என் மலர்
திருவள்ளூர்
+2
- ஏரி பாசன நீரை பயன்படுத்துவோர் சங்க தேர்தல் குறித்து வருவாய் மற்றும் பொதுப்பணி துறையினர் முறையான அறிவிப்பை வெளியிடவில்லை.
- பத்து ஆண்டுகளுக்கு முன்னர் இறந்தவர்கள் பெயர்கள் பட்டியலில் உள்ளதால் தேர்தலை ரத்து செய்து மாற்று தேதியில் நடத்த வேண்டும்.
பொன்னேரி:
கும்மிடிப்பூண்டி சட்டமன்ற தொகுதிகளில் ஏரி நீரை பயன்படுத்துவோர் விவசாயிகள் சங்க தலைவர் மற்றும் ஆட்சி மண்டல தொகுதிகளின் உறுப்பினர் வேட்பு மனுக்கள் பரிசீலனை செய்யும் பணி பொன்னேரி கோட்டாட்சியர் அலுவலகத்தில் அதிகாரிகள் முன்னிலையில் நடைபெற்றது.
இந்நிலையில் வருகிற 19ஆம் தேதி சங்க தலைவர் உள்ளிட்ட பதவிகளுக்கு தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அவுரிவாக்கம் கொளத்தூர் - குமரசிரலப்பாக்கம் இரண்டு ஏரிகளில் வருவாய் மற்றும் பொதுப்பணி துறையினர் மூலம் வெளியிடப்பட்டுள்ள ஆட்சி மண்டல தொகுதிகளின் உறுப்பினர் பட்டியலில் கடந்த 10 வருடங்களுக்கு முன்பாக உயிரிழந்த இருவரின் பெயர்கள் தற்போதும் இடம்பெற்றுள்ளதால் இரண்டு ஏரிகளுக்கும் வருகிற 19 ஆம் தேதி தேர்தலை நடத்தாமல் ரத்து செய்து மாற்றுத் தேதியில் தேர்தலை நடத்த வேண்டும் எனவும், தேர்தலை ஒத்தி வைக்க வேண்டும் எனவும், வேட்பு மனுக்களை பரிசீலனை செய்யக்கூடாது எனவும் கூறி மனு அளித்ததாகவும் அதனை அதிகாரிகள் ஏற்க மறுப்பதாகவும் தேர்தல் நடத்துவது குறித்து முறையாக அறிவிப்பை வருவாய் மற்றும் பொதுப்பணித்துறையினர் வெளியிடவில்லை எனவும் சார் ஆட்சியர் ஐஸ்வர்யா ராமநாதன் பொதுப்பணித்துறை அதிகாரிகள் முறையாக தேர்தலை நடத்த வேண்டும் எனவும் பாதிக்கப்பட்ட விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.
- கடலுக்கு சென்ற அரங்கம்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த மீனவர் வலையில் மர்ம பொருள் ஒன்று கிடைத்துள்ளது.
- வலையை சுத்தம் செய்யும் போது அப்பொருள் கண்ணில் படவே அதை பத்திரமாக எடுத்து வைத்து திருப்பாலைவனம் காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர்.
பொன்னேரி:
பொன்னேரி அடுத்த பழவேற்காடு பகுதியில் சுமார் 5000-க்கும் மேற்பட்ட படகுகள் மூலம் தினசரி மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க சென்று வருகின்றனர். நேற்று இரவு கடலுக்கு சென்ற அரங்கம்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த மீனவர் தனபால் என்பவர் வலையில் மர்ம பொருள் ஒன்று கிடைத்துள்ளது. இரவு வீடு திரும்பி காலை வலையை சுத்தம் செய்யும் போது அப்பொருள் கண்ணில் படவே அதை பத்திரமாக எடுத்து வைத்து திருப்பாலைவனம் காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர்.
தெர்மாகோல் உள்ளே எலக்ட்ரானிக் சாதனங்கள் அடங்கிய பேட்டரி மற்றும் சிப் போன்ற பொருட்கள் உள்ளே இருப்பதால் மேலும் பலூன் மூலமாக இது பறக்க விடப்பட்டு ஸ்ரீஹரிகோட்டா அருகே கிடைத்ததாலும் இது குறித்து உடனடியாக காவல்துறைக்கு தகவல் அளித்து காவல்துறையிடம் ஒப்படைத்தனர்.
மர்ம பொருள் கிடைத்த தகவலால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
- அரசு வேலை வாங்கி தருவதாக 51 பேரிடம் ரூபாய் ஒரு கோடியே 40 லட்சம் மோசடி செய்ததாக திருவள்ளூர் போலீஸ் சூப்பிரண்டுக்கு புகார் வந்தது.
- போலி அரசு அடையாள அட்டை, போலி பணியாணை, லேப்டாப் உள்ளிட்ட பொருட்களை பறிமுதல் செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
திருவள்ளூர்:
திருவள்ளூர் அடுத்த திருப்பாச்சூர் கற்பக விநாயகர் மூன்றாவது குறுக்கு தெருவை சேர்ந்தவர் வசந்தகுமார் (27). இவர் காக்கலூர் பைபாஸ் சாலையில் வாடகைக்கு அறை எடுத்து அரசு வேலை வாங்கி தருவதாக 51 பேரிடம் ரூபாய் ஒரு கோடியே 40 லட்சம் மோசடி செய்ததாக திருவள்ளூர் போலீஸ் சூப்பிரண்டுக்கு புகார் வந்தது.
இதை அடுத்து குற்றப்பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு சந்திரதாசன் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர்கள் சுப்பிரமணி, மோகன் மற்றும் போலீசார் வசந்த் குமார் தேடி வந்தனர்.
இந்நிலையில் வீட்டின் அருகே குற்றப்பிரிவு போலீசார் வசந்த் குமாரை சுற்றி வளைத்து கைது செய்தனர். அவரிடம் இருந்து போலி அரசு அடையாள அட்டை, போலி பணியாணை, லேப்டாப் உள்ளிட்ட பொருட்களை பறிமுதல் செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
- செங்கல் சூளையை திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் தொடங்கி வைத்து பார்வையிட்டார்.
- கொத்தடிமையில் இருந்து மீட்கப்பட்ட நாங்கள் புதிய தொழில் தொடங்கி உள்ளோம்.
திருவள்ளூர்:
திருவள்ளூர் மாவட்டத்தில் செங்கல்சூளை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கொத்தடிமையாக பணிபுரிந்து மீட்கப்பட்டவர்களுக்கு தனியார் தொண்டு நிறுவனங்கள், சமூக ஆர்வலர்களின் ஒத்துழைப்புடன் அவர்களின் வாழ்வாதாரம் மேம்பட தொடர்ந்து நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில் கடந்த ஆண்டு திருத்தணி அருகே வீரகநல்லூர் பகுதியில் கொத்தடிமை முறையில் இருந்து மீட்கப்பட்ட 80 குடும்பங்களைச் சேர்ந்த 300 பேர் பயன்பெறும் வகையில் மாவட்ட நிர்வாகத்தின் சிறப்பு முயற்சியாக, சிறகுகள் செங்கல் சூளை ஆரம்பிக்கப்பட்டது.
அது தற்போது வெற்றிகரமாக நடந்து வருகிறது. இதனால் அங்கு வேலைபார்த்து வருபவர்களின் வாழ்க்கை நிலை உயர்ந்து வருகிறது.
இந்த நிலையில் திருவள்ளூர் வருவாய் கோட்டத்துக்கு உட்பட்ட பகுதிகளில் வசிக்கும், கொத்தடிமை தொழில் முறையில் இருந்து மீட்கப்பட்ட 40 குடும்பங்கள் பயன்பெறும் வகையில், மாவட்ட நிர்வாகத்தின் சிறப்பு முயற்சியாக "சிறகுகள் செங்கல் சூளை-2" கடம்பத்தூர் ஒன்றியம் பிஞ்சிவாக்கம் பகுதியில் தொடங்கப்பட்டு உள்ளது.
இந்த செங்கல் சூளையை திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் தொடங்கி வைத்து பார்வையிட்டார்.
இதில் 54 மீட்டெடுக்கப்பட்ட கொத்தடிமை தொழிலாளர்களுக்கு ரூ.4.5 லட்சம் மதிப்பீட்டில் 27 மீன் பிடிக்கும் வலைகள் மற்றும் செங்கல் சூளைக்கு தேவையான பொருட்கள், தலா ரூ.10 ஆயிரம் காசோலைகளை கலெக்டர் வழங்கினார். நிகழ்ச்சியில் பயிற்சி கலெக்டர் கேத்ரின் சரண்யா, மகளிர் திட்ட அலுவலர் மலர்விழி, வளர்ச்சி அலுவலர் லதா, ஒன்றிய குழு தலைவர் சுஜாதா சுதாகர், ஊராட்சி மன்ற தலைவர் உமா மணிகண்டன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
இதுதொடர்பாக தொழிலாளர்கள் கூறும்போது, 'கொத்தடிமையில் இருந்து மீட்கப்பட்ட நாங்கள் புதிய தொழில் தொடங்கி உள்ளோம். இதற்கு உதவிய மாவட்ட நிர்வாகத்திற்கு நன்றி. நாங்கள் இந்த செங்கல் சூளையை சிறப்பாக நடத்தி எங்களது வாழ்வில் முன்னேறுவோம்' என்றனர்.
- டிசம்பர் முதல் மார்ச் வரை காற்றின் திசை மற்றும் கடலில் தட்பவெப்ப நிலை வேறுபடுவதால் கடலின் ஆழத்தில் ஆமைகள் இறந்து கரை ஒதுங்குகிறது.
- இந்தியாவில் 5 வகை ஆமை காணப்படுகின்றன.
பொன்னேரி:
இந்தியாவில் உள்ள ஏரிகளில் 2-வது மிகப்பெரிய உப்பங்கழி ஏரி பழவேற்காடு ஆகும். பழவேற்காடை சுற்றிலும் நூற்றுக்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இங்கு இறால், மீன், நண்டு உள்ளிட்ட 200-க்கும் மேற்பட்ட மீன் வகைகள் கடல் வாழ் உயிரினங்கள், பறவை சரணாலயம் உள்ளிட்டவை காணப்படுகிறது. தினந்தோறும் 3 ஆயிரத்திற்கு மேற்பட்ட மீனவர்கள் கடலில் மீன் பிடித்து வருகின்றனர்.
இந்தநிலையில் பழவேற்காடு கடற்கரையில் அடிக்கடி ஆமைகள் இறந்த நிலையில் கரை ஒதுங்கி வருகின்றன. கடந்த சில நாட்களாக இதன் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. சுருக்குமடி வலைகள் பயன்படுத்துவதால் அதில் சிக்கி ஆமைகள் இறப்பதாக கூறப்படுகிறது.
இது தொடர்பாக இயற்கை ஆர்வலர்கள் கூறும்போது, ஆமைகள் வழக்கமாக தண்ணீரின் மேல்பரப்புக்கு 45 நிமிடத்துக்கு ஒருமுறை சுவாசிக்க வரும். அப்போது மீனவர்களின் சுருக்குமடி வலைகளை 8 நாட்டிங்கல் மைல் தூரத்தை தாண்டி பயன்படுத்துவார்கள். ஆனால் சிலர் 2 நாட்டிங்கல் மைல் தூரத்திலேயேய சுருக்குமடி வலைகளை பயன்படுத்துவதால் ஆமைகள் இறப்பு அதிகரித்து வருகிறது. கல்பாக்கம் அருகே ஒய்யாலிகுப்பம் பகுதியில் 34 ஆமைகள் இறந்து இருப்பது எங்களது கணக்கெடுப்பில் பதிவாகி உள்ளது என்றனர்.
இதுதொடர்பாக பழவேற்காடு மீனவர்கள் கூறியதாவது:-
டிசம்பர் முதல் மார்ச் வரை காற்றின் திசை மற்றும் கடலில் தட்பவெப்ப நிலை வேறுபடுவதால் கடலின் ஆழத்தில் ஆமைகள் இறந்து கரை ஒதுங்குகிறது. மீனவர்கள் கடலில் பயன்படுத்தும் சுருக்கு மடிவலை, அரவை வலை இழுவை வலைகளில் மாட்டிக்கொள்வதாலும் இறக்கின்றன. படகு என்ஜீனில் சிக்கி ஆமைகளின் துடுப்புகள் காயம் அடைகின்றன என்றனர்.
இதுகுறித்து வனத்துறை அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, இந்தியாவில் 5 வகை ஆமை காணப்படுகின்றன. பழவேற்காடு வங்கக்கடல் பகுதியில் அதிகமாக ஆளுறுக்கி ஆமைகள் உள்ளன. கடலில் காணப்படும், கழிவுகளை இவைகள் உண்டு வாழ்வதால் மீனவர்களுக்கு இவை நன்மை செய்பவை. சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கு ஆமைகள் பெரிதும் உதவுகின்றன. இவைகள் பாதுகாக்கப்பட வேண்டும். கடந்த 3 மாதத்தில் 20-க்கும் மேற்பட்ட ஆமைகள் இறந்துள்ளன. அதன் இறப்பிற்கான காரணம் குறித்து ஆராய்ந்து வருகிறோம் என்றனர்.
- ஒரே கிராமத்தில் தொடர்ந்து குற்றச்செயல்களில் ஈடுபட்டு வரும் 18 குற்றவாளிகள் இருப்பது தெரியவந்தது.
- நடுவீரப்பட்டில் புதிதாக புறக்காவல் நிலையம் அமைக்கப்பட்டது.
தாம்பரம்:
தாம்பரம் அருகே உள்ளது நடுவீரப்பட்டு கிராமம். சோமங்கலம் போலீஸ் நிலையத்தில் இருந்து சுமார் 2 கி.மீட்டர தூரத்தில் உள்ளது. இப்பகுதியை சுற்றி அதிக அளவில் தொடர்ந்து குற்றச்செயல்கள் நடந்து வந்தன.
இது தொடர்பாக போலீசார் ஆய்வு செய்த போது நடுவீரப்பட்டு பகுதியில் மட்டும் ஒரே கிராமத்தில் தொடர்ந்து குற்றச்செயல்களில் ஈடுபட்டு வரும் 18 குற்றவாளிகள் இருப்பது தெரியவந்தது. அவர்களை தொடர்ந்து கண்காணிப்பதும் சிரமம் ஏற்பட்டது.
தொழிற்சாலைகள், கல்லூரிகள் அதிகம் உள்ள இப்பகுதியில் குற்றச்சம்பவங்களை தடுக்கும் வகையில் நடுவீரப்பட்டு பகுதியில் புறக்காவல் நிலையம் அமைக்க தாம்பரம் போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் உத்தரவிட்டார்.
அதன்படி நடுவீரப்பட்டில் புதிதாக புறக்காவல் நிலையம் அமைக்கப்பட்டது. இதனை தாம்பரம் போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் தொடங்கி வைத்தார்.
இங்கு 4 போலீசார் ஷிப்டு முறையில் பணியாற்றுகிறார்கள். மேலும் அப்பகுதியை சுற்றிலும் கூடுதல் கண்காணிப்பு கேமிராக்களும் அமைக்கப்பட்டு உள்ளது.
இது குறித்து போலீசார் கூறும்போது, நடுவீரப்பட்டு பகுதியில் சுமார் 12 ஆயிரம் பேர் வசிக்கிறார்கள். இங்கு மட்டும் 18 தொடர் குற்றவாளிகள் உள்ளனர்.
மேலும் குற்ற செயல்களில் ஈடுபடுபவர்களின் எ்ணணிக்கையும் அதிகரித்து வந்தது.
இதனை கருத்தில் கொண்டு புறக்காவல் நிலையம் அமைக்கப்பட்டு உள்ளது' என்றார்.
- செங்கல்பட்டு நோக்கி சென்ற தனியார் பஸ் மற்றும் அரசு பஸ் இரண்டும் ஒரே சமயத்தில் புறப்பட்டது.
- போக்குவரத்து போலீசார் விரைந்து வந்து விதிமுறை மீறி வந்த தனியார் பஸ்சுக்கு ரூ. 3 ஆயிரமும், அரசு பஸ்சுக்கு ரூ.1000-மும் அபராதமாக விதித்தனர்.
திருவள்ளூர்:
திருவள்ளூர் பஸ் நிலையத்தில் இருந்து நேற்று இரவு சுமார் 8 மணி அளவில் செங்கல்பட்டு நோக்கி சென்ற தனியார் பஸ் மற்றும் அரசு பஸ் இரண்டும் ஒரே சமயத்தில் புறப்பட்டது. இந்த இரண்டு பஸ்களின் டிரைவர்களும் யார் முதலில் செல்வது என ஏற்பட்ட போட்டி காரணமாக போக்குவரத்து விதியை மீறி எதிர் திசையில் சென்றனர். இதனால் அப்பகுதியில கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. தகவல் அறிந்ததும் போக்குவரத்து போலீசார் விரைந்து வந்து விதிமுறை மீறி வந்த தனியார் பஸ்சுக்கு ரூ. 3 ஆயிரமும், அரசு பஸ்சுக்கு ரூ.1000-மும் அபராதமாக விதித்தனர்.
- குட்கா, புகையிலை பொருட்களை வீட்டில் பதுக்கி வைத்து விற்பனை செய்யப்படுவதாக பொன்னேரி போலீசுக்கு தகவல்.
- போலீஸ் சோதனை செய்த போது ஒரு வீட்டில் ரூ.22 ஆயிரம் மதிப்புள்ள குட்கா பதுக்கி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
பொன்னேரி:
பொன்னேரி தாயுமான் செட்டி தெருவில் தடை செய்யப்பட்ட குட்கா, புகையிலை பொருட்களை வீட்டில் பதுக்கி வைத்து விற்பனை செய்யப்படுவதாக பொன்னேரி போலீசுக்கு தகவல் கிடைத்தது. போலீஸ் சோதனை செய்த போது ஒரு வீட்டில் ரூ.22 ஆயிரம் மதிப்புள்ள குட்கா பதுக்கி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக முசாம்பீர் (47) என்பவரை போலீசார் கைது செய்தனர்.
- எவ்வித அனுமதியும் பெறாமல் அரசியல் கட்சி நிர்வாகிகள் சென்னை- திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் 100-க்கும் மேற்பட்ட இடங்களில் கட்சியின் பேனர்களை வைத்தனர்.
- பொதுமக்களுக்கும் போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்படுத்தும் வகையில் பேனர் இருந்தது.
திருவள்ளூர்:
திருவள்ளூர் சி.வி.நாயுடு சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் அரசியல் கட்சியின் விழா நடைபெறுகிறது.
இதற்காக எவ்வித அனுமதியும் பெறாமல் அரசியல் கட்சி நிர்வாகிகள் சென்னை- திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் 100-க்கும் மேற்பட்ட இடங்களில் கட்சியின் பேனர்களை வைத்தனர்.
இது பொதுமக்களுக்கும் போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்படுத்தும் வகையில் இருந்தது. மேலும் சாலையை மறித்தும் மின்கசிவு ஏற்பட்டு பொதுமக்களுக்கு ஆபத்து ஏற்படும் வகையிலும் வைத்திருந்ததாக அதிகாரிகளுக்கு பல்வேறு புகார்கள் சென்றன.
இதுகுறித்து திருவள்ளூர் டவுன் போலீசார் விசாரணை நடத்தி எவ்வித அனுமதியும் இல்லாமல் விளம்பர பேனர் அச்சடித்த 7 அச்சக உரிமையாளர்கள் மற்றும் அரசியல் கட்சி நிர்வாகிகள் 72 பேர் மீது வழக்கு பதிவு செய்து உள்ளனர். போக்குவரத்துக்கு இடையூறாக பேனர் வைத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் எச்சரித்து உள்ளனர்.
- தமிழ்நாடு நில அளவை அலுவலர்கள் சார்பில் தர்ணா போராட்டம் நடைபெற்றது.
- நில அளவை சார்ந்த அனைத்து பணிகளையும் கருத்தில் கொள்ளாமல் உட்பிரிவு பட்டா மாறுதல் பணியினை மற்றும் ஆய்வுக்குட்படுத்தும் போக்கினை கைவிட வேண்டும்.
திருவள்ளூர்:
திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகே தமிழ்நாடு நில அளவை அலுவலர்கள் சார்பில் தர்ணா போராட்டம் நடைபெற்றது.
திருவள்ளூர் மாவட்ட தலைவர் செந்தில்குமரன் தலைமை தாங்கினார். மாவட்ட துணை தலைவர் ஜோதி, இணை செயலாளர் ராஜசேகர், கோட்டத் தலைவர் குமரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில துணைத்தலைவர் மணிகண்டன், மாவட்ட நிர்வாகிகள் இளங்கோவன், மெல்கிராஜா சிங் ஆகியோர் கலந்துகொண்டு கண்டன உரையாற்றினார்கள்.
போராட்டத்தின்போது, பணியாளர்களின் பணிச்சுமையை குறைத்திட வேண்டும்.
நில அளவை சார்ந்த அனைத்து பணிகளையும் கருத்தில் கொள்ளாமல் உட்பிரிவு பட்டா மாறுதல் பணியினை மற்றும் ஆய்வுக்குட்படுத்தும் போக்கினை கைவிட வேண்டும். துறையில் பணி செய்து வரும் உரிமம் பெற்ற நில அளவர்களை தகுதியின் அடிப்படையில் நிரந்தர ஊழியர்களை காலமுறை ஊதியத்தில் பணியமர்த்திட வேண்டும் என்பது உட்பட 26 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தப்பட்டது.
முடிவில் தாலிப் நன்றி கூறினார்.
- சென்னையில் இருந்து சோளிங்கர் நோக்கி சென்ற லாரி திடீரென மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
- திருத்தணி பைபாஸ் ரவுண்டானா ஒரு வழிபாதையில் கனரக வாகனங்கள் உள்ளிட்ட வாகனங்கள் செல்வதால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுவதாக அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டினர்.
திருத்தணி:
திருத்தணி பெரிய தெரு பகுதியில் வசிப்பவர் பாபு. இவரது மகன் கார்த்தி (வயது 16). இவர் ஆர்.கே. பேட்டையில் உள்ள தனியார் பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வருகிறார். இன்று காலை மாணவர் கார்த்தி மோட்டார் சைக்கிளில் திருத்தணி பைபாஸ் ரவுண்டானா பகுதியில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது சென்னையில் இருந்து சோளிங்கர் நோக்கி சென்ற லாரி திடீரென மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் லாரியின் சக்கரத்தில் கார்த்தி சிக்கிக்கொண்டார். அவரது 2 கால்களும் நசுங்கியது. ஆபத்தான நிலையில் இருந்த கார்த்தியை அக்கம்பக்கத்தினர் மீட்டு சென்னையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
எப்போதும் பரபரப்பாக இருக்கும் திருத்தணி பைபாஸ் ரவுண்டானா ஒரு வழிபாதையில் கனரக வாகனங்கள் உள்ளிட்ட வாகனங்கள் செல்வதால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுவதாக அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டினர்.
- தைலம் தோப்பில் தீ விபத்து ஏற்பட்ட சம்பவத்தால் அப்பகுதி பரபரப்பாக காணப்பட்டது.
- திருத்தணி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருத்தணி:
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அடுத்த அகூர் கிராமத்தில் மாம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த முனிரத்தினம் என்பவருக்கு சொந்தமான 12 ஏக்கர் தைலம் தோப்பு உள்ளது. இதில் நேற்று மதியம் மர்மமான முறையில் தீப்பற்றி எரிய தொடங்கியது.
காற்றின் வேகம் அதிகமாக இருந்ததால் தீ மளமளவென கொழுந்து விட்டு எரிந்தது. இது குறித்து தோப்பின் உரிமையாளர் முனிரத்தினம் திருத்தணி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார்.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் ஒரு மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இருப்பினும் 10 ஏக்கர் தைலம் தோப்பு முழுவதும் எரிந்து நாசமானது. தீ விபத்து ஏற்பட்டது குறித்து திருத்தணி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். திருத்தணி- சோளிங்கர் மாநில நெடுஞ்சாலை ஒட்டி உள்ள தைலம் தோப்பில் தீ விபத்து ஏற்பட்ட சம்பவத்தால் அப்பகுதி பரபரப்பாக காணப்பட்டது.






