என் மலர்
தென்காசி
- கூட்டத்தில் பொது மக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை மாவட்ட வருவாய் அலுவலர் பெற்றுக் கொண்டார்.
- நிகழ்ச்சியில் ரூ.1 லட்சத்து 27 ஆயிரத்து 374 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட வருவாய் அலுவலர் பத்மாவதி வழங்கினார்.
தென்காசி:
தென்காசி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறைத்தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட வருவாய் அலுவலர் பத்மாவதி தலைமையில் நடைபெற்றது.
கூட்டத்தில் பொது மக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை மாவட்ட வருவாய் அலுவலர் பெற்றுக் கொண்டார்.
தென்காசி மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் கீழ் நலவாரிய நலதிட்ட உதவிகள், உபகரணங்கள் வழங்கும் திட்டத்தின் மூலம் 7 மாற்றுத்திறனாளிகளுக்கு தலா ரூ.13 ஆயிரத்து 500 வீதம் மொத்தம் ரூ.94 ஆயிரத்து 500 மதிப்பில் மூன்று சக்கர சைக்கிள்களையும், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகம் மூலம் 6 பயனாளிகளுக்கு தலா ரூ.5,479 வீதம் மொத்தம் ரூ.32ஆயிரத்து 874 மதிப்பில் மின்மோட்டாருடன் கூடிய இலவச தையல் எந்திரங்களையும், தாட்கோ மூலம் 14 பயனாளிகளுக்கு தூய்மை பணியாளர்கள் நல வாரிய அட்டைகளையும் என மொத்தம் ரூ.1 லட்சத்து 27 ஆயிரத்து 374 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட வருவாய் அலுவலர் பத்மாவதி வழங்கினார். மேலும் இக்கூட்டத்தில் இலவச வீட்டுமனை பட்டா, முதியோர் உதவித்தொகை, அடிப்படை வசதிகள் ஏற்படுத்தி தரக் கோருதல், பட்டாமாறுதல், மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை மற்றும் இதர மனுக்கள் என மொத்தம் 365 மனுக்கள் பெறப்பட்டது.
பெறப்பட்ட மனுக்கள் தகுதி வாய்ந்த மனுக்களாக உள்ளதா என்பதை விசாரணை செய்து விரைந்து நடவடிக்கை மேற்கொண்டு மனுதாரர்களுக்கு உரிய பதில் அளிக்குமாறு சம்ப ந்தப்பட்ட அனைத்துத்துறை அலுவலர்களுக்கும் மாவட்ட வருவாய் அலுவலர் அறிவுறுத்தினார்.
இக்கூட்டத்தில் உதவி ஆணையர் (கலால்) ராஜமனோகரன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் சங்கரநாராயணன், மாற்றுத்திறனாளி கள் நல அலுவலர் ஜெயபிரகாஷ், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் முருகானந்தம், மாவட்ட மேலாளர் (தாட்கோ) ரமேஷ், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இளவரசி மற்றும் அனைத்துத் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
- சங்கர் அரியப்பபுரம் பகுதியில் பிரிண்டிங் பிரஸ் நடத்தி வந்தார்.
- பிரிண்டிங் பிரஸ்சுக்கு பயன்படுத்தி வந்த கெமிக்கலை குடித்து ராஜம் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.
தென்காசி:
பாவூர்சத்திரம் அருகே உள்ள ஆவுடையானூர் சிவசுப்பிரமணியபுரம் பகுதியை சேர்ந்தவர் சங்கர். இவரது மனைவி ராஜம்(வயது 29). இவர்களுக்கு நவிஷ்காஸ்ரீ (5), அரிஹரபாலன் (2) என்ற 2 குழந்தைகள் உள்ளனர். சங்கர் அரியப்பபுரம் பகுதியில் பிரிண்டிங் பிரஸ் நடத்தி வந்தார். இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சங்கர் உடல்நலக்குறைவால் இறந்துவிட்டார்.
இதனால் மன விரக்தியில் இருந்து வந்த ராஜம் நேற்று வீட்டில் இறந்து கிடந்தார். கணவர் இறந்த துக்கத்தில் பிரிண்டிங் பிரஸ்சுக்கு பயன்படுத்தி வந்த கெமிக்கலை குடித்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து அறிந்த பாவூர்சத்திரம் போலீசார் அங்கு விரைந்து சென்று ராஜம் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தென்காசி அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- வீர வாஞ்சி திடலில் தென்காசி மாவட்ட ஆர்.எஸ்.எஸ். பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நடந்தது.
- நிகழ்ச்சியில் ஆர்.எஸ்.எஸ்.,இந்து முன்னணி, பா.ஜ.க நிர்வாகிகள், தொண்டா்கள் பலா் கலந்து கொண்டனா்.
செங்கோட்டை:
செங்கோட்டை வடக்கு ரதவீதி அப்பா மாடசாமி கோவில் முன்பு வீர வாஞ்சி திடலில் தென்காசி மாவட்ட ஆர்.எஸ்.எஸ். சார்பில் 98-ம் ஆண்டு நிறைவு தினத்தை முன்னிட்டு பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நடந்தது. ஐந்தருவி சுவாமி விவேகானந்தா ஆசிரமம் அகிலானந்த மகராஜ் பேரணியை தொடங்கி வைத்து பேசினார்.
பேரணியானது வடக்கு ரதவீதி, கீழ ரதவீதி, கே.சி. ரோடு, வண்டிமலைச்சி அம்மன் கோவில், சேர்வைகாரன் புதுத்தெரு, ஜவஹர்லால் ரோடு வழியாக வந்து அப்பாமாடசாமி கோவில் அருகில் நிறைவடைந்தது.
பின்னா் நடந்த பொதுக்கூட்டத்திற்கு தென்காசி மாவட்ட தலைவா் குருமூர்த்தி தலைமை தாங்கினார். கன்னியாகுமரி கோட்ட செயலாளா் ஜேதீந்திரன் சிறப்புரையாற்றினார். மாவட்ட பொறுப்பாளர் முருகேசன் நன்றி கூறினார்.
நிகழ்ச்சியில் ஆர்.எஸ்.எஸ்.,இந்து முன்னணி, பா.ஜ.க நிர்வாகிகள், தொண்டா்கள் பலா் கலந்து கொண்டனா். பேரணியில் சுமார் 700-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனா்.
- தென்காசி காசி விஸ்வநாதர் கோவிலுக்கு வெளியூரில் இருந்து தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வாகனங்களில் வருகின்றனர்.
- பாழடைந்த கட்டிடங்களை இடித்து பல அடுக்கு வாகன நிறுத்தம் அமைத்தால் வாகன நெரிசல்கள் குறைந்து விடும்.
தென்காசி:
பாவூர்சத்திரம் அருகே உள்ள குறும்பலாபேரி கிராமத்தை சேர்ந்த சமூக ஆர்வலர் ராஜசேகர பாண்டியன் என்பவர் தென்காசி மாவட்ட கலெக்டரிடம் ஒரு கோரிக்கை மனு கொடுத்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-
பிரசித்தி பெற்ற தென்காசி காசி விஸ்வநாதர் கோவிலுக்கு வெளியூரில் இருந்து தினமும் ஆயிரக்க ணக்கான பக்தர்கள் வாகனங்களில் வருகின்றனர். மேலும் இக்கோவிலை சுற்றி அதிக அளவில் வணிக நிறுவனங்கள் உள்ளன.
எனவே இங்கு வரும் வாகனங்கள் அனைத்தும் நான்கு ரத வீதிகளில் சாலை யிலேயே நிறுத்துவதால் இப்பகுதியில் கடும் போக்கு வரத்து நெரிசல் ஏற்படுகின்றது.
இப்பிரச்சினைக்கு தீர்வு காண இப்பகுதியில் பார்கிங் வசதி இல்லை. கோவிலுக்கு எதிராக உள்ள 2427 சதுர மீட்டர் கொண்ட நிலமானது தொடக்கத்தில் கோவிலுக்கு பாத்தியப்பட்ட நிலமாக இருந்து பின்னர் ஆங்கிலே யர் ஆட்சி காலத்தில் பொதுப்பணித்துறையால் கையகப்படுத்தப்பட்டு அதில் தென்காசி முதன்மை சார்பு நீதிமன்றம் மற்றும் முதன்மை மாவட்ட உரிமை யியல் நீதிமன்றம் இயங்கி வந்தது. நீதிமன்றங்கள் தற்போது புதிய கட்டிடம் கட்டப்பட்டு வேறு இடத்திற்கு மாற்றப் பட்டு விட்டது. இதனால் அந்த நிலம் வெற்றிடமாக உள்ளது.
எனவே மேற்படி நிலத்தில் உள்ள பாழடைந்த கட்டிடங்களை இடித்து அகற்றி அந்த நிலத்தில் பல அடுக்கு வாகன நிறுத்தம் அமைத்தால் கோவிலை சுற்றி ஏற்படும் வாகன நெரிசல்கள் முற்றிலுமாக குறைந்து விடும்.
அதே நிலத்தில் பல அடுக்கு வாகன நிறுத்தம் அமைக்க வேண்டுமென மாவட்ட கலெக்டருக்கும், இந்து அறநிலைய துறைக்கும் மனு கொடுத்திருந்தேன்.
மனுவிற்கு அந்த இடத்தில் நீதிபதிகள் குடியிருப்பு கட்ட அனுமதி அளித்து அரசின் நிதி ஒதுக் கீட்டிற்காக காத்திருப்பதாக பொதுப்பணித்துறையினர் பதில் அளித்துள்ளனர். குற்றாலத்திலோ, தென்காசி மாவட்ட கலெக்டர் அலுவல கம் அருகில் கட்டப்படயி ருக்கும் மாவட்ட நீதிமன்றம் அருகிலோ நீதிபதிகள் குடியிருப்பு கட்டினால் உகந்ததாக இருக்கும். கோவில் முன்பு உள்ள அந்த நிலத்தில் போக்குவரத்து நெரிசலை குறைக்க கார் பார்க்கிங் அமைக்க நடவ டிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- துராப் சைபுல்லா ஹாஜா தர்கா கந்தூரி விழாவையொட்டி கடந்த 14-ந் தேதி பிறைக்கொடியேற்றம் நடைபெற்றது.
- கொடியேற்ற விழாவில் பல்வேறு இடங்களில் இருந்து பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
கடையநல்லூர்:
கடையநல்லூர் பஜார் சாலையில் உள்ள துராப் சைபுல்லா ஹாஜா தர்கா கந்தூரி விழாவையொட்டி கடந்த 14-ந் தேதி பிறைக்கொடியேற்றம் நடைபெற்றது. 7-வது நாளான நேற்று கொடி ஊர்வலம் பகல் 2 மணிக்கு தொடங்கி அலங்கரிக்கப்பட்ட யானையில் பிறைக்கொடி ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு பெரிய தெரு, புதுத்தெரு, பஜார்ரோடு, தேசிய நெடுஞ்சாலை உட்பட பல்வேறு இடங்கள் வழியாக யானை மீது பச்சை களை ஊர்வலமும், அதனைத் தொடர்ந்து சந்தனக் கூடும் நடைபெற்றது.
இரவு 10 மணிக்கு தர்கா வளாகத்தில் உள்ள கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டது. கொடியேற்ற விழாவில் பல்வேறு இடங்களில் இருந்து பொதுமக்கள் கலந்து கொண்டனர். அதனைத் தொடர்ந்து ராத்திப் மஜ்லீஸ் நடைபெற்றது. இரவு 10 மணிக்கு சந்தனம் பூசுதல் நடைபெற்றது. இன்று (செவ்வாய்க்கிழமை) காலையில் மவுலதுசரீப் ஓதி நேர்ச்சை வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை ஜமாத் தலைவர் பசுலுதீன், தர்கா பரம்பரை ஹக்தார் அனீஸ் ஆகியோர் செய்திருந்தனர்.
- கார்த்திகை மாதத்தில் சோமவாரம் பெண்களால் கடைபிடிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
- நாகர் சிலைகளுக்கு பால், பழங்கள் கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டது.
தென்காசி:
கார்த்திகை மாதம் என்றாலே அய்யப்ப பக்தர்கள் மாலை அணிவித்து விரதம் இருந்து சபரிமலை செல்வது வழக்கம். அதேபோல் கார்த்திகை மாதத்தில் சோமவாரம் பெண்களால் கடைபிடிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. அதன்படி இந்த ஆண்டு சோமவாரம் இன்று காலை முதல் கடைபிடிக்கப்பட்டது.
இதற்காக குற்றாலத்தில் அதிகாலை முதல் பெண்கள் கூட்டம் அலைமோதியது. குற்றாலநாதர் கோவில் அருகே உள்ள நாகர் சிலைகளுக்கு பால், பழங்கள் கொண்டு அபிஷேகம் செய்து பெண்கள் கற்பூரம் ஏற்றி பக்தி பரவசத்துடன் சாமி தரிசனம் செய்து சோமவரத்தை கடைப்பிடித்தனர்.
- நேற்று காலை சுவாமி தேரில் எழுந்தருளும் வைபவமும், தொடர்ந்து தேரோட்டமும் நடைபெற்றது.
- விரதமிருக்கும் பக்தர்கள் தரையில் விழுந்து கும்பிடு சரணம் வழிபாடு செய்து நேர்த்தி கடனை செலுத்துவர்.
கடையநல்லூர்:
தென்காசி மாவட்டம் பண்பொழி திருமலை குமாரசுவாமி கோவிலில் கந்த சஷ்டி திருவிழா கடந்த 11-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா 10 நாள்கள் நடைபெற்றது. இவ்விழாவில் தினமும் காலை, மாலை சுவாமி புறப்பாடு, சிறப்பு அபிஷேகங்கள், சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. திருமலைக்கோவில் மலையடிவாரமான வண்டாடும் பொட்டலில் 17-ந் தேதி பெருந்திருப்பாவாடை நடைபெற்றது. நேற்று முன்தினம் சூரசம்ஹாரம் நடைபெற்றது. நேற்று காலை சுவாமி தேரில் எழுந்தருளும் வைபவமும், தொடர்ந்து தேரோட்டமும் நடைபெற்றது. தமிழகத்தில் முருகன் கோவில்களில் ஒன்றான பண்பொழி திருமலை குமாரசாமி கோவிலில் மட்டும் ஒவ்வொரு ஆண்டும் விரதமிருக்கும் நூற்றுக்கணக்கான ஆண் மற்றும் பெண் பக்தர்கள் தரையில் விழுந்து கும்பிடு சரணம் வழிபாடு செய்து நேர்த்தி கடனை செலுத்துவர். இந்தாண்டு ஏற்கெனவே மழை பெய்து தேர் செல்லும் பாதை ஈரமான நிலையில் இருந்த போதும் பக்தர்கள் தரையில் விழுந்து கும்பிடு சரணம் நேர்த்திக் கடனை நிறைவேற்றியது குறிப்பிடத்தக்கது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
- தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் ஜெயபாலன் தலைமையில் சுரண்டையில் தொடங்கிய பேரணி பாவூர்சத்திரம் வருகை தந்தது.
- கீழப்பாவூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகில் ஒன்றிய செயலாளர் சீனித்துரை தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது.
தென்காசி:
தி.மு.க. இளைஞரணி மாநாடு சேலத்தில் அடுத்த மாதம் 17-ந் தேதி நடை பெறுகிறது. இதனையொட்டி இளை ஞரணி நிர்வாகிகள் கன்னியாகுமரியில் இருந்து சேலம் வரை 234 தொகுதிகளுக்கும் செல்லும் வகையில் திட்டமிட்டு இரு சக்கர வாகன பேரணியை நடத்தி வருகின்றனர். இந்த பேரணியானது தென்காசி மாவட்ட பகுதிகளுக்கு வருகை தந்தது.
தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் ஜெயபாலன் தலைமையில் சுரண்டையில் தொடங்கிய பேரணி பாவூர்சத்திரம் வருகை தந்தது.
பேரணிக்கு கீழப்பாவூர் மேற்கு ஒன்றிய தி.மு.க. சார்பில் பாவூர்சத்திரம் கீழப்பாவூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகில் ஒன்றிய செயலாளர் சீனித்துரை தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது. இதில் மாவட்ட கவுன்சிலர் சாக்ரடீஸ், கல்லூரணி ஊராட்சி தலைவர், குல சேகரப்பட்டி மதிச்செல்வன், நிர்வாகிகள் குருசிங் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
- விழா நாட்களில் தினமும் காலை, மாலை சிறப்பு பூஜை, தீபாராதனை நடைபெற்றது.
- திருக்கல்யாணம் நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
தென்காசி:
பாவூர்சத்திரம் காமராஜர்நகர் வென்னிமலை வள்ளி, தேவசேனா சமேத சுப்பிரமணியசுவாமி கோவிலில் கந்தசஷ்டி விழா கடந்த 13-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் தினமும் காலை, மாலையில் சிறப்பு பூஜைகள், தீபாராதனை நடைபெற்றது. முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் விழா நேற்று முன்தினம் நடைபெற்றது.
இதையொட்டி அன்று காலையில் கும்பஜெபம், மூலமந்திர ஹோமம், யாகசாலை பூஜை, சஷ்டி ஹோமம், விஷேச அபிஷேகம், தீபாராதனையும் மாலையில் சூரசம்ஹாரம் நடைபெற்றது. நேற்று இரவு சுவாமி திருக்கல்யாணம் நடைபெற்றது. இதில் பாவூர்சத்திரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை கோவில் விழாக்குழுவினர் செய்திருந்தனர்.
- வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் அணி தலைவர் விசுவராஜ் விவசாயிகளுக்கு வெங்காயம், சிறுகிழங்கு சாகுபடி செய்வது குறித்து பயிற்சியளித்தார்.
- ஊராட்சி மன்ற தலைவர் டி.கே.பாண்டியன் விவசாயிகளுக்கு சட்டி, மம்பட்டி, களவெட்டி வழங்கினார்.
கடையம்:
கடையம் யூனியனுக்கு உட்பட்ட கோவிந்தபேரி ஊராட்சியில் வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தில், திட்டத்தின் அணி தலைவர் விசுவராஜ் கலந்து கொண்டு 90 விவசாயிகளுக்கு வெங்காயம், சிறுகிழங்கு சாகுபடி செய்வது குறித்து பயிற்சியளித்தார். பின்னர் ஊராட்சி மன்ற தலைவர் டி.கே.பாண்டியன் விவசாயிகளுக்கு உபகரணங்களான சட்டி, மம்பட்டி, களவெட்டி போன்றவற்றை வழங்கினார். இதில் துணைத்தலைவர் இசேந்தரன், 5-வது வார்டு உறுப்பினர் ராஜா, 4-வது வார்டு உறுப்பினர் சுகிதா மற்றும் விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர்.
- சஷ்டியை முன்னிட்டு சுப்பிரமணியசுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடந்தது.
- நிகழ்ச்சியில் செங்கோட்டை சுற்று வட்டார பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
செங்கோட்டை:
செங்கோட்டையில் உள்ள குலசேகரநாதர் கோவிலில் கந்தசஷ்டி விழா கடந்த 13-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. சஷ்டியை முன்னிட்டு காலை 10 மணிக்கு சுப்பிரமணியசுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடந்தது. இதனை தொடர்ந்து மாலை வெள்ளிமயில் வாகனத்தில் சுவாமி வீதியுலா நிகழ்ச்சி இடம்பெற்றது.
அதனைத்தொடர்ந்து சுப்பிரமணியர் ஆனைமுகம், சிங்கமுகம், மகாசூரன் ஆகிய முகங்களை கொண்ட சூரனை சம்ஹாரம் செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது. 3 முக்கிய பகுதிகளில் நடந்த இந்த நிகழ்ச்சியில் செங்கோட்டை சுற்று வட்டார பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு அரோகரா கோஷங்களை எழுப்பி, முருகப்பெருமானை பக்தி பரவசத்துடன் வழிபட்டனர்.
- மர்ம நபர் அய்யாகுட்டியை கொலை செய்துவிட்டு தப்பி ஓடிவிட்டார்.
- கொலை சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
புளியங்குடி:
தென்காசி மாவட்டம் புளியங்குடி பஸ் நிலையம் அருகே உள்ள தெருவில் வசித்து வருபவர் அய்யாகுட்டி(வயது 55). இவர் அப்பகுதியில் உள்ள ஜவுளிக்கடையில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி கனக லெட்சுமி. இவர்களுக்கு ஆவுடை செல்வி என்ற மகள் உள்ளார். இவர் பட்டமேற்படிப்பு முடித்துள்ளார்.
இந்நிலையில் ஆவுடைச்செல்விக்கு வருகிற 23-ந்தேதி சிவகிரி அருகே உள்ள ராயகிரி பகுதியை சேர்ந்த ஒரு வாலிபருடன் திருமணம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. அதற்கான பணிகளை அய்யாகுட்டி செய்து வந்த நிலையில், நேற்று இரவு வரை உறவினர்கள் மற்றும் அக்கம் பக்கத்தினருக்கு அவர் திருமண அழைப்பிதழ்களை கொடுத்துவிட்டு வீடு திரும்பினார்.
சுமார் 11 மணி அளவில் அவர் சாப்பிட்டுவிட்டு தூங்க சென்றார். அப்போது வீட்டுக்கு வெளியே நின்று செல்போனில் பேசிக்கொண்டிருந்த ஆவுடை செல்வி, கதவை அடைக்க மறந்து தூங்க சென்றுவிட்டார். கனக லெட்சுமியும், ஆவுடை செல்வியும் மற்றொரு அறையில் தூங்க சென்ற நிலையில் அய்யாகுட்டி மட்டும் தனி அறையில் படுத்திருந்தார்.
அப்போது நள்ளிரவில் வீட்டுக்குள் புகுந்த வாலிபர் ஒருவர் அங்கிருந்த கத்தரிக்கோலால் அய்யா குட்டியின் கழுத்தில் சரமாரியாக குத்தினார். உடனே அய்யாகுட்டி வலி தாங்க முடியாமல் அலறி துடித்த நிலையில் அவரது அலறல் சத்தம் கேட்டு அவரது மனைவி மற்றும் மகள் அங்கு ஓடி வந்தனர். ஆனால் அதற்குள் அந்த மர்ம நபர் அய்யாகுட்டியை கொலை செய்துவிட்டு தப்பி ஓடிவிட்டார்.
இதுகுறித்து புளியங்குடி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் தலைமையிலான போலீசார் அங்கு விரைந்து சென்று கொலை செய்யப்பட்ட அய்யாகுட்டி உடலை மீட்டு நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அய்யாகுட்டியை கொலை செய்த வாலிபர் யார்? எதற்காக கொலை செய்தார்? என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி தப்பி ஓடிய மர்ம நபரையும் வலைவீசி தேடி வருகின்றனர்.






