என் மலர்
செய்திகள்

காவிரி கூட்டுக்குடிநீர் திட்டம் குறித்த ஆய்வுக்கூட்டத்தில் கலெக்டர் மதுசூதன்ரெட்டி பேசிய போது எடுத்த படம்.
காவிரி கூட்டுக்குடிநீர் திட்ட பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் - அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவு
காவிரி கூட்டுக்குடிநீர் திட்டப்பணிகளை விரைந்து முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவு பிறப்பித்து உள்ளார்.
சிவகங்கை:
தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்துறையின் மூலம் காவிரி கூட்டுக்குடிநீர் திட்டப்பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்துக்கு கலெக்டர் மதுசூதன்ரெட்டி தலைமை தாங்கி பேசியதாவது:-
காவிரி கூட்டுக்குடிநீர் திட்டத்தில் கரூர் மாவட்டம் மருதூர் பிரிவிலிருந்து சிவகங்கை மாவட்டத்திற்கு கொண்டு வரவுள்ள காவிரி கூட்டுக்குடிநீர் திட்டத்திற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. அதன் அடிப்படையில், காவிரி கூட்டுக்குடிநீர் திட்டத்தில் 3 மாவட்டங்கள் பயன்பெறும் வகையில் பணிகளை 4 கட்டமாக பிரித்து பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
பணிகள் மேற்கொள்வதற்கு தேர்வு செய்யப்பட்ட இடங்களில் வனத்துறை, தென்னக ெரயில்வேத்துறை, தேசிய நெடுஞ்சாலை, மாநில நெடுஞ்சாலை ஆகிய துறைகளுக்கு சொந்தமான இடங்கள் வருவதால் அதற்குரிய அனுமதிக்கு உரியமுறையில் கோரப்பட்டுள்ளது. அதை விரைவுப்படுத்தி பணிகள் காலதாமதமின்றி நடைபெற அலுவலர்கள் மேற்கண்ட துறைகளிடம் விரைந்து அனுமதி பெற வேண்டும்.
மேலும், குடிநீர்த்திட்ட பணிகளுக்கு தேர்வு செய்யப்பட்ட இடங்களில் தரைமட்ட நீர்த்தேக்கத்தொட்டி, மேல்நிலை நீர்த்தேக்கத்தொட்டி, மோட்டார் இயங்கும் அறை மற்றும் குடிநீர் குழாய் இணைக்கும் பணிகள் திட்டமிட்டப்படியே நடக்கிறதா? என்பதை அதிகாரிகள் அடிக்கடி ஆய்வு செய்ய வேண்டும். இந்த பணியை திட்டமிட்ட காலத்திற்குள் விரைந்து முடிக்க சிறப்பு கவனம் செலுத்துங்கள்.
காவிரி கூட்டுக்குடிநீர் திட்ட பணிகளை விரைந்து முடிப்பதன் மூலம் நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சிகள் என பல்லாயிரம் குடும்பத்தினர் பயன்ெபறுவார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த கூட்டத்தில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய கண்காணிப்புப் பொறியாளர் .குணசேகரன், செயற்பொறியாளர் அய்ணன், கூடுதல் செயற்பொறியாளர்கள் தங்கரெத்தினம், விஸ்வலிங்கம், உதவி செயற்பொறியாளர் .தமிழ்ச்செல்வம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Next Story






