என் மலர்
திருநெல்வேலி
- கும்பாபிஷேக விழா கடந்த 23-ந்தேதி தொடங்கியது.
- 4-ம் நாளான இன்று அதிகாலை 6-ம் கால யாகசாலை பூஜைகள் நடந்தது.
களக்காடு:
நாங்குநேரி அருகே உள்ள செண்பகராமநல்லூரில் பிரசித்தி பெற்ற செண்பகவல்லி தாயார் உடனுறை ஜெகநாத பெருமாள் கோவில் உள்ளது. இக்கோவில் சிதிலமடைந்து காணப்பட்டதால் கடந்த 2 ஆண்டுகளாக திருப்பணிகள் நடந்து வந்தன. கோவில் சன்னதிகள், மண்டபங்கள் புனரமைக்கப்பட்டது. திருப்பணிகள் முடிவடைந்ததை முன்னிட்டு கும்பாபிஷேக விழா யாகசாலை பூஜைகளுடன் கடந்த 23-ந்தேதி தொடங்கியது. தாமிரபரணி ஆற்றில் இருந்து புனிதநீர் எடுத்து வரப்பட்டு, யாக சாலையில் ஹோமங்கள் நடத்தப்பட்டது. கஜபூஜை, கோபூஜை தம்பதி பூஜை, கும்பஸ்தாபனம், வாஸ்து சாந்தி, சதூர்வேத பாராயணம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்தது. 4-ம் நாளான இன்று அதிகாலையில் 6-ம் கால யாகசாலை பூஜைகள் நடந்தது.
அதனைத் தொடர்ந்து யாக சாலையில் இருந்து கும்பம் எழுந்தருளும் நிகழ்ச்சி நடைபெற்றது. வேத விற்பன்னர்கள் புனிதநீர் அடங்கிய குடங்களுடன் மேளதாளங்கள் முழங்க கோவிலை சுற்றி வந்தனர். அதன்பின் கோவில் ஜெகநாதர், செண்பகவல்லி தாயார் சன்னதிகளின் கோபுர கலசங்களுக்கு புனிதநீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது. இதில் ஆழ்வார்திருநகரி ஜீயர் சுவாமிகள், நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏ உள்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். அவர்கள் கோவிந்தா, கோவிந்தா என்ற பக்தி முழக்கத்துடன் சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து செண்பகவல்லி தாயார் சமேத ஜெகநாத பெருமாள் உள்பட பரிவார மூர்த்திகளுக்கும் மகா அபிஷேகம் நடந்தது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
- நெல்லை மாவட்டத்தில் நேற்று புறநகர் பகுதிகளில் ஒருசில இடங்களில் சாரல் மழை பெய்தது.
- மாவட்டத்தில் அதிகபட்சமாக சேர்வலாறு அணை பகுதியில் 4 மில்லிமீட்டர் மழை பெய்தது.
நெல்லை:
நெல்லை, தென்காசி மாவட்டங்களில் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக மதிய நேரத்திற்கு பின்னர் பரவலாக கோடை மழை பெய்து வருகிறது. இதனால் வெப்பம் தணிந்து வருவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
நெல்லை மாவட்டத்தில் நேற்று புறநகர் பகுதிகளில் ஒருசில இடங்களில் சாரல் மழை பெய்தது. பேட்டை, அபிஷேகப்பட்டி, சீதபற்பநல்லூர் பகுதிகளில் சுமார் 1 மணி நேரம் கனமழை கொட்டி தீர்த்தது. மேலும் பயங்கர இடி-மின்னலும் இடித்தது. இதனால் சாலையோரங்களில் தண்ணீர் குளம்போல் தேங்கி கிடந்தது.
மாவட்டத்தில் அதிகபட்சமாக சேர்வலாறு அணை பகுதியில் 4 மில்லிமீட்டர் மழை பெய்தது. நெல்லை, பாளை பகுதியில் தலா 1 மில்லிமீட்டர் மழை பதிவாகியது.
தென்காசி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியை ஒட்டி அமைந்துள்ள சிவகிரியில் தொடர்ந்து ஒரு வாரமாக மாலை நேரங்களில் மழை பெய்து வருகிறது. சங்கரன்கோவிலில் சுமார் 1 மணிநேரம் மழை பெய்தது. அங்கு 15 மில்லிமீட்டர் மழை பெய்துள்ளது.
அணை பகுதிகளை பொறுத்தவரை கருப்பாநதி அணை பகுதியில் சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக கனமழை கொட்டித்தீர்த்தது. அங்கு நேற்று ஒரே நாளில் 5 சென்டிமீட்டர் மழை பதிவாகி உள்ளது. தொடர்ந்து மாலை நேரங்களில் பெய்யும் மழையால் பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் சற்று நிம்மதி அடைந்துள்ளனர்.
- மின் மோட்டார்கள் மூலம் குடிநீர் உறிஞ்சுவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்
- 4 ரத வீதிகளை அழகுப்படுத்தும் விதமாக ரூ. 14.85 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் தொடங்கியதாக கூறப்படுகிறது.
நெல்லை:
நெல்லை மாநகராட்சி அலுவலகத்தில் இன்று வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. இதில் மேயர் சரவணன் கலந்துகொண்டு பொதுமக்களிடம் மனுக்களை பெற்றார்.
மின் விளக்குகள்
டவுன் பாட்டப்பத்து ஜும்மா பள்ளிவாசல் தலைவர் நெல்லை அபுபக்கர் அளித்த மனுவில், டவுன் பாட்டபத்து ஜும்மா பள்ளிவாசலுக்கு சொந்தமான மைய வாடி பகுதியில் புதிய சாலை மற்றும் சுற்றுச்சுவர் அழைக்கப்பட்டுள்ளது.
ஆனால் மின்விளக்குகள் பொருத்தப்படாததால் அந்த பகுதியில் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. எனவே அங்கு புதிய மின்கம்பங்கள் அமைத்து மின் விளக்குகள் எரிய விட வேண்டும் என்று கூறியிருந்தார்.
வி.எம்.சத்திரம் சீனி வாசன் நகர் ஏ காலனியை சேர்ந்த கந்தசாமி என்பவர் அளித்த மனுவில், சீனிவாசகம் நகர் ஏ காலனி 4-வது தெருவில் குறிப்பிட்ட சில வீடுகளில் மின் மோட்டார்கள் மூலம் குடிநீர் உறிஞ்சப்படுவதால் எங்களை போன்றவருக்கு குடிநீர் கிடைக்கவில்லை.
எனவே அந்த பகுதியில் அதிகாரிகள் ஆய்வு செய்து மின் மோட்டார்கள் மூலம் குடிநீர் உறிஞ்சுவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி யிருந்தனர்.
மாவீரன் சுந்தரலிங் கனார் மக்கள் இயக்கம் நிறுவன தலைவர் மாரியப்ப பாண்டியன், இந்து மக்கள் கட்சி உடையார், சமூக ஆர்வலர் பெர்டின் ராயன் மற்றும் பொதுமக்கள் திரண்டு வந்து அளித்த மனுவில் கூறி இருப்பதாவது:-
நெல்லை டவுன் நெல்லையப்பர் கோவிலை சுற்றிலும் அமைந்துள்ள 4 ரத வீதிகளிலும் ஆக்கிரமிப்புகளை அகற்றி அதனை அழகுப்படுத்தும் விதமாக கடந்த 2019-ம் ஆண்டு ரூ. 14.85 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் தொடங்கியதாக கூறப்படுகிறது. ஆனால் தற்போது ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் வெளியிடப்பட்ட அறிக்கை யில் 4 ரத வீதிகளிலும் ரூ.65 லட்சம் வரையிலும் பணிகள் நடைபெற்றுள்ளதாகவும், அந்த தொகை ஒப்பந்ததாரருக்கு வழங்கப்பட்டதாகவும் தெரிவிக்கப் பட்டுள்ளது.
பணிகள் நடைபெறாத பட்சத்தில் இவ்வளவு தொகை எவ்வாறு வழங்கப்பட்டது என்பது குறித்து அதிகாரிகளிடம் விசாரணை நடத்த வேண்டும் என்று கூறியிருந்தனர்.
இந்த கூட்டத்தில் செயற்பொறியாளர் வாசுதேவன், மாநகர நல அலுவலர் டாக்டர் சரோஜா, உதவி கமிஷனர்கள் லெனின், வெங்கட்ராமன் ஜஹாங்கீர் பாஷா, காளிமுத்து மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
ரூ.15 கோடி நிதி ஒதுக்கீடு
தொடர்ந்து மேயர் சரவணன் செய்தியா ளர்களிடம் கூறுகையில், நெல்லை மாநகரில் கோடை காலங்களில் ஏற்படும் குடிநீர் தட்டுப்பாட்டை சமாளிக்கும் வகையில் ரூ.15 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
மாநகராட்சிக்கு தண்ணீர் தரும் உறை கிணறுகளை மணல் மூடைகள் அடுக்கி தண்ணீர் சேமித்து குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று தெரிவித்தார்.
- டவுன் கருவேலன் குன்று தெருவில் மக்களை தேடி மருத்துவ முகாம் நடைபெற்றது.
- பொதுமக்களுக்கு இலவசமாக பரிசோதனைகள் செய்யப்பட்டன.
நெல்லை:
நெல்லை மாநகராட்சி கமிஷனர் சிவகிருஷ்ணமூர்த்தி உத்தரவின் பேரில் நகர் நல அலுவலர் டாக்டர் சரோஜா மற்றும் மாவட்ட காசநோய் தடுப்பு துணை இயக்குனர் வெள்ளைச்சாமி ஆகியோர் ஆலோசனையின் பேரில் தேசிய காசநோய் ஒழிப்பு திட்டத்தின் கீழ் நெல்லை டவுன் கருவேலன் குன்று தெரு ரேஷன் கடை முன்பாக மக்களை தேடி மருத்துவ முகாம் நடைபெற்றது. இந்த முகாமினை டவுன் சுகாதார அலுவலர் இளங்கோ தொடங்கி வைத்தார். முகாமில் பொதுமக்களுக்கு நடமாடும் இலவச டிஜிட்டல் எக்ஸ்ரே வாகனம் மூலம் சளி, இருமல், பசியின்மை, எடை குறைதல், மாலை நேர காய்ச்சல், சளியில் ரத்தம் வருதல், போன்ற அறிகுறி உள்ளவர்களுக்கு இலவசமாக பரிசோதனைகள் செய்யப்பட்டன. இதில் முதுநிலை சிகிச்சை மேற்பார்வை யாளர் முருகன், ஆய்வக நுட்புணர் கண்ணன், ரேடியோ கிராபர் சிஜின், ஒருங்கிணைப்பாளர் அகஸ்டின் ஆகியோர் கலந்து கொண்டு பொது மக்களுக்கு பரிசோதனை மேற்கொண்டனர். இந்த முகாமில் ஏராளமான பொது மக்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.
- விக்கிரமசிங்கபுரம் நகர் பிரிவு அலுவலகத்தில் விழிப்புணர்வு பதாகை அமைக்கப்பட்டது.
- மின் நுகர்வோர்களுக்காக நீர் மோர் பந்தல் அமைக்கப்பட்டது.
நெல்லை:
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் நெல்லை மின் பகிர்மான வட்டம் கல்லிடைக்குறிச்சி கோட்டத்தில் விக்கிரமசிங்கபுரம் நகர் பிரிவு அலுவல கத்தில் மின் நுகர்வோர்கள் பயன் பெறும் வகையில் மின்சார பாதுகாப்பு சம்பந்தமாக விழிப்புணர்வு பதாகை அமைக்கப்பட்டது. மேலும் அலுவலகத்திற்கு வரும் மின் நுகர்வோர்கள் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதாக கூறியதால், மின் நுகர்வோர்களின் தாகத்தை தணிக்கும் பொருட்டு பிரிவு அலுவலக வளாகத்தில் நீர் மோர் பந்தல் அமைக்கப்பட்டது.
அதில் வி.கே.புரம் உதவி செயற்பொறியாளர் ராமகிளி, பொதுமக்களுக்கு நீர் மோர் வழங்கினார். மேலும் மின் நுகர்வோர்கள் பயன்பெறும் வகையில் பாதுகாப்பு வாசகங்களுடன் அடங்கிய துண்டு பிரசுரங்களும் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை உதவி மின் பொறியாளர் ஆக்னஸ்சாந்தி மற்றும் விக்கிரமசிங்கபுரம் நகர் பிரிவு பணியாளர்கள் செய்திருந்தனர்.
- எஸ்.டி.டி.யூ சார்பில் மேலப்பாளையம் சந்தை ரவுண்டானா பகுதியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
- ஆர்ப்பாட்டத்தில் கோரிக்கைகளை முன் வைத்து கோஷம் எழுப்பப்பட்டது.
நெல்லை:
எஸ்.டி.பி.ஐ. கட்சியின் தொழிற்சங்கமான எஸ்.டி.டி.யூ சார்பில் மேலப்பாளையம் சந்தை ரவுண்டானா பகுதியில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. எஸ்.டி.டி.யூ. நெல்லை மாநகர் மாவட்ட தலைவர் ஆரிப் பாட்ஷா தலைமை தாங்கினார். துணைத்தலைவர் கல்வத், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் சிந்தா, காஜா, தங்கள் மைதீன், ஹசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் நிரந்தர பணியாளர்களை ஒப்பந்த பணியாளர்களாக மாற்ற கூடாது, குறைந்தபட்ச ஊதிய திட்டத்தை கைவிட வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை முன் வைத்து கோஷம் எழுப்பப்பட்டது.
இதில் எஸ்.டி.பி.ஐ. கட்சி மாநில பேச்சாளர் பேட்டை முஸ்தபா, மண்டல தலைவர் ஹைதர் இமாம் ஆகியோர் கண்டன உரை ஆற்றினார்கள். ஆர்ப்பாட்டத்தில் நெல்லை புறநகர் மாவட்ட எஸ்.டி.டி.யூ. தொழிற் சங்கத்தின் மாவட்ட தலைவர் சாகுல் ஹமீது, தூத்துக்குடி மாவட்ட தலைவர் குலசை தாகீர் மற்றும் மேலப்பாளையம் கசாலி, சுல்தான், செயற்குழு உறுப்பினர் தமீம் அன்சாரி, எஸ்.டி.பி.ஐ. பாளை தொகுதி செயலாளர் சனா சிந்தா ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். நெல்லை மாநகர் மாவட்ட செயலாளர் செய்யது மைதீன் நன்றி கூறினார்.
- முதல்-அமைச்சர் தொழில் முதலீடுகளை ஈர்ப்பதில் ஆர்வமாக உள்ளார்.
- பொருளாதார மண்டல வளாகத்தில் கையுறை தயாரிக்கும் நிறுவனம் திறக்கப்பட உள்ளது.
களக்காடு:
நெல்லை மாவட்டம் நாங்குநேரியில் கடந்த 2000-ம் ஆண்டில் தி.மு.க. ஆட்சியின் போது 2,100 ஏக்கர் பரப்பளவில் தொழில் நுட்ப பூங்கா அமைக்கப்பட்டது.
கிடப்பில் போடப்பட்ட திட்டம்
இப்பகுதியில் உள்ள இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்கும் நோக்கில் செயல்படுத்தப்பட்ட தொழில் நுட்ப பூங்கா திட்டம் அதன்பின் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதால், கிடப்பில் போடப்பட்டது.
பின்னர் கடந்த 2006-ம் ஆண்டில் மீண்டும் தி.மு.க. ஆட்சி அமைந்ததும் மீண்டும் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டது. இதனை விரிவுபடுத்தும் பொறுப்பு ஆந்திராவை சேர்ந்த நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டது.
ஆனால் அந்த நிறுவனம் தொழில் நுட்ப பூங்கா திட்டத்தை செயல்படுத்தாமல் இந்த நிலத்தை அடமானம் வைத்து அதன் மூலம் கடன் வாங்கி மோசடி செய்து விட்டதாகவும் புகார் கூறப்படுகிறது.
தற்போது 9 தொழிற்சாலைகள் மட்டுமே இயங்கி வருகின்றன. மேலும் தொழிற்சாலைகள் அமைப்பதற்கு ஏதுவாக சாலை, தெருவிளக்கு, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்படாததால் தொழிற் சாலைகள் தொடங்கப்படாமல் இத்திட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ளது.
சபாநாயகர் ஆய்வு
இந்நிலையில் சபாநாயகர் அப்பாவு இன்று நாங்குநேரி தொழில் நுட்ப பூங்காவை பார்வையிட்டார். இங்கு செயல்பட்டு வரும் தொழி ற்சாலைகளில் ஆய்வு மேற்கொ ண்டார். அதனை தொடர்ந்து தொழிற்சாலைகளின் உரிமை யாளர்களுடன் ஆலோசனை நடத்தினார்.
பின்னர் அவர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
நாங்குநேரி தொழில் நுட்ப பூங்கா திட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ளது வேதனை அளிப்பதாக உள்ளது.
இதுபற்றி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசின் கவனத்திற்கு கொண்டு சென்று மீண்டும் இத்திட்டத்தை செயல்படுத்த உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
முதல்-அமைச்சர் தொழில் முதலீடுகளை ஈர்ப்பதில் ஆர்வமாக உள்ளார். எனவே நாங்குநேரி சிறப்பு பொருளாதார மண்டலத்தில் தொழில் தொடங்கி உள்ளவர்கள் தைரியமாக தொழில் செய்யுங்கள். உங்களுக்கு முதல்-அமைச்சர் பாதுகாப்பாக இருப்பார். கலைஞரின் கனவு திட்டமான இந்த திட்டத்திற்கு உயிரூட்டப்படும்.
வருகிற ஜூலைமாதம் இந்த பொருளாதார மண்டல வளாகத்தில் கையுறை தயாரிக்கும் நிறுவனம் திறக்கப்பட உள்ளது. இதன் மூலம் நாங்குநேரி மற்றும் தென்மாவட்டங்களை சேர்ந்த ஆயிரம் பேருக்கு வேலை அளிப்பதாக அவர்கள் உறுதி அளித்துள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.
நிகழ்ச்சியில் தி.மு.க. ஒன்றிய செயலாளர்கள் ஜோசப் பெல்சி, ராஜன், ஆரோக்கிய எட்வின் மற்றும் தொழில் நிறுவனத்தினர் கலந்து கொண்டனர்.
- நாங்குநேரியில் இருந்து ஏர்வாடிக்கு லோடு ஆட்டோ வந்து கொண்டிருந்தது.
- லோடு ஆட்டோ திடீர் என மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
களக்காடு:
நெல்லை அருகே உள்ள பாளையங்கோட்டை, திருமலை தெருவை சேர்ந்தவர் இசக்கிமுத்து (வயது48).
இவர் தனது மனைவி மலையரசியுடன் (42) மோட்டார் சைக்கிளில் ஏர்வாடியில் இருந்து நெல்லைக்கு சென்று கொண்டிருந்தார்.
இதே போல் நாங்குநேரியில் இருந்து ஏர்வாடிக்கு லோடு ஆட்டோ வந்து கொண்டிருந்தது. லோடு ஆட்டோவை கருங்குளத்தை சேர்ந்த ரஞ்சித்குமார் (24) ஓட்டி வந்தார். ஏர்வாடி அருகே ஆலங்குளம் ரோட்டில் வந்த போது, லோடு ஆட்டோ திடீர் என மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
இந்த விபத்தில் இசக்கிமுத்தும், அவரது மனைவி மலையரசியும் படுகாயம் அடைந்தனர். அக்கம், பக்கத்தினர் அவர்களை மீட்டு, ஏர்வாடி தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கிருந்து இருவரும் மேல் சிகிச்சை க்காக நாகர்கோவில் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
இதுபற்றி ஏர்வாடி போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் இதுதொடர்பாக விபத்தை ஏற்படுத்திய லோடு ஆட்டோவை ஓட்டி வந்த ரஞ்சித்குமார் மீது வழக்கு ப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- பொதுவாக கோடை காலங்களில் காட்டுத் தீ விபத்து ஏற்படும்.
- களக்காடு தலையணையில் தீயணைப்பு, வனத்துறையினருக்கு கூட்டு பயிற்சி அளிக்கப்பட்டது.
களக்காடு:
களக்காடு புலிகள் காப்பகத்திற்குட்பட்ட மேற்கு தொடர்ச்சி மலையில் கோடை வெயில் கொளுத்தி வருகிறது. இதனால் கடும் வெப்பம் நிலவுகிறது.
பொதுவாக கோடை காலங்களில் காட்டுத் தீ விபத்து ஏற்படும் அபாயம் நிலவும் என்பதால் அதனை தடுக்க வனத்துறையினர் முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்வது வழக்கம். அதன்படி களக்காடு தலையணையில் காட்டுத் தீ விபத்தை தடுப்பது குறித்து தீயணைப்பு, வனத்துறையினருக்கு கூட்டு பயிற்சி அளிக்கப்பட்டது. இதில் நாங்குநேரி தீயணைப்பு மற்றும் மீட்பு நிலைய வீரர்கள், களக்காடு வனத்துறை ஊழியர்கள், வேட்டைத் தடுப்புக் காவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். அவர்களுக்கு கோடை காலத்தில் ஏற்படும் காட்டுத் தீயை கட்டுக்குள் கொண்டு வருவது பற்றியும், தீ விபத்தில் சிக்கியவர்களை மீட்பது குறித்தும், தீ ஏற்படாமல் தடுப்பது பற்றியும் கூட்டு பயிற்சி அளிக்கப்பட்டது.
மேலும் கள பயிற்சியும் கொடுக்கப்பட்டது. நாங்குநேரி தீ அணைப்பு நிலைய அதிகாரி பாபநாசம், களக்காடு வனசரகர் பிரபாகரன் கலந்து கொண்டனர்.
- சி.பி.சி.ஐ.டி. போலீசார் அம்பை, கல்லிடைக்குறிச்சி உள்ளிட்ட போலீஸ் நிலையங்களில் ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
- சி.பி.சி.ஐ.டி. போலீசாரும் 5 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
நெல்லை:
நெல்லை மாவட்டம் அம்பை சரகத்திற்குட்பட்ட போலீஸ் நிலையங்களில் விசாரணைக்கு சென்றவர்களின் பற்கள் பிடுங்கப்பட்டது தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இந்த சம்பவத்தில் ஏற்கனவே விசாரணை நடத்திய அறிக்கையை குற்றப்பிரிவு டி.எஸ்.பி. பொன்ரகு, சி.பி.சி.ஐ.டி. டி.எஸ்.பி. நவராஜ், இன்ஸ்பெக்டர் உலகராணி ஆகியோரிடம் ஒப்படைத்திருந்தார்.
தொடர்ந்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் அம்பை, கல்லிடைக்குறிச்சி உள்ளிட்ட போலீஸ் நிலையங்களில் ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
இந்நிலையில் அவர்கள் வழக்குப்பதிவு செய்த அதே பிரிவின் கீழ் சி.பி.சி.ஐ.டி. போலீசாரும் 5 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
இதற்கிடையே புகார் கூறிய கே.டி.சி. நகரை சேர்ந்த சுபாஷ், அவரது மனைவி சங்கீதா, அவர்களது வக்கீல் உள்பட 5 பேருக்கு சி.பி.சி.ஐ.டி. போலீசார் இன்று நேரில் ஆஜராகுமாறு சம்மன் அனுப்பினார். இதைத்தொடர்ந்து அவர்கள் பாளையில் உள்ள சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்தில் இன்று நேரில் ஆஜராக உள்ளதாக கூறப்படுகிறது.
+2
- 30-ந் தேதி காலையில் உருகுசட்டமும், சண்முகார்ச்சனையும் நடக்கிறது.
- திரிபுராந்தீஸ்வரர் சன்னதி முன்பு அமைந்துள்ள கொடிமரம் அருகில் பூஜைகள் நடைபெற்றது.
நெல்லை:
நெல்லை குறுக்குத்துறை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சித்திரை திருவிழா ஆண்டு தோறும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தாண்டு திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.
பாலாலயம்
காலை 6 மணிக்கு கொடி யேற்றம் நடைபெற்றது. கும்பாபிஷேக பணிக்காக கோபுரம், பாலாலயம் செய்ய ப்பட்டிருப்பதால் இன்றைய விழா உள்திரு விழாவாக நடைபெற்றது. தொடர்ந்து 11 நாட்கள் திருவிழா நடைபெறுகிறது.
வருகிற 30-ந் தேதி காலையில் உருகுசட்டமும், சண்முகார்ச்சனையும் நடக்கிறது. அடுத்த மாதம் 4-ந் தேதி காலை தீர்த்தவாரி நடைபெற உள்ளது. பாலாலயம் செய்யப்பட்டுள்ளதால் சுவாமி வீதி உலா, தேரோட்டம் நடைபெறாது. அனைத்து நிகழ்ச்சிகளும் உள்விழா வாகவே நடைபெறுகிறது.
திரிபுராந்தீஸ்வரர் கோவில்
பாளை கோமதி அம்மாள் சமேத திரிபுராந்தீஸ்வரர் கோவில் மிகவும் பழமையானது. இந்த கோவிலில் சித்திரை பிரமோற்சவ திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இதையொட்டி அதிகாலையில் கோவில் நடை திறக்கப்பட்டு சுவாமி -அம்மாள் விஸ்வரூபம் காலை சந்தி நடைபெற்றது.
அதனைத்தொடர்ந்து கொடிப்பட்டம் ரதவீதிகளில் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு, தொடர்ந்து திரிபுராந்தீஸ்வரர் சன்னதி முன்பு அமைந்துள்ள கொடிமரம் அருகில் சுவாமி அம்மாள் எழுந்தருள பூஜைகள் நடைபெற்றது. பின்னர் கொடியேற்றப்பட்டு கொடிமரத்திற்கு பல்வேறு வகையான பொருட்களால் அபிஷேகம் நடைபெற்றது.
பிறகு கொடி மரத்திற்கும், சுவாமி-அம்பாளுக்கும், தீபா ராதனை காட்டப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
இன்று முதல் 10 நாட்கள் நடைபெறும் சித்திரை பிரமோற்சவத்தில் 7-ம் நாள் 63 நாயன்மார் வீதி உலாவும், 9-ம் நாள் தேரோட்டமும் நடை பெறுகிறது. ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர், பக்த ர்கள், உபயதாரர்கள் செய்து வருகின்றனர்.
- களக்காட்டில் சூறைக்காற்று வீசி வருவதால் ஆயிரக்கணக்கான வாழைகள் சாய்ந்து விட்டது.
- நாலுமுக்கு எஸ்டேட்டில் 21 மில்லிமீட்டர் மழை பதிவாகி உள்ளது.
நெல்லை:
நெல்லை, தென்காசி மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக பகலில் வெயில் வாட்டி வதைத்து வரும் நிலையில், மாலை நேரத்தில் பரவ லாக மழை பெய்து வருகிறது.
நெல்லை
நெல்லை மாவட்டத்தில் மானூர் சுற்றுவட்டார பகுதிகள், களக்காடு, நாங்குநேரி, அம்பை, நெல்லை மாநகர பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. பகலில் சுட்டெரிக்கும் வெயிலால் சாலைகள் பொதுமக்கள் நட மாட்டம் குறைந்து காணப்படும் நிலையில் மாலையில் திடீரென வானில் கருமேகக்கூட்டங்கள் திரண்டு இடியுடன் கூடிய மழை பெய்கிறது.
களக்காடு மற்றும் அதன் சுற்றுவட்டாரத்தில் பலத்த சூறைக்காற்று வீசி வருவதால் ஆயிரக்கணக்கான வாழைகள் சாய்ந்து விட்டது. பாளை, நெல்லை, கன்னடியன், நாங்குநேரி பகுதிகளில் மாலைநேரத்தில் விட்டுவிட்டு சாரல் மழை பெய்தது. நேற்று இரவும் பாளை மற்றும் மாவட்டத்தின் சில இடங்களில் இடி-மின்னலுடன் மழை பெய்தது.
இன்று காலை நிலவரப்படி அதிகபட்சமாக கன்னடியன் கால்வாய் பகுதியில் 9.8 மில்லிமீட்டர் மழை பதிவாகி உள்ளது. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ள மாஞ்சோலை, ஊத்து, காக்காச்சி, நாலுமுக்கு ஆகிய பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது. அதிகபட்ச மாக நாலுமுக்கு எஸ்டேட்டில் 21 மில்லிமீட்டரும், காக்காச்சி யில் 15 மில்லிமீட்டரும் மழை பதிவாகி உள்ளது.
தென்காசி
தென்காசி மாவட்டத்தை பொறுத்தவரை கடந்த சில நாட்களாக தொடர்ந்து மாலை நேரங்களில் மழை பெய்து வருகிறது. இதனால் வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவுவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். சிவகிரியில் நள்ளிரவில் இடி-மின்னலுடன் கூடிய கனமழை சுமார் ஒரு மணிநேரம் கொட்டித்தீர்த்தது.
குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியை யொட்டி அமைந்துள்ள தென்காசி, செங்கோட்ைட, புளியரை, ஆய்க்குடி உள்ளிட்ட இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்தது. தொடர்ந்து சில நாட்களாக மாலை நேரத்தில் பெய்யும் இந்த மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
மாவட்டத்தில் அதிக பட்சமாக செங்கோட்டையில் 21.8 மில்லிமீட்டர், சங்கரன்கோவில், சிவகிரி, அடவி நயினார் அணைபகுதி களில் தலா 20 மில்லிமீட்டர் மழை பதிவாகி உள்ளது. ஆய்குடியில் 15 மில்லிமீட்டரும், தென்காசியில் 9 மில்லிமீட்டரும், குண்டாறு அணை பகுதியில் 7.6 மில்லிமீட்டரும் மழை பதிவாகி உள்ளது.
அணை பகுதிகளுக்கு பெரிய அளவில் நீர் வரத்து இல்லாமல் போனாலும் வாட்டி வதைக்கும் கோடை வெயிலில் இருந்து மக்கள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர்.






