என் மலர்tooltip icon

    சிவகங்கை

    காளையார்கோவில் அருகே வங்கி மேலாளர் வீட்டில் 30 பவுன் நகை, ரூ.10 லட்சம் கொள்ளையடித்த மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
    காளையார்கோவில்:

    சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் அருகே உள்ள பருத்தி கண்மாய் கிராமம் அன்னை தெரசாள் நகரை சேர்ந்தவர் செபஸ்தியான் (வயது 61). ஓய்வுபெற்ற சத்துணவு அமைப்பாளர். இவரது மனைவி ஜெயராணி. மகன் ஜான்பீட்டர். இவர் தனியார் வங்கி மேலாளராக உள்ளார். இவருடைய மனைவி ஜான்சி கொல்லங்குடி உயர்நிலைப்பள்ளியில் ஆசிரியையாகவும் பணிபுரிந்து வருகின்றனர்.

    நேற்று காலை ஜான்பீட்டர், ஜான்சி ஆகியோர் வேலைக்குச் சென்று விட்டனர். ஜெயராணி 100 நாள் திட்ட வேலைக்கு சென்று விட்டார். இதையடுத்து செபஸ்தியான் மதியம் 12.30 மணிக்கு வீட்டை பூட்டிவிட்டு சாவியை வீட்டின் முன்பு மறைவான இடத்தில் வைத்துவிட்டு வெளியே சென்றார்.

    பின்னர் மாலை 3 மணிக்கு ஜெயராணி வீட்டிற்கு வந்தபோது, வீட்டின் முன்கதவு திறந்து கிடந்தது. உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த 30 பவுன் நகைகள், ரூ.9.75 லட்சத்தை காணவில்லை. வீட்டின் முன்பகுதியில் மறைவாக வைக்கப்பட்டு இருந்த சாவியை மர்ம ஆசாமிகள் எடுத்து கதவை திறந்துள்ளனர். பின்னர் உள்ளே சென்று பீரோவை திறந்து அதில் இருந்த நகை, பணத்தை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.

    இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் சிவகங்கை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார், துணை போலீஸ் சூப்பிரண்டு பால்பாண்டி, காளையார்கோவில் இன்ஸ்பெக்டர் சரவணன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து வீட்டில் இருந்தவர்களிடம் விசாரணை நடத்தினர். மேலும் மோப்பநாய் மூலமும் சோதனை நடத்தப்பட்டது.

    மேலும் இந்த சம்பவம் குறித்து காளையார்கோவில் போலீசார் வழக்கு பதிவு விசாரித்து வருகின்றனர்.

    பட்டப்பகலில் வங்கி மேலாளர் வீட்டில் நடந்த இந்த துணிகர கொள்ளை அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    வறட்சியை தாங்கி வளரக்கூடிய முந்திரி சாகுபடி செய்ய விவசாயிகள் முன் வரவேண்டும்.
    சிவகங்கை:

    தோட்டக்கலை பயிர்களின் சாகுபடி பரப்பை அதிகரித்து விவசாயிகள் வருமானத்தை பெருக்கிட ஏதுவாக பல்வேறு திட்டங்கள் தோட்டக்கலை துறையின் மூலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதில் தரிசு நிலத்தின் தங்கம் என்றழைக்கப்படும் முந்திரி சாகுபடிக்கு தேசிய வேளாண்மை வளர்ச்சி திட்டத்தின் மூலம் எக்டேருக்கு ரூ. 12 ஆயிரம் மானியம் வழங்கப்படுகிறது. 1 எக்டேருக்கு 204 எண்கள் முந்திரி ஒட்டு கன்றுகள் மானியத்தில் வழங்கப்படுகிறது.

    ஒரு விவசாயி அதிகபட்சமாக 4 எக்டேர் வரையிலும் மானியம் பெற முடியும். மேலும் பிரதம மந்திரியின் நுண்ணீர் பாசன திட்டத்தின் மூலம் சொட்டுநீர் பாசனமும் அமைத்து முந்திரி சாகுபடியை செம்மையாக செய்ய இயலும்.

    வறட்சியை தாங்கி வளரக்கூடிய முந்திரி சாகுபடி செய்ய விவசாயிகள் முன் வரவேண்டும். முந்திரி மகசூல் பெற நடவு செய்த நாளிலிருந்து 3 வருடங்கள் ஆகும். இந்த 3 ஆண்டுகளில் ஊடுபயிராக காய்கறி, பயறு வகைகளை பயிரிட்டு கூடுதல் லாபம் பெற முடியும்.

    இத்திட்டத்தில் பயனடைய விரும்பும் விவசாயிகள் தங்களது நிலவுடமை ஆவணங்களுடன் ஆதார்அட்டை நகல், குடும்ப அட்டை நகல் மற்றும் பாஸ்போர்ட் அளவிலான புகைப்படம் இவற்றுடன் தங்கள் பகுதியில் உள்ள வட்டார, தோட்டக்கலை உதவி இயக்கனர் அலுவலகத்தை அணுகி பயன் பெறலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
    திருப்புவனம் அருகே மோட்டார் சைக்கிள் திருட்டு சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    திருப்புவனம்:

    திருப்புவனத்தில் உள்ள சேதுபதி நகரைச் சேர்ந்தவர் சந்திரமோகன் (வயது58). இவர் திருப்புவனம் தாலுகாவில் உள்ள வல்லாரேந்தல் குரூப்பில் கிராம உதவியாளராக பணிபுரிந்து வருகிறார். கடந்த 10-ந் தேதி இவரது மோட்டார் சைக்கிளை திருப்புவனம் யூனியன் அலுவலக வளாகத்தில் நிறுத்திவிட்டு கிராம நிர்வாக அலுவலருடன் சிவகங்கை கோர்ட்டுக்கு சென்றுள்ளார். பின்னர் திரும்பி வந்து இருசக்கர வாகனம் நிறுத்தி இருந்த இடத்தில் பார்க்கும் போது இருசக்கர வாகனத்தை காணவில்லை. இதுகுறித்து பல இடங்களில் தேடிப்பார்த்தும் கிடைக்காததால், திருப்புவனம் போலீசில் புகார் செய்துள்ளார். அந்த புகாரின் பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சசிகலா வழக்குப்பதிவு செய்து காணாமல்போன இருசக்கர வாகனம் குறித்து விசாரணை செய்து வருகிறார்.
    15 வயது சிறுமியை திருமணம் செய்தது தொடர்பாக சென்னையை சேர்ந்த வாலிபரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    காரைக்குடி:

    சிவகங்கை மாவட்டம் காரைக்குடி மீனாட்சிபுரத்தை சேர்ந்த 15 வயது சிறுமி 9-ம் வகுப்பு படித்து வருகிறார். ஆன்லைன் வகுப்பிற்காக தாயார் கடந்த சில மாதங்களுக்கு முன் செல்போன் வாங்கி கொடுத்துள்ளர்.

    அப்போது சிறுமிக்கும், சென்னையை சேர்ந்த கார்த்திகேயன் (21) என்பவருக்கும் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு முகநூல் மூலம் பழக்கம் ஏற்பட்டுள்ளது. கார்த்திகேயன் தற்போது, திருப்பூர் காட்டன் மில்லில் பணிபுரிந்து வருவதாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில் கடந்த 30-ந்தேதி கடைக்கு சென்ற சிறுமியை காணவில்லை என்று அவரது தாயார் காரைக்குடி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

    புகாரை பெற்ற போலீசார் சிறுமியை தேடி வந்த நிலையில், அவர் திருப்பூரில் இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது. உடனடியாக திருப்பூர் சென்ற போலீசார் சிறுமியை மீட்டு விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் முகநூலில் பழகி ஆசை வார்த்தை கூறி கார்த்திகேயன் தன்னை திருமணம் செய்து கொண்டதாக அந்த சிறுமி தெரிவித்தார்.

    இருவரையும் காரைக்குடி அழைத்து வந்த போலீசார் கார்த்திகேயனை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கார்த்திகேயனை காரைக்குடி அழைத்து வந்த போலீசார் போக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    காரைக்குடி:

    சிவகங்கை மாவட்டம் காரைக்குடி மீனாட்சி புரத்தை சேர்ந்த 15 வயது சிறுமி 9-ம் வகுப்பு படித்து வருகிறார். ஆன்லைன் வகுப்பிற்காக தாயார் கடந்த சில மாதங்களுக்கு முன் செல்போன் வாங்கி கொடுத்துள்ளர்.

    அப்போது சிறுமிக்கும், சென்னையை சேர்ந்த கார்த்திகேயன் (21) என்பவருக்கும் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு முகநூல் மூலம் பழக்கம் ஏற்பட்டுள்ளது. கார்த்திகேயன் தற்போது, திருப்பூர் காட்டன் மில்லில் பணிபுரிந்து வருவதாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில் கடந்த 30-ந் தேதி கடைக்கு சென்ற சிறுமியை காணவில்லை என்று அவரது தாயார் காரைக்குடி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

    புகாரை பெற்ற போலீசார் சிறுமியை தேடி வந்த நிலையில், அவர் திருப்பூரில் இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது. உடனடியாக திருப்பூர் சென்ற போலீசார் சிறுமியை மீட்டு விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் முக நூலில் பழகி ஆசை வார்த்தை கூறி கார்த்திகேயன் தன்னை திருமணம் செய்து கொண்டதாக அந்த சிறுமி தெரிவித்தார்.

    இருவரையும் காரைக்குடி அழைத்து வந்த போலீசார் கார்த்திகேயனை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.



    சிவகங்கை மாவட்டத்தில் 19 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
    சிவகங்கை:

    சிவகங்கை மாவட்டத்தில் நேற்று 19 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. மேலும் 26 பேர் நேற்று சிகிச்சை முடிந்து வீடு திரும்பினர். தற்போதைய நிலவரப்படி இம்மாவட்டத்தில் அரசு மருத்துவமனை, தனியார் மருத்துவ மனை மற்றும் வீட்டு தனிமையில் சிகிச்சையில் உள்ளவர்களின் எண்ணிக்கை 222 ஆக உள்ளது.
    சிவகங்கை அருகே ஊராட்சியின் மூலமாக மக்கும் குப்பைகளை பயன்படுத்தி மின்சாரம் தயாரிக்கும் ஆலையை அமைச்சர் கே.ஆர். பெரியகருப்பன் திறந்துவைத்தார்.
    சிவகங்கை:

    சிவகங்கையை அடுத்த காஞ்சிரங்காலில் ஊரக வளர்ச்சித்துறை மூலம் ரூர்பன் திட்டத்தில் ரூ.65 லட்சம் மதிப்பில் மக்கும் குப்பைகளை பயன்படுத்தி பயோகியாஸ் தயாரித்து அதன் மூலம் மின்சாரம் தயாரிக்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.இதன் தொடக்க விழா கலெக்டர் மதுசூதன்ரெட்டி தலைமையில் நடைபெற்றது.காஞ்சிரங்கால் ஊராட்சி மன்ற தலைவர் மணிமுத்து வரவேற்றுப் பேசினார்.

    விழாவில் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் கே.ஆர். பெரியகருப்பன் கழிவுகள் மூலம் மின்சாரம் தயாரிக்கும் ஆலையை திறந்து வைத்து பேசியதாவது:-

    ரூர்பன் திட்டத்தில் சிவகங்கை நகரை ஒட்டியுள்ள 7 ஊராட்சிகளில் நகரங்களுக்கு நிகரான உள்கட்டமைப்பு வசதிகள் செய்து தரப்பட உள்ளது.தற்பொழுது தினசரி சேகரிக்கப்படும் மக்கும் குப்பைகளை பயன்படுத்தி பயோகியாஸ் உற்பத்தி செய்து அதிலிருந்து மின்சாரம் தயாரிக்கப்படுகிறது.

    இங்கு ஒரு நாளைக்கு 2 டன் வரை குப்பைகளில் இருந்து மின்சாரம் உற்பத்தி செய்து ஊராட்சியில் தெருவிளக்குகளுக்கு மின் சப்ளை வழங்கப்படவுள்ளது. இத்திட்டத்தில் ஒருநாளைக்கு 200 யூனிட் வரை மின்சாரம் தயாரிக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    விழாவில் மானாமதுரை தொகுதி தமிழரசி எம்.எல்.ஏ., ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் வீரபத்திரன், சிவகங்கை ஊராட்சி ஒன்றிய தலைவர் மஞ்சுளா பாலச்சந்தர், வட்டார வளர்ச்சி அலுவலர் உமா மகேஸ்வரி உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் கிராம ஊராட்சிகள் வட்டார வளர்ச்சி அலுவலர் ரெத்தினவேலு நன்றி கூறினார்.

    சிவகங்கை மாவட்டத்தில் இதுவரை 4 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு உள்ளது என்று கலெக்டர் கூறினார்.
    சிவகங்கை:

    கலெக்டர் மதுசூதன்ரெட்டி, விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:- சிவகங்கை மாவட்டத்தில் கடந்த ஜனவரி மாதம் 16-ந்தேதி முதல் கொரோனா பரவுதலை தடுக்கும் விதமான பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளுடன் கொரோனா தடுப்பூசியும் போடப்பட்டு வருகிறது.

    இந்த மாவட்டத்தில் 48 கிராமப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களிலும், 4 நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களிலும், அரசு மருத்துவமனைகளிலும், சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையிலும் தினமும் கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.

    இதுவரை 4 லட்சத்து 5 ஆயிரத்து 100 பேர் கொரோனா தடுப்பூசி போட்டு கொண்டு உள்ளனர்.

    இதில் 3 லட்சத்து 48 ஆயிரத்து 211 பேருக்கு முதல் தவணை தடுப்பூசியும், 56 ஆயிரத்து 889 பேருக்கு இரண்டாம் தவணை தடுப்பூசியும் செலுத்திக் கொண்டுள்ளனர்.

    தடுப்பூசி முகாம்

    இதில் 45 வயதிற்கு மேற்பட்டவர்கள் 1 லட்சத்து 61 ஆயிரத்து 285 பேருக்கும், 18 வயதிற்கு மேற்பட்டவா்கள் 1 லட்சத்து 72 ஆயிரத்து 687 பேருக்கும் கொரோனா தடுப்பூசி போடப்பட்டு உள்ளது.

    எனவே 18 வயதிற்கு மேற்பட்டவர்கள் கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்கள், மாற்றுத்திறனாளிகள் உள்பட அனைவருக்கும் ஆரம்ப சுகாதார நிலையங்களிலும், அரசு மருத்துவமனைகளிலும், சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையிலும் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.
    திருப்பத்தூர் அருகே விஷம் குடித்து பெண் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    திருப்பத்தூர்:

    திருப்பத்தூர் அருகே ஆ.தெக்கூர் செட்டி ஊரணிக்கரையை சேர்ந்தவர் ரவி. இவரது மனைவி வெள்ளையம்மாள் (வயது 36). இவருக்கும் பக்கத்து வீட்டுக்காரருக்கும் நேற்று தகராறு நடந்ததாக கூறப்படுகிறது. இதில் மனம் உடைந்த வெள்ளையம்மாள் வயலுக்கு சென்று குளிர்பானத்தில் விஷத்தை கலந்து குடித்து தற்கொலை செய்துகொண்டார்.

    இது குறித்து தகவல் அறிந்ததும் நெற்குப்பை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அய்யனார் தலைமையிலான போலீசார் விரைந்து சென்று அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    காரைக்குடி அருகே விபத்தில் முதியவர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    காரைக்குடி:

    காரைக்குடி பாவேந்தர் சாலையைச் சேர்ந்தவர் வீரக்குமார்(வயது 68). இவர் தனது மனைவியுடன் மோட்டார் சைக்கிளில் குன்றக்குடி சென்றுகொண்டிருந்தார்.எதிரே குன்றகுடி மேற்கு ரத வீதியை சேர்ந்த சண்முகசுந்தரம் என்பவர் மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். கோவிலூர் சாலையில் இரு மோட்டார் சைக்கிள்களும் எதிர்பாராதவிதமாக ஒன்றோடொன்று மோதியது.இதில் வீரகுமாருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக அவர் மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து குன்றக்குடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    மின்சாரம் தாக்கி தொழிலாளி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கல்லல்:

    ஆர்.எஸ்.மங்கலம் அருகே ஏ.ஆர்.மங்கலத்தை சேர்ந்தவர் பிரான்சிஸ் (வயது 55). இவர் தேவகோட்டை அருகே முள்ளிக்குண்டுவை சேர்ந்த மைக்கேல் திரவியம் என்பவரிடம் விறகு வெட்டும் கூலித் தொழிலாளியாக பணியாற்றி வந்தார். நேற்று இவர் அந்த பகுதியில் விறகு வெட்டி லாரியில் ஏற்றிக்கொண்டு விசாலம் கோட்டை அருகே வரும்போது லாரிக்கு இடையூறாக இருந்த மின் வயரை கம்பால் தூக்கியபோது மின்சாரம் தாக்கி கீழே தூக்கி வீசப்பட்டார். தேவகோட்டை மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் அவர் உயிரிழந்தார். இது குறித்து கல்லல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    காரைக்குடியில் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது.
    காரைக்குடி:

    காரைக்குடியில் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. முகாமை அழகப்பா பல்கலைக்கழக நிர்வாக குழு உறுப்பினர் குருமூர்த்தி தொடங்கி வைத்தார். இந்திய செஞ்சிலுவை சங்க மாவட்ட தலைவர் நல்லாசிரியர் பகீரத நாச்சியப்பன் தலைமை தாங்கினார். கல்லூரி முதல்வர் ஜெயஸ்ரீ முன்னிலை வகித்தார். ஆனந்தராஜ் தலைமையிலான மருத்துவ குழுவினர் 250 பேருக்கு கொரோனா தடுப்பூசி போட்டனர். நிகழ்ச்சியில் இந்திய செஞ்சிலுவை துணை தலைவர் சுந்தரராமன், அழகப்பா பல்கலைக்கழக செஞ்சிலுவை மண்டல ஒருங்கிணைப்பாளர் விநாயக மூர்த்தி, மாநில அமைப்பாளர் முருகுபாண்டியன், சங்க பொருளாளர் ராமமூர்த்தி, சங்க நிர்வாகிகள் சுவாமி செந்தில்நாதன் ம‌ற்று‌ம் பலர் கலந்து கொண்டனர். முன்னதாக மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சித்ரா வரவேற்றார். முகாமிற்கான ஏற்பாடுகளை சுதா, சிலம்புச்செல்வி, சாலை பாதுகாப்பு ஒருங்கிணைப்பாளர் அனிதா, வெளிப்புற செயல்பாட்டு ஒருங்கிணைப்பாளர் பிரியா ஆகியோர் செய்திருந்தனர். முடிவில் கல்லூரி இளஞ்செஞ்சிலுவைச் சங்க ஒருங்கிணைப்பாளர் புவனேஸ்வரி நன்றி கூறினார்.
    ×