித்து அகில இந்திய மருத்துவ சங்கங்களுடன் இணைந்து நாடு முழுவதும் டாக்டர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
இந்நிலையில் திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தமிழ்நாடு அரசு மருத்துவர் சங்க தலைவர் பிரபு சங்கர் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. டாக்டர்கள் ஜெகதீசன், விஜயராஜ், ராஜ்குமார் இந்திய மருத்துவ சங்கம் சார்பில் கோபாலகிருஷ்ணன், பிரேம்குமார், மற்றும் மருத்துவ பேராசிரியர்கள், மருத்துவ கல்லூரி மாணவ - மாணவிகள், செவிலியர்கள் மற்றும் அரசு மருத்துவமனை பணியாளர்கள் 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு போராட்டம் நடத்தினார்கள். பெண் பயிற்சி மருத்துவர் கொலைக்கு நியாயம் வேண்டியும், மருத்துவர்கள் மீதான தாக்குதலை கண்டித்தும், மருத்துவமனையில் பாதுகாப்பு வேண்டும் என கோரியும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
- முகமூடி அணிந்து கொண்டு 2 மோட்டார் சைக்கிளில் வந்த 5 பேர் கொண்ட கும்பல் ஜெகன் வீட்டின் மீது நாட்டு வெடிகுண்டை வீசினர்.
- சம்பவ இடத்துக்கு கிராம மக்கள் ஓடி வருவதை கண்ட அந்த கும்பல் மோட்டார் சைக்கிளில் தப்பி சென்று விட்டனர்.
சோழவரம்:
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே உள்ள சோழவரம் கிராமத்தில் கோட்டைமேடு காலனி கென்னடி தெருவில் வசித்து வருபவர் ஜெகன் (வயது 38). இவர் சோழவரம் தெற்கு ஒன்றிய திமுக இளைஞரணி துணை அமைப்பாளராக உள்ளார். இவரது மனைவி அபிஷாபிரியாவர்ஷினி (33) சோழவரம் ஊராட்சி மன்ற துணைத் தலைவராக இருந்து வருகிறார்.
நேற்று மாலை முகமூடி அணிந்து கொண்டு 2 மோட்டார் சைக்கிளில் வந்த 5 பேர் கொண்ட கும்பல் ஜெகன் வீட்டின் மீது நாட்டு வெடிகுண்டை வீசினர். இதில் ஜன்னல் கண்ணாடிகள் உடைந்து சிதறியது. வீட்டில் இருந்த ஜெகன் வெளியே வருவதற்குள் அந்த கும்பல் அங்கிருந்து தப்பி சென்றது. இதுகுறித்து சோழவரம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர்.
இதற்கிடையே தப்பி சென்ற அதே மர்ம கும்பல் சோழவரம் நெடுஞ்சாலையில் உள்ள லாரி நிறுத்தும் இடத்திற்கு சென்று அங்கு வேலை செய்து வரும் சோழவரம் கோட்டைமேடு காலனியை சேர்ந்த லாரி டிரைவர் சிவா (30) என்பவரிடம் சென்று மாமூல் கேட்டு மிரட்டியதாக தெரிகிறது. அவர் கொடுக்க மறுத்ததால் அவரை கத்தியால் கையில் வெட்டி விட்டு லாரி நிறுத்தும் இடத்தில் நாட்டு வெடிகுண்டு வீசிவிட்டு தப்பி சென்றனர்.
தொடர்ந்து ஆங்காடு ஊராட்சியில் உள்ள சிறுணியம் காலனி கெங்கையம்மன் கோவில் தெருவில் வசிக்கும் வியாபாரி சரண்ராஜ் (38) என்பவர் கார் கண்ணாடிகளை உடைத்து கலாட்டா செய்தனர். சம்பவ இடத்துக்கு கிராம மக்கள் ஓடி வருவதை கண்ட அந்த கும்பல் மோட்டார் சைக்கிளில் தப்பி சென்று விட்டனர்.
இச்சம்பவங்கள் குறித்து பாதிக்கப்பட்ட 3 பேரும் சோழவரம் போலீசில் தனித்தனியாக புகார் செய்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்கள் நாட்டு வெடிகுண்டு வீசி அரசியல் பிரமுகர், வியாபாரிகளை அச்சுறுத்தி மாமூல் பெறும் நோக்கத்தில் இச்செயலில் ஈடுபட்டார்களா? அல்லது வேறு ஏதும் காரணமா என விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவம் சோழவரம், சிறுணியம் ஆகிய பகுதிகளில் பெரும் அதிர்ச்சியும், பரபரப்பும் ஏற்படுத்தி உள்ளது.
- மாணவர்கள் காரில் ஆந்திரா சென்று திரும்பியபோது விபத்து ஏற்பட்டுள்ளது.
- 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருத்தணி அடுத்த ராமஞ்சேரி பகுதியில் நடந்த சாலை விபத்தில் கல்லூரி மாணவர்கள் 5 பேர் உயிரிழந்துள்ளனர்.
கல்லூரி மாணவர்கள் பயணித்த காரும், லாரி ஒன்றும் மோதி விபத்துக்குள்ளானது.
விடுமுறை தினம் என்பதால் மாணவர்கள் காரில் ஆந்திரா சென்று திரும்பியபோது விபத்து ஏற்பட்டுள்ளது.
காரில் 7 பேர் பயணித்த நிலையில் 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
படுகாயமடைந்த 2 மாணவர்கள் மீட்கப்பட்டு திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
- மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
- போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பொன்னேரி:
பொன்னேரி மதுவிலக்கு சப்-இன்ஸ்பெக்டர் வில்வ மணி தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது பொன்னேரி அடுத்த கோளூர் சுடுகாட்டு முட்புதரில் மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்ற கோளூர் பகுதியை சேர்ந்த சுனில் (26) என்பவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து ஏராளமான மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
- தொழிலாளர்கள் மழை தண்ணீரின் மேலேயே தார் சாலை அமைத்தனர்.
- வீடியோ காட்சி தற்போது வைரலாக பரவி வருகிறது.
திருவள்ளூர்:
திருத்தணி நகரத்தில் சென்னை செல்லும் சாலை, திருப்பதி செல்லும் சாலை, அரசு ஆஸ்பத்திரி செல்லும் சாலை உள்ளிட்ட பகுதிகளில் ரூ.30 லட்சம் செலவில் தார் சாலை அமைக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் தார் சாலை அமைக்கப்படும் போது திருத்தணி பகுதியில் பலத்த மழை கொட்டி சாலையில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. ஆனாலும் கொட்டும் மழையின் போது பணியை நிறுத்தாத தொழிலாளர்கள் மழைதண்ணீரின் மேலேயே தார் சாலை அமைத்தனர்.
இதுபற்றி அங்கிருந்த பொதுமக்கள் சிலர் கேள்வி எழுப்பியபோது எதையும் கண்டு கொள்ளாமல் அந்த தொழிலாளர்கள் மழையை பொருட்படுத்தாமல் கடமையை செய்து கொண்டு இருந்தனர்.
இந்த வீடியோ காட்சி தற்போது வைரலாக பரவி வருகிறது. மழைநீரில் தார்சாலை அமைத்தால் எப்படி தாங்கும் என்று சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர். இது தொடர்பாக ஒப்பந்ததாரரிடம் அதிகாரிகள் விசாரித்து வருகிறார்கள்.
- திருவள்ளூரில் இருந்து சென்னை நோக்கி வரும் சாலைபணிகள் இன்னும் முடிக்கப்படாமல் உள்ளது.
- பல கிராமங்களை சுமார் 10 கிலோமீட்டர் தூரம் சுற்றி செல்லும் அவலநிலை உள்ளது.
ஆவடி:
சென்னையில் இருந்து திருவள்ளூர் செல்லும் நெடுஞ்சாலையின் குறுக்கே பட்டாபிராம் ரெயில்வே கேட் உள்ளதால் கடுமையாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் அங்கு 6, வழித்தட ரெயில்வே மேம்பாலம் கட்ட கடந்த 2018-ம் ஆண்டு ஜூன் மாதம் அடிக்கல் நாட்டினார். பணிகளை முழுமையாக முடிக்காமல் அதிகாரிகள் இழுத்தடித்து வருவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டி உள்ளனர்.
திருவள்ளூரில் இருந்து சென்னை நோக்கி வரும் சாலைபணிகள் இன்னும் முடிக்கப்படாமல் உள்ளது.
இதனால் சென்னையில் இருந்து திருவள்ளூர் மார்க்கமாக செல்லும் வாகனங்கள் தண்டுரை, சித்துக்காடு, அணை கட்டு சேரி, திருமணம், மீஞ்சூர்- வண்டலூர் வெளிவட்ட சாலை வழியாக சென்று கருணாகரச்சேரி, நெமிலிச்சேரி என பல கிராமங்களை சுமார் 10 கிலோமீட்டர் தூரம் சுற்றி செல்லும் அவலநிலை உள்ளது.
எனவே உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பணிகள் முடிவடைந்த ஒருவழிதடத்தில் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறக்க வேண்டும். இல்லையென்றால் விரைவில் பொதுமக்களை ஒன்று திரட்டி மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்தப்போவதாகவும் விரைவில் இதற்கான தேதி அறிவிக்கப்படும் என்று பாஜக அறிவித்துள்ளது.
- மாணவ-மாணவிகளின் படிப்பு பாதிக்கப்படுகிறது.
- 3 அரசு பஸ்களையும் சிறை பிடித்தனர்.
பொன்னேரி:
பொன்னேரி அடுத்த அண்ணாமலை சேரி பகுதியில் அரசு தொடக்கப்பள்ளி, அரசுஉயர்நிலைப் பள்ளி ஒரே வளாகத்தில் செயல்பட்டு வருகிறது. சுமார் 300-க்கு மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்.
பள்ளியில் மொத்தம் 16 ஆசிரியர்கள் இருந்த நிலையில் பணி மாறுதல், பணி ஓய்வு காரணமாக ஆசிரியர்களின் எண்ணிக்கை குறைந்தது. ஆனால் புதிதாக ஆசிரியர்கள் நியமிக்கப்படவில்லை. இதனால் தற்போது தொடக்க பள்ளிக்கு ஒரு ஆசிரியரும் உயர்நிலைப் பள்ளிக்கு 3 ஆசிரியர்களும் மட்டுமே உள்ளனர்.
வேறு வேறு பாடப்பிரிவு ஆசிரியர்கள் பாடம் எடுப்பதால் மாணவ-மாணவிகளின் படிப்பு பாதிக்கப்பட்டது. இதுபற்றி சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு புகார் தெரிவித்தும் புதிய ஆசிரியர்கள் நியமிக்கப்படவில்லை.
இந்தநிலையில் ஆசிரியர்கள் பற்றாக்குறையை கண்டித்தும், கூடுதல் ஆசிரியர்களை நியமிக்க கோரியும் இன்று காலை பள்ளிக்கு வந்த மாணவ-மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்து அண்ணாமலைசேரி-பொன்னேரி சாலையில் மறியிலில் ஈடுபட்டனர்.
மேலும் அவ்வழியே வந்த 3 அரசு பஸ்களையும் சிறை பிடித்தனர். அவர்களிடம் திருப்பாலைவனம் போலீ
சார் பேச்சு வார்த்தை நடத்தினர். ஆசிரியர்கள் நியமிப்பது தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் தெரிவிப்பதாக கூறினர். இதைத்தொடர்ந்து மாணவ-மாணவிகள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.
- சிறுமியை மீட்ட பெற்றோர் ஆவடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
- சிறுமியை பரிசோதித்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே உயிரிழந்ததாக தெரிவித்தனர்.
ஆவடி:
திருவள்ளூர் மாவட்டம் ஆவடியில் மின்சாரம் பாய்ந்து, 5 வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆவடியில் நந்தவன மேட்டூர் நேதாஜி தெருவை சேர்ந்த தம்பதி கவுதம்-பிரியா. இவர்களது மகள் ரூபாவதி (5), வீட்டில் இருந்த குளிர்சாதன பெட்டியை திறந்துள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக மின்சாரம் பாய்ந்து, சிறுமி மயங்கி விழுந்தார்.
உடனடியாக சிறுமியை மீட்ட பெற்றோர் ஆவடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். சிறுமியை பரிசோதித்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே உயிரிழந்ததாக தெரிவித்தனர்.
மின்சாரம் தாக்கி சிறுமி உயிரிழந்த சம்பவம் தொடர்பாக ஆவடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- சாலையோரம் புழுதி பறக்க கார்கள் வட்டமடித்தன.
- சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகின்றன.
பொன்னேரி:
மீஞ்சூர்-வண்டலூர் இடையே 62 கி.மீட்டர் தூரத்திற்கு 400 அடி வெளிவட்ட சாலை உள்ளது. இந்த சாலையில் விடுமுறை நாட்களில் வாகனப் போக்குவரத்து குறைவாக இருக்கும்.
இதை பயன்படுத்தி மோட்டார் சைக்கிள், ஆட்டோ ரேஸ், அதிவேகத்தில் மோட்டார் சைக்கிளில் வீலிங் சாகசங்கள் தொடர்ந்து நடந்து வருகின்றன. அவர்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுத்தும் வாகன ரேஸ் தொடர்ந்து நீடித்து வருகிறது.
இந்த நிலையில் மீஞ்சூர் - வண்டலூர் வெளிவட்ட சாலையில் கும்மனூர் அருகே கார் பந்தயம் நடந்த வீடியோ காட்சி தற்போது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அந்த வீடியோவில் கட்சி கொடிகளுடன் 5-க்கும் மேற்பட்ட சொகுசு கார்கள் வாகன ஓட்டிகளை அச்சுறுத்தும் வகையில் சாலையில் சீறிப்பாய்கின்றன.

காரின் மேல் பகுதியை திறந்து காருக்குள் நின்றபடி வாலிபர்கள் தங்களது செல் போன்களில் கார் பந்தயத்தை வீடியோவாக பதிவு செய்தனர். மேலும் சாலையோரம் புழுதி பறக்க கார்கள் வட்டமடித்தன.
இந்த வீடியோகாட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகின்றன. இது தொடர்பாக செங்குன்றம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வாகனங்களின் பதிவு எண்ணை கொண்டு 4 பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு மீஞ்சூர்-வண்டலூர் வெளிவட்ட சாலையில் ஆட்டோ ரேஸ் சென்றபோது மோட்டார் சைக்கிளில் பின்தொடர்ந்து சென்ற 2 வாலிபர்கள் விபத்தில் சிக்கி பலியானது குறிப்பிடத்தக்கது.
- அம்மனுக்கு பூரம் நட்சத்திரம் சிறப்புடையது.
- பக்தர்களுக்கு வளையல், குங்குமம் பிரசாதமாக வழங்கப்படும்.
பெரியபாளையம்:
பூரம் நட்சத்திரம் என்பது ஓம் என்னும் பிரணவ மந்திரத்தில் இருந்து சக்தி வெளிப்பட்ட நட்சத்திரம் ஆகும். சிவபெருமானுக்கு திருவாதிரை நட்சத்திரம் போன்று அம்மனுக்கு பூரம் நட்சத்திரம் சிறப்புடையாது.
இந்ந நிலையில் அம்மன் கோவில்களில் நாளை ஆடிப்பூரம் விழா விமரிசையாக நடைபெற உள்ளது.
திருவள்ளூரில் உள்ள தீர்த்தீஸ்வரர் கோவில் வளாகத்தில் உற்சவர் திருபுரசுந்தரி சிறப்பு அலங்காரத்தில் வளையல் பந்தலில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளிக்க உள்ளார்.

வழிபாடு முடிந்ததும் பக்தர்களுக்கு வளையல், குங்கும பிரசாதமாக வழங்கப்படும். புட்லூர் அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவிலில் ஆடிப்பூரத்தை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் திருமணம் மற்றும் குழந்தை பாக்கியம் வேண்டியும் கர்ப்பிணி பெண்கள் அம்மனை வழிபட்டு வளையல் பிரசாதத்தை வாங்கி செல்வார்கள்.
மாங்காடு காமாட்சி அம்மன் கோவிலில் ஆடிப்பூரம் விழா நேற்று தொடங்கியது. 2-வது நாளான இன்று அதிகாலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு, அம்மனுக்கு சிறப்பு தீபாராதனை நடந்தது. இன்று ஆடிப்பூரம் செவ்வாய்க்கிழமை என்பதால் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது.
பக்தர்கள் அனைவருக்கும் கோவில் நிர்வாகம் சார்பில் அன்னதானம் மற்றும் பிரசாதங்கள் வழங்கப் பட்டது. ஆடிப்பூரத்தை முன்னிட்டு நாளை காலை அம்மனுக்கு 1008 கலச அபிஷேகம் நடைபெறுகிறது.
இதைத்தொடர்ந்து வெள்ளி ரிஷப வாகனத்தில் அம்மன் திருவீதியுலா நடைபெற உள்ளது. திருவேற்காடு கருமாரியம்மன் கோவிலில் ஆடிப்பூரத்தை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெறுகிறது.
பெரியபாளையத்தில் உள்ள பிரசித்தி பெற்ற பவானி அம்மன் கோவிலில் ஆடி மாத திருவிழா தற்போது விமரிசையாக நடைபெற்று வருகிறது. ஆடிப்பூர விழாவை முன்னிட்டு நாளை காலை சர்வ சக்தி மாதங்கி அம்மனுக்கு காயத்ரி ஹோமம், துர்கா ஹோமம், மகாலட்சுமி ஹோமம் உள்ளிட்டவை நடைபெறுகிறது.
இதன் பின்னர் 108 பால்குட அபிஷேகம் நடக்கிறது. மூலவருக்கு பால், தயிர், பன்னீர் உள்ளிட்ட 16 வகையான திரவியங்களால் சிறப்பு அபிஷேகம், அலங்காரம், மகா தீபாராதனை நடைபெறும். இதில் திரளான பக்தர்கள் தரிசனம் செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- விநாயகர் சதுர்த்தி விழா அடுத்த மாதம் கொண்டாடப்பட உள்ளது.
- விநாயகர் சிலைகள் வைத்து வழிபாடு செய்யப்படுவது வழக்கம்.
பொன்னேரி:
விநாயகர் சதுர்த்தி விழா அடுத்த மாதம் (செப்டம்பர்) 7-ந்தேதி விமரிசையாக கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி விநாயகர் சிலைகள் வைத்து வழிபாடு செய்யப்படுவது வழக்கம். பின்னர் இந்த சிலைகள் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு நீர் நிலைகளில் கரைக்கப்படும்.
இந்த நிலையில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு விநாயகர் சிலைகள் தயாரிக்கும் பணிகள் பல்வேறு இடங்களில் தொடங்கி நடந்து வருகின்றன. பொன்னேரி பகுதியில் கிருஷ்ணாபுரம் வெள்ளோடை ஆண்டார்குப்பம், ஆகிய இடங்களில் விநாயகர் சிலைகள் தயாரிக்கும் பணி மும்முரமாக நடை பெற்று வருகிறது.
பல்வேறு வடிவங்களில் 3 அடி முதல் 15 அடி வரை பல வண்ணங்களில் பலமுக விநாயகர், சிங்க முக விநாயகர், யானை முக விநாயகர், எருது விநாயகர், எலி அன்னம் விநாயகர், விளக்கு விநாயகர் , யானை புலி விநாயகர் என விதவிதமாக தயாராகி வருகின்றன.
இவை ரூ.3 ஆயிரம் முதல் ரூ.20 ஆயிரம் வரை விற்கப்படுகிறது. இப்போதே ஏராளமானோர் தங்களுக்கு தேவையான விநாயகர் சிலைகளுக்கு முன்பணம் செலுத்தி உள்ளனர்.
சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுவதை தடுக்கும் வகையில் ரசாயனம் கலக்காமலும், நீரில் எளிதில் கரையக்கூடிய வகையிலும் விநாயகர் சிலைகள் தயாரிக்கப்படுகிறது. தற்போது தயாரான சிலைகளுக்கு வர்ணம் பூசும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டு வருகிறார்கள்.
இதுகுறித்து விநாயகர் சிலைகளை தயாரிக்கும் பொன்னேரியை சேர்ந்த சரவணன் என்பவர் கூறும்போது, விநாயர் சதுர்த்தியை முன்னிட்டு கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பே சிலைகள் தயாரிக்கும் பணி தொடங்கி நடந்து வருகிறது.
தினமும் 10-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இதில் ஈடுபட்டு உள்ளனர். தற்போது சிலைக்கு வர்ணம் பூசும் பணி நடைபெற்று வருகிறது. கடந்த மாதத்தில் இருந்தே திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், மீஞ்சூர், பொன்னேரி, பகுதியை சேர்ந்தவர்கள் விநாயகர் சிலைகள் கேட்டு முன்பதிவு செய்து உள்ளனர். சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படாதவாறு சிலைகளை தயாரித்து வருகிறோம் என்றார்.






