search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Pattukkottai train"

    காரைக்குடி-பட்டுக்கோட்டை இடையிலான 73 கி.மீ. தூரத்தை கடக்க 6.30 மணி நேரம் ஆவதால் புதிய ரெயில் சேவை பயணிகளிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. #Train

    காரைக்குடி:

    சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் இருந்து பட்டுகோட்டை வரை அகல ரெயில் பாதை பணிகள் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்டு 3 மாதங்களுக்கு முன்பு பணி நிறைவு பெற்றது.

    இதனையடுத்து இந்த புதிய அகல ரெயில் பாதையில் கடந்த 2 மாதத்திற்கு முன்பு அனைத்து கட்ட சோதனைகளும் நிறைவு செய்யப்பட்டு வெள்ளோட்டமும் நடத்தப்பட்டது.

    இந்த நிலையில் ஏற்கனவே, அறிவித்தபடி, இன்று முதல் இந்த வழித் தடத்தில் காரைக்குடி- பட்டுக்கோட்டை ரெயில் சேவை தொடங்கியது.

    இந்த புதிய ரெயில் வாரத்தில் திங்கள் மற்றும் வியாழன் ஆகிய இரு தினங்களில் இயக்கப்படுகிறது. 4 பெட்டிகளுடன் காலை 6 மணிக்கு காரைக்குடியில் இருந்து புறப்படும் ரெயில் மதியம் 12.30 மணிக்கு பட்டுக்கோட்டை சென்றடையும்.

    அதே மார்க்கத்தில், பட்டுக்கோட்டையில் இருந்து மதியம் 1.30 மணிக்கு புறப்படும் ரெயில் இரவு 7.30 மணிக்கு காரைக்குடியை வந்தடையும்.

    இடையில் இந்த ரெயில் கண்டனூர், புதுவயல், பெரியகோட்டை, அறந்தாங்கி, பேராவூரணி போன்ற ரெயில் நிலையங்களில் நின்று செல்லும் என ரெயில்வே நிர்வாகத்தின் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

    இதனிடையே பஸ்சில் பயணம் செய்தால் 3 மணி நேரமே ஆகும் நிலையில், 73 கி.மீ. தூரத்தை கடக்க ரெயில் பயண நேரம் 6.30 மணி நேரமாக உள்ளது பயணிகளிடையே மிகுந்த அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

    எனவே ரெயிலின் பயண நேரத்தை குறைக்கவும், வாரம் இருமுறை என்பதை தினசரியாக்கவும், காரைக்குடி என்பதை மதுரை வரை நீட்டிக்கவும், ரெயில் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். #Train

    ×