என் மலர்
உள்ளூர் செய்திகள்

பொன்னேரி அருகே நள்ளிரவில் மின் கம்பம் மீது லாரி மோதியதில் வயர்கள் அறுந்து விழுந்தது- பொதுமக்கள் போராட்டம்
- கனரக வாகனங்கள் குறுகலான இந்த சாலையை பயன்படுத்த கூடாது என்று ஏற்கனவே பல்வேறு போராட்டங்களை மக்கள் நடத்தி இருந்தனர்.
- லாரி மோதியதில் மின்கம்பம் உடைந்ததால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் லாரியை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பொன்னேரி:
திருவொற்றியூரில் இருந்து ஆந்திர மாநிலம் தடாவுக்கு இன்று அதிகாலை ஒரு மணி அளவில் கண்டெய்னர் லாரி சென்று கொண்டு இருந்தது. பொன்னேரி அருகே தடப்பெரும்பாக்கம் கூட்டு சாலையில் இருந்து கொடூர் வழியாக தச்சூர் கூட்டு சாலைக்கு குறுக்கு வழியில் செல்வதற்காக குறுகலாக உள்ள தடப்பெரும்பாக்கம் லட்சுமி அம்மன் கோவில் அருகே வளைவில் லாரியை டிரைவர் திருப்பினார். இதில் கட்டுப்பாட்டை இழந்த கண்டெய்னர் லாரி திரும்பியபோது சாலையின் ஓரத்தில் இருந்த மின்கம்பத்தில் பயங்கரமாக மோதியது.
இதில் மின்கம்பம் உடைந்ததில் மின் வயர்கள் அறுந்து கண்டெய்னர் லாரி மீது விழுந்தது. அப்போது தீப்பொறிகள் பறந்தன. இந்த விபத்தால் அப்பகுதியில் உள்ள 50-க்கும் மேற்பட்ட வீடுகளில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. சத்தம் கேட்டு பொதுமக்கள் வந்து பார்த்த போது மின்கம்பத்தில் லாரி மோதி நிற்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். மேலும் லாரியில் உள்ள செல்ப் மோட்டார் தீப்பற்றி எரிந்தது. அதனை பொதுமக்கள் உடனடியாக அணைத்தனர்.
கனரக வாகனங்கள் குறுகலான இந்த சாலையை பயன்படுத்த கூடாது என்று ஏற்கனவே பல்வேறு போராட்டங்களை மக்கள் நடத்தி இருந்தனர். இந்த நிலையில் லாரி மோதியதில் மின்கம்பம் உடைந்ததால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் லாரியை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. மின்வயர்கள் அறுந்து விழுந்தபோது மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் லாரியில் இருந்த டிரைவர் அதிர்ஷ்ட வசமாக உயிர்தப்பினார். விபத்து நடந்தது நள்ளிரவு நேரம் என்பதால் பெரிய அளவில் அசம்பாவிதம் ஏற்படவில்லை.மின்வயர்களை சரிசெய்யும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டு வருகிறார்கள்.






