

சிவகங்கை:
சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அருகே உள்ள கங்கையம்மன் குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் மாப்பிள்ளை. இவர் குடும்பத்துடன் துரையா ஊரணி பகுதியில் கலைக்கூத்து தொழிலில் ஈடுபட்டார்.
அவரது மகள் கண்ணகி (வயது 15), 2 கம்புகளுக்கு நடுவே கட்டப்பட்டு இருந்த கயிற்றின் மீது ஏறி நின்றபடி சாகசம் செய்து கொண்டிருந்தார். அப்போது கண்ணகி எதிர்பாராத விதமாக கால் இடறி தவறி கீழே விழுந்தார்.
இதில் படுகாயமடைந்த சிறுமியை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் சிறுமி கண்ணகி இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து கல்லல் போலீஸ் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.