என் மலர்
சிவகங்கை
காரைக்குடி:
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் இருந்து பட்டுகோட்டை வரை அகல ரெயில் பாதை பணிகள் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்டு 3 மாதங்களுக்கு முன்பு பணி நிறைவு பெற்றது.
இதனையடுத்து இந்த புதிய அகல ரெயில் பாதையில் கடந்த 2 மாதத்திற்கு முன்பு அனைத்து கட்ட சோதனைகளும் நிறைவு செய்யப்பட்டு வெள்ளோட்டமும் நடத்தப்பட்டது.
இந்த நிலையில் ஏற்கனவே, அறிவித்தபடி, இன்று முதல் இந்த வழித் தடத்தில் காரைக்குடி- பட்டுக்கோட்டை ரெயில் சேவை தொடங்கியது.
இந்த புதிய ரெயில் வாரத்தில் திங்கள் மற்றும் வியாழன் ஆகிய இரு தினங்களில் இயக்கப்படுகிறது. 4 பெட்டிகளுடன் காலை 6 மணிக்கு காரைக்குடியில் இருந்து புறப்படும் ரெயில் மதியம் 12.30 மணிக்கு பட்டுக்கோட்டை சென்றடையும்.
அதே மார்க்கத்தில், பட்டுக்கோட்டையில் இருந்து மதியம் 1.30 மணிக்கு புறப்படும் ரெயில் இரவு 7.30 மணிக்கு காரைக்குடியை வந்தடையும்.
இடையில் இந்த ரெயில் கண்டனூர், புதுவயல், பெரியகோட்டை, அறந்தாங்கி, பேராவூரணி போன்ற ரெயில் நிலையங்களில் நின்று செல்லும் என ரெயில்வே நிர்வாகத்தின் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே பஸ்சில் பயணம் செய்தால் 3 மணி நேரமே ஆகும் நிலையில், 73 கி.மீ. தூரத்தை கடக்க ரெயில் பயண நேரம் 6.30 மணி நேரமாக உள்ளது பயணிகளிடையே மிகுந்த அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
எனவே ரெயிலின் பயண நேரத்தை குறைக்கவும், வாரம் இருமுறை என்பதை தினசரியாக்கவும், காரைக்குடி என்பதை மதுரை வரை நீட்டிக்கவும், ரெயில் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். #Train
சிவகங்கையை அடுத்த நாட்டரசன்கோட்டை அருகே உள்ள சவுமிய நாராயணபுரத்தை சேர்ந்தவர் விவசாயி காளிமுத்து. இவர் கடந்த 2009- ம் ஆண்டு பயிர் காப்பீட்டு திட்டத்தில் சேர படிவத்தை கொல்லங்குடி தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் பதிவு செய்வதற்காக உதவி வேளாண்மை அதிகாரி பணியாற்றிய ஜேம்ஸ் என்பவரை தொடர்பு கொண்டார். அப்போது அவர் தனக்கு ரூ.200 லஞ்சமாக தந்தால் தான் கூட்டுறவு சங்கத்தில் பயிர் காப்பீட்டு திட்டத்தில் சேர்ப்பதற்கு கையெழுத்திட பரிந்துரைக்க முடியும் என்று கூறியுள்ளார்.
இதைத் தொடர்ந்து காளிமுத்து கொடுத்த புகாரின் பேரில் சிவகங்கை லஞ்ச ஒழிப்பு போலீசார் உதவி வேளாண்மை அதிகாரி ஜேம்ஸ் லஞ்சம் வாங்கும் போது கையும், களவுமாக அவரை கைது செய்து அவர் மீது சிவகங்கையில் உள்ள லஞ்ச ஒழிப்பிற்கான சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சசிரேகா, குற்றம் சாட்டப்பட்ட, ஜேம்ஸ்க்கு 3 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.3ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கினார்.
ராமேசுவரத்தில் இருந்து காரைக்குடி வழியாக திருச்சி வரை தற்போது 4 வழிச்சாலைப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில் முதல் கட்டமாக திருமயம் முதல் காரைக்குடி அருகே உள்ள தேவகோட்டை ரஸ்தா வரை பணிகள் நிறைவு பெற்று மீதமுள்ள பணிகள் தற்போது முழு மூச்சாக நடைபெற்று வருகிறது. இதில் காரைக்குடி அருகே உள்ள கோவிலூர், மானகிரி, புதிய அரசு மருத்துவமனை, ஆவுடைப்பொய்கை, ஒ.சிறுவயல், வ.சூரக்குடி, நேமத்தான்பட்டி ஆகிய 7 பகுதிகள் காரைக்குடி வழியாக செல்லும் 4 வழிச்சாலையில் அமைந்துள்ளன.
இதில் கோவிலூர் அணுகு சாலை பகுதியில் விபத்துகள் ஏற்படுவது வழக்கமாக இருந்து வருகிறது. இது வரை 20-க்கும் மேற்பட்ட விபத்துகள் நடைபெற்று 15-க்கும் மேற்பட்ட உயிர்கள் பலியாகி உள்ளன. இந்த நிலையில் விபத்துகளை தடுப்பதற்காக கோவிலூர் அணுகு சாலை பகுதியில் தானியங்கி சிக்னல் அமைக்க போக்குவரத்து போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
கோவிலூர் இணைப்பு பகுதியில் தனியார் ஜவுளிக்கடை பங்களிப்பில் ரூ.3 லட்சம் செலவில் 4 வழிச்சாலையின் 4 முனைகளிலும் தானியங்கி சிக்னல்கள் அமைத்துள்ளனர். இது தவிர விபத்து ஏற்படும் இடங்களில் தடுப்பு கம்பிகள் (பேரிகார்டு) அமைத்தும், அதன் மூலம் மிதமான வேகத்தில் வாகனங்கள் செல்லவும் ஏற்பாடு செய்துள்ளனர்.
இது குறித்து காரைக்குடி போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் ரெத்தினம் கூறுகையில், தமிழகத்தில் முதன் முதலாக ஈரோடு பகுதியில் அரசு சார்பில் இது போல் 5 இடங்களில் தானியங்கி சிக்னல் அமைக்கப்பட்டுள்ளது. அதற்கு அடுத்த படியாக தென் தமிழகத்தில் காரைக்குடியில் தான் இந்த சிக்னல் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த தானியங்கி சிக்னல் 24 மணி நேரமும் இயங்கும். இரவு நேரத்தில் இந்த சிக்னலில் இருந்து வரும் ஒளிக்கதிர்கள் 4 வழிச்சாலையில் அதிவேகத்தில் செல்லும் வாகனங்களின் டிரைவர்கள் முகத்தில் படும். இதன் மூலம் இந்த சாலையில் செல்லும் டிரைவர்கள் இந்த இடத்தில் தானாகவே வேகத்தை குறைத்து செல்வார்கள். இதன் மூலம் இந்த பகுதியில் வாகன விபத்துகளை தடுக்க முடியும்.
இதேபோல் பகல் நேரத்தில் அதிக வெளிச்சத்தை தரும் இந்த சிக்னல் தூரத்தில் இருந்து வாகனங்களை இயக்கும் டிரைவர்களுக்கு துல்லியமாக தெரியும். இதன் மூலமும் டிரைவர்கள் வேகத்தை குறைத்து செல்வார்கள். இது தவிர, சாலையின் நடுவே ஒளிரும் ஸ்டிக்கர் அமைப்பும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
தற்போது காரைக்குடி அழகப்பர் சிலை மற்றும் ஸ்ரீராம்நகர் ரெயில்வே கேட் பகுதியிலும் இந்த சிக்னல் அமைக்கப்பட்டு வருகிறது. மேலும் அரசின் சார்பில் நிதி உதவி செய்தால் மேலும் உள்ள 5 இணைப்பு சாலைகளில் இந்த தானியங்கி சிக்னல் அமைக்கலாம். இதன் மூலம் இந்த பகுதியில் போக்குவரத்து விபத்துகளை முற்றிலும் தவிர்க்கலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
காரைக்குடியில் ஒரு மணி நேரத்திற்குள் 3 பெண்களிடம் 34 பவுன் நகை பறிப்பு சம்பவம் நடைபெற்றுள்ளது. இந்த சம்பவத்தில் ஒரே கும்பலைச் சேர்ந்த 3 நபர்கள் ஈடுபட்டது கண்காணிப்பு கேமரா மூலம் அம்பலமாகி உள்ளது.
காரைக்குடி ஹவுசிங் போர்டு பகுதியில் வசிப்பவர் வெற்றி. இவர் காரைக்குடி நகராட்சியில் எலக்ட்ரீசியனாக வேலை செய்து வருகிறார். இவரது மனைவி ஜெயந்தி (வயது 40). இவர் தனது மகளுடன் காரைக்குடி கழனிவாசலுக்கு சென்று விட்டு இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பினார். அப்போது ஒரு மோட்டார்சைக்கிளில் பின்தொடர்ந்து வந்த 3 மர்ம நபர்கள், இருசக்கர வாகனத்தை உதைத்து கீழே தள்ளினர். அதில் கீழே விழுந்த ஜெயந்தியின் கழுத்தில் கிடந்த 15 பவுன் நகையை பறித்துக்கொண்டு தப்பியோடினர்.
இதேபோல காரைக்குடி ஆறுமுகநகர் 5-வது வீதியைச் சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன். ஓய்வு பெற்ற நீதிபதி. இவரது மனைவி செல்வி (30). இருவரும் காரைக்குடி டவுனுக்கு மோட்டார் சைக்கிளில் சென்று விட்டு பெரியார் சிலை அருகே சென்றுகொண்டிருந்தனர். அப்போது மற்றொரு மோட்டார்சைக்கிளில் வந்த 3 மர்ம நபர்கள் செல்வியின் கழுத்தில் கிடந்த 8 பவுன் நகையை பறித்து சென்றுவிட்டனர்.
காரைக்குடி கீழத்தெருவைச் சேர்ந்தவர் விக்னேஸ்வரி(25). இவர் முடியரசனார் சாலையில் உள்ள மருத்துவமனைக்கு சென்று விட்டு கண்டனூர் சாலையில் மோட்டார் சைக்கிளில் சென்றார். அப்போது பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்த 3 மர்ம நபர்கள் விக்னேஸ்வரியின் கழுத்தில் கிடந்த 11 பவுன் நகையை பறித்துக்கொண்டு தப்பியோடினர்.
தொடர் சம்பவங்கள் குறித்து காரைக்குடி வடக்கு போலீசார் வழக்கு பதிவு செய்து சம்பவம் நடைபெற்ற 3 இடங்களில் இருந்த கண்காணிப்பு கேமராவில் ஆய்வு செய்தனர். அப்போது 3 சம்பவங்களிலும் ஈடுபட்டது ஒரே கும்பலைச் சேர்ந்த 3 பேர் என்று தெரியவந்தது. சம்பவம் நேற்று முன்தினம் இரவு 7.30 மணி முதல் 8.30 மணிக்குள் நடந்துள்ளது. ஒருமணி நேரத்திற்குள் 3 பெண்களிடம் 34 பவுன் சங்கிலி பறிப்பு சம்பவம் நடைபெற்றுள்ளதால் காரைக்குடியில் வெளியே செல்லும் பெண்கள் பெரிதும் அச்சமடைந்துள்ளனர்.
மேலும் காரைக்குடி குற்றப்பிரிவு போலீசில் பணியாற்றிய அனுபவம் வாய்ந்த போலீசார் பல்வேறு பிரிவிற்கு மாறுதலாகி விட்டதால் இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடந்துள்ளது. எனவே குற்றப்பிரிவு போலீஸ் ரோந்து பணியை அதிகரிக்க வேண்டும் என்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயச்சந்திரனுக்கு காரைக்குடி பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மானாமதுரை அருகே கச்சநத்தம் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. கடந்த 1989-ம் ஆண்டு முதல் செயல்பட்டு வரும் இப்பள்ளியில் கச்சநத்தம், மீனாட்சிபுரம் உள்ளிட்ட பக்கத்து கிராமங்களை சேர்ந்த மாணவ-மாணவிகள் கல்வி பயின்று வந்தனர். ஆனால் நாளடைவில் இந்த பள்ளியில் மாணவர் சேர்க்கை வெகுவாக குறைந்துவிட்டது. கடந்த 5 ஆண்டுகளில் 20-க்கும் குறைவாக மாணவர் சேர்க்கை இருந்து வந்தது. கல்வித்துறை அதிகாரிகள் இப்பள்ளியில் மாணவ-மாணவிகள் சேர்க்கையை அதிகப்படுத்த எந்தவித விழிப்புணர்வு நடவடிக்கையும் எடுக்காததால், தற்போது மாணவர் சேர்க்கை குறைந்து, இந்த ஆண்டு தொடக்கத்தில் 11 மாணவ-மாணவிகள் மட்டுமே கல்வி பயின்று வந்தனர்.
இதற்கிடையில் கச்சநத்தம் கிராமமக்கள் மீதான வன்முறை தாக்குதல் சம்பவத்தை தொடர்ந்து பள்ளியில் பயின்ற 11 மாணவ-மாணவிகளின் பெற்றோர் பள்ளி மாற்றுச்சான்றை வாங்கி வேறு பள்ளியில் சேர்த்துவிட்டனர். பெற்றோர்களும், மாணவ-மாணவிகளும் கச்சநத்தம் தொடக்கப்பள்ளியில் தங்களுக்கு பாதுகாப்பு இல்லை என கருதுகின்றனர். இதுகுறித்து கல்வித்துறை உயர் அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் அலட்சியப்படுத்தி வருகின்றனர்.
மாணவ-மாணவிகள் யாருமே வராத நிலையில் பள்ளியில் 2 ஆசிரியர்கள் மட்டும் தினசரி வந்து பள்ளியை திறந்து வைத்து வெறுமனே உட்கார்ந்துவிட்டு மாலையில் வீட்டிற்கு சென்று வருகின்றனர். எனவே போதிய விழிப்புணர்வு ஏற்படுத்தி மாணவ-மாணவிகளின் பெற்றோர்களை சமாதானம் செய்து மாணவர் சேர்க்கையை அதிகப்படுத்த மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
சிவகங்கை:
சிவகங்கை மாவட்டம் வில்லிபட்டி என்ற ஊரில் நூறு ஆண்டுகளுக்கு முன்பே விஞ்ஞான முறையில் இயற்கை குளிர்சாதன முறையில் கட்டப்பட்ட நெற்களஞ்சியம் உள்ளது.
எந்த காலத்தின் தட்ப வெப்ப நிலையிலும் உள்ளே உள்ள தானியங்கள் பாதிப்பு அடையாமல் ஒரே சீரான சீதோஷ்ண நிலையில் இருக்கும் வகையில் கட்டப்பட்டுள்ளது.
இக்களஞ்சியத்தை லட்சுமணன் அம்பலம், அழகர்சாமி அம்பலம் ஆகியோரின் தந்தையால் கட்டப்பட்டுள்ளது. இதுபோன்று சர்வப்பட்டி, வண்ணாமறப்பட்டி, சிவகங்கை ஆகிய நான்கு ஊர்களில் கட்டியிருந்துள்ளார்கள். மற்றவை எல்லாம் சிதைந்துவிட்ட நிலையில், இது ஒன்று மட்டும் புதுப்பொழிவோடு காட்சி தருகிறது.
களஞ்சியம் என்ற சொல் ஒரு பொருளை சேமித்து வைக்கும் இடத்தை குறிப்பதாகும். தமிழில் களஞ்சியம் என்பது நெல் போன்ற தானியங்களை வைக்கும் இடத்தை குறிக்கிறது. இன்று தகவல்களை சேமித்து வைக்கும் கணினி நினைவகங்களையும் களஞ்சியம் என்ற சொல் கொண்டு குறிக்கப்படுகிறது.
மனிதன் என்று உற்பத்தி செய்ய ஆரம்பித்தானோ அன்றே சேமிக்க தொடங்கி விட்டான். முதலில், தான் பயிர் செய்த தானியங்களை சேமிக்க தொடங்கினான். அவனின் பெரிய தொழில் நுட்பம்தான் மண்குதிர். அதில் தானியங்களை நீண்ட காலம் பாதுகாப்பாக சேமித்து வைத்து, தேவைக் கேற்ப பஞ்சம் போன்ற அவசர காலங்களில் பயன் படுத்தினர்.
குதிரின் மேல் பாகத்தில் உள்ள பெரும் துவாரத்தின் வழியாக தானியத்தை கொட்டுவார்கள. தேவை ஏற்படும்போது கீழே உள்ள துவாரத்தின் வழியாக எடுத்துக் கொள்வார்கள். அதுபோலவே இந்த களஞ்சியத்திலும் மேல் தளத்தில் உள்ள சிறிய வழியாக தானியத்தை கொட்டி கீழ் பகுதியின் வழியாக வெளியில் எடுக்கும் வசதி உள்ளது.
மன்னர்கள் கிராமங்களில் கிடைக்கும் வருவாய் வரித் தானியங்களை ஆங்காங்கே அமைக்கப்பட்டிருந்த “சேகரம் பட்டறை” என்ற கிடங்குகளில் சேகரித்து வைத்தனர். ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் பெரும் நிலச்சுவன்தாரர்களும், அம்பலகாரர்களும் (அதிகாரம் படைத்தவர்கள்) விளைநிலங்களில் கிடைக்கும் தானியங்களை களஞ்சியங்களில் வைத்து பாதுகாத்து வந்துள்ளனர்.
அந்த வகையில் அம்பலக்காரராகவும் பெரும் நிலச் சுவன்தாராகவும் திகழ்ந்த ஒருவர் வில்லிப்பட்டியில் சிறப்புமிக்க இந்த களஞ்சியத்தை கட்டியுள்ளார் .
தரையில் இருந்து ஐந்தடி உயரத்திற்கு மேல் தளம் அமைக்கப்பட்டு உள்ளது. அந்த தளமானது நூறு அடி நீளம், 36 அடி அகலம் கொண்ட அளவிற்கு அமைக்கப்பட்டு, அத்தளத்தில் சுற்றிலும் பத்து அடி அளவில் இடைவெளி விட்டுள்ளனர். மீதம் உள்ள உட்பகுதியில் 80 அடி நீளம், 16 அடி அகலம், 10 அடி உயரம் உள்ள களஞ்சியத்தை 13 அகலம் கொண்ட 6 அறைகளாக கட்டி இருக்கிறார்கள்.
(கட்டிடம் கட்டுவதற்கு நீர்த்த சுண்ணாம்பு பனை வெல்லம் கலச்சிக்காய் போன்றவற்றை செக்கிலிட்டு அறைத்த சாந்தை வைத்து கட்டியுள்ளனர்).
அதற்கு மேல் மச்சு (மாடி) அமைத்து அதற்கு மேல் ஓட்டுக்கூரை அமைத்துள்ளார்கள். மேலும் கட்டிடத்தின் தளத்திற்கு கீழ் மூன்று அடி அகலம், மூன்று அடி உயரம் கொண்ட சதுர வடிவிலான இரண்டு சுரங்கம் அமைத்து உள்ளார்கள்.
அதன் வழியாக ஒரு பகுதியில் இருந்து மறு பகுதிக்கு காற்று நூறு அடி நீளத்திற்கும் வெளியே செல்லுமாறு அமைத்துள்ளார்கள். இதனால் சுற்றுப் புறத்தில் இருந்தோ மேல் புறத்தில் மற்றும் அடிப்பகுதியான பூமியில் இருந்தோ வெப்பமோ, ஈரமோ, நடுப் பகுதியில் அமைந்துள்ள கட்டிடத்திற்கு உள்ளே இருக்கும் தானியங்களை தாக்க முடிவதில்லை.
ஆதனால் தானியங்கள் எவ்வளவு காலம் ஆனாலும் கெடாமல் பாதுகாக்க முடிந்துள்ளது. அப்போதைய வல்லுநர்கள் இயற்கையான பாதுகாப்பு பெட்டகத்தை செயற்கையாக அமைத்துள்ளனர். இதில் உள்ள சட்டங்கள் அனைத்தும் பர்மாவில் இருந்து நேரடியாக கொண்டு வரப்பட்ட தேக்கு மரத்தால் ஆனவை. அவற்றை எல்லாம் 48 அழகிய கல்தூண்கள் தாங்கி நிற்கின்றன. தற்போது கவனிப்பாரற்று இருந்தாலும் தன் பொழிவு மாறாமல் உள்ளது. அறைகளுக்கு உள்ளே அக்காலத்தில் பயன்படுத்திய குதிர்கள் காணக்கிடைக்கின்றன.
களஞ்சியம் கட்டப்பட்ட காலகட்டத்தில் களஞ்சியத்தில் எப்போதும் நூறு பேர்களுக்கு மேல் வேலை செய்து கொண்டே இருப்பார்கள். ஒருபுறம் சமையல், சாப்பாடு நடந்து கொண்டே இருக்கும்.
தற்போது வில்லிப்பட்டி யில் வசிப்பவர்கள் பெரும் பாலோனர் அந்த களஞ்சியத்தில் வேலை செய்து வாழ்ந்தவர்களாகவே உள்ளனர். 1964-ல் ஏற்பட்ட புயல் வெள்ளத்தில் ஊரே நீரில் தத்தளித்து, இருக்க இடமில்லாமல் தவித்தபோது எல்லோருக்கும் அபாயம் அளித்துள்ளது.
பலநூறு குடும்பங்களுக்கு வாழ்வாதாரமாகவும், பல்லாயிரம் பேருக்கு பசிப்பிணியை போக்கிய அட்சயப்பாத்திரமாகவும் இருந்துள்ளது இக்களஞ்சியம்.
மேலும் தற்போது வரை வழிப்போக்கர்கள் தங்கி இளைப்பாறிச் செல்லும் இடமாக உள்ளது. கோடையில் களஞ்சியதின் சுற்றுத் திண்ணையில் இளைப்பாருவோர், இயற்கை அன்னையின் மடியின் சுகத்தால் தன்னை மறப்பர். தொன்மையான இந்த களஞ்சியத்தை பாதுகாப்பது, வருங்கால சந்ததியினருக்கு கிடைக்கும் அரிய பொக்கிஷம் ஆகும்.
மேற்கண்ட தகவலை தொல்லியல் ஆய்வாளர் விஜயராமு தெரிவித்தார்.
சிவகங்கை:
மதுரை கே.கே.நகரைச் சேர்ந்தவர் சங்கர்தாஸ் (வயது33). இவர் பிரபல கார் கம்பெனியில் அதிகாரியாக பணியாற்றி வருகிறார்.
நேற்று தனது காரில் வெளியில் சென்று விட்டு இரவு சிவகங்கை மாவட்டம் காரைக்குடி வழியாக ஊர் திரும்பிக் கொண்டிருந்தார்.
திருப்பத்தூர் அருகே உள்ள நாச்சியார்புரம் சாலையில் சென்று கொண்டிருந்தபோது மோட்டார் சைக்கிள்களில் வந்த மர்ம நபர்கள் 4 பேர் திடீரென காரை மறித்தனர்.
பின்னர் அந்த கும்பல் கண்ணிமைக்கும் நேரத்தில் சங்கர்தாசை சரமாரியாக தாக்கியது. கை-கால்களை கயிற்றால் கட்டி காரின் பின் இருக்கையில் போட்டு காருடன் அவரை கடத்தினர்.
சங்கர்தாசிடம் இருந்து செல்போன், பணம், ஏ.டி.எம். கார்டுகளை பறித்துக்கொண்டனர். பின்னர் மயக்கத்தில் இருந்த அவரை மதுரை மாவட்டம் பொட்டச்சிபட்டி அருகே அந்த கும்பல் கீழே தள்ளி விட்டு காருடன் தப்பியது.
மயங்கி கிடந்த அவரை அப்பகுதியினர் மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. சுய நினைவு திரும்பிய சங்கர்தாஸ் கார் கடத்தியது குறித்து நாச்சியார்புரம் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் செல்விகீதா வழக்குப்பதிவு செய்து காரை கடத்திய கும்பல் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்.
சிவகங்கை அருகே இலுப்பகுடியில் இந்தோ-திபெத் எல்லை பாதுகாப்பு படை பயிற்சி மையம் செயல்பட்டு வருகிறது. கடந்த 2011-ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த பயிற்சி மையத்தில் எல்லை பாதுகாப்பு படைக்காக நாட்டின் பல்வேறு மாநிலங்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்படும் வீரர்கள் ஓராண்டு பயிற்சி பெற்றுச் செல்வது வழக்கம்.

இதேபோன்று கடந்த(2017-18) ஓராண்டு பயிற்சி நிறைவு செய்த 242 வீரர்களை நாட்டின் எல்லை பாதுகாப்பு படைக்கு அனுப்பி வைக்கும் விழா, பயிற்சி நிறைவு விழா மற்றும் வீரர்களின் அணிவகுப்பு, சாகச நிகழ்ச்சிகள் நடைபெற்றன. பயிற்சி மைய மைதானத்தில் நடைபெற்ற விழாவுக்கு இலுப்பகுடி பயிற்சி மையத்தின் டி.ஐ.ஜி. ஆஸ்டின் ஈபன் தலைமை தாங்கினார். அப்போது வீரர்களின் அணி வகுப்பு மரியாதையையும் அவர் ஏற்றுக் கொண்டார். மேலும் பயிற்சியில் சிறந்து விளங்கிய அஜய்குமார், அங்குஷ் சவுத்ரி, யாசின், சகில்சிங், மன்ஜீத் தாகூர், அமித் ஆகிய வீரர்களை பாராட்டி பரிசு கோப்பைகளை வழங்கினார்.
முன்னதாக நாட்டின் ஒற்றுமையை வெளிப்படுத்தும் வகையில் வீரர்களின் அணி வகுப்பு நடைபெற்றது. தொடர்ந்து தேசிய கொடியை முன்னிறுத்தி வீரர்கள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். வீரர்களின் சாகச நிகழ்ச்சியாக கராத்தே, கயிறு ஏறுதல், தீ வளையத்திற்குள் தாவுதல், துப்பாக்கிகளை கையாளும் விதம், நடனம் போன்றவை நடைபெற்றன.
தற்போது பயிற்சி நிறைவு செய்து செல்லும் 242 வீரர்களும் தமிழகம், ஜம்முகாஷ்மீர், ஜார்கண்ட், குஜராத், ஆந்திரா, உத்தரபிரதேசம், கர்நாடகா, அரியானா, சத்தீஸ்கர், தெலுங்கானா, புதுடெல்லி ஆகிய 11 மாநிலங்களில் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.
காரைக்குடி:
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி காந்திபுரத்தைச் சேர்ந்தவர் மாணிக்கம். இவரது மகன் சுப்பிரமணி (வயது 47).
காரைக்குடி பர்மா பஜாரில் வெளிநாட்டு பொருட்கள் விற்பனை கடை வைத்துள்ள இவர், வடக்கு போலீசில் ஒரு புகார் கொடுத்தார்.
அதில், உறவினர் சிட்டாள் ஆச்சி என்பவரிடம் ரூ.40 லட்சம் கொடுத்து வைத்திருந்தேன். அதனை எனது கார் டிரைவர் நாராயணன் (51) ஏமாற்றி திருடிச் சென்று விட்டார் எனக்குறிப்பிட்டு இருந்தார்.
இதுகுறித்து வடக்கு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது நாராயணன், பணப்பையை தனது உறவினர் செல்வராஜிடம் கொடுத்ததும் அவர் அதனை தனது நண்பரான ராமநாதபுரத்தைச் சேர்ந்த சேகரிடம் கொடுத்திருப்பதும் தெரியவந்தது.
இதனை தொடர்ந்து 3 பேரையும் பிடித்த போலீசார் அவர்களிடம் இருந்த பணப்பையை மீட்டனர். அந்தப்பையில் ரூ.2 கோடியே 25 லட்சம் மற்றும் வெளிநாட்டு பணம் இருப்பது தெரியவந்தது. ரூ.40 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டதாக சுப்பிரமணி கூறிய நிலையில், ரூ.2¼ கோடி இருந்தது போலீசாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது.
இதுகுறித்து தீவிர விசாரணை நடத்திய போது, அது ஹவாலா பணம் என தெரியவந்தது.
வெளிநாட்டு பொருட்களை விற்று வந்த சுப்பிரமணி, அனுமதியின்றி வெளிநாட்டு பணத்தையும் மாற்றிக்கொடுத்து வந்துள்ளார். அந்த பணத்தை தான் அவர் உறவினர் வீட்டில் மறைத்து வைத்திருந்தாரா? என்ற சந்தேகம் போலீசாருக்கு ஏற்பட்டுள்ளது.
சுப்பிரமணி ஹவாலா மோசடியில் ஈடுபட்டதால், கொள்ளையடிக்கப்பட்ட பணத்தை குறைத்து கூறினாரா? அல்லது வேறு ஏதும் காரணமா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். #HawalaMoney
காளையார்கோவில் கஸ்தூரிபாய் கிழக்கு தெருவைச் சேர்ந்தவர் செந்தில்(வயது 35). மீன் வியாபாரம் செய்து வருகிறார். இவருடைய மனைவி தமிழ்ச்செல்வி(30). இவர்களுக்கு தர்ஷன்(7) என்ற மகனும், தர்ஷினி(5) என்ற மகளும் உள்ளனர். கணவன்-மனைவி இடையே கடந்த சில மாதங்களுக்கு முன்பு குடும்ப பிரச்சினை ஏற்பட்டுள்ளது. அடிக்கடி ஏற்பட்டு வந்த பிரச்சினையால் தமிழ்ச்செல்வி கோபித்துக்கொண்டு கணவரை பிரிந்து சாலைகிராமம் அருகே வலசகாடு கிராமத்தில் உள்ள தனது பெற்றோர் வீட்டிற்கு குழந்தைகளுடன் சென்றுவிட்டார்.
இந்தநிலையில் குழந்தைகளை பள்ளிக்கூடத்தில் சேர்ப்பதற்காக சான்றிதழ் வாங்க வேண்டியிருந்தது. இதற்காக காளையார்கோவிலுக்கு தமிழ்ச்செல்வி தனது கணவர் வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது அங்கிருந்த செந்திலுக்கும், தமிழ்ச்செல்விக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த செந்தில் வீட்டில் இருந்த கத்தியால் தமிழ்ச்செல்வி சரமாரியாக குத்திவிட்டு தப்பியோடிவிட்டார். கத்திக்குத்தில் படுகாயமடைந்த தமிழ்ச்செல்வி சம்பவ இடத்திலேயே இறந்துபோனார்.
பின்னர் அக்கம்பக்கத்தினர் இதுகுறித்து காளையார் கோவில் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் விரைந்து வந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் மோகன் மற்றும் போலீசார், தமிழ்ச்செல்வியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சிவகங்கை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். மேலும் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், தப்பியோடிய செந்திலை வலைவீசி தேடி வருகின்றனர்.
மின்வாரிய ஒப்பந்த தொழிலாளர்களாக பணியாற்றுவோருக்கு தினக்கூலியாக ரூ.380 தரப்படும் என்ற அரசின் அறிவிப்பை செயல்படுத்த வேண்டும், ஒப்பந்த தொழிலாளர்கள் அனைவரையும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சிவகங்கை மாவட்ட மின்வாரிய ஊழியர் மத்திய அமைப்பின் சார்பில் சிவகங்கையில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.
உண்ணாவிரதத்திற்கு மாவட்ட செயலாளர் கருணாநிதி தலைமை தாங்கினார். மாவட்ட பொருளாளர் சுப்புராம் முன்னிலை வகித்தார். சி.ஐ.டி.யூ மாவட்ட செயலாளர் வீரய்யா உண்ணாவிரதத்தை தொடங்கி வைத்தார். இதில் மாநில செயலாளர் உமாநாத், ஓய்வுபெற்றோர் சங்க மாவட்ட செயலாளர் மாசிலாமணி, மாநில செயலாளர் கோகுலவர்மன், சி.ஐ.டி.யூ மாவட்டக்குழு உறுப்பினர் அய்யம்பாண்டி, கணேசன், மோகனசுந்தரம், ரமேஷ்பாபு உள்பட பலர் கலந்துகொண்டனர்.
சிவகங்கை:
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே உள்ள மணலூர் கிராமத்தைச் சேர்ந்தவர் மூக்கையா. இவரது மனைவி சீனியம்மாள் (வயது 55). இவர்களுக்கு சரவணன் (36), முருகன் என 2 மகன்கள் உள்ளனர்.
டிரைவரான சரவணனுக்கு திருமணமாகி பாலா மணி என்ற மனைவி உள்ளார். அடிக்கடி மது குடித்து விட்டு மனைவியிடம் சரவணன் தகராறு செய்தார். இதனால் மனைவி கோபித்துக்கொண்டு தாய் வீட்டுக்கு சென்று விட்டார்.
இந்த நிலையில் முருகனுக்கு பெண் பார்க்க ஏற்பாடுகள் நடந்தன. இதையொட்டி சீனியம்மாள், சரவணனிடம் உனது மனைவியை சமரசம் செய்து வீட்டுக்கு அழைத்து வா என கூறினார். இதற்கு அவர் மறுத்து விட்டார். இதுதொடர்பாக தாய்-மகனுக்கு இடையே கடந்த ஒரு வாரமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டது.
நேற்று சரவணன் வழக்கம்போல் மது குடித்து விட்டு வீட்டுக்கு வந்தார். போதையில் இருந்த அவரிடம் மீண்டும் சீனியம்மாள் மருமகள் குறித்து கேட்டுள்ளார்.
அப்போது இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த சரவணன், தாய் என்றும் பாராமல் வீட்டில் இருந்த கிரைண்டர் கல்லை எடுத்து சீனியம்மாள் மீது போட்டார். இதில் படுகாயம் அடைந்த அவர் ரத்த வெள்ளத்தில் அங்கேயே துடிதுடித்து இறந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்த திருப்புவனம் போலீசார் சம்பவ இடம் சென்று சீனியம்மாள் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் சரவணனை கைது செய்தனர்.
போதையில் தாயை மகனே கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.






