என் மலர்
செய்திகள்

சிவகங்கை மாவட்டம் காஞ்சிரங்கால் ஊராட்சிக்கு பிரதமர் மோடி பாராட்டு
தேவகோட்டை:
பிரதமர் மோடி மாதந்தோறும் மனதின் குரல் நிகழ்ச்சி மூலம் மக்களிடம் உரையாற்றி வருகிறார்.அப்போது பல்வேறு சாதனையாளர்களை அவர் பாராட்டுவது வழக்கம்.
இன்று மனதின் குரல் நிகழ்ச்சியில் குப்பையில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் சிவகங்கை மாவட்டம் காஞ்சிரங்கால் ஊராட்சிக்கு அவர் பாராட்டு தெரிவித்துள்ளார். இதனை கேட்டு அந்த ஊராட்சி மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
சிவகங்கை மாவட்டம் காஞ்சிரங்கால் ஊராட்சியில் உள்ள தெரு விளக்குகள் குப்பையில் இருந்து தயாரிக்கும் மின்சாரம் மூலமே எரிகிறது. இதற்காக தினமும் 200 கிலோ வரை குப்பைகளை காஞ்சிரங்கால் ஊராட்சிக்குட்பட்ட அரசு இடத்தில் சேகரிக்கின்றனர்.
அங்கு குப்பைகள் மூலம் பயோகேஸ் உற்பத்தி செய்யப்படுகிறது. பின்னர் ஜெனரேட்டர் மூலம் மின்சாரம் தயாரிக்கப்பட்டு தெருவிளக்குகளுக்கு பயன்படுத்தப்படுகிறது. இதனை தான் பிரதமர் மோடி இன்று பாராட்டி உள்ளார்.

இதுதொடர்பாக காஞ்சிரங்கால் ஊராட்சி தலைவர் மணிமுத்து கூறியதாவது:-
நாட்டின் எங்கோ ஓர் மூலையில் உள்ள எங்கள் கிராமத்தின் செயல்பாட்டை பிரதமர் மோடி பாராட்டி இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.
கடந்த 2006-ம் ஆண்டு சமையல் எரிவாயு தட்டுப்பாடு காரணமாக அன்றைய முதல்வர் கருணாநிதி பயோகேஸ் திட்டத்தை அறிமுகப்படுத்தினார். அப்போது மாட்டுச் சாணத்தில் இருந்து பயோகேஸ் தயாரிக்கப்பட்டு வீடுகளுக்கு பயன்படுத்தப்பட்டது. இது நல்ல பயனை தந்தது. நான் சிவகங்கை நகராட்சி துணை தலைவராக இருந்தபோது வீணாகும் கழிவுகள், கழிவுநீரை எப்படி நல்லபடியாக பயன்படுத்தலாம் என சிந்தித்தேன். ஆனால் அப்போது அதனை செயல்படுத்த முடியவில்லை.
தற்போது காஞ்சிரங்கால் ஊராட்சி தலைவராக உள்ளேன். கடந்த சில நாட்களுக்கு முன்பு குப்பையில் இருந்து மின்சாரம் தயாரிப்பது தொடர்பாக மாவட்ட கலெக்டர் மதுசூதன் ரெட்டி என்னிடம் தெரிவித்தார்.
இதுகுறித்து ஊராட்சியில் ஆலோசித்தோம். அதன் பிறகு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஒப்புதல் பெற்று கடந்த 10-ந்தேதி இந்த திட்டம் காஞ்சிரங்கால் ஊராட்சியில் தொடங்கப்பட்டது. அமைச்சர் பெரியகருப்பன் இதனை தொடங்கி வைத்தார்.
எச்சில் இழை, வீணாகும் சாப்பாடு, அழுகிய பழங்கள் உள்ளிட்ட பல்வேறு மென்மையான கழிவு பொருட்களை சேகரித்து மின்சாரம் தயாரித்து வருகிறோம்.
காஞ்சிரங்கால் ஊராட்சியில் சுமார் 100 கிலோ கழிவு பொருட்கள் கிடைக்கிறது. இதுதவிர கல்யாண மண்டபங்கள், அருகில் உள்ள நகரம் என பல பகுதிகளில் 100 கிலோ வரை கழிவு பொருட்கள் சேகரிக்கிறோம்.இதில் இருந்து மின்சாரம் தயாரித்து தற்போது 20 மின் கம்பங்களுக்கு வழங்கி வருகிறோம்.
200 தெருவிளக்குகளுக்கு மின்சாரம் வழங்கும் வகையில் தொடர்ந்து பணியாற்றி வருகிறோம்.
குப்பை கழிவுகளில் இருந்து மின்சாரம் தயாரிப்பதன் மூலம் வீதிகளில் வீசப்படும் குப்பைகள் பயனுள்ள பொருளாக மாற்றப்படுகிறது. இதனால் சுற்றுச்சூழல் காக்கப்படுகிறது. எங்கள் ஊராட்சி மற்றும் வீடுகள் மூலம் மின்வாரியத்திற்கு ரூ.12 லட்சம் வரை மின்கட்டணம் செலுத்துகிறோம்.
தற்போது நாங்களே மின்சாரம் தயாரிப்பதால் இந்த பணத்தை ஊராட்சியின் வேறு பணிகளுக்கு பயன்படுத்த வசதியாக இருக்கும். இந்த திட்டத்தை நகராட்சிகள் மற்றும் அதனை ஒட்டி உள்ள பேரூராட்சிகள் பயன்படுத்தினால் நன்றாக இருக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதையும் படியுங்கள்... காலாவதியான சுங்கச்சாவடிகளை தமிழக அரசு அகற்ற வேண்டும்- விக்கிரமராஜா பேட்டி






