என் மலர்tooltip icon

    திருவள்ளூர்

    • கடந்த சில நாட்களாக பெய்த மழையில் சுந்தரையாஸ் தெரு சாலை சேதம் அடைந்தது.
    • ஆற்றின் கரையோரம் இருந்த 2 மின் கம்பம் சாய்ந்தன.

    பொன்னேரி:

    பொன்னேரி நகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகள் 90 சதவீதம் முடிவடைந்த நிலையில் பிரதான 5 நீரேற்று நிலையத்தில் இருந்து கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கு குழாய் பதிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த குழாய்கள் ஆரணி ஆற்றின் குறுக்கே நவீன தொழில்நுட்ப உதவியுடன் ராட்சத துளையிடும் எந்திரத்தின் மூலம் 250 மீட்டர் நீளம் 10 மீட்டர் ஆழத்தில் துளையிடும் பணிகள் நடைபெற்று வந்தது. கடந்த சில நாட்களாக பெய்த மழையில் சுந்தரையாஸ் தெரு சாலை சேதம் அடைந்தது. மேலும் ஆற்றின் கரையோரம் இருந்த 2 மின் கம்பம் சாய்ந்தன. சேதம் அடைந்த சாலை அருகே எந்திரம் உள்ளதால் ஆரணி ஆற்றின் குறுக்கே குழாய் பதிக்கும் பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டு உள்ளது.

    • டாஸ்மாக் ஊழியர் சக்திவேல் என்பவர் வெள்ளத்தில் சிக்கி மரணம் அடைந்தார்.
    • அனைத்து டாஸ்மாக் சங்கங்களின் கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    திருமழிசை:

    ஃபெஞ்ஜல் புயலின்போது விழுப்புரம் மாவட்டம், குண்டலப்புலியூர் பகுதியில் டாஸ்மாக் ஊழியர் சக்திவேல் என்பவர் வெள்ளத்தில் சிக்கி மரணம் அடைந்தார். அவரது குடும்பத்தினருக்கு நிவாரண உதவி வழங்க கோரி திருமழிசையில் உள்ள டாஸ்மாக் கிடங்கு அருகே திருவள்ளூர் கிழக்கு மற்றும் காஞ்சிபுரம் மாவட்ட அனைத்து டாஸ்மாக் சங்கங்களின் கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் ஏ.ஐ.டி.யூ.சி. மாநில பொதுச் செயலர் தனசேகர், ஐ.என்.டி.யூ.சி மாநில தலைவர் பாலாஜி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    • சிவகாமி, கணவரிடம் விவாகரத்து கேட்டு கோர்ட்டில் மனுத் தாக்கல் செய்து உள்ளார்.
    • வழக்கில் தலைமறைவான மேலும் சிலரையும் போலீசார் தேடி வருகின்றனர்.

    செங்குன்றம்:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் பெருவாங்கூர் தெற்கு தெருவை சேர்ந்தவர் ராம கிருஷ்ணன் (33). கார் டிரைவர். இவரது மனைவி சிவகாமிஸ்ரீ. இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக 2 ஆண்டுகள் பிரிந்து வாழ்ந்து வருவதாக தெரிகிறது.

    இந்த நிலையில் சிவகாமி, கணவரிடம் விவாகரத்து கேட்டு கோர்ட்டில் மனுத் தாக்கல் செய்து உள்ளார். ஆனால் ராமகிருஷ்ணன் மனைவியை பிரிய மனம் இல்லாததால் விவகா ரத்திற்கு சம்மதிக்கவில்லை என்று கூறப்படுகிறது.

    இதற்கிடையே கடந்த 28-ந்தேதி ராமகிருஷ்ணன் சென்னைக்கு சவாரி வந்தார். அப்போது அவரை செல்போன் மூலம் தொடர்பு கொண்ட மனைவி சிவகாமிஸ்ரீ பேச வேண்டும் என்று கூறி சோழவரம் அடுத்த ஜனப்பன்சத்திரம் கூட்டு சாலை கணேஷ் நகருக்கு வருமாறு அழைத்தார்.

    ராமகிருஷ்ணன் அங்கு சென்ற போது 2 மோட்டார் சைக்கிள்களில் வந்த மர்ம கும்பல் திடீரென அவரை சுற்றி வளைத்து சரமாரியாக வெட்டிவிட்டு தப்பி சென்று விட்டனர். இதில் தலை, கையில் பலத்த வெட்டுக் காயம் அடைந்த ராமகிருஷ்ணன் ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.

    இது குறித்து சோழவரம் போலீசார் வழக்கு பதிவு செய்து அங்குள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து விசாரணை நடத்தினர். இதில் விவாகரத்து கொடுக்க மறுத்ததால் கணவரை மனைவி சிவகாமிஸ்ரீயே கூலிப்படை ஏவி கொலை செய்ய முயன்றது தெரிய வந்தது.

    இதைத்தொடர்ந்து சிவகாமி ஸ்ரீ, மதுரவாயல் ஏரிக்கரையைச் சேர்ந்த நவீன், மதுரவாயல் கிருஷ்ணா நகரை சேர்ந்த கெல்வின் ராஜ், அரும்பாக்கத்தை சேர்ந்த நித்திஷ் ராஜ் ஆகிய 4 பேரையும் போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்களை பொன்னேரி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். இந்த வழக்கில் தலைமறைவான மேலும் சிலரையும் போலீசார் தேடி வருகின்றனர்.

    • அணைக்கட்டிற்கு தண்ணீர் வரத்து தொடர்ந்து அதிகரித்தபடி உள்ளது.
    • கொசஸ்தலை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பூண்டி ஏரிக்கு தண்ணீர் வருகிறது.

    திருவள்ளூர்:

    ராணிப்பேட்டை மாவட்டம் தக்கோலம் வழியாக வரும் கல்லாற்று தண்ணீர் திருவள்ளூர் மாவட்டம் பேரம்பாக்கம் அடுத்து கேசாவரம் அணைக்கட்டு பகுதிக்கு வரும். பின்னர் அங்கிருந்து கூவம் ஆறு, கொசஸ்தலை ஆறு என 2 ஆறுகளாக பிரிகிறது.

    கேசவரம் அணைக்கட்டு நிரம்பினால், நேரடியாக கொசஸ்தலை ஆற்றில் செல்லும் நீர் பூண்டி ஏரிக்கு செல்லும். இதேபோல் அணைக்கட்டின் மற்றொரு புறம் அமைக்கப்பட்ட, 16 ஷட்டர்கள் வழியாக செல்லும் மழைநீர் கூவம் ஆறாக மாறி பேரம்பாக்கம், மணவாளநகர், அரண்வாயல், புதுச்சத்திரம் வழியாக சென்னை நேப்பியார் பாலம் அருகே சென்று கடலில் கலக்கும்.

    இந்த நிலையில் ஃபெஞ்ஜல் புயலால் ஏற்பட்ட கனமழையின் காரணமாக கேசவபுரம் அணைக்கட்டு முழுவதும் நிரம்பி வழிகிறது. அணைக்கட்டிற்கு தண்ணீர் வரத்து தொடர்ந்து அதிகரித்தபடி உள்ளது. இதையடுத்து 1000 கன அடி நீர் கேசவபுரம் அணைக்கட்டில் இருந்து வெளியேறி வருகிறது. இதனால் கொசஸ்தலை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மேலும் பூண்டி ஏரிக்கும் நீர்வரத்து அதிகரித்து நீர் மட்டம் கிடு, கிடுவென உயர்ந்து வருகிறது.

    பாகசாலை, மணவூர், விடையூர், நாத்தவாடா, நாராயணபுரம் ஆகிய பகுதியில் கொசஸ்தலை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பூண்டி ஏரிக்கு தண்ணீர் வருகிறது.

    இதேபோல் கூவம் ஆற்றிலும் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுவதால் பேரம்பாக்கம் பிஞ்சிவாக்கம், ஏகாட்டூர், புட்லூர் ஆகிய பகுதியில் கூவம் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட தடுப்பணைகள் முழுவதுமாக நிரம்பி காணப்படுகிறது. கூவம் ஆற்றின் நடுவே உள்ள புதுச்சத்திரம் பகுதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு புதுச்சத்திரம் தரைப்பாலம் மூழ்கும் அளவிற்கு தண்ணீர் செல்கிறது. புதுச்சத்திரம் தரைப்பாலம் மூழ்கினால் அவ்வழியாக செல்லும் வாகனங்கள் 20 கி.மீ, துாரம் சுற்றி செல்லும் நிலை ஏற்படும்.

    • கடந்த 5 நாட்களில் பூண்டி ஏரியின் நீர்மட்டம் 7 அடி உயர்ந்து உள்ளது.
    • செம்பரம்பாக்கம் ஏரிக்கு 412 கனஅடியும் தண்ணீர் வருகிறது.

    திருவள்ளூர்:

    சென்னை நகர மக்களின் குடிநீர் தேவையை நிறைவேற்றும் முக்கிய ஏரிகளில் ஒன்று பூண்டி ஏரி. பூண்டி ஏரியில் தண்ணீர் இருப்பு குறைந்ததை தொடர்ந்து கடந்த செப்டம்பர் மாதம் முதல் கிருஷ்ணா தண்ணீர் ஒப்பந்தப்படி ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையில் இருந்து தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது.

    இந்த நிலையில் பெஞ்ஜல் புயல் காரணமாக திருவள்ளூர் மாவட்டத்தில் கனமழை கொட்டித்தீர்த்தது. இதனால் மாவட்டத்தில் உள்ள ஏரி, குளங்கள் வேகமாக நிரம்பி வருகின்றன. இதேபோல் பூண்டி ஏரிக்கும் தண்ணீர் வரத்து அதிகரித்து உள்ளதால் நீர் மட்டம் கிடு, கிடுவென உயர்ந்து வருகிறது.

    கேசவபுரம் அணைக்கட்டில் இருந்து வெளியேறும் தண்ணீர், ஆரணி ஆறு, நந்தியாற்று தண்ணீர் மற்றும் ஏரி நீர்ப்பிடிப்பு பகுதியில் இருந்து தொடர்ந்து தண்ணீர் வந்து கொண்டு இருப்பதால் பூண்டி ஏரிக்கு இன்று காலை நிலவரப்படி நீர் வரத்து 4 ஆயிரத்து 360 கனஅடியாக உயர்ந்து உள்ளது.

    கடந்த 5 நாட்களில் பூண்டி ஏரியின் நீர்மட்டம் 7 அடி உயர்ந்து உள்ளது. பூண்டி ஏரியின் மொத்த உயரம் 35 அடி. இதில் தற்போது 30.30 அடிக்கு தண்ணீர் உள்ளது. கடந்த 1-ந்தேதி பூண்டி ஏரியின் நீர்மட்டம் 23.30 அடி இருந்தது குறிப்பிடத்தக்கது.

    பூண்டி ஏரியின் மொத்த கொள்ளளவு 3231 மில்லியன் கனஅடி. இதில் 1810 மில்லியன் கனஅடி தண்ணீர் உள்ளது. 27 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மழை இல்லாததால் புழல், செம்பரம்பாக்கம் ஏரிகளுக்கு தண்ணீர் வரத்து குறைந்து உள்ளது. புழல் ஏரிக்கு இன்று காலை நிலவரப்படி 209 கன அடியும், செம்பரம்பாக்கம் ஏரிக்கு 412 கனஅடியும் தண்ணீர் வருகிறது.

    • நாளை மாலை 4.08 மணிக்கு ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் பாய்கிறது.
    • உத்தரவு மீன்வள கூட்டுறவு சங்கம் மூலமாக திருவள்ளூர் மாவட்ட மீன்வளத்துறை பிறப்பித்துள்ளது.

    சூரிய ஒளிவட்ட ஆய்வுக்கான ஐரோப்பிய செயற்கைகோளை சுமந்து கொண்டு நாளை (புதன்கிழமை) விண்ணில் பாய இருக்கும் பி.எஸ்.எல்.வி.- சி-59 ராக்கெட்டுக் கான 25 மணி நேர கவுண்ட் டவுன் இன்று பகல் 3.08 மணிக்கு தொடங்குகிறது. இதனை முடித்துக்கொண்டு நாளை (புதன்கிழமை) மாலை 4.08 மணிக்கு ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் பாய்கிறது.

    இந்த நிலையில், பழவேற்காடு மீனவர்கள் நாளை கடலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவு மீன்வள கூட்டுறவு சங்கம் மூலமாக திருவள்ளூர் மாவட்ட மீன்வளத்துறை பிறப்பித்துள்ளது.

    ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து பிஎஸ்எல்வி-சி 59 ராக்கெட் நாளை விண்ணில் ஏவப்பட உள்ள நிலையில் இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

    • பலத்த மழை காரணமாக பிச்சாடடூர் அணை நிரம்பி உள்ளது.
    • இன்று காலை 500 கனஅடி உபரி நீர் திறக்கப்பட்டு உள்ளது.

    திருவள்ளூர்:

    ஆந்திரமாநிலம் சித்தூர் மாவட்டம் பிச்சாட்டூரில் அணை உள்ளது. பலத்த மழை காரணமாக பிச்சாடடூர் அணை நிரம்பி உள்ளது. இதையடுத்து அணையில் இருந்து இன்று காலை 500 கனஅடி உபரி நீர் திறக்கப்பட்டு உள்ளது.

    இதைத்தொடர்ந்து திருவள்ளூர் மாவட்டத்தில் ஆரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு அபாயம் ஏற்பட்டு உள்ளது. கரையோர மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. இதுதொடர்பாக நீர்வளத் துறை அதிகாரிகள் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-

    பிச்சாட்டூர் அணைக்கு வரும் நீர் வரத்தும் சற்று அதிகமாக இருப்பதால், பாதுகாப்பு கருதி முன்எச்சரிக்கை நடவடிக்கையாக ஆந்திர மாநில அரசு இன்று (1-ந்தேதி)காலை 10 மணியளவில் உத்தேசமாக 500 கன அடி உபரி நீரை திறந்து விடுகிறது.

    இதனால் ஆரணியாறு ஆற்றங்கரையோரம் மற்றும் தாழ்வான பகுதியில் உள்ளவர்களுக்கு வெள்ள அபாய முன் எச்சரிக்கை விடப்படுகிறது.

    நீர் தேக்கத்திற்கு மழை நீரினால் வரத்து அதிகமாகும் பட்சத்தில் மிகை நீர் வெளியேற்றத்தின் அளவு படிப்படியாக உயர்த்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    தற்பொழுது ஆரணியாற்றின் குறுக்கே உள்ள அ.நாகுப்பம் அணைக்கட்டு, லட்சுமிபுரம் அணைக்கட்டு, அரெட்டி பாளையம் தடுப்பணைகள் மூலம் சராசரியாக 3200 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    எனவே ஆரணி ஆற்றின் கரையோர கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஊத்துக்கோட்டை, தாராட்சி பேரண்டூர் 43யனப்பாக்கம், பாலவாக்கம், காக்கவாக்கம், செங்காத்தாகுளம், பெரியபாளையம், பாலவாக்கம், ஆர்.என்.கண்டிகை, அனந்தேரி, பேரிட்டிவாக்கம், வட தில்லை, மாம்பாக்கம், கல்பட்டு, மானந்தூர்.

    தொளவேடு, மேல் மாளிகைப் பட்டு, கீழ் மாளிகைப்பட்டு, பெரியபாளையம், ராளப் பாடி, மங்களம் காரணி ஆரணி, போந்தவாக்கம், புதுவாயல், துறைநல்லூர், வைரவன்குப்பம், மேல்முதலம்பேடு, கீழ்முதலம்பேடு, பெருவாயல், ஏலியம்பேடு, பெரியகாவனம், சின்ன காவனம், பொன்னேரி, லட்சுமிபுரம், கம்மவார் பாளையம்.

    பெரும்பேடு, வஞ்சி வாக்கம், வெள்ளோடை ஆலாடு, கொளத்தூர், குமாரசிறுலப்பாக்கம், மனோபுரம், அத்தமணஞ்சேரி, வேலூர், அ.ரெட்டிபாளையம், காட்டூர், தத்தமஞ்சி, கடப்பாக்கம், சிறுபழவேற்காடு. போலாச்சியம்மன்குளம், ஆண்டார்மடம், தாங்கல் பெரும்புலம் மற்றும் ஆரணி ஆற்றின் இருபுறம் உள்ள தாழ்வான பகுதிகளில் இருப்பவர்கள் பாதுகாப்பாக இருக்கும் படி கேட்டுக்கொள்ளப்படுகிறது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

    பலத்த மழையினால் பொன்னேரி ஆரணி ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடிய நிலையில் லட்சுமிபுரம் அணைக்கட்டு நிரம்பி 3250 கன அடி தண்ணீர் வெளியேறி மனோபுரம் ரெட்டிபாளையம் ஆண்டார் மடம் வழியாக பழவேற்காடு கடலில் கலக்கிறது. பொன்னேரி சுற்றுவட்டார பகுதியில் உள்ள 55 ஏரிகளில் 32 ஏரிகள் கொள்ளளவு நிரம்பி உள்ளன.

    மீஞ்சூர் அடுத்த நாளூர் பத்மாவதி நகர்,இந்துஜா நகர், கலைஞர் நகர அத்திப்பட்டு புது நகர், நந்தியம்பாக்கம், பொன்னேரி அடுத்த தடபெரும்பாக்கம், ஏ.ஏ.எம். நகர், பொன்னேரி நகராட்சிக்கு உட்பட்ட தாய்மான் செட்டி தெருவில் 50-க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் மழை நீர் புகுந்து பொருட்கள் சேதம் அடைந்துள்ளன.

    பொன்னேரி-பழவேற் காடு சாலை, திருவாயர்பாடி ெரயில்வே சுரங்க பாதையில் மழைநீர் தேங்கி வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளர் பாலச்சந்தர் இளநிலை பொறியாளர் பரந்தாமன் மற்றும் ஊழியர்கள் 2 ராட்சதமின்மோட்டார்கள் மூலம் மழை நீரை வெளியேற்றி வருகின்றனர்.இதனை அமைச்சர் ஆவடி நாசர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    பொன்னேரி தொகுதிக்குட்பட்ட பழவேற்காடுமற்றும் சுற்று வட்டாரப் பகுதியில் மழையினால் பாதிக்கப்பட்டவர்கள் திருப்பாலைவனம், அத்திப்பட்டு, பள்ளி பாளையம், வைரங்குப்பம் ஆலாடு பாதுகாப்பு மையத்தில் 507 பேர் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.

    இவர்களுக்கு தேவையான உணவு, பிரட் பிஸ்கட் போர்வை, உள்ளிட்டவைகளை அமைச்சர் சா.மு. நாசர், எம்.எல்.ஏக்கள் துரை சந்திரசேகர், டி.ஜே.எஸ்.கோவிந்தராஜன், சேர்மன் ரவி, பழவேற்காடு அலவி, ஆகியோர் வழங்கினர். அப்போது வட்டாட்சியர் மதிவாணன் மற்றும் வருவாய்த்துறை ஊழியர்கள் பலர் உடன் இருந்தனர்.

    சோழவரம் அடுத்த ஆத்தூரில் 2 குடிசை வீடுகள் சின்னம்பேடு, சோம்பட்டு பகுதியில் தலா ஒரு வீடு இடிந்து விழுந்தன. மீஞ்சூர் சுற்றுவட்டார பகுதியில் 10-க்கும் மேற்பட்ட மரங்கள், 5 மின்கம்பங்கள் சாய்ந்தன பழவேற்காடு கடற்கரையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ள 30-க்கும் மேற்பட்ட படகுகள் என்ஜின்கள், வலைகள், சேதமடைந்து உள்ளன. இன்று காலையும் பொன்னேரி பகுதியில் தொடர்ந்து மழை பெய்தது.

    • திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 336 ஏரிகளில் 39 ஏரிகள் முழுமையாக நிரம்பின.
    • 57 ஏரிகள் 75 சதவீதமும், 88 ஏரிகள் 51 சதவீதமும், 31 ஏரிகள் 26 சதவீதமும் நிரம்பி உள்ளன.

    சென்னையை மிரட்டிய ஃபெஞ்சல் புயல் நள்ளிரவில் மாமல்லபுரம் - புதுச்சேரி இடையே கரையைக் கடந்தது. இதனால் மழை படிப்படியாக குறைந்து வருகிறது.

    இந்நிலையில் ஃபெஞ்சல் புயல் காரணமாக திருவள்ளூர் மாவட்டத்தில் 39 ஏரிகள் முழு கொள்ளளவை எட்டி உள்ளது. புயல் எதிரொலியாக கனமழை பெய்த நிலையில் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 336 ஏரிகளில் 39 ஏரிகள் முழுமையாக நிரம்பின.

    திருவள்ளூர் மாவட்டத்தில் 57 ஏரிகள் 75 சதவீதமும், 88 ஏரிகள் 51 சதவீதமும், 31 ஏரிகள் 26 சதவீதமும் நிரம்பி உள்ளன.

    • நீண்ட தூரம் சென்று ரேசன் பொருட்கள் வாங்க வர சிரமம் அடைந்து வருகின்றனர்.
    • புதிதாக கட்டப்பட்ட ரேசன் கடை எந்த பயனும் இல்லாமல் மூடி கிடக்கிறது.

    பொன்னேரி:

    பொன்னேரி நகராட்சிக்கு உட்பட்ட 19-வார்டு பகுதியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள். இப்பகுதியில் உள்ளவர்கள் சுமார் 2 கிலோமீட்டர் தூரம் சென்று பொன்னேரி-தச்சூர் சாலையில் கவுரி தியேட்டர் மற்றும் பழைய டி.எஸ்.பி. அலுவலகம் அருகே உள்ள ரேசன் கடைகளில் பொருட்கள் வாங்கி வருகின்றனர். இதனால் வயதானவர்கள் நீண்ட தூரம் சென்று ரேசன் பொருட்கள் வாங்க வர சிரமம் அடைந்து வருகின்றனர்.

    இப்பகுதி மக்களின் வசதிக்காக அருகே கும்மங்கலம் கால்நடை மருத்துவமனைக்கு பின்புறம் கடந்த 2015-16 ம் ஆண்டு ரூ. 7.41 லட்சம் மதிப்பில் புதிதாக ரேசன் கடை கட்டப்பட்டது. இந்த கடை திறக்கப்பட்ட ஓரிரு நாளிலேயே ரேசன் பொருட்கள் ஏற்றி வரும் வாகனங்கள் வருவதில் சிரமம் இருப்பதாக கூறி ரேசன் கடை மூடப்பட்டதாக தெரிகிறது. இதன் பின்னர் 19-வது வார்டு பகுதி மக்கள் 2 கிலோ மீட்டர் தூரம் சென்று ரேசன் பொருட்களை வாங்கி வரும் நிலை நீடித்து வருகிறது.

    கடந்த 9 ஆண்டுகளாக பயன்படாமல் மூடிகிடக்கும் ரேசன் கடையை திறந்தால் அப்பகுதி மக்களுக்கு பயன் உள்ளதாக இருக்கும் என்ற பொது மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    இது தொடர்பாக அப்பகுதி மக்கள் சுமார் 50-க்கும் மேற்பட்டோர் விடுதலை சிறுத்தை கட்சி மாவட்ட செயலாளர் நீலமேகம் தலைமையில் ரேசன் கடையை திறக்க கோரி துணை வட்டாட்சியர் கனக வள்ளியிடம் கடந்த சில நாட்களுக்கு முன்பு மனு அளித்தனர். ஆனால் இதுவரை ரேசன் கடையை திறக்க அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை என்று அப்பகுதி மக்கள் ஆதங்கத்துடன் தெரிவித்தனர்.

    இதுகுறித்து அப்பகுதி பெண்கள் கூறும்போது, கும்மங்கலம் கால்நடை மருத்துவமனைக்கு பின்புறம் புதிதாக கட்டப்பட்ட ரேசன் கடை எந்த பயனும் இல்லாமல் மூடி கிடக்கிறது.

    இதனால் நாங்கள் சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் சென்று ரேசன் பொருட்கள் வாங்கி வருகிறோம். இதனால் வீடுகளில் தனியாக வசிக்கும் வயதானவர்கள் கடும் சிரமம் அடைந்து வருகிறார்கள். அவர்கள் ரேசன் பொருட்களை கொண்டு வர அடுத்தவர்களை நம்பி இருக்கும் நிலை உள்ளது. எனவே மாவட்ட நிர்வாகம் கடந்த 9 ஆண்டுகளாக மூடி கிடக்கும் ரேசன் கடையை பயன்பாட்டுக்கு கொண்டு வர உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

    • பல்வேறு சிக்கல்களால் சாலை விரிவாக்கம் மெதுவாக நடந்து வருகிறது.
    • 24 வீடுகளுக்கு இழப்பீடுகள் வழங்கப்பட்டு விரைந்து வீடுகளை இடித்து அகற்றும் பணி நடைபெறும்.

    பொன்னேரி:

    பொன்னேரியை அடுத்த புதுவாயல்-பழவேற்காடு இணைப்பு சாலை 4 வழி சாலையாக விரிவாக்கம் செய்யப்படுகிறது. ரூ.45 கோடி மதிப்பில் 4. 2 கிலோமீட்டர் தூரம் இந்த பணி நடக்கிறது. சாலை விரிவாக்கப்பணி கடந்த 2022-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. நிலம் கையகப்படுத்துவதில் ஏற்பட்ட பல்வேறு சிக்கல்களால் சாலை விரிவாக்கம் மெதுவாக நடந்து வருகிறது.

    இந்த நிலையில் சாலை விரிவாக்கத்தால் 52 வீடுகள், ஒரு கோவில் பாதிக்கப்படுவதாக நிலம் கையகப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து பெரிய காவனம், சின்ன காவனம் பகுதி பொதுமக்கள் பல கட்ட போராட்டங்கள் நடத்தினர்.

    இதற்கிடையே நெடுஞ்சாலைத்துறையினர் சாலை விரிவாக்கப்பணிக்கு எடுக்கப்படும் வீடுகளுக்கு ஏற்கனவே நோட்டீஸ் மற்றும் இழப்பீடு வழங்கி இருந்தனர். இதைத்தொடர்ந்து சின்னக்காவனம் பகுதியில் உள்ள 28 வீடுகள் பொன்னேரி உதவி கோட்ட பொறியாளர் பாலச்சந்தர் இளநிலை பொறியாளர் பரந்தாமன் முன்னிலையில் ஜே.சி.பி.எந்திரம் மூலம் இடித்து அகற்றப்பட்டது. மீதமுள்ள 24 வீடுகளுக்கு இழப்பீடுகள் வழங்கப்பட்டு விரைந்து வீடுகளை இடித்து அகற்றும் பணி நடைபெறும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • குட்கா, புகையிலை பொருட்களை பதுக்கி விற்று வந்தது தெரிய வந்தது.
    • கைதானவர்களிடம் இருந்து ஏராளமான புகையிலை, குட்கா பறிமுதல் செய்யப்பட்டது.

    ஸ்ரீபெரும்புதூர்:

    ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் தடை செய்யப்பட்ட குட்கா, புகையிலை பொருட்கள் விற்கப்படுவதாக ஸ்ரீபெரும்புதூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து இன்ஸ்பெக்டர் தர்மலிங்கம் மற்றும் போலீசார் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த மண்ணூர் பகுதியில் உள்ள கடைகளில் அதிரடி சோதனை நடத்தினர். மண்ணூர் கிராமம் மாதா கோவில் தெரு பகுதியில் கடையில் சோதனை செய்தபோது அங்கு குட்கா, புகையிலை பொருட்களை பதுக்கி விற்று வந்தது தெரிய வந்தது.

    இதையடுத்து வியாபாரி மணியை போலீசார் கைது செய்தனர். இதேபோல் மண்ணூர் பகுதியில் தீபா என்பவரது வீட்டில் போலீசார் நடத்திய சோதனையில் ஏராளமான புகையிலை, குட்கா பதுக்கி வைத்திருப்பது தெரிந்தது. தீபாவை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். கைதானவர்களிடம் இருந்து ஏராளமான புகையிலை, குட்கா பறிமுதல் செய்யப்பட்டது.

    • பழவேற்காடு மீன் மார்க்கெட்டில் கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும்.
    • தொழிற்சங்க நிர்வாகிகள் குமார், ரமேஷ், கதிர்வேல், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    பொன்னேரி:

    திருவள்ளூர் மாவட்ட மீன் பிடி தொழிற்சங்கத்தின் சி.ஐ.டி.யூ. சார்பில் பழவேற்காடு பஜாரில் மாவட்ட செயலாளர் நித்யானந்தம் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மீனவர்களின் வாழ்வாதாரங்களை அழித்து குடியிருப்பு பகுதி மீனவர்களை அப்புறபடுத்தும் மத்திய அரசு திட்டங்களை கைவிட கோரியும் விண்வெளிக்கு ராக்கெட் ஏவும்போது மீன் பிடிக்க தடை செய்யப்படும் நாளுக்கு ரூ.1000 வழங்க வேண்டும் பழவேற்காடு மீன் மார்க்கெட்டில் கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும். இலவச வீட்டு மனை பட்டா வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் தொழிற்சங்க நிர்வாகிகள் குமார், விஜயன், விநாயகமூர்த்தி, ரமேஷ், கதிர்வேல், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    ×