என் மலர்
செய்திகள்

வில்லிப்பட்டியில் உள்ள பழமை வாய்ந்த நெற்களஞ்சியத்தை பாதுகாக்க கோரிக்கை
சிவகங்கை:
சிவகங்கை மாவட்டம் வில்லிபட்டி என்ற ஊரில் நூறு ஆண்டுகளுக்கு முன்பே விஞ்ஞான முறையில் இயற்கை குளிர்சாதன முறையில் கட்டப்பட்ட நெற்களஞ்சியம் உள்ளது.
எந்த காலத்தின் தட்ப வெப்ப நிலையிலும் உள்ளே உள்ள தானியங்கள் பாதிப்பு அடையாமல் ஒரே சீரான சீதோஷ்ண நிலையில் இருக்கும் வகையில் கட்டப்பட்டுள்ளது.
இக்களஞ்சியத்தை லட்சுமணன் அம்பலம், அழகர்சாமி அம்பலம் ஆகியோரின் தந்தையால் கட்டப்பட்டுள்ளது. இதுபோன்று சர்வப்பட்டி, வண்ணாமறப்பட்டி, சிவகங்கை ஆகிய நான்கு ஊர்களில் கட்டியிருந்துள்ளார்கள். மற்றவை எல்லாம் சிதைந்துவிட்ட நிலையில், இது ஒன்று மட்டும் புதுப்பொழிவோடு காட்சி தருகிறது.
களஞ்சியம் என்ற சொல் ஒரு பொருளை சேமித்து வைக்கும் இடத்தை குறிப்பதாகும். தமிழில் களஞ்சியம் என்பது நெல் போன்ற தானியங்களை வைக்கும் இடத்தை குறிக்கிறது. இன்று தகவல்களை சேமித்து வைக்கும் கணினி நினைவகங்களையும் களஞ்சியம் என்ற சொல் கொண்டு குறிக்கப்படுகிறது.
மனிதன் என்று உற்பத்தி செய்ய ஆரம்பித்தானோ அன்றே சேமிக்க தொடங்கி விட்டான். முதலில், தான் பயிர் செய்த தானியங்களை சேமிக்க தொடங்கினான். அவனின் பெரிய தொழில் நுட்பம்தான் மண்குதிர். அதில் தானியங்களை நீண்ட காலம் பாதுகாப்பாக சேமித்து வைத்து, தேவைக் கேற்ப பஞ்சம் போன்ற அவசர காலங்களில் பயன் படுத்தினர்.
குதிரின் மேல் பாகத்தில் உள்ள பெரும் துவாரத்தின் வழியாக தானியத்தை கொட்டுவார்கள. தேவை ஏற்படும்போது கீழே உள்ள துவாரத்தின் வழியாக எடுத்துக் கொள்வார்கள். அதுபோலவே இந்த களஞ்சியத்திலும் மேல் தளத்தில் உள்ள சிறிய வழியாக தானியத்தை கொட்டி கீழ் பகுதியின் வழியாக வெளியில் எடுக்கும் வசதி உள்ளது.
மன்னர்கள் கிராமங்களில் கிடைக்கும் வருவாய் வரித் தானியங்களை ஆங்காங்கே அமைக்கப்பட்டிருந்த “சேகரம் பட்டறை” என்ற கிடங்குகளில் சேகரித்து வைத்தனர். ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் பெரும் நிலச்சுவன்தாரர்களும், அம்பலகாரர்களும் (அதிகாரம் படைத்தவர்கள்) விளைநிலங்களில் கிடைக்கும் தானியங்களை களஞ்சியங்களில் வைத்து பாதுகாத்து வந்துள்ளனர்.
அந்த வகையில் அம்பலக்காரராகவும் பெரும் நிலச் சுவன்தாராகவும் திகழ்ந்த ஒருவர் வில்லிப்பட்டியில் சிறப்புமிக்க இந்த களஞ்சியத்தை கட்டியுள்ளார் .
தரையில் இருந்து ஐந்தடி உயரத்திற்கு மேல் தளம் அமைக்கப்பட்டு உள்ளது. அந்த தளமானது நூறு அடி நீளம், 36 அடி அகலம் கொண்ட அளவிற்கு அமைக்கப்பட்டு, அத்தளத்தில் சுற்றிலும் பத்து அடி அளவில் இடைவெளி விட்டுள்ளனர். மீதம் உள்ள உட்பகுதியில் 80 அடி நீளம், 16 அடி அகலம், 10 அடி உயரம் உள்ள களஞ்சியத்தை 13 அகலம் கொண்ட 6 அறைகளாக கட்டி இருக்கிறார்கள்.
(கட்டிடம் கட்டுவதற்கு நீர்த்த சுண்ணாம்பு பனை வெல்லம் கலச்சிக்காய் போன்றவற்றை செக்கிலிட்டு அறைத்த சாந்தை வைத்து கட்டியுள்ளனர்).
அதற்கு மேல் மச்சு (மாடி) அமைத்து அதற்கு மேல் ஓட்டுக்கூரை அமைத்துள்ளார்கள். மேலும் கட்டிடத்தின் தளத்திற்கு கீழ் மூன்று அடி அகலம், மூன்று அடி உயரம் கொண்ட சதுர வடிவிலான இரண்டு சுரங்கம் அமைத்து உள்ளார்கள்.
அதன் வழியாக ஒரு பகுதியில் இருந்து மறு பகுதிக்கு காற்று நூறு அடி நீளத்திற்கும் வெளியே செல்லுமாறு அமைத்துள்ளார்கள். இதனால் சுற்றுப் புறத்தில் இருந்தோ மேல் புறத்தில் மற்றும் அடிப்பகுதியான பூமியில் இருந்தோ வெப்பமோ, ஈரமோ, நடுப் பகுதியில் அமைந்துள்ள கட்டிடத்திற்கு உள்ளே இருக்கும் தானியங்களை தாக்க முடிவதில்லை.
ஆதனால் தானியங்கள் எவ்வளவு காலம் ஆனாலும் கெடாமல் பாதுகாக்க முடிந்துள்ளது. அப்போதைய வல்லுநர்கள் இயற்கையான பாதுகாப்பு பெட்டகத்தை செயற்கையாக அமைத்துள்ளனர். இதில் உள்ள சட்டங்கள் அனைத்தும் பர்மாவில் இருந்து நேரடியாக கொண்டு வரப்பட்ட தேக்கு மரத்தால் ஆனவை. அவற்றை எல்லாம் 48 அழகிய கல்தூண்கள் தாங்கி நிற்கின்றன. தற்போது கவனிப்பாரற்று இருந்தாலும் தன் பொழிவு மாறாமல் உள்ளது. அறைகளுக்கு உள்ளே அக்காலத்தில் பயன்படுத்திய குதிர்கள் காணக்கிடைக்கின்றன.
களஞ்சியம் கட்டப்பட்ட காலகட்டத்தில் களஞ்சியத்தில் எப்போதும் நூறு பேர்களுக்கு மேல் வேலை செய்து கொண்டே இருப்பார்கள். ஒருபுறம் சமையல், சாப்பாடு நடந்து கொண்டே இருக்கும்.
தற்போது வில்லிப்பட்டி யில் வசிப்பவர்கள் பெரும் பாலோனர் அந்த களஞ்சியத்தில் வேலை செய்து வாழ்ந்தவர்களாகவே உள்ளனர். 1964-ல் ஏற்பட்ட புயல் வெள்ளத்தில் ஊரே நீரில் தத்தளித்து, இருக்க இடமில்லாமல் தவித்தபோது எல்லோருக்கும் அபாயம் அளித்துள்ளது.
பலநூறு குடும்பங்களுக்கு வாழ்வாதாரமாகவும், பல்லாயிரம் பேருக்கு பசிப்பிணியை போக்கிய அட்சயப்பாத்திரமாகவும் இருந்துள்ளது இக்களஞ்சியம்.
மேலும் தற்போது வரை வழிப்போக்கர்கள் தங்கி இளைப்பாறிச் செல்லும் இடமாக உள்ளது. கோடையில் களஞ்சியதின் சுற்றுத் திண்ணையில் இளைப்பாருவோர், இயற்கை அன்னையின் மடியின் சுகத்தால் தன்னை மறப்பர். தொன்மையான இந்த களஞ்சியத்தை பாதுகாப்பது, வருங்கால சந்ததியினருக்கு கிடைக்கும் அரிய பொக்கிஷம் ஆகும்.
மேற்கண்ட தகவலை தொல்லியல் ஆய்வாளர் விஜயராமு தெரிவித்தார்.






