என் மலர்tooltip icon

    சிவகங்கை

    • சிங்கம்புணரியில் டி.என்.பி.எஸ்.சி. தேர்வு மையத்தில் தேர்வாளர்கள் தேர்வு எழுதினர்.
    • 1,547 பேருக்கான இடங்கள் ஒதுக்கப்பட்டு காலை 9 மணி முதல் தேர்வு தொடங்கியது.

    சிங்கம்புணரி

    சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி தாலுகாவில் முதல் முறையாக டி.என். பி.எஸ்.சி. தேர்வு மையம் அமைக்கப்பட்டுள்ளது.

    இந்த தேர்வு மையங்களாக செயின் ஜோசப் மகளிர் கல்லூரி, பாரிவள்ளல் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, மகாராஜா பாலிடெக்னிக் கல்லூரி, அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி என மொத்தம் 5 இடங்களில் 6 மையங்கள் தேர்வு செய்யப்பட்டு இன்று தேர்வு நடந்தது.

    வழக்கமாக மதுரை, திருச்சி, திண்டுக்கல் போன்ற இடங்களில் சிங்கம்புணரி பகுதி தேர்வாளர்கள் சென்று எழுதி வந்த நிலையில் இந்த வருடம் டி.என்.பி.எஸ்.சி.க்கான தேர்வு மையங்கள் சிங்கம்புணரியில் அமைக்கப்பட்டுள்ளது. இதையடுத்து இந்த தாலுகா தேர்வாளர்கள் உற்சாகத்துடன் இன்று தேர்வு எழுதினர்.1,547 பேருக்கான இடங்கள் ஒதுக்கப்பட்டு காலை 9 மணி முதல் தேர்வு தொடங்கியது.

    வட்டாட்சியர் கயல்செல்வி தலைமையில் நடைபெறும் இந்த தேர்வுகளில் மாவட்ட பிற்பட்டோர் நல அலுவலர் தனலட்சுமி முன்னிலையில் 2 கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.சுந்தரராஜன் தலைமையில் ஒரு கண்காணிப்பு குழுவும், சிவராமன் தலைமையில் மற்றொரு குழுவும் என 2 கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.ஒவ்வொரு தேர்வு மையங்களில் ஆய்வு அலுவலர்கள் வருவாய்த்துறை சார்பில் நியமிக்கப்பட்டுள்ளனர். துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    • நோய் தொற்று குறைய வேண்டி நவ சண்டி மகா யாகம் தொடங்கியது.
    • இந்த யாகபெரு விழா, மகாபஞ்சமுக பிரித்தியங்கிரா தேவி கோவிலில் 6 நாட்கள் நடைபெறுகிறது.

    மானாமதுரை

    சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே வேதியேரேந்தல் விலக்கில் உள்ள பிரசித்தி பெற்ற 24 மணிநேரமும் அன்னதானம் நடைபெறும் மகா பஞ்ச முக பிரித்தியங்கிரா தேவி கோவில் உள்ளது. இங்கு ஆண்டு தோறும் ஆடிமாதத்தில் யாகபெருவிழா நடைபெறும். இந்த ஆண்டு20-வது நவசண்டியாக பெருவிழாநேற்று மாலை கணபதி ஹோமம் கடம் ஸ்தாபன நிகழ்ச்சியுடன் தொடங்கியது.

    இந்தயாகபெருவிழா, மகாபஞ்சமுக பிரித்தியங்கிரா தேவி கோவிலில் 6 நாட்கள் நடைபெறுகிறது. உலகம் முழுவதும் வேகமாக பரவிவரும் நோய் தொற்றுகளில் இருந்து பொதுமக்களை காக்கும் வகையிலும், இயற்கையின் பேரழிவுகளிலிருந்து காத்து உலகிலுள்ள எல்லா ஜீவராசிகளும் பேரானந்தத்துடன் வாழ வேண்டி நேற்று (23-ந் தேதி) தொடங்கி வருகிற 28-ந் தேதி வரை வேத முறைப்படி 6 நாட்கள் லட்சுமி நாராயண மகா யாகம், நவ சண்டி யாகம் நடைபெறுகிறது.

    நோய் தொற்றுகளாலும் பஞ்சம், பினிகள், கொள்ளை, நோய்கள் போன்றவற்றால் மக்கள் மனநலம், உடல் நலம் குன்றிய காலத்தில் அதிருத்ரம்,சத சண்டி யாகம் கொற்றவை வழிபாடு, அக்னி வழிபாடு செய்து முன்னோர்களும், நாட்டை ஆட்சி செய்த மன்னர்களும் மஹா யாகங்களை செய்து மக்களை காத்து தெய்வ அருளால் வெற்றியும் பெற்றுள்ளனர்.

    இந்த யாகங்கள் வேத சான்றோர்களை வைத்து தஞ்சை குருஜி கணபதி சுப்பிரமணியம் தலைமையில் நடைபெறுகிறது. நினைத்த காரியங்கள் தடையின்றி நடைபெற இன்று (24-ந் தேதி) ஏகாசர கணபதி யாகமும், மஹா சுதர்சன யாகமும், குழந்தை இல்லாத தம்பதியர்களுக்காக குழந்தை செல்வம் வேண்டி நாளை (25-ந் தேதி) புத்ர காமேஷ்டி யாகமும், கடன் கஷ்டங்கள் நீங்கவும், நீண்ட ஆயுள் பெறவும், துன்பங்கள் வராமல் இருக்கவும் 26-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) ருணமோசன கணபதி யாகமும், மிருத்ஞ்ஜய யாகமும், வன துர்கா யாகமும், ஆயுஸ்ஹோமமும் நடைபெறுகிறது.

    சகல கஷ்டங்கள் நீங்கி அஷ்ட ஐஸ்வரியமும் பெற தசமஹா வித்தியா யாகமும் மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா யாகமும் வருகிற 27-ந் தேதி (புதன்கிழமை) நடைபெறுகிறது. மிக முக்கிய யாகமான மகா நவசண்டி ஹோமம் 28-ந் தேதி (வியாழக்கிழமை) ஆடி அமாவாசை தினத்தன்று நடைபெறுகிறது.

    இதற்கான ஏற்பாடுகளை மகா பஞ்சமுக பிரத்யங்கிர ஸாக்த மடாலய நிர்வாகி ஞானசேகர சுவாமிஜி, மாதாஜி ராஜ குமாரி ஆகியோர் மேற்பார்வையில் பக்தர்கள் செய்து வருகின்றனர். இது குறித்து மகா பஞ்சமுக பிரத்யங்கிரா கோவிலில் உள்ள ஞானசேகர சுவாமிஜி கூறுகையில், இங்கு அன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்தமாய் வாழ வேண்டும் என்பதற்காக கடந்த 19 ஆண்டுகளாக சத சண்டி, சகஸ்சர சண்டி,அயுத்த சண்டி, அதிருத்ர மகா யாகங்களும் நடத்தப்பட்டு உள்ளது.

    இப்போது உலக மக்கள் எதிர் நோக்கும் பஞ்சம், கொரோனா, குரங்கம்மை போன்ற தீய தொற்று நோய்கள் அழிய வேண்டியும் மக்கள் அனைவரும் எல்லா ஜீவ ராசிகளும் பேரானந்தத்துடன் வாழ வேண்டியும் 18 சித்தர்களும் மற்றும் காஞ்சி மஹா சுவாமிகள் அருளால் இங்கு யாகங்கள் நடைபெறுகிறது.

    இந்த யாகத்தில் எந்த கோவிலிலும் இல்லாத இந்திய மருத்துவ பொரு ளான மிளகு ஆஹுதி செய்யப்படுகிறது. இங்கு வரும் பக்தர்களுக்கு பிரசாதமாக 24 மணி நேரமும் அன்னதானம் நடைபெறுகிறது என்றார்.

    இந்த கோவிலில் மிகப்பெரிய யாக மண்டபமும், யாக சாலைகளும் உள்ளன. லட்சுமி கணபதி, கொடிமர கணபதி, சொர்ண ஹாசர பைரவர், குண்டு முத்து மாரியம்மன், காசி அன்னபூரணி ஆகிய சன்னதிகளும் உள்ளது.

    இங்கு நடைபெறும் யாக விபரங்களை 9842858236 என்ற எண்ணில் பக்தர்கள் தொடர்பு கொள்ளலாம். மதுரை, சிவகங்கை, திருச்சி ஆகிய ஊர்களில் இருந்து எளிதாக மானாமதுரை வந்து மகா பஞ்சமுக பிரத்யங்கிரா தேவி கோவிலை சென்று அடையலாம். பக்தர்களுக்கு காலை, மதியம், இரவு ஆகிய வேளைகளில் சிறப்பு அன்னதானம் வழங்கப்படுகிறது.

    • வட்டார அளவிலான சதுரங்க ஒலிம்பியாட் போட்டியில் 18 மாணவ-மாணவிகள் தேர்வு நடந்தது.
    • இந்த நிகழ்ச்சியில் தலைமையாசிரியை மற்றும் கவுன்சிலர் தாயுமானவன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    சிங்கம்புணரி

    சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 44-வது சதுரங்க ஒலிம்பியாட் போட்டி நடைபெற்றது. வட்டார அளவில் நடை பெற்ற இப்போட்டியில் 6 மேல்நிலைப்பள்ளி மாணவ-மாணவிகளும், 7 உயர்நிலைப்பள்ளி மாணவ-மாணவிகளும், 13 நடுநிலைப்பள்ளி உள்பட 26 அரசுப்பள்ளிகளை சேர்ந்த 64 மாணவர்கள், 51 மாணவிகள் பங்கேற்றனர்.

    சதுரங்க ஒலிம்பியாட் போட்டியினை சிங்கம்புணரி பேரூராட்சி தலைவர் அம்பலமுத்து தொடங்கி வைத்தார். மாணவர்களுக்கு 3 பிரிவு களாவும், மாணவிகளுக்கு 3 பிரிவுகளாகவும் போட்டி நடைபெற்றது.

    இதில் தேர்வான 18 மாணவ-மாணவிகளும் சிவகங்கை மருதுபாண்டியர் அரசு மேல்நிலைப்பள்ளியில் வருகிற 25-ந்தேதி நடைபெறும் போட்டியில் கலந்து கொள்ள உள்ளனர். இந்த நிகழ்ச்சியில் தலைமையாசிரியை மற்றும் கவுன்சிலர் தாயுமானவன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • மானாமதுரை அருகே அரசுத்துறை புகைப்பட கண்காட்சி நடந்தது.
    • அரசு திட்டங்கள் குறித்தும், நலத்திட்டங்களை எவ்வாறு பெறுவது? யாரை அணுகி பெறவேண்டும்? என்பது குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்டம், மானாமதுரை ஊராட்சி ஒன்றியம், எம்.கரிசல்குளம் ஊராட்சியில் செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் புகைப்படக் கண்காட்சி நடந்தது.

    இதில் தமிழக அரசின் சாதனைகள் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கிய புகைப்படங்கள், அமைச்சர்கள் மற்றும் கலெக்டர் மாவட்டத்தில் நடைபெற்ற அரசு விழாக்களில் நலத்திட்ட உதவிகள் வழங்கிய புகைப்படங்கள் இடம் பெற்றன. அரசு திட்டங்கள் குறித்தும், நலத்திட்டங்களை எவ்வாறு பெறுவது? யாரை அணுகி பெறவேண்டும்? என்பது குறித்தும் பொதுமக்களுக்கு அலுவலர்களால் விளக்கம் அளிக்கப்பட்டது.

    • சிவகங்கை அருகே தாய் திட்டியதால் மகன் தற்கொலை செய்து கொண்டார்.
    • அவருக்கு குடிப்பழக்கம் இருந்தது.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்டம் பூவந்தி அருகே செம்பூர் காலனி பகுதியைச் சேர்ந்தவர் மாரிமுத்து மகன் கார்த்திக் (வயது 32). இவருக்கு குடிப்பழக்கம் உண்டு.

    சம்பவத்தன்று கார்த்திக் குடித்துவிட்டு வீட்டுக்கு சென்றார். இதனை அவரது தாயார் கண்டித்தார். இதனால் மனவேதனையில் இருந்த கார்த்திக் பூச்சி மருந்தை குடித்து தற்கொலைக்கு முயன்றார். அவரை சிகிச்சிசைக்காக சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.

    இந்த சம்பவம் குறித்து பூவந்தி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சிவகங்கை மாவட்டத்தில் சதுரங்க விழிப்புணர்வு ரங்கோலி கோலமிடும் நிகழ்ச்சி நடந்தது.
    • பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இந்த நிகழ்ச்சி நடந்தது.

    சிவகங்கை

    தமிழகத்தில் முதன்முறையாக தமிழக அரசின் சார்பில் மாமல்லபுரத்தில் வருகிற 28-ந் தேதி முதல் 10-ந் தேதி வரை 44-வது உலக செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெறவுள்ளது.

    இந்த போட்டிகள் தொடர்பாக பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில், தமிழகம் முழுவதும் பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

    அதன்படி, சிவகங்கை மாவட்டத்தில் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் 12 ஊராட்சி ஒன்றியங்களைச் சேர்ந்த மகளிர் சுயஉதவிக்குழு கூட்டமைப்பைச் சேர்ந்த மகளிர் ஆகியோர் கூட்டாக இணைந்து, விழிப்புணர்வு ரங்கோலி கோலமிடும் நிகழ்ச்சி நடந்தது. அதை மாவட்ட வருவாய் அலுவலர் மணிவண்ணன் பார்வையிட்டார்.

    நிகழ்ச்சியில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் சிவராமன், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார திட்ட அலுவலர் வானதி, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் நாகராஜபூபதி, மாவட்ட விளையாட்டு அலுவலர் ரமேஷ்கண்ணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • திருப்பத்தூரில் அகவிலைப்படியை வழங்க வலியுறுத்தி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
    • 30 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    திருப்பத்தூர்

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் உள்ள வட்டார வள கல்வி அலுவலகம் முன்பு தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி சங்கம் சார்பாக 30 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    இந்த ஆர்ப்பாட்டத்திற்கு வட்டார துணைத் தலைவர் பெஞ்சமின் தலைமை வகித்தார். மாவட்ட பொதுக்குழு உறுப்பினர்கள் அழகுமணி, ஜெயராமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    ஆர்ப்பாட்டத்தில் வட்டார செயலாளர் முத்துமாரியம்மன், 30 அம்ச கோரிக்கைகளை விளக்கி பேசினார். சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற மாநில பொதுக்குழு உறுப்பினர் குமரேசன் மற்றும் மாவட்ட துணைத் தலைவர் ஸ்டீபன் ஆகியோர் பழைய ஓய்வுதத் திட்டம், மத்திய அரசுக்கு இணையாக ஊதியம் வழங்கும் திட்டம், தேசிய வழி கல்வி கொள்கையை திரும்பப் பெற வேண்டும், 3 சதவீத அகவிலைப்படி உயர்வை உடனடியாக வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு திட்டங்கள் மற்றும் கோரிக்கைகள் குறித்து ஆசிரியர்கள் மத்தியில் பேசினர்.

    இந்த ஆர்ப்பாட்டத்தில் 100-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பலரும் பங்கேற்றனர்.

    • சிவகங்கை மாவட்டத்தில் கருவேல மரங்கள் அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.
    • கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் விவசாயிகளுக்கான குறைதீர்க்கும் கூட்டம் நடந்தது.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்ட கலெக்டர் அலுவலகக் கூட்டரங்கில் விவசாயிகளுக்கான குறை தீர்க்கும் கூட்டம் நடந்தது. இதில் மாவட்ட கலெக்டர் மதுசூதன் ரெட்டி பங்கேற்று விவசாயிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

    கூட்டத்தில் கலெக்டர் பேசுகையில், சிவகங்கை மாவட்டத்தல் உள்ள 4ஆயிரத்து 226 முன்னாள் ஜமீன் கண்மாய்களில் 1,748 கண்மாய்கள் கடந்த வருடங்களில் தூர்வாரப்பட்டுள்ளன.

    தற்போது கொத்தங்குடி, வலையான்வயல், பள்ளிவயல், கொத்தான்கோட்டை, உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள 42 கண்மாய்கள் மொத்தம் ரூ.24.14 கோடி மதிப்பீட்டில் தூர்வாரும் பணிகள் நடைபெற்று, சீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன என்றார்.சாலைவழித்தட மாற்றம் செய்தல், சாலையில் தடுப்புச்சுவர் அமைத்தல், விவசாயப்பயிர்களை சேதப்படுத்தும் காட்டுப்பன்றிகள், காட்டுமாடுகளை அப்புறப்படுத்துதல், ஆக்கிரமிப்புக்களை அகற்றுதல், பட்டா வழங்குதல், பட்டா திருத்தம் செய்தல், நிலஅளவை செய்யக் கோருதல், அங்கன்வாடி கட்டிடம், நியாயவிலைக்கடை கட்டித்தரக் கோருதல், கிராமக்கிணறு பழுதை சீர் செய்தல், சிமெண்ட் களம் அமைத்து தரக்கோருதல், தார்ச்சாலை சீரமைத்தல், ஆற்றுப்பகுதியில் உள்ள சீமைக்கருவேல் மரங்களை அகற்றுதல், விவசாயிகளுக்கு தேவையான உரங்களை இருப்பு வைக்கக் கோருதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை கலெக்டரிடம் விவசாயிகள் எடுத்துரைத்தனர்.

    அந்த கோரிக்கைகள் தொடர்பாக, தற்போது அந்தபகுதிகளில் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து துறை சார்ந்த அலுவலர்கள் எடுத்துரைத்தனர். தகுதியான கோரிக்கைகள் மீது உடனடி நடவடிக்கை மேற்கொள்வதற்கு ஏதுவாக களஆய்வு செய்ய துறை அலுவலர்களுக்கு கலெக்டர் அறிவுறுத்தினார்.

    கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் மணிவண்ணன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் சிவராமன், வேளாண்மைத்துறை இணை இயக்குநர்(பொறுப்பு) தனபாலன், கூட்டுறவுத்துறை இணைப்பதிவாளர்கள் கோ.ஜீனு, ரவிச்சந்திரன், கால்நடைப் பராமரிப்புத்துறை இணை இயக்குநர் நாகநாதன், வருவாய் கோட்டாட்சியர்கள் சுகிதா (சிவகங்கை), பிரபாகரன் (தேவகோட்டை), கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) சர்மிளா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • தேவகோட்டை அருகே உள்ள காளியம்மன் கோவிலில் ஆடி திருவிழா நடந்தது.
    • 100-க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த 2500-க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டனர்.

    தேவகோட்டை

    சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே பூசலாகுடி ஊராட்சி கொத்தங்குடி கிராமத்தில் இடையன் காளியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் ஆடிமாதத்தில் திருவிளக்கு பூஜை நடைபெறும்.

    அதேபோல் இந்த ஆண்டுக்கான ஆடி முதல் வெள்ளியை முன்னிட்டு நேற்று திருவிளக்கு பூஜை நடைபெற்றது. முன்னதாக காலை 8 மணிக்கு அபிஷேகம், ராமன் அருள்வாக்கு நிகழ்ச்சி நடந்தது.

    பெண்கள் மாங்கல்ய பாக்கியம், குழந்தை பாக்கியம், லட்சுமி பாக்கியம் மற்றும் சுப நிகழ்ச்சிகள் தடையின்றி தங்கள் குடும்பத்தில் நிகழ வேண்டும் என்று இந்த திருவிளக்கு பூஜையில் கலந்து கொண்டனர்.

    இந்த பூஜையில் தேவ கோட்டை, கண்ணங்குடி, களத்தூர், புதுவயல் மற்றும் கொத்தங்குடி கிராமத்தை சுற்றியுள்ள சுமார் 100-க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த 2500-க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டனர். சிறப்பு தீபாரதனை முடிந்ததும் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. மேலும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

    • திருப்பத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மாதாந்திர கூட்டம் நடந்தது.
    • இந்த கூட்டத்தில் மாதாந்திர வரவு-செலவு கணக்குகள் சமர்ப்பிக்கப்பட்டது.

    திருப்பத்தூர்

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் நகரில் உள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மாதாந்திர சாதாரண கூட்டம் ஒன்றிய தலைவர் சண்முக வடிவேல் தலைமையில் நடந்தது. முன்னதாக மாதாந்திர வரவு-செலவு கணக்குகள் சமர்ப்பிக்கப்பட்டது.

    அதனைத் தொடர்ந்து ஒன்றிய கவுன்சிலர்கள் வைத்த குடிநீர், சாலை போன்ற உள்கட்டமைப்பு நடவடிக்கைகள் குறித்த பல்வேறு கோரிக்கைகளுக்கு விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளிக்கப்பட்டது.

    கவுன்சிலர்கள் மத்தியில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்துவதற்கு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    கூட்டத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர் விஜயகுமார், கிராம கூடுதல் வட்டார வளர்ச்சி அலுவலர் தென்னரசு மற்றும் ஒன்றிய கவுன்சிலர்கள், ஊராட்சி மன்ற அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • சிவகங்கையில் ஆசிரியர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
    • 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.

    சிங்கம்புணரி

    சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி தாலுகா எஸ்.புதூர் வட்டார கல்வி அலுவலகம் முன்பு தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பின் சார்பில் 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    ஆர்பாட்டத்திற்கு வட்டார தலைவர் பிராங்ளின் ஆரோக்கிய ஜேசுதாஸ் தலைமை தாங்கினார். வட்டார செயலாளர் சண்முகம் முன்னிலை வகித்தார்.

    ஆர்ப்பாட்டத்தின்போது பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்துதல், இடைநிலை ஆசிரியர்க ளுக்கு மத்திய அரசு ஆசிரி யர்களுக்கு இணையான ஊதியம் வழங்குதல், தேசிய கல்வி கொள்கையை மத்திய அரசு திரும்ப பெறுதல், மத்திய அரசு ஊழியர்களுக்கு வழங்கி உள்ளது போல் 3 சதவீத அகவிலைப்படி உயர்வை தமிழக அரசு ஊழியர்களுக்கு வழங்க வேண்டும்.

    அரசு பள்ளிகளில் தற்காலிக ஆசிரியர் நியமனம் செய்யும் முடிவை தமிழக அரசு கைவிட்டு நிரந்தரமாக ஆசிரியர்களை நியமிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த கண்டன ஆர்ப்பாட்டம் நடை பெற்றது.

    மாநில பொதுக்குழு உறுப்பினர் ஞானஅற்புத ராஜ், துணை தலைவர் ஜீவபிரபு, துணை செயலாளர் உதயகுமார் ஆகியோர் சிறப்புரை ஆற்றினர். எஸ்.புதூர் ஒன்றியத்தை சேர்ந்த தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி அமைப்பின் ஆசிரிய- ஆசிரியைகள் பலர் கலந்து கொண்டனர். முடிவில் வட்டார பொருளாளர் முத்துலெட்சுமி நன்றி கூறினார்.

    • செஸ் விழிப்புணர்வு ரங்கோலி நிகழ்ச்சி நடந்தது.
    • மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் சிவராமன் பார்வையிட்டார்.

    சிவகங்கை

    44-ஆவது உலக செஸ் ஒலிம்பியாட் போட்டி சென்னை மாமல்லபுரத்தில் நடைபெற உள்ளது. இதை முன்னிட்டு சிவகங்கை மாவட்டம் காஞ்சிரங்கால் ஊராட்சியில் மகளிர் சுய உதவிகுழுவினர்கள் கூட்டாக இணைந்து ரங்கோலி கோலமிடல் நிகழ்ச்சியை நடத்தினர்.

    சிவகங்கை மாவட்டத்தில் உள்ள 12 ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட 445 ஊராட்சிகளிலும் 44-வது உலக செஸ் ஒலிம்பியாட் விழிப்புணர்வு ரங்கோலி கோலமிடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் செஸ் போட்டியின் சிறப்பு அம்சங்கள் குறித்து வண்ண கோலங்களால் விளக்கப்பட்டிருந்தது.இந்நிகழ்ச்சியினை மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் சிவராமன் பார்வையிட்டார். மேலும் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார திட்ட அலுவலர் வானதி, காஞ்சிரங்கால் ஊராட்சி மன்றத்தலைவர் மணிமுத்து, மாவட்ட விளையாட்டு அலுவலர் ரமேஷ்கண்ணன், உதவி திட்ட அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×