என் மலர்
திருப்பூர்
- நூல் விலை சீராக இருந்தால், வர்த்தகம் எந்த ஒரு தொய்வும் இன்றி இருக்கும்.
- நூல் விலையை நூற்பாலைகள் மாதத்திற்கு இருமுறை அறிவிப்பதாக தெரிவித்துள்ளனர்.
திருப்பூர்:
செப்டம்பர் மாதத்திற்கான நூல் விலை கிலோவுக்கு ரூ.5 உயர்த்தி நூற்பாலைகள் அறிவிப்பு வெளியிட்டுள்ளன.
பின்னலாடை தயாரிப்புக்கு மிக முக்கிய மூலப்பொருளாக நூல் இருந்து வருகிறது. நூல் விலையை பொறுத்து ஆடைகளின் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. ஆர்டர்களை பெறுகிற நிறுவனங்கள் அப்போதைய நூல் விலை உள்ளிட்ட செலவுகளை கருத்தில் கொண்டு, ஆடைகளின் விலையை வர்த்தகர்கள் மற்றும் வியாபாரிகளுக்கு தெரிவிப்பார்கள். இதன் பின்னர் அவர்கள் கொடுக்கிற ஆர்டர்களின் படி ஆடைகள் தயாரித்து அனுப்பிவைக்கப்படும்.
இவ்வாறாக நூல் விலை சீராக இருந்தால், வர்த்தகம் எந்த ஒரு தொய்வும் இன்றி இருக்கும். ஆனால் நூல் விலை அடிக்கடி மாற்றம் ஏற்படுவதால், தொழில்துறையினர் பல்வேறு பிரச்சினைகளை சந்தித்து வருகிறார்கள்.
ஏற்கனவே போடப்பட்ட ஒப்பந்தத்தை தாண்டி உற்பத்தி செலவு அதிகரிக்கும் பட்சத்தில், ஆடைகளின் விலையை நூல் விலையை காட்டி உயர்த்தி கேட்டால், ஆர்டர்கள் ரத்தும் ஆகும். இப்படிப்பட்ட சூழ்நிலையில் பனியன் தொழில் நடந்து வருகிறது. இதற்கிடையே தொழில்துறையினர் சற்றும் எதிர்பார்க்காத வகையில், நூல் விலையை நூற்பாலைகள் மாதத்திற்கு இருமுறை அறிவிப்பதாக தெரிவித்துள்ளனர்.
அதன்படி கடந்த மாதம் 1ந் தேதி வெளியிட்ட அறிவிப்பில் நூல் விலையில் மாற்றம் இல்லை. ஆனால் கடந்த 16-ந் தேதி 2-வது கட்டமாக நூற்பாலைகள் நூல் விலையை கிலோவுக்கு ரூ.10 உயர்த்தின. இதனால் மீண்டும் ஏறுமுகத்திற்கு நூல் விலை சென்றுள்ளதால் தொழில்துறையினர் கலக்கம் அடைந்தனர்.
இதற்கிடையே செப்டம்பர் மாதத்திற்கான நூல் விலை உயருமா? அல்லது குறையுமா? என தொழில்துறையினர் நூற்பாலைகள் அறிவிப்பை எதிர்பார்த்தபடி இருந்தனர். அதன்படி இன்று காலை நூற்பாலைகள் நூல் விலை அறிவித்தனர். இதில் 10 முதல் 30 கோம்டு வரை உள்ள நூல்கள் கிலோவுக்கு ரூ.7ம், 34 கோம்டு மற்றும் அதற்கு மேல் கிலோ ரூ.5ம் உயர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது ஒரு கிலோவுக்கு 10-வது நம்பர் கோம்டு நூல் விலை ரூ.182-க்கும், 16-ம் நம்பர் ரூ.192-க்கும், 20-வது நம்பர் ரூ.250-க்கும், 24-வது நம்பர் ரூ.262-க்கும், 30-வது நம்பர் ரூ.272-க்கும், 34-வது நம்பர் ரூ.285-க்கும், 40-வது நம்பர் ரூ.305-க்கும், 20-வது நம்பர் செமி கோம்டு நூல் ரூ.242-க்கும், 24-வது நம்பர் ரூ.252-க்கும், 30-வது நம்பர் ரூ.262-க்கும், 34-வது நம்பர் ரூ.275-க்கும், 40-வது நம்பர் ரூ.295-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
- தற்சார்பு பொருளாதாரத்தை கொடுத்து பெருமையோடு வாழும் வாழ்க்கையை கொடுப்போம்.
- தமிழகத்தில் மக்களுக்கு வருமானம் கொடுத்து அதன் மூலம் வாழ்க்கை தரத்தை உயர்த்தி இருக்க முடியும்.
திருப்பூர்:
திருப்பூர் மாவட்ட நாம் தமிழர் கட்சியின் சார்பில் தற்சார்பு பொருளாதாரம் குறித்த பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியதாவது:-
தற்போது உலகம் வர்த்தக மயமாகிவிட்டது. உலக வர்த்தக அமைப்பில் பெருமுதலாளிகள், தொழில் அதிபர்கள் உள்ளனர். இவர்கள் கல்வி, மருத்துவம், குடிநீர், சாலை, போக்குவரத்து ஆகியவற்றை சேவையாக பார்க்காமல் வர்த்தகம் செய்யும் தொழிலாக்கிவிட்டனர். தனியார்மயம், தாராளமயம், உலகமயமாக்கல் மூலமாக கல்வி, மருத்துவம், சாலை, குடிநீர் போன்றவை தனியார்வசமாகி வருகிறது.
கேடுவிளைவிக்கும் அணுஉலை, அனல்மின்நிலையத்தை அரசு வைத்துள்ளது. ஆனால் கேடுவிளைவிக்காத காற்றாலை மின்சாரம், சூரிய ஒளிமின்சாரத்தை தனியாரிடம் கொடுத்துவிட்டனர். ஜி.எஸ்.டி. வரி மூலமாக தொழில்களை இழந்துவிட்டனர்.
நாங்கள் ஆட்சிக்கு வந்தால் உணவு ஏற்றுமதி செய்யப்படும். எங்கள் ஆட்சியில் 5 ஆண்டுகள் வாழ்ந்து பாருங்கள். தற்சார்பு பொருளாதாரத்தை கொடுத்து பெருமையோடு வாழும் வாழ்க்கையை கொடுப்போம்.
பொதுமக்களுக்கும், வாக்காளர்களுக்கும் பணம் கொடுப்பதால் வறுமை நாளுக்கு நாள் கூடிக்கொண்டே செல்கிறது. மக்களை வறுமையில் வைத்துக்கொண்டு இலவசங்களை வழங்குவது ஏற்புடையதல்ல. தமிழகத்தில் மக்களுக்கு வருமானம் கொடுத்து அதன் மூலம் வாழ்க்கை தரத்தை உயர்த்தி இருக்க முடியும். ஆனால் ஆட்சியாளர்கள் அவ்வாறு செய்யவில்லை.
கியாஸ் சிலிண்டர் விலையை ரூ.200 குறைத்து இருப்பதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. 5 மாநிலங்களில் விரைவில் தோ்தல் வரவிருப்பதே விலை குறைப்புக்கு காரணம். மீண்டும் பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தால் கியாஸ் சிலிண்டர் விலை ரூ.2 ஆயிரமாக உயா்த்த ப்பட்டாலும் ஆச்சரியப்ப டுவதற்கு இல்லை.
தமிழகத்தில் 1500 அரசுப்பள்ளிக்கட்டிடங்கள் மிகவும் மோசமான நிலையில் உள்ளன. பள்ளிக்கூடங்களை கட்டிக்கொடுப்பதில் முனைப்பு காட்டுவதில்லை. தமிழகத்தில் கட்டப்படும், கட்டி முடிக்கப்படும் அனைத்து கட்டிடங்களுக்கும் கலைஞர் கருணாநிதியின் பெயர் மட்டுமே வைக்கப்படுகிறது. காமராஜ் கல்விக்கூடங்களை திறந்து வைத்தார். தி.மு.க.வினர் மது கூடங்களை திறந்து வைத்தனர். வருகிற 2024 நாடாளுமன்றத் தேர்தலில் நாம் தமிழர் கட்சி யாருடனும் கூட்டணி இல்லை தனித்தே போட்டியிடும்.இவ்வாறு அவர் கூறினார்.
- உண்ணாவிரத போராட்டத்தின் போது மத்திய அரசுக்கு எதிராகவும் சட்ட மசோதாவை திரும்ப பெற கோரியும் பதாகைகள் வைக்கப்பட்டிருந்தது.
- போராட்டத்தில் மூத்த வக்கீல்கள், பெண் வக்கீல்கள், இளம் வக்கீல்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
திருப்பூர் :
குற்றவியல் நடைமுறை சட்டம், இந்திய சாட்சிய சட்டம், இந்திய தண்டனை சட்டம் ஆகியவற்றின் பெயர்களை சமஸ்கிருத மொழியிலும் இந்தி மொழியிலும் மாற்றம் செய்வதற்கான சட்ட மசோதாவை தாக்கல் செய்துள்ள மத்திய அரசை கண்டித்து திருப்பூரில் பாண்டிச்சேரி மற்றும் தமிழக வக்கீல்கள் சங்கம் சார்பில் தொடர் போராட்டம் நடைபெற்று வருகிறது.
இந்தநிலையில் இன்று கோரிக்கையை வலியுறுத்தி கோர்ட்டை புறக்கணித்து வக்கீல்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். திருப்பூர் கோர்ட்டு வளாகம் முன்பு நடைபெற்ற உண்ணாவிரத போராட்டத்திற்கு திருப்பூர் வக்கீல் சங்க தலைவர் பழனிசாமி தலைமை தாங்கினார்.
இந்த உண்ணாவிரத போராட்டத்தில் மூத்த வக்கீல்கள் கே. என் .சுப்பிரமணியம், பாப்பா மோகன் ,பூபேஸ் மற்றும் பலர் கலந்து கொண்டு கோரிக்கையை வலியுறுத்தி பேசினர்.
அப்போது மத்திய அரசு மறைமுகமாக இந்தியையும் சமஸ்கிருதத்தையும் திணிக்கும் விதமாக இது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருவது கண்டனத்துக்குரியது. இந்த சட்ட மசோதாவை திரும்பப் பெறும் வரை எங்களது போராட்டம் ஓயாது என்றனர்.
உண்ணாவிரத போராட்டத்தின் போது மத்திய அரசுக்கு எதிராகவும் சட்ட மசோதாவை திரும்ப பெற கோரியும் பதாகைகள் வைக்கப்பட்டிருந்தது. போராட்டத்தில் மூத்த வக்கீல்கள், பெண் வக்கீல்கள், இளம் வக்கீல்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
- பல்லடம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில வாரங்களாகவே வெயில் அதிகமாக இருந்தது.
- சுமார் 30 நிமிடம் தொடர்ந்து பெய்த மழையால் தட்பவெட்ப நிலை குளிர்ச்சியாக மாறியது.
பல்லடம்:
பல்லடம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில வாரங்களாகவே வெயில் அதிகமாக இருந்தது. சில நேரங்களில் இது ஆகஸ்ட் மாதமா?, அல்லது ஏப்ரல்,மே மாதமா? என நினைக்கும் வகையில் வெயிலின் தாக்கம் அதிக அளவில் இருந்தது. இந்த நிலையில் நேற்று மாலை பல்லடம் பகுதியில் இடி,மின்னலுடன் மழை பெய்தது.இந்த நிலையில் பல்லடம் பெரியார் நகரில் உள்ள சுந்தர்ராஜ் என்பவரது வீட்டில் இருந்த தென்னை மரத்தில் இடி தாக்கியதால் தீப்பிடித்து எரிந்தது.
இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள் இது குறித்து பல்லடம் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து சம்பவ இடம் வந்த தீயணைப்புத் துறையினர் தண்ணீரை பீய்ச்சி அடித்து தென்னை மரத்தில் பற்றிய தீயை அணைத்தனர். இதனால் தென்னை மரம் தீயினால் முழுவதும் எரியாமல் தப்பியது. சுமார் 30 நிமிடம் தொடர்ந்து பெய்த மழையால் தட்பவெட்ப நிலை குளிர்ச்சியாக மாறியது.
இதனால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
- குற்றவாளிகளை விடுதலை செய்வதில் தமிழகத்தை ஆளும் தி.மு.க. அரசு தீவிரம் காட்டி வருகிறது.
- குண்டு வெடிப்பில் சம்பந்தப்பட்டவர்கள் சாதாரணமான குற்றவாளிகள் அல்ல
திருப்பூர் :
சிவசேனா கட்சியின் மாநில இளைஞரணி தலைவர் அட்சயா திருமுருக தினேஷ் தலைமையில் நிர்வாகிகள் ஜனாதிபதி, பிரதமர், தலைமை நீதிபதி ஆகியோருக்கு ஒரு கோரிக்கை மனு அனுப்பி உள்ளனர். அதில் அவர்கள் கூறியிருப்பதாவது:-
தலைவர்கள் பிறந்த நாள்களில் சிறைச்சாலைகளில் கைதிகளுக்கு மன்னிப்பு கொடுப்பது, விடுதலை செய்வது என்பது ஒரு வழக்கமாக உள்ளது.அதன் பெயரில் குற்றவாளிகள் தப்பித்து வருகிறார்கள். ஆனால் கோவை குண்டு வெடிப்பில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை விடுதலை செய்வதில் தமிழகத்தை ஆளும் தி.மு.க. அரசு தீவிரம் காட்டி வருகிறது.
மேற்படி குண்டு வெடிப்பில் சம்பந்தப்பட்டவர்கள் சாதாரணமான குற்றவாளிகள் அல்ல. பொருளாதார சீர்கேடுகளை உண்டு பண்ணுதல் போன்ற குற்றங்களை செய்து மன்னிக்க தகுதியில்லாத நிலையில் சிறையில் உள்ளார்கள். மேற்படி நபர்களை விடுதலை செய்ய தி.மு.க., அரசு முனைப்பு காட்டுவதை சிவசேனா கட்சி சார்பில் வன்மையாக கண்டிக்கிறோம்.
மேலும் தி.மு.க. அரசு சிறுபான்மையினர்களின் ஓட்டு வங்கிக்காக மேற்படி செயல்களில் தீவிரம் காட்டி வருவதாக தெரிகிறது. இது நாட்டு மக்களின் இயல்பான வாழ்வியலை சீர்குலைக்கும் நோக்கமே ஆகும். எனவே கோவை குண்டு வெடிப்பு வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை விடுவிக்க தடை விதிக்க வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
- 16 வயதிற்குள்பட்ட பிரிவில் மாணவா்கள், மாணவிகளுக்கு தனித்தனியே போட்டிகள் நடைபெற்றன.
- 19 வயதுக்குட்பட்டவா்களுக்கான பிரிவில் லூா்து மாதா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி அணியும் வெற்றிபெற்றன.
உடுமலை
உடுமலையைச் சோ்ந்த டா்எப்-2022 என்ற அமைப்பு சாா்பில் தனியாா் பள்ளிகளுக்கு இடையேயான கால்பந்து போட்டி பாலப்பம்பட்டியில் உள்ள செயற்கை புல் மைதானத்தில் நடைபெற்றது. 16 வயதிற்குள்பட்ட பிரிவில் மாணவா்கள், மாணவிகளுக்கு தனித்தனியே போட்டிகள் நடைபெற்றன. இதில், 10-க்கும் மேற்பட்ட அணிகள் பங்கேற்றன.
மணவா்கள் பிரிவு இறுதி ஆட்டத்தில் ஆா்ஜிஎம் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, சீனிவாசா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி அணிகள் மோதின. இப்போட்டி டிராவில் (சமநிலை) முடிந்ததால் பெனால்டி ஸ்ட்ரோக் முறை கடைப்பிடிக்கப்பட்டது.இதில், 5-3 என்ற கோல் கணக்கில் ஆா்ஜிஎம் பள்ளி அணி வெற்றிபெற்றது.
மாணவிகள் பிரிவு இறுதி ஆட்டத்தில் பெதப்பம்பட்டி என்.வி. உயா்நிலைப் பள்ளி, குறிச்சிக்கோட்டை ஆா்விஜி மேல்நிலைப் பள்ளி அணிகள் மோதின. இதில், என்.வி. உயா்நிலைப் பள்ளி அணி 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றது.
வெற்றிபெற்ற அணிகளுக்கு கோப்பை வழங்கப்பட்டது.
உடுமலை வட்ட குறுமைய விளையாட்டுப் போட்டிகளில் மாணவிகளுக்கான கூடைப்பந்து போட்டி நடைபெற்றது.
உடுமலை நேதாஜி மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டிக்கு நகரமன்றத் தலைவா் மு.மத்தீன் தலைமை வகித்தாா். திமுக., நகரச் செயலாளா் சி.வேலுசாமி போட்டிகளை தொடங்கிவைத்தாா்.
இதில், 14, 17, 19 வயதுக்குட்பட்டவர்களுக்கான 3 பிரிவுகளில் போட்டிகள் நடைபெற்றன. இதில், 14 வயதுக்குட்பட்டவா்களுக்கான பிரிவில் குறிச்சிக்கோட்டை ஆா்விஜி., மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி அணியும், 17 வயதுக்குட்பட்டவா்களுக்கான பிரிவில் சாந்தி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி அணியும், 19 வயதுக்குட்பட்டவா்களுக்கான பிரிவில் லூா்து மாதா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி அணியும் வெற்றிபெற்றன.
போட்டிகளை உடற்கல்வி ஆசிரியா் விஜயபாண்டி ஒருங்கிணைத்திருந்தாா்.
- மாற்று இடம் வழங்க நடவடிக்கை எடுக்கக் கோரி அனைத்து வியாபாரிகள் சங்கத்தினா் கோரிக்கை விடுத்துள்ளனா்.
- சாலையை ஆக்கிரமித்து கடைகளை நடத்துவதால் விபத்துகள் ஏற்படுகின்ற
அவிநாசி:
அவிநாசியில் சாலையோர வியாபாரிகளுக்கு மாற்று இடம் வழங்க நடவடிக்கை எடுக்கக் கோரி அனைத்து வியாபாரிகள் சங்கத்தினா் கோரிக்கை விடுத்துள்ளனா்.
இதுகுறித்து அவிநாசி அனைத்து வியாபாரிகள் சங்கத்தினா் தாசில்தாரிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:- அவிநாசி நகரப் பகுதியில் கடைகளின் முன் உள்ள சாலையோரத்தில் புதிது புதிதாக கடைகள் உருவாகி செயல்பட்டு வருகின்றன. சாலையை ஆக்கிரமித்து கடைகளை நடத்துவதால் விபத்துகள் ஏற்படுகின்றன. சாலையோர கடைகளால் பாதசாரிகள், வாகன ஓட்டிகள் பாதிக்கப்படுகின்றனா்.
எனவே, பாதசாரிகள், வாகன ஓட்டிகளுக்கு இடையூறு இல்லாத வகையிலும், சாலையோர வியாபாரிகளின் வாழ்வாதாரம் பாதிக்காத வகையிலும் அவா்களுக்கு மாற்று மாற்று இடம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- கருப்பண்ணசாமி கோவிலுக்கு சொந்தமான 23 வீடுகளுடன் கூடிய 6 ஏக்கா் நிலம் உள்ளது.
- இந்து சமய அறநிலையத் துறைக்குச் சொந்தமான இடம் என்ற அறிவிப்பு பதாகையும் வைக்கப்பட்டது.
காங்கயம்:
திருப்பூா் மாவட்டம் காங்கயம் வட்டம் அய்யம்பாளையத்தில் உள்ள ஏரி கருப்பண்ணசாமி கோவிலுக்கு சொந்தமான 23 வீடுகளுடன் கூடிய 6 ஏக்கா் நிலம், உத்தமபாளையம் மாரியம்மன் கோவிலுக்குச் சொந்தமான ஒரு வீட்டுடன் கூடிய 30 சென்ட் நிலம், இலக்கமநாயக்கன்பட்டி அழகேஸ்வரன் கோவிலுக்குச் சொந்தமான 14.04 ஏக்கா் நிலம் என மொத்தம் 20.34 ஏக்கா் நிலம் ஆக்கிரமிப்பில் இருந்து வந்தது.
இது தொடா்பாக இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையா் சி.குமரதுரை அறிவுறுத்தலின்பேரில் உதவி ஆணையா் கருணாநிதி தலைமையில் ஆக்கிரமிப்பாளா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தப்பட்டது. இதையடுத்து மேற்கண்ட நிலங்கள் மீட்கப்பட்டு கோவில் செயல் அலுவலா்களிடம் ஒப்படைக்கப்பட்டன.
மேலும் மீட்கப்பட்ட பகுதிகளில் இந்து சமய அறநிலையத் துறைக்குச் சொந்தமான இடம் என்ற அறிவிப்பு பதாகையும் வைக்கப்பட்டது. மீட்கப்பட்ட நிலங்களின் தற்போதைய மதிப்பு ரூ.10 கோடி இருக்கும் என இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.
- விநாயகர் சதுர்த்தி விழாவினை முன்னிட்டு பாதுகாப்பு பணிகள் குறித்து கலந்தாய்வுக்கூட்டம் நடைபெற்றது
- ஊர்வலத்தில் பட்டாசு, வெடிகள் போன்றவைகளை உபயோகிக்கக் கூடாது
திருப்பூர்:
திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் விநாயகர் சதுர்த்தி விழாவினை முன்னிட்டு சிலை நிறுவுதல் மற்றும் விசர்ஜன ஊர்வலத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய பாதுகாப்பு பணிகள் குறித்து அரசு அலுவலர்களுடனான கலந்தாய்வுக்கூட்டம் நடைபெற்றது.
இது குறித்து மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் தெரிவித்ததாவது:-
விநாயகர் சிலை அமைப்பாளர்கள் நிறுவுவதற்கு மாநகராட்சி பகுதியினை பொறுத்தவரையில் தொடர்புடைய காவல் உதவி ஆணையர்களிடமும், ஊரகப்பகுதிகளில் தொடர்புடைய வருவாய் கோட்டாட்சியர்கள் ஆகியோரிடமும் உரிய அனுமதி பெற்று விநாயகர் சிலைகளை நிறுவிட வேண்டும்.சிலைகள் — சுற்றுச்சூழலை பாதிக்காத வகையில் களிமண்ணால் ஆனதாக இருக்க வேண்டும். சிலைகளுக்கு நீர் நிலைகளை மாசுபடுத்தாத இயற்கை வர்ணங்கள் மட்டுமே பூசப்பட்டிருக்க வேண்டும். ரசாயன வர்ணப்பூச்சு மற்றும் பிளாஸ்டர் ஆப் பாரிஸ் போன்றவற்றால் ஆன சிலைகள் பயன்படுத்தக்கூடாது. பிரதிஷ்டை செய்யப்படும் சிலைகளின் உயரம் பீடம் மற்றும் மேடையுடன் சேர்த்து அதிகபட்சம் 10 அடிக்கும் மேலாக இருக்ககூடாது.
விநாயகர் சிலை நிறுவப்படும் இடங்களில் எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்களை கொண்டு மேற்கூரை மற்றும் பக்கவாட்டில் தடுப்புகள் அமைக்கக்கூடாது. இதர மத வழிபாட்டுத்தலங்கள், கல்வி நிலையங்கள், மருத்துவமனைகள் ஆகியவற்றின் அருகில் சிலைகளை நிறுவுதல் கூடாது. விநாயகர் சதுர்த்தி விழா தொடர்பாக சம்மந்தப்பட்ட அமைப்பினரால் நிறுவப்படும் ஒவ்வொரு சிலைக்கும் 24 மணி நேரமும் சிலையின் பாதுகாப்பிற்கு பொறுப்பு ஏற்கும் வகையில் பொறுப்பாளர்களை நியமித்திட வேண்டும்.
மாநகராட்சி பகுதியினை பொறுத்தவரையில் தொடர்புடைய காவல் உதவிஆணையர்களிடமும் ஊரகப் பகுதிகளில் தொடர்புடைய சார் ஆட்சியர்-வருவாய் கோட்டாட்சியர்கள் ஆகியோரிடமும் அதன் விபரங்களை தெரிவிக்கப்பட வேண்டும். விநாயகர் ஊர்வலத்தில் பங்கேற்கும் சிலைகள், காவல் துறையினரால் அனுமதியளிக்கப்பட்ட பாதையில் தான் செல்ல வேண்டும். தவறும் பட்சத்தில் சட்ட ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும். ஊர்வலத்தில் பட்டாசு, வெடிகள் போன்றவைகளை உபயோகிக்கக் கூடாது. ஊர்வலத்தின் போது காவல்துறையின் அனுமதி மறுக்கப்பட்ட இடங்களில் எக்காரணத்தைக் கொண்டும் ஊர்வலம் செல்லக்கூடாது. ஊர்வலத்தின் போது பிற மதத்தினரை குறிப்பிட்டோ அல்லது மற்றவர்களது மனம் புண்படும்படியோ கோஷமிடல் கூடாது. ஊர்வலம் போக்குவரத்திற்கோ, பொதுமக்களுக்கோ இடையூறு இல்லாத வகையில் நடைபெற வேண்டும்.
மேலும் பிரதான சாலைகளில் போக்குவரத்திற்கு இடையூறு இல்லாத வகையில், சாலையின் இடதுபுறமாக செல்ல வேண்டும். ஊர்வலத்தின் போது எந்த விதமானஅசம்பாவிதமும் ஏற்படாமல் இருப்பதற்கும், அமைதியாக ஊர்வலம் நடத்தி முடிக்கவும், ஊர்வலத்தை நடத்துகிற பொறுப்பாளர்கள் முழு பொறுப்பினையும் ஏற்க வேண்டும்.
மேலும் விநாயகர் சிலை நிறுவப்படும் இடங்களில் போதுமான மின் விளக்கு வசதிகள் செய்யப்படல் வேண்டும். ஊர்வலத்தின் போது போக்குவரத்திற்கோ, பொது சொத்திற்கோ சேதம் விளைவித்தால் அமை ப்பாளர்கள் தான் முழு பொறுப்பாளர் ஆவார்கள்.
நிறுவப்பட்ட அனைத்து விநாயகர் சிலைகளும் வருவாய் கோட்டாட்சியர்கள்-காவல் உதவி ஆணையர், காவல் துணை கண்காணிப்பாளர்களால் வரையறுக்கப்பட்ட கால அளவிற்குள் விசர்ஜனம் செய்யப்பட வேண்டும். நான்கு சக்கர வாகனங்களான மினி லாரி-டிராக்டர் போன்றவற்றில் மட்டுமே சிலைகள் விசர்ஜனத்திற்காக எடுத்துச் செல்லப்பட வேண்டும். மாட்டுவண்டி-3 சக்கர வாகனங்களில் சிலைகளை எடுத்துச் செல்லக்கூடாது. இது போன்ற வழிகாட்டு நெறிமுறைகளை சம்மந்தப்பட்ட அமைப்புகள் பின்பற்றி நடக்க வேண்டும்.
விநாயகர் சதூர்த்தி திருவிழாவின் போது சட்டம் ஒழுங்கினை பராமரித்திட அனைத்து அமைப்பினரும் ஒத்துழைப்பு நல்க வேண்டும். இவ்வாறு கலெக்டர் தெரிவித்தார்.
இந்த கலந்தாய்வுக்கூட்டத்தில், மாநகர காவல் ஆணையர் பிரவின்குமார் அபிநபு , மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சாமிநாதன், மாவட்ட வருவாய் அலுவலர் ஜெய்பீம் , திருப்பூர் சப்-கலெக்டர் ஸ்ருதன் ஜெய் நாராயணன், உதவி ஆட்சியர் (பயிற்சி) கிர்திகா எஸ்.விஜயன், துணை காவல் கண்காணிப்பாளர் வனிதா, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) விஜயராஜ், துறை சார்ந்த அலுவலர்கள் மற்றும் விழா அமைப்பாளர்கள் கலந்து கொண்டனர்.
- ஒருவன் குணசேகரன் மனைவி செல்வி கழுத்தில் கத்தியை வைத்துக்கொள்ள, மற்றவர்கள் 2 மகன்களை பிடித்துக்கொண்டனர்.
- கொள்ளையில் ஈடுபட்ட மர்மநபர்கள் யாரென்று விசாரணை நடத்தி அவர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
வெள்ளகோவில்:
திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே உள்ள சாவடி பாளையத்தை சேர்ந்தவர் குணசேகரன் ( வயது 47). இவர் தேங்காய் பருப்பு களம் வைத்து நடத்தி வருகிறார். அதன் அருகிலேயே இவரது வீடு உள்ளது. நேற்றிரவு வீட்டில் குணசேகரன் அவரது மனைவி செல்வி மற்றும் மகன்கள் தனுஷ், நிதர்சன் ஆகியோருடன் இருந்தார்.
அப்போது கத்தி மற்றும் இரும்பு ராடுகளுடன் 7 பேர் கொண்ட கும்பல் வீட்டிற்குள் புகுந்தது. பின்னர் அந்த கும்பலில் ஒருவன் குணசேகரன் கழுத்தில் கத்தியை வைத்து கொண்டு மிரட்டினார். மற்றொருவன் தலையில் இரும்பு ராடை வைத்து கொண்டு மிரட்டினான்.
ஒருவன் குணசேகரன் மனைவி செல்வி கழுத்தில் கத்தியை வைத்துக்கொள்ள, மற்றவர்கள் 2 மகன்களை பிடித்துக்கொண்டனர். பின்னர் வீட்டில் இருக்கும் பணம், நகையை எல்லாம் கொடுத்து விடுங்கள். இல்லையென்றால் கொன்று விடுவோம் என்று மிரட்டினர்.
இதையடுத்து வீட்டின் பீரோவை திறந்து அதில் இருந்த 25 பவுன் நகை மற்றும் ரூ.13 லட்சம் பணத்தை கொள்ளையடித்தனர். தொடர்ந்து செல்வி கழுத்தில் அணிந்திருந்த தாலிக்கொடியை அறுத்தனர். இதனிடையே தேங்காய் பருப்பு களத்தில் வேலை செய்யும் தொழிலாளி, குணசேகரன் வீட்டில் இருந்து சத்தம் கேட்பதை கேட்டு சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றார். இதையறிந்த கொள்ளை கும்பல் நகை, பணத்துடன் அங்கிருந்து தப்பி சென்று விட்டனர். கொள்ளை போன நகை பணத்தின் மதிப்பு ரூ.30 லட்சம் இருக்கும் என்று கூறப்படுகிறது.
உடனே இது குறித்து குணசேகரன் காங்கயம் போலீசில் புகார் செய்தார். போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மேலும் அப்பகுதி முழுவதும் கொள்ளையர்களை தேடினர். ஆனால் அவர்கள் சிக்கவில்லை. கொள்ளையில் ஈடுபட்ட மர்மநபர்கள் யாரென்று விசாரணை நடத்தி அவர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவம் காங்கயம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- ஜனவரி - பிப்ரவரி மாதங்களை உள்ளடக்கிய குளிர் பருவத்தில் 14 மி.மீ., அளவுக்கு மழை பெய்ய வேண்டும்.
- பகல் நேரத்தில் அக்னி நட்சத்திர வெயில் போல வெப்ப தாக்கம் அதிகரித்துள்ளது.
உடுமலை:
திருப்பூர் மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை ஏமாற்றிவிட்டதால் நிலத்தடி நீர் மட்டம் சரியும் அபாயம் ஏற்பட்டுள்ளது.ஜனவரி - பிப்ரவரி மாதங்களை உள்ளடக்கிய குளிர் பருவத்தில் 14 மி.மீ., அளவுக்கு மழை பெய்ய வேண்டும். ஜனவரி மாதம் மழை பதிவாகவில்லை. பிப்ரவரி மாதம் மட்டும் 7.75 மி.மீ., அளவுக்கு மட்டும் மழை பதிவாகியுள்ளது.
மார்ச், ஏப்ரல் மற்றும் மே மாதங்களை உள்ளடக்கிய கோடை பருவத்தில் 135.10 மி.மீ., என்ற இயல்பான அளவை காட்டிலும் அதிக மழை பெய்தது. மார்ச் மாதம் 27.34 மி.மீ., - ஏப்ரல் மாதம் 23.53 மி.மீ., - மே மாதம், 105.17 மி.மீ., என 156.04 மி.மீ., அளவுக்கு மழை பதிவானது.
ஜூன் முதல் செப்டம்பர் வரையிலான தென்மேற்கு பருவத்தில் கடந்த 2 மாதங்களில் மழை ஏமாற்றி விட்டது. இம்மாதமும் பருவமழை போக்கு காட்டி க்கொண்டிருக்கிறது. ஜூன் மாதம் 22 மி.மீ., அளவுக்கு பதிவாக வேண்டிய மழை 14.73 மி.மீ., மட்டுமே பதிவாகியுள்ளது.
ஜூலையில் 27.10 மி.மீ., அளவுக்கு இருக்க வேண்டிய மழை 12.76 மி.மீ., மட்டுமே பதிவாகியுள்ளது. இம்மாத (ஆகஸ்டு) மாதத்தின் இயல்பான மழை அளவு 31.70 மி.மீ., ஆனால் நேற்று மாலை வரை 6.24 மி.மீ., அளவுக்கு மட்டும் பதிவாகியுள்ளது.
ஜூன் மாதத்தில் இருந்து தொடர்ச்சியாக மழையளவு குறைந்ததால் வறட்சி மெதுவாக தலைகாட்ட துவங்கி விட்டது. கோடை பருவம் விடைபெற்று 3 மாதமாகியும், வெப்பத்தாக்கம் குறையாமல் கொளுத்தி க்கொண்டிருக்கிறது. பகல் நேரத்தில் அக்னி நட்சத்திர வெயில் போல வெப்ப தாக்கம் அதிகரித்துள்ளது.
இருப்பினும் இப்படியே மழை தலைகாட்டாமல் இருந்தால், வறட்சியின் பிடியில் சிக்க வேண்டியிருக்கும். கிராமங்களில் ஆழ்குழாய் கிணறுகள் வறட்சியை நெருங்கிவிட்டன. ஜூன் மாதத்தில் அதிகபட்சமாக கடந்த ஆண்டில் 45 மி.மீ., மழை பதிவானது. இந்தாண்டு 30 மி.மீ., மழை குறைந்துபோனது.
ஜூலையில் அதிகபட்ச அளவாக கடந்தாண்டு 68.77 மி.மீ., பதிவாகியிருந்தது. இந்தாண்டு 12.75 மி.மீ., மட்டுமே பெய்துள்ளது. கடந்த 2014 மற்றும் 2017ம் ஆண்டு மழை அளவு வெகுவாக குறைந்து போயிருந்தது.அடுத்தபடியாக இந்தாண்டு தென்மேற்கு பருவத்தில் மழை அளவு குறைந்து போயுள்ளது.
இது குறித்து விவசாயிகள் கூறியதாவது:-
கோடை மழை வழக்கம் போல் பொய்த்துவிட்டது.தென்மேற்கு பருவமழை இந்தாண்டு ஏமாற்றிவிட்டது. இப்பருவ மழை நிலத்தடி நீர் செறிவூட்டலுக்கு மிக முக்கியமானது. தென்மேற்கில் மண்ணில் ஈரத்தன்மை ஏற்பட்ட பின்னரே வடகிழக்கு பருவத்தில் நிலத்தடி நீர் உயரும். இதேநிலை தொடர்ந்தால் நிலத்தடி நீர் மட்டம் சரிவது மட்டுமல்ல, கால்நடைகளுக்கு மேய்ச்சல் இல்லாமல் போகும் ஆபத்தும் இருக்கிறது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
- சாலையோரங்களில் கால்நடைகளை மேய்ச்சலுக்கு விடுவது வழக்கம்.
- கேட்பார் யாரும் இல்லாத பட்சத்தில் அந்த கால்நடைகளை உள்ளாட்சி நிர்வாகமே வளர்க்கவும் செய்யலாம்.
திருப்பூர்:
திருப்பூர் மாநகராட்சி உள்ளிட்ட பிற இடங்களில் உள்ள நகராட்சி, பேரூராட்சி பகுதிகளில் சாலைகளில் மாடு, எருமை உள்ளிட்ட கால்நடைகள் அவ்வப்போது சுற்றித்திரிகின்றன. இதனால் வாகன ஓட்டிகள், பாதசாரிகளுக்கு இடையூறு ஏற்படுகிறது. இது குறித்து நகர்ப்புற உள்ளாட்சித்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:-
திருப்பூரை பொறுத்தவரை மாநகராட்சி பகுதி மட்டுமே முழுக்க முழுக்க நகரமாக உள்ளது. மாறாக, பூண்டி நகராட்சி, பல்லடம், வெள்ளகோவில் உள்ளிட்ட நகராட்சிகள், அவிநாசி உள்ளிட்ட பேரூராட்சி பகுதிகள் அனைத்தும் பெரும்பாலும் கிராமப்புறங்களை ஒட்டியுள்ளன.
பேரூராட்சிகளின் வழியாக தான் அருகேயுள்ள கிராமங்களுக்கு மக்கள் செல்கின்றனர். கிராமங்களில் கால்நடைகளை வளர்ப்போர் அதிகம் என்ற நிலையில் அவர்கள் அங்குள்ள மேய்ச்சல் நிலம், சாலையோரங்களில் கால்நடைகளை மேய்ச்சலுக்கு விடுவது வழக்கம். அந்த சமயத்தில் சில கால்நடைகள், நகராட்சி, பேரூராட்சிக்கு சாலைக்கு வந்துவிடும்.
நகர்ப்புற உள்ளாட்சி சட்டப்படி சாலைகளில் திரியும் கால்நடைகளை, பேரூராட்சி, நகராட்சி மற்றும் மாநகராட்சி சார்பில் பட்டி அமைத்து அதில் அடைத்து வைக்கலாம். அதன் உரிமையாளர்கள் வந்து கேட்கும் போது அபராதம் விதிக்கலாம். கேட்பார் யாரும் இல்லாத பட்சத்தில் அந்த கால்நடைகளை உள்ளாட்சி நிர்வாகமே வளர்க்கவும் செய்யலாம்.
மாநகராட்சியில் மட்டுமே அதற்கான கட்டமைப்பு, கால்நடைகளுக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ள மருத்துவர் உள்ளிட்ட வசதிகள் இருக்கும். பெரும்பாலான நகராட்சி மற்றும் பேரூராட்சி பகுதிகளில் இத்தகைய கட்டமைப்பு இல்லை.எனவே சாலைகளில் திரியும் கால்நடைகளை கட்டுப்படுத்தவும், உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கவும் சட்டத்தில் இடமிருந்தாலும், ஆள் பற்றாக்குறை, நடைமுறை சிக்கல் உள்ளிட்ட காரணங்களால் அத்தகைய பணியை உள்ளாட்சி நிர்வாகங்கள் செய்வதில்லை. இவ்வாறு அவர் கூறினார்.






