என் மலர்
சிவகங்கை
காரைக்குடி:
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி வள்ளுவர் நகர் பர்மா காலனியில் வசிப்பவர் மீனாள். இவரது மகள் 4 மாத கர்ப்பிணியான ஐஸ்வர்யா. தனது 2 குழந்தைகளுடன் ஒரு மாதத்துக்கும் மேலாக தாய் வீட்டில் தங்கியுள்ளார்.
கடந்த 16-ந் தேதி கர்ப்பிணியான ஐஸ்வர்யாவை பரிசோதனை செய்ய செவிலியர் சாந்தியை அழைத்துள்ளார்.
மீனாள் வீட்டுக்கு வந்த செவிலியர் ஐஸ்வர்யாவை பரிசோதனை செய்து கொண்டிருந்தபோது, முகமூடி அணிந்த 4 கொள்ளையர்கள் கத்தியுடன் வீட்டிற்குள் புகுந்து ஐஸ்வர்யா அவரது தாயார் மீனாள், செவிலியர் சாந்தி மற்றும் குழந்தைகள் அணிந்திருந்த 8 பவுன் நகையை பறித்துக்கொண்டு தப்பினர்.
இதுகுறித்து மீனாள் காரைக்குடி வடக்கு காவல் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் அந்த பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை கொண்டு முகமூடி கொள்ளையர்களை தேடி வந்தனர்
நேற்று நள்ளிரவு இந்த சம்பவத்தில் தொடரபுடைய காரைக்குடி முத்துப்பட்டினத்தை சேர்ந்த ராமு (20), திருப்பத்தூரை சேர்ந்த சிவா (22) ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் இருவரை தேடி வருகின்றனர்.
தேவகோட்டை:
பிரதமர் மோடி மாதந்தோறும் மனதின் குரல் நிகழ்ச்சி மூலம் மக்களிடம் உரையாற்றி வருகிறார்.அப்போது பல்வேறு சாதனையாளர்களை அவர் பாராட்டுவது வழக்கம்.
இன்று மனதின் குரல் நிகழ்ச்சியில் குப்பையில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் சிவகங்கை மாவட்டம் காஞ்சிரங்கால் ஊராட்சிக்கு அவர் பாராட்டு தெரிவித்துள்ளார். இதனை கேட்டு அந்த ஊராட்சி மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
சிவகங்கை மாவட்டம் காஞ்சிரங்கால் ஊராட்சியில் உள்ள தெரு விளக்குகள் குப்பையில் இருந்து தயாரிக்கும் மின்சாரம் மூலமே எரிகிறது. இதற்காக தினமும் 200 கிலோ வரை குப்பைகளை காஞ்சிரங்கால் ஊராட்சிக்குட்பட்ட அரசு இடத்தில் சேகரிக்கின்றனர்.
அங்கு குப்பைகள் மூலம் பயோகேஸ் உற்பத்தி செய்யப்படுகிறது. பின்னர் ஜெனரேட்டர் மூலம் மின்சாரம் தயாரிக்கப்பட்டு தெருவிளக்குகளுக்கு பயன்படுத்தப்படுகிறது. இதனை தான் பிரதமர் மோடி இன்று பாராட்டி உள்ளார்.

இதுதொடர்பாக காஞ்சிரங்கால் ஊராட்சி தலைவர் மணிமுத்து கூறியதாவது:-
நாட்டின் எங்கோ ஓர் மூலையில் உள்ள எங்கள் கிராமத்தின் செயல்பாட்டை பிரதமர் மோடி பாராட்டி இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.
கடந்த 2006-ம் ஆண்டு சமையல் எரிவாயு தட்டுப்பாடு காரணமாக அன்றைய முதல்வர் கருணாநிதி பயோகேஸ் திட்டத்தை அறிமுகப்படுத்தினார். அப்போது மாட்டுச் சாணத்தில் இருந்து பயோகேஸ் தயாரிக்கப்பட்டு வீடுகளுக்கு பயன்படுத்தப்பட்டது. இது நல்ல பயனை தந்தது. நான் சிவகங்கை நகராட்சி துணை தலைவராக இருந்தபோது வீணாகும் கழிவுகள், கழிவுநீரை எப்படி நல்லபடியாக பயன்படுத்தலாம் என சிந்தித்தேன். ஆனால் அப்போது அதனை செயல்படுத்த முடியவில்லை.
தற்போது காஞ்சிரங்கால் ஊராட்சி தலைவராக உள்ளேன். கடந்த சில நாட்களுக்கு முன்பு குப்பையில் இருந்து மின்சாரம் தயாரிப்பது தொடர்பாக மாவட்ட கலெக்டர் மதுசூதன் ரெட்டி என்னிடம் தெரிவித்தார்.
இதுகுறித்து ஊராட்சியில் ஆலோசித்தோம். அதன் பிறகு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஒப்புதல் பெற்று கடந்த 10-ந்தேதி இந்த திட்டம் காஞ்சிரங்கால் ஊராட்சியில் தொடங்கப்பட்டது. அமைச்சர் பெரியகருப்பன் இதனை தொடங்கி வைத்தார்.
எச்சில் இழை, வீணாகும் சாப்பாடு, அழுகிய பழங்கள் உள்ளிட்ட பல்வேறு மென்மையான கழிவு பொருட்களை சேகரித்து மின்சாரம் தயாரித்து வருகிறோம்.
காஞ்சிரங்கால் ஊராட்சியில் சுமார் 100 கிலோ கழிவு பொருட்கள் கிடைக்கிறது. இதுதவிர கல்யாண மண்டபங்கள், அருகில் உள்ள நகரம் என பல பகுதிகளில் 100 கிலோ வரை கழிவு பொருட்கள் சேகரிக்கிறோம்.இதில் இருந்து மின்சாரம் தயாரித்து தற்போது 20 மின் கம்பங்களுக்கு வழங்கி வருகிறோம்.
200 தெருவிளக்குகளுக்கு மின்சாரம் வழங்கும் வகையில் தொடர்ந்து பணியாற்றி வருகிறோம்.
குப்பை கழிவுகளில் இருந்து மின்சாரம் தயாரிப்பதன் மூலம் வீதிகளில் வீசப்படும் குப்பைகள் பயனுள்ள பொருளாக மாற்றப்படுகிறது. இதனால் சுற்றுச்சூழல் காக்கப்படுகிறது. எங்கள் ஊராட்சி மற்றும் வீடுகள் மூலம் மின்வாரியத்திற்கு ரூ.12 லட்சம் வரை மின்கட்டணம் செலுத்துகிறோம்.
தற்போது நாங்களே மின்சாரம் தயாரிப்பதால் இந்த பணத்தை ஊராட்சியின் வேறு பணிகளுக்கு பயன்படுத்த வசதியாக இருக்கும். இந்த திட்டத்தை நகராட்சிகள் மற்றும் அதனை ஒட்டி உள்ள பேரூராட்சிகள் பயன்படுத்தினால் நன்றாக இருக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதையும் படியுங்கள்... காலாவதியான சுங்கச்சாவடிகளை தமிழக அரசு அகற்ற வேண்டும்- விக்கிரமராஜா பேட்டி
கொரோனா தொற்று குறைந்ததை தொடர்ந்து தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகிற செம்டம்பர் மாதம் 1-ந்தேதி முதல் தமிழகத்தில் 9-ம் வகுப்பு முதல் 11-ம் வகுப்பு வரை மாணவர்களுக்கான பள்ளி வகுப்பு திறக்கப்பட்டு சுழற்சி முறையில் நடைபெறும் என அறிவித்தார்.
இதைத்தொடர்ந்து சிவகங்கை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகள், கல்லூரிகள் ஆகியவற்றை சுத்தம் செய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. காரைக்குடி ராமநாதன் செட்டியார் நகராட்சி உயர்நிலைப்பள்ளியில் நேற்று பள்ளி தலைமையாசிரியர் பீட்டர்ராஜா தலைமையில் ஆசிரியர்கள் பள்ளிக்கு வந்து பணியாளர்கள் மூலம் பள்ளி வகுப்பறை, பள்ளி வளாகம், கழிப்பறை, முகப்பு பகுதியை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டனர்.
மேலும் பள்ளி வகுப்பறை முழுவதும் தண்ணீர் மூலம் சுத்தம் செய்து கிருமி நாசினி தெளிக்கும் பணியும் நடைபெற்றது. இதுதவிர பள்ளி பதிவேடுகள், பராமரிப்பு அறை உள்ளிட்டவைகள் பராமரிப்பு பணிகளும் நடைபெற்றது.
சுப நிகழ்ச்சிகளுக்கு வரவேற்பு பணி உள்ளிட்ட பல்வேறு வேலைகளுக்கு அழைத்து செல்லப்பட்ட பெண்களை பாலியல் தொழிலுக்கு தள்ளியதாக புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே உள்ள இடையர் கிராமத்தைச் சேர்ந்த ராஜா என்ற விஸ்வநாதன் (வயது 34) கைது செய்யப்பட்டார். இவர் காரைக்குடி கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு உசிலம்பட்டி சிறையில் அடைக்கப்பட்டார்.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே அமராவதிபுதூர் பகுதியில் ராஜாவை அரை நிர்வாண படுத்தி பெண்கள் உள்பட சிலர் தாக்கிய வீடியோ வைரலான விவகாரத்தால் தான் ராஜா பற்றிய தகவல்கள் வெளிவந்தன.
விழாக்களின்போது ஆடல், பாடல் நிகழ்ச்சிகளுக்கும், திருமண வரவேற்பு பணிகளுக்கும் பெண்களை அழைத்து செல்ல “வெல்கம் கேர்ள்ஸ்” என்ற நிறுவனத்தை ராஜா தொடங்கி உள்ளார்.
இதன் மூலம் ஆதரவற்ற, கணவரால் கைவிடப்பட்ட பல பெண்களுக்கு வேலை வாய்ப்பினை ஏற்படுத்தி கொடுத்துள்ளார். ஆனால் நாளடைவில் பணத்திற்கு ஆசைப்பட்டு தவறான பாதையை கையாண்டு தற்போது கைதாகி சிறையில் உள்ளார்.
இவரது செயல் குறித்து தஞ்சாவூரைச் சேர்ந்த இளம்பெண் முதல்-அமைச்சரின் தனிப்பிரிவுக்கு அனுப்பிய புகார் மனு குறித்து சாக்கோட்டை போலீசார் விசாரணை நடத்தி ராஜாவை கைது செய்தனர். அவருக்கு உதவியாக போலீஸ் ஏட்டு ஒருவர் செயல்பட்டதாக புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதுகுறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
கைதான ராஜா போலீசாரிடம் பல்வேறு தகவல்களை தெரிவித்துள்ளார். அதன் அடிப்படையில் உயர் அதிகாரிகள் ஆலேசானையின்பேரில் பல்வேறு கோணங்களில் விசாரணை நடந்து வருகிறது.
சுப நிகழ்ச்சிகளுக்கு பெண்களை அழைத்து வந்த ராஜா அவர்களது வறுமையை பயன்படுத்தி சிலரை பாலியல் தொழிலுக்கு தள்ளியதாகவும், அவரது செயலுக்கு எதிர்ப்பு தெரிவித்த சில பெண்களை அவர்களுக்கு தெரியாமலேயே மது குடிக்க வைத்து வீடியோ எடுத்து மிரட்டியதாகவும் புகார்கள் வந்துள்ளன.
மேலும் முக்கிய பிரமுகர்களுக்கு சில பெண்களை நாள் கணக்கு, மாத கணக்கு என அனுப்பி வைத்து பெரும் தொகை பெற்றதாகவும் கூறப்படுகிறது.
இந்த சம்பவம் தொடர்பாக மாநில மனித உரிமைகள் ஆணையம் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளது. பாதிக்கப்பட்ட பெண்களிடம் விசாரணை நடத்த திட்டமிட்டு இருப்பதால் முக்கிய பிரமுகர்கள் பலர் கலக்கத்தில் உள்ளனர்.
புகாரில் தொடர்புடைய போலீஸ் ஏட்டு தற்போது மருத்துவ விடுப்பில் உள்ளார். ராஜா கைது செய்யப்பட்ட நிலையில் அவர் மருத்துவ விடுப்பை நீட்டித்துள்ளதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறுகையில், பாலியல் புகாருக்கும், ஏட்டுக்கும் தொடர்பு இல்லை. ஆனால் ராஜா தாக்கப்பட்ட புகார் குறித்து அவர் உயர் அதிகாரிகளுக்கு தெரிவிக்காமல் தானாகவே விசாரணை நடத்தியது ஏன்? என்பதுதான் குற்றச்சாட்டாக உள்ளது. இதுகுறித்து விசாரணை நடத்தப்பட்டு துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.
இந்த சம்பவத்தில் ராஜா மட்டும் தனியாக செயல்பட்டு இருக்க முடியாது. அவருக்கு மேலும் பல முக்கிய பிரமுகர்கள் உதவியாக இருந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. எனவே போலீசார் தீவிர விசாரணையில் இறங்கி உள்ளனர்.
இதற்கடையில் கைதான ராஜா போலீசாரிடம் கூறுகையில், நான் யாரையும் பாலியல் தொழிலுக்கு கட்டாயப்படுத்தவில்லை. வேலைக்கு அழைத்து செல்லப்பட்ட சில பெண்களுடன் விடுதியில் மது அருந்தியது உண்மை தான். அப்போது அவர்களை வீடியோ எடுத்தேன். இதற்கு அந்த பெண்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்த விவகாரத்தில் தான் என்னை தனியாக வரவழைத்து அவர்கள் தாக்கினர். அப்போது என்னிடம் இருந்த ரூ.50 ஆயிரம் மற்றும் தங்க நகைகள், மோதிரம் ஆகியவற்றை பறித்துக் கொண்டனர்.
இதுதொடர்பாக எனது நண்பரான போலீஸ் ஏட்டுவிடம் தெரிவித்தேன். நகை-பணத்தை மட்டும் வாங்கி கொடுக்கும்படி அவரிடம் கூறினேன். புகாராக கொடுத்தால் பெரிய பிரச்சனை ஏற்படும் என்பதால் அதை செய்யவில்லை.
எனக்காகத்தான் போலீஸ் ஏட்டு சம்பந்தப்பட்ட பெண்களிடம் விசாரித்தார். ஆனால் அதற்குள் புகாரை மாற்றி பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளாக்கி விட்டனர் என்றார்.
ராஜா கூறுவது உண்மை தானா? என்பது குறித்து புகார் கொடுத்த பெண்களிடம் விசாரணை நடத்தவும் போலீசார் திட்டமிட்டனர். இந்த வழக்கில் போலீஸ் ஏட்டுவிடம் விசாரணை நடைபெற்ற பிறகுதான் உண்மை நிலவரம் தெரியவரும் என கூறப்படுகிறது.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே உள்ள அமராவதிபுதூர் பகுதியில் மேலாடையின்றி நிற்கும் வாலிபரை சில பெண்கள் தாக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
இதுதொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில் அடி வாங்கும் வாலிபர் புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியைச் சேர்ந்த ராஜா என்ற விஸ்வநாதன் (வயது 34) என தெரியவந்தது.
அவர் ஏன் தாக்கப்பட்டார்? என விசாரித்த போது பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தன. அதன் விவரம் வருமாறு:-
திருச்சியில் “கலக்கல் ஈவண்ட் மேனேஜ்மெண்ட்” என்ற பெயரில் ராஜா ஒரு நிறுவனத்தை நடத்தி வருகிறார். இந்த நிறுவனத்தின் மூலம் சுப நிகழ்ச்சிகளுக்கு வரவேற்பு ஏற்பாட்டிற்கு பெண்களை அனுப்பி வைத்துள்ளார்.
இதில் சில பெண்களுக்கு பாலியல் டார்ச்சர் கொடுத்துள்ளார். அவர் சில பெண்களிடம் அவர்களுக்கு தெரியாமல் மது அருந்த செய்ததாகவும், பின்னர் வீடியோ எடுத்து அதனை வைத்து மிரட்டுவதாகவும் கூறப்படுகிறது. மேலும் சில பெண்களை ஆசைவார்த்தை கூறி பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியதாகவும் புகார்கள் எழுந்தன.
ராஜாவுக்கு போலீஸ் ஏட்டு ஒருவர் துணை இருந்ததாகவும் அதன் மூலம் தான் மிரட்டல் மற்றும் பாலியல் தொல்லையில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது.
இதுதொடர்பாக தஞ்சாவூரைச் சேர்ந்த பெண் முதல்-அமைச்சரின் தனிப்பிரிவுக்கும் புகார் மனு அனுப்பி உள்ளார். அதில் கூறப்பட்டிருப்பதாவது:-
பிளஸ்-1 படித்து விட்டு சுப நிகழ்ச்சிகளில் வரவேற்பாளராக வேலை பார்த்து வருகிறேன். திருச்சியைச் சேர்ந்த சில பெண்கள் மூலம் அறந்தாங்கி ராஜா பழக்கம் ஆனார்.
அவர் பல்வேறு விசேஷ சுப நிகழ்ச்சிகளுக்கு வரவேற்பாளர்கள் மற்றும் நடனம் ஆடுவதற்கு பெண்களுக்கு வேலை கொடுத்து வந்தார். இதனால் எங்களது செல்போன் நம்பர்களை வாங்கி வைத்திருந்தார்.
ஒரு நிகழ்ச்சிக்கு சென்று இருந்தபோது இரவு நேரமாகி விட்டதால் காரைக்குடி அருகே உள்ள புதுவயலில் ஓட்டலில் அறை எடுத்து தங்க வைத்தனர். என்னுடன் 2 பெண்கள் ஒரே அறையில் தங்கி இருந்தோம். வேறுஅறையில் 2 பெண்கள் இருந்தனர்.
மறுநாள் காலை எழுந்து பார்த்தபோது அந்த 2 பெண்களும், ராஜா மற்றும் அவரது நண்பர் போலீஸ் ஏட்டுவும் ஒரே அறையில் இருந்து வெளியே வந்தனர். அப்போது ராஜா என்னிடம் நீங்கள் அனுசரித்து போனால் பணம், நகை கிடைக்கும் என்றார்.
மேலும் அவர்களுடன் அந்த பெண்கள் அனுசரித்து சென்றதால் 2 பவுன் தங்க சங்கிலியை போலீஸ் ஏட்டு கொடுத்ததாகவும், பெரிய பெரிய வி.ஐ.பி.க்கள் தங்கள் வசம் இருப்பதாகவும் ராஜா தெரிவித்தார். அவர்களுடன் ஒப்பந்தம் செய்து கொண்டு ஒன்று அல்லது 2 மாதம் தங்கி இருந்தால் லட்சக்கணக்கில் பணம் சம்பாதிக்கலாம். குடும்ப கஷ்டம் தீரும். சொகுசாக வாழலாம் என ஆசைவார்த்தை கூறினார். ஆனால் நான் உள்பட என்னுடன் இருந்த பெண்கள் அதற்கு ஒத்துக்கொள்ளவில்லை. இதனால் எங்களிடம் தகாத முறையில் பேசிய ராஜா செல்போனிலும் பாலியல் தொந்தரவு கொடுத்தார். இதனால் பயந்துபோன நாங்கள் இனிமேல் தொந்தரவு செய்தால் போலீசில் புகார் செய்வோம் என எச்சரித்தோம்.
ஆதரவற்ற இளம்பெண்களையும், கணவரால் கைவிடப்பட்ட பெண்களையும் ஆசைவார்த்தை கூறி பாலியல் தொழிலில் தள்ளி பலரது வாழ்க்கையை சீரழித்துள்ளான்.
நாங்கள் அவனது திட்டத்துக்கு பணியாததால் என்னுடன் இருந்த பெண்ணுக்கு போலீஸ் ஏட்டு மூலம் மிரட்டல் விடுத்தார். கடந்த ஏப்ரல் 7-ந்தேதி அவரது செல்போனுக்கு அழைப்பு வந்தது. அதில் பேசியவர் குறிப்பிட்ட போலீஸ் நிலையத்தின் ஏட்டு (ராஜாவின் நண்பர்) பேசுவதாகவும் உங்கள் மீது புகார் வந்துள்ளது. விசாரணைக்கு நேரில் வர வேண்டும் என மிரட்டி உள்ளார்.
அப்போது போலீஸ் நிலையம் வரவேண்டாம் நான் சொல்லும் இடத்துக்கு வரவேண்டும் என்று தகாத முறையில் பேசி உள்ளார். ராஜா சொல்வதுபோல் நடந்து கொள்ள வேண்டும். இல்லை என்றால் ஆட்களை வைத்து ராஜாவை கடத்தி மிரட்டியதாக எப்.ஐ.ஆர். போட்டு உள்ளே தள்ளி விடுவேன். மேலும் பாலியல் தொழில் செய்வதாக கூறி பொய் வழக்குப்போட்டு சிறையில் அடைப்பேன் என்றும் மிரட்டி உள்ளார்.
எனவே பாலியல் தொழிலில் பெண்களை தள்ளும் ராஜா, அவருக்கு ஆதரவாக சட்டவிரோதமாக செயல்படும் போலீஸ் ஏட்டு ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவர்கள் ஆதரவற்ற பெண்களின் ஏழ்மையை பயன்படுத்தி பல பெண்களை பாலியல் தொழிலுக்கு வலுக்கட்டாயமாக உட்படுத்தி உள்ளனர். அவர்கள் 2 பேரையும் கைது செய்து விசாரித்தால் பல பெண்களை சீரழித்தது தெரியவரும். மேலும் பல ஆதரவற்ற இளம்பெண்களின் வாழ்க்கை பாதுகாக்கப்படும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
இதன் அடிப்படையில் சாக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி அறந்தாங்கியைச் சேர்ந்த ராஜா என்ற விஸ்வநாதனை கைது செய்தனர். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதன் முடிவில்தான் ராஜாவால் பல பெண்கள் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்டார்களா? என்ற விவரம் தெரியவரும்.
இவர் முதலில் டிரைவராக பணிபுரிந்துள்ளார். அதன் பிறகுதான் ஏழ்மை நிலையில் இருக்கும் பெண்கள், ஆதரவற்ற பெண்கள் ஆகியோருக்கு வேலை கொடுப்பதாக கூறி இந்த செயலில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது.
கைதான ராஜாவுக்கு போலீஸ் ஏட்டு உடந்தையாக இருந்தாரா? என்பது தொடர்பாகவும் விசாரணை நடந்து வருகிறது.
பாதிக்கப்பட்ட பெண்கள் தான் ராஜாவை தனியாக வரவழைத்து தாக்கி உள்ளனர். இதுதொடர்பான வீடியோதான் சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அந்த வீடியோவில் சில பெண்கள் கோபமாக பேசுவது தெளிவாக தெரிகிறது. ராஜாவை தாக்கும் அந்த பெண்கள், நான் நல்லாதானே இருந்தேன். என்னை ஏன் இப்படி செய்தாய்? என்னை ஏன் தப்பாக வீடியோ எடுத்தாய்? என கேட்டு கதறி அழுகின்றனர்.
பெண்களை பாலியல் தொழிலுக்கு தள்ளியதன் மூலம் ராஜா மற்றும் போலீஸ் ஏட்டு பல லட்சங்களை சம்பாதித்ததாக கூறப்படுகிறது.
சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் அருகே உள்ள பருத்தி கண்மாய் கிராமம் அன்னை தெரசாள் நகரை சேர்ந்தவர் செபஸ்தியான் (வயது 61). ஓய்வுபெற்ற சத்துணவு அமைப்பாளர். இவரது மனைவி ஜெயராணி. மகன் ஜான்பீட்டர். இவர் தனியார் வங்கி மேலாளராக உள்ளார். இவருடைய மனைவி ஜான்சி கொல்லங்குடி உயர்நிலைப்பள்ளியில் ஆசிரியையாகவும் பணிபுரிந்து வருகின்றனர்.
நேற்று காலை ஜான்பீட்டர், ஜான்சி ஆகியோர் வேலைக்குச் சென்று விட்டனர். ஜெயராணி 100 நாள் திட்ட வேலைக்கு சென்று விட்டார். இதையடுத்து செபஸ்தியான் மதியம் 12.30 மணிக்கு வீட்டை பூட்டிவிட்டு சாவியை வீட்டின் முன்பு மறைவான இடத்தில் வைத்துவிட்டு வெளியே சென்றார்.
பின்னர் மாலை 3 மணிக்கு ஜெயராணி வீட்டிற்கு வந்தபோது, வீட்டின் முன்கதவு திறந்து கிடந்தது. உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த 30 பவுன் நகைகள், ரூ.9.75 லட்சத்தை காணவில்லை. வீட்டின் முன்பகுதியில் மறைவாக வைக்கப்பட்டு இருந்த சாவியை மர்ம ஆசாமிகள் எடுத்து கதவை திறந்துள்ளனர். பின்னர் உள்ளே சென்று பீரோவை திறந்து அதில் இருந்த நகை, பணத்தை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் சிவகங்கை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார், துணை போலீஸ் சூப்பிரண்டு பால்பாண்டி, காளையார்கோவில் இன்ஸ்பெக்டர் சரவணன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து வீட்டில் இருந்தவர்களிடம் விசாரணை நடத்தினர். மேலும் மோப்பநாய் மூலமும் சோதனை நடத்தப்பட்டது.
மேலும் இந்த சம்பவம் குறித்து காளையார்கோவில் போலீசார் வழக்கு பதிவு விசாரித்து வருகின்றனர்.
பட்டப்பகலில் வங்கி மேலாளர் வீட்டில் நடந்த இந்த துணிகர கொள்ளை அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.






