என் மலர்tooltip icon

    திருப்பூர்

    • செவந்தாம்பாளையம் அருகே சென்ற போது எதிரே வந்த லாரி மோதி தலையில் பலத்த காயமடைந்தார்.
    • கேந்திர வித்யாலயா பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வருகிறார்.

    திருப்பூர்:

    திருப்பூர் ராக்கியாபாளையம் பகுதியை சேர்ந்தவர் ராஜா.இவரது மனைவி அகிலாண்டேஸ்வரி. இவர்களது மகன் ரக்ஷன்பிரணவ் (வயது 17). இவர் சூலூரில் உள்ள கேந்திர வித்யாலயா பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வருகிறார். இவர் பள்ளிக்கு செல்ல தனது வீட்டில் இருந்து இருசக்கர வாகனத்தில் பல்லடம் சாலை வரை சென்று அங்கிருந்து பள்ளி வாகனத்தில் செல்கிறார்.

    இன்று காலை வழக்கம் போல தனது இருசக்கர வாகனத்தில் வீட்டில் இருந்து புறப்பட்ட ரக்ஷன்பிரணவ் செவந்தாம்பாளையம் அருகே சென்ற போது எதிரே வந்த லாரி மோதி தலையில் பலத்த காயமடைந்தார். அருகில் இருந்தவர்கள் மாணவனை மீட்டு திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர்.

    பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். இந்த விபத்து தொடர்பாக வழக்கு பதிவு செய்த நல்லூர் போலீசார் லாரி ஓட்டுநர் புஷ்பராஜை பிடித்து விசாரித்து வருகின்றனர்.

    • பள்ளிவாசலில் தொழுகை முடிந்து வந்த முஸ்லிம்களிடம் கையெழுத்து பெறப்பட்டது.
    • மாநில, மாவட்ட, பகுதி, வட்ட நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.

    திருப்பூர்,

    ம.தி.மு.க. சார்பில் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவியை திரும்ப பெற வலியுறுத்தி தமிழகம் முழுவதும் கையெழுத்து இயக்கம் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் திருப்பூர் பெரியக்கடை வீதி பள்ளிவாசலில் ம.தி.மு.க. 44-வது வட்ட செயலாளர் செந்தில்குமார் தலைமையில், பகுதி செயலாளர் சேகர், மாவட்ட பிரதிநிதி ராகவன், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் லட்டு நாசர், சைபுதீன் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.

    அப்போது பள்ளிவாசலில் தொழுகை முடிந்து வந்த முஸ்லிம்களிடம் கையெழுத்து பெறப்பட்டது. இதில் மாநில, மாவட்ட, பகுதி, வட்ட நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.

    • காவல்துறை பாதுகாப்பு விவரம் தொடர்பாகவும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
    • தற்போது நடைபெற்று முடிந்த மாவட்ட திட்டக்குழு உறுப்பினர் தேர்தல் தொடர்பாகவும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

    திருப்பூர்:

    தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையர் பழனிகுமார் தலைமையில் கலெக்டர் கிறிஸ்துராஜ் முன்னிலையில் திருப்பூர் மாவட்டத்தில் தேர்தல் பணிகள் தொடர்பான கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.

    இதில் திருப்பூர் மாவட்டத்தில் உள்ளாட்சி அமைப்புகளின் காலிப்பணியிட விபரம், மாவட்டத்தில் வாக்குப் பெட்டிகள் இருப்பில் உள்ள விபரம், மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களின் இருப்பு,தேர்தல் பொருட்கள் இருப்பு விபரம், தேர்தல் வழக்குகள் குறித்த விவரம் ஆகியன குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. மேலும் காவல்துறை பாதுகாப்பு விவரம் தொடர்பாகவும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

    காலிப்பணியிடத்தினை பொறுத்த வரையில் ஊரக உள்ளாட்சி அமைப்பில் கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவி 19 எண்ணிக்கை காலியிடம் ஏற்பட்டுள்ளது எனவும், ஊராட்சித் துணைத்தலைவர்பதவி 3 எண்ணிக்கை காலியிடம் ஏற்பட்டுள்ளது எனவும், நகர்ப்புற உள்ளாட்சி அமைப்பில் பேரூராட்சி வார்டு உறுப்பினர் பதவி 2 எண்ணிக்கையும், நகராட்சி வார்டு உறுப்பினர் பதவி 1 எண்ணிக்கை காலியிடம் ஏற்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டது. இந்த காலியிடங்கள் இறப்பு மற்றும் ராஜினாமா ஆகிய காரணங்களினால் ஏற்பட்டுள்ளது. மேலும் தற்போது நடைபெற்று முடிந்த மாவட்ட திட்டக்குழு உறுப்பினர் தேர்தல் தொடர்பாகவும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

    இக்கலந்தாய்வு கூட்டத்தில் மாநகர காவல் துணை ஆணையர் வனிதா, மாவட்ட ஊரக வளர்ச்சிமுகமையின் திட்ட இயக்குநர் லட்சுமணன் மற்றும் மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர்(வளர்ச்சி) வாணி ஆகியோர் கலந்து கொண்டனர். 

    • மாவட்டத்தில் அரசுப்பள்ளிகளை சேர்ந்த 437 பேர் நீட் தேர்வெழுதியதில் 215 பேர் தேர்ச்சி பெற்றனர்.
    • எவ்வாறு விண்ணப்பிப்பது, இணையதளத்தில் அதற்கான வழிமுறைகள் என்னென்ன உள்ளன, எவ்வளவு நாட்களுக்குள், என்னென்ன ஆவணங்களை சமர்ப்பித்து விண்ணப்பிக்க வேண்டும்.

    திருப்பூர்:

    நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள், எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்புக்கு, ஆன்லைனில் விண்ணப்பிக்க மருத்துவக்கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்ககம் அழைப்பு விடுத்துள்ளது.

    திருப்பூர் மாவட்டத்தில் அரசுப்பள்ளிகளை சேர்ந்த 437 பேர் நீட் தேர்வெழுதியதில் 215 பேர் தேர்ச்சி பெற்றனர். அவர்களுக்கு வழிகாட்டுதல் வழங்கும் வகையில் எவ்வாறு ஆன்லைனில் மருத்துவ படிப்புக்கு விண்ணப்பிப்பது என்பது குறித்து விழிப்புணர்வு ஆலோசனைக்கூட்டம், திருப்பூர் ஜெய்வாபாய் பள்ளியில் நடந்தது.

    பள்ளி தலைமை ஆசிரியர் ஸ்டெல்லா தலைமை வகித்தார். எம்.பி.பி.எஸ்., மற்றும் பி.டி.எஸ்., படிப்புக்கு எவ்வாறு விண்ணப்பிப்பது, இணையதளத்தில் அதற்கான வழிமுறைகள் என்னென்ன உள்ளன, எவ்வளவு நாட்களுக்குள், என்னென்ன ஆவணங்களை சமர்ப்பித்து விண்ணப்பிக்க வேண்டும். சுயநிதி மருத்துவம், பல் மருத்துவ கல்லூரிக்கான ஒதுக்கீட்டு இடங்கள் உள்ளிட்ட விபரங்களை மாணவ, மாணவிகளுக்கு மாவட்ட நீட் ஒருங்கிணைப்பாளர் சுரேஷ்குமார் விளக்கினார்.

    இதில் மாவட்டத்தில் நீட் தேர்வெழுதி தேர்ச்சி பெற்ற அரசுப்பள்ளி மாணவிகள் 90 பேர் பங்கேற்றனர். எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., படிப்புக்கு https://tnhealth.tn.gov.in/  https://tnmedicalselection.net/  என்ற இணையதளத்தில் ஜூலை 10-ந் தேதி மாலை 5 மணி வரை விண்ணப்பிக்க அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

    • 300 பயனாளிகளுக்கு தலா 5 விதமாக பழச்சாகுபடி காய்கறிகள் மற்றும் தக்காளி, கத்தரி, மிளகாய் நாற்றுகள் மானியத்தில் பெறலாம்.
    • பெண் விவசாயிகளுக்கு மட்டும் சிறிய அளவிலான காளான் உற்பத்திக் கூடம் அமைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

     மூலனூர்:

    மூலனூர் வட்டாரத்தில் மானியத்தில் விவசாயிகளுக்கு காய்கறி நாற்றுகள் வழங்கப்படுகிறது. எனவே விவசாயிகள் பயன்பெறும்மாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.இது குறித்து மூலனூர் தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் செல்வக்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

    மூன்று சுற்று வட்டார பகுதி விவசாயிகள் தோட்டக்கலை மற்றும் மலை பயிர் துறை திட்டங்களை பயன்பெற https://www.tnhorticulture.tn.gov.in/tnhortnet என்ற இணையதளம் வாயிலாக அல்லது மூலனூர் தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சி திட்டம் 2023-24 கீழ் தேர்வு செய்யப்பட்டுள்ள கிராம ஊராட்சிகள் பெரமியம், எரசனம் பாளையம் பகுதிகளில் உள்ள விவசாயிகள் பயன்பெறலாம். இதில் 300 பயனாளிகளுக்கு தலா 5 விதமாக பழச்சாகுபடி காய்கறிகள் மற்றும் தக்காளி, கத்தரி, மிளகாய் நாற்றுகள் மானியத்தில் பெறலாம்.

    மேலும் பண்ணை குட்டை அமைத்தல், குறைந்த விலையில் வெங்காய சேமிப்பு கிடங்கு அமைத்தல், தேனீ வளர்த்தல், நகரும் காய்கறி வண்டிகள்,குளிரூட்டப்பட்ட வண்டி ஆகியவை குறைந்த விலையில் வழங்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. குளிரூட்டப்பட்ட வண்டி வாங்க மானியம் வழங்கப்படும்.

    பெண் விவசாயிகளுக்கு மட்டும் சிறிய அளவிலான காளான் உற்பத்திக் கூடம் அமைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்கு மொத்த செலவினம் ரூ. 2 லட்சம் ஆகும். இதற்கான 50 சதவீத மானியமாக ரூ.1 லட்சம் வழங்கப்படுகிறது. எனவே காளான் உற்பத்தி கூடம்அமைக்கும் பெண் விவசாயிகள் மட்டும் மூலனூர் வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் அலுவலகத்தில் தொடர்பு கொள்ளலாம். தோட்டக்கலைத்துறை அதிகாரிகளை 9677776214, 9790526223 என்ற எண்களில் ெதாடர்பு கொள்ளலாம்.

    இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

    • தமிழகம் முழுவதும் கடந்த 5 நாட்களாக கல்குவாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
    • திருப்பூர் மாவட்டத்தில் உள்ள ஹாலோ பிளாக் உற்பத்தியாளர்கள் இன்று முதல் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

    திருப்பூர்:

    தமிழகம் முழுவதும் கடந்த 5 நாட்களாக கல்குவாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள ஹாலோ பிளாக் உற்பத்தியாளர்கள் இன்று முதல் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

    இதுகுறித்து ஹாலோ பிளாக் உற்பத்தியாளா்கள் கூறியதாவது:-

    ஹாலோ பிளாக் உற்பத்தியாளா்கள் சங்கத்தினரின் போராட்டத்தால் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள 400 ஹாலோ பிளாக் உற்பத்திக் கூடங்களில் தினசரி ரூ.1.50 கோடி மதிப்பிலான உற்பத்தி இழப்பு ஏற்படும். இந்தத் தொழில் மூலம் நேரடியாகவும், மறைமுகமாகவும் 10 ஆயிரம் போ் வேலைவாய்ப்பு பெற்று வருகின்றனா். உற்பத்தி நிறுத்த அறிவிப்பால் அவா்களுக்கு வேலை இழப்பு ஏற்படும்.

    அதே போல கட்டட கட்டுமானம் மற்றும் கட்டட பராமரிப்புப் பணிக்கு சில்லறை விலையில் கிடைக்கக்கூடிய எம்.சான்ட், பி. சான்ட், சிமென்ட், சிலாப், செங்கல், ஜல்லி போன்றவை கிடைப்பது தடைபடும். போராட்டம் நீடித்தால் கட்டடப் பணிகள் முழுமையாக முடங்கும் அபாயம் ஏற்படும் என்றனா்.

    • போலியான நிறுவனங்களின் பெயர்களில் ரசீதுகள் தயாரித்தது கணினி உள்ளிட்ட இதர ஆதாரங்களின் மூலம் கண்டறியப்பட்டது.
    • அரசுக்கு பெரும் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது என்பதை பட்டயக் கணக்காளர் ஒப்புக்கொண்டார்.

    திருப்பூர்:

    திருப்பூர், விருதுநகர், சென்னை உள்ளிட்ட இடங்களில் உள்ள சில வணிக நிறுவனங்களின் பெயரில் போலி ரசீது தயாரித்து ரூ.83 கோடி ஜி.எஸ்.டி. வரி மோசடி செய்த பட்டய கணக்காளர் கைது செய்யப்பட்டார்.

    இது தொடர்பாக ஜி.எஸ்.டி., நுண்ணறிவுப் பிரிவு அதிகாரிகள் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    திருப்பூர், விருதுநகர், சென்னை உள்ளிட்ட இடங்களில் உள்ள சில வணிக நிறுவனங்களின் பெயரில் எவ்வித வியாபாரமும் செய்யாமல் போலியாக ரசீது தயாரித்து ஜி.எஸ்.டி., வரி ஏய்ப்பு செய்யப்படுவதாக ஜி.எஸ்.டி., அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் கோவை மண்டல ஜி.எஸ்.டி., அலுவலகத்தின் கீழ் இயங்கும் திருச்சி மண்டல ஜி.எஸ்.டி., மையத்தின் நுண்ணறிவுப் பிரிவு அதிகாரிகள் கடந்த 26-ம்தேதி சென்னை, திருப்பூர், விருதுநகர் ஆகிய நகரங்களில் தகவல் கிடைத்த சில இடங்களில் சோதனை நடத்தினர்.

    திருப்பூரை சேர்ந்த ஒரு பட்டயக்கணக்காளரின் அலுவலகத்தில் நடத்தப்பட்ட சோதனையில், அங்கு எவ்வித வியாபாரமும் இல்லாமல் பல போலியான நிறுவனங்களின் பெயர்களில் ரசீதுகள் தயாரித்தது கணினி உள்ளிட்ட இதர ஆதாரங்களின் மூலம் கண்டறியப்பட்டது.

    இதுகுறித்து நடத்தப்பட்ட விசாரணையில் பெறப்பட்ட வாக்குமூலங்களில், அந்த பட்டயக் கணக்காளரும், அவரது அலுவலகத்தில் பணிபுரிந்து வந்தவர்களும் போலி ரசீதுகளை தயாரித்து ரூ.83 கோடி ஜி.எஸ்.டி., வரி மோசடி செய்ததை ஒப்புக்கொண்டனர். இதன் மூலம் அரசுக்கு பெரும் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது என்பதையும் அந்த பட்டயக் கணக்காளர் ஒப்புக்கொண்டார். இந்த விவகாரம் தொடர்பான விசாரணை நடவடிக்கைகள் முக்கிய கட்டத்தில் உள்ளன. இதைத்தொடர்ந்து அந்த பட்டயக்கணக்காளர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

    • 16 வயது சிறுமி கர்ப்பமாக இருப்பதை அறிந்த பெற்றோர், அந்த பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைகளை நாடியுள்ளனர்.
    • மருந்து கடைக்கு சென்று மாத்திரையை வாங்கி சிறுமிக்கு கொடுத்துள்ளனர். முதலில் உரிமையாளர்கள் மாத்திரை கொடுத்ததை ஒப்புக்கொள்ளவில்லை.

    திருப்பூர்:

    திருப்பூர் அருகே உள்ள முத்தணம்பாளையம் தேவநகர் பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமிக்கு கடந்த 20-ந்தேதி வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. இதனால் சிறுமியின் பெற்றோர் அவரை திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

    இந்நிலையில் நேற்று முன்தினம் சிறுமி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக பலியானார். இதனைத்தொடர்ந்து சிறுமிக்கு பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. சிறுமி இறந்ததற்கான காரணம் குறித்து மருத்துவர்கள் அறிக்கையை பார்த்தனர். அப்போது சிறுமி கருக்கலைப்பு மாத்திரை சாப்பிட்டுள்ளது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர்கள் இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    அதன் பேரில் வீரபாண்டி போலீசார் சிறுமியின் பெற்றோரிடம் விசாரணை நடத்தினர். அப்போது சிறுமி கர்ப்பமாக இருந்ததாகவும், இதனால் அவரது வாழ்க்கை வீணாகி விடும் என்பதால் கருவை கலைக்க கோவில்வழி முத்தணம்பாளையம் சாலையில் உள்ள மருந்து கடையில் ரூ.1000க்கு மாத்திரை வாங்கி கொடுத்ததாகவும் திடுக்கிடும் தகவலை தெரிவித்தனர்.

    இதனைத்தொடர்ந்து போலீசார் இதுகுறித்து சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் துணை இயக்குனர் (குடும்ப நலம்) கவுரி, மாநகர் நல அதிகாரி கவுரி சரவணன், தேசிய திட்ட ஒருங்கிணைப்பாளர் அருண்பாபு மற்றும் இணை இயக்குனர் அலுவலக கண்காணிப்பாளர் ஹரிகோபாலகிருஷ்ணன் மற்றும் மருந்து கட்டுப்பாட்டு அலுவலர் ராமசாமி ஆகியோர் சம்பந்தப்பட்ட மருந்து கடைக்கு சென்று ஆய்வு செய்தனர்.

    அப்போது மருந்து கடையை அதே பகுதியை சேர்ந்த மகேஷ் (40), கவிதா (35) தம்பதி நடத்தி வந்தது தெரியவந்தது. மேலும், இவர்கள் செட்டிபாளையம் பகுதியில் மற்றொரு மருந்து கடையும் நடத்தி வந்துள்ளனர். தொடர்ந்து மருந்து கடையில் ஆய்வு செய்த போது, அங்கு காலாவதியான மருந்துகள் மற்றும் மாதிரி மருந்துகள் போன்றவை இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும் கோவில்வழி முத்தணம்பாளையம் சாலையில் உள்ள மருந்து கடைக்கு சீல் வைத்தனர். இது குறித்து மேல் நடவடிக்கை எடுக்க போலீசாருக்கும், மருத்துவத்துறை அதிகாரிகளுக்கும் பரிந்துரை செய்துள்ளனர்.

    இதுகுறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது:-

    16 வயது சிறுமி கர்ப்பமாக இருப்பதை அறிந்த பெற்றோர், அந்த பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைகளை நாடியுள்ளனர். ஆனால் அவர்கள் கருவை கலைக்க மறுத்துள்ளனர். தொடர்ந்து மருந்து கடைக்கு சென்று மாத்திரையை வாங்கி சிறுமிக்கு கொடுத்துள்ளனர். முதலில் உரிமையாளர்கள் மாத்திரை கொடுத்ததை ஒப்புக்கொள்ளவில்லை. இதன் பின்னர் சிறுமியின் பெற்றோர் தெரிவித்த தகவலை கூறிய பின்னரே ஒப்புக்கொண்டனர். மாத்திரை சாப்பிட்டதும் சிறுமிக்கு வயிற்று வலி உள்ளிட்ட உடல் உபாதைகள் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இறந்துள்ளார். மருந்து கடை வைத்திருப்பவர்களுக்கு பலமுறை இது போன்ற மாத்திரைகளை விற்பனை செய்யக்கூடாது என தெரிவித்து வருகிறோம். ஆனாலும் இதுபோன்று சிலர் விற்பனை செய்கின்றனர். பறிமுதல் செய்யப்பட்ட மருந்துகள் ஆய்வுக்கு அனுப்பிவைக்கப்படும். இதுபோன்ற மாத்திரை விற்பனை செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.
    • பவித்ரா அடிக்கடி செல்போனில் பேசி வந்ததால் அவரது நடத்தையில் மணிகண்டன் சந்தேகமடைந்தார்.

    திருப்பூர்:

    திருப்பூர் கொங்கு மெயின்ரோடு டி.எம்.எஸ்.நகர் 4-வது வீதியை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 36). இவரது சொந்த ஊர் மதுரை. இவர் திருப்பூர் கொங்கு மெயின்ரோடு பகுதியில் பூ வியாபாரம் செய்து வந்ததுடன் அங்குள்ள கோவிலில் பூசாரியாக இருந்து வந்தார். இவரது மனைவி பவித்ரா (23). இவர்களுக்கு 1½ வயதில் மகன் உள்ளான். மணிகண்டனுக்கு பவித்ரா 2-வது மனைவி ஆவார். அதுபோல் பவித்ராவும் ஏற்கனவே திருமணமானவர். 2-வதாக மணிகண்டனை திருமணம் செய்து குடும்பம் நடத்தி வந்தார்.

    இவர்கள் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. நேற்று மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் இருவரும் மாறி, மாறி கைகளால் தாக்கிக்கொண்டதாக கூறப்படுகிறது. ஒருகட்டத்தில் வாக்குவாதம் முற்றி கோபத்தின் உச்சிக்கே சென்ற மணிகண்டன் வீட்டில் இருந்த அரிவாளால் பவித்ராவின் தலையை வெட்டிக்கொலை செய்தார்.

    சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் வீட்டிற்கு விரைந்து சென்றனர். அப்போது தலை துண்டிக்கப்பட்ட நிலையில் பவித்ரா ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.

    உடனடியாக இதுகுறித்து திருப்பூர் வடக்கு போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மேலும் அங்கிருந்த மணிகண்டனை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர்.

    அப்போது மனைவியை கொன்றதற்கான காரணம் குறித்து பரபரப்பு வாக்குமூலம் அளித்தார்.

    குழந்தை இல்லாததால் மணிகண்டன் முதல் மனைவியை பிரிந்து 2-வதாக பவித்ராவை திருமணம் செய்தார். பவித்ராவும் முதல் கணவரை பிரிந்து வாழ்ந்து வந்தார். 3 வருடங்களுக்கு முன்பு திருமணம் செய்த அவர்கள் சந்தோஷமாக வாழ்ந்து வந்தனர். அவர்களுக்கு குழந்தையும் பிறந்தது.

    இந்தநிலையில் கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. மேலும் பவித்ரா அடிக்கடி செல்போனில் பேசி வந்ததால் அவரது நடத்தையில் மணிகண்டன் சந்தேகமடைந்தார்.

    மேலும் பவித்ராவின் தாய் வேறு ஒருவருடன் பழகி வந்துள்ளார். இது மணிகண்டனுக்கு பிடிக்கவில்லை. எனவே பவித்ராவை தாயுடன் பேச வேண்டாம் என கண்டித்துள்ளார். இதனால் அவர்களுக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.

    நேற்று தகராறு ஏற்படவே மணிகண்டன் தனது குழந்தையை அக்கா வீட்டில் விட்டு விட்டு வீட்டிற்கு வந்தார். ஆத்திரத்தில் இருந்த அவர் வீட்டில் இருந்த அரிவாளை எடுத்து பவித்ராவை சரமாரியாக வெட்டினார். இதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். ஆத்திரம் தீராத மணிகண்டன் பவித்ராவின் தலையை துண்டித்தார். தலையில் மட்டும் 22 இடங்களில் வெட்டினார். துண்டிக்கப்பட்ட தலையை ஒரு கூடையில் வைத்து வெளியே கொண்டு செல்ல திட்டமிட்டார். அதற்குள் சத்தம் கேட்டு பொதுமக்கள் அங்கு வந்து விட்டனர்.

    இதையடுத்து போலீசார் அங்கு வந்து மணிகண்டனை கைது செய்தனர். மேலும் பவித்ராவின் உடலை பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். கைதான மணிகண்டனிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் திருப்பூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • கோடைக்கால ஆடைகள் அதிக அளவில் வெளிமாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
    • தீபாவளி பண்டிகை கால ஆடை தயாரிப்பு ஆர்டர்கள் வருகையால் பின்னலாடை துறை எழுச்சி பெறும்.

    திருப்பூர்:

    கேரளாவில் தொடங்கிய தென்மேற்கு பருவ மழை, நாடு முழுவதும் பரவலாக பெய்து வருகிறது. மும்பையில் நாளுக்கு நாள் மழை தீவிரமடைந்து வருகிறது.இது குறித்து லகு உத்யோக் பாரதி தேசிய இணை பொதுச்செயலர் மோகனசுந்தரம் கூறியதாவது:-

    திருப்பூரில் உள்நாட்டு சந்தைக்கான பின்னலாடை உற்பத்தி சில மாதங்களாக சற்று வேகமெடுத்துள்ளது. ஏப்ரல் முதல் இம்மாதம் வரை கோடைக்கால ஆடைகள் அதிக அளவில் வெளிமாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. திருப்பூரின் ஆடை வர்த்தகத்தில் 30 சதவீதம் மும்பை சந்தையை சார்ந்துள்ளது. மழையால் தற்போது மும்பையில் ஆடை வர்த்தகம் சரிந்துள்ளது.

    இதனால் திருப்பூரிலிருந்து ஆடை கொள்முதல் செய்வதை மும்பை வர்த்தகர்கள் குறைத்து வருகின்றனர். மழை தீவிரமடையும் போது வழித்தடங்கள் பாதிக்கப்பட்டு சரக்கு அனுப்புவதும் தடைபடும். வெயில் நீடிப்பதால் ஆந்திரா, டில்லி, பீஹார், ராஜஸ்தான் போன்ற மாநிலங்களுக்கு கோடைக்கால ஆடை ரகங்கள் தொடர்ந்து அனுப்பப்பட்டு வருகின்றன.

    பருவமழை தீவிரமடைந்து செப்டம்பர் வரை திருப்பூரின் உள்நாட்டு ஆடை வர்த்தகத்தை பாதிக்க செய்யும். அதன் பின் தீபாவளி பண்டிகை கால ஆடை தயாரிப்பு ஆர்டர்கள் வருகையால் பின்னலாடை துறை எழுச்சி பெறும். இவ்வாறு அவர் கூறினார்.

    • திருப்பூர் நோக்கி வரக்கூடிய தொழிலாளர்கள் வந்து செல்வதற்கு மிகப்பெரிய போக்குவரத்து வசதியாக இருந்த பயணிகள் மெமு எக்ஸ்பிரஸ் ரெயில் ஒன்றை ரெயில்வே நிர்வாகம் ரத்து செய்து இருக்கிறது.
    • மெமு ரெயிலானது கோவையில் இருந்து திருப்பூர், ஈரோடு வழியாக சேலம் வரை உள்ள அனைத்து சின்னஞ்சிறு ரெயில் நிலையங்களிலும் நின்று பயணிகளை ஏற்றி இறக்கி சென்ற ரெயில் ஆகும்.

    திருப்பூர்:

    தமிழகத்தின் மேற்கு மண்டலத்தில் உள்ள கோவை, திருப்பூர், சேலம், ஈரோடு மாநகரங்கள் தொழில் வளர்ச்சி பெற்ற நகரங்களாக இருக்கின்றன. அதிலும் திருப்பூர் மாநகரத்தில் பனியன் தொழிலை நம்பி சுமார் 5 லட்சத்துக்கும் மேற்பட்ட வெளியூர் மற்றும் வெளிமாநில தொழிலாளர்கள் வாழ்கிறார்கள். இதில் சுமார் 2 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் திருப்பூருக்கு பக்கத்தில் உள்ள கோவை, ஈரோடு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து தினசரி திருப்பூருக்கு வந்து செல்லும் தொழிலாளர்கள் ஆவார்கள்.

    இப்படி திருப்பூருக்கு பல்வேறு ஊர்களில் இருந்து தொழில் மற்றும் வேலை நிமித்தமாக வந்து செல்வதற்கு தொழிலாளர்கள் பஸ் மற்றும் ரெயில்களை பயன்படுத்துகிறார்கள். குறைந்த கட்டணத்தில் இருப்பதாலும், உடல் அசதி குறைவாக இருப்பதாலும், ரெயில் பயணம் திருப்பூருக்கு வரும் பக்கத்து மாவட்டத்துக்காரர்களின் முக்கிய தேர்வாக இருக்கிறது.

    இப்படி திருப்பூர் நோக்கி வரக்கூடிய தொழிலாளர்கள் வந்து செல்வதற்கு மிகப்பெரிய போக்குவரத்து வசதியாக இருந்த பயணிகள் மெமு எக்ஸ்பிரஸ் ரெயில் ஒன்றை ரெயில்வே நிர்வாகம் ரத்து செய்து இருக்கிறது. மேலும் கோவை, திருப்பூர், ஈரோடு வழியாக செல்லக்கூடிய நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் ரெயில் மற்றும் திருச்சி பாலக்காடு ரெயில்களின் நேரத்தை மாற்றி அமைத்து இருப்பதும் பயணிகளுக்கு பெரும் அலைச்சலையும், மன உளைச்சலையும் ஏற்படுத்தி இருக்கிறது.

    பயணிகளின் பேராதரவு பெற்ற ரெயிலாக இருந்த மெமு ரெயிலானது, ரெயில் எண் 06802 என்ற எண்ணில் கோவையில் இருந்து காலையில் 9.05 மணிக்கு புறப்பட்டு சேலம் நோக்கி சென்று கொண்டு இருந்தது. மறுமார்க்கமாக 06803 என்ற எண்ணுடன் சேலத்தில் மதியம் 1.40 மணிக்கு புறப்பட்டு மாலை கோவையை அடைந்தது. இந்த ரெயில் தான் கோவையில் இருந்து திருப்பூர், ஈரோடு வழியாக சேலம் வரை உள்ள அனைத்து சின்னஞ்சிறு ரெயில் நிலையங்களிலும் நின்று பயணிகளை ஏற்றி இறக்கி சென்ற ரெயில் ஆகும். இந்த ரெயிலில் தான் கோவை ஜங்ஷன், கோவை வடக்கு, பீளமேடு, சிங்காநல்லூர், இருகூர், சூலூர் ரோடு, சோமனூர், வஞ்சிபாளையம், திருப்பூர், ஊத்துக்குளி, விஜயமங்கலம், ஈங்கூர், பெருந்துறை, தொட்டிபாளையம், ஈரோடு ஜங்ஷன், காவேரி, அனங்கூர், மாவெலிபாளையம், மகுடஞ்சாவடி, வீரபாண்டி ரோடு, சேலம் ஜங்ஷன் உள்பட 22 ரெயில் நிலையங்களில் நின்று பயணிகளை ஏற்றி இறக்கி சென்றது.

    இந்த ரெயில் மூலமாக கோவை, திருப்பூர், ஈரோடு மற்றும் சேலம் மாவட்டம் வரை தினமும் பல்லாயிரக்கணக்கானவர்கள் பயனடைந்து வந்தார்கள். அதிலும் சீசன் டிக்கெட் மூலமாக குக்கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் பெருமளவு பயன்படுத்தி வந்த இந்த ரெயிலை ஒரு ஆண்டாக தொடர்ச்சியாக ரத்து செய்து வைத்திருக்கிறது தென்னக ரெயில்வேயின் சேலம் கோட்டம். அதே நேரம் இந்த ரெயில் அதே அளவு பெட்டிகளுடன் கோவையில் இருந்து கேரளத்துக்கு மட்டும் இயக்கப்பட்டு விட்டு, தமிழக பகுதியில் ரத்து செய்து வைத்திருப்பது தான் சேலம், கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்ட மக்களிடத்தில் கேள்வியை எழுப்பி இருக்கிறது.

    அதாவது இந்த மெமு ரெயிலானது சேலத்தில் இருந்து கோவை வந்து சேர்ந்ததும், 06805 என்ற எண்ணில் கோவையில் இருந்து பாலக்காடு வரை பாசஞ்சர் ரெயிலாக இயக்கப்பட்டு வந்தது. 06806 என்ற எண்ணில் பாலக்காட்டில் இருந்து கோவை வந்து சேர்ந்து, அங்கிருந்து கோவை-சேலத்துக்கு இயக்கப்பட்டு வந்தது. ஆனால், கோவை-சேலம் இடையே ஒரு ஆண்டாக ரத்து செய்யப்பட்ட இந்த ரெயிலை, கேரள பயணிகளுக்கு எந்தவித சிக்கலும் ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக கேரள பகுதிகளில் மட்டும் தொடர்ந்து இயக்கப்பட்டு வருவதாக பொதுமக்கள் மற்றும் பயணிகள் புகார் கூறுகிறார்கள்.

    06802 மற்றும் 06803 என்ற எண்களில் இயங்கக்கூடிய இந்த ரெயிலை ரத்து செய்ததற்கு ரெயில்வே நிர்வாகம் தெரிவிக்கிற ஒரே காரணம் என்னவென்று கேட்டால், தண்டவாள பராமரிப்பு பணி என்பது மட்டுமே. கேரளத்தையும், தமிழகத்தையும் இணைக்கக் கூடிய மேற்கு மண்டல ரெயில் பாதையில் தண்டவாள பராமரிப்பு என்ற காரணத்தை கூறி ஒவ்வொரு மாதமும் இந்த ரெயிலை ரெயில்வே நிர்வாகம் ரத்து செய்து அறிக்கையை அனுப்புகிறது. இப்படி ஒரு ஆண்டாக செய்யக் கூடியதற்கு பின்னணி காரணம் என்று பொதுமக்கள் கூறும் காரணங்கள் தான் அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது.

    இந்த ரெயில் தடத்தில் தினமும் 30க்கும் மேற்பட்ட பயணிகள் செல்லக்கூடிய ரெயில்களும், அது தவிர சரக்கு ரெயில்களும் இயக்கப்பட்டாலும், பயணிகள் அதிகம் பயன்படுத்திய மெமு ரெயில் ரத்து செய்யப்பட்டதற்கு காரணம் தனியார் பஸ் உரிமையாளர்கள் தான் என்கிறார்கள் ரெயில் பயணிகள். தனியார் பஸ் உரிமையாளர்களுக்கு கொரோனா காலத்தில் இந்த மெமு ரெயில் ரத்து செய்யப்பட்ட போது, வருமானம் குவிந்தது. எனவே அவர்கள் இந்த ரெயிலை தொடர்ச்சியாக ஓட விடக்கூடாது என்று முடிவு செய்து, ரெயில்வே அதிகாரிகளை சரிக்கட்டி இந்த ரெயிலை ரத்து செய்ய வைப்பதாக திருப்பூரை சேர்ந்த பயணிகள் கூறுகிறார்கள்.

    கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம் வழித்தடத்தில் பல்வேறு ரெயில்கள் தடையின்றி இயக்கப்படும் போது, ரெயில் தண்டவாள பராமரிப்பு பணி என்று சொல்லி இந்த மெமு ரெயிலை மட்டும் ரத்து செய்வது எந்த விதத்தில் நியாயம் என்று கேள்வி எழுப்புகிறார்கள்.

    இந்த ரெயிலை இயக்க வேண்டி கோவை பாராளுமன்ற உறுப்பினர் நடராஜன், திருப்பூர் பாராளுமன்ற உறுப்பினர் சுப்பராயன், திருப்பூர் தெற்கு சட்டமன்ற உறுப்பினர் க.செல்வராஜ் ஆகியோரும் பலமுறை கோரிக்கை விடுத்தார்கள். ஆனாலும் பலனில்லை. கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம் மாவட்ட ரெயில் பயணிகளும் மனு மேல் மனு கொடுத்து பார்த்து விட்டார்கள். ஆனாலும் அசரவில்லை ரெயில்வே நிர்வாகம்.

    இதே போல திருச்சியில் இருந்து பாலக்காடு செல்லக்கூடிய எக்ஸ்பிரஸ் ரெயிலானது கோவை -திருப்பூருக்கு இடையே இருகூர், சிங்காநல்லூர் ரெயில் நிலையங்களில் நிற்காமல் செல்லக்கூடிய எக்ஸ்பிரஸ் ரெயிலாக மாற்றி உள்ளார்கள். இத்துடன் கோவை - நாகர்கோவில் பாசஞ்சர் ரெயிலானது காலை 7.20 மணிக்கு கோவையில் புறப்பட்டு வடகோவை, பீளமேடு, சிங்காநல்லூர், இருகூர், சூலூர், சோமனூர், வஞ்சிபாளையம் வழியாக திருப்பூர் நின்று பின்னர் புறப்பட்டு சென்றது. ஆனால் இந்த ரெயில் இப்போது கடந்த 2 வருடங்களாக எக்ஸ்பிரஸ் ரெயிலாக மாற்றப்பட்டு உள்ளது. இதனால் கோவை, திருப்பூருக்கு இடையே சிங்காநல்லூர், இருகூர், வஞ்சிபாளையம் ரெயில் நிலையங்களில் நிற்காமல் செல்கிறது. இதனால் இதில் வந்து கொண்டு இருந்த பள்ளி மாணவர்கள் உள்பட பல்லாயிரம் பொதுமக்கள், தொழிலாளர்கள் பாதிப்புக்குள்ளாகிறார்கள். இத்துடன் இந்த ரெயில் மாலை நேரத்தில் 7.20 மணிக்கு திருப்பூர் வந்து கொண்டு இருந்தது. தற்போது 5.10 மணிக்கு வரும்படி அட்டவணை மாற்றி உள்ளதும் தொழிலாளர்கள் வேலை முடித்து செல்வதில் சிக்கலை ஏற்படுத்தி இருக்கிறது.

    தண்டவாள பராமரிப்பு பணி என்று சொல்லி பல்லாயிரம் மக்களை அலைக்கழிக்கும் ரெயில்வே நிர்வாகம், சேலம், ஈரோடு, திருப்பூர், கோவை வழியாக சென்று பல்லாயிரம் கிராம மக்களுக்கு பயனளித்த மெமு ரெயிலை உடனடியாக இயக்கத்துக்கு கொண்டு வர வேண்டும் என்பதே மேற்கு மண்டலத்தில் பயணிக்கும் ரெயில் பயணிகளின் கோரிக்கையாக உள்ளது. மேலும் கோவை -நாகர்கோவில் ரெயில் மற்றும் திருச்சி-பாலக்காடு ரெயில்களை ஏற்கனவே நின்று சென்ற அனைத்து ரெயில் நிலையங்களிலும் நின்று செல்ல ஏற்பாடு செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • எச்.டி.பாக்ஸ் கொள்முதல் செய்யப்பட்டு, அனைத்து மாவட்டங்களுக்கும் விரைவில் அனுப்பி வைக்கப்பட உள்ளது.
    • எச்.டி., பாக்ஸ் வருகைக்குப்பின், மாவட்டம் முழுவதும் ஏராளமானோர், அரசு கேபிள் டிவி., ஆபரேட்டராக இணைவர்

    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்ட அரசு கேபிள் டி.வி., நிறுவன பிரிவினர் கூறியதாவது:-

    அரசு கேபிள் இணைப்புகளுக்கு எஸ்.டி.,க்கு (ஸ்டேன்டர்ட் டெபனிஷன்) பதில் எச்.டி.,(ைஹ டெபனிஷன்) செட்டாப் பாக்ஸ் வழங்குவதற்காக டெண்டர் விடப்பட்டுள்ளது. விரைவில் எச்.டி., பாக்ஸ் கொள்முதல் செய்யப்பட்டு, அனைத்து மாவட்டங்களுக்கும் விரைவில் அனுப்பி வைக்கப்பட உள்ளது. ஆபரேட்டர்கள், தாங்கள் வசூலிக்கும் சந்தாவில் இணைப்பு ஒன்றுக்கு தற்போது ரூ.82.50 மட்டும் அரசு கேபிள் டிவி நிறுவனத்துக்கு செலுத்தினால் போதும். எச்.டி., பாக்ஸ் வருகைக்குப்பின், மாவட்டம் முழுவதும் ஏராளமானோர், அரசு கேபிள் டிவி., ஆபரேட்டராக இணைவர். தற்போது முதலே பலரும் ஆபரேட்டராக இணைவதற்கான வழிமுறைகள் குறித்த விவரங்களை கேட்டறிந்து வருகின்றனர். கேபிள் இணைப்பு எண்ணிக்கையும் அதிகரிக்கும்.

    அரசு கேபிள் ஆபரேட்டராக விரும்புவோர், முகவரி, சேவை வழங்க உள்ள விவரங்களுடன் ஆதார் போன்ற ஆவணங்களை இணைத்து மாவட்ட தலைமை தபால் அலுவலகத்தில் விண்ணப்பித்து போஸ்டல் லைசென்ஸ் பெறவேண்டும். தொடர்ந்துtactv.inஎன்கிற இணையதளத்தில் உரிய ஆவணங்களை இணைத்து, விண்ணப்பிக்கவேண்டும். உரிய டெபாசிட் தொகை செலுத்தவேண்டும். அதிகாரிகள் கள ஆய்வு நடத்தி அரசு கேபிள் டிவி ஆபரேட்டராக அங்கீகரித்து லைசென்ஸ் வழங்குவர் என்றனர்.

    ×