search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Diwali Textiles - Sweets"

    • போனஸ் வாங்கிய தொழிலாளர்கள் ஆடை உள்ளிட்ட பொருட்களை வாங்கிக்கொண்டு சொந்த ஊர்களுக்கு புறப்பட்டு சென்ற வண்ணம் உள்ளனர்.
    • திருப்பூர் கடை வீதிகளில் பொதுமக்கள், பனியன் தொழிலாளர்களின் கூட்டம் அலைமோதுகிறது.

    திருப்பூர்:

    தீபாவளி பண்டிகைையயொட்டி பனியன் தொழில் நகரான திருப்பூரில் பெரும்பாலான நிறுவனங்களில் போனஸ் வழங்கப்பட்டு உள்ளது. போனஸ் வாங்கிய தொழிலாளர்கள் ஆடை உள்ளிட்ட பொருட்களை வாங்கிக்கொண்டு சொந்த ஊர்களுக்கு புறப்பட்டு சென்ற வண்ணம் உள்ளனர். இதற்காக நேற்றிரவு முதல் திருப்பூரில் இருந்து 450 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது.

    மேலும் சில தொழிலாளர்கள் இன்று இரவு முதல் செல்கின்றனர். அவர்கள் தங்களுக்கு தேவையான பொருட்களை திருப்பூரில் உள்ள ஜவுளிக்கடைகள், ஸ்வீட் கடைகளில் வாங்கி வருகின்றனர். இதனால் திருப்பூர் கடை வீதிகளில் பொதுமக்கள், பனியன் தொழிலாளர்களின் கூட்டம் அலைமோதுகிறது. இதன் காரணமாக திருப்பூர் மாநகரின் முக்கிய சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக குமரன் சாலையில் முக்கிய ஜவுளிக்கடைகள், ஜூவல்லரிகள், அரசு அலுவலகங்கள், வங்கிகள் அதிகம் உள்ளன. இதன் காரணமாக குமரன் சாலை போக்குவரத்து நெரிசலால் சிக்கி திணறியது.

    கடைகளுக்கு வந்த இருசக்கர வாகன ஓட்டிகள் சாலையோரம் வாகனங்களை நிறுத்தியதால் போக்குவரத்து ஸ்தம்பித்தது. இதை தவிர்க்கும் வகையில் பாதசாரிகள் நடந்து செல்வதற்காக சாலையோரம் தடுப்புகள் அமைக்கப்பட்டு நடந்து செல்ல வழி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இருப்பினும் குமரன் சாலையில் வாகனங்கள் அணிவகுத்து ஊர்ந்து செல்கின்றன. போக்குவரத்து போலீசார் பாதுகாப்பு பணியை மேற்கொண்டுள்ளனர்.

    தீபாவளி பண்டிகையையொட்டி தென்மாவட்ட பஸ்கள் கோவில்வழி பஸ் நிலையத்தில் இருந்து இயக்கப்படுகிறது. சிறப்பு பஸ்களில் பெரும்பாலானவை இங்கிருந்து இயக்கப்படுவதால் அதற்கேற்ப பஸ்களை நிறுத்த இடவசதி செய்யப்பட்டுள்ளது. பஸ் நிலையத்தின் மேற்கு பகுதியில் மாநகராட்சியின் உரக்கிடங்கு இருந்த பகுதியை சுத்தம் செய்து அங்கு பஸ்களை நிறுத்தி எடுத்துச்செல்ல வசதி செய்யப்பட்டுள்ளது.

    பஸ்நிலையம் முழுவதும் மின்விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளது. பயணிகள் பஸ்சில் முண்டியடித்து ஏறுவதை தடுக்க கட்டைகளால் தடுப்புகள் அமைக்கப்பட்டு வரிசையில் ஏற வழிவகை செய்யப்பட்டுள்ளது. பயணிகள் அதிக அளவில் வருவார்கள் என்பதால் பஸ் நிலையத்துக்குள் காத்திருப்பதற்காக தற்காலிக கூடாரங்கள் அமைக்கப்பட்டுள்ளது. இதுபோல் புதிய பஸ் நிலையம், மத்திய பஸ் நிலையத்திலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. இதேப்போல் திருப்பூர் ரெயில் நிலையத்தில் நேற்றிரவு மற்றும் இன்று காலை பயணிகள் கூட்டம் அலைமோதியது. முன்பதிவு செய்யாத பெட்டிகளில் பயணிகள் போட்டி போட்டுக்கொண்டு ஏறினர்.

    கடைவீதிகளில் கூட்ட நெரிசலை பயன்படுத்தி ஜேப்படி ஆசாமிகள் கைவரிசை காட்டுவார்கள் என்பதால் மப்டியில் குற்றப்பிரிவு போலீசார் பணியமர்த்தப்பட்டுள்ளனர். மாநகரில் 700 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதுதவிர உயர்கோபுரங்கள் அமைத்து போலீசார் கண்காணித்து வருகிறார்கள். இதுபோல் மாவட்டம் முழுவதும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதேபோல ரோந்துப்பணியும் பலப்படுத்தப்பட்டுள்ளது.

    மாவட்டம் முழுவதும் 296 தற்காலிக பட்டாசு கடைகள் அமைக்கப்பட்டுள்ளன. பட்டாசு கடைகள் அமைந்துள்ள பகுதியில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதா? என்பது குறித்தும் போலீசார் கண்காணித்து வருகிறார்கள்.

    ×