என் மலர்
திருப்பூர்
- 60 வயது பூர்த்தியான நெசவாளர்களுக்கு மாதந்தோறும் ரூ. 3ஆயிரம் ஓய்வூதியம் வழங்க வேண்டும்.
- கொரோனா கால நிவாரணமாக நெசவுத் தொழிலாளர் குடும்பங்களுக்கு ரூ.10 ஆயிரம் வழங்க வேண்டும்.
உடுமலை:
கைத்தறி தொழிலையும் நெசவாளர்களையும் பாதுகாக்க வலியுறுத்தி கைத்தறி நெசவாளர் சங்கம் ஏஐடியூசி., சார்பில் மடத்துக்குளம் நால் ரோட்டில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சங்க பொறுப்பாளர் ஆறுமுகம் தலைமை வகித்தார். மலையாண்டிபட்டினம் சுப்பிரமணி, ஜெய்சங்கர் ,ரவிச்சந்திரன், சரவணன், பாப்பான்குளம் எம் ராமச்சந்திரன், டி. ராஜேந்திரன், செந்தில், பாரதி, ஜோத்தம்பட்டி ஜெயராமன் ,குணசேகரன், கணியூர் கோவிந்தராஜ் ,செந்தில் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஏஐடியுசி., நிர்வாகிகள் நடராஜன், மோகன், ரவி, பழனிச்சாமி, சௌந்தரராஜன், சுப்பிரமணியம் உட்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.இதில் கைத்தறி ரகங்களை விசைத்தறியில் நெசவு செய்ய அனுமதிக்க கூடாது. 60 வயது பூர்த்தியான நெசவாளர்களுக்கு மாதந்தோறும் ரூ. 3ஆயிரம் ஓய்வூதியம் வழங்க வேண்டும்.
கொரோனா கால நிவாரணமாக நெசவுத் தொழிலாளர் குடும்பங்களுக்கு ரூ.10 ஆயிரம் வழங்க வேண்டும். கைத்தறிக்கான மூலப்பொருள் விற்பனை கூடம் அமைக்கப்பட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் நெசவாளர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
- கடந்த 20 நாட்களாக குடிநீர் வராததால் இப்பகுதி மக்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர்.
- அதிகாரிகளிடம் முறையிட்டால் அவர்கள் அலட்சியம் காட்டுகின்றனர்.
உடுமலை:
உடுமலை ஒன்றியம் பூலாங்கிணறு மற்றும் ராகல்பாவி ஊராட்சிகளுக்கு திருமூர்த்தி கூட்டுக் குடிநீர் திட்டத்தின் கீழ் குடிநீர் விநியோகிக்கப்பட்டு வருகிறது. ஆனால் தற்போது சீராக குடிநீர் விநியோகிக்கப்படுவதில்லை. கடந்த 20 நாட்களாக குடிநீர் வராததால் இப்பகுதி மக்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர்.
இது குறித்து ஊராட்சி ஒன்றிய அதிகாரிகளிடம் முறையிடுவதற்காக பூலாங்கிணறு ஊராட்சி மன்ற தலைவர் ராதிகா, ராகல்பாவி ஊராட்சி மன்ற தலைவர் சுமதி மற்றும் மன்ற உறுப்பினர்கள் உடுமலை ஒன்றிய அலுவலகத்திற்கு வந்தனர். அங்கு அதிகாரிகள் சரிவர பதில் அளிக்கவில்லை என தெரிகிறது.
இதில் அதிருப்தி அடைந்த ஊராட்சி மன்ற தலைவர்களும் உறுப்பினர்களும் ஒன்றிய அலுவலக வளாகத்தில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். அதிகாரிகள் உரிய பதில் அளிக்கும் வரை இங்கிருந்து செல்ல மாட்டோம் என கூறி தரையில் அமர்ந்து இருந்தனர். தகவல் அறிந்து வந்த போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது அவர்கள் கூறுகையில், திருமூர்த்தி அணை குடிநீர், பழைய திட்டத்தின்அடிப்படையில் வழங்கப்பட்டு வந்தது. புதிய திட்டத்திற்கு மாற்றிய பிறகு கடந்த 6 மாதங்களாக சரிவர குடிநீர் வருவதில்லை. இதனால் மக்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர். இது குறித்து மக்கள் எங்களிடம் கேள்வி கேட்கின்றனர்.
வாக்களித்த மக்களுக்கு நாங்கள் என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் இங்கு வந்து அதிகாரிகளிடம் முறையிட்டால் அவர்கள் அலட்சியம் காட்டுகின்றனர். எனவே போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம். ஊராட்சி பகுதிகளில் மக்கள் தொகை பெருகிவிட்டது. எனவே ஒரு நாள் விட்டு ஒரு நாள் கூடுதல் தண்ணீர் வழங்க வேண்டும் என கூறி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருப்பூர்:
தமிழகம் முழுவதும் குடும்பத்தலைவிகளுக்கு மாதம் ரூ. 1000 மகளிர் உரிமைத்தொகை வழங்குவதாக தேர்தல் அறிக்கையில் தி.மு.க., சார்பில் அறிவிக்கப்பட்டது. இதனை நிறைவேற்றும் விதமாக தமிழகத்தில் மகளிருக்கு ரூ.1000 வழங்குவதற்கான ஏற்பாடுகள் தொடங்கப்ப ட்டுள்ளது. முதற்கட்டமாக இதற்கான விண்ணப்பங்கள் வெளியிடப்பட்டுள்ளது.
மேலும் இந்த 1000 ரூபாய் உரிமை தொகை பெற தகுதி உடையவர்களின் நிபந்தனைகளும் தமிழக அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த நிலையில் விண்ணப்பத்தை பெறுகிற அரசு அதிகாரிகளுக்கு, அந்த விண்ணப்பத்தை இணையதளத்தில் பதிவேற்றம் செய்வது தொடர்பான பயிற்சி திருப்பூர் கலெக்டர் அலுவலகம் எதிரில் உள்ள ராமசாமி முத்தம்மாள் திருமண மண்டபத்தில் நடந்தது.
இதற்கு கலெக்டர் கிறிஸ்துராஜ் தலைமை தாங்கினார். சப்- கலெக்டர் ஸ்ருதன் ஜெய் நாராயணன் முன்னிலை வகித்தார். இதில் மாவட்டம் முழுவதும் இருந்து 330 தன்னார்வலர்கள் கலந்து கொண்டனர். அவர்களுக்கு இணையதளத்தில் விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்வது தொடர்பான பயிற்சி அளிக்கப்பட்டது. மேலும், இந்த திட்டம் தொடர்பாக முழு தகவல்களும் தெரிவிக்கப்பட்டது.
- 3 கிலோ கஞ்சா, கஞ்சா கடத்தலுக்கு பயன்படுத்தப்பட் கார் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
- மதுரையை சேர்ந்த கருப்பசாமி (28), நாகேந்திரன் (25) ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர்.
திருப்பூர்:
திருப்பூர் போயம்பா ளையம், குருவாயூரப்பன் நகரில் விற்பனைக்காக கஞ்சா பதுக்கி வைத்திருப்பதாக, அனுப்பர்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரேமாவுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.
இதனையடுத்து போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று சோதனை செய்ததில், கஞ்சா பதுக்கி வைத்திருந்தது தெரிய வந்தது. அங்கிருந்த, 3 கிலோ கஞ்சா, கஞ்சா கடத்தலுக்கு பயன்படுத்தப்பட் கார் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
கஞ்சாவை பதுக்கி வைத்திருந்த மதுரையை சேர்ந்த கருப்பசாமி (28), நாகேந்திரன் (25) ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடத்திய போது அவர்கள் மதுரையிலிரு ந்து கார் மூலம் கஞ்சாவை கடத்தி வந்து குருவாயூரப்ப ன் நகரில் பதிக்க வைத்து திருப்பூரின் பல்வேறு பகுதிகளுக்கு சப்ளை செய்ததும் தெரியவந்தது.
- 123-வது கட்ட மரக்கன்றுகள் நடும் விழா வடக்கு புதுப்பாைளயம் அனுகிரஹா மில் அருகில் நடைபெற்றது.
- காங்கயம் துளிகள் அமைப்பு சார்பில் இதுவரை 22,150 மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளது.
காங்கயம்:
காங்கயம் துளிகள் அமைப்பின் 123-வது கட்ட மரக்கன்றுகள் நடும் விழா வடக்கு புதுப்பாைளயம் அனுகிரஹா மில் அருகில் நடைபெற்றது. இதில் காங்கயம் ஊராட்சி ஒன்றிய தலைவர் மகேஷ்குமார், பொத்தியபாளையம் ஊராட்சி தலைவர் சந்திரசேகர், துைண தலைவர் திருநாவுக்கரசு, அனுகிரஹா பேஷன் மில் மோகன், எம்.பி.எம். டெக்ஸ்டைல்ஸ் பால்மணி, பொத்தியபாளையம் ஊராட்சி உறுப்பினர் ராமசாமி ஆகியோர் கலந்து கொண்டனர். காங்கயம் துளிகள் அமைப்பு சார்பில் இதுவரை 22,150 மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளது.
- பள்ளி வளாகத்தை பாதுகாக்கும் வகையில் கடந்த சில வருடங்களுக்கு முன்பு சுற்றுச்சுவர் கட்டப்பட்டது.
- நுழைவுப் பகுதியில் கேட்டுடன் பொருத்தப்பட்ட சுற்றுசுவர் சேதம் அடைந்து உள்ளதை குழந்தைகள் அறிய மாட்டார்கள்.
உடுமலை:
உடுமலை ஒன்றியத்துக்கு உட்பட்ட சின்னக் குமாரபாளையம் பகுதியில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. இங்கு சின்ன குமாரபாளையம் மட்டுமின்றி சுற்றுப்புற பகுதியை சேர்ந்த ஏராளமான குழந்தைகள் படித்து வருகின்றனர். பள்ளி வளாகத்தை பாதுகாக்கும் வகையில் கடந்த சில வருடங்களுக்கு முன்பு சுற்றுச்சுவர் கட்டப்பட்டது. அப்போது அடித்தளம் வலுவற்றதாக அமைக்கப்பட்டதாக தெரிகிறது. இதனால் நுழைவு பகுதியில் உள்ள சுற்றுச்சுவர் விரிசல் விட்டு சேதமடைந்து உள்ளது.
இதனால் பள்ளிக் குழந்தைகளுக்கு ஆபத்து ஏற்படும் சூழல் உள்ளது. இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், தொடக்கப்பள்ளி என்பதால் சுட்டித்தனம் நிறைந்த குழந்தைகளே இங்கு அதிக அளவில் வருகை தருவார்கள். நுழைவுப் பகுதியில் கேட்டுடன் பொருத்தப்பட்ட சுற்றுசுவர் சேதம் அடைந்து உள்ளதை குழந்தைகள் அறிய மாட்டார்கள்.
அந்த சுவர் கேட்டை இயக்கும் போது அசைந்து கொடுத்து மரத்துடன் சாய்ந்து நின்று கொள்கிறது. எப்போது கீழே விழும் என்று தெரியவில்லை. எனவே சின்ன குமாரபாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி வளாகத்தில் சேதம் அடைந்த சுற்றுச்சுவரை உடனடியாக சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
- 2022 அக்டோபர் - 2023 செப்டம்பர் வரை 315 லட்சம் பேல் அளவுக்கு பருத்தி விளையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
- நூற்பாலைகள் பயன்பாட்டுக்கு மட்டும் 283 லட்சம் பேல் தேவையாக இருக்கும் என கணக்கிடப்பட்டுள்ளது.
உடுமலை:
நம் நாட்டின் பருத்திச்சந்தையில் பஞ்சாப், ஹரியானா, ராஜஸ்தான், குஜராத், மத்தியப்பிரதேசம், மஹாராஷ்டிரா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா ஆகிய மாநிலங்கள் பிரதான இடம் வகிக்கின்றன. இந்திய பருத்திக்கழகம் கண்காணித்து வழிநடத்துகிறது.நடப்பு பருத்தி சீசனான 2022 அக்டோபர் - 2023 செப்டம்பர் வரை 315 லட்சம் பேல் அளவுக்கு பருத்தி விளையும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒரு பேல் என்பது 170 கிலோ. நூற்பாலைகள் பயன்பாட்டுக்கு மட்டும் 283 லட்சம் பேல் தேவையாக இருக்கும் என கணக்கிடப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு பஞ்சு விலை உயர்வால் நடப்பு சீசன் மிகுந்த எதிர்பார்ப்புடன் துவங்கியது. கடந்த 2022 அக்டோபரில் 9.71 லட்சம் பேல், நவம்பரில் 27.03 லட்சம், டிசம்பரில் 27.96 லட்சம், 2023 ஜனவரியில் 26.66 லட்சம், பிப்ரவரியில் 33.77 லட்சம், மார்சில் 30.07 லட்சம், ஏப்ரலில் 29.54 லட்சம், மே மாதத்தில் 25.96 லட்சம், ஜூனில் 13.63 லட்சம் பேல் பருத்தி கிடைத்தது.இதுவரை 224.37 லட்சம் பேல் அளவுக்கு பருத்தி விற்பனைக்கு வந்துள்ளது.
தமிழ்நாடு ஸ்பின்னிங் மில்ஸ் அசோசியேஷனான டாஸ்மா தலைமை ஆலோசகர் வெங்கடாசலம் கூறுகையில், நடப்பு பருத்தி சீசனில் பருத்தி வரத்து தாமதமாக துவங்கியது. தற்போது இரண்டாம் அறுவடை நடந்து வருவதால் சீசன் நிறைவடையும் நிலையிலும் வரத்து தொடர்கிறது.தற்போதைய நிலவரப்படி தினமும் 35 ஆயிரம் பேல் வருகிறது. பஞ்சு ஒரு கேண்டி எனும் 356 கிலோ 55 ஆயிரம் முதல் 56 ஆயிரம் ரூபாய் வரை விற்கப்படுகிறது என்றார்.
- இளம் தம்பதியினருக்கு, குழந்தை பேறு, குழந்தை வளர்ப்பு முறைகள், உள்ளிட்டவை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
- தம்பதிகளுக்கு விழிப்புணர்வு முகாம் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
பல்லடம்:
பல்லடம் வட்டார ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்ட பணிகள் சார்பில் தம்பதிகளுக்கு விழிப்புணர்வு முகாம் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. திருப்பூர் மாவட்ட திட்ட அலுவலர் ஸ்டெல்லா தலைமை தாங்கினார்.
பல்லடம் வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் சுடர்விழி, மருத்துவ அலுவலர்கள் டாக்டர் சதீஷ் டாக்டர் மேகலா ஆகியோர் முன்னிலை வகித்தனர் சமூக நல அலுவலர் சகுந்தலா வரவேற்றார். இந்த நிகழ்ச்சியில், இளம் தம்பதியினருக்கு, குழந்தை பேறு, குழந்தை வளர்ப்பு முறைகள், உள்ளிட்டவை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இதில் 25க்கும் மேற்பட்ட தம்பதிகள் கலந்து கொண்டனர்.
- ரூ.1000 வழங்கும் திட்டத்திற்கான சிறப்பு முகாம் வரும் 20 ந்தேதி நடைபெற உள்ளது.
- மாற்றுத்திறனாளிகளுக்கான சாய்வு தளம், சுகாதார வளாகம், உள்ளிட்ட அடிப்படை வசதிகளை அமைக்க அறிவுறுத்தினார்.
பல்லடம்,ஜூலை.12-
குடும்பத் தலைவிகளுக்கு மகளிர் உரிமை திட்டம் என்ற பெயரில் மாதம் ரூ.1000 வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இதற்கான சிறப்பு முகாம் வரும் 20 ந்தேதி நடைபெற உள்ளது. இதற்காக அரசு பள்ளிகளில் மையங்கள் ஏற்படுத்தப்பட உள்ளன.
இதற்கிடையே பல்லடம் வட்டாரத்தில் மகளிர் உரிமை திட்ட சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ள இடங்களை திருப்பூர் மாவட்ட வருவாய் அலுவலர் ஜெய் பீம் நேரில் ஆய்வு செய்தார். சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ள மையத்தில் இடவசதி, மாற்றுத்திறனாளிகளுக்கான சாய்வு தளம், சுகாதார வளாகம், உள்ளிட்ட அடிப்படை வசதிகளை அமைக்க அறிவுறுத்தினார். இந்த ஆய்வின்போது பல்லடம் தாசில்தார் ஜெய்சிங் சிவக்குமார், தலைமையிடத்து துணை தாசில்தார் சுப்ரமணியம், மற்றும் வருவாய்த்துறை அலுவலர்கள் உடன் இருந்தனர்.
- சாயத் தொழிற்சாலை தரப்பினர் கட்டுமான பணிகளை நிறுத்திவைப்பதாக தெரிவித்தனர்.
- பொதுமக்களும் கருப்புக் கொடி போராட்டத்தை திரும்பப் பெறுவதாக தெரிவித்தனர்.
பல்லடம்:
பல்லடம் அருகே உள்ள கரைப்புதூர் ஊராட்சி குன்னாங்கல்பாளையத்தில், சுமார் 2000-க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் ஏற்கனவே அங்கு பல சாயத்தொழிற்சாலைகள் உள்ளது. இந்த நிலையில், புதிதாக சாயத் தொழிற்சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் ஏற்கனவே, முதல்வர்,மாவட்ட ஆட்சியர் உள்ளிட்டவர்களுக்கு கோரிக்கை மனு அளித்துள்ளனர்.
ஆனாலும் சாயத் தொழிற்சாலை அமைக்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதையடுத்து அப்பகுதி மக்கள் வீடுகளில் கருப்பு கொடி ஏற்றி போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் நேற்று பல்லடம் தாலுகா அலுவலகத்தில், இது குறித்து அமைதிப் பேச்சுவார்த்தை தாசில்தார் ஜெய்சிங் சிவக்குமார் தலைமையில் நடைபெற்றது. இதில் மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள், சாயத் தொழிற்சாலை உரிமையாளர்கள், குன்னாங்கல்பாளையம் பொதுமக்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இரு தரப்பினரின் கருத்தை கேட்ட தாசில்தார் இது குறித்து அடுத்த பேச்சுவார்த்தை நடைபெறும் வரை சாயத்தொழிற்சாலை கட்டுமான பணிகளை நிறுத்தி வைக்கும்படியும், பொதுமக்கள் தங்களது போராட்டங்களை நிறுத்தி வைக்கும்படியும் கேட்டுக் கொண்டார். இதையடுத்து சாயத் தொழிற்சாலை தரப்பினர் கட்டுமான பணிகளை நிறுத்திவைப்பதாக தெரிவித்தனர். பொதுமக்களும் கருப்புக் கொடி போராட்டத்தை திரும்பப் பெறுவதாக தெரிவித்தனர். அடுத்தகட்ட பேச்சுவார்த்தை குறித்து விரைவில் அறிவிப்பதாக தாசில்தார் தெரிவித்தார்.
- கடந்த 2 ஆண்டுகளாக அமராவதி அணையின் நீர் இருப்பு தொடர்ந்து திருப்திகரமாக உள்ளது.
- வம்பன் 8 மற்றும் வம்பன் 10 ரக உளுந்து விதைகள் 3 டன் இருப்பு உள்ளது.
மடத்துக்குளம்:
மடத்துக்குளம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் விவசாயம் பிரதான தொழிலாக உள்ளது. இங்கு நெல், கரும்பு, வாழை, தென்னை, மக்காச்சோளம் உள்ளிட்ட பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டு வருகின்றன. போதிய விலையின்மை மற்றும் தண்ணீர் பற்றாக்குறை, கூலி ஆட்கள் பற்றாக்குறை உள்ளிட்ட காரணங்களால் இந்த பகுதிகளின் மிக முக்கிய பயிர்களாக விளங்கிய நெல், கரும்பு ஆகியவற்றின் சாகுபடிப் பரப்பு குறைந்து வந்தது.
இந்த நிலையில் கடந்த 2 ஆண்டுகளாக அமராவதி அணையின் நீர் இருப்பு தொடர்ந்து திருப்திகரமாக உள்ளது. இதனைக்கருத்தில் கொண்டு அமராவதி பழைய ஆயக்கட்டு பகுதிகளில் மீண்டும் நெல் சாகுபடி செய்வதில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். தற்போது பாசனத்துக்காக அமராவதி ஆறு மற்றும் பிரதான கால்வாயில் நீர் திறக்கப்பட்டுள்ளது.
இதனால் கொழுமம், குமரலிங்கம், மடத்துக்குளம், கணியூர், காரத்தொழுவு, சோழமாதேவி உள்ளிட்ட பகுதிகளில் நெல் நடவுப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. நாற்றங்கால் அமைத்து நெல் நடவு செய்வது மட்டுமல்லாமல் ஒருசில விவசாயிகள் நேரடி நெல் விதைப்பிலும் ஈடுபட்டு வருகிறார்கள். இதற்கென பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட நேரடி நெல் விதைப்பு எந்திரங்களையும் பயன்படுத்தி வருகிறார்கள்.
இந்தநிலையில் மடத்துக்குளம் வேளாண்மைத்துறை அலுவலகத்தில் விதைகள் மற்றும் நுண்ணூட்ட உரங்கள் போதிய அளவில் இருப்பு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது:-
ஆயக்கட்டு பாசனப்பகுதிகளில் சாகுபடி மேற்கொள்ளும் வகையில் கோ 51 ரக நெல் விதைகள் 12 டன் அளவுக்கு இருப்பு உள்ளது. மேலும் மானாவாரி சாகுபடிக்கு ஏற்ற வகையில் வம்பன் 8 மற்றும் வம்பன் 10 ரக உளுந்து விதைகள் 3 டன் இருப்பு உள்ளது. இதுதவிர நிலக்கடலை விதைகள் 3 டன் அளவுக்கு தயாராக உள்ளது.
உரிய பரிசோதனைகள் முடிந்து சான்று பெற்ற பிறகு விவசாயிகளுக்கு வினியோகிக்கப்படும். மேலும் நெல், தென்னை உள்ளிட்ட பயிர்களுக்கான நுண்ணூட்டச் சத்துகள் போன்றவையும் இருப்பில் உள்ளது. எனவே தேவைப்படும் விவசாயிகள் மடத்துக்குளம் வேளாண்மைத்துறை அலுவலகத்தையோ அல்லது தங்கள் பகுதி வேளாண்மை அலுவலரையோ தொடர்பு கொண்டு பெற்றுக் கொள்ளலாம் என்று அதிகாரிகள் கூறினர்.
- இதற்கென TNSED SCHOOL APP HEALTH AND WELLBEING' என்ற மொபைல் ஆப் உருவாக்கப்பட்டுள்ளது.
- பிறவி மற்றும் வளர்ச்சி குறைபாடு, ரத்தசோகை, வைட்டமின் சத்து உள்ளிட்ட, 23 முதல்நிலை விபரங்கள் பதிவு செய்யப்பட உள்ளது.
தாராபுரம்:
அரசு பள்ளியில் கல்வி பயிலும் மாணவ, மாணவிகளின் உடல் நலம் குறித்த விபரங்களை வகுப்பாசிரியர்கள் சேகரித்து செயலியில் பதிவேற்றம் செய்ய அறிவுறுத்த ப்பட்டுள்ளது.
பள்ளி கல்வித்துறை, தேசிய சுகாதார இயக்கம் சார்பில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படித்து வரும் மாணவ, மாணவிகளின் உடல் நலன் சார்ந்த பிரச்சினைகளை கண்டறிந்து அதற்கான மருத்துவ பரிசோதனைக்கு முன்கூட்டியே பரிந்துரைக்க, புதிய திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.
இதற்கென TNSED SCHOOL APP HEALTH AND WELLBEING' என்ற மொபைல் ஆப் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் மாணவ, மாணவிகளின் எடை மற்றும் உயரம் துவங்கி, பிறவி மற்றும் வளர்ச்சி குறைபாடு, ரத்தசோகை, வைட்டமின் சத்து உள்ளிட்ட, 23 முதல்நிலை விபரங்கள் பதிவு செய்யப்பட உள்ளது. இது குறித்து ஒருங்கிணைந்த பள்ளி கல்வி திட்டம் மூலம் விரிவான வழிகாட்டுதல் வழங்கப்பட உள்ளது.
இது குறித்து திருப்பூர் மாவட்ட கல்வித்துறை அதிகாரிகள் கூறியதாவது:-
ஒவ்வொரு வகுப்பு ஆசிரியரும், மாணவரின் எமிஸ் எண்ணை பதிவு செய்து உடல் நலன் குறித்த விபரங்களை அப்டேட் செய்ய வேண்டும். குறைபாடு கண்டறியப்படுவோருக்கு தேவையான உபகரணங்கள் கண் கண்ணாடி உள்ளிட்டவை பரிசோதனை செய்து தரப்படும். சிறப்பு கவனம், தொடர் நடவடிக்கை தேவைப்படும் குழந்தை யார் யார் என்பதை கண்டறியவே இப்பட்டியல் தயாரிக்கப்படுகிறது.இவ்வாறு அவர்கள் கூறினர்.






