என் மலர்tooltip icon

    சிவகங்கை

    சாலைக்கிராமம் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் நாளை(வியாழன்) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படும் என அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது.
    இளையான்குடி:

    இளையான்குடி அருகே உள்ள சாலைக்கிராமம் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் நாளை(வியாழன்) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படும் என அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது. மின்சாரம் தடை செய்யப்படும் கிராமங்கள் சாலைக்கிராமம், சூராணம், கோட்டையூர், சிறுபாலை, அரியாண்டிபுரம், புலியூர், அண்டக்குடி, தெற்கு கீரனூர், ஆக்க வயல், வண்டல், அளவிடங்கான், பூலாங்குடி, பஞ்சனூர், வருந்தி, புதுக்கோட்டை ஆகிய கிராமங்களிலும், மற்றும் அதன் சுற்று வட்டார கிராமங்களிலும் மின்சாரம் தடை செய்யப்படும் என மானாமதுரை மின்வாரிய செயற்பொறியாளர் செல்வம் தெரிவித்துள்ளார்.
    பறிமுதல் செய்யப்பட்ட ரேஷன் அரிசி மூட்டைகள் காரைக்குடியில் உள்ள நுகர்பொருள் வாணிப கழக கிடங்கில் ஒப்படைக்கப்பட்டது.
    சிவகங்கை:

    சிவகங்கை மாவட்ட குடிமைப்பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு பிரிவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முத்துகிருஷ்ணராஜா, சிறப்பு சப் இன்ஸ்பெக்டர்கள் சவுந்தராஜன், சுரேஷ் மற்றும் போலீசார் காரைக்குடியை அடுத்த பள்ளத்தூர் அருகேயுள்ள செட்டிநாடு பைபாஸ் ரோட்டில் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது மணப்பாறை பகுதியில் இருந்து வந்த ஒரு மினி லாரியை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அதில் 32 (1,520 கிலோ) ரேஷன் அரிசி மூட்டைகள் இருந்தன.

    இதைத்தொடர்ந்து போலீசார், அந்த லாரியை ஓட்டி வந்த மணப்பாறை அடுத்த வையபட்டியைச் சேர்ந்த டிரைவர் சங்கர்(வயது 40) என்பவரை கைது செய்தனர். மேலும் லாரியுடன் கடத்தல் அரிசியை பறிமுதல் செய்தனர்.

    விசாரணையில் அந்த அரிசியை அறந்தாங்கி பகுதிக்கு கொண்டு செல்வது தெரிந்தது. இதைத்தொடர்ந்து பறிமுதல் செய்யப்பட்ட ரேஷன் அரிசி மூட்டைகளை காரைக்குடியில் உள்ள நுகர்பொருள் வாணிப கழக கிடங்கில் ஒப்படைத்தனர்.

    தொடர் மழை காரணமாக பாலாற்றில் தண்ணீர் ஆர்ப்பரித்து செல்கிறது. இதனால் சிறுவர்கள் உற்சாகமாக குளித்தனர்.
    சிங்கம்புணரி:

    சிவகங்கை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தொடர் மழை பெய்தது. இதனால் அனைத்து நீர்நிலைகளும் வேகமாக நிரம்பி வருகின்றன. திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே கரந்தமலை பகுதியில் இருந்து உருவாகி வரும் பாலாறு, பள்ளபட்டி, மேலப்பட்டி, கிருங்காகேட்டை வழியாக சிங்கம்புணரி வந்து அடைகிறது.

    சிங்கம்புணரியில் இருந்து மட்டிக்கண்மாய் வழியாக ஆ.காளாப்பூர், சிலநீர்பட்டி வழியாக திருப்பத்தூர் பெரிய கண்மாயை சென்றடையும் வகையில் ஆறு அமைக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கடும் மழை காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பாலாற்றில் அதிகப்படியான தண்ணீர் வந்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். சிங்கம்புணரி ஒன்றியத்திற்குட்பட்ட பிரான்மலை, வையாபுரிபட்டி, சிங்கம்புணரி, சிவபுரிபட்டி மட்டிகண்மாய், ஆ.காளாப்பூர், எஸ்.வி.மங்கலம் போன்ற பகுதியில் உள்ள கண்மாய்கள், குளங்கள் அனைத்தும் 90 சதவீதத்துக்கு மேல் நிரம்பின.

    இந்நிலையில் நேற்று மீண்டும் பாலாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அந்த தண்ணீர் சிங்கம்புணரி வழியாக திருப்பத்தூர் நோக்கி சென்றது. இதனால் விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். சிறுவர்கள் தண்ணீரில் துள்ளி குதித்து உற்சாகமாக குளியல் போட்டனர்.
    சிவகங்கை அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த விவகாரத்தில் முதியவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    சிவகங்கை:

    இளையான்குடியை அடுத்த சாலை கிராமம் பிச்சன் குறிச்சியை சேர்ந்தவர் செல்லையா (வயது70). இவர் 9 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தாராம். இதுதொடர்பாக சிறுமியின் தாய் கொடுத்த புகாரின்பேரில் சிவகங்கை அனைத்து மகளிர் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் முத்து மீனாட்சி, சப்-இன்ஸ்பெக்டர் பிரபா ஆகியோர் விசாரணை நடத்தி வழக்குப்பதிவு செய்து செல்லையாவை கைது செய்தனர்.
    காரைக்குடியில் அரசு டவுன் பஸ்களில் பாதுகாப்பான பயணம் மேற்கொள்வது குறித்து பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
    காரைக்குடி:

    காரைக்குடி மற்றும் அதன் சுற்று வட்டார கிராமங்களைச் சேர்ந்த ஏராளமான பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் தினந்தோறும் அந்த வழியாக இயக்கப்படும் அரசு பஸ்களில் பயணம் செய்து காரைக்குடி பகுதிக்கு வந்து படித்து விட்டு மீண்டும் மாலையில் அதே பஸ்சில் சொந்த கிராமத்திற்கு சென்று வருகின்றனர்.

    இந்தநிலையில் காரைக்குடி பகுதியில் கடந்த சில தினங்களாக அரசு டவுன் பஸ்களில் மாணவ, மாணவிகள் கூட்டம் அதிகமாக உள்ளதால் படிக்கட்டுகளில் ஆபத்தான முறையில் தொங்கியபடி மாணவர்கள் பஸ்சில் பயணம் செய்வதாக அடிக்கடி புகார் வந்தது. இதையடுத்து காரைக்குடி வட்டார போக்குவரத்து அலுவலர் ஆனந்த் தலைமையில், சாலை பாதுகாப்பு படை ஒருங்கிணைப்பாளர் பிரகாஷ்மணிமாறன் மற்றும் வட்டார போக்குவரத்து துறை அதிகாரிகள் நேற்று காரைக்குடி பகுதிக்கு வந்து செல்லும் டவுன் பஸ்களை ஆய்வு செய்தனர். மேலும் ஆபத்தான முறையில் பஸ் படிக்கட்டுகளில் தொங்கியபடி சென்றால் ஏற்படும் விபத்துக்கள் குறித்து மாணவர்களுக்கு அறிவுரை வழங்கினர்.

    மேலும் நேற்று காரைக்குடி பழைய பஸ் நிலையத்தில் இருந்து கிராமப்புறங்களுக்கு சென்ற அரசு பஸ்களில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் ஏறுவதற்காக கூட்டமாக வந்தனர். அவர்களை வட்டார போக்குவரத்து அதிகாரிகள், மாணவர்கள் நீண்டவரிசையில் வந்து பஸ்சில் ஏறும்படி அறிவுரை வழங்கினர். மேலும் பஸ்சில் பயணம் செய்யும் மாணவர்கள் கட்டாயமாக முக கவசம் அணியும் படியும், போதிய சமூக இடைவெளியை பின்பற்றவும், ஆபத்தான முறையில் படிக்கட்டுகளில் பயணம் செய்வதை தவிர்க்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு அறிவுரைகளை வழங்கினர்.

    இதுகுறித்து வட்டார போக்குவரத்து அலுவலர் ஆனந்த் கூறியதாவது:- அரசு டவுன் பஸ்களில் மாணவர்கள் இலவச பயணம் மேற்கொண்டு வருகின்றனர். மேலும் ஒரு சில கிராமங்களில் இருந்து காரைக்குடி நகருக்கு ஒரே ஒரு டவுன் பஸ்கள் மட்டும் இயக்கப்படுவதால் அதில் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது. எனவே கூட்டம் அதிகமாக காணப்படும் இடங்களுக்கு கூடுதலாக அரசு டவுன் பஸ்கள் இயக்க போக்குவரத்து துறை அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்துள்ளோம். பஸ்களில் பாதுகாப்பான முறையில் பயணம் செய்வது குறித்து மாணவர்களுக்கு அறிவுரைகளை வழங்கி வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

    சிவகங்கை மாவட்டத்தில் இதுவரை 12 லட்சத்து 25 ஆயிரத்து 701 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டு உள்ளது என்று மாவட்ட கலெக்டர் மதுசூதன் ரெட்டி கூறினார்.
    சிவகங்கை:

    சிவகங்கை பொது சுகாதாரத்துறையின் மூலம் 12-ம் கட்ட மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாம் நடை பெற்றது. சிவகங்கை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற முகாமை மாவட்ட கலெக்டர் மதுசூதன் ரெட்டி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    பின்னர் அவர் கூறியதாவது:-

    சிவகங்கை மாவட்டத்தில் கடந்த ஜனவரி மாதம் 16-ந் தேதி முதல் இதுவரை மொத்தம் 12 லட்சத்து 25 ஆயிரத்து 701 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டு உள்ளது. இதில் 7 லட்சத்து 84 ஆயிரத்து 628 பேர் முதல் தவணை ஊசி போட்டு உள்ளனர். 4 லட்சத்து 41 ஆயிரத்து 73 பேர் 2 தடவை தடுப்பூசியும் போட்டுள்ளனர்.

    கடந்த செப்டம்பர் மாதம் 12-ந்தேதி முதல் நவம்பர் மாதம் 25-ந் தேதி வரை நடைபெற்ற 11 சிறப்பு கொரோனா தடுப்பூசி முகாம்களில் மட்டும் 3,46,781 பேருக்கு தடுப்பூசி செலுத்தப் பட்டு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்

    நிகழ்ச்சியில் சிவகங்கை நகராட்சி ஆணையாளர் பால சுப்பிரமணியன், தாசில்தார் தர்மலிங்கம், சுகாதார ஆய்வாளர் முருகேசன் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
    கண்டனூர் பேரூராட்சி பகுதி சாலையில் மாடுகள் திரிந்தால் உரிமையாளர்களுக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என்று அதிகாரி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
    சிவகங்கை:

    கண்டனூர் பேரூராட்சி செயல் அலுவலர் உமாமகேசுவரன் விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறியுள்ளதாவது:-

    பொதுமக்கள் தங்களுக்கு சொந்தமான மாடுகளை, அவரவர் வீடுகளில் கட்டிவைத்து பராமரிக்குமாறு கேட்டுக் கொள்ளப் படுகிறது.

    பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடை யூறாக சுற்றித் திரியும் கால்நடைகள் கண்டறியப்பட்டால் பேரூராட்சி பணியாளர்கள் மூலம் பாதுகாப்பாக பிடித்து அடைக்கப் படுவதோடு உரிமை யாளர்களுக்கு ரூ.10,000 அபராதம் விதிக்கப்படும். கால்நடைகளை பராமரிப்பதற்கு, பராமரிப்புக் கட்டணமாக நாள் ஒன்றுக்கு ரூ.500 வசூலிக்கப்படும்.

    பேரூராட்சி மூலம் பிடித்து வைக்கப்பட்ட கால்நடைகளை 7 நாட்களுக்குள் அபராதம் செலுத்தி உரிமையாளர்கள் திரும்ப பெற்றுக்கொள்ள வேண்டும். தவறும் பட்சத்தில் மேற்படி கால்நடைகளை புளூகிராஸ் சொசைட்டி அல்லது அருகில் உள்ள கோசாலையில் ஒப்படைக்கப்படும். எனவே, பொதுமக்கள் தங்களுக்கு சொந்தமான கால்நடைகளை வீட்டில் வைத்து பராமரிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
    காரைக்குடி அருகே கொள்ளை வழக்கில் மேலும் 4 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    காரைக்குடி:

    சிவகங்கை மாவட்டம் சாக்கோட்டை போலீஸ் சரகம் கண்டனூரில் கடந்த ஜூலை மாதம் வயதான தம்பதியினரை கட்டிப்போட்டு 45 பவுன் தங்க நகைகள் வைரம் மற்றும் ரொக்கம் கொள்ளை அடிக்கப்பட்டன. இந்த வழக்கில் ஏற்கனவே 8 பேர் கைது செய்யப்பட்டு கொள்ளையடிக்கப்பட்ட பொருட்கள் மீட்கப்பட்டன. இச்சம்பவத்திற்கு உடந்தையாக இருந்த ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த நவீன் (வயது 20) உள்பட 4 பேரை போலீசார் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
    சிங்கம்புணரி உள்வட்டம் பகுதி மற்றும் எஸ்.எஸ். கோட்டை உள்வட்டம் ஆகிய பகுதிகளில் உள்ள 12 வீடுகள் மழையால் சேதம் அடைந்தன.
    சிங்கம்புணரி:

    சிங்கம்புணரி ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதிகளில் நேற்று முன்தினம் மாலை 3 மணிக்கு தொடங்கிய மழை நேற்று காலை வரை கனமழையாக பெய்தது. இதனால் இந்த பகுதிகளில் மழைநீர் ஆங்காங்கே தேங்கி குளம் போல் காட்சி அளித்தது.

    இந்தநிலையில் சிங்கம்புணரி உள்வட்டம் பகுதி மற்றும் எஸ்.எஸ். கோட்டை உள்வட்டம் ஆகிய பகுதிகளில் உள்ள 12 வீடுகள் மழையால் சேதம் அடைந்தன. சிங்கம்புணரி உள் வட்டம் பகுதியில் உள்ள ஆ.காளாப்பூர், மூவன்பட்டி, எஸ்.வி. மங்கலம், மேலப்பட்டி ஆகிய பகுதியில் கனமழைக்கு ஓட்டு வீடுகள், வீட்டின் ஓடுகள், வீட்டின் மண் சுவர்கள் இடிந்து சேதமாகின.

    இதேபோல் எஸ்.எஸ். கோட்டை உள்வட்டம் பகுதியில் மேலையூர், சூரக்குடி, டீ மாம்பட்டி, ஏரியூர், என்.மாம்பட்டி ஆகிய பகுதியில் 6 வீடுகள் சேதமடைந்தன. சிங்கம்புணரி உள்வட்டம் பகுதியில் சேதமடைந்த வீடுகளுக்கு வருவாய் ஆய்வாளர் ராஜா முகமது தலைமையில் கிராம நிர்வாக அலுவலர்கள் சிலம்பரசன், அருண் ஆகியோர் விரைந்து சென்று இடிந்த வீடுகளை ஆய்வு செய்து நிவாரணம் வழங்க அறிக்கை தயார் செய்தனர்.

    அதேபோல் எஸ்.எஸ்.கோட்டை உள் வட்டத்தில் வருவாய் ஆய்வாளர் முரளி தலைமையிலான கிராம நிர்வாக அலுவலர்கள் அந்த பகுதிகளுக்கு விரைந்து சென்று வீடுகளின் சேதம் மதிப்பீடு குறித்து கணக்கெடுக்கும் பணி நடைபெற்றது.
    திருக்காட்டுப்பள்ளி அருகே கோவில் கோபுர கலசங்கள் திருட்டு சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    திருக்காட்டுப்பள்ளி:

    திருக்காட்டுப்பள்ளி அருகே உள்ள விஷ்ணம்பேட்டை கிராமத்தில் பழமை வாய்ந்த செல்லியம்மன்கோவில் உள்ளது. இந்த கோவில் வளாகத்தில் மதுரைவீரன், சப்தகன்னியர் தனி சன்னதியில் உள்ளனர். நேற்று கோவிலுக்கு பக்தர்கள் சென்றபோது கோவிலின் கோபுரத்தில் இருந்த பழமை வாய்ந்த கலசங்கள் திருட்டுப்போய் இருந்தது. செல்லியம்மன் கோவில் மற்றும் அத்துடன் இணைந்த சிறு சன்னதியில் இருந்து மொத்தம் 4 கலசங்கள் திருட்டுப்போயிருந்தது. கோவிலில் கலசங்கள் திருட்டுப்போனது குறித்து கோவில் நிர்வாகி திருக்காட்டுப்பள்ளி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். இதன்பேரில் திருக்காட்டுப்பள்ளி போலீசார் கோபுர கலசங்களை திருடி சென்ற மர்ம நபர்களை தேடி வருகிறார்கள்.
    மறவமங்கலம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
    காளையார்கோவில்:

    மறவமங்கலம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதையடுத்து குண்டாக் குடை மின் பாதையில் உள்ள மறவமங்கலம், சிறியூர், பளுவூர், புல்லுக்கோட்டை, குண்டாக்குடை, ஏரிவயல், சிரமம், நந்தனூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் நாளை ( சனிக் கிழமை) காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் வினியோகம் இருக்காது என மின்வாரிய செயற் பொறியாளர் தெரிவித்துள்ளார்.
    திருவாரூரில் இல்லம் தேடி கல்வி திட்டம் குறித்த விழிப்புணர்வு கலை பிரசாரத்தை கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
    திருவாரூர்:

    பள்ளி கல்வித்துறையின் சார்பில் இல்லம் தேடி கல்வி திட்டம் குறித்த விழிப்புணர்வு கலை பிரசார வாகனத்தை தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி திருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் நடந்தது. நிகழ்ச்சியில் பூண்டி கலைவாணன் எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தார். பிரசார வாகனத்தை மாவட்ட கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    கொரோனா நோய் தொற்று காலத்தில் 1 முதல் 8-ம் வகுப்பு வரை படிக்கின்ற மாணவர்களுக்கு ஏற்பட்ட கற்றல் இழப்பை ஈடுகட்ட பள்ளி கல்வித்துறை இல்லம் தேடி கல்வி எனும் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டம் குறித்து திருவாரூர் மாவட்டத்தில் 10 ஒன்றியங்களிலும் 8 கலைக்குழுவினரை கொண்டு பிரசார வாகனம் மூலம் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்.

    மேலும் பள்ளி நேரங்களை தவிர்த்து மாணவர்களின் வசிப்பிடம் அருகே தன்னார்வலர்களை கொண்டு மாணவர்களுக்கு கற்றல் வாய்ப்பை வழங்குவதற்கும், கற்றல் திறனை மீண்டும் வலுப்படுத்துவதற்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் தன்னார்வலர்களாக செயல்பட விருப்பம் உள்ளவர்கள் http://illamthedikalvitoschool.gov.in என்ற இணையதள முகவரியில் விண்ணப்பிக்கலாம்.

    இவ்வாறு கலெக்டர் கூறினார். நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் சிதம்பரம், மாவட்ட ஊராட்சி தலைவர் தலையாமங்கலம் பாலு, முதன்மை கல்வி அலுவலர் தியாகராஜன், மாவட்ட கல்வி அலுவலர்கள் மணிவண்ணன், பார்த்தசாரதி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    குடவாசல் அருகே அகரஓகை சந்திப்பில் இல்லம் தேடி கல்வி திட்ட விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி நடந்தது. இதை வட்டார கல்வி அலுவலர் இளங்கோவன் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் வட்டார கல்வி அலுவலக ஊழியர்கள் கலா, பூபாலன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
    ×