என் மலர்tooltip icon

    திருவள்ளூர்

    • திருநின்றவூர், பட்டாபிராம், ஆவடி உள்ளிட்ட பகுதிகளில் மோட்டார் சைக்கிள்களை திருடியதும் தெரியவந்தது.
    • 2 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    திருநின்றவூர்:

    ஆவடியை அடுத்த திருநின்றவூர் போலீஸ் குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் தலைமையிலான போலீசார் நேற்று அதிகாலை திருநின்றவூர் அருகே வண்டலூர் - மீஞ்சூர் 400 அடி சர்வீஸ் சாலையில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வேகமாக வந்த 2 பேரை மடக்கிப்பிடித்து விசாரித்தனர்.

    போலீசாரிடம் இருவரும் முன்னுக்குபின் முரணாக பதில் கூறினர். அவர்கள் ஓட்டிவந்த மோட்டார் சைக்கிளுக்கான ஆவணங்களும் அவர்களிடம் இல்லை. இதனால் சந்தேகமடைந்த போலீசார், 2 பேரையும் திருநின்றவூர் போலீஸ் நிலையம் அழைத்துச்சென்று விசாரித்தனர்.

    விசாரணையில் அவர்கள், செங்குன்றம் பகுதியை சேர்ந்த சக்திவேல் (வயது 20) மற்றும் பரத் (22) என்பதும், இவர்கள் ஓட்டி வந்தது, திருட்டு மோட்டார் சைக்கிள் என்பதும் தெரியவந்தது. இவர்கள் இருவரும் திருநின்றவூர், பட்டாபிராம், ஆவடி உள்ளிட்ட பகுதிகளில் மோட்டார் சைக்கிள்களை திருடியதும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் சக்திவேல், பரத் 2 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். இவர்களிடம் இருந்து 2 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

    • மஞ்சள் மூட்டையை தொழிலாளர்கள் அகற்றியபோது அதில் பதுங்கி இருந்த சுமார் 5 அடி நீளமுள்ள நல்ல பாம்பு சீறியது.
    • பாம்பை லாவகமாக பிடிக்கும் பஞ்செட்டியை சேர்ந்த முத்துப்பாண்டி என்பவருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    பொன்னேரி:

    பொன்னேரியை அடுத்த அழிஞ்சிவாக்கம் கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலை அருகே தனியார் மஞ்சள் தூள் தயாரிக்கும் கம்பெனி செயல்பட்டு வருகிறது. இங்கு பெண்கள் உள்பட சுமார் 50-க்கும் மேற்பட்டோர் வேலை செய்து வருகின்றனர்.

    இந்நிலையில் அங்கிருந்த மஞ்சள் மூட்டையை தொழிலாளர்கள் அகற்றியபோது அதில் பதுங்கி இருந்த சுமார் 5 அடி நீளமுள்ள நல்ல பாம்பு சீறியது. அதனை அங்கிருந்த ஊழியர்கள் விரட்ட முயன்றனர்.

    ஆனால் நல்ல பாம்பு படம் எடுத்து மிரட்டியது. இதனால் அங்கிருந்த தொழிலாளர்கள் அங்கிருந்து அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.

    இதுகுறித்து பாம்பை லாவகமாக பிடிக்கும் பஞ்செட்டியை சேர்ந்த முத்துப்பாண்டி என்பவருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர் பாம்பை பிடிக்க முயன்றபோது அங்கிருந்த மஞ்சள் மூட்டைகளுக்குள் புகுந்து போக்கு காட்டியது. சுமார் 3 மணிநேர போராட்டத்துக்கு பின்னர் நல்ல பாம்பு சிக்கியது. இதன்பின்னர் அங்கிருந்த ஊழியர்கள் நிம்மதி பெருமூச்சு விட்டனர். பிடிபட்ட நல்ல பாம்பு பின்னர் வனப்பகுதியில் விடப்பட்டது.

    • சாலையின் ஒரு புறத்தில் 50-க்கும் மேற்பட்ட தனியார் உணவகங்கள் கடைகள், செயல்பட்டு வருகிறது
    • கால்வாயில் கழிவு நீர் நிரம்பி தேசிய நெடுஞ்சாலை மற்றும் சர்வீஸ் சாலையில் பாய்ந்து தேங்கி நிற்கிறது.

    பொன்னேரி:

    பொன்னேரியை அடுத்த காரனோடை அருகே உள்ள ஜனப்பன்சத்திரம் கூட்டு சாலை வழியாக சென்னை கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலை செல்கிறது. இந்த சாலையின் ஓரத்தில் மழைநீர் கால்வாய் கட்டப்பட்டுள்ளது.

    சாலையின் ஒரு புறத்தில் 50 க்கும் மேற்பட்ட தனியார் உணவகங்கள் கடைகள், செயல்பட்டு வருகிறது. இந்த உணவகங்களின் கழிவுநீர் நெடுஞ்சாலையில் உள்ள மழைநீர் கால்வாயில் விடப்பட்டு உள்ளது.

    இதனால் கால்வாயில் கழிவு நீர் நிரம்பி தேசிய நெடுஞ்சாலை மற்றும் சர்வீஸ் சாலையில் பாய்ந்து தேங்கி நிற்கிறது. அவ்வழியே செல்லும் வாகனங்களில் கழிவுநீர் சிதறி மற்ற வாகன ஓட்டிகள் மீது விழுகிறது. மேலும் இந்த கழிவு நீரால் துர்நாற்றம் வீசுகிறது.

    இதுகுறித்து சோழவரம் வட்டார வளர்ச்சி ஆணையாளரிடம் புகார் தெரிவிக்கப்பட்டது. ஆணையாளர் குலசேகரன் ஒன்றிய குழு தலைவர் ராஜாத்திசெல்வசேகரன் சம்பந்தப்பட்ட இடத்திற்கு நேரில் சென்று ஆய்வு விசாரணை செய்தார்.

    அப்போது அரசு அனுமதி இல்லாமல் குடிநீர் இணைப்புகள் பொருத்தப்பட்டிருந்தது தெரியவந்தது இதனை தொடர்ந்து சாலையோரத்தில் உள்ள பகுதிகளில் கட்டப்பட்டுள்ள கட்டிடங்களுக்கு அனுமதி இல்லாத 12 குடிநீர் குழாய் இணைப்புகளை துண்டிக்க அதிகாரிகள் உத்தரவிட்டனர். கால்வாயில் கழிவுநீர் விடுவதை தேசிய நெடுஞ்சாலை துறையினர் ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ஆய்வின்போது அழிஞ்சிவாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் நந்தினி ரமேஷ், மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.

    • திருவள்ளூர் நகராட்சி பகுதிகளில் விதி முறை மீறி வைக்கப்பட்ட பேனர்கள் மற்றும் அறிவிப்பு பலகைகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.
    • விளம்பர பலகைகள் வைத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

    திருவள்ளூர்:

    திருவள்ளூர் நகராட்சி பகுதிகளில் அனுமதியின்றி அரசியல் கட்சிகளோ, தனியார் நிறுவனங்களை சேர்ந்தவர்களோ டிஜிட்டல் பேனர்கள் மற்றும் அறிவிப்பு பலகைகள் வைக்கக்கூடாது என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது. அதையும் மீறி திருவள்ளூர் பகுதியில் தொடர்ந்து பேனர்கள் வைக்கப்பட்டு வருகிறது. இதனை அதிகாரிகள் அவ்வப்போது அகற்றி நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள்.

    இந்த நிலையில் நகராட்சிக்குட்பட்ட பகுதியில் அனுமதி இன்றி எராளமான டிஜிட்டல் பேனர்கள் மற்றும் அறிவிப்பு பலகைகள் வைக்கப்பட்டு இருப்பதாக அதிகாரிகளுக்கு தொடரந்து புகார்கள் வந்தன. இதைத்தொடர்ந்து அதனை அகற்ற நகராட்சி ஆணையாளர் ராஜலட்சுமி அதிரடியாக உத்தரவிட்டார்.

    நகராட்சி சுகாதார அலுவலர் கோவிந்த ராஜ் தலைமையில் நகராட்சி ஊழியர்கள், திருவள்ளூர் நகராட்சி பகுதிகளில் விதி முறை மீறி வைக்கப்பட்ட பேனர்கள் மற்றும் அறிவிப்பு பலகைகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். நேற்று காலை 7 மணிக்கு தொடங்கிய இந்த பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதுவரை நகராட்சிக்கு உட்பட்ட 27 வார்டுகளில் அனுமதியின்றி வைக்கப்பட்டிருந்த அரசியல் கட்சிகளின் டிஜிட்டல் பேனர்கள், தனியார் நிறுவனங்களின் அறிவிப்பு பலகைகள், பேனர்கள் என மொத்தம் 374 டிஜிட்டல் பேனர்கள் அகற்றப்பட்டு உள்ளன. விதிமுறை மீறி பேனர்கள், விளம்பர பலகைகள் வைத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்து உள்ளனர்.

    • மீஞ்சூரை அடுத்த அத்திப்பட்டில் வட சென்னை அனல்மின் நிலையம் உள்ளது.
    • அனல் மின் நிலையத்தின் 2- வது நிலையில் உள்ள 1-வது அலகில் கொதிகலன் கசிவு ஏற்பட்டது.

    பொன்னேரி:

    மீஞ்சூரை அடுத்த அத்திப்பட்டில் வட சென்னை அனல்மின் நிலையம் உள்ளது. இங்குள்ள இரு நிலைகளில் முதல் நிலையில் உள்ள 3 அலகுகளில் தலா 210 விதம் 630 மெகாவாட் மின் உற்பத்தியும், இரண்டாவது நிலையில் உள்ள இரு அலகுகளில் தலா 600 விதம் 1,200 மெகாவாட் என மொத்தம் தினமும் 1,830 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்பட்டு வந்தது.

    இந்த நிலையில் அனல் மின் நிலையத்தின் 2- வது நிலையில் உள்ள 1-வது அலகில் கொதிகலன் கசிவு ஏற்பட்டது. இதன் காரணமாக அந்த அலகில் உற்பத்தி செய்யப்பட்ட 600 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டு உள்ளது. இதனை சரி செய்யும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

    • வெல்டிங் கடை எதிரில் தனது மினி வேனை நேற்று முன்தினம் இரவு நிறுத்தி இருந்தார்.
    • சரவணன் செவ்வாப்பேட்டை போலீசில் புகார் செய்தார்.

    வேப்பம்பட்டு:

    திருவள்ளூரை அடுத்த புட்லூர் காந்தி நகரை சேர்ந்தவர் சரவணன் (வயது 46) இவர் வேப்பம்பட்டு அருகே ராம் நகர் பகுதியில் சி.டி.எச். சாலையோரம் உள்ள வெல்டிங் கடை எதிரில் தனது மினி வேனை நேற்று முன்தினம் இரவு நிறுத்தி இருந்தார். நேற்று காலை அவர் வந்து பார்த்தபோது அவரது வேனில் பொருத்தப்பட்டிருந்த ரூ.8 ஆயிரம் மதிப்பிலான புதிய பேட்டரி திருடப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

    இது குறித்து சரவணன் செவ்வாப்பேட்டை போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பேட்டரியை திருடிய மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

    • பொன்னேரி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சோதனை செய்த போது புகையிலை பொருட்கள் இருப்பது தெரியவந்தது.
    • புகையிலை பொருட்களை பறிமுதல் செய்த நிலையில் முசம்மிலை போலீசார் கைது செய்தனர்.

    பொன்னேரி:

    பொன்னேரி தாயுமான்செட்டி தெருவை சேர்ந்தவர் முசம்மில் (வயது 47). இவர் தனது வீட்டில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை பதுக்கி வைத்திருந்தார். இது குறித்து தகவல் அறிந்த பொன்னேரி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சோதனை செய்த போது புகையிலை பொருட்கள் இருப்பது தெரியவந்தது. 64 பாக்கெட்டு புகையிலை பொருட்களையும் பறிமுதல் செய்த நிலையில் முசம்மிலை போலீசார் கைது செய்தனர்.

    • திருவாலங்காடு ஒன்றியம் காவேரிராஜபுரம் ஊராட்சி கொல்லம்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் யுகேஸ்வரன்.
    • கனகம்மாசத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    திருத்தணி:

    திருவள்ளூர் மாவட்டம் திருவாலங்காடு ஒன்றியம் காவேரிராஜபுரம் ஊராட்சி கொல்லம்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் யுகேஸ்வரன் (வயது 44). கூலி வேலை செய்து வருகிறார். இவருக்கு கடந்த சில மாதங்களுக்கு முன் வயிற்றுப்பகுதியில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. தொடர்ந்து அந்த பகுதியில் கடுமையான வலி ஏற்பட்டதால் நேற்று முன்தினம் மாலை அவரது வயல்வெளியில் விவசாய நிலத்திற்கு பயன்படுத்தும் பூச்சி மருந்தை (விஷம்) குடித்துள்ளார். இதனை பார்த்த அவரது உறவினர்கள் அவரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு தீவிர சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.

    இது குறித்து கனகம்மாசத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • பாஸ்போர்ட் வழக்கில் கைது செய்யப்பட்டு புழல் ஜெயிலில் விசாரணை கைதிகளுக்கான அறையில் அடைக்கப்பட்டு இருந்தார்.
    • புழல் ஜெயில் தரப்பில் இருந்து புழல் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    திருவள்ளூர்:

    வங்காளதேச நாட்டை சேர்ந்தவர் முகமது ஆலா ஷேக் (வயது 45). இவர் கடந்த மாதம் 16-ந்தேதி சென்னை விமான நிலையத்தில் போலி பாஸ்போர்ட் வழக்கில் கைது செய்யப்பட்டு புழல் ஜெயிலில் விசாரணை கைதிகளுக்கான அறையில் அடைக்கப்பட்டு இருந்தார்.

    இவருக்கு நேற்று இரவு திடீரென வயிற்று வலி ஏற்பட்டது. வலியால் துடித்த அவரை உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் நேற்று இரவு அவர் பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து புழல் ஜெயில் தரப்பில் இருந்து புழல் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. புழல் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர் வயிற்று வலியால் இறந்தாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கிராமங்களில் அடிக்கடி மின்வெட்டு ஏற்படுகிறது.
    • பொன்னேரி அடுத்த சின்ன காவனம் சுடுகாட்டு சாலையில் மின் கம்பம் நடப்பட்டு நீண்ட நாட்கள் ஆகிறது.

    பொன்னேரி:

    பொன்னேரி கோட்டத்தில் அடங்கிய பொன்னேரி, கும்மிடிப்பூண்டி தொகுதிக்கு உட்பட்ட கும்மிடிப்பூண்டி பொன்னேரி ஆரம்பாக்கம், மெதுர் திருப்பாலைவனம், பகுதி மின் நுகர்வோர் குறைதீர்ப்பு முகாம் வேண்பாக்கம் துணை மின் நிலைய அலுவலகத்தில் மேற்பார்வை பொறியாளர் சந்திரசேகர் தலைமையில் நடைபெற்றது.

    முகாமில் விவசாயிகள் மற்றும் பொது மக்கள் தெரிவித்ததாவது. கிராமங்களில் அடிக்கடி மின்வெட்டு ஏற்படுகிறது. எனவே தடையில்லா மின்சாரம் வழங்க வேண்டும். பொன்னேரி நகராட்சி பகுதிகளில் மின்சாரத்தை பூமிக்கடியில் எடுத்துச் செல்ல வேண்டும் பொன்னேரி அடுத்த சின்ன காவனம் சுடுகாட்டு சாலையில் மின் கம்பம் நடப்பட்டு நீண்ட நாட்கள் ஆகிறது. அங்கு மின்சாரம் வழங்க வேண்டும். விவசாயத்திற்கு மின் இணைப்பை தாமதம் இன்றி வழங்க வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

    இது தொடர்பான மனுக்களையும் அதிகாரிகளிடம் தெரிவித்தனர். அந்த மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • மீஞ்சூரில் தமிழ்நாடு கால்நடை பராமரிப்பு துறை சார்பில் சிறப்பு மருத்துவ முகாம் உதவி இயக்குனர் கோபி கிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது.
    • முகாமில் 163 செல்லப் பிராணிகளுக்கு தடுப்பூசி போடப்பட்டது

    பொன்னேரி:

    மீஞ்சூரில் தமிழ்நாடு கால்நடை பராமரிப்பு துறை சார்பில் சிறப்பு மருத்துவ முகாம் உதவி இயக்குனர் கோபி கிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது இதில் சார்பு ஆட்சியர் ஐஸ்வர்யா, பேரூர் தலைவர் ருக்குமணி மோகன்ராஜ் கலந்து கொண்டு செல்லப் பிராணிகளுக்கு தடுப்பூசி செலுத்தும் பணியினை தொடங்கி வைத்தார்.

    இதில் ஏராளமானபேர் கலந்து கொண்டு தங்களது செல்லப் பிராணிகளான நாய், பூனை ஆகியவற்றுக்கு தடுப்பூசி செலுத்தினர், இது குறித்து கால்நடை மருத்துவர்கள் கூறுகையில் வீட்டில் வளர்க்கப்படும் நாய், பூனை, மற்றும் கால்நடைகளுக்கு நோய் தொற்று பரவாமல் இருக்க தடுப்பூசி செலுத்துவது அவசியம், குறிப்பாக நாய்களுக்கு தடுப்பூசி செலுத்தாவிட்டால் பிற நாய்களிடமிருந்து வளர்ப்பு நாய்களுக்கு ஏற்படும் நோய் தொற்றானது மனிதர்களுக்கும் பரவும் அபாயம் இருப்பதாக தெரிவித்தனர். முகாமில் 163 செல்லப் பிராணிகளுக்கு தடுப்பூசி போடப்பட்டது

    • ரியல் எஸ்டேட் அலுவலகம் மற்றும் மளிகை கடை உள்ளிட்ட 8 கடைகளை உடைத்து கொள்ளை சம்பவம் நடைபெற்றது
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா உதவியுடன் கொள்ளையர்களை தேடி வருகிறார்கள்.

    திருத்தணி:

    திருத்தணி அடுத்த திருவாலங்காடு பகுதியை சார்ந்த மணவூர் ரெயில் நிலையம் அருகில் நள்ளிரவில் பஞ்சர் கடை, சுவீட் கடை, பங்க் கடை, ஸ்டுடியோ, ரியல் எஸ்டேட் அலுவலகம் மற்றும் மளிகை கடை உள்ளிட்ட 8 கடைகளை உடைத்து கொள்ளை சம்பவம் நடைபெற்றது இதில் பஞ்சர் கடையில் இருந்த ரூ.2000 பணம், அருகில் இருந்த மளிகை கடையில் இருந்த ரூ.10 ஆயிரம் பணம், ரு.60 ஆயிரம் மதிப்புள்ள மளிகை பொருட்கள் ஆகியவை கொள்ளை அடிக்கப்பட்டு இருந்தன. இந்த கொள்ளை சம்பவங்கள் குறித்து திருவாலங்காடு போலீசில் புகார் செய்யப்பட்டது.

    போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா உதவியுடன் கொள்ளையர்களை தேடி வருகிறார்கள்.

    ×