என் மலர்
சிவகங்கை
- சிவகங்கை கலெக்டர் அலுவலக வளாகத்தில் இ-சேவை ஊழியர்கள் தனியார் மையங்களை பரிந்துரை செய்கின்றனர்.
- நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.
சிவகங்கை
சிவகங்கை மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் அரசு இ-சேவை மையம் செயல்பட்டு வருகிறது.
இங்கு சிவகங்கையை சேர்ந்த வடிவேல் முருகன் என்ற ஆட்டோ டிரைவர் தனது குழந்தையை பள்ளியில் சேர்ப்பதற்காக இருப்பிட சான்றிதழ் கோரி விண்ணப்பம் செய்தார்.
இதற்காக பலமுறை கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள இந்த இ-சேவை மையத்திற்கு வந்ததாகவும், அங்கு கருவி வேலை செய்யவில்லை என்றும், மின்சாரம் தடை செய்யப்பட்டுள்ளது என்றும் பல்வேறு காரணங்களை கூறி சேவை மைய ஊழியர், தனியார் மையங்களுக்கு சென்று விண்ணப்பிக்குமாறு தெரிவித்தாராம்.
இதுகுறித்து ஆட்டோ டிரைவர் கூறுகையில், அன்றாடம் ஆட்டோ ஓட்டி பிழைப்பு நடத்தும் நான் தனியார் மையங்களில் அதிக பணம் கொடுத்து குழந்தைக்கு சான்றிதழ் பெறுவது கடினமான செயல் என்று வருத்தம் தெரிவித்தார்.
இதுபோன்று அரசு இ-சேவை மையங்களில் குறைகள் இருப்பின் அதனை உடனடியாக சரி செய்ய வேண்டும். அப்படி இல்லாமல் இ-சேவை ஊழியர்கள் தனியார் மையங்களை பரிந்துரை செய்கிறார்கள் என்றால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.ஊழியர்கள், பரிந்துரை, E-service, private
- இளையான்குடி அரசு பள்ளியில் மேலாண்மை குழு கூட்டம் நடந்தது.
- இலவசமாக சிலம்ப பயிற்சிக்கான ஏற்பாடுகளை செய்து தருவதாக பேரூராட்சி தலைவர் கூறினார்.
மானாமதுரை
சிவகங்கை மாவட்டம் இளையான்குடி பேரூராட்சியில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பள்ளி மேலாண்மை குழு மறு சீரமைப்பு கூட்டம் நடந்தது. இதில் பேரூராட்சி தலைவர் செய்யது ஜமீமா கலந்து கொண்டு ஆசிரியர், பெற்றோருக்கு இடையேயான கடமைகளை எடுத்துரைத்தார்.
இந்த பள்ளியில் இலவசமாக சிலம்ப பயிற்சி மேற்கொள்வதற்கான ஏற்பாடுகளை செய்து தருவதாக கூறிய பேரூராட்சி தலைவருக்கு தலைமை ஆசிரியர் நன்றி தெரிவித்தார். இதில் மாணவிகள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.
- சிங்கம்புணரி அருகே உள்ள முறையூர் மீனாட்சி-சுந்தரேசுவரர் திருக்கல்யாண வைபவம் நடந்தது.
- விழாவில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் கலந்துகொண்டு சுவாமியையும் அம்பாளையும் தரிசித்தனர்.
சிங்கம்புணரி
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே உள்ள முறையூர் மீனாட்சி- சுந்தரேசுவரர் கோவிலில் ஆனி தேரோட்ட விழா கடந்த வாரம் 3-ந் தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. 8-ம் நாளான நேற்று மீனாட்சி-சொக்கநாதருக்கு திருக்கல்யாண வைபவம் நடந்தது.
சிவகங்கை சமஸ்தானம் தேவஸ்தானத்திற்கு உட்பட்ட சுமார் 800 ஆண்டுகள் பழமையான இந்த கோவில் மிகுந்த சிறப்புற்றதாகும். மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு அடுத்தபடியாக போற்றப்படும் இந்த ஆலயத்தில் ஆனி திருமஞ்சன தேரோட்ட விழா சிறப்பு வாய்ந்ததாகும்.
குறிப்பாக 8-ம் நாளான நேற்று சுவாமிக்கும், அம்பாளுக்கும் திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது. திருக்கல்யாண மேடைக்கு எழுந்தருளிய விநாயகர், முருகன், சண்டிகேசுவரர், மீனாட்சி, பிரியாவிடையுடன் சொக்கநாதர் ஆகியோர் எழுந்தருளினர்.
பக்தர்கள் திருக்கல்யாண சீர் கொண்டு வந்து சமர்ப்பித்தனர்.
அதன்பின் திருக்கல்யாண வைபவங்கள் தொடங்கின. மங்கள நாணுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்று பட்டாச்சாரியார்கள் மாலை மாற்றுதல், திருமாங்கல்ய தாரணம் உள்ளிட்ட நிகழ்வுடன் திருக்கல்யாணத்தை நடத்தி வைத்தனர்.
சுமார் 2 ஆண்டுகளுக்குப் பின் நடந்த இந்த விழாவில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் கலந்துகொண்டு சுவாமியையும் அம்பாளையும் தரிசித்தனர்.
நள்ளிரவு வரை நீடித்த இந்த நிகழ்வில் பொதுமக்களும், பக்தர்களும் கலந்துகொண்டு வழிபாடு செய்தனர். விழா ஏற்பாடுகளை கோவில் பட்டாச்சாரியார், பரம்பரை பட்டாச்சாரியார் சுரேஷ் குருக்கள் செய்திருந்தனர்.
- திருப்பத்தூரில் பக்ரீத் பண்டிகை சிறப்பு தொழுகை செய்தனர்.
- ஆண்கள், குழந்தைகள் உள்ளிட்ட ஏராளமானோர் சிறப்பு தொழுகையில் பங்கேற்று ஒருவரை ஒருவர் கட்டித்தழுவி வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர்.
திருப்பத்தூர்
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் பக்ரீத் பண்டிகை இன்று கொண்டாடப்பட்டது. திருப்பத்தூர் பகுதிகளைச் சேர்ந்த முஸ்லிம்கள் புத்தாடை அணிந்து பெரிய பள்ளிவாசலுக்கு வந்தனர். பின்பு அங்கிருந்து நடை பயணமாக அச்சுக்கட்டு ஈத்கா மைதானத்தை வந்தடைந்தனர். அங்கு ஆயிரத்திற்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் சிறப்பு தொழுகை நடத்தினர்.
சிவகங்கை மாவட்ட அரசு டவுன் ஹாஜி முகமது பாரூக் ஆலிம் தலைமையில் இந்த தொழுகை நடைபெற்றது. ஆண்கள், குழந்தைகள் உள்ளிட்ட ஏராளமானோர் சிறப்பு தொழுகையில் பங்கேற்று ஒருவரை ஒருவர் கட்டித்தழுவி வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர்.
பாதுகாப்பு ஏற்பாடுகளை திருப்பத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுந்தரமகாலிங்கம் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
- மீன் கடைகளை அகற்றுவதை எதிர்த்து வியாபாரிகள் போராட்டம் நடைபெற்றது.
- அனுமதி இன்றி வீதிகளில் செயல்படும் மீன் கடைகளை அகற்ற 10 நாட்கள் அவகாசம் அளிக்கப்பட்டது.
சிவகங்கை
சிவகங்கை நகராட்சிக்கு உட்பட்ட உழவர் சந்தை, 48 காலனி, ெரயில்வே பீடர் ரோடு, மீன் மார்க்கெட் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சாலை ஓரங்களில் மீன்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனால் அந்த பகுதிகளில் துர்நாற்றம் வீசுவதுடன், போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாக காவல்துறைக்கும், நகராட்சி அலுவலகத்திற்க்கும் புகார்கள் வந்தன.
இதனை அடுத்து சிவகங்கை நகர் மன்ற தலைவர் ஆனந்த் மற்றும் நகராட்சி அலுவலர்கள் சிவகங்கை வீதிகளில் அனுமதியின்றி செயல்படும் மீன் கடைகளை அகற்ற உத்தரவிட்டனர். நகராட்சி பணியாளர்கள் வீதிகளில் செயல்படும் மீன்கடைகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மீன் வியாபாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்த நகராட்சி தலைவர் ஆனந்த் சம்பவ இடத்திற்கு வந்து மீன் வியாபாரிகளிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். இதனைத் தொடர்ந்து அனுமதி இன்றி வீதிகளில் செயல்படும் மீன் கடைகளை அகற்ற 10 நாட்கள் அவகாசம் அளிக்கப்பட்டது. வரும் காலங்களில் சிவகங்கை நகராட்சிக்கு உட்பட்ட மீன் மார்க்கெட்டில் மட்டுமே மீன் கடைகள் செயல்படும் என நகரசபை தலைவர் தெரிவித்தார்.
- தேவகோட்டை வட்டத்தில் வருகிற 13-ந் தேதி மக்கள் தொடர்பு முகாம் நடக்கிறது.
- தகுதிவாய்ந்த பயனாளிகளை பயன்பெறச் செய்வதே இந்த மக்கள் தொடர்பு முகாமின் நோக்கமாகும்.
சிவகங்கை
சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை வட்டம், கண்ணங்குடி உள்வட்டம், கண்டியூர் கிராமத்தில் வருகிற 13-ந் தேதி (புதன்கிழமை) காலை 10 மணியளவில் மக்கள் தொடர்பு முகாம் நடைபெற உள்ளது.
இதில் அரசுத்துறை அலுவலர்களை ஒருங்கிணைத்து அரசின் திட்டங்களை துறை சார்ந்த முதன்மை அலுவலர்களைக் கொண்டு, பொதுமக்களுக்கு எடுத்துரைத்து, தகுதிவாய்ந்த பயனாளிகளை பயன்பெறச் செய்வதே இந்த மக்கள் தொடர்பு முகாமின் நோக்கமாகும். எனவே, கண்டியூர் கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் முகாமில் கலந்து கொண்டு, அரசின் திட்டங்களை பெறுவதற்கான வழிமுறைகளை அறிந்து கொண்டு பயன்பெறலாம். மேற்கண்ட தகவலை சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதன் ரெட்டி தெரிவித்துள்ளார்.
- தென்மாபட்டு ஆதினமிளகி அய்யனார் கோவிலில் சேங்காய் வெட்டும் நிகழ்ச்சி நடந்தது.
- விழாவிற்கான ஏற்பாடுகளை கிராம நிர்வாகிகள் செய்துள்ளனர்.
சிவகங்கை
சிவகங்கை மாவட்டம் திருப்புத்தூர் தென்மாபட்டில் ஆதின மிளகி அய்யனார் கோவில் புரவி எடுப்பு திருவிழாவை முன்னிட்டு கடந்த 1-ந் தேதி பிடிமண் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. 2-ம் திருவிழாவாக நேற்று (8-ந் தேதி) சேங்காய் வெட்டும் நிகழ்ச்சி நடந்தது.
தென்மாபட்டு சவுக்கையில் இருந்து அக்கசாலை விநாயகரை தரிசனம் செய்து, அதனைத் தொடர்ந்து ஆதின மிளகி அய்யனார் கோவிலில் பூஜை செய்து கிராமத்தினர் முன்னிலையில் சேங்காய் ஊரணியில் சேங்காய் வெட்டும் நிகழ்ச்சி நடந்தது. வருகிற 15-ந் தேதி புதுப்பட்டியில் இருந்து தென்மாப்பட்டுக்கு புரவி எடுத்து வரும் நிகழ்ச்சியும், 16-ந் தேதி புரவிகளை அய்யனார் கோவில் வாசலில் கொண்டு வரும் நிகழ்ச்சியும், 17-ந் தேதி மஞ்சுவிரட்டு நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.
விழாவிற்கான ஏற்பாடுகளை கிராம நிர்வாகிகள் செய்துள்ளனர்.
- மேலூர்- காரைக்குடி 4 வழிச்சாலை பணிகளை குறித்த காலத்தில் முடிக்க வேண்டும் என சிவகங்கை கலெக்டர் அறிவுறுத்தியுள்ளார்.
- ஆய்வின் போது தேசிய நெடுஞ்சாலைத்துறை மதுரை மண்டல திட்ட இயக்குநர் நாகராஜன் உட்பட துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
சிவகங்கை
சிவகங்கை மாவட்டத்தில் மேலூர் - காரைக்குடி 4 வழிச்சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
காட்டாம்பூர், திருப்பத்தூர் சந்திப்புச்சாலை, கொளிஞ்சிப்பட்டி, பட்டமங்கலம் சாலை, கும்மங்குடி- தென்கரை சந்திப்பு சாலை, சுரண்டை கண்மாய், பிள்ளையார்பட்டி, குன்றக்குடி ஆகிய இடங்களை சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதன் ரெட்டி பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் அவர் கூறியதாவது:-
தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணையத்தின் மூலம் மேலூர்- காரைக்குடி வரை 45.855 கிலோ மீட்டர் நீளம் உள்ள சாலை அமைக்கப்பட்டு வருகிறது. மதுரை மாவட்டத்தில் 13.52 கிலோ மீட்டர் நீளம் சாலை அமைக்கும் பணியும், சிவகங்கை மாவட்டத்தில் நைனார்பட்டி முதல் மானகிரி துக்கானேந்தல் வரை 32.33 கிலோ மீட்டர் சாலையும் ரூ.659.03 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டு வருகிறது. 6 மீட்டர் நீளமுள்ள சிறு பாலங்கள் 51-ம், 5 மீட்டர் நீளமுள்ள சிறு பாலங்கள் 16-ம், வாகனங்கள் சாலையின் அடியில் செல்லும் வகையான பாலங்கள் 14-ம், பெரிய பாலம் 9-ம், மேம்பாலம் 1-ம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
சிவகங்கை மாவட்டத்தில் 29 கிலோ மீட்டர் நீளத்திற்கு சாலை சுத்தப்படுத்தும் பணி நிறைவு பெற்றுள்ளது. 16.7 கிலோ மீட்டர் நீளத்திற்கு முதற்கட்ட மண் பரப்பும் பணியும், 13.3 கிலோ மீட்டர் நீளத்திற்கு 2-ம் கட்ட மேல்மண் பரப்பும் பணியும், 10.7 கிலோ மீட்டர் நீளத்திற்கு முதற்கட்ட ஜல்லிக்கற்கள் பரப்பும் பணியும், 8.5 கிலோ மீட்டர் நீளத்திற்கு இறுதிகட்ட ஜல்லிக்கற்கள் பரப்பும் பணியும் முடிந்துள்ளது. 7 கிலோ மீட்டர் நீளத்திற்கு தார்ச்சாலை போடப்பட்டுள்ளது.மொத்தமாக 24 சதவிகிதப் பணிகள் நிறைவு பெற்றுள்ளன.
இந்த பணிகளை நிர்ணயித்துள்ள காலத்திற்குள் முடிக்க திறன்மிக்க பணியாளர்களை கூடுதலாக பணியமர்த்தி விரைந்து முடிக்க அலுவலர்களுக்கு அறிவுரை மற்றும் ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
ஆய்வின் போது தேசிய நெடுஞ்சாலைத்துறை மதுரை மண்டல திட்ட இயக்குநர் நாகராஜன் உட்பட துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
- வீட்டிற்குள் சென்ற பாம்பை தடுக்க முயன்ற நாய் பலியானது.
- நாய் செவலைக்கு இறுதி மரியாதை செலுத்தி வீட்டின் பின்புறமே புதைத்தனர்.
சிவகங்கை
சிவகங்கை மாவட்டம், ஒக்கூர் அருகே கீழப்பூங்குடி கிராமம் உள்ளது. இங்கு வசித்து வருபவர் சரவணன். இவர் செவலை நாய் உள்பட 4 நாய்களை வளர்த்து வருகிறார்.
இந்நிலையில் நேற்று மாலை வீட்டின் முன்பு குழந்தைகள் விளையாடிக்கொண்டிருந்தனர்.
அப்போது நல்லபாம்பு ஒன்று வீட்டிற்குள் புகுந்துள்ளது. இதனை கண்ட செவலை நாய் முதலில் குரைத்து பாம்பை விரட்ட முயன்றுள்ளது. ஆனால் பாம்பு வெளியே செல்லாததால் அதன் மீது பாய்ந்து கடித்துள்ளது. இதில் பாம்பு கடித்ததில் நாய் மயங்கி விழுந்தது. இதனை கண்ட குழந்தைகள் கூச்சலிடவே பெரியவர்கள் வந்து நாய் செவலையை அருகில் இருந்த கால்நடை மருத்துவமனைக்கு கொண்டு செய்தனர்.அப்போது நாய் இறந்த விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தார்.
வீட்டில்புகுந்த பாம்பை தடுக்க முயன்று உயிர் தியாகம் செய்த செவலை நாயை கண்டு சரவணன் குடும்பத்தினர் அழுதனர். பின்னர் அவர்கள், நாய் செவலைக்கு இறுதி மரியாதை செலுத்தி வீட்டின் பின்புறமே புதைத்தனர்.
- பெரிச்சி கோவில் திருவிழாவில் மஞ்சுவிரட்டு நடைபெற்றது.
- மஞ்சுவிரட்டுக்கான பாதுகாப்பு பணியில் திருக்கோஷ்டியூர் போலீசார் ஈடுபட்டனர்.
சிவகங்கை
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே பெரிச்சி கோவில் ஊராட்சியில் சிவகங்கை சமஸ்தானத்திற்கு சொந்தமானசுகந்தனே ஸ்வரர் என்ற ஆண்ட பிள்ளை நாயனார், சமீப வள்ளியம்மாள், ஸ்ரீ காசி வைரவர் கோவிலில் கும்பாபிஷேக திருப்பணி பாலாலயம் மற்றும் பால்குட திருவிழாவை முன்னிட்டு பாரம்பரியமிக்க மஞ்சுவிரட்டு நடைபெற்றது.
இதில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து நூற்றுக்கணக்கான காளைகள் கொண்டு வரப்பட்டு கண்மாய் மற்றும் அதனைச் சுற்றியுள்ள வயல்வெளி பகுதிகளில் ஒன்றன்பின் ஒன்றாக காளைகள் அவிழ்த்து விடப்பட்டன.சீறிப்பாய்ந்த காளைகளை மாடுபிடி வீரர்கள் அடக்க முற்பட்டனர்.
மேலும் மஞ்சுவிரட்டு காண வந்த விருந்தினர்களுக்கு அனைத்து வீடுகளிலும் கறி விருந்துடன் கூடிய விருந்து நடைபெற்றது.
மஞ்சுவிரட்டை காண கள்ளிப்பட்டு, வெளியாறி,தெற்கு நைனார்பட்டி,ஊடனேந்தல் பட்டி, கொங்கரன்பட்டி ஆகிய பகுதிகளில் இருந்தும் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்தும் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.
இந்த மஞ்சுவிரட்டுக்கான ஏற்பாடுகளை ஊராட்சி மன்ற தலைவர் இளம் பருதி என்ற வைரமணி, தான கருணம், வைரவன் பிள்ளை, கோட்டைச்சாமி, மற்றும் கிராம பொதுமக்கள் ஆகியோர் செய்துஇருந்தனர்.
மஞ்சுவிரட்டுக்கான பாதுகாப்பு பணியில் திருக்கோஷ்டியூர் போலீசார் ஈடுபட்டனர்.
- ஜூனியர் பேட்மிண்டன் போட்டியில் செட்டிநாடு அணிக்கு சாம்பியன் பட்டம் கிடைத்தது.
- இந்தியா நிறுவனத்திற்கும் பயிற்சியாளர்கள் ஒலிவியா சரவணன் மற்றும் நவீன், செட்டிநாடு சேம்ப்ஸ் அணி வீரர், வீராங்கனைகளுக்கும் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
காரைக்குடி
தமிழ்நாடு பேட்மின்டன் சங்கம், வி.எக்ஸ்போ இந்தியா இணைந்து ஜூனியர் பேட்மின்டன் லீக் போட்டிகளை சென்னை நேரு விளையாட்டு அரங்கில் நடத்தியது.சர்வதேச தரத்தில் நடந்த இந்த போட்டியில் சென்னை சிட்டி கிங்ஸ்டர்ஸ், திருச்சி ராக்போர்ட் ராக்கர்ஸ், திருவள்ளுவர் வீராஸ், கோவை சூப்பர் கிங்ஸ், செட்டிநாடு சேம்ப்ஸ், திருப்பூர் வாரியர்ஸ், காஞ்சி எஸ்பார்க்ஸ் ஏசஸ், தஞ்சை தலைவாஸ் என 8 அணிகள் பங்கேற்றன.
13 வயதில் இருந்து 19 வயது உட்பட்ட சிறுவர்-சிறுமியர்களுக்கான ஒற்றையர், இரட்டையர் மற்றும் கலப்பு இரட்டையர் பிரிவுகளாக போட்டிகள் நடத்தப்பட்டன.இறுதி போட்டிக்கு காரைக்குடி செட்டிநாடு சேம்ப்ஸ் அணியம்,திருப்பூர் வாரியர்ஸ் அணியும் தகுதி பெற்றன.விறுவிறுப்பாக நடந்த இந்த போட்டியில் செட்டிநாடு சேம்ப்ஸ் அணி அபார வெற்றி பெற்று கோப்பையை தட்டிச் சென்றது.
வெற்றி வாகை சூடிய செட்டிநாடு சேம்ப்ஸ் அணியின் உரிமையாளர் டாக்டர் லெனின் முத்துராஜ் கூறுகையில், லீக் போட்டியில் ஆரம்பம் முதலே செட்டிநாடு சேம்ப்ஸ் அணியின் வீரர்-வீராங்கனைகள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இறுதி போட்டியில் கோப்பையை வென்றது மகிழ்ச்சி அளிக்கிறது என்றார்.
செட்டிநாடு பப்ளிக் பள்ளியின் மாணவி சானியா சிக்கந்தர் இரட்டை யர் பிரிவில் அபாரமாக விளையாடி வெற்றி பெற்றார். செட்டிநாடு சேம்ப்ஸ்சின் ஸ்பான்சர்களான செட்டிநாடு பப்ளிக் பள்ளியின் தாளாளர் குமரேசனுக்கும், போட்டியை திறம்பட நடத்திய தமிழ்நாடு பேட்மிட்டன் சங்கம் மற்றும் வி.எக்ஸ்போ இந்தியா நிறுவனத்திற்கும் பயிற்சியாளர்கள் ஒலிவியா சரவணன் மற்றும் நவீன், செட்டிநாடு சேம்ப்ஸ் அணி வீரர், வீராங்கனைகளுக்கும் பாராட்டு தெரிவிக்கப்பட்டது. இந்த பள்ளியின் 10-ம் வகுப்பு மாணவன் அஸ்வின் லெனின் காஞ்சிபுரம் ஸ்பார்க்ஸ் அணியில் இடம்பெற்று விளையாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.
- உயர்கல்வி கற்பது குறித்து வாரந்தோறும் சிறப்பு வகுப்புகள் நடத்த பள்ளி ஆசிரியா்களுக்கு கலெக்டர் அறிவுறுத்தல்.
- மாவட்ட கல்வி அலுவலர் பாலதிரிபுரசுந்தரி, உதவித்திட்ட அலுவலர் சீத்தாலட்சுமி, தலையாசிரியர் கலாநிதி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
சிவகங்கை
சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாவட்ட கலெக்டர் மதுசூதன் ரெட்டி ஆய்வு செய்தார்.
அங்குள்ள வகுப்பறை, சமையற்கூடம், தொழிற்பயிற்சி கூடம், ஆய்வகக்கூடம், பணியாளர்கள் அறை, பதிவறை போன்றவற்றை பார்வையிட்டு, மாணவர்களுக்கு தயாரிக்கப்பட்ட உணவை சாப்பிட்டு பரிசோதனை செய்தார். பின்னர் மாணவ-மாணவிகளை சந்தித்து கலந்துரையாடினார்.
இந்த ஆய்வின்போது கலெக்டர் மதுசூதன்ரெட்டி கூறியதாவது:-
பள்ளிப்படிப்பை முடித்து உயர்கல்வி பாடங்களில் சேரும் தருணத்தில் மதிப்பெண் அடிப்படையில் சிறந்த கல்வி நிலையங்களில் படிப்பதற்கான வாய்ப்பு ஏற்படுகிறது. ஆசிரியர்கள் நடத்தும் பாடங்கள் சரியாக புரியவில்லை என்றால் மீண்டும் அதற்குரிய விளக்கத்தை கேட்டு அறிந்து புரிந்து படிக்க வேண்டும். பாடங்களை மனப்பாடம் செய்வது நீண்ட நாட்களுக்கு பயன்படாது. சிவகங்கை மாவட்டத்தில் மருத்துவப் படிப்பில் சேருவதற்காக நீட் பயிற்சி வகுப்பு நடத்தப்பட்டு வருகிறது. தேர்வு காலங்களில் மட்டுமே படிப்பது என்ற எண்ணத்தை தவிர்த்து தினந்தோறும் பாடங்களை படிக்க வேண்டும். மாணவர்கள் படிக்க விரும்பும் பட்டப்படிப்பினை திட்டமிட்டு விடாமுயற்சியுடன் கல்வி கற்கும் பட்சத்தில் வெற்றி எளிதாகும்.
அரசுப்பள்ளிகளில் பயிற்றுவிக்கும் ஆசிரியர்கள் சிறந்த முறையில் தேர்வு செய்யப்பட்டு பணியாற்றி வருகிறார்கள். அவர்களது திறமையினை மாணவர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
ஆசிரியர்கள் பிளஸ்-2 மாணவர்களுக்கு ஐ.ஐ.டி., என்.ஐ.டி., மருத்துவம், பொறியியல் மற்றும் பிற கல்லூரிகளில் உள்ள பாடத்திட்டங்கள் குறித்து விளக்கம் அளிக்க வேண்டும். ஒரு பாடத்தில் உள்ள உயர்கல்வி என்ன என்பது குறித்தும், சிறந்த கல்வி நிலையங்கள் உள்ள இடங்கள் குறித்தும், மாணவர்கள் அறியும் வகையில் வாரத்திற்கு 20 நிமிடம் முதல் 30 நிமிடங்கள் வரை சிறப்பு பயிற்சி வகுப்புகள் நடத்த வேண்டும்.
ஒவ்வொரு மாணவர்களுக்கும் அவர்களது வீட்டுச்சூழ்நிலை வேறுபடும். ஆகையால் ஆசிரியர்கள் அனைவ ரையும் அர வணைத்து புரியும்படியான பாடத்திட்டங்களை தொகுத்து வழங்க வேண்டும்.இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இந்த நிகழ்வில் மாவட்ட கல்வி அலுவலர் பாலதிரிபுரசுந்தரி, உதவித்திட்ட அலுவலர் சீத்தாலட்சுமி, தலையாசிரியர் கலாநிதி உட்பட பலர் கலந்து கொண்டனர்.






