என் மலர்
சிவகங்கை
- முத்துமாரியம்மன் கோவிலுக்கு பால்குட ஊர்வலம் நடந்தது.
- தினமும் சிறப்பு வழிபாடுகள் நடந்தது.
தேவகோட்டை
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சாரதா நகரில் முத்து மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் திருவிழா கடந்த 4-ந் தேதி தொடங்கியது. இதையொட்டி நவசக்தி ஹோமம், கணபதி ஹோமம், அம்மனுக்கு காப்பு கட்டு, சக்தி கரகம் எடுத்தல் ஆகிய நிகழ்ச்சிகள் நடந்தது.
அம்மனுக்கு தாயமங்கலம் முத்துமாரியம்மன் அலங்காரமும், அதன் பின்னர் மீனாட்சி அம்மன், காமாட்சி அம்மன், மகாலட்சுமி அம்மன், ராஜராஜேஸ்வரி அம்மன், ஐஸ்வர்ய லெட்சுமி அம்மன், அங்காளபரமேஸ்வரி அம்மன், கனகதுர்க்கை, மூகாம்பிகை உள்ளிட்ட அலங்காரம் செய்து தினமும் சிறப்பு வழிபாடுகள் நடந்தது.
இதைத்தொடர்ந்து 500-க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்ட திருவிளக்கு பூஜை, பெண்கள் முளைப்பாரி எடுத்து அம்மன் கோவில் வருதல் ஆகிய நிகழ்ச்சிகள் நடந்தன.
இன்று காலை சிலம்பணி விநாயகர் கோவிலில் இருந்து சுமார் 100-க்கும் மேற்பட்ட பக்தர்கள் பால்குடம், வேல் குத்தி திருப்பத்தூர் சாலை, மின்சாரம் வாரிய அலுவலகம் வழியாக கோவில் சென்றடைந்தனர்.
- திருப்புவனம் அருகே பயன்படுத்த முடியாத நிலையில் இருக்கும் ெரயில்வே சுரங்கபாதை நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- மழைநீர் தேங்குவதற்கு மட்டுமே ெரயில்வே சுரங்க பாதை வசதியாக உள்ளது.
மானாமதுரை
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே நெல்முடிக்கரை பகுதிக்கு செல்ல மதுரை-ராமேசுவ ரம் நான்கு வழிசாலையில் ராமேசுவரம் செல்லும் தண்டவாளத்தை கடக்க ஆளில்லா லெவல் கிராசிங்கை அகற்றி விட்டு 2 ஆண்டுகள் முன்பு சுரங்க பாதை அமைக்கப்பட்டது.
இது அமைக்கப்பட்டதில் இருந்து தற்போது வரை சுரங்க பாதையில் மழைநீர் குளம் போல் தேங்கி இருப்பதால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் யாரும் அதை பயன்படுத்த முடியவில்லை.
மேய்ச்சல் நிலங்களுக்கு கால்நடைகளையும் கொண்டு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. சுரங்க பாதை அமைக்கும் போதே மழைநீர் வராத அளவிற்கு வடிகால் வசதி செய்யவில்லை. மழைநீர் தேங்காமல் இருக்க சுரங்க பாதை மீது மேற்கூரை ஏதும் அமைக்காததால் இன்று வரை கட்டி முடிக்கப் பட்டு மழைநீர் தேங்குவதற்கு மட்டுமே ெரயில்வே சுரங்க பாதை வசதியாக உள்ளது.
எனவே உடனடியாக ெரயில்வே நிர்வாகம் சுரங்க பாதையில் தேங்கிய மழை நீரை வெளியேற்றி வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- தேவகோட்டை அருகே மாட்டு வண்டி பந்தயம் நடந்தது.
- போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டிருந்தது.
தேவகோட்டை
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே உள்ள நல்லாங்குடி கிராமத்தில் வேம்புடைய அய்யனார் கோவில் புரவி எடுப்பு விழா நடந்தது. இதையொட்டி மாட்டு வண்டி பந்தயம் நடத்தப்பட்டது.
இதில் ராமநாதபுரம், புதுக்கோட்டை, மதுரை, தேனி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 57 ஜோடி மாடுகள் கலந்து கொண்டன.
மாட்டு வண்டி பந்தயம் நடு மாடு, பூஞ்சிட்டு, பெரிய மாடு, கரிச்சான் என 4 பிரிவுகளாக நடந்தது.
திருச்சி-ராமேசுவரம் தேசிய நெடுஞ்சாலையில் நடந்த போட்டியை கிராம மக்கள் ஆர்வத்துடன் கண்டு களித்தனர்.நடு மாட்டு பிரிவில் சசிகுமாரும், பூஞ்சிட்டு, பெரியமாடு பிரிவில் நல்லாங்குடி முத்தையாவும், கரிச்சான் பிரிவில் பாப்பன்கோட்டை பாக்கியம் ஆகியோரது மாடுகள் வெற்றி பெற்றன.
போட்டியில் வெற்றி பெற்ற மாட்டு வண்டிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினரும், கிராம மக்களும் செய்தி ருந்தனர்.
போட்டியை முன்னிட்டு போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டிருந்தது.
- வருகிற 14-ந்தேதி இடைக்காட்டூர் திருஇருதய ஆலயத்தில் பாஸ்கா திருவிழா தொடங்குகிறது.
- விழாவில் லேசர் திரைகளில் இயேசுவின் பிறப்பு, வரலாறு, ஏசு உயிர்ப்பித்தல் போன்ற நிகழ்ச்சிகள் நடத்தப்படும்.
மானாமதுரை
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே இடைக்காட்டூர் திரு இருதய திருத்தலம் 140 ஆண்டுகள் புகழ்மிக்க ஆலயம் ஆகும். இங்கு ஆங்கில மாதத்தின் முதல் வெள்ளி சிறப்பு வெள்ளியாக கருதபட்டு சிறப்பு திருப்பலி பூஜை, கூட்டு பிராத்தனை நடை பெறும்.
இதில் தமிழகத்தில் உள்ள பல்வேறு ஊர்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொள்வார்கள். இடைக்காட்டூர் திருஇருதயஆண்டவர் 140வருடத்திற்கும் மேலாக இங்கு ஏப்ரல் மாதம் 2நாட்கள் பாஸ்கா திருவிழா நடைபெறுவது வழக்கம்.
இந்த ஆண்டிற்கான பாஸ்கா திருவிழா வருகிற 14, 15தேதிகளில் இரவு இடைக்காட்டூரில் உள்ள கிறிஸ்து அரங்கில் நடைபெற உள்ளது.
விழாவில் டிஜிட்டல் ஒலி, ஒளி அமைப்பில் லேசர் திரைகளில் இயேசுவின் பிறப்பு, வரலாறு, ஏசு உயிர்ப்பித்தல் போன்ற நிகழ்ச்சிகளை கலைஞர்கள் தத்ரூபமான முறையில் நடத்தப்படும்.
மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், திண்டுக்கல், தேனி உள்ளிட்ட மாவட்டங் களில் இருந்து ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் விரதம் இருந்து ஏசுவின் வாழ்க்கை வரலாற்றை நடித்து காண்பித்து விரதத்தை நிறைவு செய்வார்கள். 2நாட்கள் விடிய விடிய நடைபெறும். இதை காண ஏராளமான பக்தர்கள் இடைக்காட்டூர் வருவார்கள்.
இதற்கான ஏற்பாடுகளை திருத்தல அருட்பணியாளர் இமானுவேல்தாசன், இடைக்காட்டூர் சமூக முன்னேற்ற சங்கம், செல்ஸ் இளைஞர் பேரவை, மரியின் ஊழியர் சபை கன்னியர் செய்து வருகின்றனர்.
- சிவகங்கை அருகே உள்ள அய்யனார் கோவிலில் புரவி எடுப்பு விழா நடந்தது.
- இந்த விழாவில் நாளை இரவு கோழி பூஜை நடைபெற உள்ளது.
தேவகோட்டை
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே உள்ள நல்லாங்குடி கிராமத்தில் வேம்புடைய அய்யனார் கோவில் உள்ளது. இந்த கோவிலின் புரவி எடுப்பு விழா காப்புக்கட்டுதலுடன் தொடங்கியது.
தினமும் அய்யனார், காளியம்மன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு அபிஷேகம் மற்றும் தீபாரதனை நடந்தது.
நேற்று இரவு தேவகோட்டை குலாலர் தெருவில் உள்ள மகமாயியம்மன் கோவிலில் இருந்து 70-க்கும் மேற்பட்ட மண்ணால் ஆன குதிரை மற்றும் காளைகளை தோளில் சுமந்து சுமார் 4 கி.மீ தூரம் ஒத்தக்கடை, ஆற்றுப்பாலம், தளக்காவயல் விலக்கு வழியாக வேம்புடைய அய்யனார் கோவில் எதிரே உள்ள திடலில் பழங்கால முறைப்படி பனை ஓலையால் அமைக்கப்பட்ட பந்தலில் கிராம மக்கள் வைத்தனர்.
குழந்தை வேண்டியும், வீட்டுக்குள் பாம்பு, ஓணான் வராமல் இருக்க மணலால் செய்த ஆண், பெண், மிதளை பிள்ளை, பாம்பு, தேள், ஓணான் போன்றவற்றை நேர்த்திக்கடனாக வேம்புடைய அய்யனாருக்கு செலுத்தினர்.
விழாவில் நல்லாங்குடி, வெளிமுத்தி, பாப்பான்கோட்டை, இரவுசேரி, தளக்காவயல் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். இந்த விழாவில் நாளை இரவு கோழி பூஜை நடைபெற உள்ளது.
- தமிழ் இணைய கல்விக்கழகம் சார்பில் சிவகங்கை அரசு கல்லூரியில் தமிழ்க் கனவு நிகழ்ச்சி நடந்தது.
- இந்த நிகழ்ச்சியில் கலெக்டர் பங்கேற்று பேசினார்.
சிவகங்கை
சிவகங்கை மன்னர் துரைசிங்கம் அரசு கலைக்கல்லூரி அரங்கில் தமிழ் இணைய கல்விக்கழகம் சார்பில் தமிழ்க்கனவு நிகழ்ச்சி கலெக்டர் மதுசூதன்ரெட்டி தலைமையில் நடந்தது. இதில் கலெக்டர் பேசியதாவது:-
தமிழ் மரபின் வளமையையும், பண்பாட்டின் பெருமையையும் எதிர்கால சந்ததியி னர்களாகிய நீங்கள் அறிந்து கொள்ளும் வகையில் சமூக விழிப்புணர்வையும் பொருளாதார முன்னேற்றம் குறித்து அறிந்து கொள்ளும் வகையிலும், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்படி தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் தமிழ்க்கனவு நிகழ்ச்சி நடைபெறுகிறது.
தமிழ்நாடு முழுவதும் உள்ள 100 கல்லூரிகளில் தமிழ் மரபும் அதன் நாகரீகம் குறித்தும், சமூக நீதி, பெண்கள் மேம்பாடு, சமூக பொருளாதார முன்னேற்றம், மொழி மற்றும் இலக்கியம், கலை மற்றும் பண்பாடு, பண்டைய கால தமிழர்கள் நாகரீகத்துடன் வாழ்ந்ததற்கான அடையாளங்களை வெளிக்கொணர்கின்ற வகையில் தொல்லியல் ஆய்வுகள், அறிவியல் மற்றும் தொழில் நுட்பங்கள் ஆகியவற்றை மாணவர்கள் அறிந்து கொள்ளும் வகையில் இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. இதில் பங்கு பெற்றுள்ள மாணவர்களுக்கு உயர் கல்வி மற்றும் வேலை வாய்ப்பு வழிகாட்டி புத்தகமும், தமிழ் பெருமிதம் குறித்த குறிப்பேடும் இங்கு வழங்கப்பட்டுள்ளது.
இதனை மாணவர்கள் பயன்படுத்திக் கொண்டு, பண்பாட்டிற்கும், எதிர்காலத்திற்கும் வழிகாட்டிடும் வகையில், அடிப்படையாகத் திகழும் இந்நிகழ்ச்சியின் மூலம் சிறந்த சொற்பொழி வாளர்கள் வாயிலாக எடுத்துரைக்கப்படும் கருத்துக்களை உள்வாங்கி, மாபெரும் தமிழ் கனவினை நனவாக்குகின்ற வகையில் மாணவர்கள் சிறப்பான நடவடிக்கைகளை மேற்கொண்டு, தங்களை சார்ந்தவர்களும் எடுத்துரைத்து, பயன்பெற செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
இந்த நிகழ்ச்சியில் சிவகங்கை வருவாய் கோட்டாட்சியர் சுகிதா, தமிழ் வளர்ச்சித்துறை உதவி இயக்குநர் நாகராஜன், சொற்பொழிவாளர்கள் ராஜா, யாழினி (மருத்துவர்), சிவகங்கை மன்னர் துரைசிங்கம் அரசு கலைக்கல்லூரி முதல்வர் துரையரசன் மற்றும் ஆசிரியர்கள், கல்லூரி மாணவ-மாணவிகள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
- சமரச நாள் விழிப்புணர்வு பேரணியை முதன்மை மாவட்ட நீதிபதி சுமதி சாய் பிரியா தொடங்கி வைத்தார்.
- மையத்தில் வைக்கப்படும் பிரச்சினைகள் குறித்த ரகசியம் காக்கப்படும்.
சிவகங்கை
சிவகங்கை மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் சமரச நாள் விழிப்புணர்வு பேரணி தொடக்க விழா நடந்தது. முதன்மை மாவட்ட நீதிபதி ஆ.சுமதி சாய் பிரியா தலைமை தாங்கி பேரணியை தொடங்கிவைத்தார்.
அவர் பேசும் போது, ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 10-ந் தேதி சமரச நாள் கடைப்பிடிக்கப்படு கிறது. சமரச மையத்தில் வரக்கூடிய பிரச்சினைக்கு இருதரப்பினரையும் வைத்து சுமூகமாக பேசி தீர்வு காணப்படும். இந்த மையத் தில் வைக்கப்படும் பிரச் சினைகள் குறித்த ரகசியம் காக்கப்படும். பிரச்சினை களுக்கு அவசரம் காட்டாமல் இரு தரப்பினர் சம்மதத்து டன் அமைதியாக தீர்வு காணப்படும். தீர்வு உங்கள் கையில் என்றார்.
பேரணியில் கூடுதல் மாவட்ட நீதிபதி சத்திய தாரா, நிரந்தர மக்கள் நீதிமன்ற நீதிபதி பக்தவச் சலு, குடும்ப நல நீதிபதி முத்துக்குமரன், போக்சோ நீதிபதி சரத்ராஜ், தலைமை குற்றவியல் நீதிதுறை நடுவர் சுதாகர், மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு செயலாளர் மற்றும் சார்பு நீதிபதிகள் பரமேஸ்வரி, சுந்தரராஜ், மாவட்ட உரிமை யியல் நீதிபதி இனியா கருணாகரன், கூடுதல் மகிளா நீதிபதி ஆப்ரின் பேகம், குற்றவியல் நீதிதுறை நடுவர்கள் அனிதா கிரிஸ்டி, சத்திய நாராய ணன் மற்றும் சமரசர்கள், வழக்கறிஞர்கள், நீதிமன்ற பணியாளர்கள், வழக்காடிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- சிவகங்கை மாவட்டம் இளையான்குடியில் தீயணைப்பு நிலையம் திறப்பு விழா நடந்தது.
- தீயணைப்பு நிலையத்தில் குத்துவிளக்கேற்றும் நிகழ்ச்சி நடந்தது.
மானாமதுரை
சிவகங்கை மாவட்டம் இளையான்குடியில் தீயணைப்பு நிலையம் திறப்பு விழா நடந்தது. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்து காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.
அதனைத்தொடர்ந்து தீயணைப்பு நிலையத்தில் குத்துவிளக்கேற்றும் நிகழ்ச்சி நடந்தது.
இதில் இளையான்குடி முன்னாள் எம்.எல்.ஏ. சுப.மதியரசன், சிவகங்கை மாவட்ட அலுவலர் சத்திய கீர்த்தி, உதவி அலுவர் தாமோதரன், பேரூராட்சித் தலைவர் நஜுமுதீன், நிலைய அலுவலர் பிரகாஷ், குமரேசன், பேரூராட்சி அலுவலர் கோபிநாத், பேராசிரியர் ஆபிதீன், ஒன்றிய துணைச்செயலர் சிவனேசன், துணைத்தலைவர் இப்ராகிம், இளைஞரணி பைரோஸ்கான், தகவல் தொழில் நுட்பஅணி கண்ணன், அழகேசன் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.
- பயணிகள் நிழற்குடை ஆக்கிரமிப்பு செய்யப்பட்டது.
- கிராம மக்கள் போக்குவரத்து வசதிக்காக பஸ் நிறுத்தத்தை அதிக அளவில் பயன்படுத்துகிறார்கள்.
தேவகோட்டை
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே உள்ள புளியால் கிராமத்தில் திருச்சி-ராமேசுவரம் தேசிய நெடுஞ்சாலையில் பயணிகள் நிழற்குடை உள்ளது. இந்த கிராமத்தில் இருந்து தினந்தோறும் மாணவிகள், பணிக்கு செல்லும் பெண்கள் தேவகோட்டை, காரைக்குடி, திருவாடானை, ராமநாதபுரம் பகுதிகளில் உள்ள பல்வேறு வேலை தொடர்பாகவும், பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு சென்று வருகிறார்கள். புளியால் சுற்றியுள்ள கிராம மக்கள் போக்குவரத்து வசதிக்காக இந்த பஸ் நிறுத்தத்தை அதிக அளவில் பயன்படுத்துகிறார்கள்.
பயணிகள் நிழற்குடை அருகே ஆக்கிரமிப்பாலும், எப்பொழுது விழுமோ என்ற அச்சத்தில் நிழற்குடை மேல் பிளக்ஸ் போர்டு இருப்பதாலும் பயணிகள் மற்றும் மாணவ-மாணவிகள் நிழற் குடையை பயன்படுத்த முடியாமல் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர். அதிகாரிகள் நிழற்குடையின் மேல் உள்ள பிளக்ஸ் போர்டையும் அருகில் உள்ள ஆக்கிரமிப்பையும் அகற்றி மாணவ- மாணவிகள் மற்றும் பெண்களுக்கு நிழல் தரும் வகையில் அமைந்தால் பல ஆயிரம் ரூபாய் செலவழித்து கட்டிய நிழற்குடை பயன்பாட்டிற்கு வரும் என்று பொதுமக்கள் தெரிவித்தனர்.
- 49 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார்.
- பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பொதுமக்களிடம் இருந்து 331 மனுக்கள் பெறப்பட்டன.
சிவகங்கை
சிவகங்கை மாவட்ட கலெக்டர் அலுவலகக் கூட்ட ரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் மதுசூதன் ரெட்டி, தலைமை யில் நடந்தது. இதில் இலவச வீட்டுமனைப் பட்டா, சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் உதவித் தொகை, மாவட்ட ஊன முற்றோர் மற்றும் மறுவாழ்வுத்துறை உதவித் தொகை மற்றும் மாற்றுத்தி றனாளிகளுக்கான உபகரணங்கள், புதிய மின்னணு குடும்ப அட்டை போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பொதுமக்களிடம் இருந்து 331 மனுக்கள் பெறப்பட்டன.
வருவாய்த்துறையின் சார்பில் சமூகப்பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் 16 பயனா ளிகளுக்கு பல்வேறு வகை யான உதவித்தொகை மற்றும் மாற்றுத்திறனாளி உதவித்தொகைக்கான ஆணைகளையும் கலெக்டர் வழங்கினார்.
திருப்புவனம் வட்டத்தைச் சேர்ந்த முரளி என்பவர் தீ விபத்தால் இறந்ததையொட்டி, அவரது குடும்பத்தினருக்கு முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதி ரூ.1 லட்சம் , காரைக்குடி வட்டத்தைச் சேர்ந்த மணிகண்டன் என்பவர் நீரில் மூழ்கி இறந்ததையொட்டி அவரது குடும்பத்திற்கு முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதி ரூ.1 லட்சம் வழங்கப்பட்டது.
செபாஸ்டின் என்பவர் தனி வட்டாட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்) அலுவலகத்தில் ஓட்டுநராகப் பணிபுரிந்த போது கொரோ னாவால் உயிரிழந்ததை யொட்டி, அவரது வாரிசு தாரரான மனைவிக்கு முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதி ரூ.5 லட்சம், தேவகோட்டை வட்டத்தைச் சார்ந்த ஜெகதீசுவரன் என்பவர் நீரில் மூழ்கி இறந்ததையொட்டி, அவரது குடும்பத்தினருக்கு முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதித்தொகை ரூ.1லட்சம் என மொத்தம் ரூ.8லட்சத்திற்கான காசோலையை கலெக்டர் வழங்கினார்.
தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் சார்பில் சாக்கோட்டை ஊராட்சியைச் சார்ந்த 10 மகளிர் சுயஉதவிக் குழுவினர்களுக்கு சமுதாய முதலீட்டு நிதி மொத்தம் ரூ.6 லட்சத்துக்கான காசோலை உள்ளிட்ட மொத்தம் 49 பயனாளிகளுக்கு ரூ.50 லட்சம் மதிப்பீட்டிலான அரசின் நலத்திட்ட உதவிகளையும், அதன் பயன்களையும் கலெக்டர் மதுசூதன் ரெட்டி வழங்கினார்.
- சிவகங்கை அருகே காவல்துறை சார்பில் மக்கள்குறைதீர்க்கும் முகாம் நடந்தது.
- முகாமில் 105 மனுக்களுக்கு உடனடியாக தீர்வு காணப்பட்டது.
நெற்குப்பை
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் நகர், வட்டத்தை சேர்ந்த 7காவல் நிலையங்கள் சார்பில் மக்கள் குறைதீர்க்கும் முகாம் நடந்தது. டி.எஸ்.பி. ஆத்மநாதன் தலைமை தாங்கினார். இன்ஸ்பெக்டர்கள் திருப்பத்தூர் கலைவாணி, எஸ்.எஸ்.கோட்டை அந்தோணி செல்லத்துரை, அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் சித்திரை செல்வி முன்னிலை வகித்தனர். திருப்பத்தூர் டவுன், நாச்சியாபுரம், கண்டவராயன்பட்டி திருக்கோஷ்டியூர் கீழச்சிவல்பட்டி எஸ்.எஸ்.கோட்டை மற்றும் அனைத்து மகளிர் காவல் நிலையம் ஆகிய காவல் நிலையங்களில் கொடுக்கப்பட்ட புகார் மனுகளுக்கு, புகார்தாரர்கள் மற்றும் எதிர்மனுதாரர்களுக்கு கடந்த 3தினங்களுக்கு முன்பு அழைப்பு விடுக்கப்பட்டு அந்த மனு மீது விசாரித்து நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இதில் சப்-இன்ஸ்பெக்டர்கள் திருப்பத்தூர் செல்வபிரபு, பாலகிருஷ்ணன், சிவாஜி பாண்டியன், விஜய்,பெரியசாமி, கலையரசன், சாமுண்டீசுவரி, சேதுபாமா மற்றும் போலீசார் பங்கேற்று விசாரணை மேற்கொண்டனர். முகாமில் 300 மனுக்கள் விசாரணை மேற்கொண்டதில் 105 மனுக்களுக்கு உடனடியாக தீர்வு காணப்பட்டது.
- பணிச்சுமையால் மன அழுத்தத்தில் உள்ள போலீசாருக்கு மாதம் ஒருமுறை சிறப்பு மருத்துவ முகாம் நடத்த வேண்டும்.
- இது தொடர்பாக முதல்-அமைச்சருக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது.
அருப்புக்கோட்டை
போலீசார் பல காவல் நிலையங்களில் விடுமுறையின்றி இரவு, பகலாக வேலை பார்த்து வருகின்றனர். அவர்களுக்கு பணிச்சுமை அதிகரித்து வருகிறது. இந்த பணி சுமை அவர்களுக்கு மன அழுத்ததை தருகிறது. இதனால் போலீசாருக்கு மன அழுத்த நோய், சர்க்கரை நோய், காலில் நரம்பு சுருள் நோய் (வெரி கோஸ்)போன்ற நோய்களால் பாதிக்கப்பட்டு அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
திருவிழா காலங்கள், அரசு மற்றும் அரசியல் விழாக்களில் போலீசார் நீண்ட நேரம் பணியமர்த்தப்படுவதால் அவர்கள் இந்த வகை நோய்களால் பாதிக்கப்பட்டு சிரமப்பட்டு வருகின்றனர். இதனால் குடும்பங்களை சரிவர கவனிக்க முடியா மலும், உடல் நிலையில் கவனம் செலுத்த முடியா மலும் சிரமப்பட்டு வருகின்றனர்.
மேலும் போலீசாருக்கு வாரம் ஒருமுறை விடுமுறையானது சில இடங்களில் வெறும் அறிவிப்பாகவே உள்ளது. இதை நடைமுறைப்படுத்தவில்லை என்றும் போலீசார் வருத்தம் தெரிவித்தனர்.
அனைத்து துறைகளிலும் கவனம் செலுத்தும் முதல்-அமைச்சர் அவரது கட்டுப்பாட்டில் இருக்கும் காவல்துறைக்கு கூடுதல் கவனம் செலுத்தி மாதந் தோறும் காவல் நிலையங்களில் சிறப்பு மருத்துவ முகாம் நடத்த வேண்டும் என்று போலீசார் தெரிவித்தனர்.
தமிழ்நாட்டில் உள்ள காவல் நிலையங்களில் மாதம் ஒரு முறையாவது பணியில் இருக்கும் போலீசாருக்கு சிறப்பு மருத்துவ முகாம் நடத்த வேண்டும் என்று காவலர்கள் முதல்வருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.






