என் மலர்
திருவள்ளூர்
- 12,000 நபர்களிடம் கோடிக்கணக்கான ரூபாய் ஏஜெண்டுகள் மூலம் வசூல் செய்யப்பட்டுள்ளது
- இன்ஸ்பெக்டர் தர்மலிங்கம் தலைமையில் போலீசார் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர்.
பெரியபாளையம்:
திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியம், மாளந்தூர் ஊராட்சியில் வசித்து வந்தவர் ஜோதி (வயது36) ஆவார். இவர் தாமரைப்பாக்கம் கூட்டுச்சாலையில் திருமண சீர்வரிசை பொருட்கள் விற்பனை செய்யும் கடை ஒன்றை நடத்தி வந்தார்.
இந்நிலையில், மாதந்தோறும் பணம் செலுத்தினால் தீபாவளிக்கு இரண்டு கிராம் தங்கம், 4 கிராம் தங்கம், ஸ்வீட், பட்டாசு உள்ளிட்ட பொருட்கள் கொடுப்பதாக சுமார் 12,000 பேரிடம் கோடிக்கணக்கான ரூபாய் ஏஜெண்டுகள் மூலம் வசூல் செய்தாராம். ஆனால், குறித்த நேரத்தில் யாருக்கும் தங்கம் உள்ளிட்ட பொருட்களை தரவில்லையாம்.
எனவே, பணம் கட்டியவர்கள் தாமரைப்பாக்கம் கூட்டுச்சாலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.இதனால் ஜோதி தலைமறைவானார். இதன் பின்னர்,போலீசார் துப்பாக்கியுடன் சுற்றி திரிந்து கொண்டிருந்த ஜோதியை கைது செய்து சிறையில் அடைத்தனர். கடந்த வாரம் ஜோதி ஜாமீனில் வெளியில் வந்தாராம்.
இந்நிலையில், இன்று இரவு ஜோதியின் தாய் ஜெகதாம்பாள்(வயது60) தாமரைப்பாக்கம் கூட்டுச்சாலைக்கு வந்திருந்தார்.இதனை அறிந்த பணம் கட்டி ஏமாந்தவர்களில் சிலர் மூதாட்டி ஜெகதாம்பாளை சிறைப்பிடித்து ஜோதியை உடனடியாக சம்பவ இடத்துக்கு வருமாறு வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்த வெங்கல் காவல் நிலைய போலீஸ் இன்ஸ்பெக்டர் தர்மலிங்கம் தலைமையில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். ஜோதி உடனடியாக இங்கே வரவேண்டும் தங்களுக்கு பணத்தை தர வேண்டும் என்று கூறி பணம் கட்டியவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.இச்சம்பவத்தால் இப்பகுதியில் பதற்றமும், பரபரப்பும் நிலவியது.
- போலீசார் வழக்குப்பதிவு செய்து கடையின் அருகில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தனர்.
- வேளாங்கண்ணியில் பதுங்கி இருந்த கௌதமை போலீசார் சுற்றி வளைத்து கையும் களவுமாக பிடித்தனர்.
கடம்பத்தூர்:
கடம்பத்தூர் ஒன்றியம் விடையூர் காரணி பகுதியைச் சேர்ந்தவர் வசந்தகுமார் (வயது 25). இவர் கடம்பத்தூர் ராஜாஜி சாலையில் பணம் பரிமாற்றம் (மணி டிரான்ஸ்பர்) செய்யும் கடை வைத்து நடத்தி வருகிறார்.
கடந்த 7-ந் தேதியன்று வழக்கம் போல வசந்தகுமார் கடையை திறக்க வந்தார். அப்போது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்த போது கல்லா உடைக்கப்பட்டு அதிலிருந்த ரொக்கப்பணம் ரூ.75 ஆயிரம் திருட்டு போனது தெரிய வந்தது.
இதுகுறித்து வசந்தகுமார் கடம்பத்தூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து கடையின் அருகில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தனர். அதில் திருட்டில் ஈடுபட்டவர் உருவம் பதிவாகி இருந்தது. அதை தொடர்ந்து போலீசார் விசாரணையில் அவர் சென்னை சென் தாமஸ் மவுண்ட் நசரத்பேட்டையை சேர்ந்த கௌதம் (22) என தெரியவந்தது. பின்னர் வேளாங்கண்ணியில் பதுங்கி இருந்த கௌதமை போலீசார் சுற்றி வளைத்து கையும் களவுமாக பிடித்தனர். மேலும் அவர் கொள்ளையடித்த பணத்தை ஜாலியாக செலவு செய்து வந்ததும் தெரிய வந்தது. போலீசார் அவரை கைது செய்து இது சம்பந்தமாக விசாரித்து வருகிறார்கள்.
- அரக்கோணத்தில் இருந்து இன்று மதியம் பயணிகள் மின்சார ரெயில் சென்னை சென்ட்ரல் நோக்கி வந்து கொண்டு இருந்தது.
- அரக்கோணத்தில் இருந்து வந்த மற்ற மின்சார ரெயில்கள் எக்ஸ்பிரஸ் தண்டவாளத்தில் இயக்கப்பட்டது.
திருவள்ளூர்:
அரக்கோணத்தில் இருந்து இன்று மதியம் பயணிகள் மின்சார ரெயில் சென்னை சென்ட்ரல் நோக்கி வந்து கொண்டு இருந்தது. காலை 11 மணியளவில் திருவாலங்காடு அருகே வந்த போது மின்சார ரெயிலின் என்ஜினில் திடீர் கோளாறு ஏற்பட்டு புகை வந்தது. இதையடுத்து மின்சார ரெயில் நடுவழியில் நிறுத்தப்பட்டது.
இதைத்தொடர்ந்து பயணிகள் மின்சார ரெயிலில் இருந்து இறங்கி சென்றனர். இதனால் வயதானவர்கள், பெண்கள் கடும்அவதி அடைந்தனர். அரக்கோணத்தில் இருந்து வந்த மற்ற மின்சார ரெயில்கள் எக்ஸ்பிரஸ் தண்டவாளத்தில் இயக்கப்பட்டது. மதியம் 1 மணிக்கு பின்னர் மின்சார ரெயில் என்ஜீன் சரிசெய்யப்பட்டு வழக்கம்போல் இயங்கியது.
- இளைஞர் மேம்பாட்டு நிதி ஒரு லட்சத்து 90 ஆயிரத்தை முறையாக பயன்படுத்தவில்லை என்றும் கூறப்படுகிறது.
- இளைஞர் மேம்பாட்டு நிதி ஒரு லட்சத்து 90 ஆயிரத்தை முறையாக பயன்படுத்தவில்லை என்றும் கூறப்படுகிறது.
திருத்தணி:
திருத்தணி அடுத்த தும்பிக்குளம் ஊராட்சி மன்றத் தலைவராக இருப்பவர் நிர்மலா. இவரது கணவர் கோபி. இந்த கிராமத்தில் உள்ள விளையாட்டு மைதானத்தை சீரமைக்க வேண்டும் என்று புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.
மேலும் இளைஞர் மேம்பாட்டு நிதி ஒரு லட்சத்து 90 ஆயிரத்தை முறையாக பயன்படுத்தவில்லை என்றும் கூறப்படுகிறது.
இது குறித்து கிராம மக்கள் ஊராட்சி மன்றத் தலைவர் நிர்மலாவிடம் கேட்டபோது அவர் பதில் அளிக்காமல் அவரது கணவர் கோபி விளக்கம் அளித்ததாக கூறப்படுகிறது. மேலும் பஸ் வசதி உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சி பணிகள் குறித்து பொதுமக்கள் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கப்பட வில்லை என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் ஊராட்சி தலைவராக உள்ள நிர்மலாவிற்கு பதிலாக அவரது கணவர் கோபி செயல்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், வளர்ச்சி பணிகள் மேற்கொள்ளாததை கண்டித்தும் அப்பகுதியை சேர்ந்த சுமார் 50-க்கும் மேற்பட்டோர் திருத்தணி-நல்லாட்டூர் சாலையில் இன்று காலை திடீர் மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்ததும் திருத்தணி இன்ஸ்பெக்டர் ஏழுமலை மற்றும் போலீசார் விரைந்து வந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி கலைந்து போகச்செய்தனர். இதனால் அப்பகுதி சிறி்து நேரம் பரபரப்பாக காணப்பட்டது.
- கனரக வாகனங்கள் குறுகலான இந்த சாலையை பயன்படுத்த கூடாது என்று ஏற்கனவே பல்வேறு போராட்டங்களை மக்கள் நடத்தி இருந்தனர்.
- லாரி மோதியதில் மின்கம்பம் உடைந்ததால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் லாரியை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பொன்னேரி:
திருவொற்றியூரில் இருந்து ஆந்திர மாநிலம் தடாவுக்கு இன்று அதிகாலை ஒரு மணி அளவில் கண்டெய்னர் லாரி சென்று கொண்டு இருந்தது. பொன்னேரி அருகே தடப்பெரும்பாக்கம் கூட்டு சாலையில் இருந்து கொடூர் வழியாக தச்சூர் கூட்டு சாலைக்கு குறுக்கு வழியில் செல்வதற்காக குறுகலாக உள்ள தடப்பெரும்பாக்கம் லட்சுமி அம்மன் கோவில் அருகே வளைவில் லாரியை டிரைவர் திருப்பினார். இதில் கட்டுப்பாட்டை இழந்த கண்டெய்னர் லாரி திரும்பியபோது சாலையின் ஓரத்தில் இருந்த மின்கம்பத்தில் பயங்கரமாக மோதியது.
இதில் மின்கம்பம் உடைந்ததில் மின் வயர்கள் அறுந்து கண்டெய்னர் லாரி மீது விழுந்தது. அப்போது தீப்பொறிகள் பறந்தன. இந்த விபத்தால் அப்பகுதியில் உள்ள 50-க்கும் மேற்பட்ட வீடுகளில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. சத்தம் கேட்டு பொதுமக்கள் வந்து பார்த்த போது மின்கம்பத்தில் லாரி மோதி நிற்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். மேலும் லாரியில் உள்ள செல்ப் மோட்டார் தீப்பற்றி எரிந்தது. அதனை பொதுமக்கள் உடனடியாக அணைத்தனர்.
கனரக வாகனங்கள் குறுகலான இந்த சாலையை பயன்படுத்த கூடாது என்று ஏற்கனவே பல்வேறு போராட்டங்களை மக்கள் நடத்தி இருந்தனர். இந்த நிலையில் லாரி மோதியதில் மின்கம்பம் உடைந்ததால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் லாரியை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. மின்வயர்கள் அறுந்து விழுந்தபோது மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் லாரியில் இருந்த டிரைவர் அதிர்ஷ்ட வசமாக உயிர்தப்பினார். விபத்து நடந்தது நள்ளிரவு நேரம் என்பதால் பெரிய அளவில் அசம்பாவிதம் ஏற்படவில்லை.மின்வயர்களை சரிசெய்யும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டு வருகிறார்கள்.
- மீஞ்சூர் பேரூராட்சிக்கு உட்பட்ட 18 வார்டுகளில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன.
- குடிநீர் வரி செலுத்தாத 23 வீடுகளில் குடிநீர் இணைப்புகளை பேரூராட்சி அதிகாரிகள் அதிரடியாக துண்டித்தனர்.
பொன்னேரி:
மீஞ்சூர் பேரூராட்சிக்கு உட்பட்ட 18 வார்டுகளில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. வீடுகளுக்கு குழாய் மூலம் குடிநீர் இணைப்புகள் வழங்கப்பட்டு உள்ளன. இந்தநிலையில் 2022-23ம் ஆண்டிற்கான குடிநீர் வரியை ஏராளமான குடியிருப்பாளர்கள் செலுத்தவில்லை. இதுகுறித்து பேரூராட்சி ஊழியர்கள் சம்பந்தப்பட்டவர்களுக்கு பலமுறை சொல்லியும் நிலுவைத்தொகை செலுத்தப்படவில்லை.
இந்த நிலையில் குடிநீர் வரி செலுத்தாத 23 வீடுகளில் குடிநீர் இணைப்புகளை பேரூராட்சி அதிகாரிகள் அதிரடியாக துண்டித்தனர். வருகிற 28-ந்தேதிக்குள் குடிநீர் கட்டண வரி செலுத்தாத அனைத்து வீடுகளிலும் குடிநீர் இணைப்பு முழுவதும் துண்டிக்கப்படும் என பேரூராட்சி செயல் அலுவலர் வெற்றி அரசு தெரிவித்து உள்ளார்.
- உடல் நிலை பாதிக்கப்பட்ட அசோக்கு மாரை மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
- போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
திருவள்ளூர்:
திருவள்ளூரை அடுத்த புன்னபாக்கம், மந்தவெளி தெருவை சேர்ந்தவர் அசோக் குமார் (வயது 29). கூலித் தொழிலாளி. இவரை கடந்த 1-ந் தேதி பாம்பு கடித்தது. இதில் உடல் நிலை பாதிக்கப்பட்ட அசோக்கு மாரை மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
அங்கு சிகிச்சை பலனின்றி அசோக்குமார் இறந்தார். இது குறித்து புல்லரம்பாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
- ஒரு வேகத்தடையில் டிராக்டர் வேகமாக ஏறி இறங்கியது. அப்போது நிலைத்தடுமாறிய தனலட்சுமிய டிராக்டரில் இருந்து தவறி கீழே விழுந்தார்.
- டிராக்டரின் சக்கரத்தில் தனலட்சுமி சிக்கிக்கொண்டார். இதில் அவர் சம்பவ இடத்திலே பலியானார்.
திருவள்ளூர்:
திருவள்ளூரை அடுத்த அரும்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் தனலட்சுமி (வயது 45). கூலித்தொழிலாளி. இவர் அவ்வழியாக சென்ற டிராக்டரில் டிரைவர் இருக்கை அருகே அமர்ந்து பயணம் செய்தார்.
சித்தம்பாக்கம் அருகே சென்ற போது ஒரு வேகத்தடையில் டிராக்டர் வேகமாக ஏறி இறங்கியது. அப்போது நிலைத்தடுமாறிய தனலட்சுமிய டிராக்டரில் இருந்து தவறி கீழே விழுந்தார்.
அப்போது அதே டிராக்டரின் சக்கரத்தில் தனலட்சுமி சிக்கிக்கொண்டார். இதில் அவர் சம்பவ இடத்திலே பலியானார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த டிரைவர் டிராக்டரை அங்கேயே நிறுத்திவிட்டு தப்பி ஓடிவிட்டார். தகவல் அறிந்ததும் வெங்கல் போலீசார் விரைந்து வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- எல்லாபுரம் வட்டார வளர்ச்சி அலுவலக வளாகத்தில் எல்லாபுரம் ஒன்றிய குழு கூட்டம் நடைபெற்றது.
- வெங்கல் பஜார் தெருவில் சாலையின் நடுவே வைக்கப்பட்டுள்ள குப்பை தொட்டியால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது.
பெரியபாளையம்:
திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையத்தில் உள்ள எல்லாபுரம் வட்டார வளர்ச்சி அலுவலக வளாகத்தில் எல்லாபுரம் ஒன்றிய குழு கூட்டம் நேற்று மதியம் நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு ஒன்றிய பெருந்தலைவர் வடமதுரை கே.ரமேஷ் தலைமை தாங்கினார். ஒன்றிய துணைப் பெருந்தலைவர் வக்கீல் கே.சுரேஷ், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் நடராஜ், ஸ்டாலின் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மன்ற பொருட்களை வட்டார வளர்ச்சி அலுவலக மேலாளர் சுபதாஸ் வாசித்தார்.
கூட்டத்தில் பேசிய ஒன்றிய குழு உறுப்பினர்கள் கோடுவெளிகுழந்தைவேலு, திருக்கண்டலம் ரவி, திருமலை சிவசங்கர், சிவாஜி உள்ளிட்டோர் தங்களது குறைகளை நிவர்த்தி செய்ய சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் ஒன்றிய குழு கூட்டத்திற்கு வருவதில்லை. இதனால் செவிடன் காதில் ஊதிய சங்கு போன்ற செயலாக இக்கூட்டத்தில் நாங்கள் கூறும் குறைகள் நிவர்த்தி ஆகாமல் உள்ளது. என்று கூறினர். இதனால் கூட்டத்தில் கூச்சலும், குழப்பமும் நிலவியது. மேலும், கோடுவெளி ஊராட்சியில் ஒன்றரை ஆண்டுகளாக கட்டி முடிக்கப்பட்ட மருத்துவமனை கட்டிடம் பொது மக்களின் பயன்பாட்டிற்கு திறக்கப்படாமல் உள்ளது. அதனை பொதுமக்களின் பயன்பாட்டிற்கு எப்பொழுது திறப்பார்கள். அலமாதி மேல்நிலைப் பள்ளி அருகே உள்ள பஸ் நிறுத்தத்தில் மாநகரப் பேருந்துகள் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பஸ் நிறுத்தத்தில் இருந்து தள்ளி நிறுத்தியதால் ஒன்பதாம் வகுப்பு மாணவி பஸ்ஸில் ஏற புத்தகப் பையுடன் ஓடியதால் கீழே விழுந்து இரண்டு பற்கள் உடைந்தது அதனை தடுக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். மாகரல் ஊராட்சியில் உள்ள சுய உதவி குழு கட்டிடம் சேதம் அடைந்துள்ளது. அதனை அகற்ற வேண்டும். ராமாபுரம் ஊராட்சியில் இடிந்து விழும் நிலையில் உள்ள மேல்நிலை குடிநீர் தேக்க தொட்டியை அகற்ற வேண்டும். திருக்கண்டலம் முதல் பூச்சி அத்திப்பேடு வரையில் உள்ள ஒன்றியச் சாலையை மேம்படுத்த நெடுஞ்சாலை துறைக்கு இந்த சாலையை ஒப்படைக்க வேண்டும்.
வெங்கல் பஜார் தெருவில் சாலையின் நடுவே வைக்கப்பட்டுள்ள குப்பை தொட்டியால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது எனவே பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு ஒதுக்குப்புறமாக குப்பைத் தொட்டியை அமைக்க வேண்டும். செங்குன்றம்-திருவள்ளூர் நெடுஞ்சாலையில் காரணிபாட்டை, லட்சுமிநாதபுரம் ஆகிய பகுதிகளில் உள்ள நெடுஞ்சாலைகளில் உள்ள வேகத்தடையை அகற்ற வேண்டும். அல்லது ரிப்லேக்ட்டர்கள் அமைக்க வேண்டும். பிரதம மந்திரியின் வீடு கட்டும் திட்டத்தில் பயனாளிகளுக்கு பணம் கிடைக்கவில்லை என்ற குற்றச்சாட்டை தீர்க்க வேண்டும், மேட்டுப்பாளையம், அண்ணா நகர் உள்ளிட்ட பகுதிகளில் வசித்து வரும் மக்களுக்கு தோராய பட்டா வழங்கப்பட்டுள்ளது. அதனை நிரந்தர பட்டாவாக மாற்றி தந்தால் தான் அரசு திட்டங்கள் பெற அவர்களுக்கு உதவியாக இருக்கும். மேலும், கூட்ட அரங்கத்தில் தேசிய தலைவர்களின் படம் இல்லை. எனவே உடனடியாக தேசத் தலைவர்களின் படங்களை அமைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டது. மேலும் இக்கூட்டத்தில் ரூ.ஒரு கோடியே 14 லட்சம் செலவில் 26 வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ளுவது என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் இக்கூட்டத்தில் ஏக மனதாக நிறைவேற்றப்பட்டது.
- விடுமுறை நாட்களில் சென்னை மற்றும் காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமானோர் வருவது வழக்கம்.
- பழவேற்காடு கடற்கரை மணற்பகுதி குப்பைகளாக காட்சி அளிக்கிறது.
பொன்னேரி:
பழவேற்காடு கடற்கரை சுற்றுலா தளமாக விளங்குகிறது. தினமும் காலை, மாலை நேரத்தில் ஏராளமானோர் வந்து செல்கிறார்கள்.
விடுமுறை நாட்களில் சென்னை மற்றும் காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமானோர் வருவது வழக்கம். சுற்றுலா வருபவர்கள் தாங்கள் கொண்டு வரும் திண்பண்டங்கள், பிளாஸ்டிக் கவர்கள் தண்ணீர் பாடல்களை கடற்கரை மணலிலேயே ஆங்காங்கே போட்டு விட்டு செல்கிறார்கள்.
இதனால் பழவேற்காடு கடற்கரை மணற்பகுதி குப்பைகளாக காட்சி அளிக்கிறது. மேலும் குப்பைகள் காற்றில் பறந்து கடலில் விழுவதால் கடல் நீரும் மாசு அடைகிறது.
பழவேற்காடு கடற்கரை மணற்பகுதியை சுத்தப்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். இந்த நிலையில் பொன்னேரி வருவாய்த்துறையின் சார்பில் பழவேற்காடு கடற்கரையை தூய்மைப்படுத்தும் பணி நடைபெற்றது. பயிற்சி கலெக்டர் கேத்ரின் சரண்யா தலைமை தாங்கினார். மீஞ்சூர் வட்டார வளர்ச்சி அலுவலர் சந்திரசேகர், தாசில்தார் செல்வக்குமார், ஒன்றிய கவுன்சிலர் செல்வழகி எர்ணாவுரான் ஊராட்சி மன்ற தலைவர் கஜேந்திரன் மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் கலந்து கொண்டு தூய்மைப்படுத்தினர்.
- சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த சில நாட்களாக அதிகாலை நேரத்தில் கடும் பனி மூட்டம் காணப்படுகிறது.
- அதிகாலையில் சாலையே தெரியாத அளவுக்கு புகைபோல் பனி படர்ந்து காணப்பட்டது.
பொன்னேரி:
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த சில நாட்களாக அதிகாலை நேரத்தில் கடும் பனி மூட்டம் காணப்படுகிறது. காலை 8 மணி வரை பனிமூட்டம் நீடித்து வருவதால் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்து வருகிறார்கள்.
சில நாட்கள் பனியின் தாக்கம் குறைந்து இருந்தாலும் மீண்டும் பனிமூட்டம் அதிகரித்து வருகிறது.
இன்று காலை சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடும் பனி மூட்டம் நிலவியது. இதே போல் திருவள்ளூர் மாவட்டத்திலும் பனியின் தாக்கம் அதிகம் காணப்பட்டது. பொன்னேரி, மீஞ்சூர், சோழவரம், பழவேற்காடு, திருவள்ளூர், ஊத்துக்கோட்டை, பெரியபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் இன்று காலை பனிமூட்டம் அதிகம் இருந்தது.
அதிகாலையில் சாலையே தெரியாத அளவுக்கு புகைபோல் பனி படர்ந்து காணப்பட்டது. சாலையில் முன்னால் மற்றும் எதிரே வந்த வாகனங்கள் தெரியாத அளவுக்கு பனி காணப்பட்டது. காலை 8 மணி வரை பனியின் தாக்கம் இருந்தது.
இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்தனர். வாகனங்கள் முகப்பு விளக்குகளை எரியவிட்டு சென்றன. காலை 8 மணிக்கு பின்னரே பனியின் தாக்கம் மெல்ல மெல்ல குறைய தொடங்கி இயல்பு நிலைக்கு திரும்பியது.
- கடந்த 7-ந்தேதி அலுவலகத்தின் பூட்டை உடைத்து ரூ.75 ஆயிரம் கொள்ளை போனது.
- கடம்பத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
திருவள்ளூர்:
திருவள்ளூர் அடுத்த கடம்பத்தூர் ஒன்றியம் விடையூர் காரணி பகுதியைச் சேர்ந்தவர் வசந்த குமார். இவர் கடம்பத்தூர் ராஜாஜி சாலையில் பணம் பரிமாற்றம் செய்யும் அலுவலகம் நடத்தி வருகிறார்.
கடந்த 7-ந்தேதி இந்த அலுவலகத்தின் பூட்டை உடைத்து ரூ.75 ஆயிரம் கொள்ளை போனது. இது தொடர்பாக கடம்பத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து கண்காணிப்பு கேமிரா காட்சியை வைத்து கொள்ளையில் ஈடுபட்ட பரங்கிமலை, மகாலட்சுமி அம்மன் கோவில் தெருவை சேர்ந்த கவுதமனை (22) கைது செய்தனர்.






