search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மடத்துக்குளம் பகுதியில் நெல் நடவுப்பணிகள் தீவிரம்
    X

    கோப்புபடம்

    மடத்துக்குளம் பகுதியில் நெல் நடவுப்பணிகள் தீவிரம்

    • கடந்த 2 ஆண்டுகளாக அமராவதி அணையின் நீர் இருப்பு தொடர்ந்து திருப்திகரமாக உள்ளது.
    • வம்பன் 8 மற்றும் வம்பன் 10 ரக உளுந்து விதைகள் 3 டன் இருப்பு உள்ளது.

    மடத்துக்குளம்:

    மடத்துக்குளம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் விவசாயம் பிரதான தொழிலாக உள்ளது. இங்கு நெல், கரும்பு, வாழை, தென்னை, மக்காச்சோளம் உள்ளிட்ட பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டு வருகின்றன. போதிய விலையின்மை மற்றும் தண்ணீர் பற்றாக்குறை, கூலி ஆட்கள் பற்றாக்குறை உள்ளிட்ட காரணங்களால் இந்த பகுதிகளின் மிக முக்கிய பயிர்களாக விளங்கிய நெல், கரும்பு ஆகியவற்றின் சாகுபடிப் பரப்பு குறைந்து வந்தது.

    இந்த நிலையில் கடந்த 2 ஆண்டுகளாக அமராவதி அணையின் நீர் இருப்பு தொடர்ந்து திருப்திகரமாக உள்ளது. இதனைக்கருத்தில் கொண்டு அமராவதி பழைய ஆயக்கட்டு பகுதிகளில் மீண்டும் நெல் சாகுபடி செய்வதில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். தற்போது பாசனத்துக்காக அமராவதி ஆறு மற்றும் பிரதான கால்வாயில் நீர் திறக்கப்பட்டுள்ளது.

    இதனால் கொழுமம், குமரலிங்கம், மடத்துக்குளம், கணியூர், காரத்தொழுவு, சோழமாதேவி உள்ளிட்ட பகுதிகளில் நெல் நடவுப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. நாற்றங்கால் அமைத்து நெல் நடவு செய்வது மட்டுமல்லாமல் ஒருசில விவசாயிகள் நேரடி நெல் விதைப்பிலும் ஈடுபட்டு வருகிறார்கள். இதற்கென பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட நேரடி நெல் விதைப்பு எந்திரங்களையும் பயன்படுத்தி வருகிறார்கள்.

    இந்தநிலையில் மடத்துக்குளம் வேளாண்மைத்துறை அலுவலகத்தில் விதைகள் மற்றும் நுண்ணூட்ட உரங்கள் போதிய அளவில் இருப்பு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது:-

    ஆயக்கட்டு பாசனப்பகுதிகளில் சாகுபடி மேற்கொள்ளும் வகையில் கோ 51 ரக நெல் விதைகள் 12 டன் அளவுக்கு இருப்பு உள்ளது. மேலும் மானாவாரி சாகுபடிக்கு ஏற்ற வகையில் வம்பன் 8 மற்றும் வம்பன் 10 ரக உளுந்து விதைகள் 3 டன் இருப்பு உள்ளது. இதுதவிர நிலக்கடலை விதைகள் 3 டன் அளவுக்கு தயாராக உள்ளது.

    உரிய பரிசோதனைகள் முடிந்து சான்று பெற்ற பிறகு விவசாயிகளுக்கு வினியோகிக்கப்படும். மேலும் நெல், தென்னை உள்ளிட்ட பயிர்களுக்கான நுண்ணூட்டச் சத்துகள் போன்றவையும் இருப்பில் உள்ளது. எனவே தேவைப்படும் விவசாயிகள் மடத்துக்குளம் வேளாண்மைத்துறை அலுவலகத்தையோ அல்லது தங்கள் பகுதி வேளாண்மை அலுவலரையோ தொடர்பு கொண்டு பெற்றுக் கொள்ளலாம் என்று அதிகாரிகள் கூறினர்.

    Next Story
    ×