என் மலர்tooltip icon

    திருவாரூர்

    • பாரம்பரிய வில்லுப்பாட்டில் விழிப்புணர்வு பாடல்கள் பாடினார்.
    • பள்ளி மாணவர்களுக்கு மரங்கள், காடுகளின் முக்கியத்துவம் குறித்து எடுத்து கூறப்பட்டது.

    திருத்துறைப்பூண்டி:

    திருத்துறைப்பூண்டி அடுத்த கொக்கலாடி அரசு உதவிபெறும் தொடக்கப்பள்ளியில் சர்வதேச வனநாள் கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சிக்கு கொக்கலாடி ஊராட்சி தலைவர் வசந்த் தலைமை தாங்கினார்.

    பள்ளி தலைமை ஆசிரியர் அருள் முன்னிலை வகித்தார். நீர்நிலை பசுமை இயக்க ஒருங்கிணைப்பாளர்கள் ஐயப்பன், ஹபிபுல்லா, அம்பிகாபதி, சிவகுமார் மற்றும் பெற்றோர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் பள்ளி மாணவர்களுக்கு மரங்கள், காடுகளின் முக்கியத்துவம் குறித்து எடுத்துக் கூறப்பட்டது.

    இதில் மாணவர்கள் வனங்களை காப்பது குறித்து பாரம்பரிய வில்லுப்பாட்டில் விழிப்புணர்வு பாடல்கள் பாடினார். பின்னர், பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டது. முடிவில் ஆசிரியர் வளர்மதி நன்றி கூறினார்.

    • குறித்த காலத்திற்குள் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளுமாறு கலெக்டர் உத்தரவிட்டார்.
    • கலை திருவிழாவில் வெற்றி பெற்றவர்களுக்கு கேடயத்தை கலெக்டர் வழங்கினார்.

    திருவாரூர்:

    திருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் சாருஸ்ரீ தலைமையில் நடைபெற்றது.

    இக்கூட்டத்தில், பொது–மக்கள் பட்டா மாறுதல், புதிய குடும்ப அட்டை, ஆக்கிரமிப்பு அகற்றுதல், கல்விக்கடன், வீட்டுமனைப் பட்டா உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்த 235 மனுக்களை அளித்தனர்.

    இந்த மனுக்கள் சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி குறித்த காலத்திற்குள் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளுமாறு கலெக்டர் உத்தரவிட்டார்.

    அதனைத்தொடர்ந்து, மாவட்ட மாற்றுத்–திறனாளிகள் நலத்துறையின் சார்பில், கால் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளி ஒருவருக்கு ரூ.9050 மதிப்பிலான மூன்று சக்கர சைக்கிளும், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் சார்பில் அமைக்கப்பட்டுள்ள விடுதிகளில் தங்கி பயிலும் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவியர்களுக்கிடையே நடைபெற்ற கலை திருவிழாவில் வெற்றி பெற்றவர்களுக்கு பாராட்டு சான்றிதழுடன் கூடிய கேடயத்தினையும் கலெக்டர் வழங்கினார்.

    இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் சிதம்பரம், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் பாலசந்தர், மாற்றுத்–திறனாளிகள் நல அலுவலர் புவனா உள்ளிட்ட பல்வேறு துறை அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • ஒரு நாளைக்கு ரூ. 214 ஊதியம் வழங்கப்–படுகிறது.
    • 6அடி நீளம், 2.5 அடி அகலம் என்ற அளவில் நிலத்தடி நீர் சேமிப்பு கட்டமைப்புகள்.

    திருவாரூர்:

    மத்திய அரசின் மகாத்மா காந்தி வேலை உறுதி அளிப்பு திட்டத்தின் கீழ் கிராமப்புற மக்களுக்கு ஆண்டுதோறும் 100 நாட்கள் வேலை வழங்குவது என முடிவு செய்யப்பட்டது.

    இத்திட்டத்தின்படி குறிப்பிட்ட அளவிலான பணிகளை முடிக்கும் நிலையில் ஒரு நாளைக்கு ரூ.214 ஊதியம் வழங்கப்படுகிறது.

    இப்பணிகளை வட்டார வளர்ச்சி அலுவலகங்கள் மூலம் நிதி ஒதுக்கீடு செய்து பணிகளை தேர்வு செய்கிறார்கள்.

    திட்டத்தின் மூலம் மேற்கொள்ளப்படும் பணிகளில் வாய்க்கால் தூர்வாருவதற்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது.

    ஆறுகளில் இருந்து வாய்க்கால் வழியாகவே பாசன நீர் விவசாய வயல்களுக்கு கொண்டு செல்லப்படும்.

    அதற்கேற்ற வகையில் தடையின்றி பாசனம் மேற்கொள்ள வேண்டும் என்ற அடிப்படையில் வாய்க்கால்களை தூர்வார இப்பணியில் முன்னுரிமை அளிக்கப்படுகிறது.

    வாய்க்கால்களை தூர் வரும்போது குறிப்பிட்ட இடைவெளிகள் இரண்டடி ஆழத்திற்கு, 6அடி நீளம், 2.5 அடி அகலம் என்ற அளவில் நிலத்தடி நீர் சேமிப்பு கட்டமைப்புகள் பணியாளர்கள் மூலமாக மேற்கொள்ளப்படுகிறது.

    திருவாரூர் மாவட்டத்தில் பெரும்புகழூர், அம்மையப்பன், வண்டாம்பாளை ஆகிய 430 ஊராட்சிகளிலும் இப்பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.

    • மாணவ- மாணவிகள் தன் சுத்தம் பேண வேண்டிய அவசியம் குறித்து பேசினார்.
    • புகையிலை பொருட்கள் பயன்படுத்துவதால் வரும் கேடுகள் குறித்து பேசினார்.

    முத்துப்பேட்டை:

    முத்துப்பேட்டை அடுத்த இடையூர் அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் சுகாதாரத்துறை சார்பில் உலக வாய்வழி சுகாதார தினத்தை முன்னிட்டு மாணவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி பள்ளி தலைமையா சிரியர் கோதண்டராமன் தலைமையில் நடைபெற்றது.

    முன்னதாக ஆசிரியை சித்ரா அனைவரையும் வரவேற்றார்.

    நிகழ்ச்சியில் இடையூர் ஆரம்ப சுகாதார நிலைய பல் மருத்துவர் அருணா கலந்து கொண்டு மாணவ- மாணவிகள் தன் சுத்தம் பேண வேண்டிய அவசியம் குறித்தும், பல் பராமரிப்பு குறித்தும், புகையிலை பொருட்கள் பயன்படுத்துவதால் வரும் கேடுகள் குறித்தும், வாய்வழி புற்றுநோய் வருவதற்கான காரணங்கள் குறித்தும் பேசினார்.

    இதனை மாணவர்கள் அனைவரும் ஆர்வத்துடன் கேட்டறிந்தனர். இதில் சுகாதார ஆய்வாளர் பழனியப்பன், பல் மருத்துவ உதவியாளர் பொன்னரசன், ஆசிரியை சசிகலா உள்ளிட்ட ஆசிரியர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    முடிவில் ஆசிரியர் பாலசுப்ரமணியம் நன்றி கூறினார்.

    • சிகிச்சை பெற்று வருபவர்களை பார்த்து அவர்களுக்கு கொடுக்கப்படும் மருந்து, மாத்திரைகள் குறித்து விசாரித்தார்.
    • முடிந்தவரை விரைவில் அவரவர் வீட்டிற்கு அனுப்பி வைக்க ஏற்பாடுகள் செய்ய வேண்டும்.

    திருத்துறைப்பூண்டி:

    திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டியில் உள்ள நம்பிக்கை மனநல காப்பகத்தில் கலெக்டர் சாருஸ்ரீ ஆய்வு செய்தார்.

    மனநலம் பாதிக்கப்பட்டு காப்பகத்தில் சிகிச்சை பெற்று வருபவர்களை நேரில் பார்த்து அவர்களுக்கு கொடுக்கப்படும் உணவு, மருந்து, மாத்திரைகள் குறித்து விசாரித்தார்.

    மேலும், மனநல மருத்துவர் வருகை, மனநல மருத்துவ சிகிச்சை, காப்பகத்தில் பராமரி க்கப்படும் பதிவேடுகள் அனைத்தையும் ஆய்வு செய்தார்.

    தொடர்ந்து, குடிநீர், தங்குமிடம், சமையல் செய்யும் இடம், கழிவறைகள் ஆகியவற்றை பார்த்து சுகாதாரம் குறித்து அறிவுரை வழங்கினார்.

    மேலும், நீண்ட நாட்களாக தங்கி இருக்கும் மனநலம் பாதிக்கப்பட்டவர்களை மனநல மருத்துவரின் ஆலோசனை பெற்று முடிந்தவரை விரைவில் அவரவர் வீட்டிற்கு அனுப்பி வைக்க ஏற்பாடுகள் செய்ய வேண்டும் என அறிவுறுத்தினார்.

    அதற்கு தேவையான உதவிகளை செய்து தருவதாகவும் கூறினார்.

    மேலும், காப்பக இயக்குனர் சவுந்தர்ராஜன், சமூக பணியாளர் சக்தி பிரியா, செவிலியர் சுதா, பயிற்சி அளிக்கும் வள்ளி, ஒருங்கிணைப்பாளர் சரவணன் ஆகியோர்களிடம் இவர்களை விரைவில் குணமாக்கும் விதம்நம்மிடம் தான் உள்ளது என்பதை நினை வில் கொண்டு சிறப்பாக செயல்பட வேண்டும் என அறிவுறுத்தினார்.

    இதுகுறித்து காப்பக இயக்குனர் சவுந்தர்ராஜன் கூறுகையில்:-

    கலெக்டர் நேரில் வந்து காப்பகத்தை பார்வையிட்டு எங்களுடன் கலந்து பேசியது, நாங்கள் கடைபிடிக்க வேண்டிய அறிவுரை, ஆலோசனைகள் வழங்கியது எங்களது பணிகளை இன்னும் சிறப்பாக செய்ய வேண்டும் என உத்வேகம் அளிக்கிறது என்றார்.

    ஆய்வின்போது மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் புவனா, தாசில்தார் மலர்க்கொடி ஆகியோர் உடன் இருந்தனர்.

    • 80 சதவீத ஆற்றுநீர் பாசனத்தை நம்பி சாகுபடி பணிகளில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர்.
    • காடுகள் மண்டி பாசனத்திற்கு பயன்படுத்த முடியாத சூழல் உருவாகியுள்ளது.

    திருவாரூர்:

    திருவாரூர் மாவட்டத்தில் ஆண்டுதோறும் குறுவை, சம்பா, தாளடி என மூன்று போகம் நெல் சாகுபடி பணிகளில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

    குறிப்பாக திருவாரூர் மாவட்டத்தை பொறுத்த அளவு 80 சதவீதம் ஆற்று நீர் பாசனத்தை நம்பியும் 20 சதவீதம் ஆழ்துளை கிணறுகளை நம்பியும் சாகுபடி பணிகளில் விவசாயிகள் ஈடுபட்டு வருவது வழக்கம்.

    இந்த நிலையில் இந்த ஆண்டு மேட்டூர் அணையில் போதிய அளவு நீர் இருப்பதன் காரணமாக குறுவை சாகுபடிக்கு முன்கூட்டியே தண்ணீர் திறப்பதற்கு வாய்ப்பு இருப்பதால் கோடை காலத்தை பயன்படுத்தி மாவட்டத்தில் உள்ள ஆறுகள் மற்றும் சிறு குறு வாய்க்கால்களை முழுமையாக தூர்வார வேண்டும் என விவசாயிகள் மாவட்ட நிர்வாகத்திற்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

    குறிப்பாக திருவாரூர் நகரின் வழியாக செல்லும் சுக்கானாறு, கேக்கரை பீ சேனல் வாய்க்கால் ஆகியவை மூலம் அருகில் உள்ள கிராமங்கள் பாசன வசதி பெறுகின்றன.

    சுக்கானாறு முழுவதும் ஆகாய தாமரை மண்டி கிடைக்கிறது இதனால் தண்ணீர் செல்லாத சூழல் உருவாகி உள்ளது.

    ஆகையால் ஆகாயத்தாமரை முழுமையாக அகற்றி தர வேண்டும். அதேபோன்று கேக்கரை பி சேனல் வாய்க்கால் முழுவதுமாக கழிவுநீரை வாய்க்காலில் கலந்து விடுவதால்

    பி சேனல் வாய்க்கால் முழுவதுமாக கழிவுநீர் தேங்கி இருக்கிறது. மேலும் காடுகள் மண்டி பாசனத்திற்கு பயன்படுத்த முடியாத சூழல் உருவாகியுள்ளது.

    உடனடியாக பிசேனல் வாய்க்காலை முழுமையாக தூர்வாரி தர வேண்டும்.

    அதுபோல் கிராமப்புறங்களில் உள்ள சிறு குறு வாய்க்கால்கள் ஆகியவற்றை முழுமையாக தூர்வார வேண்டும்.

    தமிழக அரசு தூர்வாருவதற்கு நிதி ஒதுக்கீடு அதிக அளவில் செய்ய வேண்டும்.

    மேலும் தூர்வாரும் பணிக்கு என விவசாயிகள் மற்றும் அரசு அதிகாரிகள் அடங்கிய குழு அமைத்து விவசாயிகளிடம் ஆலோசனை கேட்டு அதன் அடிப்படையில் தூர்வாரும் பணிகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் விவசாயிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

    • தீமிதி திருவிழா கடந்த 5-ம் தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கியது.
    • அம்மனுக்கு வண்ண மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்படும்.

    திருத்துறைப்பூண்டி:

    திருத்துறைப்பூண்டியில் உள்ள முள்ளாச்சி மாரியம்மன் கோவிலில் 79-ம் ஆண்டு தீமிதி திருவிழா கடந்த 5-ம் தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கியது.

    தொடர்ந்து, 15 நாட்கள் நடைபெறும் விழாவில் தினமும் அம்பாளுக்குசிறப்பு அபிஷேகம்நடைபெற்று, வண்ண மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபா ராதனை காண்பிக்கப்படும்.

    அதனைத் தொடர்ந்து சாமி புறப்பாடு நடைபெற்று வந்தது.

    விழாவின் முக்கிய நிகழ்வான தீமிதி திருவிழா சிறப்பாக நடைபெற்றது.

    இதில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு கோவிலுக்கு எதிரில் அமைக்கப்பட்டுள்ள தீக்குண்டத்தில் இறங்கி தீமிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர். பாதுகாப்பு பணியில் துணை போலீஸ் சூப்பிரண்டு சோமசுந்தரம், இன்ஸ்பெக்டர் கழனியப்பன் ஆகியோர் மேற்பார்வையில் ஏராளமான போலீசார் ஈடுபட்டனர்.

    விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் சிறப்பாக செய்திருந்தனர்.

    • நீர் நிலைகளில் விளையாட செல்வதை கண்காணித்து தடுத்து கட்டுப்படுத்த வேண்டும்.
    • 24 மணிநேரமும் இயங்கக்கூடிய இலவச எண்ணில் தொடர்பு கொண்டு தெரிவிக்க வேண்டும்.

    திருவாரூர்:

    திருவாரூர் மாவட்ட கலெக்டர் சாருஸ்ரீ வெளி–யிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    திருவாரூர் மாவட்டத்தில், கோடைவெயில் மற்றும் எதிர்வரும் காலங்களில் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை விட இருக்கும் நிலையில், பள்ளி மாணவ-மாணவிகள் மற்றும் பொதுமக்கள், கோடை வெயிலில் தேவையின்றி வெளியே நடமாடுவதை தவிர்க்க வேண்டும்.

    தற்போது பள்ளிகளில் தேர்வு நடைபெற்று கொண்டிருப்பதால், பெற்றோர்களும் தங்கள் பிள்ளைகள் பள்ளிக்கு மிகுந்த பாதுகாப்புடன் அனுப்பும் பொருட்டும், பள்ளி முடிந்தவுடன் வெளியிடங்களுக்கு பெற்றோர்கள் அனுமதியின்றி நீர் நிலைகளில் விளையாட செல்வதை கண்காணித்து தடுத்து கட்டுப்படுத்திட வேண்டும்.

    ஏதேனும், அசம்பாவிதம் ஏற்பட்டால் அதனை உடனுக்குடன் தீயணைப்பு துறையினருக்கு (இலவச எண்.101) காவல்துறை, தீயணைப்புதுறை மற்றும் மருத்துவதுறையை அழைக்க (இலவச எண்.108), காவல் துறை மற்றும் தீயணைப்புதுறையை அழைக்க (இலவச எண்.112) என்ற 24 மணிநேரமும் இயங்கக்கூடிய இலவச எண்ணில் தொடர்பு கொண்டு தெரிவிக்க வேண்டும்.

    மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 24/7 நாள் முழுவதும் இயங்கக்கூடிய 04366 – 226623 / 1077 கட்டணமில்லா இலவச தொலைபேசி எண்களுடன் கட்டுப்பாட்டு அறை செயல்பட்டு வருகிறது.

    கோடைகாலங்களில் அதிக வெப்ப சலனத்தினால் திருவாரூர் மாவட்டத்தில் உயிர்ச்சேதங்கள் ஏதுமின்றி இருக்க உதவ வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • காவிரி டெல்டா மாவட்டங்கள் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக இருந்து வருகிறது.
    • அரசின் சார்பில் குறுங்காடுகள் அமைக்கப்படும்.

    திருவாரூர்:

    திருவாரூர் அருகே நீலக்குடியில் உள்ள தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தில் தேசிய பாரம்பரிய நெல் மாநாடு நடைபெற்றது.

    இந்த மாநாட்டில் காலநிலை மாற்றுத் துறை மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன், மத்திய பல்கலைக்கழக துணைவேந்தர் கிருஷ்ணன், சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கலைவாணன், புதுச்சேரி சட்டப்பேரவை தலைவர் செல்வம், பிரான்ஸ் நாட்டின் மொன்பொலியெப் பல்கலைக்கழகத்தை சேர்ந்த பேராசிரியர் ஜூலியன்ஜின் மலார்டு ஆடம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து வந்திருந்த ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனர்.

    பாரம்பரிய நெல் ரகங்களில் உள்ள சத்துக்கள் குறித்து அறிவியல் பூர்வமாக பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் தெரிந்து கொள்ளும் வகையில் மாநாட்டில் ஆய்வு கட்டுரைகளை மாணவர்கள் சமர்பித்தனர்.

    பாரம்பரிய அரிசிகளில் உள்ள மருத்துவ குணங்கள் மற்றும் வெளிநாடுகளுக்கு பாரம்பரிய அரிசியை ஏற்றுமதி செய்யும் வகையில் அதற்கான பாரம்பரிய நெல் ரகங்களின் முக்கியத்துவம் குறித்தும் மாநாட்டில் எடுத்துரைக்கப்பட்டது.

    முன்னதாக அமைச்சர் மெய்யநாதன் அளித்த பேட்டியில், காவிரி டெல்டா மாவட்டங்கள் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக இருந்து வருகிறது. இந்த மாவட்டங்களை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்ணை இமை காப்பது போல காத்து வருகிறார்.

    ஓ.என்.ஜி.சி. நிறுவனம் புதிய எண்ணெய் கிணறு அமைக்க அனுமதி கேட்டாலும் அனுமதி வழங்க இயலாது. அரசின் சார்பில் குறுங்காடுகள் அமைக்கப்படும். ஆண்டு ஒன்றுக்கு 10 கோடி மரங்கள் நடுவதற்கு திட்டமிடப்பட்டு இருக்கிறது என்றார்.

    • 21 வகையான மாற்றுத்திறன் குழந்தைகளின் தன்மைகள் குறித்து எடுத்துரைத்தார்.
    • அனைத்து விதமான அரசு நலத்திட்ட உதவிகள் குறித்து எடுத்துரைக்கப்பட்டது.

    முத்துப்பேட்டை:

    முத்துப்பேட்டை அடுத்த மருதங்காவெளி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி வட்டார வளமையம் சார்பில் 18 வயது வரை உள்ள மாற்றுத்திறன் குழந்தைகளின் பெற்றோர்களுக்கு சிறப்பு பயிற்சி முகாம் நடைபெற்றது.

    இதற்கு வட்டார வள மைய மேற்பார்வையாளர் இளையராஜா தலைமை தாங்கினார். இதில் வட்டார கல்வி அலுவலர்கள் சிவக்குமார், ராமசாமி ஆகியோர் பயிற்சியை தொடங்கி வைத்தனர்.

    சிறப்பு கருத்தாளரான முத்துப்பேட்டை ஆரம்ப சுகாதார நிலைய செவிலியர் புனிதா பயிற்சி குறித்து பேசுகையில்:-

    ஆரம்ப காலத்தில் மாற்றுத்திறன் குழந்தைகளின் தன்மைகளை அடையாளம் காண்பதன் மூலம் மற்றும் அதற்கான மருத்துவ சிகிச்சை முறையை பின்பற்றுவதன் மூலம் முற்றிலும் மாற்றுத்திறன் குழந்தைகள் இல்லாத நிலையை எதிர்காலத்தில் உருவாக்க முடியும் என்றார். மேலும், 21 வகையான மாற்றுத்திறன் குழந்தைகளின் தன்மைகள் குறித்து எடுத்துரைத்தார்.

    அதனை தொடர்ந்து பயிற்சியில் அடையாள அட்டை முக்கியத்துவம், கல்வி உதவித்தொகை, பெண் கல்வி ஊக்கத்தொகை, பராமரிப்பு உதவித்தொகை, போக்குவரத்து மற்றும் பாதுகாவலர் தொகை, மேல் மருத்துவ அறுவை சிகிச்சை முறை, உதவி உபகரணங்கள் உள்ளிட்ட அனைத்து விதமான அரசு நலத்திட்ட உதவிகள் குறித்து எடுத்துரைக்கப்பட்டது.

    பயிற்சியில் ஆசிரிய பயிற்றுனர் சுரேஷ், சிறப்பாசிரியர்கள், இயன்முறை மருத்துவர், ஆரம்ப சுகாதார நிலைய செவிலியர், அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் முத்துப்பேட்டை ஒன்றியத்தில் உள்ள 50-க்கும் மேற்பட்ட மாற்றுத்திறன் குழந்தைகளின் பெற்றோர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • குடும்பத்தினர் மற்றும் உறவினர்களின் தலையீட்டை எவ்விதத்திலும் அனுமதிக்க கூடாது.
    • மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உள்ளாட்சி பிரதிநிதிகளே செயல்படுத்த வேண்டும்.

    திருவாரூர்:

    திருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் பெண் ஊராட்சி மன்ற தலைவர்களுக்கான ஊராட்சி நிர்வாக செயல்பாடுகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைப்பெற்றது. மாவட்ட கலெக்டர் சாருஸ்ரீ தலைமை வகித்தார்.

    அப்போது அவர் பேசியதாவது:-

    திருவாரூர் மாவட்டத்தில் கிராம ஊராட்சி நிர்வாக கூட்டமைப்பின் செயல்பாடுகளை சரியான வகையில் வழிநடத்திடவும், கிராம ஊராட்சியால் அளிக்கப்பட வேண்டிய சேவைகள், நிறைவேற்ற வேண்டிய கட்டாய கடமைகள், விருப்பக் கடமைகள் ஆகியவற்றை சிறப்பான முறையில் செயல்படுத்திடுவது குறித்து எடுத்து கூறப்பட்டது.

    மேலும் கிராம ஊராட்சி நிர்வாகத்தில் ஊராட்சி மன்ற தலைவர்களின் கணவர், குடும்பத்தினர் மற்றும் உறவினர்களின் தலையீட்டினை எவ்விதத்திலும் அனுமதிக்க கூடாது.ஊராட்சி மன்ற நிர்வாகத்தினை மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உள்ளாட்சி பிரதிநிதிகளே செயல்படுத்திட வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இக்கூட்டத்தில் மாவட்ட ஊராட்சித்தலைவர் பாலசுப்ரமணியன், மாவட்ட ஊரக வளர்ச்சி திட்ட இயக்குநர் சந்திரா, ஊராட்சிகள் உதவி இயக்குநர் பொன்னியின்செல்வன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    • பல்வேறு பகுதிகளில் இருந்து 43 தனியார் நிறுவனங்கள் வந்திருந்தனர்.
    • 200-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் மற்றும் பெண்கள் கலந்து கொண்டனர்.

    திருத்துறைப்பூண்டி:

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு நகர தி.மு.க. சார்பில் திருத்துறைப்பூண்டியில் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடந்தது.

    முகாமை திருத்துறைப்பூண்டி நகர்மன்ற தலைவர் கவிதா பாண்டியன், தி.மு.க. நகர செயலாளர் பாண்டியன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

    இதில் கோட்டூர் ஒன்றிய செயலாளர் ஞானி, மாவட்ட வர்த்தக அணி துணை செயலாளர் சிக்கந்தர், மாநில இளைஞரணி துணை செயலாளர் இளையராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    முகாமில் சென்னை, பெங்களூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து 43 தனியார் நிறுவனங்கள் வந்திருந்தனர். இதில் திருத்துறைப்பூண்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து 200-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் மற்றும் பெண்கள் பலர் கலந்து கொண்டனர்.

    முகாமில் 68 பேரை தேர்வு செய்து அவர்களுக்கு தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி ஏ.கே.எஸ். விஜயன் பணி நியமன ஆணைகளை வழங்கினார்.

    ×