என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    சிவகங்கையில் கோவில் விழாவில் ஓட ஓட விரட்டி ரவுடி வெட்டிக்கொலை
    X

    சிவகங்கையில் கோவில் விழாவில் ஓட ஓட விரட்டி ரவுடி வெட்டிக்கொலை

    • சிவகங்கை அருகே உள்ள வைரவன்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் பண்ணமுத்து மகன் பரமசிவம் (வயது 30).
    • கோவில் விழாவில் ரவுடி வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் சிவகங்கை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    சிவகங்கை:

    சிவகங்கை அருகே உள்ள வைரவன்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் பண்ணமுத்து மகன் பரமசிவம் (வயது 30). தச்சு தொழிலாளியான இவர் சிவகங்கை காளவாசல் பகுதியில் வசித்து வந்தார்.

    பரமசிவம் மீது கொலை, அடிதடி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன. இதனால் ரவுடிகள் பட்டியலில் உள்ளார். கடந்த 4 மாதங்களுக்கு முன்பு சிவகங்கையில் நடந்த பா.ஜனதா பிரமுகர் முத்துப்பாண்டி கொலை வழக்கிலும் இவருக்கு தொடர்பு இருந்தது.

    அந்த வழக்கில் கைது செய்யப்பட்டிருந்த பரமசிவம் ஜாமீனில் வெளியே வந்தார். இந்த நிலையில் சிவகங்கை பிள்ளைவயல் காளியம்மன் கோவில் பூச்செரிதல் விழா நேற்று நடந்தது. மிகவும் பிரசித்தி பெற்ற இந்த விழாவை முன்னிட்டு அந்தப்பகுதியில் ஏராளமான இடங்களில் ஆடல், பாடல் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

    காளவாசல் பகுதியிலும் கலை நிகழ்ச்சிகள் நடந்தன. அதனை காண ஏராளமான பொதுமக்கள் திரண்டிருந்தனர். பரமசிவம் காளவாசல் பகுதியில் நடந்த கலை நிகழ்ச்சியை காண சென்றார். இந்தநிலையில் நள்ளிரவு 1 மணியளவில் அவரை ஒரு கும்பல் அரிவாளால் வெட்ட முயன்றது.

    இதையடுத்து பரமசிவம் அங்கிருந்து தப்பி ஓடினார். இருந்தபோதிலும் அந்த கும்பலைச் சேர்ந்தவர்கள் அவரை விடாமல் துரத்திச்சென்று ஓட ஓட விரட்டி சரமாரியாக வெட்டிக்கொலை செய்தனர்.

    இதனை கோவில் திருவிழாவிற்கு வந்திருந்த பக்தர்கள் பார்த்து அதிர்ச்சியடைந்தனர். பரமசிவம் கொலை செய்யப்பட்டது குறித்து சிவகங்கை டவுன் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு சிவகங்கை டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமார் மற்றும் போலீசார் வந்தனர்.

    அவர்கள் பரமசிவத்தின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சிவகங்கை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பரமசிவத்தை வெட்டிக்கொன்றவர்கள் யார்? எதற்காக கொலை செய்தார்கள்? என்பது தெரியவில்லை.

    அவர் மீது கொலை உள்ளிட்ட ஏராளமான வழக்குகள் உள்ளதால் முன் விரோதத்தில் பழிக்குப்பழியாக யாரேனும் அவரை கொலை செய்திருக்கலாம் என்று போலீசார் கருதுகின்றனர்.

    அதன் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். கோவில் விழாவில் ரவுடி வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் சிவகங்கை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    Next Story
    ×