என் மலர்tooltip icon

    சிவகங்கை

    • காளையார்கோவிலில் மாவட்ட அளவிலான கராத்தே போட்டி நடந்தது.
    • செந்தில்நாதன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்டம் காளையார் கோவில் கிராமத்தில் கியோசி இஷின்ரியூ கராத்தே கோபுடோ அசோசியேஷன் சங்க கூட்ட அமைப்புகள் நடத்தும் மாவட்ட அளவி லான சிறப்பு கராத்தே பயிற்சி மற்றும் போட்டிகள் தனியார் மகாலில் கராத்தே மாஸ்டர் தட்சிணாமூர்த்தி தலைமை தாங்கினார்.

    இந்த போட்டியினை சிவகங்கை அ.தி.மு.க. எம்.எல்.ஏ. செந்தில்நாதன் தொடங்கி வைத்தார். கராத்தே சிறப்பு பயிற்சியாளர் சண்முகவேல், அகில இந்திய கராத்தே சங்க கூட்ட மைப்பு தலைவர் நாக ராஜன், கேரளாவைச் சேர்ந்த டெக்னிசியன் மற்றும் திருநெல்வேலி மாஸ்டர் மணி, தாயிசி மாஸ்டர் கணேசன் கலந்து கொண்டு மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி அளித்தனர்.

    இந்த போட்டியில் அரசு பள்ளி மாணவர்கள் மற்றும் மாவட்டத்தில் இருந்து 17-க்கு மேற்பட்ட பள்ளி களை சேர்ந்த 1000-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர். வெற்றி பெற்றவர்களுக்கு செந்தில்நாதன் எம்.எல்.ஏ. பரிசு வழங்கினார். இதில் ஊராட்சி மன்ற தலைவர் அன்பழகன், உயர்நீதிமன்ற வழக்கறிஞர் செல்லக்கண்ணன், நவநீதன், மாவட்ட பாசறை இணை செயலாளர் சதீஷ், கண்ண தாசன், தகவல் தொழில்நுட்ப பிரிவு கிருஷ்துராஜா, பூமி, அம்மா பேரவை செல்ல சாமி, தே.மு.தி.க. சிவகங்கை மாவட்ட துணை செயலாளர் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டு வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளும் வழங்கினர்.

    • தமிழகம் விளையாட்டு துறையில் சிறந்து விளக்க பல்வேறு திட்டங்களை தமிழக அரசு கொண்டு வருகிறது.
    • கழனிவாசல் பகுதியில் சிறு விளையாட்டு அரங்கம் அமைப்பதற்காக அடிக்கல் நாட்டு விழாவில் அமைச்சர் பெரியகருப்பன் பேசினார்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்டம் காரைக்குடி வட்டத்திற் குட்பட்ட கழனிவாசல் பகுதி யில் ரூ.3 கோடி மதிப்பீட்டில் சிறு விளையாட்டு அரங்கம் அமைப்பதற்கென அடிக்கல் விழா நடந்தது. காணொலி காட்சி வாயிலாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திட்டத்தை தொடங்கி வைத்த னர். அதனை தொடர்ந்து, அமைச்சர் பெரியகருப்பன் கழனிவாசல் பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் குத்து விளக்கேற்றி பேசிய தாவது:-

    முதலமைச்சரால் 2021-2022-ம் ஆண்டின் சட்டப்பேரவை நிதி அறிக்கையின் கீழ் மாநிலம் முழுவதும் விளையாட்டு திறனை விரிவு படுத்துகின்ற வகையில் 234 சட்டமன்ற தொகுதிகளிலும் தலா ரூ.3 கோடி மதிப்பீட்டில் சிறிய விளையாட்டு அரங்கம் அமைக்கப்படும் என்ற அறிவிப்பினை வெளி யிட்டார்கள். அதன்படி, முதற்கட்டமாக 10 சட்டமன்றத் தொகுதிகளில் இன்றைய தினம் அதற்கான அடிக்கல் நாட்டப்பட்டு உள்ளது.சிவகங்கை மாவட்டம் காரைக்குடி வட்டத் திற்குட் பட்ட கழனிவாசல் பகுதியில் சுமார் 9 ஏக்கர் பரப்பளவில் அமையவுள்ள முதலமைச்சர் சிறு விளையாட்டு அரங்கமும் ஒன்றாகும்.

    கடந்த சட்டமன்ற தேர்தலின் போது பொது மக்களுக்கு அளித்த 505 வாக்குறுதிகளில், ஆட்சி பொறுப்பேற்ற கடந்த 2½ ஆண்டுகளில் 85 சதவீத வாக்குறுதிகளை நிறை வேற்றியுள்ளார்கள். சொன் னதை செய்தது மட்டுமன்றி, சொல்லாத பல்வேறு திட்டங்களையும் தமிழகத்தில் முதல்-அமைச்சர் செயல் படுத்தி வருகிறார்.

    கல்வி, சுகாதாரம், தொழில் துறை, வேளாண் வளர்ச்சி உள்ளிட்ட அனைத்திலும் பல்வேறு சிறப்பு திட்டங்களை செயல்படுத்துவது மட்டுமன்றி விளையாட்டு துறையிலும் தேசிய அளவில் தமிழகம் சிறந்து விளங்கிடும் வகையில் அதற்கான கட்டமைப்பு வசதிகள், அனைத்து விளையாட்டு உபகரணங்கள் ஆகியவைகளை ஏற்படுத்தி விளையாட்டு துறையை முதல்-அமைச்சர், விளை யாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் ஊக்குவித்து வருகின்றனர்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இந்நிகழ்ச்சியில், கலெக்டர் ஆஷா அஜித், காரைக்குடி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.மாங்குடி , தேவகோட்டை வருவாய் கோட்டாட்சியர் பால்துரை, மாவட்ட விளை யாட்டு அலுவலர் ரமேஷ் கண்ணன், சங்கராபுரம் ஊராட்சி மன்றத்தலைவர் தேவி மாங்குடி, மாவட்ட ஊராட்சி உறுப்பினர் ராதா பாலசுப்பிரமணியன், ஒன்றிய குழு உறுப்பினர் சொக்க லிங்கம், காரைக்குடி நகர்மன்ற துணைத்தலைவர் குணசேகரன், காரைக்குடி வட்டாட்சியர் தங்கமணி, மாவட்ட கால்பந்து விளையாட்டு கழக தலைவர் ஆனந்த் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • சிவகங்கை அருகே இந்தோ-திபெத் பாதுகாப்பு படை மையத்தில் பயிற்சி நிறைவு அணிவகுப்பு நடந்தது.
    • சிறப்பாக செயல்பட்ட 7 வீரர்களுக்கு அவர்கள் பதக்கங்களை வழங்கி கவுரவித்தனர்.

    சிவகங்கை

    சிவகங்கை அருகே இலுப்பகுடியில் இந்தோ- தீபத் பாதுகாப்பு படை வீரர்கள் பயிற்சி மையம் உள்ளது. இங்கு 44 வாரங்கள் ஆயுத பயிற்சி, துப்பாக்கி சுடுதல், மலை ஏறுதல், நீச்சல் பயிற்சி, யோகா, தற்காப்பு பயிற்சி, பல்வேறு உடன் திறன் பயிற்சி உள்ளிட்ட கடுமை யான பயிற்சிகள் வழங்கப்படுகிறது.

    இங்கு பயிற்சி பெற்ற வீரர்கள் இந்திய எல்லையில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவர். படை எண். 481 முதல் 485 பிரிவை சேர்ந்த 349 வீரர்கள் தங்களின் பயிற்சியினை நிறைவு செய்தனர்.

    இதையடுத்து பயற்சி நிறைவு விழா ஐ.ஜி. அசோக் குமார், டி.ஐ.ஜி. அக்சல் சர்மா ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. வீரர்க ளின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டு பல்வேறு பிரிவு களில் சிறப்பாக செயல் பட்ட 7 வீரர்களுக்கு அவர்கள் பதக்கங்களை வழங்கி கவுரவித்தனர்.

    வீரர்கள் கராத்தே, சிலம்பம் உள்ளிட்ட பல்வேறு வீர சாகசங்களை நிகழ்த்தி காட்டி பார்வையாளர்களை ரசிக்க வைத்தனர்.

    இறுதியாக பயிற்சி நிறைவு செய்த வீரர்கள் தங்கள் உறவினர்களை சந்தித்து ஆசி பெற்றனர்.

    • சிவகங்கையில் வீதிமீறலில் ஈடுபட்ட பஸ்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
    • 2 அரசு பேருந்துகளும், 5 தனியார் பேருந்துகளிலும் அதிக ஒலி எழுப்பும் ஹாரன்கள் பயன்படுத்தப்பட்டது.

    சிவகங்கை

    சிவகங்கை பேருந்து நிலையத்தில் ஆர்.டி.ஒ தலை மையிலான குழுவினர் சோதனை செய்ததில் விதி முறைகளை பின்பற்றாமல் இயக்கப்பட்ட அரசு மற்றும் தனியார் பேருந்து களுக்கு அபராதம் விதித்து நடவடிக்கை எடுக்கப்பட்டது.

    சிவகங்கை பேருந்து நிலையத்திலிருந்து இயக்கப் படும் பேருந்துகளில் அரசு விதிமுறைகளை பின்பற்றா மல் அதிக ஒலி எழுப்பும் ஹாரன்கள் மற்றும் அதிக ஒளி வீசும் விளக்குகள் பயன்படுத்தப்படுவதாக அடிக்கடி புகார் எழுந்தது.

    மேலும் போக்குவரத்து துறை ஆணையர் சார்பில் வாகனங்களை அடிக்கடி போக்குவரத்து துறையினர் கண்காணிக்கவும் உத்தரவிடப்பட்டது. இந்தநிலையில் சிவகங்கை வட்டார போக்கு வரத்து அலுவலர் மூக்கன் மற்றும் ஆய்வாளர் மாணிக் கம் தலைமையிலான குழுவினர் சிவகங்கை பேருந்து நிலையத்தில் ஆய்வு மேற் கொண்டனர்.

    இதில் 2 அரசு பேருந்துகளும், 5 தனியார் பேருந்துகளிலும் அதிக ஒலி எழுப்பும் ஹாரன்கள் மற்றும் அதிக ஒளி வீசும் விளக்குகள் பயன்படுத்தப்பட்டதும் அதே போல் ஓட்டுநர்கள் தங்களது பெயர்கள் பொறிக்கப்பட்ட பேட்ச்கள் அணியாமல் விதிமுறை களை மீறியது தெரியவரவே அவர்களுக்கு ரூ17.500 அபராதம் விதிக்கப்பட்டது.

    • நெற்குப்பையில் சொக்கலிங்க கருப்பர் கோவிலில் கும்பாபிஷேகம் நடந்தது.
    • விழாவிற்கான ஏற்பாடுகளை சொக்காண்டான் பங்காளி வகையறாக்கள் செய்திருந்தனர்.

    திருப்பத்தூர்

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள மேலநெற்குப்பை நவனிக் களம் பகுதியில் அமைந் துள்ள சொக்கலிங்கம் கருப் பர் பொன்னழகி அம்மன் ஆலய கோவில் வீடு 20 வருடங்களுக்குப் பிறகு புனரமைக்கப்பட்டு அதற்கான கும்பாபிஷேக விழா நடைபெற்றது.

    முன்னதாக 2 நாட் கள் கோவில் முன்பாக அமைக்கப்பட்டுள்ள யாக வேள்வியில் மூன்று கால பூஜையாக கணபதி ஹோமம், லட்சுமி ஹோமம், நவக் கிரக ஹோமம் போன்ற பல்வேறு ஹோமங்களோடு பூர்ணாகுதி தீப ஆராதனை நிகழ்ச்சியும் நடத்தப்பட்டது. தொடர்ந்து கலசங்களில் புனித நீர் ஊற்றி வைக்கப்பட்டதை தலையில் சுமந்தவாறு பக்தர்கள் கோவில் வீட்டை வலம் வந்தனர்.

    அதனை தொடர்ந்து கலச நீருடன் கடம் புறப்பாடாகி சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க கும்பத்தில் அபிஷேக நீரை ஊற்றி கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தனர்.

    பின்பு பரிகார தெய்வங்களுக்கும் அபிஷேக நிகழ்ச்சியும் தீப ஆராதனை நிகழ்ச்சியும் நடத்தப்பட்டது. இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை சொக்காண்டான் பங்காளி வகையறாக்கள் செய்திருந்தனர். இவ்விழாவை காண சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து திரளான பொது மக்கள் கலந்து கொண்டனர்.

    • சிவகங்கை மாவட்டம், மகிபாலன்பட்டி ஊராட்சியில் கிராம சபை கூட்டம் நடந்தது.
    • தென்னை மரம் நடுதல் போன்ற பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    திருப்பத்தூர்

    யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற புகழ்பெற்ற பாடலை தந்த கணியன் பூங்குன்றனார் பிறந்த ஊரான "பூங்குன்ற நாடு" என்று அழைக்கப்படும் சிவகங்கை மாவட்டம், மகிபாலன்பட்டி ஊராட்சியில் கிராம சபை கூட்டம் நடந்தது. மன்ற தலைவர் பாஸ்கரன் தலைமை வகித்தார்.

    முன்னதாக ஊராட்சி வரவு செலவு கணக்குகள் கிராம மக்கள் முன்னி லையில் சமர்ப்பிக்கப் பட்டது. அதனைத் தொடர்ந்து நடைபெற்ற கூட்டத்தில் கணியன் பூங்குன்றனாருக்கு திருப்பத் தூர் பொன்னமராவதி செல்லும் சாலையில் மகிபாலன்பட்டி விலக்கு ரோட்டின் முன்பு அவருக்கென்று நினைவு வளைவு ஒன்றை எழுப்புதல், பிறந்த ஊரான இம்மண்ணில் மணிமண்ட பம் ஒன்று அமைத்தல், மேலும் மகிபாலன் பட்டிய லில் இருந்து வேலங்குடி கிராமத்திற்கு செல்லும் வனப்பகுதி பாதையை தார் சாலையாக மாற்றுதல், சமுதாய கூடம் கட்டுதல் போன்ற பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டது.

    கொன்னத்தான்பட்டியில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்திற்கு மன்ற தலைவர் அழகு பாண்டியன் தலைமை வகித்தார். கூட்டத்தில் கொன்னத்தான் பட்டி மற்றும் துவார் ஆகிய இரு ஊராட்சிகளை இணைக்கும் அயிரக்குடி பெரிய கண்மாயிக்கு பருவ மழை காலங்களில் தண்ணீர் வரும் விருசுளி ஆற்றின் வரத்து கால்வாயின் குறுக்கே ஆயகட்டுதாரர்கள் பயன்பெறும் வகையில் புதிய தடுப்பணை கட்டுதல்,சமுதாய கூடம் கட்டுதல், அங்கன்வாடி கட்டிடம் கட்டுதல்,அனைத்துசமுதாயத்தினருக்கான பொது மயான கரையில் தண்ணீர் தொட்டி கட்டுதல், 4 ஏக்கர் பரப்பளவு கொண்ட கொன்னைத்தான் குடிநீர்ஊரணி சுற்றிலும் தடுப்பு வேலி அமைத்து அதன் உள்ளே தென்னை மரம் நடுதல் போன்ற பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    இந்த கூட்டங்களில் ஊராட்சி மன்ற செயலர்கள், வார்டு உறுப்பினர்கள், அங்கன் வாடி பணியா ளர்கள், மகளிர் சுயநிதி குழுக்கள், கிராம பொது மக்கள் மற்றும் பல்வேறு துறை சார்ந்த அரசு அலுவ லர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

    • சிவகங்கையில் மாவட்ட அளவிலான கலைத்திருவிழா தொடங்கியது.
    • வருகிற 21 முதல் 24-ந்தேதி வரை மாநில அளவில் நடைபெற உள்ள போட்டிகளில் பங்குபெறுவார்கள்.

    சிவகங்கை

    சிவகங்கையில் பள்ளி கல்வித்துறை சார்பில் மாவட்ட அளவிலான கலைத்திருவிழா தொடங்கியது. இதில் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள 12 ஒன்றியங்களைச் சேர்ந்த அரசு பள்ளி மாணவ, மாணவிகள் 5500 பேர் பங்கு பெறுகின்றனர். நவம்பர் 3-ந் தேதி வரை மாவட்ட அளவிலான கலைத்திருவிழா போட்டிகள் நடைபெறுகின்றன. வட்டார அளவில் நடந்த கலைப் போட்டிகளில் 12 ஒன்றியங்களைச் சேர்ந்த 54,000 அரசு பள்ளி மாணவர்கள் பங்கு பெற்றனர். இதில் ஒன்றிய அளவில் முதல் 2 இடங்களை பிடிக்கும் மாணவர்களுக்கு மாவட்ட அளவிலான கலைத்திறன் விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்படுகின்றன. இதில் மொத்தம் 188 போட்டிகள் நடைபெற உள்ளன. 6 முதல் 8-ம் வகுப்பு வரை ஒரு பிரிவாகவும், 9-10-ம் வகுப்பு ஒரு பிரிவாகவும், பிளஸ்-1- பிளஸ் டூ மாணவர்கள் ஒரு பிரிவாகவும் பிரிக்கப்பட்டு போட்டிகள் நடத்தப்படுகிறது.

    சிவகங்கை மாவட்டத்தில் புனித ஜஸ்டின் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, புனித ஜஸ்டின் மேல்நிலைப்பள்ளி, புனித மைக்கேல் மேல்நிலைப்பள்ளி, மன்னர் மேல்நிலைப்பள்ளி, அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, மருது பாண்டியர் நகர் ரோஸ்லின் கல்லூரி ஆகிய 7 இடங்களில் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில் நாலுகோட்டை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவ, மாணவிகள் சிறப்பாக கிராமிய நடனமாடி பாராட்டு பெற்றனர்.

    போட்டிகளில் வெற்றி பெறும் மாணவ-மாணவிகள் வரும் 21 முதல் 24-ந்தேதி வரை மாநில அளவில் நடைபெற உள்ள போட்டிகளில் பங்குபெறுவார்கள்.

    • திருப்பத்தூரில் நாளை சிவகங்கை மாவட்ட தி.மு.க. அவசர செயற்குழு கூட்டம் நடைபெறுகிறது.
    • இந்த தகவலை அமைச்சர் பெரியகருப்பன் தெரிவித்துள்ளார்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்ட தி.மு.க. செயலாரும், அமைச்சருமான பெரியகருப்பன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    திருப்பத்தூரில் நாளை (3-ந் தேதி) சிவகங்கை மாவட்ட தி.மு.க அவசர செயற்குழு கூட்டம் தனியார் மண்டபத்தில் நடைபெறுகிறது. இந்த கூட்டத்திற்கு மாவட்ட அவைத்தலைவர் வழக்கறிஞர் கணேசன் தலைமை தாங்குகிறார். கூட்டத்தில் வாக்காளர் பட்டியல் பெயர் நீக்கல், சேர்த்தல் தொடர்பான பணிகள், கழக வளர்ச்சி பணிகள் ஆகியவை குறித்து ஆலோசிக்கப்பட உள்ளது. எனவே இந்த கூட்டத்தில் மாவட்ட நிர்வாகிகள், செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், ஒன்றிய, நகர, பேரூர் நிர்வாகிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள், சார்பு அணி நிர்வாகிகள் தவறாது கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • கூட்டுறவுத்துறை சார்பில் ரூ.15 ஆயிரம் கோடிக்கு மேல் கடனுதவிகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
    • இந்த தகவலை அமைச்சர் பெரியகருப்பன் தெரிவித்துள்ளார்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்டம் கல்லல் அருகே தளக்காவூர் கிராமத்தில் உள்ளாட்சிகள் தினத்தை முன்னிட்டு சிறப்பு கிராம சபை கூட்டம் நடந்தது. ஊராட்சி மன்ற தலைவர் தமிழ்செல்வி தலைமை வகித்தார். கலெக்டர் ஆஷாஅஜித் முன்னிலை வகித்தார். அமைச்சர் பெரியகருப்பன் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். பின்னர் அவர் கூறியதாவது:-

    தளக்காவூர் ஊராட்சியை பொறுத்தவரை மக்களின் வரிப்பணம் ரூ.21,17,000/- தொகை உள்ளது. இது தவிர அரசின் சார்பில் பல்வேறு திட்டங்களின் கீழ் மேம்பாட்டு பணிகளை மேற்கொள்வதற்கென ரூ.3.17 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் கீழ் நடப்பாண்டிற்கென ரூ.5.14 கோடி மதிப்பீட்டில் பல்வேறு கடனுதவிகள் வழங்கிட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதில் பயிர் கடனுதவி, மகளிர் சுய உதவிக்குழு கடனுதவி, கால்நடை பராமரிப்பு கடனுதவி, நகை கடனுதவி, தென்னை மற்றும் வாழை பராமரிப்பு கடனுதவி உள்ளிட்ட பல்வேறு கடனுதவிகள் கூட்டுறவுத்துறையின் சார்பில் வழங்கப் பட்டுள்ளது. இதில் ரூ.2.27 கோடி மதிப்பீட்டில் பல்வேறு கடனுதவியும் தள்ளுபடி செய்யப் பட்டுள்ளது. அதில் 139 நபர்களுக்கு ரூ.7.25 லட்சம் மதிப்பீட்டிலான பயிர் கடனுதவிகள், 63 மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்களை சார்ந்த 789 நபர்களுக்கு ரூ.1.89 கோடி மதிப்பீட்டிலான கடனுதவியும், 105 நபர்களுக்கு ரூ.45 லட்சம் மதிப்பீட்டில் நகை கடனுதவியும் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.

    மேலும் கூட்டுறவுத்துறையின் சார்பில் பல்வேறு கடனுதவிகளை வழங்குவதற்கென கடந்தாண்டு ரூ.12 ஆயிரம் கோடி இலக்கீடு நிர்ணயம் செய்யப்பட்டது.ஆனால் அதையும் தாண்டி தமிழகம் முழுவதும் 13,500 கோடி கடனுதவிகள் வழங்கப்பட்டது.

    இதேபோன்று நடப்பாண்டிலும் தமிழகம் முழுவதும் ரூ.14 ஆயிரம் கோடி வழங்கிட இலக்கீடு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதையும் தாண்டி ரூ.15 ஆயிரம் கோடிக்கு மேல் பல்வேறு கடனுதவிகள் வழங்கிட துறை ரீதியாக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்நிகழ்ச்சியில் கல்லல் ஊராட்சி ஒன்றிய தலைவர் சொர்ணம் அசோகன், மாவட்ட ஊராட்சி துணைத்தலைவர் சரஸ்வதி, உதவி இயக்குநர் (ஊராட்சி கள்) குமார், மாவட்ட ஊராட்சி உறுப்பினர் மஞ்சரி லெட்சுமணன், ஒன்றியக்குழு உறுப்பினர் ஆரோக்கியசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ளதால் பாதுகாப்பான முறையில் நீர் நிலைகளை பயன்படுத்த வேண்டும்.
    • விவசாயிகளுக்கு கலெக்டர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்ட கலெக்டர் அலுவலகக் கூட்டரங்கில் விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம் நடந்ததது. கலெக்டர் ஆஷா அஜீத் தலைமை தாங்கினார். செந்தில்நாதன் எம்.எல்.ஏ., முன்னிலை வகித்தார்.

    இந்த கூட்டத்தில் பி.எம்.கிஷான் உதவித் தொகை, பயிர் காப்பீடு, தரிசு நில திட்டம், கொப்பரை கொள்முதல், சொட்டு நீர் பாசனம், பயிர்களை அழிக்கும் வன விலங்கு களை கட்டுப்படுத்துதல், கால்வாய்களை சீரமைத்தல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக கலெக்டரிடம் விவசாயிகள் கோரிக்கை மனு அளித்தனர்.

    அந்த கோரிக்கைகள் தொடர்பாக எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்த அறிக்கையினை சமர்ப்பிக்கும்படி துறை சார்ந்த அலுவலர்களுக்கு கலெக்டர் அறிவுறுத்தினார்.

    பின்னர் அவர் பேசியதாவது:-

    சிவகங்கை மாவட்டத்தில் உள்ள நீர் நிலையிலுள்ள ஆக்கிர மிப்புக்களை உடன டியாக அகற்றி பயன் பாட்டிற்கு கொண்டு வரவும், விவசாய நிலங் களை வன விலங்குகள் சேதப்படுத்தாமல் பாது காத்திடவும், தேவையான நிலங்களில் தடுப்பணைகள் ஏற்படுத்தி, நிலத்தடி நீர் மட்டத்தினை பாது காத்திடவும், விவசாயிகளின் கோரிக்கை களுக்கிணங்க, மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் துரித நடவ டிக்கைகள் மேற்கொள் ளப்பட்டு வருகிறது.

    விவசாயிகள் அரசின் திட்டங்களின் பயன்களை முழுமையாக பெற்றிடவும், தேவையான சான்றி தழ்களை வழங்கிடவும், துறை சார்ந்த அலுவலர்கள் வாயிலாக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும், வடகிழக்கு பருவமழை தற்போது தொடங்கியுள்ளதால், விவசாயிகள் பாதுகாப்பான முறையில் நீர்நிலைகளை பயன்படுத்த வேண்டும். தங்களது கால்நடைகளையும் பாதுகாப்பான முறையில் பராமரித்துக் கொள்ள வேண்டும். மேலும், மழை யினால் கிடைக்கப்பெறும் நீரினை முறையாக பயன் படுத்தி பயன்பெற வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் மோகனச்சந்திரன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் சிவராமன், வருவாய் கோட்டாட்சியர்கள் சுகிதா (சிவகங்கை), பால் துரை (தேவகோட்டை) உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • மானாமதுரை ஊராட்சி ஒன்றியக்குழு கூட்டம் நடந்தது.
    • கொசுக்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    மானாமதுரை

    சிவகங்கை மாவட்டம், மானாமதுரை ஊராட்சி ஒன்றியக்குழுக் கூட்டம் தலைவர் லதா அண்ணாதுரை தலைமையில் நடைபெற்றது. துணைத்தலைவர் முத்துசாமி, ஒன்றிய ஆணையர் லூயிஸ், மேலாளர் விஜயகுமார், ஒன்றியக் குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

    கூட்டம் தொடங்கியதும் தீர்மானங்கள் வாசிக்கப் பட்டு உறுப்பினர்களின் ஒப்புதல் பெறப்பட்டது. இதைத்தொடர்ந்து நடை பெற்ற விவாதம் வருமாறு:-

    ருக்குமணி: ராஜகம்பீரம் பகுதியில் கழிவுநீர் கால்வாய் களில் கழிவுகள் அகற்றப்ப டாமல் உள்ளது. கொசுக்கள் அதிகமாக உற்பத்தியாகின் றன. கொசுமருந்து அடிக்கி றார்களா என்று தெரியவில்லை. சுகாதாரத்துறை மூலம் கொசுமருந்து அடிப்ப வர்கள் என்னிடம் தெரிவித்தால் எனது வார்டு முழுவ தும் மருந்து அடிக்க வேண் டிய இடங்களை தெரிவிக்கலாம். குடிநீர் பிரச்சனையை யும் தீர்க்க வேண்டும்.

    சோமசுந்தரம்: எனது வார்டுக்கு உட்பட்ட ஆவாரங்காடு கிராமத்தில் நெல்களம் அமைத்துத்தர வேண்டும். கொசுக்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    மலைச்சாமி: சூரக்குளம் ஊராட் சியில் குடிநீர் மேல் நிலைத் தொட்டி சேதமடைந் துள்ளது. இங்கு புதிய குடிநீர் மேல்நிலைத் தொட்டி அமைத்துத்தர வேண்டும்.

    முருகேசன்: கீழப்பசலை அரசுப் பள்ளியில் சுற்றுச்சு வர் இல்லாததால் இரவில் சமூக விரோத செயல்கள் பள்ளி வளாகத்தில் நடைபெறுகின்றன. எனவே பள்ளி யைச் சுற்றி சுற்றுச்சுவர் அமைத்துத் தர வேண்டும்.

    கூட்டத்தில் பேசிய பெரும்பாலான உறுப்பினர் கள் கொசுக்களை கட்டுப்ப டுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர். உறுப்பினர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த ஒன்றிய ஆணையர் லூயிஸ், கழிவுநீர் கால்வாய்களில் தேங்கிய கழிவுகளை வெளி யேற்றவும், கிராமங்கள் முழுவதும் கொசு மருந்து அடிக்கவும் அந்தந்த ஊராட்சி நிர்வாகத்துக்கு அறிவுறுத்தப்படும். மேலும், ஊராட்சி ஒன்றிய நிர்வாகம் மூலம் நேரடியாக செயல்ப டுத்தக்கூடிய பணிகள் செய்து தரப்படும் என்றார்.

    இவ்வாறு விவாதம் நடை பெற்றது.

    • ஆவணங்கள் கைப்பற்றப்பட்ட அறைகளுக்கு சென்னை குற்றப்பிரிவு போலீசார் பூட்டி சீல் வைத்தனர்.
    • விரைவில் அழகப்பன் விசாரணைக்கு அழைக்கப்படுவார் என்று போலீசார் தெரிவித்தனர்.

    காரைக்குடி:

    தமிழ் திரை உலகில் முன்னணி நடிகையாக வலம் வந்த கவுதமி தான் சம்பாதித்த பணத்தில் தமிழகத்தின் பல இடங்களில் நிலம் மற்றும் சொத்துக்களை வாங்கியிருந்தார்.

    இதனை விற்பனை செய்வதற்காக குடும்ப நண்பராக இருந்த சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே உள்ள கோட்டையூரை சேர்ந்த தொழிலதிபர் அழகப்பன் என்பவருக்கு கவுதமி பவர் பத்திரம் மூலம் அதிகாரம் கொடுத்ததாக தெரிகிறது.

    ஆனால் அழகப்பன் கவுதமியின் சொத்துக்களை விற்று அதற்குரிய பணத்தை முழுமையாக தராமல் பல கோடி ரூபாய் வரை மோசடி செய்ததாக கூறப்படுகிறது. மேலும் கவுதமி சொத்துக்களின் ஆவணங்களை முறைகேடு செய்து வேறு பெயருக்கு மாற்றி விட்டதாகவும் புகார் எழுந்தது.

    இதன் மூலம் தன்னை ஏமாற்றி பல கோடிக்கணக்கான ரூபாய் மோசடி நடந்திருப்பதாக கவுதமி சென்னை மாநகர மத்திய குற்றப்புலனாய்வு போலீசில் புகார் செய்திருந்தார். அதன் அடிப்படையில் காரைக்குடியைச் சேர்ந்த தொழிலதிபர் அழகப்பன் உட்பட 5 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

    இந்தநிலையில் சொத்து மோசடி தொடர்பாக விசாரிக்க சென்னை குற்றப் புலனாய்வு பிரிவு உதவி கமிஷன் ஜான் விக்டர் தலைமையிலான போலீசார் நேற்று காரைக்குடி வந்தனர். கோட்டையூருக்கு சென்ற அவர்கள் அழகப்பனுக்கு சொந்தமான வீட்டில் அதிரடியாக சோதனை நடத்தினர். வருவாய்த்துறை அதிகாரிகள் உதவியுடன் இந்த விசாரணை மற்றும் சோதனை நடந்தது. அப்போது அழகப்பனின் குடும்ப உறுப்பினர்களிடமும் தீவிர விசாரணை நடத்தப்பட்டது.

    வீட்டில் கவுதமியின் சொத்து சம்பந்தப்பட்ட ஆவணங்கள் ஏதேனும் இருக்கிறதா? என சல்லடை போட்டு போலீசார் சோதனை மேற்கொண்ட னர். இதனை வீடியோவாகவும் பதிவு செய்தனர். மதியம் தொடங்கிய இந்த சோதனை நள்ளிரவையும் தாண்டி விடிய விடிய நடந்தது. இதில் மோசடி தொடர்பாக சில முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.

    காரைக்குடியில் தொழிலதிபர் அழகப்பன் வீட்டில் போலீசார் சோதனை நடத்தியதை காணலாம்

    காரைக்குடியில் தொழிலதிபர் அழகப்பன் வீட்டில் போலீசார் சோதனை நடத்தியதை காணலாம்

     இன்று அதிகாலை வீட்டிலிருந்து கைப்பற்றிய சில ஆவணங்களுடன் போலீசார் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர். மேலும் ஆவணங்கள் கைப்பற்றப்பட்ட அறைகளுக்கு சென்னை குற்றப்பிரிவு போலீசார் பூட்டி சீல் வைத்தனர். விரைவில் அழகப்பன் விசாரணைக்கு அழைக்கப்படுவார் என்று போலீசார் தெரிவித்தனர்.

    பல வருடங்களாக பாரதிய ஜனதாவில் இருந்த நடிகை கவுதமி இந்த மோசடி புகார் விவகாரத்தில் அதிருப்தி அடைந்து அக்கட்சியை விட்டு விலகினார் என்பது குறிப்பிடத்தக்கது. 

    ×