என் மலர்
நீங்கள் தேடியது "pavoorchatram"
- ஜம்பு நதி மேல்மட்ட கால்வாய் திட்டம் மட்டும் பின்னர் வந்த அரசால் கைவிடப்பட்டது.
- 2014-ம் ஆண்டு ரூ.42 கோடி மதிப்பீட்டில் திட்டப்பணி நிறைவேற்ற அரசாணை வெளியிடப்பட்டது.
தென்காசி:
தென்காசி தெற்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் செல்வமோகன் தாஸ் பாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-
காமராஜர் ஆட்சிக் காலத்தில் ராமநதி அணை, கடனாநதி அணை, ஜம்பு நதி மேல்மட்ட கால்வாய் ஆகிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டப்பட்டது. இதில் ஜம்பு நதி மேல்மட்ட கால்வாய் திட்டம் மட்டும் பின்னர் வந்த அரசால் கைவிடப்பட்டது. 2005-ம் ஆண்டு அ.தி.மு.க. ஆட்சியின் போது முதல்- அமைச்சராக இருந்த ஜெயலலிதாவால் ரூ.3.64 கோடி நிதி ஒதுக்கி அடிக்கல் நாட்டப்பட்டது.அதனைத் தொடர்ந்து 2014-ம் ஆண்டு தமிழக அரசு விதி எண் 110 கீழ் ரூ.42 கோடி மதிப்பீட்டில் திட்டப்பணி நிறைவேற்ற அரசாணை வெளியிடப்பட்டது. இந்த திட்டத்திற்கு பூர்வாங்க பணிகள் நடைபெற்று வந்த நிலையில் 2020 -ம் ஆண்டு அப்போதைய முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவின் பேரில் பணியை முழுமையாக முடிக்க ரூ.41½ கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு அதற்காக அடிக்கல் நாட்டப்பட்டு பணிகள் தொடங்கியது.
பின்னர் ஆட்சி மாற்றத்தின் காரணமாக தற்போது தி.மு.க. அரசு அந்தத் திட்டத்தை செயல்படுத்தாமல் கிடப்பில் போட்டுள்ளது என்றும் அதேபோல் சுரண்டை இரட்டை குளம் முதல் ஊத்துமலை வழியாக புதிய கால்வாய் அமைக்கும் திட்டமும் கடந்த ஆட்சியில் தொடங்கப்பட்டு தற்போது அரசு இந்த திட்டத்தையும் கைவிடுவதாக அறிவித்துள்ளது.
எனவே ஜம்பு நதி மேல்மட்ட கால்வாய் திட்டத்தையும் சுரண்டை இரட்டைக் குளம் கால்வாய் திட்டத்தையும் நிறைவேற்ற கோரி அந்த பகுதி விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் அனை வரையும் ஒன்று திரட்டி நாளை பாவூர்சத்திரம் பஸ் நிலையம் அருகில் உண்ணா விரத போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.
- துளசி தோப்பு பகுதியில் தென்னை, மாமரங்கள், கிழங்கு வகைகளை விவசாயிகள் அதிகளவில் பயிரிட்டுள்ளனர்.
- இரவில் காட்டு யானைகள் முகாமிட்டு தென்னைமரங்களை முறித்து சேதப்படுத்தி வருகின்றன.
தென்காசி:
பாவூர்சத்திரம் அருகே உள்ள திரவியநகருக்கு மேற்கே மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ளது துளசி தோப்பு.
காட்டுயானை அட்டகாசம்
இப்பகுதியில் விவசாயிகள் தென்னை, மாமரங்கள், கிழங்கு வகைகளை அதிகளவில் பயிரிட்டுள்ளனர்.
இந்நிலையில் கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக துளசி தோப்பு பகுதியை சுற்றி அமைந்துள்ள விவசாய நிலங்களில் இரவில் காட்டு யானைகள் முகாமிட்டு தென்னைமரங்கள் உள்ளிட்டவற்றை முறித்து சேதப்படுத்தி வருகின்றன.இதனால் விவசாயிகளுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டு வருகிறது.
விவசாயிகள் கோரிக்கை
முத்துமாலைபுரம் கிராமத்தை சேர்ந்த அழகன் என்ற விவசாயிக்கு சொந்தமான விளை நிலத்தில் தென்னை மரங்களை காட்டு யானைகள் சேதப்படுத்தி யதை அந்த விவசாயி நேரில் பார்த்ததாக கூறியுள்ளார்.
ஏற்கனவே பெத்தான் பிள்ளை குடியிருப்பில் காட்டில் இருந்து இறங்கிய கரடி ஒன்று நேற்று 3 பேரை கொடூரமாக தாக்கிய சம்பவம் நடந்துள்ளது.
எனவே துளசிதோப்பு பகுதியில் உள்ள விலை நிலங்களை சேதப்படுத்தி வரும் காட்டு யானைகள் விவசாய நிலங்களுக்குள் இறங்காத வாறு மின்வேலிகளை அமைக்கவும், வெளியில் வரும் காட்டு யானைகளை மீண்டும் காட்டுப் பகுதிக்கு விரட்ட, வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- பாவூர்சத்திரம் பஸ் நிலையம் அருகே தி.மு.க. சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது.
- தி.மு.க. மாவட்ட செயலாளர் சிவபத்மநாதன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார்.
தென்காசி:
ஜம்புநதி-ராமநதி மேல்மட்ட கால்வாய் திட்டத்தில் நடந்தது என்ன என்பது குறித்த உண்மை நிலை விளக்க பொதுக்கூட்டம் கீழப்பாவூர் மேற்கு ஒன்றிய தி.மு.க. சார்பில் பாவூர்சத்திரம் பஸ் நிலையம் அருகே நடைபெற்றது.
கூட்டத்திற்கு கீழப்பாவூர் மேற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் சீனிதுரை தலைமை தாங்கினார். தி.மு.க. மாவட்ட செயலாளர் சிவபத்மநாதன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசியதாவது:-
கடந்த அ.தி.மு.க. ஆட்சியின் பொழுது ஜம்பு நதி, ராமநதி மேல்மட்ட கால்வாய் திட்டப் பணிகள் அவசரமாக தொடங்கப்பட்டு முறையான வனத்துறை அனுமதி உள்ளிட்டவை பெறாமல் பெயரளவிற்கு தொடங்கப்பட்டது. அதனை தற்பொழுது தி.மு.க.ஆட்சியில் முழுமையாக கொண்டு வருவதற்கும், இரட்டைக் குளம் கால்வாய் திட்டப் பணியையும் உரிய முறையில் மேற்கொண்டு விவசாயிகள் பயனடையும் வகையில் அனைத்து பணிகளும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில் தலைமை கழக பேச்சாளர் சரத் பாலா, ராமநதி ஜம்பு நதி மேல்மட்ட கால்வாய் இணைப்பு குழு அமைப்பாளர் ராம உதயசூரியன், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் செல்லத்துரை, ஜேசுராஜன், முத்துப்பாண்டி, ஆறுமுகசாமி, மாவட்ட பஞ்சாயத்து தலைவி தமிழ்ச்செல்வி, கீழப்பாவூர் யூனியன் சேர்மன் காவேரி, தி.மு.க. ஒன்றிய செயலாளர்கள் சிவன் பாண்டியன், அழகு சுந்தரம், ரவிசங்கர், திவான் ஒலி மற்றும் பேரூராட்சி தலைவர்கள் பி.எம்.எஸ்.ராஜன், சுந்தர்ராஜன், சின்னத்தாய், வேணி, சுதா மோகன்லால், தொழிலதிபர்ஆர்.கே.காளிதாசன், சிவ அருணன் உள்ளிட்ட தி.மு.க. நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.
- ரெயில் நிலைய அதிகாரிகளின் ஒப்புதலோடு சுத்தம் செய்யும் பணி நடைபெற்றது.
- கல்லூரணி பஞ்சாயத்து தலைவர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார்.
தென்காசி:
பாவூர்சத்திரம் சென்ட்ரல் அரிமா சங்கத்தின் சார்பாக பாவூர்சத்திரம் ரெயில் நிலைய நடைமேடையை சுத்தம் செய்ய வேண்டும் என நிர்வாகிகள் உறுப்பினர்கள் சார்பில் முடிவு செய்யப்பட்டு ரெயில் நிலைய அதிகாரிகளின் ஒப்புதலோடு சுத்தம் செய்யும் பணி நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சிக்கு துணை கோட்ட பொறியாளர் கபிலன், பிரிவு பொறியாளர் யூசுப், பாவூர்சத்திரம் நிலைய கண்காணிப்பாளர் மாணிக்க்ஷா மற்றும் பாவூர்சத்திரம் சென்ட்ரல் அரிமா சங்கத்தை சேர்ந்த கே.ஆர்.பி. இளங்கோ, பொன்னறிவழகன் உள்ளிட்ட 25 உறுப்பினர்களும் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் கல்லூரணி பஞ்சாயத்து தலைவர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு தொடங்கி வைத்தார்.
- சிவசக்தி வித்யாலயா சி.பி.எஸ்.இ. பள்ளியில் குழந்தைகள் தின விழா கொண்டாடப்பட்டது.
- வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.
தென்காசி:
பாவூர்சத்திரம் அடுத்துள்ள ஆவுடையானூர் அருகே உள்ள பொடியனூர் சிவசக்தி வித்யாலயா சி.பி.எஸ்.இ. பள்ளியில் முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் பிறந்த நாளை முன்னிட்டு குழந்தைகள் தின விழா கொண்டாடப்பட்டது.
பள்ளியின் தாளாளர் நித்யா தினகரன் தலைமை தாங்கினார். ஆசிரியை குயின் விக்டோரியா வரவேற்று பேசினார். ஆசிரியை தங்க ஜெயா சிறப்புரை வழங்கினார். இன்றைய குழந்தைகளுக்கு தேவையான நல்லொழுக்கம், தன்னடக்கம், சுயமரியாதை, கட்டுப்பாடு, விழிப்புணர்வு உள்ளிட்ட பல்வேறு கருத்துகளை பள்ளியின் ஆசிரியர்கள் பாட்டு, கவிதை, நாடகம் மூலம் எடுத்துரைத்தனர்.
மேலும் கடந்த மாதம் 29-ந் தேதி நடைபெற்ற கலாம் கல்வி நிறுவனம் நடத்திய கட்டுரை, கவிதை, ஓவியம் மற்றும் கையெழுத்து ஆகிய போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பதக்கங்கள், கோப்பைகள், சதுரங்க பலகைகள் மற்றும் பாராட்டு சான்றிதழ் ஆகியவை வழங்கப்பட்டது. கலந்து கொண்ட குழந்தைகள் அனைவருக்கும் இனிப்புகள் மற்றும் சிறப்பு பரிசுகள் பள்ளியின் சார்பில் வழங்கப்பட்டது. ஆசிரியை அருணா தேவி நன்றி கூறினார்.
- ரேஷன் கடை கட்டிடத்தின் மேற்கூரையின் உள்பகுதி காங்கீரிட் தளம் சேதமடைந்த நிலையில் விரிசல்களுடன் காணப்படுகிறது.
- மழைநீர் உள்ளே சென்று ரேசன் பொருட்கள் சேதம் அடைய வாய்ப்பு உள்ளது.
தென்காசி:
பாவூர்சத்திரம் காமராஜ் நகர், வென்னிமலை முருகன் கோவில் செல்லும் சாலையில் ஒரு ரேஷன் கடை அமைந்துள்ளது. இங்கு 200-க்கும் மேற்பட்ட குடும்ப அட்டைதாரர்களுக்கு அரிசி, துவரம் பருப்பு, ஆயில், சீனி, மண்எண்ணை உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
தற்போது இந்த ரேஷன் கடை கட்டிடத்தின் மேற்கூரையின் உள்பகுதி காங்கீரிட் தளம் சேதமடைந்த நிலையில் விரிசல்களுடன் காணப்படுகிறது. தற்போது மழை காலம் என்பதால் மழைநீர் கசிவுகள் உள்ளே சென்று ரேசன் பொருட்கள் சேதம் அடைய வாய்ப்பு உள்ளது.
மேலும் இங்கு பணிபுரியும் ஊழியர்கள் மேற்கூரை இடிந்து தங்கள் மேல் விழுந்து விடுமோ என்ற அச்சத்துடன் பணிபுரிந்து வருவதாக கூறுகின்றனர். எனவே விபத்து ஏற்படும் முன் சேதமடைந்த ரேஷன் கடை கட்டிடத்தை சீரமைத்து தர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத் துள்ளனர்.
- அவ்வையார் பள்ளியின் விளையாட்டு மைதானத்தில் மழை நேரங்களில் தண்ணீர் தேங்கி மாணவிகளுக்கு சிரமத்தை ஏற்படுத்தியது.
- தட்சண மாற நாடார் சங்க தலைவர் ஆர். கே.காளிதாசன் மற்றும் கென்னடி ஆகியோரை ஆசிரியர்கள் சந்தித்து நன்றி தெரிவித்தனர்.
தென்காசி:
பாவூர்சத்திரத்தில் இயங்கி வரும் அவ்வையார் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 1,500-க்கும் மேற்பட்ட மாணவிகள் பயின்று வருகின்றனர்.
இந்நிலையில் பள்ளியின் விளையாட்டு மைதானமானது மிகவும் பள்ளமாக காணப்பட்டதால் மழை நேரங்களில் தண்ணீர் தேங்கி மாணவிகள் மற்றும் ஆசிரியர்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தியது.
பள்ளியின் தலைமை ஆசிரியை ஜான்சிராணி மற்றும் ஆசிரியர்கள் நெல்லை தட்சணமாற நாடார் சங்க தலைவர் ஆர்.கே.காளிதாசன் மூலம் நெல்லை, தென்காசி நான்கு வழி சாலை பணியில் ஈடுபட்டு வரும் பி அண்ட் சி நிறுவனத்தின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு, அவர்களின் மூலம் பள்ளமாக கிடந்த மைதானம் முழுவதும் மண்ணை கொட்டி சீர் செய்தனர்.
இதைத்தொடர்ந்து பள்ளி தலைமை ஆசிரியை மற்றும் ஆசிரியர்கள், தட்சண மாற நாடார் சங்க தலைவர் ஆர். கே.காளிதாசன் மற்றும் பி அண்ட் சி நிறுவன மேலாளர் கென்னடி ஆகியோரை சந்தித்து பள்ளியின் சார்பில் நன்றியினை தெரிவித்து நினைவு பரிசு வழங்கினர்.
இதில் உதவி தலைமை ஆசிரியர் சிவபார்வதி நாதன், ஆசிரியை ஜெகதா, ஆசிரியர் மில்டன், அலுவலக பணியாளர் பீட்டர் ஆரோக்கியசாமி, முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் அருணோதயம், நாராயண சிங்கம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
- பெத்தநாடார்பட்டியில் மாயாண்டி சுவாமி கோவில் திருவிழா ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதம் முதல் வெள்ளிக்கிழமை நடைபெறும்.
- பொதுமக்கள் முழு வாழைப்பழ தார்களை கோவிலுக்கு கொண்டு வந்து சுவாமிக்கு படைத்து வழிபட்டனர்.
தென்காசி:
பாவூர்சத்திரம் அருகே உள்ள பெத்தநாடார்பட்டியில் மாயாண்டி சுவாமி கோவில் உள்ளது. இக்கோவில் திருவிழா ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதம் முதல் வெள்ளிக்கிழமை நடைபெறும். இக்கோவிலில் சிறப்பு திருவிழாவாக பழம் படைத்தல் விழா மார்கழி மாதம் 2-வது வெள்ளி அன்று தொன்று தொட்டு நடைபெற்று வருவது வழக்கம்.
அதன்படி சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதனை முன்னிட்டு அந்த ஊரில் உள்ள வீடுகளில் இருந்து பொதுமக்கள் முழு வாழைப்பழ தார்களை கோவிலுக்கு கொண்டு வந்து சுவாமிக்கு படைத்தும் அனைவரும் சுவாமிக்கு வரிசையில் நின்று மாலை சாத்தியும் வழிபட்டனர். பின்னர் பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது . இதில் சுற்றுவட்டாரத்திலிருந்து ஏராளமான பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
- அத்தியூத்தில் மாற்றுக் கட்சிகளை சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் பா.ஜ.க.வில் இணையும் நிகழ்ச்சி நடைபெற்றது.
- தெருமுனை பிரசார கூட்டமும், உறுப்பினர் சேர்க்கை, இல்லம் செல்வோம் உள்ளம் வெல்வோம் மற்றும் படிவங்கள் பூர்த்தி செய்யும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.
தென்காசி:
கீழப்பாவூர் கிழக்கு ஒன்றிய பாரதீய ஜனதா கட்சி சார்பில் அத்தியூத்தில் மாற்றுக் கட்சிகளை சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் பா.ஜ.க.வில் இணையும் நிகழ்ச்சி நடைபெற்றது. மேலும் தெருமுனை பிரசார கூட்டமும், உறுப்பினர் சேர்க்கை, இல்லம் செல்வோம் உள்ளம் வெல்வோம் மற்றும் படிவங்கள் பூர்த்தி செய்யும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. இதில் மாநில செயற்குழு உறுப்பினர் அன்புராஜ், மாவட்ட பொதுச் செயலாளர் அருட்செல்வன், விருந்தோம்பல் பிரிவு மாவட்ட தலைவர் நாகராஜன், ஒன்றிய தலைவர் சுரேஷ் முருகன், ஒன்றிய பொது செயலர்கள் ஜோதி செல்வம், பாஸ்கர், ஒன்றிய பிரதிநிதி மாறவர்மன், நகர செயலாளர் சவுந்தர்ராஜன், மத்திய அரசு நலத்திட்ட பிரிவு ஒன்றிய செயலாளர் மணிகண்டன், சரவண முருகன், நாராயணன், கண்ணன், அருணாச்சலம், சிவலிங்கம், வக்கீல் ராமர், பாலமுருகன், தளபதி சுபாஷ், வெட்டும் பெருமாள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- பாவூர்சத்திரத்தில் சார்பதிவாளராக பணியாற்றி வந்த வசந்தி என்பவர் சில நாட்களுக்கு முன்பு சஸ்பெண்டு செய்யப்பட்டார்.
- சார்பதிவாளர்கள் காலதாமதமாக அலுவலகத்திற்கு வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
தென்காசி:
பாவூர்சத்திரத்தில் சார்பதிவாளராக பணியாற்றி வந்த வசந்தி என்பவர் சில நாட்களுக்கு முன்பு பதிவுத்துறை விதிகளுக்கு மாறாக செயல்பட்டதாக கூறி சஸ்பெண்டு செய்யப்பட்டார்.அதன் பிறகு மாவட்ட பதிவுத்துறையால் நாள் தோறும் தற்காலிக சார் பதிவாளர்களை பாவூர்சத்திரம் சார்பதி வாளர் அலுவலகத்திற்கு பணிக்கு அனுப்பி வருகிறது.
ஆனால் பாவூர்சத்திரம் சார்பதிவாளர் அலுவலகத்திற்கு வரும் சார்பதிவாளர்கள் அனைவருமே காலையில் மிகவும் காலதாமதமாக வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதனால் முதியோர்கள், பெண்கள் கைக்குழந்தைகளுடன் கர்ப்பிணிபெண்கள் , சிறு வணிகர்கள்,வியாபார பெருமக்கள்,அரசு அலுவலர்கள், விவசாய பெருமக்கள் ஆகியோர்கள் பாவூர்சத்திரம் சார்பதிவாளர் அலுவலகத்திற்கு வந்து பத்திரப்பதிவு செய்ய முடியாமல் காத்திருக்கும் அவலநிலை உள்ளது.இதனால் அரசுக்கும் இழப்பு ஏற்படுகிறது.
மேலும் பழைய பிறப்பு, இறப்பு பதிவின்மை சான்றிதழ் பெற மனு அளித்து இரண்டு மாதம் ஆனாலும் தற்காலிக சார்பதிவாளர்களால் கிடப்பில் போடப்பட்டு வருகிறது. பிறப்பு மற்றும் இறப்பு பதிவின்மை சான்றிதழ் பெற முடியாமல் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகிறார்கள்.
எனவே பாவூர்சத்திரம் சார்பதிவாளர் அலுவ லகத்திற்கு நிரந்த சார்பதிவாளரை நியமித்து அப்பகுதி பொதுமக்களின் தேவைகளை நிறைவேற்று மாறு சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- புதிதாக அமைக்கப்படும் சாலையில் புழுதிகள் பறக்காத வண்ணம் தண்ணீர் தெளிக்க வேண்டியது கட்டாயமாகும்.
- புழுதி பறக்கும் சாலையில் வாகனம் ஓட்ட பல்வேறு தரப்பினரும் திணறி வருகின்றனர்.
தென்காசி:
நெல்லை-தென்காசி நான்கு வழி சாலை பணிகள் தொடங்கி நடைபெற்று வரும் நிலையில் பாவூர்சத்திரம், ஆலங்குளம் நகர்புற பகுதியில் தற்போது தான் பழைய தார் சாலைகளை பெயர்த்து அகற்றிவிட்டு ஜல்லிகளை கொட்டி மட்டப்படுத்தும் பணியில் சாலை பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
புதிதாக அமைக்கப்படும் சாலையில் புழுதிகள் பறக்காத வண்ணம் தண்ணீர் தெளிக்க வேண்டியது கட்டாயமாகும்.
ஆனால் அதனை சம்பந்தப்பட்ட ஒப்பந்ததாரர்கள் செய்யாமல் அலட்சி யம் காட்டி வருகின்றனர்.
பாவூர்சத்திரம் ஆலங்குளம் நகர்ப்புற பகுதியில் அதிகாலை மற்றும் மாலை வேலைகளில் பள்ளி கல்லூரிகளுக்கு சைக்கிள்களில் செல்லும் மாணவ- மாணவிகள் மற்றும் அரசு, தனியார் துறை ஊழியர்கள் புழுதி பறக்கும் சாலையில் வாகனம் ஓட்ட திணறி வருகின்றனர்.
பலருக்கு சுவாச கோளாறும் அதிகம் ஏற்படுவதாகவும் இதற்கு தீர்வு காண புழுதி பறக்கும் சாலையில் தண்ணீரை பீச்சி அடித்து சாலை அமைக்கவும் வாகன ஓட்டிகள் எவ்வித சிரமம் இன்றி பயணிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை எடுத்துள்ளனர்.
- பொங்கல் பண்டிகைக்கு இன்னும் 2 நாட்களே உள்ள நிலையில் தென்காசி மாவட்டம் முழுவதும் உள்ள காய்கறி சந்தைகளுக்கு காய்கறிகளின் வரத்து அதிகரித்தும், அதன் விலையும் அதிகரிக்க தொடங்கி உள்ளது.
- பாவூர்சத்திரத்தில் உள்ள பெருந்தலைவர் காமராஜர் தினசரி சந்தையில் வெளியூரில் இருந்து உருளை, கத்தரி, பீட்ரூட், கேரட் முள்ளங்கி போன்ற காய்கறிகள் அதிகளவில் லாரிகளில் வந்து இறங்கிய வண்ணம் உள்ளது.
தென்காசி:
பொங்கல் பண்டிகைக்கு இன்னும் 2 நாட்களே உள்ள நிலையில் தென்காசி மாவட்டம் முழுவதும் உள்ள காய்கறி சந்தைகளுக்கு காய்கறிகளின் வரத்து அதிகரித்தும், அதன் விலையும் அதிகரிக்க தொடங்கி உள்ளது.
பாவூர்சத்திரத்தில் உள்ள பெருந்தலைவர் காமராஜர் தினசரி சந்தையில் வெளியூரில் இருந்து உருளை, கத்தரி, பீட்ரூட், கேரட் முள்ளங்கி போன்ற காய்கறிகள் அதிகளவில் லாரிகளில் வந்து இறங்கிய வண்ணம் உள்ளது.
கத்தரிக்காய் கிலோ ரூ.60-ல் இருந்து 130 வரையிலும், தக்காளி ரூ.22-ல் இருந்து 28 ஆகவும், வெண்டை-66, புடலை-30,பீர்க்கு-50, பாகல்-40, சுரைக்காய்-10, தடியங்காய்-16, பூசணி-14, டிஸ்கோ பூசணி-24, அவரை-52, கொத்தவரை-30, மிளகாய்-44, முள்ளங்கி-30, முருங்கைக்காய்-180, தேங்காய்-32, வாழைக்காய்-40, வாழைஇலை-15, சின்ன வெங்காயம்-80, பெரிய வெங்காயம்-32/26, இஞ்சி-60, மாங்காய்-80, மல்லிஇலை-45, கோவைக்காய்-32, சேனைக்கிழங்கு-25,சேம்பு-60, கருணைகிழங்கு-25, உருளைக்கிழங்கு-30,கேரட்-48, பீட்ரூட்-36, முட்டைக்கோஸ்-20, சவ்சவ்-24, பீன்ஸ்-48, பச்சைப்பட்டாணி-48, குடமிளகாய்-64, காலிப்ளவர்-40 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
தென்காசி மாவட்டத்தில் உள்ள உழவர் சந்தைகளிலும் இதே விலைகள் நீடிக்கிறது. காய்கறிகளின் விலை ஏறுமுகமாக இருந்தாலும் சிறு சிறு வியாபாரிகள் விற்பனை செய்வதற்காக ஆர்வமுடன் காய்கறிகளை வாங்கிச் செல்கின்றனர்.
20 எண்ணிக்கை கொண்டபனங்கிழங்கு கட்டுகள் ரூ.100-க்கும், கரும்புக்கட்டுகள் ரூ. 500 வரையிலும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.






