என் மலர்
திருப்பூர்
- முதலிபாளையம் கிராமத்தில் இருந்து புளியம்பட்டி வழி செல்லும் சாலையில் தனியார் தென்னை நார் சாய தொழிற்சாலை அமைக்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
- பெருமாள்பாளையம் ஊராட்சி பொதுமக்கள் மற்றும் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில் வருகிற 13-ந் தேதி காலை 10 மணி அளவில் ஊதியூர் பஸ் நிறுத்தத்தில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.
காங்கயம்:
திருப்பூர் மாவட்டம் காங்கயம் தாலுகா முதலிபாளையம் கிராமத்தில் இருந்து புளியம்பட்டி வழி செல்லும் சாலையில் தனியார் தென்னை நார் சாய தொழிற்சாலை அமைக்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த தொழிற்சாலையை நிறுவினால் கிராம மக்களின் வாழ்வாதாரம், விவசாயம், நிலம், நிலத்தடி நீர் மற்றும் கால்நடை என அனைத்திற்கும் பாதிப்பு உண்டாகும். மேலும் வேளாண்மை செய்யும் நிலங்கள் மிகவும் மோசமடையும்.
இப்பகுதியில் ஊராட்சி மன்றத்திடம் கட்டிட அனுமதி பெறாமல் சட்டவிரோதமாக கட்டுமான பணிகளை தொடர்ந்து வரும் இந்த தனியார் நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் இல்லாவிடில் நிலத்தடி நீருக்கும் சுற்றுச்சூழலுக்கும் உயிர்வேளிகளுக்கும் விவசாயத்திற்கும் கடுமையான பாதிப்பு ஏற்படும் எனவும் மக்கள் அஞ்சுகிறார்கள்.
இந்த கட்டுமானத்தை அகற்றக் கோரியும் பெருமாள்பாளையம் ஊராட்சி பொதுமக்கள் மற்றும் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில் வருகிற 13-ந் தேதி காலை 10 மணி அளவில் ஊதியூர் பஸ் நிறுத்தத்தில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. இந்த ஆர்ப்பாட்டத்தில் அனைத்து விவசாயிகள், தொழிலாளர்கள், அரசியல் கட்சியினரும், மற்ற அமைப்பினரும் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
இந்த பிரச்சினை ஏற்கனவே கிராம சபை கூட்டத்தில் பேசப்பட்டு ஒருமனதாக தொழிற்சாலை அமைய கூடாது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதே போல் பச்சாபாளையம் பகுதியிலும் தார் தொழிற்சாலை அமைக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதை தடுக்க வேண்டும் என பச்சாம்பாளையம் பகுதி கிராம சபைக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்த நிலையில் தொடர்ச்சியாக ஊராட்சி அனுமதியின்றி நிறுவப்படும் தொழிற்சாலைகளை நிறுத்த வேண்டும். இதற்கு மாவட்ட கலெக்டரும், மாவட்ட நிர்வாகமும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
- ஆதரவற்ற முதியோர் காப்பகத்தில் உள்ளவர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது
- மாவட்ட தலைவர் கருப்புசாமி தலைமையில் இந்நிகழ்ச்சி நடைப்பெற்றது
உடுமலை :
திருப்பூர் மாவட்டம் உடுமலை அகில இந்திய உழைப்பாளர்கள் மற்றும் ஓட்டுநர் நல சங்கம், ஆக்டிங் டிரைவர்சஸ் மற்றும் நகர சுற்றுலா வாகன உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுனர்கள் சார்பில் தீபாவளியை முன்னிட்டு ஆதரவற்ற முதியோர் காப்பகத்தில் உள்ளவர்களுக்கு போர்வை மற்றும் தலையணை , இனிப்புகள் , அன்னதானம் வழங்கப்பட்டது.
அகில இந்திய உழைப்பாளர்கள் ஓட்டுநர் நல சங்கம் தலைவர் சுரேஷ்குமார் ,மாநிலத் தலைவர் தாமோதரன் ,மாநில செயலாளர் பாலசுப்பிரமணியம் அறிவுறுத்தல் படி மாவட்ட தலைவர் கருப்புசாமி தலைமையில் இந்நிகழ்ச்சி நடைப்பெற்றது. மாவட்ட செயலாளர் முத்துக்குமார், உடுமலை நகரத்தலைவர் முருகவேல் ,உடுமலை நகர செயலாளர் காஜா மைதீன், உடுமலை நகர பொருளாளர் விக்னேஷ் உட்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
- கடைவீதிகளுக்கு சென்று ஷாப்பிங் செய்துவிட்டு நேற்று மாலை சொந்த ஊர்களுக்கு கிளம்பினர்
- பஸ் மற்றும் ரெயில் நிலையத்தில் பயணிகள் கூட்டம் அலைமோதியது.
திருப்பூர்
தீபாவளி பண்டிகை நாளை (ஞாயிற்றுக்கிழமை) கொண்டாடப்படுகிறது. திருப்பூரில் தங்கி வேலை பார்க்கும் தொழிலாளர்களுக்கு தீபாவளி போனஸ் வழங்கப்பட்டது. அவர்கள் கடைவீதிகளுக்கு சென்று ஷாப்பிங் செய்துவிட்டு நேற்று மாலை சொந்த ஊர்களுக்கு கிளம்பினர். இதனால் திருப்பூர் பஸ் மற்றும் ரெயில் நிலையத்தில் பயணிகள் கூட்டம் அலைமோதியது.
திருப்பூர் கோவில்வழி பஸ் நிலையத்தில் தென் மாவட்டங்களுக்கும், திருப்பூர் புதிய பஸ் நிலையத்தில் இருந்து சென்னை, திருச்சி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளுக்கும் 450 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டது. கூட்ட ெநரிசலை கட்டுப்படுத்த பயணிகள் வரிசையாக செல்ல தடுப்புகள் அமைக்கப்பட்டிருந்தது. பஸ் நிலையங்களில் பஸ்கள் அதிக அளவில் நிறுத்தப்பட்டு பயணிகளின் தேவைக்கேற்ப பஸ்கள் இயக்கப்பட்டது.
அதுபோல் பஸ் நிலையத்தில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். பஸ் நிலையம் அருகே சாலையில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை போக்குவரத்து போலீசார் சரி செய்தனர்.
அதுபோல் வெளி மாநிலங்களுக்கு செல்லும் தொழிலாளர்கள் திருப்பூர் ரெயில் நிலையத்தில் குவிந்தனர். கூட்ட நெரிசலில் அசம்பாவிதங்கள் ஏதும் ஏற்படாமல் தடுக்க ரெயில் நிலையத்தில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். எளிதில் தீப்பற்றக்கூடிய வெடி உள்ளிட்ட பொருட்களை பயணிகள் பயணத்தின் போது எடுத்து செல்கிறார்களா என்பதை போலீசார் சோதனை செய்து அவற்றை பறிமுதல் செய்தனர். இன்று காலை முதலும் திருப்பூரில் இருந்து ஏராளமான தொழிலாளர்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு திரண்டு சென்றனர்.
திருப்பூரில் இருந்து சென்னை மற்றும் தென் மாநிலங்களுக்கு செல்லும் ரெயில்களில் கூட்டம் நிரம்பி வழிந்தது. இருப்பதற்கு இடம் கிடைக்காமல் நின்று கொண்டே பயணம் செய்தனர். அதேபோல் கார் மற்றும் மோட்டார் சைக்கிள்களிலும் குடும்பமாக தங்களது சொந்த ஊர்களுக்கு தீபாவளி பண்டிகை கொண்டாட செல்வதால் திருப்பூர் மாநகர் முழுவதும் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
- பட்டதாரி ஆசிரியர் 2,222 காலிப்பணியிடங்களுக்கான தேர்வு அறிவிப்பு கடந்த மாதம் 25-ந் தேதி வெளியிடப்பட்டது.
- மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் பல்வேறு போட்டி தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடைபெற்று வருகிறது.
திருப்பூர்:
திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் அமைந்துள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் பல்வேறு போட்டித்தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடைபெற்று வருகிறது. தற்போது ஆசிரியர் தேர்வு வாரியத்தின் 2023-ம் ஆண்டு திட்ட நிரலின்படி, பட்டதாரி ஆசிரியர் 2,222 காலிப்பணியிடங்களுக்கான தேர்வு அறிவிப்பு கடந்த மாதம் 25-ந் தேதி வெளியிடப்பட்டது. இந்த தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் வருகிற 30-ந் தேதியாகும்.
இந்த தேர்வுக்கான இலவச இணையவழி பயிற்சி வகுப்பு திருப்பூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையம் மூலமாக வருகிற 27-ந் தேதி தொடங்கப்பட உள்ளது. இந்த போட்டித்தேர்வுக்கு தயாராகும் இளைஞர்கள் இந்த இலவசப்பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டு பயிற்சி பெற தங்களது சுய விவரத்தை https://forms.gle/gsZtU6Quse6iG71XA என்ற லிங்க்கில் முன்பதிவு செய்யலாம். கூடுதல் விவரங்களுக்கு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தை 0421 2999152, 94990 55944 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
இந்த தகவலை திருப்பூர் மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் தெரிவித்துள்ளார்.
- விழாவுக்கு கலெக்டர் கிறிஸ்துராஜ் தலைமை தாங்கினார்.
- தாசில்தார் ஜெய்சிங்சிவக்குமார், பல்லடம் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் தேன்மொழி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
பல்லடம்:
பல்லடம் தனியார் திருமணமண்டபத்தில் கலைஞர் உரிமை தொகை 2-ம் கட்டமாக தேர்வு செய்யப்பட்ட மகளிருக்கு உரிமை தொகை வழங்கும் விழா ஏற்கனவே உரிமை தொகை பெற்றவர்களுக்கு ஏ.டி.எம். கார்டு வழங்கும் விழா பல்லடத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடந்தது. விழாவுக்கு கலெக்டர் கிறிஸ்துராஜ் தலைமை தாங்கினார். திருப்பூர் மாநகராட்சி மேயர் தினேஷ்குமார், ஆணையாளர் பவன் குமார் கிரியப்பனவர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.விழாவில் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி ஆகியோர் கலந்து ெகாண்டு 1,239 மகளிருக்கு ஏ.டி.எம். கார்டுகளை வழங்கினர்.
விழாவில் அமைச்சர் மு.பெ.சாமிநாதன் பேசியதாவது:-
கலைஞர் மகளிர் உரிமைத்திட்டத்தின் கீழ் 604 மகளிருக்கு மாதம் ரூ.1,000 வழங்கியதற்கான ஏ.டி.எம். கார்டு மற்றும் 635 மகளிருக்கு முதல்-அமைச்சரின் வாழ்த்து மடல்கள் வழங்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் மூலம் வழங்கப்படும் மாதம் ரூ.1000 அரசு கொடுத்திருக்கிறது என்று அலட்சியப்படுத்தாமல் இந்த தொகையை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். உங்களுடைய குடும்பத்தினுடைய நன்மைக்கும் அதன் மூலமாக இந்த நாட்டினுடைய நன்மைக்கும் பயன்பட வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்
விழாவில் திருப்பூர் மாநகராட்சி மேயர் தினேஷ்குமார், மாவட்ட வருவாய் அதிகாரி் ஜெய்பீம், ஆர்.டி.ஓ. (பொறுப்பு) ராம்குமார், திருப்பூர் மாநகராட்சி 4-ம் மண்டலத்தலைவர் இல.பத்மநாபன், மாநகராட்சி பவன்குமார் கிரியப்பனவர், பல்லடம் நகர்மன்றத்தலைவர் கவிதாமணி ராஜேந்திரகுமார், அறங்காவலர் குழுத்தலைவர் கீர்த்தி சுப்பரமணியம், மாவட்ட வழங்கல் அலுவலர் ரவிச்சந்திரன், தாசில்தார் ஜெய்சிங்சிவக்குமார், பல்லடம் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் தேன்மொழி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
- இன்று (சனிக்கிழமை) முதல் 14-ந் தேதி வரை கோவை-திண்டுக்கல் இடையே முன்பதிவு வசதியில்லாத சிறப்பு ரெயில் இயக்கப்பட உள்ளது.
- ஒட்டன்சத்திரத்துக்கு 12.04 மணிக்கும், அக்கரைப்பட்டிக்கு 12.20 மணிக்கும், திண்டுக்கல்லுக்கு 1 மணிக்கும் சென்று சேரும்.
திருப்பூர்:
தீபாவளி பண்டிகையையொட்டி பயணிகளின் வசதிக்காக இன்று (சனிக்கிழமை) முதல் 14-ந் தேதி வரை கோவை-திண்டுக்கல் இடையே முன்பதிவு வசதியில்லாத சிறப்பு ரெயில் இயக்கப்பட உள்ளது. இந்த ரெயில் கோவையில் காலை 9.20 மணிக்கு புறப்பட்டு போத்தனூருக்கு 9.31 மணிக்கும், கிணத்துக்கடவுக்கு 9.52 மணிக்கும், பொள்ளாச்சிக்கு 10.13 மணிக்கும், கோமங்கலத்துக்கு 10.46 மணிக்கும், உடுமலைக்கு 11 மணிக்கும், மைவாடி ரோடுக்கு 11.09 மணிக்கும், மடத்துக்குளத்துக்கு 11.14 மணிக்கும், புஷ்பத்தூருக்கு 11.22 மணிக்கும், பழனிக்கு 11.38 மணிக்கும், சத்தரப்பட்டிக்கு 11.55 மணிக்கும், ஒட்டன்சத்திரத்துக்கு 12.04 மணிக்கும், அக்கரைப்பட்டிக்கு 12.20 மணிக்கும், திண்டுக்கல்லுக்கு 1 மணிக்கும் சென்று சேரும்.
இதுபோல் திண்டுக்கல்லில் மதியம் 2 மணிக்கு புறப்பட்டு அக்கரைப்பட்டிக்கு 2.11 மணிக்கும், ஒட்டன்சத்திரத்துக்கு 2.27 மணிக்கும், சத்தரப்பட்டிக்கு 2.36 மணிக்கும், பழனிக்கு 2.55 மணிக்கும், புஷ்பத்தூருக்கு 3.11 மணிக்கும், மடத்துக்குளத்துக்கு 3.18 மணிக்கும், மைவாடி ரோடுக்கு 3.24 மணிக்கும், உடுமலைக்கு 3.33 மணிக்கும், கோமங்கலத்துக்கு 3.47 மணிக்கும், பொள்ளாச்சிக்கு 4.18 மணிக்கும், கிணத்துக்கடவுக்கு 4.43 மணிக்கும், போத்தனூருக்கு மாலை 5.08 மணிக்கும், கோவைக்கு 5.30 மணிக்கும் சென்று சேரும். இந்த ரெயிலில் 10 பொதுப்பெட்டிகள், 2 லக்கேஜ் பெட்டிகள் இணைக்கப்படுகிறது.
இந்த தகவலை சேலம் கோட்ட ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.
- தீபாவளி பண்டிகை நாளை (ஞாயிற்றுக்கிழமை) கொண்டாடப்படும் நிலையில் திருப்பூர் பூ மார்க்கெட்டில் பூக்களின் விலை திடீரென அதிகரித்தது.
- சம்பங்கி ரூ.40, பட்டு பூ ரூ.50, செவ்வந்தி ரூ.30 முதல் ரூ.40, அரளி ரூ.150 முதல் ரூ.200, ரோஜா பூ ரூ.120 ஆகிய விலைகளில் விற்பனை செய்யப்பட்டன.
திருப்பூர்:
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திருப்பூரில் நேற்று பூக்களின் விலை கிடு, கிடுவென உயர்ந்தது. ஒரு கிலோ மல்லிகை பூ ரூ.1000-க்கு விற்பனை செய்யப்பட்டது.
தீபாவளி பண்டிகை நாளை (ஞாயிற்றுக்கிழமை) கொண்டாடப்படும் நிலையில் திருப்பூர் பூ மார்க்கெட்டில் பூக்களின் விலை திடீரென அதிகரித்தது. கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு ஒரு கிலோ மல்லிகை பூ ரூ.320 -க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் ரூ.1000-ம் ஆக அதிகரித்தது. இதேபோல் ரூ.240-க்கு விற்பனை செய்யப்பட்ட முல்லைப் பூ ரூ.600-க்கு விற்பனை செய்யப்பட்டது. ஜாதி மல்லி ரூ.600-க் கு விற்பனை செய்யப்பட்டது. இதைத் தவிர பிற பூக்களின் விலை வழக்கம்போல் காணப்பட்டது.
சம்பங்கி ரூ.40, பட்டு பூ ரூ.50, செவ்வந்தி ரூ.30 முதல் ரூ.40, அரளி ரூ.150 முதல் ரூ.200, ரோஜா பூ ரூ.120 ஆகிய விலைகளில் விற்பனை செய்யப்பட்டன.இவ்வாறு மல்லி முல்லை உள்ளிட்ட பூக்களின் விலை அதிகரித்த போதிலும் பண்டிகையை கருதி பொதுமக்களும் வியாபாரிகளும் பூக்களை அதிக அளவில் வாங்கி சென்றனர்.இதனால் பூ மார்க்கெட்டில் பூக்களின் விற்பனை மும்முரமாக நடந்தது. மழை காரணமாக பூக்களின் வரத்து குறைந்ததும் விலை உயர்வுக்கு ஒரு காரணம் என வியாபாரிகள் தெரிவித்தனர்.
- திருவண்ணாமலை அண்ணாமலையாா் கோவில் பஞ்சபூதங்களின் அக்னித் தலமாக விளங்குகிறது.
- ஒவ்வொரு பெளா்ணமி தினத்திலும் இந்தக் கோயிலில் லட்சக்கணக்கான பக்தா்கள் கிரிவலம் சென்று அண்ணாமலையாரை தரிசனம் செய்து வருகின்றனா்.
திருப்பூர்:
திருவண்ணாமலை அண்ணாமலையாா் கோவிலின் கிழக்கு கோபுரத்தை மறைத்து வணிக வளாகம் கட்டக் கூடாது என இந்து முன்னணி வலியுறுத்தியுள்ளது.
இது குறித்து இந்து முன்னணி மாநிலத் தலைவா் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:- திருவண்ணாமலை அண்ணாமலையாா் கோவில் பஞ்சபூதங்களின் அக்னித் தலமாக விளங்குகிறது. இந்தக் கோவிலின் ராஜகோபுரமாக உள்ள கிழக்கு கோபுரம் 217 அடி உயரம் கொண்டதாகும். ஒவ்வொரு பெளா்ணமி தினத்திலும் இந்தக் கோயிலில் லட்சக்கணக்கான பக்தா்கள் கிரிவலம் சென்று அண்ணாமலையாரை தரிசனம் செய்து வருகின்றனா்.
அதேவேளையில், கூட்ட நெரிசலால் அண்ணாமலையாரை தரிசனம் செய்ய முடியவில்லை என்றால் கிழக்கு கோபுரத்தை தரிசனம் செய்கின்றனா்.இந்நிலையில், கோவிலின் கிழக்கு கோபுரத்தை 30 அடி உயரத்துக்கு மறைத்து வணிக வளாகம் கட்டினால் பக்தா்களுக்கு இடையூறு ஏற்படும். ஆகவே, பக்தா்களின் வசதிக்காகவும், கோயிலின் புனிதத்தைப் பாதுகாக்கும் வகையிலும் கோபுரத்தை மறைத்து வணிக வளாகம் கட்டும் நடவடிக்கையை இந்து சமய அறநிலையத் துறை கைவிட வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- திருப்பூர் காந்திநகர் ஏவிபி., டிரஸ்ட் பப்ளிக் சீனியர் செகண்டரி பள்ளியில் மாசில்லா தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்டது.
- முன்னதாக பள்ளியின் முதல்வர் பிரமோதினி வரவேற்றார் .
திருப்பூர்:
திருப்பூர் காந்திநகர் ஏவிபி., டிரஸ்ட் பப்ளிக் சீனியர் செகண்டரி பள்ளியில் மாசில்லா தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்டது .
ஏ.வி.பி. கல்வி குழுமங்களின் தாளாளர் கார்த்திகேயன் அருள்ஜோதி தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் மாணவர்கள் லட்சுமி பூஜை வழிபாடு செய்து கார்த்திகை தீபங்களை ஏற்றி ஒளிபரவச் செய்தும் வண்ணமலர்களால் பள்ளியை அலங்கரித்தும் தீபத்திருநாளை கொண்டாடி மகிழ்ந்தனர்.
மேலும் மாணவர்கள் தீபத்திருநாளை கொண்டாடும் முறைகளை விளக்கும் நாடகங்களையும் நடனங்களையும் நிகழ்த்தி மகிழ்வித்தனர். முன்னதாக பள்ளியின் முதல்வர் பிரமோதினி வரவேற்றார் . பள்ளியின் ஒருங்கிணைப்பாளர் மோகனா நன்றி கூறினார். கலைநிகழ்ச்சிகளை ஒருங்கிணைப்பாளர் நித்யா ஒருங்கிணைத்தார்.
- நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியர் பழனிச்சாமி தலைமை தாங்கினார்.
- மாணவ -மாணவிகளின் விதவிதமான ஓவிய படைப்புகள் காட்சிப்படுத்தப்பட்டது.
உடுமலை:
திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள குடிமங்கலம் அரசு மேல்நிலைப்பள்ளியில் உள்ள சித்திர கூடத்தில் ஓவிய கண்காட்சி நடந்தது. இதில் மாணவ -மாணவிகளின் விதவிதமான ஓவிய படைப்புகள் காட்சிப்படுத்தப்பட்டது. நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியர் பழனிச்சாமி தலைமை தாங்கினார். உதவி தலைமை ஆசிரியர் ஜோதிமணி வரவேற்று பேசினார்.
இதில் சிறப்பு விருந்தினராக திருப்பூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கீதா கலந்து கொண்டு மாணவ- மாணவிகளின் ஓவிய படைப்புகளை பார்வையிட்டு வாழ்த்துக்கள் தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில் பள்ளியின் அனைத்து ஆசிரியர்களும் கலந்து கொண்டனர். முடிவில் உயர்நிலை உதவி தலைமை ஆசிரியர் சக்திவேல் ராஜா நன்றி கூறினார். இதற்கான ஏற்பாடுகளை ஓவிய ஆசிரியர் தியாகராஜன் செய்து இருந்தார்.
- போனஸ் வாங்கிய தொழிலாளர்கள் ஆடை உள்ளிட்ட பொருட்களை வாங்கிக்கொண்டு சொந்த ஊர்களுக்கு புறப்பட்டு சென்ற வண்ணம் உள்ளனர்.
- திருப்பூர் கடை வீதிகளில் பொதுமக்கள், பனியன் தொழிலாளர்களின் கூட்டம் அலைமோதுகிறது.
திருப்பூர்:
தீபாவளி பண்டிகைையயொட்டி பனியன் தொழில் நகரான திருப்பூரில் பெரும்பாலான நிறுவனங்களில் போனஸ் வழங்கப்பட்டு உள்ளது. போனஸ் வாங்கிய தொழிலாளர்கள் ஆடை உள்ளிட்ட பொருட்களை வாங்கிக்கொண்டு சொந்த ஊர்களுக்கு புறப்பட்டு சென்ற வண்ணம் உள்ளனர். இதற்காக நேற்றிரவு முதல் திருப்பூரில் இருந்து 450 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது.
மேலும் சில தொழிலாளர்கள் இன்று இரவு முதல் செல்கின்றனர். அவர்கள் தங்களுக்கு தேவையான பொருட்களை திருப்பூரில் உள்ள ஜவுளிக்கடைகள், ஸ்வீட் கடைகளில் வாங்கி வருகின்றனர். இதனால் திருப்பூர் கடை வீதிகளில் பொதுமக்கள், பனியன் தொழிலாளர்களின் கூட்டம் அலைமோதுகிறது. இதன் காரணமாக திருப்பூர் மாநகரின் முக்கிய சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக குமரன் சாலையில் முக்கிய ஜவுளிக்கடைகள், ஜூவல்லரிகள், அரசு அலுவலகங்கள், வங்கிகள் அதிகம் உள்ளன. இதன் காரணமாக குமரன் சாலை போக்குவரத்து நெரிசலால் சிக்கி திணறியது.
கடைகளுக்கு வந்த இருசக்கர வாகன ஓட்டிகள் சாலையோரம் வாகனங்களை நிறுத்தியதால் போக்குவரத்து ஸ்தம்பித்தது. இதை தவிர்க்கும் வகையில் பாதசாரிகள் நடந்து செல்வதற்காக சாலையோரம் தடுப்புகள் அமைக்கப்பட்டு நடந்து செல்ல வழி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இருப்பினும் குமரன் சாலையில் வாகனங்கள் அணிவகுத்து ஊர்ந்து செல்கின்றன. போக்குவரத்து போலீசார் பாதுகாப்பு பணியை மேற்கொண்டுள்ளனர்.
தீபாவளி பண்டிகையையொட்டி தென்மாவட்ட பஸ்கள் கோவில்வழி பஸ் நிலையத்தில் இருந்து இயக்கப்படுகிறது. சிறப்பு பஸ்களில் பெரும்பாலானவை இங்கிருந்து இயக்கப்படுவதால் அதற்கேற்ப பஸ்களை நிறுத்த இடவசதி செய்யப்பட்டுள்ளது. பஸ் நிலையத்தின் மேற்கு பகுதியில் மாநகராட்சியின் உரக்கிடங்கு இருந்த பகுதியை சுத்தம் செய்து அங்கு பஸ்களை நிறுத்தி எடுத்துச்செல்ல வசதி செய்யப்பட்டுள்ளது.
பஸ்நிலையம் முழுவதும் மின்விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளது. பயணிகள் பஸ்சில் முண்டியடித்து ஏறுவதை தடுக்க கட்டைகளால் தடுப்புகள் அமைக்கப்பட்டு வரிசையில் ஏற வழிவகை செய்யப்பட்டுள்ளது. பயணிகள் அதிக அளவில் வருவார்கள் என்பதால் பஸ் நிலையத்துக்குள் காத்திருப்பதற்காக தற்காலிக கூடாரங்கள் அமைக்கப்பட்டுள்ளது. இதுபோல் புதிய பஸ் நிலையம், மத்திய பஸ் நிலையத்திலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. இதேப்போல் திருப்பூர் ரெயில் நிலையத்தில் நேற்றிரவு மற்றும் இன்று காலை பயணிகள் கூட்டம் அலைமோதியது. முன்பதிவு செய்யாத பெட்டிகளில் பயணிகள் போட்டி போட்டுக்கொண்டு ஏறினர்.
கடைவீதிகளில் கூட்ட நெரிசலை பயன்படுத்தி ஜேப்படி ஆசாமிகள் கைவரிசை காட்டுவார்கள் என்பதால் மப்டியில் குற்றப்பிரிவு போலீசார் பணியமர்த்தப்பட்டுள்ளனர். மாநகரில் 700 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதுதவிர உயர்கோபுரங்கள் அமைத்து போலீசார் கண்காணித்து வருகிறார்கள். இதுபோல் மாவட்டம் முழுவதும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதேபோல ரோந்துப்பணியும் பலப்படுத்தப்பட்டுள்ளது.
மாவட்டம் முழுவதும் 296 தற்காலிக பட்டாசு கடைகள் அமைக்கப்பட்டுள்ளன. பட்டாசு கடைகள் அமைந்துள்ள பகுதியில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதா? என்பது குறித்தும் போலீசார் கண்காணித்து வருகிறார்கள்.
- சுவாமிக்கு அபிஷேகம், தீபாராதனையும், தினசரி ஆன்மீக சொற்பொழிவுகளும் நடைபெற உள்ளது.
- திருக்கல்யாண நிகழ்ச்சி 19-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 9. 45 மணி முதல் 10. 15 மணி வரை நடைபெற உள்ளது.
பல்லடம்:
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள மாதப்பூரில் புகழ் பெற்ற முத்துக்குமாரசாமி மலை கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் கந்த சஷ்டி விழா மிக சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இங்கு பக்தர்கள், விழாவின் தொடக்க நாள் அன்று காப்பு கட்டி விரதத்தை தொடங்குவார்கள்.
அந்த வகையில் இந்த ஆண்டுக்கான கந்த சஷ்டி விழா வருகிற 13-ந்தேதி (திங்கட்கிழமை) மகா கணபதி ஹோமத்துடன் நிகழ்ச்சி தொடங்குகிறது. தொடர்ந்து தினசரி காலை 8.30 மணி முதல் 12 மணி வரையிலும், மாலை 5.30 மணி முதல் 7.30 மணி வரையிலும் யாகசாலை பூஜைகள், சுவாமிக்கு அபிஷேகம், தீபாராதனையும், தினசரி ஆன்மீக சொற்பொழிவுகளும் நடைபெற உள்ளது.
அதனை தொடர்ந்து 18 -ந்தேதி காலை 8.30 மணிக்கு மண்டபார்ச்சனையும், 96 வாசனை திரவியங்கள் கொண்டு சுவாமிக்கு அபிஷேகமும் நடைபெற உள்ளது. மேலும் அன்று காலை கந்த சஷ்டி விழாவும், மாலையில் சூரசம்ஹார விழாவும் நடைபெற உள்ளது. தொடர்ந்து விழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருக்கல்யாணம் 19-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 9. 45 மணி முதல் 10. 15 மணி வரை நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை விழா குழுவினர் செய்து வருகிறார்கள்.






