என் மலர்
திருப்பூர்
- மின் கம்பம் ஒன்று, தாங்கிப் பிடிக்கும் கம்பம் மற்றும் கம்பிகளில்லாமல் நிற்கிறது.
- தினமும் சுமார் 3 ஆயிரம் பேர் அந்த வழியாக சென்று வருகின்றனர்.
பல்லடம்:
பல்லடம் காந்தி ரோட்டில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி உள்ளது. இதன் நுழைவாயில் எதிரே அமைக்கப்பட்டுள்ள மின் கம்பம் ஒன்று, தாங்கிப் பிடிக்கும் கம்பம் மற்றும் கம்பிகளில்லாமல் நிற்கிறது. இந்த மின் கம்பத்திலிருந்து ஏராளமான மின் இணைப்புகள் செல்கின்றன. இதனால் அந்த மின் கம்பம் சாய்ந்த நிலையில் உள்ளது.
எந்த நேரமும் விழும் அபாய நிலையில் உள்ள மின் கம்பத்தால் விபத்து ஏற்படும் வாய்ப்பு உள்ளது. அரசு கல்லூரி மற்றும் அதன் அருகிலேயே உள்ள பெண்கள், ஆண்கள் மேல்நிலைப் பள்ளிகள் இரண்டும் அமைந்துள்ளன. இதனால் தினமும் சுமார் 3 ஆயிரம் பேர் அந்த வழியாக சென்று வருகின்றனர். மின் கம்பம் சாய்ந்து விழும் முன் மின்வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- அறையில் வைத்திருந்த ரூ.1 லட்சத்து 10 ஆயிரம் காணாமல் போனது தெரியவந்தது,
- கைது செய்தவர்களிடம் இருந்த ரூ.30 ஆயிரத்தை கைப்பற்றி காங்கயம் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.
வெள்ளகோவில்:
வெள்ளகோவில் அருகே உள்ள அண்ணாநகர் பகுதியை சேர்ந்த பொன்னுச்சாமி மகன் செந்தில்குமார் (வயது 42). இவர் திருச்சி -கோவை ரோட்டில் வெள்ளமடை என்ற இடத்தில் வாடகை கட்டிடத்தில் கடந்த 4 ஆண்டுகளாக நூல் மில் நடத்தி வருகின்றார். சில மாதங்களுக்கு முன்பு மில்லில் தீ விபத்து ஏற்பட்டு தற்போது பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது.
சம்பவத்தன்று செந்தில்குமார் மில்லின் அறையை பூட்டிவிட்டு வெளியில் சென்று விட்டு மீண்டும் வந்து பார்த்தபோது மில் அறையின் பூட்டை உடைத்து அறையில் வைத்திருந்த ரூ.1 லட்சத்து 10 ஆயிரம் காணாமல் போனது தெரியவந்தது,
இது குறித்து செந்தில்குமார் வெள்ளகோவில் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் வெள்ளகோவில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட போது முத்தூர் அருகே சந்தேகத்தின் பேரில் இருவரை பிடித்து விசாரித்ததில் நூல் மில்லில் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட வெள்ளகோவில், எம்.ஜி.ஆர் நகர்., பகுதியை சேர்ந்த முருகேசன் மகன் கருப்புசாமி , நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் பகுதியை சேர்ந்த தங்கராஜ் மகன் கவுதம் என்பது தெரியவந்தது.
இருவரையும் கைது செய்து அவர்களிடம் இருந்த ரூ.30 ஆயிரத்தை கைப்பற்றி காங்கயம் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். நீதிபதி இருவரையும் சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.அதன் பேரில் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
- 30 விவசாயிகள் கலந்து கொண்டு 315 ஆயிரத்து 876 கிலோ சூரியகாந்தி விதை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர்.
- மொத்தம் ரூ.15லட்சத்து 2ஆயிரத்து 723க்கு வணிகம் நடைபெற்றது.
வெள்ளகோவில்:
வெள்ளகோவில் வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் வாரம்தோறும் செவ்வாயன்று தேங்காய் பருப்பு வியாழனன்று சூரியகாந்தி விதை ஏலம் நடைபெறும் இந்த ஒழுங்கு முறை விற்பனை கூடத்திற்கு கரூர், திருச்சி, திண்டுக்கல், மதுரை. திருப்பூர், ஈரோடு மாவட்ட விவசாயிகள் கலந்து கொண்டு தேங்காய் பருப்பு மற்றும் சூரியகாந்தி விதை விற்பனைக்கு கொண்டு வருவார்கள்.
நேற்று வியாழக்கிழமை 30 விவசாயிகள் கலந்து கொண்டு 315 ஆயிரத்து 876 கிலோ சூரியகாந்தி விதை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர். இதில் முத்தூர், வெள்ளகோவில், காங்கேயம், ஈரோடு பகுதியை சேர்ந்த 4 வியாபாரிகள் கலந்து கொண்டு ஒரு கிலோ சூரியகாந்தி விதை அதிகபட்சமாக ரூ.49.91க்கும், குறைந்தபட்சம் ரூ.44.89க்கும் கொள்முதல் செய்தனர். நேற்று மொத்தம் ரூ.15லட்சத்து 2ஆயிரத்து 723க்கு வணிகம் நடைபெற்றது.
இத்தகவலை வெள்ளகோவில் ஒழுங்குமுறை விற்பனைக்கூட கண்காணிப்பாளர் மகுடேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
- 2 மணி அளவில் பெய்ய தொடங்கிய மழை தொடர்ந்து மதியம் 3.30 மணி வரை பெய்தது.
- நான்கு சக்கர வாகனங்கள் முகப்பு விளக்கு போட்டு ஊர்ந்து சென்றது.
பெருமாநல்லூர்:
திருப்பூர் மாவட்டம், குன்னத்தூர் பகுதியில் கடந்த 4 மாதங்களாக வெயிலின் தாக்கம் மிகவும் அதிகமாக இருந்தது. இதனால் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள விவசாயிகள் மழை இல்லாத காரணத்தினால் மிகவும் கவலையடைந்தனர்.
இந்தநிலையில் நேற்று (வியாழக்கிழமை) மதியம் சுமார் 2 மணி அளவில் மழை வெளுத்து வாங்கியது. தொடர்ந்து மதியம் 3.30 மணி வரை பெய்தது. இதனால் பஸ் நிலையத்தில் இருந்து பெருந்துறை ரோடு, காமராஜர் சிலை வரை மழைநீர் கரைபுரண்டு ஓடியது. கழிவு நீர் கால்வாய் நிரம்பி வழிந்தது. இதனால் வாகன ஓட்டிகள் ஆங்காங்கே ஒதுங்கினர்.
இதேபோல் ஊத்துக்குளி ரோடு சார்பதிவாளர் அலுவலகம் எதிரில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் நான்கு சக்கர வாகனங்கள் முகப்பு விளக்கு போட்டு ஊர்ந்து சென்றது. இந்த மழையினால் அப்பகுதி விவசாயிகள் பெரும் மகிழ்ச்சி அடைந்தனர்.
- விழாவில் கணபதி ஹோமம், 108 தாமரை மகாலட்சுமி, 108 மூலிகை தன்வந்திரி ஆகியவை வைத்து ஹோம பூஜைகள் செய்யப்பட்டது.
- விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் மதியம் அன்னதானம் வழங்கப்பட்டது.
திருப்பூர்:
திருப்பூர் அவிநாசி ரோடு தண்ணீர் பந்தல் காலனியில் ஸ்ரீ விநாயகர், ஸ்ரீ பாலமுருகன், ஸ்ரீ கன்னிமார் ,கருப்பராயன், ஸ்ரீ ஆதிபராசக்தி ஆகிய கோவில்கள் உள்ளது. இந்த கோவிலில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் கும்பாபிஷேகம் நடைபெற்றது. முதலாம் ஆண்டு விழா நேற்று முதல் தொடர்ந்து நடைபெற்றது.
விழாவில் கணபதி ஹோமம், 108 தாமரை மகாலட்சுமி, 108 மூலிகை தன்வந்திரி ஆகியவை வைத்து ஹோம பூஜைகள் செய்யப்பட்டது. மேலும் மூலவர் மூர்த்திகளுக்கு சிறப்பு அலங்கார பூஜை, பௌர்ணமி பூஜை உள்ளிட்டவை நடைபெற்றது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் மதியம் அன்னதானம் வழங்கப்பட்டது.
- அனிதா நீட் தேர்வில் தோல்வியடைந்ததால் தற்கொலை செய்து கொண்டார்.
- அனிதாவிற்கு நினைவஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியில் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
தாராபுரம்:
நீட் தேர்வில் தோல்வியடைந்ததால் தற்கொலை செய்து கொண்ட அனிதாவிற்கு நினைவஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி தாராபுரம் பெரியார் சிலை அருகே நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு தாராபுரம் தி.மு.க. செயலாளர் முருகானந்தம் மற்றும் நகர்மன்ற தலைவர் பாப்பு கண்ணன்,ஒன்றிய குழு தலைவர் செந்தில் குமார் , மாவட்ட வக்கீல் அணி செயலாளர் செல்வராஜ், மாவட்ட மாணவரணி அமைப்பாளர் குகன் , நகர அவைத்தலைவர் கதிரவன், கவுன்சிலர் கண்ணன், வின்னர் ஸ்ரீதர், முன்னாள் எம்.எல்.ஏ., பிரபாவதி பெரியசாமி, மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் சிலம்பரசன் மற்றும் கிளை கழக நிர்வாகிகள், பேரூர் செயலாளர் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.
- திட்டப்பணிகளை விரைவாக முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்.
- காங்கேயம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட நடைபெற்று வரும் திட்டப்பணிகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
காங்கயம்:
காங்கேயம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் ரூ.79.80 லட்சம் மதிப்பீட்டில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டப்பணிகளை கலெக்டர் கிறிஸ்துராஜ் ஆய்வு செய்தார். பின்னர் கலெக்டர் தெரிவித்ததாவது:-
தமிழ்நாடு முதலமைச்சர் திருப்பூர் மாவட்டத்திற்கு பல்வேறு திட்டப்பணிகளை செயல்படுத்தி வருகிறார்கள். இந்த திட்டப்பணிகள் பொதுமக்களுக்கு முழுமையாக கிடைப்பதை உறுதி செய்யும் வகையில் ஆய்வு பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது. காங்கேயம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட நடைபெற்று வரும் திட்டப்பணிகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
அந்த வகையில், திருப்பூர் மாவட்டம், காங்கேயம் ஊராட்சி ஒன்றியம், பாப்பினி ஊராட்சியில் அனைத்துக்கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.12.94 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் வேளாண் பொருட்கள் சேமிப்பு கிடங்கினையும், தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் ரூ.1.81 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் சமூக சுகாதார வளாகத்தையும், பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் ரூ.2.40 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் வீட்டையும் ஆய்வு செய்தனர்.
மேலும் முதல்வரின் கிராம சாலைகள் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.57.47 லட்சம் மதிப்பீட்டில் ஈரோடு தாராபுரம் சாலை முதல் மடவிளாகம் வழியாக நட்டார்பாளையம் சாலை வரை தார் சாலை மேம்பாட்டுப் பணியினையும், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் ரூ.2.59 லட்சம் மதிப்பீட்டில் வரதப்பம்பாளையத்திலிருந்து தொட்டியபட்டி வரை இருபுறமும் சங்கன் பிட் அமைக்கும் பணியினையும், ரூ.2.59 லட்சம் மதிப்பீட்டில் பி.பச்சாபாளையம் முதல் பகவதி பாளையம் வரை இருபுறமும் சங்கன் பீட் அமைக்கும் பணிகள் என மொத்தம் ரூ.79.80 லட்சம் மதிப்பீட்டில் நடைபெற்று பணிகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
திட்டப்பணிகளை விரைவாக முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என அலுவலர்களுக்கு கலெக்டர் அறிவுறுத்தினார். அப்போது காங்கேயம் ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவர் மகேஷ்குமார், காங்கேயம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் விமலாவதி, ஹரிகரன், மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.
- அடையாளம் தெரியாத 7 போ் முகமூடி அணிந்தபடி வீட்டுக்குள் புகுந்து கத்தியைக் காட்டி மிரட்டியுள்ளனா்.
- ரோவில் இருந்த 25 பவுன், ரூ.10 லட்சம் பணம் ஆகியவற்றை கொள்ளையடித்து தப்பி சென்றனா்.
காங்கயம்:
திருப்பூா் மாவட்டம் காங்கயத்தை அடுத்த சாவடிப்பாளையத்தை சோ்ந்தவா் குணசேகரன் (வயது 47). இவா் அதே பகுதியில் தேங்காய் எண்ணெய் ஆலை நடத்தி வருகிறாா். ஆலையின் வளாகத்தில் உள்ள வீட்டில் மனைவி செல்வி (43), மகன்கள் தனுஷ் (20), நிதா்ஷன் (14) ஆகியோருடன் வசித்து வருகிறாா்.
இந்நிலையில், புதன்கிழமை இரவு 10 மணியளவில் வீட்டின் கதவைத் தட்டும் சத்தம் கேட்டு குணசேகரன் கதவைத் திறந்துள்ளாா். அப்போது, அடையாளம் தெரியாத 7 போ் முகமூடி அணிந்தபடி வீட்டுக்குள் புகுந்து கத்தியைக் காட்டி மிரட்டியுள்ளனா்.
பின்னா், கைப்பேசிகளைப் பறித்துக்கொண்டவா்கள் பீரோ சாவியை கேட்டு மிரட்டியுள்ளனா். அவா்களிடம் இருந்து பீரோ சாவியைப் பெற்றுக்கொண்ட கொள்ளையா்கள் குணசேகரன் மற்றும் அவரது மனைவியை கட்டிப்போட்டுவிட்டு பீரோவில் இருந்த 25 பவுன், ரூ.10 லட்சம் பணம் ஆகியவற்றை கொள்ளையடித்து தப்பி சென்றனா்.தடயத்தை மறைப்பதற்காக வீடு முழுவதும் மிளகாய்ப் பொடியைத் தூவிவிட்டு சென்றுள்ளனா்.
இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த காங்கயம் டி.எஸ்.பி., பார்த்தீபன், காவல் ஆய்வாளா் காமராஜ், உதவி ஆய்வாளா் சந்திரன் உள்ளிட்ட போலீசார் கொள்ளையடிக்கப்பட்ட வீட்டில் ஆய்வு செய்தனா். விசாரணையில் முகமூடி அணிந்து வந்த கொள்ளையா்கள் தமிழ், கன்னடத்தில் பேசியது தெரியவந்தது.இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த காங்கயம் போலீசார் 3 தனிப்படைகள் அமைத்து குற்றவாளிகளைத் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனா்.
இந்நிலையில் கோவை மேற்கு மண்டல காவல் துறைத் தலைவா் பவானீஸ்வரி, திருப்பூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சாமிநாதன் ஆகியோா் கொள்ளைச் சம்பவம் நடைபெற்ற வீட்டில் ஆய்வு செய்தனா்.
குணசேகரன் வீட்டில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளது. கடந்த 2 நாட்களுக்கு காங்கயம் பகுதியில் பெய்த பலத்த மழை காரணமாக கேமராவை ஆப் செய்து வைத்திருந்தார். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி கொண்டு கொள்ளையர்கள் தங்கள் கைவரிசையை காட்டியுள்ளனர்.
- மண் சாலைகளை தார்ச்சாலையாக அமைக்க ரூ.2 கோடியே 71 லட்சம் ஒதுக்கப்பட்டு பணிகளுக்கான பூமி பூஜை நடைபெற்றது.
- இதில் பேரூராட்சி கவுன்சிலர்கள், ஒப்பந்ததாரர்கள் உள்பட பொதுமக்கள் பலர் கலந்துகொண்டனர்.
குண்டடம்:
குண்டடம் ருத்ராவதி பேரூராட்சியில் மூலதன மானியத் திட்டத்தின் கீழ் 1-வது வார்டு கொக்கம்பாளையம் சாலை முதல் கிழக்கே ருத்ராவதி பேரூராட்சி சாலை வரையும் மற்றும் வார்டு எண் 8 கணபதிபாளையம் சாலை முதல் காளிபாளையம் சாலை வரை உள்ள மண் சாலைகளை தார்ச்சாலையாக அமைக்க ரூ.2 கோடியே 71 லட்சம் ஒதுக்கப்பட்டு பணிகளுக்கான பூமி பூஜை நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் பேரூராட்சி தலைவர் கண்ணம்மாள் தலைமை தாங்கினார். பேரூராட்சி செயல் அலுவலர் சையது இப்ராஹிம் முன்னிலை வகித்தார். தார்ச்சாலை அமைக்கும் பணிகளை பேரூராட்சி துணைத் தலைவர் மோகன்ராஜ் பூமி பூஜை செய்து ெதாடங்கிவைத்தார். இதில் பேரூராட்சி கவுன்சிலர்கள், ஒப்பந்ததாரர்கள் உள்பட பொதுமக்கள் பலர் கலந்துகொண்டனர்.
- நிர்மலாவின் வீட்டில் 18 பவுன் நகை, ரூ.38,500 திருட்டுப்போனது.
- ஒரு ஆண்டுகளாக இருவரும் பழகி வந்ததால் நிர்மலா வீட்டில் என்னென்ன இருக்கிறது என்பதை நன்கு தெரிந்து கொண்டார்.
திருப்பூர்:
திருப்பூர் செட்டிப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் நிர்மலா. இவர் அப்பகுதியில் டெய்லர் கடை வைத்து நடத்தி வருகிறார். இந்தநிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நிர்மலாவின் வீட்டில் 18 பவுன் நகை, ரூ.38,500 திருட்டுப்போனது.
இது குறித்து வீரபாண்டி போலீஸ் நிலையத்தில் நிர்மலா புகார் கொடுத்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் சந்தேகத்தின் பேரில் நிர்மலாவின் கடைக்கு வந்து செல்லும் மரகதம் என்கிற சுபாவிடம் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் முன்னுக்கு பின் முரணான தகவல்களை தெரிவித்தார். தொடர் விசாரணை நடத்திய போது நிர்மலாவின் கடைக்கு சுபா அடிக்கடி வந்து செல்வதால் இருவரும் நட்பாக பழகி வந்துள்ளனர்.
கடந்த ஒரு ஆண்டுகளாக இருவரும் பழகி வந்ததால் நிர்மலா வீட்டில் என்னென்ன இருக்கிறது என்பதை நன்கு தெரிந்து கொண்டார். சம்பவத்தன்று சுபா நிர்மலா கடையில் இருந்த வீட்டின் சாவியை நைசாக எடுத்துச் சென்று கதவைத் திறந்து பீரோவில் இருந்த நகை பணத்தை திருடி கணவர் விக்னேஷ் மற்றும் விக்னேசின் தம்பி தீனதயாளன் ஆகியோரிடம் கொடுத்துவிட்டு பின்னர் சாவியை கடையில் வைத்து சென்றது தெரியவந்தது. மேலும் திருடிய நகைகளை விக்னேசின் தாய் ஈஸ்வரி விற்றதும் தெரியவந்தது.
இதனையடுத்து வீரபாண்டி போலீசார் மரகதம் என்கிற சுபா (28), ஈஸ்வரி (44), விக்னேஷ் (30), தீனதயாளன் (25) ஆகியோரை கைது செய்தனர். பின்னர் அவர்களிடமிருந்து 61/2 பவுன் நகையை பறிமுதல் செய்தனர். இது குறித்து வீரபாண்டி போலீசார் விசாரித்து வருகின்றனர்.
- மகள் கொலை செய்யப்பட்ட தகவல் அறிந்ததும் சத்யஸ்ரீயின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு திரண்டு வந்தனர்.
- காதலியை கழுத்தை அறுத்து கொன்று காதலன் தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர்:
திருப்பூர் அவிநாசியை சேர்ந்தவர் மணிவண்ணன். இவரது மகள் சத்ய ஸ்ரீ(வயது 21). இவர் திருப்பூர் குமார்நகர் 60 அடி சாலையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் வரவேற்பாளராக பணியாற்றி வந்தார்.
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்குடியை சேர்ந்தவர் நரேந்திரன் (25). இவரும், சத்யஸ்ரீயும் கடந்த 3 ஆண்டுகளாக காதலித்து வந்தனர். அடிக்கடி நேரில் சந்தித்தும், செல்போனில் பேசியும் தங்களது காதலை வளர்த்தனர். கடந்த சில நாட்களாக அவர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் சத்யஸ்ரீ நரேந்திரனுடன் பேசுவதை நிறுத்தினார்.
இந்தநிலையில் இன்று காலை நரேந்திரன் சத்யஸ்ரீ வேலை பார்த்து வரும் தனியார் ஆஸ்பத்திரிக்கு வந்தார். அங்கு வந்ததும் 2பேருக்கும் திடீரென வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த நரேந்திரன் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் சத்யஸ்ரீயின் கழுத்தை அறுத்தார். இதில் அவர் ரத்த வெள்ளத்தில் கீழே சரிந்தார். சிறிது நேரத்தில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பின்னர் நரேந்திரனும் தனது கழுத்தை கத்தியால் அறுத்து கொண்டார். இதில் அவரும் ரத்த வெள்ளத்தில் கீழே சரிந்தார். இதனைப்பார்த்த ஆஸ்பத்திரி பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர்.
உடனே இது குறித்து திருப்பூர் வடக்கு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.
பின்னர் உயிருக்கு போராடிய நரேந்திரனை மீட்டு திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் சத்யஸ்ரீயின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மகள் கொலை செய்யப்பட்ட தகவல் அறிந்ததும் சத்யஸ்ரீயின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு திரண்டு வந்தனர். அவர்கள் சத்யஸ்ரீயின் உடலை பார்த்து கதறி அழுதது சோகத்தை ஏற்படுத்தியது.
நரேந்திரன் கழுத்தை அறுத்து கொண்டதால் அவரால் பேச முடியவில்லை. அவர் பேசினால்தான் இந்த கொலை சம்பவத்திற்கான காரணம் குறித்து முழு தகவலை பெற முடியும். இருப்பினும் இந்த சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருப்பூர் தனியார் ஆஸ்பத்திரிக்குள் புகுந்து காதலியை கழுத்தை அறுத்து கொன்று காதலன் தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- தி.மு.க.வின் ஊழல் சொத்து பட்டியலை அண்ணாமலை வெளியிட்டதை வரவேற்கிறேன்.
- நடிகை விஜயலட்சுமி 11 வருடமாக ஒரே குற்றச்சாட்டை கூறி வருகிறார்.
திருப்பூர்:
திருப்பூரில் இன்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
ஒரே நாடு ஒரே தேர்தல் அவசியமற்றது. அதனால் எந்த பயனும் இல்லை. இது ஒரே நாடா?. உணவு , பழக்கவழக்கம், கலாச்சாரம் மாறுபடும்போது எப்படி தேசத்தை ஒன்றாக்க முடியும். தேர்தல் செலவை மிச்சப்படுத்த ஒரே நாடு ஒரே தேர்தல் என்கிறார்கள். ஒவ்வொரு இடைத்தேர்தல் வரும் போதும் பொதுவான தேர்தல் நடத்தப்படுமா?.
ஓட்டுக்கு காசு கொடுப்பதை நிறுத்தினால் போதும் தேர்தல் செலவு குறையும். முதலில் காவிரியில் தண்ணீர் பெற்று தாருங்கள். பிறகு ஒரே நாடு ஒரே தேர்தல் பற்றி பார்க்கலாம்.
தி.மு.க.வின் ஊழல் சொத்து பட்டியலை அண்ணாமலை வெளியிட்டதை வரவேற்கிறேன். அ.தி.மு.க. சொத்து பட்டியலையும் வெளியிடுங்கள். கர்நாடகா ஊழல் குறித்தும் வெளியிடுங்கள். கர்நாடகாவில் தானே அவர் காவல் துறையில் பணியாற்றினார். அங்கேயே பா.ஜ.க., தலைவராக வேண்டியது தானே. கர்நாடகாவில் அவர் சிங்கம். இங்கே அசிங்கம்.
உயர்நீதிமன்றம் உண்மையை பேசி உள்ளது. லஞ்ச ஒழிப்புத்துறை ஆளுங்கட்சிக்கு ஆதரவாக செயல்படுகிறது. தன்னாட்சி அமைப்புக்கள் என நாம் நம்பி வருகிறோம். அது நமது அறியாமை.
காமராஜர் கொண்டு வந்த திட்டம் மதிய உணவு திட்டம். 50 ஆண்டு மாறி மாறி ஆட்சி செய்து இப்போது தான் பிள்ளைகள் பட்டினி தெரிகிறதா?. திருடனுக்கு திருடன் பாதுகாப்பு. அதனால் தான் நம்மை ஒதுக்க முயல்கின்றனர். நடிகை விஜயலட்சுமி 11 வருடமாக ஒரே குற்றச்சாட்டை கூறி வருகிறார். அதற்காக பயப்படும் ஆள் நான் இல்லை. தேர்தல் வருவதால் என் மீது வீண்பழி சுமத்துகிறார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.






