என் மலர்tooltip icon

    சிவகங்கை

    தான் வளர்த்த நாய்கள் இறந்த பின்பும், அதற்கு சமாதி அமைத்து கடவுளாக வழிபட்டுவரும் தங்கச்சாமியின் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது.
    சிவகங்கை :

    சிவகங்கை மாவட்டம், காளையார்கோவில் அருகே உள்ள சித்தத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் தங்கச்சாமி (வயது 77). இவருக்கு திருமணம் ஆகவில்லை. கிராமத்திற்கு அருகே காட்டுப் பகுதியில் ஒரு சிறிய வீட்டில் தனியாக வசித்து வருகிறார். இவருக்கு சிறு வயது முதலே நாய்கள் வளர்ப்பதில் அதிக ஆர்வம் உண்டு.

    தனது வீட்டில் பல நாய் குட்டிகளை வாங்கி வளர்த்து வந்துள்ளார். தான், செல்லமாக வளர்த்த நாய்களில் ஏதாவது இறந்துவிட்டால், தனது வீட்டை சுற்றி இருக்கும் இடத்தில் அடக்கம் செய்து அதில் சிறிய சமாதியும் எழுப்பி வந்துள்ளார். பல ஆண்டுகளாக அவர் நாய்கள் வளர்த்து வந்ததில், உடல்நலக்குறைவாலும், முதுமையிலும் சுமார் 40 நாய்களுக்கு மேல் இறந்துள்ளன. அனைத்து நாய்களுக்கும் தனித்தனியாக சமாதி எழுப்பி இருக்கிறார். தினமும் அங்கு சென்று வழிபாடும் செய்கிறார்.

    வளர்க்கும் எஜமானர்களுக்கு உயிருள்ளவரை நாய்கள் விசுவாசமாக இருக்கும். ஆனால், தான் வளர்த்த நாய்கள் இறந்த பின்பும், அதற்கு சமாதி அமைத்து கடவுளாக வழிபட்டுவரும் தங்கச்சாமியின் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது. ஊன்று கோல் உதவியுடன் நடமாடி வரும் அவர், இதுகுறித்து கூறியதாவது:-

    சிறு வயது முதலே எனக்கு துணையாக இருக்க நாய்களை வளர்த்து வந்தேன். அதற்கு சரிதா, துரைச்சாமி, நல்லம்மா, வெள்ளச்சி, ராமர் என பல்வேறு பெயர்களை சூட்டி அழைத்தேன்.

    அரசு வழங்கும் உதவித் தொகையின் மூலம்தான் நானும், நாய்களும் சாப்பிட்டு வந்தோம். காட்டு பகுதியில் தனியாக வசித்து வந்ததால் என்னுடன் பேசி பழகுவதற்கு ஆட்கள் யாரும் அருகில் இல்லை. இதனால் நாய்களைத்தான் என்னுடைய குடும்பத்தினராக பாவித்து, பிள்ளை போல் அவற்றுடன் பேசி வந்தேன். நான் வளர்த்து வந்த நாய்கள் அனைத்தும் என்னுடன் மிகவும் பிரியமாக இருக்கும். எனக்கு சிறிது உடம்பு சரியில்லை என்றால் நாய்கள் அன்று முழுவதும் சாப்பிடாமல் அடம்பிடித்த நிலையில் இருக்கும். நான் இதுவரை வளர்த்து வந்த 40 நாய்கள் அவ்வப்போது இறந்து போனதால் அவற்றின் பிரிவை தாங்க முடியாமல் எனது வீட்டின் அருகே அடக்கம் செய்து சிறிய சமாதி அமைத்து அவற்றில் தினந்தோறும் வழிபாடு செய்து வருகிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    முதுமை அடைந்துவிட்ட தங்கச்சாமிக்கு உறுதுணையாக அவரது வீட்டில் இப்போது ஒரே ஒரு நாய் மட்டு்ம் உள்ளது.
    சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையில் வீடு இடிந்து விழுந்ததில் தொழிலாளி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.
    தேவகோட்டை:

    சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை எஸ். எம்.எல். தெருவில் வசித்து வந்தவர் ராஜேந்திரன் (வயது62). இவர் மனைவி லட்சுமி மகன்கள் ராம் குமார், பெரியநாயகம் ஆகியோருடன் குடியிருந்து வந்தார்.

    ராஜேந்திரன் பழைய வீடுகளை இடித்து அந்த வீட்டில் உள்ள மரம் மற்றும் பொருட்களை வாங்கி விற்கும் தொழிலை செய்து வந்தார்.

    மேலும் தேவகோட்டை மற்றும் சுற்றியுள்ள கிராம பகுதிகளில் உள்ள வீடுகளை இடித்து அவற்றிலுள்ள ஜன்னல்களை எடுப்பதற்காக இரவு பகலாக பணியாளர்களை கொண்டு வேலை செய்து வந்தார்.

    கடந்த 3 நாட்களுக்கு முன்பு இவர் வீட்டை விட்டு வெளியே சென்றார். ஆனால் அதன் பிறகு அவர் வீடு திரும்பவில்லை. அவரை உறவினர்கள் அக்கம் பக்கம் தேடினர். ஆனால் அவர் குறித்த தகவல் எதுவும் கிடைக்கவில்லை.

    இந்த நிலையில் இன்று காலை கருணாநிதி மண்டபம் அருகே உள்ள வெள்ளையன் செட்டியாரின் பழைய வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியது. இதுகுறித்து அக்கம் பக்கத்தினர் தேவகோட்டை நகர போலீஸ் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர்.

    சம்பவ இடத்திற்கு தேவகோட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு ரமேஷ், இன்ஸ்பெக்டர் சரவணன், சப்- இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் ஆகியோர் விரைந்து சென்றனர்.

    தேவகோட்டை தீயணைப்புத்துறைக்கும் தகவல் கொடுக்கப்பட்டது. தீயணைப்பு அதிகாரி ரவிமணி தலைமையில் வீரர்கள் அங்கு விரைந்து வந்து இடிபாடுகளை அகற்றினர். அப்போது அதில் ராஜேந்திரன் பிணமாக கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவர் இறந்து 3 நாட்கள் ஆனதால் உடல் அழுகிய நிலையில் இருந்தது. இதனால் அந்த இடத்திலேயே அவரது உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.

    அவரது உடலை பார்த்து மனைவி மற்றும் மகன்கள் கதறி அழுதனர்.

    விசாரணையில் பழைய வீட்டை இடிக்கும்போது ராஜேந்திரன் இடிபாடுகளில் சிக்கி இறந்து இருக்கலாம் என தெரியவந்தது. இந்த சம்பவம் தேவகோட்டை பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளளது.
    தேவகோட்டையில் போலீஸ் உயர் அதிகாரிகளை தரக்குறைவாக திட்டிய ஏட்டு சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளார்.
    தேவகோட்டை:

    சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை பகுதியில் கடந்த சில நாட்களாக ஒரு ஆடியோ வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வந்தது.

    அந்த ஆடியோவில் பேசும் நபர் தேவகோட்டை போலீஸ் துணை சூப்பிரண்டு, நகர் போலீஸ் இன்ஸ்பெக்டரை ஆபாச வார்த்தைகளால் திட்டுவதாக இருந்தது.

    இந்த ஆடியோ பேச்சு போலீசாரின் உயர் அதிகாரிகளின் கவனத்துக்கு சென்றது. இதையடுத்து ஆடியோ தொடர்பாக விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டது.

    அதன்படி போலீசார் நடத்திய விசாரணையில், துணை சூப்பிரண்டு, இன்ஸ்பெக்டரை தரக்குறைவாக பேசியது தேவகோட்டை நகர் காவல் நிலையத்தில் பணிபுரியும் ஏட்டு மூர்த்தி என தெரியவந்தது.

    இதையடுத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார், ஏட்டு மூர்த்தியை ஆயுதப்படைக்கு இடமாற்றம் செய்து உத்தரவிட்டார். தற்போது மூர்த்தி சஸ்பெண்டு செய்யப்பட்டு உள்ளார்.

    காவல்துறையில் பணிபுரிபவர்களாக இருந்தாலும், பொதுமக்களாக இருந்தாலும் தவறு செய்தால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸ் சூப்பிரண்டு எச்சரித்துள்ளார்.
    சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த முதியவர் ஒருவர் கொரோனா தொற்று காரணமாக சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
    சிவகங்கை:

    சிவகங்கை மாவட்டத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறது.

    இந்த நிலையில் நேற்று ஒரே நாளில் 26 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. மாவட்டத்தில் அரசு மருத்துவமனை, தனியார் மருத்துவமனை மற்றும் வீட்டு தனிமையில் உள்ளவர்கள் உள்பட 268 பேர் தற்போது சிகிச்சையில் உள்ளனர். நேற்று ஒரே நாளில் 43 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினர்.

    இதற்கிடையே சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த 89 வயதான முதியவர் ஒருவர் கொரோனா தொற்று காரணமாக மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இறந்தார்.
    தேவகோட்டை அருகே சொத்து பிரச்சனை தொடர்பாக கம்யூனிஸ்டு பெண் நிர்வாகியை சரமாரி வெட்டிக்கொலை செய்த என்ஜினீயரிங் மாணவரை போலீசார் கைது செய்தனர்.
    தேவகோட்டை:

    சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை அருகே உள்ள தச்சவயல் கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வராஜ். இவரது மனைவி மீனாட்சி (வயது 55). கம்யூனிஸ்டு கட்சியில் நிர்வாகியாக இருந்தார்.

    செல்வராஜூக்கும், அவரது சகோதரர் சேகருக்கும் நீண்ட காலமாக சொத்து பிரச்சனை இருந்து வருகிறது. இதனால் இரு குடும்பங்களுக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக இரு தரப்பினரும் போலீசில் புகாரும் கொடுத்துள்ளனர்.

    இந்த நிலையில் சேகரின் மகன் பாலா (19) இன்று தனது பெரியப்பா வீட்டுக்கு சென்றுள்ளார். அங்கிருந்த பெரியம்மா மீனாட்சியிடம் சொத்து பிரச்சனை குறித்து கேட்டுள்ளார். இதில் 2 பேருக்கும் வாக்குவாதம் முற்றியதாக தெரிகிறது.

    அப்போது ஏற்பட்ட ஆத்திரத்தில் பாலா தான் மறைத்து வைத்து கொண்டு வந்திருந்த அரிவாளை எடுத்து மீனாட்சியை சரமாரியாக வெட்டினார்.

    இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த மீனாட்சி சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக இறந்தார். அதற்குள் அக்கம், பக்கத்தினர் அங்கு திரண்டதால் பாலா அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

    கொலை குறித்து தகவல் அறிந்த தேவகோட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு ரமேஷ், தாலுகா இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியன், சப்-இன்ஸ்பெக்டர் பாண்டித்துரை மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர்.

    மேலும் மீனாட்சியின் உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக தேவகோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இதற்கிடையே தப்பி ஓடிய பாலா, தேவகோட்டை தாலுகா போலீசில் சரணடைந்தார். போலீசார் அவரை கைது செய்து கொலைக்கு பயன்படுத்திய ஆயுதங்களை பறிமுதல் செய்தனர்.

    கைதான பாலா 2-ம் ஆண்டு என்ஜினீயரிங் மாணவர் என்பது குறிப்பிடத்தக்கது.
    தேவகோட்டை அருகே வாலிபர் கொலையில் 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தேவகோட்டை:

    சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே உள்ள சலுகை கிராமத்தை சேர்ந்தவர் தென்னரசு (வயது29). சிவனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் மணிகண்டன் (40). இவர்கள் 2 பேரும் ஜே.சி.பி. எந்திரம் மற்றும் டிப்பர் லாரிகளை வைத்து வாடகைக்கு ஓட்டி வந்தனர்.

    இதில் இருவருக்கும் இடையே தொழில் போட்டி இருந்து வந்ததாக தெரிகிறது. இந்த நிலையில் நேற்று மாலை சலுகையில் கிராமத்தில் தென்னரசு, அவரது அண்ணன் காளிதாஸ் மற்றும் நண்பர்கள் இளங்குளம் கிராமத்தைச் சேர்ந்த கணேசன் குருப்புலி கிராமத்தைச் சேர்ந்த சுரேஷ் ஆகியோர் பேசிக்கொண்டு இருந்தனர்.

    அப்போது அந்த வழியாக மணிகண்டன் வந்தார். திடீரென மணிகண்டன், தென்னரசு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த மணிகண்டன் கத்தியால் சரமாரியாக தென்னரசை குத்தினார்.இதனை சற்றும் எதிர்பாராத அவரது அண்ணன் மற்றும் நண்பர்கள் தடுத்தனர். இதனால் அவர்களுக்கும் கத்தி குத்து விழுந்தது.

    பின்னர் அங்கிருந்து மணிகண்டன் தப்பி ஓடி விட்டார். ரத்த காயங்களுடன் 4 பேரும் இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்த அந்த பகுதி மக்கள் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

    இந்த சம்பவம் அறிந்த தேவகோட்டை துணை போலீஸ் கண்காணிப்பாளர் ரமேஷ், தாலுகா ஆய்வாளர் சுப்பிரமணியன் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

    ரத்த காயங்களுடன் கிடந்த தென்னரசு டாக்டர்கள் பரிசோதனை செய்த போது அவர் ஏற்கனவே இறந்து விட்டார் என தெரிய வந்தது. மேலும் மற்ற 3 பேருக்கும் அரசு மருத்துவமனையில் முதலுதவி அளிக்கப்பட்டு தேவகோட்டை தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இறந்த தென்னரசுவின் உடல் பரிசோதனைக்காக திருவாடானை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    தென்னரசுவின் உறவுக்காரரான கார்த்திக் புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்யப்பட்டு சில மணி நேரத்தில் தலைமறைவாக இருந்த மணிகண்டன், பெத்து ஆகிய இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    காரைக்குடி அருகே உணவு பாதுகாப்பு அதிகாரிகள் நடத்திய சோதனையில் ரசாயணம் தடவி விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த சுமார் 50 கிலோ மீன்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

    காரைக்குடி:

    சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் ஆங்காங்கே சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட சிறு மீன் கடைகளும், கழனிவாசல் சாலையில் ஒருங்கிணைந்த மீன் அங்காடியும் இயங்கி வருகின்றன.

    தூத்துக்குடி, கன்னியாகுமரி, நாகர்கோவில், ராமேஸ்வரம், தொண்டி ஆகிய கடல் பகுதிகளில் இருந்து மீன்கள் இங்கு விற்பனைக்காக கொண்டு வரப்படுகின்றன.

    கன்னியாகுமரி, நாகர்கோவில் போன்ற தொலை தூர ஊர்களில் இருந்து வரும் மீன்கள் கெடாமல் இருப்பதற்காக ரசாயணம் தடவி பதப்படுத்தி விற்கப்படுவதாக மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அலுவலர் பிரபாவதிக்கு ரகசிய தகவல் வந்தது.

    இன்று ஞாயிற்றுக்கிழமை மீன்கள் அதிக அளவில் விற்கப்படும் என்பதால், நேற்று இரவே மதுரையில் இருந்து மீன்வள அதிகாரிகளை வரவழைத்து, உணவு பாதுகாப்பு துறை அலுவலர் பிரபாவதி இன்று காலை 6 மணி முதலே, வாட்டர் டேங்க், கழனிவாசல் ரோடு, செக்காலை போன்ற பகுதிகளில் இயங்கி வந்த மீன் கடைகளில் திடீர் சோதனை மேற்கொண்டார்.

    சோதனையில் ரசாயணம் தடவி விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த சுமார் 50 கிலோ மீன்கள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் தடை செய்யப்பட்ட பாலிதீன் பொருட்களும் சுமார் ஒரு கிலோ அளவில் பறிமுதல் செய்யப்பட்டது. காவல் துறையினர், நகராட்சி நிர்வாகத்தினரின் உதவியோடு உணவு பாது காப்புத்துறையினர் இந்த திடீர் சோதனையில் ஈடுபட்டனர். 

    காரைக்குடியில் வெல்டிங் பட்டறை உரிமையாளர் கொலையில் 2 பேர் கைது தங்கை தற்கொலைக்கு காரணமாக இருந்ததால் பழி வாங்கினர்
    காரைக்குடி:

    சிவகங்கை மாவட்டம் காரைக்குடி செஞ்சை பகுதியைச் சேர்ந்தவர் மகாலிங்கம் (வயது 45). தேவகோட்டை ரஸ்தாவில் வெல்டிங் பட்டறை நடத்தி வந்த இவர் காரைக்குடி தேனாற்றுப்பாலம் அருகே கொலை செய்யப்பட்டு கிடந்தார். அவரது உடலை காரைக்குடி தெற்கு போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

    அவர் எதற்காக கொலை செய்யப்பட்டார்? கொலையாளிகள் யார்? என்பது குறித்து தெரியவில்லை.

    இதுகுறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார் உத்தரவின்பேரில் தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர தேடுதல் வேட்டை நடைபெற்றது. தனிப்படையினர் காரைக்குடி பஸ் நிலைய பகுதியில் கண்காணிப்பு பணியில் இருந்தபோது சந்தேகத்திற்கிடமாக 2 பேர் நிற்பதை பார்த்தனர்.

    அவர்களை போலீசார் விசாரித்தபோது முன்னுக்குப்பின் முரணாக பேசினர். இதனை தொடர்ந்து 2 பேரையும் போலீஸ் நிலையம் அழைத்து வந்து விசாரித்தனர். அப்போது அவர்கள் மகாலிங்கம் கொலையில் தொடர்புடையவர்கள் என தெரிய வந்தது. அதன்பேரில் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

    கொலைக்கான காரணம் குறித்து 2 பேரும் போலீசில் பரபரப்பு வாக்குமூலம் கொடுத்துள்ளனர். தங்கை தற்கொலைக்கு மகாலிங்கம் தான்காரணம் என அவரை கொலை செய்ததாக 2 பேரும் தெரிவித்தனர்.

    கொலை செய்யப்பட்ட மகாலிங்கத்திற்கும், தேவகோட்டையைச் சேர்ந்த ராதா என்ற பெண்ணுக்கும் கடந்த 2 ஆண்டுகளாக கள்ளத்தொடர்பு இருந்துள்ளது. ராதாவின் கணவர் மணிகண்டன் வெளிநாட்டில் வேலை பார்த்து வந்தார்.

    அவருக்கு மனைவியின் தகாத செயல் குறித்து தெரியவந்ததும் கண்டித்தார். கணவருக்கு தனது கள்ளக்காதல் விவகாரம் தெரிந்ததால் ராதா மனவேதனை அடைந்தார்.

    சில நாட்கள் சோகத்தில் இருந்த அவர் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்தார். இதனால் அவரது 2 குழந்தைகளும் கவனிப்பாரற்ற நிலைக்கு ஆளானார்கள். இது மணிகண்டனுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது.

    ராதாவின் சகோதரர்கள் சுந்தரபாண்டி, கார்த்தி ஆகியோருடன் ஆலோசித்தார்.

    ராதா தற்கொலைக்கு காரணமான மகாலிங்கத்தை வாழவிடக்கூடாது என அவர்கள் கருதினர். இதனால் அவரை கொலை செய்ய திட்டமிட்டு அதற்கான நேரத்திற்காக காத்திருந்தனர்.

    அதன்படி கடந்த சில மாதங்களாக மகாலிங்கத்தின் நடவடிக்கைகளை கண்காணித்து வந்தனர். நேற்று மகாலிங்கம் தனியாக மோட்டார் சைக்கிளில் செல்வதை பார்த்தனர். அவரை மணிகண்டன் உள்பட 3 பேரும் ஆம்னி வேனில் பின்தொடர்ந்தனர்.

    காரைக்குடி தேனாற்று பாலம் அருகே ஆள் நடமாட்டம் இல்லாததை பார்த்து மோட்டார் சைக்கிளை ஆம்னி வேனை வைத்து மறித்துள்ளனர். இதனால் மகாலிங்கம் அதிர்ச்சி அடைந்து தப்பி ஓட முயன்றுள்ளார்.

    ஆனால் மணிகண்டன், சுந்தரபாண்டி, கார்த்தி ஆகியோர் சுற்றிவளைத்து அரிவாளால் வெட்டி சாய்த்து விட்டு தப்பி சென்று விட்டனர். ஆனால் போலீசாரின் தேடுதல் வேட்டையில் சுந்தரபாண்டி, கார்த்தி சிக்கி விட்டனர். தலைமறைவான மணிகண்டனை போலீசார் தேடி வருகின்றனர்.

    கொலை நடந்த சில மணி நேரத்திற்குள் கொலையாளிகளை கைது செய்த தனிப்படையினருக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார் பாராட்டு தெரிவித்தார்.

    புகையிலை பொருட்கள் விற்ற 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    இளையான்குடி:

    இளையான்குடி போலீசார் பஜார் பகுதி கடைகளில் சோதனை நடத்தினர். அப்போது அப்துல்அசீஸ்(வயது 47) என்பவரது கடையில் சோதனையிட்ட போது 15 புகையிலை பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடர்பாக அவர் கைது செய்யப்பட்டார். இதே போல பெரும்பச்சேரி கிராமத்தில் சக்தி(50) என்பவரது கடையில் சோதனையிட்ட போது 10 புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக அவர் கைது செய்யப்பட்டார்.
    திருப்பத்தூர் அருகே தூக்குப்போட்டு பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    திருப்பத்தூர்:

    திருப்பத்தூர் அருகே ஒவிளிபட்டியை சேர்ந்தவர் கண்ணன். இவருடைய மனைவி அட்சயா (வயது 26). இவர்களுக்கு 5 வயதில் ஒரு பெண் குழந்தையும், ஒரு வயதில் ஒரு ஆண் குழந்தையும் உள்ளனர். கண்ணன் வெளிநாட்டில் வேலை பார்த்துவிட்டு கடந்த ஓராண்டுக்கு முன் கிராமத்திற்கு வந்துள்ளார்.

    இந்த நிலையில், குடும்ப தகராறு காரணமாக நேற்று முன்தினம் இரவு அட்சயா, வீட்டில் சேலையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றி தகவல் அறிந்த நெற்குப்பை போலீசார் சம்பவ இடத்துக்கு விந்து சென்று அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து நெற்குப்பை இன்ஸ்பெக்டர் செல்வகுமாரி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். மேலும் திருமணமாகி 6 ஆண்டே ஆவதால் தேவகோட்டை கோட்டாட்சியர் விசாரணை நடத்த உள்ளார்.
    காளையார்கோவில் ஸ்ரீசொர்ணகாளீஸ்வரர் கோவில் அருகில் தனியார் மண்டபத்தில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நடைபெற்றது.
    காளையார்கோவில்:

    காளையார்கோவில் ஸ்ரீசொர்ணகாளீஸ்வரர் கோவில் அருகில் தனியார் மண்டபத்தில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நேற்று நடைபெற்றது. இதில் 476 பேர் கலந்துகொண்டு கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டனர். இதை தொடர்ந்து காளையார்கோவில் அருகே மரக்காத்தூர் அரசு நடுநிலைப்பள்ளியில் இன்று(வெள்ளிக்கிழமை) காலை 10 மணி முதல் கொரோனா தடுப்பூசி போடும் முகாம் நடைபெறும் என்று சுகாதாரத்துறையினர் தெரிவித்தனர்.
    காரைக்குடியில் வெல்டிங் பட்டறை உரிமையாளர் கொலை செய்யப்பட்டது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    காரைக்குடி:

    சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே உள்ள புலிகுத்தியை சேர்ந்தவர் மகாலிங்கம் (வயது44). திருமணமாகி குழந்தைகள் உள்ளனர். தற்போது மகாலிங்கம் செஞ்சை பகுதியில் வசித்து வருகிறார்.

    இவர் தேவகோட்டை ரஸ்தா பகுதியில் வெல்டிங் பட்டறை வைத்துள்ளார். இன்று காலை 8 மணிக்கு வீட்டிலிருந்து ரஸ்தாவுக்கு டூவீலரில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவரை பின் தொடர்ந்து மோட்டார் சைக்கிளில் மர்ம கும்பல் வந்தது.

    குடிகாத்தான்பட்டி கண்மாய் அருகே வைத்து வந்த போது மகாலிங்கத்தை மறித்த அந்த கும்பல் மோட்டார் சைக்கிளை கீழே தள்ளி, அவரை அரிவாளால் தலையில் சரமாரியாக வெட்டியது.

    இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த மகாலிங்கம் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தார். பின்னர் அந்த கும்பல் அங்கிருந்து தப்பியது.

    இதுகுறித்து காரைக்குடி டி.எஸ்.பி. வினோஜி தலைமையில் தெற்கு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மகாலிங்கத்திற்கும், ஒரு பெண்ணுக்கும் கள்ளத்தொடர்பு இருந்துள்ளது. கடந்த 1½ ஆண்டுக்கு முன்பு அப்பெண் இறந்துவிட்டார். அந்த இறப்பிற்கு மகாலிங்கம் தான் காரணம் என கூறப்படுகிறது.

    இது தொடர்பாக அந்த பெண்ணின் தம்பி கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு மகாலிங்கத்தை கடையில் ஆட்களுடன் வந்து மிரட்டி சென்றுள்ளார். அவர் இக்கொலையில் ஈடுபட்டிருப்பாரோ? என்ற சந்தேகத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மேலும், மகாலிங்கத்தின் தந்தை பேத்தியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளார். அவரை ஜாமீனில் எடுக்க மகாலிங்கம் முயற்சி செய்துள்ளார். ஜாமீனில் எடுக்க சகோதரி தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளனர். அந்த கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்நிலையில் தேவகோட்டையை சேர்ந்த கார்த்தி (34), சுந்தரபாண்டி (21) என்ற இருவர் காரைக்குடி தெற்கு காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளனர். அவர்களிடம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
    ×