என் மலர்
திருப்பூர்
- சாலையோர கடைகள் அனைத்தையும் வேறு தனியான ஒரு இடத்திற்கு மாற்றியமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- சாக்கடை வசதி இல்லாததால் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி சுற்றுச்சுவர் சாக்கடை நீர் தேங்கி பெயர்ந்து விழுகிறது.
அவினாசி:
அவினாசி பேரூராட்சி கூட்டம் தலைவர் தனலட்சுமி பொன்னுசாமி தலைமையில் நடந்தது. துணைத் தலைவர் மோகன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் மன்ற பொருள் படித்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதை அடுத்து வார்டு உறுப்பினர்கள் பேசியதாவது:-
தங்கவேல் (3-வது வார்டு):
அவினாசி பேரூராட்சியில் புது பஸ் நிலையம் முதல் பழைய பஸ் நிலையம் வரையிலும் மற்றும் தாலுகா அலுவலகத்தில் இருந்து செங்காடு வரை சாலையோர கடைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அந்த கடைக்காரர்களிடம் ரூ.5 வாங்கிக்கொண்டு வியாபாரம் நடத்த பேரூராட்சி நிர்வாகம் அனுமதித்து வருகிறது.
இதனால் தொழில் வரி, லைசென்ஸ், ஜி.எஸ்.டி. செலுத்தி வாடகைக்கு கடை எடுத்து நடத்தி வருபவர்கள் வியாபாரம் வெகுவாக பாதிப்பதாக வியாபாரிகள் குற்றம் சாட்டி வருகின்றனர். மேலும் அதிக அளவில் சாலையோர கடைகள் பெருகி வருவதால் போக்குவரத்து மிகவும் பாதிப்பு ஏற்படுவதுடன் விபத்துக்கள் நடக்கிறது. எனவே சாலையோர கடைகள் அனைத்தையும் வேறு தனியான ஒரு இடத்திற்கு மாற்றியமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும் வரி இனங்கள் செலுத்துபவர்களிடம் பாதி தொகை கொடுத்து மீதி தொகையை கட்ட சில நாட்கள் தவணை கேட்டால் அதற்கு நிர்வாகம் ஒத்துழைப்பு தராமல் முழுவதையும் கட்டினால் தான் முடியும் என்று கூறி குடிநீர் இணைப்பை துண்டிக்க நடவடிக்கை மேற்கொள்கின்றனர். ஏரி தோட்டத்தில் வடிகால் அமைக்க முதல்-அமைச்சர் மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.1 கோடியே 21 லட்சம் வழங்கிய தமிழக முதல் -அமைச்சர் மு.க.ஸ்டாலின், மற்றும் பேரூராட்சி தலைவர், துணைத் தலைவர் ஆகியோருக்குநன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
ரமணி (17- வது வார்டு): மார்க்கெட் பகுதிக்குள் 40 கடைகள் வெறுமனே கிடக்கிறது. சாலையோர கடைகளை அங்கு கொண்டு செல்லலாம்.
கார்த்திகேயன் (13- வது வார்டு): சங்கமம் குளம் வீதியில் சாக்கடை வசதி இல்லை. அங்கு சாக்கடை வசதி இல்லாததால் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி சுற்றுச்சுவர் சாக்கடை நீர் தேங்கி பெயர்ந்து விழுந்து வருகிறது.மேலும் அப்பகுதியில் வாழும் மக்களும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
இதுகுறித்து பல கூட்டங்களில் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை. எனவே நான் மன்ற கூட்டத்தை விட்டு வெளிநடப்பு செய்கிறேன் என்று கூறியவாறு வெளிநடப்பு செய்தார்.
- பலத்த காயம் அடைந்த அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் பல்லடம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
- தாயார் லதா கொடுத்த புகாரின் பேரில் பல்லடம் போலீசார் விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
பல்லடம்:
ஈரோடு அருகே உள்ள நாராயணன் வலசு பகுதியைச் சேர்ந்த தட்சிணாமூர்த்தி என்பவரது மகன் சந்தானமுருகன் (வயது 30). இவர் பல்லடம் அருகே உள்ள கரடிவாவியில் உள்ள சலூன் கடையில் வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு வேலை முடிந்து மோட்டார் சைக்கிளில் கரடிவாவியிலிருந்து பல்லடம் நோக்கி சென்று கொண்டிருந்தார்.
பல்லடம் அருகே உள்ள அய்யம்பாளையம் வந்தபோது மோட்டார் சைக்கிள் நிலை தடுமாறி ரோட்டில் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. இதில் பலத்த காயம் அடைந்த அவரை, அந்த வழியே சென்றவர்கள் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் பல்லடம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு முதலுதவி பெற்று, மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று சந்தான முருகன் உயிரிழந்தார். இதுகுறித்து அவரது தாயார் லதா கொடுத்த புகாரின் பேரில் பல்லடம் போலீசார் விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
- அதிகாலை வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தவர் திடீரென வாயில் நுரையுடன் வாந்தி எடுத்ததாக கூறப்படுகிறது.
- பல்லடம் போலீசார் பழனிச்சாமி தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை செய்து வருகின்றனர்.
பல்லடம்:
பல்லடம் அருகே உள்ள மாதப்பூர் ஊராட்சி நல்லா கவுண்டம்பாளையத்தை சேர்ந்தவர் பழனிச்சாமி (வயது 60). இவர் விசைத்தறி தொழிலாளியாக பணிபுரிந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று அதிகாலை வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தவர் திடீரென வாயில் நுரையுடன் வாந்தி எடுத்ததாக கூறப்படுகிறது.
இதையடுத்து அவரது மனைவி சிவகாமி அவரை பல்லடம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர் பழனிச்சாமி விஷம் குடித்து இருப்பதாகவும், ஏற்கனவே இறந்துவிட்டதாகவும் தெரிவித்தார். இதையடுத்து சிவகாமி கொடுத்த புகாரின் பேரில் பல்லடம் போலீசார் பழனிச்சாமி தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை செய்து வருகின்றனர்.
- நேற்று 6 ஆயிரம் டன் பிளாஸ்டிக் கழிவுகளை அரியலூர் தொழிற்சாலைக்கு அனுப்பி வைத்தனர்.
- குப்பைகளை மக்கும் குப்பை, மக்காத குப்பை என தரம் பிரித்து நகராட்சி தூய்மை பணியாளர்களிடம் கொடுக்க வேண்டும்.
வெள்ளகோவில்:
வெள்ளகோவில் நகராட்சியில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் தூய்மை பணியாளர்கள் வீடு வீடாக சென்று பொது மக்களிடம் இருந்து மக்கும் குப்பை, மக்காத குப்பை என தரம் பிரித்து சேகரித்து வருகின்றனர். மக்கும் குப்பையை உரமாக்கவும், பிளாஸ்டிக் கழிவுகளை மறு சுழற்சி பயன்பாட்டிற்காக அரியலூரில் உள்ள சிமெண்ட் தொழிற்சாலைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.
நேற்று 6 ஆயிரம் டன் பிளாஸ்டிக் கழிவுகளை அரியலூர் தொழிற்சாலைக்கு அனுப்பி வைத்தனர். நகராட்சி பகுதியில் உள்ள பொதுமக்கள் தங்களது வீடுகளில் உள்ள குப்பைகளை மக்கும் குப்பை, மக்காத குப்பை என தரம் பிரித்து நகராட்சி தூய்மை பணியாளர்களிடம் கொடுத்து உதவ வேண்டுமாறு நகர்மன்ற தலைவர் மு. கனியரசி மற்றும் ஆணையாளர் எஸ்.வெங்கடேஸ்வரன் கேட்டுக் கொண்டுள்ளனர்.
- கோடங்கிபாளையம் அருகே சென்ற போது நிலை தடுமாறி ரோட்டோரம் உள்ள பள்ளத்தில் சரக்கு வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
- சம்பவ இடம் சென்ற பல்லடம் போலீசார் அவர்களை மீட்டு பல்லடம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பல்லடம்:
கோவை மாவட்டம் சூலூர் அருகே உள்ள ராவுத்தூர் பிரிவில் தனியாருக்கு சொந்தமான பழைய இரும்பு கடை செயல்படுகிறது. பல்லடம் அருகே உள்ள கோடங்கிபாளையம் ஊராட்சி ராசா கவுண்டம்பாளையம் என்ற இடத்தில் இரும்பு லோடை இறக்கிவிட்டு, கோடங்கிபாளையம் நோக்கி சரக்குவேன் சென்று கொண்டிருந்தது.
வேனை பீகாரைச் சேர்ந்த ராம் பகதூர் பிஸ்வான் என்பவரது மகன் ராஜிவ் பிஸ்வான் (வயது 44), என்பவர் ஓட்டி சென்றார். வேனின் பின்புறம் பீகாரைச் சேர்ந்த ராம் கிஷான், பஸ்வான் மகன் பிரேம் பசுவான் வயது (24), மற்றும் தர்மேந்திர மோகியா (வயது 30), ஆகியோர் அமர்ந்திருந்தனர். கோடங்கிபாளையம் அருகே சென்ற போது நிலை தடுமாறி ரோட்டோரம் உள்ள பள்ளத்தில் சரக்கு வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இதில் வேனில் இருந்த மூவரும் காயம் அடைந்தனர். அந்த வழியே சென்றவர்கள் கொடுத்த தகவலை அடுத்து சம்பவ இடம் சென்ற பல்லடம் போலீசார் அவர்களை மீட்டு பல்லடம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து பல்லடம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
- கொரோனா சமயத்தில் பிரச்சனை ஏற்பட்டு நாககுமார் வீட்டை காலி செய்து வேறு வீட்டிற்கு சென்றுவிட்டார்.
- தான் குடியிருந்த வீட்டில் வைத்திருந்த தனது பொருட்கள் உள்ளிட்ட உடைமைகளை வீட்டு உரிமையாளர் தரமறுக்கிறார்.
அவினாசி:
திருப்பூர் மாவட்டம் அவினாசி ரங்கா நகர் பகுதியை சேர்ந்த வேலுசாமி என்பவரது வீடு கமிட்டியார் காலனி பகுதியில் உள்ளது. இந்த வீட்டில் கடந்த 2020-ம் ஆண்டு முதல் நாககுமார் (வயது 50) என்பவர் குடும்பத்துடன் வாடகைக்கு குடியிருந்ததாக கூறப்படுகிறது. கொரோனா சமயத்தில் பிரச்சனை ஏற்பட்டு நாககுமார் வீட்டை காலி செய்து வேறு வீட்டிற்கு சென்றுவிட்டார்.
இந்த நிலையில் நேற்று தான் குடியிருந்த வீட்டில் வைத்திருந்த தனது பொருட்கள் உள்ளிட்ட உடைமைகளை வீட்டு உரிமையாளர் தரமறுக்கிறார் என்று நாககுமார் மற்றும் அவரது உறவினர்கள் குடியிருந்தவீட்டின் முன் தரையில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவலறிந்து அவினாசி போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜவேல், சப் இன்ஸ்பெக்டர் கோவிந்தராஜ் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர்.இதையடுத்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் உங்கள் பிரச்சனை குறித்து கோர்ட்டில் வழக்கு தொடுத்து தீர்வுகாணுங்கள் என்று கூறியதையடுத்து தர்ணா போராட்டத்தை கைவிட்டு அவர்கள் கலைந்து சென்றனர்.
- குழந்தைகளுக்கு 5 மற்றும் 15 வயதில் கைரேகை மற்றும் கருவிழி பதிவை கண்டிப்பாக புதுப்பிக்க வேண்டும்.
- இந்த முகாமில் புதிதாக அஞ்சலக கணக்கும் துவங்கலாம்.
பல்லடம்:
பல்லடம் அருகே உள்ள உகாயனூர் ஊராட்சியில் ஆதார் சிறப்பு முகாம் நேற்று ஊராட்சி அலுவலக வளாகத்தில் நடைபெற்றது. இதனை ஊராட்சி மன்ற தலைவர் ரேவதி கனகராஜ் தொடங்கி வைத்தார். உகாயனூர் ஊராட்சி மற்றும் தபால் அலுவலகம் இணைந்து 2 நாட்கள் நடத்தும் இந்த முகாமில் பெயர், முகவரி, பிறந்த தேதி, செல்போன் எண் மற்றும் பாலினம் ஆகியவை திருத்தம் செய்யலாம்.
புதிதாக திருமணம் ஆனவர்கள் திருமண பதிவு சான்று அல்லது கிராம நிர்வாக அலுவலர் சான்று இருந்தால் புதிதாக ஆதார் அட்டை பெற்றுக்கொள்ளலாம். குழந்தைகளுக்கு 5 மற்றும் 15 வயதில் கைரேகை மற்றும் கருவிழி பதிவை கண்டிப்பாக புதுப்பிக்க வேண்டும். புகைப்பட சான்றுக்காக பான், பாஸ்போர்ட், ரேசன் கார்டு, டிரைவிங் லைசென்ஸ் கொண்டு வரவும்.
மேலும் வீட்டு வரி ரசீது, மின்கட்டண ரசீது, பேங்க் பாஸ் புக் ஆகியவை முகவரி சான்றுக்காகவும், பிறப்பு சான்றிதழ் மற்றும் மதிப்பெண் சான்றிதழ் ஆகியவை பிறந்த தேதி சான்றுக்காகவும் கொண்டு வர வேண்டும். இந்த முகாமில் புதிதாக அஞ்சலக கணக்கும் துவங்கலாம். இந்த முகாம் இன்றும் நடைபெறுகிறது.
- தேசிய நெடுஞ்சாலையின் பாலத்திற்கு அடியில் அனைத்து இரு சக்கர வாகன ஓட்டிகளும் மழைக்கு ஒதுங்கி இருந்தனர்.
- மழை காலங்களில் வாகனத்தில் செல்பவர்கள் மிகவும் கவனமாக செல்ல வேண்டும்
பெருமாநல்லூர்:
திருப்பூர் மாவட்டம் குன்னத்தூர் பகுதியில் நேற்று முன்தினம் ஒரு மணி நேரத்திற்கு மேலாக பலத்த மழை பெய்தது. இதேபோல் நேற்று (வெள்ளிக்கிழமை ) பெருமாநல்லூர், ஈட்டிவீரம்பாளையம், செங்கப்பள்ளி, ஊத்துக்குளி ஆகிய பகுதிகளிலும் மாலை 4 மணி அளவில் இருந்து தொடர் மழை பெய்தது.
இதனால் சாலைகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. பெருமாநல்லூரில் இருந்து செங்கப்பள்ளி செல்லும் தேசிய நெடுஞ்சாலையின் பாலத்திற்கு அடியில் அனைத்து இரு சக்கர வாகன ஓட்டிகளும் மழைக்கு ஒதுங்கி இருந்தனர். பள்ளி குழந்தைகள் மிகவும் பாதிக்கப்பட்டனர். மழையினால் சாலையில் ஆங்காங்கே உள்ள பள்ளத்தில் மழை நீர் தேங்கி நின்றது. இந்த மழை காலங்களில் வாகனத்தில் செல்பவர்கள் மிகவும் கவனமாக செல்ல வேண்டும் என்று பெருமாநல்லூர் போலீசார் அறிவுறுத்தி உள்ளனர்.
- பணிகள் நிறைவற்ற நிலையில் நாளை 3.9.2023 ம் தேதி கும்பாபிஷேக விழா நடைபெற உள்ளது.
- காலை 7.30 மணியில் இருந்து 9 மணிக்குள் சித்திவிநாயகர், சக்தி வாராஹி அம்மனுக்கு கும்பாபிஷேகம் நடைபெறுகிறது.
உடுமலை:
உடுமலை அருகே உள்ள சின்ன வீரம்பட்டியில் வாராஹி அம்மன் கோவில் கும்பாபிஷேக விழா நாளை நடைபெறுகிறது. சப்த கன்னிகளில் ஒருவராக உள்ள வாராஹி அம்மனுக்கு கோவில் அமைத்து வழிபடுவதென சின்னவீரம்பட்டி ஊர்ப்பொதுமக்கள் சார்பில் முடிவு செய்யப்பட்டது.
அதைத் தொடர்ந்து கோவில் கட்டுமான பணி தொடங்கி கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்தது.பணிகள் நிறைவற்ற நிலையில் நாளை 3.9.2023 ம் தேதி கும்பாபிஷேக விழா நடைபெற உள்ளது.விழாவின் முதல் நிகழ்வாக நேற்று மங்கல இசை,கணபதி,லட்சுமி,நவகிரக ஹோமம் பூர்ணாஹுதி நடைபெற்றது. 2 ம் நாள் நிகழ்வாக இன்று மாலை 4.30 மணியளவில் பஞ்சகவ்யம், வாஸ்துசாந்தி,கோபுரகலசம் வைத்தல், மூலவருக்கு யந்திர ஸ்தாபனம்,அஷ்டபந்தன மருந்து சாற்றுதல் உள்ளிட்ட முதல் கால பூஜையும் நடைபெற உள்ளது.
அதைத் தொடர்ந்து நாளை காலை 5 மணியளவில் 2-ம் கால பூஜையும் இதையடுத்து யாகசாலையில் இருந்து கலசங்கள் புறப்பாடு நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது.பின்னர் காலை 7.30 மணியில் இருந்து 9 மணிக்குள் சித்திவிநாயகர், சக்தி வாராஹி அம்மனுக்கு கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. அதைத் தொடர்ந்து அன்னதானமும் நடைபெற உள்ளது.கும்பாபிஷேகத்துக்கு தேவையான பால்,தயிர், இளநீர்,நெய்,நல்லெண்ணெய் ஹோமதிரவியம் உள்ளிட்ட பொருட்களை கொடுத்து உதவலாம் என்று கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்து உள்ளனர்.
- வீடு வீடாக சென்று தேசிய ஊட்டச்சத்து வாரம் ஆண்டுதோறும் செப்டம்பர் 1 முதல் 7 வரை கடைப்பிடிக்கப்படுகிறது.
- ஏற்பாடுகளை கல்லூரி முதல்வர் கிருஷ்ணன், அலகு-2 ஒருங்கிணைப்பாளர் மோகன்குமார் செய்திருந்தனர்.
திருப்பூர்:
திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்டம் அலகு-2 சார்பாக தேசிய ஊட்டச்சத்து வாரத்தை முன்னிட்டு தத்தெடுத்த கிராமமான கருமாபளையத்தில் வீடு வீடாக சென்று ஊட்டச்சத்து விழிப்புணர்வு நடைபெற்றது. நாட்டு நலப்பணித் திட்டம் அலகு -2 ஆலோசகர் காமராஜ் முன்னிலை வகித்தார்.
கிராம பஞ்சாயத்து தலைவர் பூங்கொடி சக்திவேல் , துணைத்தலைவர் சண்முகசுந்தரம் விழிப்புணர்வை துவக்கி வைத்தனர். பிறகு, மாணவ செயலர்கள் சுந்தரம், ராஜபிரபு, காமராஜ், செர்லின், தினேஷ் கண்ணன், சபரிவாசன் ஆகியோர் தலைமையில், மாணவர்கள் வீடு வீடாக சென்று தேசிய ஊட்டச்சத்து வாரம் ஆண்டுதோறும் செப்டம்பர் 1 முதல் 7 வரை கடைப்பிடிக்கப்படுகிறது.
நோய் தவிர்க்க ஊட்டச்சத்து அவசியம். துரித உணவுகளை அறவே தவிர்க்க வேண்டும். அந்த உணவுகளை அதிகம் சாப்பிட்டால் புற்றுநோய் ஏற்படும்.சத்தான உணவுகளை எடுத்துக்கொண்டால் சிறப்பான வாழ்வை நாம் வாழலாம். பாரம்பரியமான உணவுகளை அதிகம் எடுத்துக் கொள்ள வேண்டும். குழந்தைகளின் வாழ்க்கையில் ஊட்டச்சத்தின் தேவை மிக முக்கியமாக கருதப்படுகிறது.
ஆகையால் ஊட்டச்சத்து பற்றாக்குறை இல்லாத தமிழகத்தை உருவாக்குவோம் என்று விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியும், துண்டு பிரசுரங்களை வழங்கியும், ஊட்டச்சத்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இதற்கான ஏற்பாடுகளை கல்லூரி முதல்வர் கிருஷ்ணன், அலகு-2 ஒருங்கிணைப்பாளர் மோகன்குமார் செய்திருந்தனர்.
- நரேந்திரனுக்கும், சத்யஸ்ரீக்கும் சமூக வலைதளம் மூலம் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
- அவிநாசி வந்த நரேந்திரன் சத்யஸ்ரீயின் செல்போனை வாங்கி பார்த்த போது அவர் பழகி வந்த வாலிபருக்கு கூகுள் பே மூலம் பணபரிமாற்றம் செய்தது தெரியவந்தது.
திருப்பூர்:
திருப்பூா் மாவட்டம் அவிநாசியை சோ்ந்தவா் மணிவண்ணன். இவரது மகள் சத்யஸ்ரீ (வயது 20). இவா் திருப்பூா் 60 அடி சாலையில் உள்ள தனியாா் மருத்துவமனையில் வரவேற்பாளராக பணியாற்றி வந்தாா். கடலூா் மாவட்டம் காட்டுமன்னாா்குடியை சோ்ந்தவர் நரேந்திரன் (25), கேட்டரிங் தொழில் செய்து வந்தார். சத்யஸ்ரீயும் நரேந்திரனும் கடந்த 3 ஆண்டுகளாக காதலித்து வந்தனர்.
இந்தநிலையில் அவர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் நரேந்திரனுடன் சத்யஸ்ரீ பேசுவதை தவிா்த்து வந்துள்ளாா். நேற்று காலை சத்யஸ்ரீ பணியாற்றி வரும் தனியார் ஆஸ்பத்திரிக்கு சென்ற நரேந்திரன் கத்தியால் சத்யஸ்ரீயின் கழுத்தை அறுத்து கொன்றார். பின்னர் அவரும் கத்தியால் கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்றார்.
பலத்த காயமடைந்த அவர் கோவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். ஆஸ்பத்திரிக்குள் புகுந்து காதலியை கொன்று காதலன் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் திருப்பூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் குறித்து திருப்பூர் வடக்கு போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது காதலியை நரேந்திரன் கொலை செய்ததற்கான காரணம் குறித்து பரபரப்பு தகவல்கள் கிடைத்தது.
நரேந்திரனுக்கும், சத்யஸ்ரீக்கும் சமூக வலைதளம் மூலம் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து இருவரும் தங்களது செல்போன் எண்களை பரிமாறி கொண்டு பேசி வந்துள்ளனர். இந்த பழக்கம் நாளடைவில் அவர்களுக்குள் காதலாக மாறியது. இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து பேசி வந்தனர். பல்வேறு இடங்களுக்கும் சென்றனர். 3 வருடங்களாக அவர்களது காதல் நீடித்தது. மேலும் காதலிக்கு தேவையான பொருட்களை நரேந்திரன் வாங்கி கொடுத்துள்ளார். செலவுக்கு கூகுள் பே மூலம் பணம் அனுப்பியுள்ளார்.
இந்தநிலையில் சத்யஸ்ரீ கடந்த 2 மாதங்களுக்கு முன்பு திருப்பூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் வரவேற்பாளர் பணியில் சேர்ந்தார். அப்போது அங்கு பணியாற்றி வரும் வாலிபர் ஒருவருடன் சத்யஸ்ரீக்கு பழக்கம் ஏற்பட்டது. இதனால் காதலி மீது நரேந்திரன் சந்தேகமடைந்தார். 3 வருடங்களாக தான் காதலித்து வரும் நிலையில் சத்யஸ்ரீ வேறு ஒரு வாலிபருடன் பழகி வருவது பிடிக்கவில்லை. இது பற்றி கேட்ட போது இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.
இருப்பினும் சத்யஸ்ரீயுடன் நரேந்திரன் பழகி வந்துள்ளார். அவ்வப்போது அவிநாசியில் இருந்து மருத்துவமனைக்கு மோட்டார் சைக்கிளில் அழைத்து சென்றுள்ளார்.
சம்பவத்தன்று சத்யஸ்ரீயின் செல்போனை தொடர்பு கொண்ட போது அவர் யாருடனோ பேசிக்கொண்டிருந்தார். இதையடுத்து அவர் பழகி வந்த வாலிபரின் செல்போன் எண்ணை தொடர்பு கொண்ட போது அவரும் யாருடனோ பேசிக்கொண்டிருந்தார். இதனால் இருவரும்தான் பேசிக் கொண்டிருக்கி ர்கள் என்று நரேந்திரன் சந்தேகப்பட்டு ஆத்திரமடைந்தார்.
நேற்று அவிநாசி வந்த நரேந்திரன் சத்யஸ்ரீயின் செல்போனை வாங்கி பார்த்த போது அவர் பழகி வந்த வாலிபருக்கு கூகுள் பே மூலம் பணபரிமாற்றம் செய்தது தெரியவந்தது.
இதில் மிகவும் ஆவேசமடைந்த நரேந்திரன் நான் உனது செலவுக்கு பணம் அனுப்புகிறேன். ஆனால் நீ வேறு ஒரு வாலிபருக்கு பணம் அனுப்புகிறாயா என்று தட்டிக்கேட்டார். இதில் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதையடுத்து மோட்டார் சைக்கிளில் அவிநாசியில் இருந்து திருப்பூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றார். போகும் வழியில் சத்யஸ்ரீயிடம் உன்னை கொலை செய்ய வேண்டும் என்பது போல் உள்ளது என்று தெரிவித்துள்ளார். ஆனால் அதனை சத்யஸ்ரீ பொருட்படுத்தவில்லை.
இந்தநிலையில் ஆஸ்பத்திரியில் சத்யஸ்ரீயை விட்டு விட்டு அங்கிருந்து சென்ற நரேந்திரன் கடையில் கத்தி வாங்கி விட்டு ஆஸ்பத்திரிக்கு சென்றார். அங்கு இருக்கையில் அமர்ந்திருந்த சத்யஸ்ரீயின் கழுத்தை அறுத்துக்கொன்று விட்டு தானும் கழுத்தை அறுத்துக்கொண்டார். தற்போது நரேந்திரன் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.
மேற்கூறிய தகவல்களை நரேந்திரன் போலீசில் வாக்குமூலமாகவும் அளித்துள்ளார். இந்த சம்பவம் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- நெடுஞ்சாலை துறை சார்பில்,ரோடு போடப்பட்டு ரோட்டினிடையே தடுப்புச் சுவர் கட்டப்பட்டுள்ளது.
- பொதுமக்கள் அங்குள்ள வணிக வளாகங்களுக்கோ, குடியிருப்புகளுக்கோ செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
பல்லடம்:
பல்லடம் அருகே உள்ள மகாலட்சுமி நகர் பல்லடம் - திருப்பூர் மெயின் ரோட்டில் அமைந்துள்ளது. இங்கு நெடுஞ்சாலை துறை சார்பில்,ரோடு போடப்பட்டு ரோட்டினிடையே தடுப்புச் சுவர் கட்டப்பட்டுள்ளது.
போதிய வடிகால் வசதியின்றி அமைக்கப்பட்டுள்ளதால், மழைகாலங்களில் சிறிது நேரம் மழை பெய்தாலே மழை நீர் தேங்கி நிற்பதால் பொதுமக்கள் அங்குள்ள வணிக வளாகங்களுக்கோ, குடியிருப்புகளுக்கோ செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
எனவே நெடுஞ்சாலைத் துறையினர் மழைநீர் வடிகால் வசதி செய்து, அங்கு தண்ணீர் தேங்காமல் நிற்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






