என் மலர்tooltip icon

    திருப்பூர்

    • தொழிலாளர்கள் தங்களுக்கு ஒரு வாரத்திற்கு தேவையான காய்கறி மற்றும் மளிகைப் பொருட்களை வாங்கி செல்வார்கள்.
    • தீபாவளி பண்டிகை வருவதால், நாளை (சனிக்கிழமை) வார சந்தை செயல்படும்.

    வெள்ளகோவில்:

    வெள்ளகோவிலில் வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை நகராட்சியின் வாரச்சந்தை செயல்பட்டு வருகிறது. இந்த வார சந்தைக்கு வெள்ளகோவில் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து விவசாயிகள் தங்களது விளைநிலங்களில் பயிரிடப்பட்ட காய்கறி மற்றும் தானிய வகைகளை விற்பனைக்கு கொண்டு வருவது வழக்கம்.

    இதனை அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் மற்றும் நூல் மில்களில் தங்கி வேலை செய்து வரும் வட மாநில தொழிலாளர்கள் தங்களுக்கு ஒரு வாரத்திற்கு தேவையான காய்கறி மற்றும் மளிகைப் பொருட்களை வாங்கி செல்வார்கள். இந்நிலையில் வருகிற 12-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) தீபாவளி பண்டிகை வருவதால், நாளை (சனிக்கிழமை) வார சந்தை செயல்படும்.

    ஆகையால் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டுமாய் வெள்ளகோவில் நகராட்சி நிர்வாகத்தின் சார்பில் நகர மன்ற தலைவர் மு.கனியரசி, ஆணையாளர் எஸ்.வெங்கடேஸ்வரன் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

    • கோவையில் இருந்து தென் மாவட்டங்களுக்கும், பழநி, கொடைக்கானல் உள்ளிட்ட இடங்களுக்கு செல்வதற்கும், உடுமலை பிரதான வழித்தடமாக உள்ளது.
    • திருமூர்த்தி மலையில் மும்மூர்த்திகளின் தலமும் அமைந்துள்ளதால் பண்டிகை நாட்களில் இங்கு கூட்டம் அதிகரித்து காணப்படும்.

    உடுமலை:

    கோவையில் இருந்து தென் மாவட்டங்களுக்கும், பழநி, கொடைக்கானல் உள்ளிட்ட இடங்களுக்கு செல்வதற்கும், உடுமலை பிரதான வழித்தடமாக உள்ளது. இதனால் விடுமுறை நாட்களில், கோவை, பொள்ளாச்சி, திருப்பூர், திண்டுக்கல் உள்பட வெளி மாவட்டங்களில் இருந்தும், பாலக்காடு போன்ற பிற மாநிலத்தை சேர்ந்த பகுதிகளில் இருந்தும், இங்குள்ள சுற்றுலா பகுதிகளுக்கு பயணிகள் அதிக அளவில் வருகை தருவது வழக்கம்.

    திருமூர்த்தி மலையில் மும்மூர்த்திகளின் தலமும் அமைந்துள்ளதால் பண்டிகை நாட்களில் இங்கு கூட்டம் அதிகரித்து காணப்படும். தற்போது வழக்கமாக ஒரு மணி நேரத்துக்கு ஒரு பஸ் என்ற விகிதத்தில், பஸ்கள் இயக்கப்படுகிறது. சிறப்பு நாட்களில் கூடுதல் பஸ்கள் இல்லாததால், வெளியூரிலிருந்து வரும் பயணிகள் சரியான பஸ் நேரமும் தெரியாமல், நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலைமைக்கு ஆளாகின்றனர். எனவே, தீபாவளி பண்டிகை விடுமுறையையொட்டி உடுமலை சுற்றுப்புற பகுதிகளில் உள்ள சுற்றுலா இடங்களுக்கு, கூடுதல் சிறப்பு பஸ்கள் இயக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • இச்சத்து குறைபாடு காரணமாக மகசூல் பல மடங்கு குறைவதுடன் விளைபொருட்களின் தரமும் குறைந்து காணப்படும்.
    • மானிய விலையில் விவசாயிகள் இச்சத்து கலவையினை பயன்படுத்தி சாகுபடி தொழில்நுட்பங்களை கடைபிடித்து, கூடுதல் மகசூல் பெறலாம்.

    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்டத்தில் நெல் 10 ஆயிரத்து 557 ஹெக்டேர், தானியம் 56 ஆயிரத்து 932 ஹெக்டேர், பயிறு வகைகள் 18 ஆயிரத்து 792 ஹெக்டேர், எண்ணை வித்துக்கள் 8 ஆயிரத்து 252 ஹெக்டேர், பருத்தி ஆயிரத்து 135 ஹெக்டேர், கரும்பு 2 ஆயிரத்து 960 ஹெக்டேர் என சராசரியாக 98 ஆயிரத்து 628 ஹெக்டேர் பரப்பளவில் வேளாண் பயிர்கள் சாகுபடி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    பயிர்கள் வளர்ச்சி மற்றும் மகசூல் அதிகரிக்கும் நுண்ணூட்டங்கள் மானிய விலையில் வழங்கப்படுகிறது.இதுகுறித்து, மாவட்ட தேசிய உணவு பாதுகாப்பு மற்றும் ஊட்டச்சத்து திட்ட ஆலோசகர் அரசப்பன் கூறியதாவது:- திருப்பூர் மாவட்டத்தில் பெருவாரியான பகுதிகள் கரிசல் மண் பூமியாகவும், ஓடைக்கல் பூமியாகவும் இருப்பதனால் சுண்ணாம்புச்சத்து மிகுந்து காணப்படுகிறது. இதனால் பயிர்களுக்கு அளிக்கப்படும் உரங்கள் முழுமையாக கிடைக்காமல் மஞ்சள் கலந்த பழுப்பு நிறத்துடனும், ஊதா நிற இலைகளுடனும், வளர்ச்சி குன்றி குறைபாட்டுடன் காணப்படுகின்றன. இச்சத்து குறைபாடு காரணமாக மகசூல் பல மடங்கு குறைவதுடன் விளைபொருட்களின் தரமும் குறைந்து காணப்படும்.

    நுண்ணூட்டங்கள் பயிருக்கு குறைந்தளவே தேவைப்பட்டாலும், பயிரின் வளர்ச்சியில் பெரும் பங்கு வகிக்கிறது. நுண்ணூட்டக்கலவை என்பது கால்சியம், மாங்னீசியம், போரான், துத்தநாகம், இரும்பு, மாலிப்டீனியம் போன்ற நுண்ணூட்டங்களை உள்ளடக்கிய கலவை ஆகும்.விதைப்பு செய்தவுடன் பயிறுக்கு தேவையான அளவு உரிய இக்கலவையினை இடும் பொழுது, நுண்ணூட்ட சத்து குறைபாடுகள் நீங்கி பயிரின் மகசூல் பலமடங்கு அதிகரிப்பதுடன் விளைபொருட்களின் தரமும் அதிகரிக்கிறது.

    இந்நுண்ணூட்டங்கள் பயிரின் வகைக்கு ஏற்ப பயிறு நுண்ணூட்ட கலவை, சிறுதானிய நுண்ணூட்டம் வகைப்படுத்தப்படுகின்றன. பயிறு வகை பயிர்களுக்கு ஹெக்டேருக்கு 5 கிலோ வீதம் 20 கிலோ மணலுடன், நிலக்கடலை மற்றும் தானியப்பயிர்களுக்கு, அதற்குரிய நுண்ணூட்டச்சத்து ஹெக்டேருக்கு 12.5 கிலோ வீதம் 50 கிலோ மணலுடன் கலந்து, மேலாக தூவ வேண்டும்.

    நுண்ணூட்ட கலவையை இடும்போது மணலுடனோ அல்லது குப்பையுடனோ கலந்து சீராக இடவேண்டும். இத்தகைய கூடுதல் மகசூல் தரும் நுண்ணூட்டங்கள், தேசிய உணவு பாதுகாப்பு மற்றும் ஊட்டச்சத்து திட்டங்கள், பயிறுவகை மற்றும் ஊட்டச்சத்து மிக்க தானியங்கள் திட்டத்தின் கீழ் 50 சதவீதம் அல்லது ஹெக்டேருக்கு, ரூ.500 மானியத்தில் மாவட்டத்திலுள்ள அனைத்து வட்டாரங்களிலும் உள்ள வேளாண்மை விரிவாக்க மையங்கள் வாயிலாக வினியோகம் செய்யப்படுகிறது. மானிய விலையில் விவசாயிகள் இச்சத்து கலவையினை பயன்படுத்தி சாகுபடி தொழில்நுட்பங்களை கடைபிடித்து, கூடுதல் மகசூல் பெறலாம். மேலும் கூடுதல் விபரங்களுக்கு வட்டார வேளாண் உதவி இயக்குனர்கள், வேளாண் அலுவலர்களை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அவர் தெரிவித்தார். 

    • திருமணம் போன்ற விஷேச நாட்களில் இந்த எண்ணிக்கை 60 ஆயிரத்தை தாண்டும்.
    • பஸ் நிலையம், கடைவீதி போன்ற இடங்களில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    பல்லடம்:

    திருப்பூர் மாவட்டம் பல்லடம் நகரமானது கோவை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. இந்தநிலையில் கோவை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையுடன், திருப்பூர், பொள்ளாச்சி, உடுமலை, அவிநாசி, தாராபுரம் ஆகிய மாநில நெடுஞ்சாலைகள் இணைவதால், பல்லடத்தில் வாகன போக்குவரத்து பல மடங்கு அதிகரித்து வருகிறது.

    கோவை - திருச்சி தேசிய நெடுஞ்சாலை எண் 81- ல் தினமும் சுமார் 40 ஆயிரத்திற்கும் மேலான வாகனங்கள் செல்கின்றது. திருமணம் போன்ற விஷேச நாட்களில் இந்த எண்ணிக்கை 60 ஆயிரத்தை தாண்டும். இந்த நிலையில், நாளை மறுநாள் தீபாவளி பண்டிகை என்பதால், மக்கள் சொந்த ஊருக்கு செல்வதற்காக பயணம் மேற்கொண்டு வருகிறார்கள். இதனால் கார், மோட்டார் சைக்கிள்களின் எண்ணிக்கை, வழக்கத்தை விட பல மடங்கு அதிகரித்து சென்ற வண்ணம் உள்ளது.

    இதனால் கோவை-திருச்சி மெயின் ரோட்டிலும், மங்கலம் ரோட்டிலும், கடும் போக்குவரத்து நெரிசல் நிலவி வருகிறது. போக்குவரத்து நெரிசலை முன்னிட்டு போக்குவரத்து போலீசார் காரணம்பேட்டை நால்ரோடு பகுதியில் இருந்து கனரக வாகனங்கள் மற்றும் சரக்கு வாகனங்களை, காமநாயக்கன்பாளையம் வழியாகவும், மங்கலம் வழியாகவும், செல்ல அறிவுறுத்தி வருகிறார்கள்.

    போக்குவரத்து போலீசார் நெரிசலை கட்டுப்படுத்த தடுப்புகள் வைத்தும், போக்குவரத்தை ஒழுங்குபடுத்தியும் ரோடுகளில் கடுமையான போக்குவரத்து நெரிசலை சமாளித்து வருகிறார்கள். மேலும் பல்லடம் நகரின் முக்கியமான பகுதிகளான பஸ் நிலையம், கடைவீதி போன்ற இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள். 

    • குடிசை பகுதி மற்றும் தீ எளிதில் பற்றி கொள்ளும் அபாயம் உள்ள பகுதிகளில் பட்டாசுகள் வெடிக்கக் கூடாது.
    • கண்டிப்பாக சப்பல் அணித்து பட்டாசு வெடிக்க வேண்டும்.

    வெள்ளகோவில்:

    வெள்ளகோவிலில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தீயணைப்பு துறை சார்பில் பட்டாசு வெடிப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் துண்டு பிரசுரங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இதற்கு தீயணைப்பு நிலை அலுவலர் வேலுச்சாமி தலைமை தாங்கினார். இதில் பட்டாசுகளை வீட்டினுள் வெடிக்க கூடாது.

    குடிசை பகுதி மற்றும் தீ எளிதில் பற்றி கொள்ளும் அபாயம் உள்ள பகுதிகளில் பட்டாசுகள் வெடிக்கக் கூடாது. சிறுவர்கள் பட்டாசு வெடிக்கும்போது பெரியவர்கள், அவர்களை பாதுகாப்பாக உடனிருந்து கவனித்துக் கொள்ள வேண்டும். மேலும் கண்டிப்பாக சப்பல் அணித்து பட்டாசு வெடிக்கவேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்களை வெள்ளகோவில் நகர் பகுதியில் வழங்கி விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

    • வனப்பகுதி அருகே அதிக ஒலி எழுப்பும் பட்டாசுகள் வெடிப்பதால், பறவைகள், வனவிலங்குகள் அதிகளவில் பாதிக்கப்படுகின்றன.
    • வன எல்லையை ஒட்டியுள்ள கிராம பகுதிகள், தனியார் விடுதிகளுக்கும் துண்டு பிரசுரம் வினியோகித்து அறிவுறுத்தப்பட்டு வருகிறது

    உடுமலை:

    நாடு முழுவதும் வருகிற 12-ந்தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்படவுள்ளது. இதற்காக, மக்கள் பலரும், புத்தாடை, பட்டாசு மற்றும் இனிப்புகள் வாங்க ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்நிலையில் ஆனைமலை புலிகள் காப்பகத்தை ஒட்டிய கிராமங்கள், செட்டில்மெண்ட் பகுதிகளில் பட்டாசுகள் வெடிப்பதை தவிர்க்கவும், பல்வேறு விதிமுறை வகுத்து பசுமை தீபாவளி கொண்டாடவும் அறிவுறுத்தப்பட்டு வருகின்றனர்.

    இதுகுறித்து ஆனைமலை புலிகள் காப்பக கள இயக்குனர் ராமசுப்பிரமணியம் கூறியதாவது:-

    வனப்பகுதி அருகே அதிக ஒலி எழுப்பும் பட்டாசுகள் வெடிப்பதால், பறவைகள், வனவிலங்குகள் அதிகளவில் பாதிக்கப்படுகின்றன.குறிப்பாக அரியவகை பறவைகள், தனது வாழ்விடங்களை விட்டு மனித நடமாட்டம் இல்லாத பகுதிகளை தேடி சென்று விடும் அபாயம் உள்ளது. எனவே, வனம் ஒட்டிய கிராமங்களில் வசிக்கும் மக்கள், அதிக ஒலி எழுப்பும் பட்டாசுகளை வெடிக்கக் கூடாது. முடிந்த வரை பட்டாசு இன்றி பசுமை தீபாவளியை கொண்டாட கிராம மக்கள் முன்வர வேண்டும். வனப்பகுதியில் வசிக்கும் மலைவாழ் மக்கள், பட்டாசு வெடிப்பதில்லை. இருப்பினும், அந்தந்த செட்டில்மெண்ட் பகுதிகளிலும், விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. இதேபோல வன எல்லையை ஒட்டியுள்ள கிராம பகுதிகள், தனியார் விடுதிகளுக்கும் துண்டு பிரசுரம் வினியோகித்து அறிவுறுத்தப்பட்டு வருகிறது. தீபாவளி கொண்டாட்டத்துக்கு வருவோரை வனத்துக்குள் அத்துமீறி அழைத்து செல்வதையும், தடை செய்யப்பட்ட பகுதிகளில் பட்டாசு வெடிப்பதையும் தவிர்க்க வேண்டும் என விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. தீபாவளியை முன்னிட்டு, வனக்குழுவினர் ரோந்து பணியில் ஈடுபடுவர். விதிமுறைகளை மீறுவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

    • 2024 நாடாளுமன்ற தேர்தலில் 50 ஆயிரம் வாக்குகள் கூடுதலாக பெறுவதற்கு பணிகள் மேற்கொள்ள வேண்டும்.
    • திருப்பூர் மாநகர், மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் வி.ஜெயராமன் தலைமை தாங்கினார்.

    வெள்ளகோவில்:

    வெள்ளகோவில் ஒன்றியத்திற்கு உட்பட்ட ஊராட்சிகளின் பூத் கமிட்டி இளைஞர், இளம் பெண்கள் பாசறை மகளிர் குழு அமைப்பு உள்ளிட்ட பணிகள் குறித்து ஆலோசனை கூட்டம் வேலம்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட முத்தூரிலும், மேட்டுப்பாளையம், வள்ளியரச்சல் ஊராட்சிகளுக்கான கூட்டம் புஷ்பகிரியிலும், வேலப்பநாயக்கன்வலசு ஊராட்சிக்கான கூட்டம் வெள்ளகோவிலிலும் நடந்தது. இதற்கு திருப்பூர் மாநகர், மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் வி.ஜெயராமன் தலைமை தாங்கினார்.

    வெள்ளகோவில் அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர் எஸ்.என்.முத்துக்குமார் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் திருப்பூர் மாநகர் மாவட்ட கழக செயலாளர் வி.ஜெயராமன் பேசியதாவது:- காங்கயம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் நடைபெற இருக்கும் 2024 நாடாளுமன்ற தேர்தலில் 50 ஆயிரம் வாக்குகள் கூடுதலாக பெறுவதற்கு பணிகள் மேற்கொள்ள வேண்டும். அனைத்தும் மதத்தினருக்கும் பதவிகள் கொடுத்து அவர்களை முன்னிலைப்படுத்தி தொகுதிகளை பலப்படுத்த வேண்டும்.

    உங்களால் தான் கழகம் வெற்றி பெற வேண்டும். ஆகையால் வருகின்ற நாடாளுமன்ற தேர்தலுக்காக சிறப்பான முறையில் பணியாற்றி வெற்றியை தேடி தர வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் பேசினார். கூட்டத்தில் மேலிடப்பார்வையாளரும், கழக அமைப்பு செயலாளருமான எஸ். தாமோதரன் கலந்து கொண்டு ஆய்வு பணிகள் மேற்கொண்டார்.

    இதில் மாவட்ட கழக பொருளாளர் கே.ஜி.கிஷோர்குமார், மாவட்ட அம்மா பேரவை இணை செயலாளர்கள் ஏ.எஸ்.முருகவேல், கே.ராஜலிங்கம், காங்கயம் ஒன்றிய செயலாளர் என்.எஸ். என்.நடராஜ், வெள்ளகோவில் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் ஆர்.வெங்கடேச சுதர்சன், ஒன்றிய கழக பொருளாளர் வி.பி. சந்திரமோகன், நகர செயலாளர்கள் காங்கயம். வெங்கு என்கின்ற ஜீ.மணிமாறன், முத்தூர். ஜி.முத்துக்குமார், வெள்ளகோவில் டீலக்ஸ் ஆர். மணி, முன்னாள் நகர் மன்ற தலைவர் வி.கந்தசாமி, ஒன்றிய இளைஞரணி தலைவர் கே.கண்ணுசாமி, இளைஞரணி செயலாளர் சி.கண்ணுசாமி, உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • ஆறுமுத்தாம்பாளையம் ஊராட்சியில் சுமார் 8 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர்.
    • குறிப்பிட்ட நேரத்திற்கு பள்ளி மற்றும் வேலைக்குச் செல்ல முடியாமல் பொதுமக்கள் திணறி வருகிறார்கள்.

    பல்லடம்:

    திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள ஆறுமுத்தாம்பாளையம் ஊராட்சியில் சுமார் 8 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இங்குள்ள ஆறுமுத்தாம்பாளையம் - சேடபாளையம் ரோடு சுமார் 16 அடி அகல ரோடாக உள்ளது. இந்த நிலையில், ஆறுமுத்தம்பாளையத்தில் இருந்து. தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் அந்த ரோட்டில் சென்ற வண்ணம் உள்ளது.

    குறுகலான ரோடாக உள்ளதால் ஒரு வாகனம் மட்டும் செல்ல முடிகிறது. எனவே எதிரே வரும் வாகனம் ஒதுங்கி நின்று வழி விட்ட பின்னர் தான் அடுத்த வாகனம் செல்ல முடிகிறது. இதனால் குறிப்பிட்ட நேரத்திற்கு பள்ளி மற்றும் வேலைக்குச் செல்ல முடியாமல் பொதுமக்கள் திணறி வருகிறார்கள்.

    எனவே குறுகலான அந்த ரோட்டை விரிவாக்கம் செய்து அகலப்படுத்தி இரண்டு வாகனங்கள் செல்லும் வகையில் அமைக்க வேண்டும் என ஆறுமுத்தாம்பாளையம் ஊர்ப்பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • கடந்த 10 நாட்களாக மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் சாரல் மலையும், அவ்வப்போது பலத்த மழையும் பெய்து வருகிறது
    • திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்த ஆனைமலை புலிகள் காப்பக பகுதியில் உடுமலை மற்றும் அமராவதி வனச்சரகங்கள் உள்ளன.

    உடுமலை:

    திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்த ஆனைமலை புலிகள் காப்பக பகுதியில் உடுமலை மற்றும் அமராவதி வனச்சரகங்கள் உள்ளன. இங்கு ஈட்டி, சந்தனம், வெள்வெல், வாகை உள்ளிட்ட பல்வேறு வகையான மரங்கள் வளர்ந்துள்ளன. அது தவிர வனச்சரகங்களை வாழ்விடமாக கொண்டு யானை, புலி, சிறுத்தை, காட்டெருமை, கடமான் உள்ளிட்ட ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகின்றன. அவற்றுக்குக்கான உணவு மற்றும் தண்ணீர் தேவையை மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பூர்த்தி செய்து தருகின்றன. ஆனால் கோடைகாலத்தில் வனப்பகுதியில் உற்பத்தியாகின்ற ஆறுகளில் நீர்வரத்து குறைந்து விடுவதுடன் அங்கு வளர்ந்துள்ள மரங்கள் புற்கள் செடிகள் உள்ளிட்டவை காய்ந்து விடுகின்றன. இதனால் வன விலங்குகளுக்கு உணவு மற்றும் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டு விடுகிறது. அதைத்தொடர்ந்து வனவிலங்குகள் வனப்பகுதியை விட்டு வெளியேறி அடிவாரப்பகுதிக்கு வந்து விடுகின்றன.

    அந்த வகையில் இந்த ஆண்டு கோடை காலத்தின் போது வனப்பகுதியில் கடுமையான வறட்சி ஏற்பட்டது. வழக்கமாக பெய்யும் தென்மேற்கு பருவமழையும் கைவிட்டு விட்டது. இதையடுத்து வனவிலங்குகள் உணவு மற்றும் தண்ணீருக்காக அமராவதி அணைக்கு வந்த வண்ணம் இருந்தன. இந்தநிலையில் கடந்த 10 நாட்களாக மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் சாரல் மலையும், அவ்வப்போது பலத்த மழையும் பெய்து வருகிறது. இதன் காரணமாக வனப்பகுதியில் உற்பத்தியாகின்ற ஆறுகள் ஓடைகளில் நீர்வரத்து ஏற்பட்டுள்ளது. அத்துடன் வெப்பத்தின் தாக்கம் குறைந்து உள்ளதுடன் இதமான சீதோஷ்ண நிலை நிலவி வருகிறது. மேலும் வனப்பகுதியும் பசுமைக்கு மாறி வருகிறது. இதனால் வன விலங்குகளுக்கான உணவு மற்றும் தண்ணீர் தேவை பூர்த்தி அடைந்துள்ளது.

    • ஒன்றிய ஆணையா் ரமேஷ், வட்டார வளா்ச்சி அலுவலா் விஜயகுமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
    • திருப்பூர் மாவட்டம் அவிநாசி ஊராட்சி ஒன்றிய குழுக் கூட்டம் நடைபெற்றது.

    அவினாசி:

    திருப்பூர் மாவட்டம் அவிநாசி ஊராட்சி ஒன்றிய குழுக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஒன்றிய குழு தலைவா் ஜெகதீசன் தலைமை தாங்கினார். ஒன்றிய ஆணையா் ரமேஷ், வட்டார வளா்ச்சி அலுவலா் விஜயகுமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். கூட்டத்தில் கலந்து கொண்ட உறுப்பினா்கள் விவாதம் வருமாறு:-

    முத்துசாமி (சிபிஎம்):- சிஐடியூ., தொழிற்சங்க முறையீட்டால் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள சம்பளத்தை உள்ளாட்சியில் பணிபுரியும் டேங்க் ஆபரேட்டா்கள், தூய்மைப் பணியாளா்களுக்கு வழங்க தீா்மானம் நிறைவேற்ற வேண்டும்.

    சேதுமாதவன் (திமுக):- தேவம்பாளையம் மயானத்துக்கு சுற்றுச்சுவா் அமைக்க வேண்டும். குளத்துப்பாளையம் டீச்சா்ஸ் காலனி பகுதியில் கான்கிரீட் சாலை அமைக்க வேண்டும்.

    காா்த்திகேயன்(திமுக):- பழங்கரை ஊராட்சி ராஜா நகரில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் குடிநீா் பற்றாக்குறையை தீா்க்க மேல்நிலை நீா்த்தேக்க தொட்டி அமைக்க வேண்டும். நியாயவிலை கடைகளில் பார பட்சமின்றி அனைத்து குடும்ப அட்டைதாரா்களுக்கும் பொருள்கள் வழங்க வேண்டும்.

    அய்யாவு (அதிமுக):- குப்பாண்டம்பாளையத்தில் மேல்நிலை நீா்தேக்கத்தொட்டி அமைக்க வேண்டும். அய்யம்பாளையம் மயானத்துக்கு சாலை அமைக்க வேண்டும். வடுகபாளையம், குப்பாண்டம்பாளையம், அய்யம்பாளையம், துலுக்கமுத்தூா் ஆகிய ஊராட்சிகளில் பழுதடைந்துள்ள தாா் சாலைகளை சீரமைக்க வேண்டும். இவ்வாறு உறுப்பினர்கள் கோரிக்கை வைத்தனர். பின்னர் ஒன்றிய குழு தலைவா் ஜெகதீசன் கூறும்போது, உறுப்பினா்களின் கோரிக்கைகள் அனைத்தும் பரிசீலனை செய்து விரைவில் நிறைவேற்றப்படும் என்று தெரிவித்தார்.

    • விழாவுக்கு மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் தலைமை தாங்கினார்.
    • உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் உள்பட பலர் திரளாக கலந்து கொண்டனர்.

    திருப்பூர்: 

    திருப்பூர் மாநகரில் உள்ள கலைஞர் கருணாநிதி பஸ் நிலையத்தில் இருந்து தமிழக போக்குவரத்து கழகம் சார்பில் கூடுதல் பஸ் வசதி ேசவை தொடக்க விழா நடந்தது. விழாவுக்கு மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் தலைமை தாங்கினார். மாநகராட்சி மேயர் தினேஷ்குமார், மாநகராட்சி ஆணையாளர் பவன்குமார் ஜி.கிரியப்பனவர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் கலந்து கொண்டு புதிய வழித்தட பஸ் நீடிப்பு சேவையை கொடியசைத்து தொடங்கி வைத்தும், கால்நடை மருந்தகக் கட்டடத்தை திறந்து வைத்தும் பேசினார்.

    அப்போது அவர் கூறியதாவது:- திருப்பூர் மாநகராட்சி, கலைஞர் மு.கருணாநிதி பேருந்து நிலையத்திலிருந்து தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகம் சார்பில் கழுவேரிபாளையம் ஆதிதிராவிடர் குடியிருப்பு வரை நீடிக்கப்பட்ட காலை 2 நடைகள் மற்றும் மாலை 2 நடைகள் செல்லும் பேருந்து எண் 22/1, ஊத்துக்குளி ஆர்.எஸ், என்.பி.எஸ் நெருப்பெரிச்சல், வாவிபாளையம் திருக்குமரன் நகர், கணக்கம்பாளையம் வழியாக பெருமாநல்லூர் வரை காலை 1 நடை மற்றும் மாலை 1 நடை செல்லும் பேருந்து எண் 10, திருக்குமரன் நகர் நீடிப்பு வாவிபாளையம் வரை செல்லும் காலை 2 நடைகள் மற்றும் மாலை 2 நடைகள் செல்லும் பேருந்து எண் 43, கூலிபாளையம் நால்ரோடு, வாவிபாளையம், நெருப்பெரிச்சல் மற்றும் என்பிஎஸ் வழியாக சென்று மீண்டும் கலைஞர் மு.கருணாநிதி பேருந்து நிலையம் வந்தடையும் காலை 3 நடைகள் மற்றும் மாலை 3 நடைகள் செல்லும் பேருந்து எண் 102/103 ஆகிய எண்கள் கொண்ட பேருந்து வழித்தட நீடிப்பு சேவை தொடங்கி வைக்கப்பட்டுள்ளது என்றார்.

    அதனைத்தொடர்ந்து திருப்பூர் ஊராட்சி ஒன்றியம், இடுவாய் ஊராட்சியில் பொதுப்பணித்துறையின் சார்பில் நபார்டு திட்ட நிதியின் கீழ் ரூ.40 லட்சம் மதிப்பீட்டில் கால்நடை மருந்தக கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. இதனை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் திறந்து வைத்தார். இடுவாய் கால்நடை மருந்தக கட்டிடம் தரைத்தளமானது 155.71 சதுர மீட்டர் பரப்பளவு ஆகும். கால்நடை மருந்தக கட்டிடத்தில் பணியாளர் அறை, மருந்தக இருப்பு அறை, கழிப்பறை, பதிவறை, மருத்துவர் அறை போன்ற வசதிகளை கொண்டுள்ளது. இந்நிகழ்ச்சிகளில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் லட்சுமணன், துணை மேயர் பாலசுப்பிரமணியன், திருப்பூர் மாநகராட்சி 4-ம் மண்டத்தலைவர் இல.பத்மநாபன், மண்டல இணை இயக்குநர் (கால்நடை பராமரிப்புத்துறை) திருக்குமரன், செயற்பொறியளர் (பொதுப்பணித்துறை) தியாகராஜன், பொது மேலாளர் (தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகம்)மாரியப்பன், உதவி மேலாளர்கள் ராஜேந்திரன், சரவணன், கிளை மேலாளர்கள் குணசேகரன், ராமநாதன், கார்த்திகேயன், உதவி செயற்பொறியாளர் முத்துசரவணன், உதவி பொறியாளர்சத்யராஜ், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் உள்பட பலர் திரளாக கலந்து கொண்டனர்.

    • மேற்குத்தொடச்சி மலைப்பகுதியில் செப்டம்பரில் ஓரளவு மழைப்பொழிவு இருந்ததால் அணைக்கு 400 முதல் 500 கன அடி வரை நீா்வரத்து இருந்தது.
    • தற்போது வடகிழக்குப் பருவமழை தொடங்கி கடந்த சில நாட்களாக மேற்குத்தொடா்ச்சி மலைப்பகுதியின் நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் மழை பெய்து வருகிறது.

    உடுமலை:

    திருப்பூா் மாவட்டம் உடுமலையை அடுத்துள்ள அமராவதி அணையின் மூலம் திருப்பூா் மற்றும் கரூா் மாவட்டங்களில் உள்ள சுமாா் 55 ஆயிரம் ஏக்கா் பழைய, புதிய ஆயக்கட்டு பாசன நிலங்கள் பயன் பெற்று வருகின்றன. மேலும் நூற்றுக்கணக்கான கரையோர கிராமங்களுக்கு இந்த அணை குடிநீா் ஆதாரமாகவும் விளங்கி வருகிறது.

    இந்நிலையில் இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை எதிா்பாா்த்த அளவு பெய்யாமல் குறைந்து போனது. இதனால் அணையில் உள்ள நீா் இருப்பை பொறுத்து கரூா் வரையில் நூற்றுக்கணக்கான கிராமங்களுக்கு குடிநீா் தேவைகளுக்காகவும், பழைய, புதிய ஆயக்கட்டுப் பகுதிகளில் உள்ள நிலைப் பயிா்களைக் காப்பாற்றவும் ஜூன் 29-ந் தேதி அணையில் இருந்து உயிா் தண்ணீா் திறந்துவிடப்பட்டது.

    இதையடுத்து திருப்பூா் மாவட்டத்தில் உள்ள புதிய ஆயக்கட்டு பாசனப் பகுதிகளுக்கு நிலைப் பயிா்களைக் காப்பாற்றும் பொருட்டு சிறப்பு நனைப்பிற்கும், குடிநீா்த் தேவைகளுக்காகவும் மீண்டும் அணையை திறக்க தமிழக அரசு உத்தரவிட்டது. இதன்படி ஆகஸ்ட் 8-ந்தேதி அமராவதி அணையில் இருந்து பிரதான கால்வாயில் தண்ணீா் திறந்துவிடப்பட்டது. அப்போது அணையின் நீா்மட்டம் 65 அடியாக இருந்தது. இதைத்தொடா்ந்து அணையின் நீா்மட்டம் குறைந்து போனது.

    இந்நிலையில் மேற்குத்தொடச்சி மலைப்பகுதியில் செப்டம்பரில் ஓரளவு மழைப்பொழிவு இருந்ததால் அணைக்கு 400 முதல் 500 கன அடி வரை நீா்வரத்து இருந்தது. இதனால் அணையின் நீா்மட்டம் படிப்படியாக உயா்ந்து 60 அடியை தாண்டியது.

    இதைத்தொடா்ந்து பயிா்களை காப்பாற்றும் பொருட்டும், குடிநீா் தேவையை பூா்த்தி செய்யும் பொருட்டும் அக்டோபா் 13ந்தேதி அமராவதி அணையில் இருந்து மீண்டும் தண்ணீா் திறந்துவிடப்பட்டது. இதனால் அணையில் நீா் இருப்பு படிப்படியாக குறைந்தது.

    தற்போது வடகிழக்குப் பருவமழை தொடங்கி கடந்த சில நாட்களாக மேற்குத்தொடா்ச்சி மலைப்பகுதியின் நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் மழை பெய்து வருகிறது. இதனால் 90 அடி உயரமுள்ள அணையின் நீா்மட்டம் இன்று காலை நிலவரப்படி 70 அடியை எட்டியது. பருவமழை தீவிரம் அடைந்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.

    மேற்குத்தொடா்ச்சி மலைப் பகுதியில் தொடா்ந்து கனமழை பெய்து வருவதால் திருப்பூா் மாவட்டம், உடுமலையை அடுத்துள்ள சுற்றுலாத்தலமான திருமூா்த்தி மலையில் உள்ள பஞ்சலிங்கம் அருவியில் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

    ×