என் மலர்
நீங்கள் தேடியது "ஆமைகள் உயிரிழப்பு"
- டிசம்பர் முதல் மார்ச் வரை காற்றின் திசை மற்றும் கடலில் தட்பவெப்ப நிலை வேறுபடுவதால் கடலின் ஆழத்தில் ஆமைகள் இறந்து கரை ஒதுங்குகிறது.
- இந்தியாவில் 5 வகை ஆமை காணப்படுகின்றன.
பொன்னேரி:
இந்தியாவில் உள்ள ஏரிகளில் 2-வது மிகப்பெரிய உப்பங்கழி ஏரி பழவேற்காடு ஆகும். பழவேற்காடை சுற்றிலும் நூற்றுக்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இங்கு இறால், மீன், நண்டு உள்ளிட்ட 200-க்கும் மேற்பட்ட மீன் வகைகள் கடல் வாழ் உயிரினங்கள், பறவை சரணாலயம் உள்ளிட்டவை காணப்படுகிறது. தினந்தோறும் 3 ஆயிரத்திற்கு மேற்பட்ட மீனவர்கள் கடலில் மீன் பிடித்து வருகின்றனர்.
இந்தநிலையில் பழவேற்காடு கடற்கரையில் அடிக்கடி ஆமைகள் இறந்த நிலையில் கரை ஒதுங்கி வருகின்றன. கடந்த சில நாட்களாக இதன் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. சுருக்குமடி வலைகள் பயன்படுத்துவதால் அதில் சிக்கி ஆமைகள் இறப்பதாக கூறப்படுகிறது.
இது தொடர்பாக இயற்கை ஆர்வலர்கள் கூறும்போது, ஆமைகள் வழக்கமாக தண்ணீரின் மேல்பரப்புக்கு 45 நிமிடத்துக்கு ஒருமுறை சுவாசிக்க வரும். அப்போது மீனவர்களின் சுருக்குமடி வலைகளை 8 நாட்டிங்கல் மைல் தூரத்தை தாண்டி பயன்படுத்துவார்கள். ஆனால் சிலர் 2 நாட்டிங்கல் மைல் தூரத்திலேயேய சுருக்குமடி வலைகளை பயன்படுத்துவதால் ஆமைகள் இறப்பு அதிகரித்து வருகிறது. கல்பாக்கம் அருகே ஒய்யாலிகுப்பம் பகுதியில் 34 ஆமைகள் இறந்து இருப்பது எங்களது கணக்கெடுப்பில் பதிவாகி உள்ளது என்றனர்.
இதுதொடர்பாக பழவேற்காடு மீனவர்கள் கூறியதாவது:-
டிசம்பர் முதல் மார்ச் வரை காற்றின் திசை மற்றும் கடலில் தட்பவெப்ப நிலை வேறுபடுவதால் கடலின் ஆழத்தில் ஆமைகள் இறந்து கரை ஒதுங்குகிறது. மீனவர்கள் கடலில் பயன்படுத்தும் சுருக்கு மடிவலை, அரவை வலை இழுவை வலைகளில் மாட்டிக்கொள்வதாலும் இறக்கின்றன. படகு என்ஜீனில் சிக்கி ஆமைகளின் துடுப்புகள் காயம் அடைகின்றன என்றனர்.
இதுகுறித்து வனத்துறை அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, இந்தியாவில் 5 வகை ஆமை காணப்படுகின்றன. பழவேற்காடு வங்கக்கடல் பகுதியில் அதிகமாக ஆளுறுக்கி ஆமைகள் உள்ளன. கடலில் காணப்படும், கழிவுகளை இவைகள் உண்டு வாழ்வதால் மீனவர்களுக்கு இவை நன்மை செய்பவை. சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கு ஆமைகள் பெரிதும் உதவுகின்றன. இவைகள் பாதுகாக்கப்பட வேண்டும். கடந்த 3 மாதத்தில் 20-க்கும் மேற்பட்ட ஆமைகள் இறந்துள்ளன. அதன் இறப்பிற்கான காரணம் குறித்து ஆராய்ந்து வருகிறோம் என்றனர்.






