என் மலர்tooltip icon

    சிவகங்கை

    • காரைக்குடி அருகே உள்ள கொரட்டி பகுதியைச் சேர்ந்த சோமசுந்தரி என்பவர் நைனா முகமதுவிடம் 46 பவுன் நகைகளை அடகு வைத்திருந்தார்.
    • பணத்தை வட்டியுடன் செலுத்திய பின்னும் நைனா முகமது நகைகளை திருப்பி தரவில்லை.

    காரைக்குடி:

    சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அண்ணா மார்க்கெட் அருகே அடகு கடை நிறுவனம் நடத்தி வந்தவர் நைனா முகமது (வயது 49). இவர் தனது நிறுவனத்தில் நகைகளை அடகு வைத்தால் குறைந்த வட்டிக்கு அதிக பணம் தருவதாக நகர் முழுவதும் விளம்பரம் செய்தார்.

    இதை நம்பி காரைக்குடி, பழைய செஞ்சை, ரஸ்தா, அமராவதி, புதூர், தட்டடி, கொரட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் தங்களது நகைகளை அடகு வைத்து நைனா முகமதுவிடம் பணம் பெற்று சென்றனர்.

    வங்கிகளில் இருந்து நகைகளை மீட்கவும், நில பத்திரங்களை அடமானமாக பெற்றுக்கொண்டும் நைனா முகமது பணம் கொடுத்து வந்துள்ளார்.

    இந்த நிலையில் காரைக்குடி அருகே உள்ள கொரட்டி பகுதியைச் சேர்ந்த சோமசுந்தரி (35) என்பவர் நைனா முகமதுவிடம் 46 பவுன் நகைகளை அடகு வைத்திருந்தார். அதற்குரிய பணத்தை வட்டியுடன் செலுத்திய பின்னும் நைனா முகமது நகைகளை திருப்பி தரவில்லை. இந்த நிலையில் அவர் தனது நிறுவனத்தை மூடிவிட்டு தலைமறைவானார்.

    இதனால் சந்தேகம் அடைந்த சோமசுந்தரி இதுகுறித்து காரைக்குடி வடக்கு போலீசில் புகார் செய்தார்.

    இதன் அடிப்படையில் அடகு கடை அதிபர் நைனா முகமது, அவரது மனைவி சிந்துஷ் பானு, உதவியாளர் முத்துப்பட்டணம் செந்தில்குமார் ஆகிய 3 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இதில் நைனா முகமதுவை போலீசார் கைது செய்தனர்.

    போலீசார் நடத்திய விசாரணையில் காரைக்குடி மற்றும் சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்களிடம் நைனா முகமது 1000 பவுன் நகையை அடமானமாக பெற்றுக்கொண்டு மோசடி செய்தது தெரிய வந்துள்ளது.

    மேலும் முதியவர் ஒருவரிடம் 1½ ஏக்கர் நிலத்தை மோசடி செய்து அதை தனது பெயரில் மாற்றிக்கொண்டதாகவும் புகார் எழுந்துள்ளது. இது தொடர்பாக போலீசார் அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதற்கிடையில் அவரால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் ஏராளமான காரைக்குடி கூடுதல் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர். அதில் தங்களது நகைகளை திருப்பி பெற்று தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளனர்.

    • பி.நெற்புகப்பட்டி கிராமத்தில் வருகிற 9-ந் தேதி மக்கள் தொடர்பு முகாம் நடைபெற உள்ளது.
    • இந்த தகவலை சிவகங்கை கலெக்டர் மதுசூதன் ரெட்டி தெரிவித்துள்ளார்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்டம் பி.நெற்புகப்பட்டி கிராமத்தில், வருகிற 9-ந் தேதி காலை 10 மணிக்கு மக்கள் தொடர்பு முகாம் நடக்கிறது. இதில் அரசின் திட்டங்களை துறை சார்ந்த முதன்மை அலுவலர்கள் கலந்து கொண்டு, பொதுமக்களுக்கு விளக்கம் அளிக்கின்றனர். தகுதிவாய்ந்த பயனாளிகள் பயன்பெறச் செய்வதே இந்த முகாமின் நோக்கமாகும். மேற்கண்ட கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் அனைவரும் நடைபெறவுள்ள மக்கள் தொடர்பு முகாமில் கலந்து கொண்டு, அரசின் திட்டங்களை அறிந்து பயன்பெறலாம்.

    இந்த தகவலை கலெக்டர் மதுசூதன் ரெட்டி தெரிவித்துள்ளார்.

    • சிங்கம்புணரி தாலுகா எஸ்.புதூர் ஒன்றியத்தில் காலை உணவு திட்டத்தை கோட்டாட்சியர் ஆய்வு செய்தார்.
    • தேவையான உணவு வழங்குதல், உணவின் சுவை பற்றி மாணவர்களுடைய கருத்தை கேட்டறிந்தார்.

    சிங்கம்புணரி

    சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி தாலுகா எஸ்.புதூர் ஒன்றியத்தில் சிவகங்கை கோட்டாட்சியர் சுகிதா காலை உணவு திட்டத்தை ஆய்வு செய்தார். அப்போது எஸ்.புதூர் ஒன்றியத்தில் உலகம்பட்டி, கட்டையன்பட்டி, குளத்துப்பட்டி உள்ளிட்ட

    47 அரசு ஆரம்பப் பள்ளிகளில் காலை உணவு தயாரிக்கும் இடம், நேரம், சுகாதாரம், சுவை உள்ளிட்ட ஆய்வுகளை கோட்டாட்சியர் சுகிதா மேற்கொண்டார். மேலும் உணவு தயாரிக்கும் முறை மளிகை பொருட்கள், காய்கறிகள், பராமரிக்கும் முறை, மாணவ- மாணவிகளுக்கு தேவையான உணவு வழங்குதல், உணவின் சுவை பற்றிய மாணவர்களுடைய கருத்து ஆகியவற்றை கேட்டறிந்தார். மாணவர்களுக்கு வழங்கப்பட்ட உணவையும் ருசித்துப் பார்த்தார். அவருடன் மாவட்ட ஒன்றிய அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

    • சிவகங்கை மாவட்டத்தில் புதிய நியாய விலைக்கடைகளை அமைச்சர் பெரியகருப்பன் திறந்து வைத்தார்.
    • கரிசல்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினார்.

    சிவகங்கை

    ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன், சிவகங்கை மாவட்டம், எஸ்.புதூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட உலகம்பட்டி, கரிசல்பட்டி மற்றும் மு.சுண்டபட்டி ஆகிய அரசு மேல்நிலைப்பள்ளிகளில் மாணவர்களுக்கு விலை யில்லா மிதிவண்டிகளை வழங்கியும் மற்றும் மின்னமலைபட்டி, கல்லங்காளபட்டி ஆகிய ஊராட்சிப்பகுதிகளில் புதிய நியாய விலைக்கடைகளை கலெக்டர் மதுசூதன் ரெட்டி தலைமையில் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைத்து அமைச்சர் பெரியகருப்பன் பேசினார்.

    அவர் பேசும் போது கூறியதாவது:-

    தமிழ்நாடு முதல்-அமைச்சர் மாணவர்கள் தரமான கல்வி பெற வேண்டும் என்ற உயரிய நோக்கில் எண்ணற்ற திட்டங்களை வழங்கி வருகிறார். முந்தைய காலங்களில் கல்வி கற்பதற்கு இதுபோன்ற வசதிகள் கிடைக்கப் பெறவில்லை.

    பெற்றோர்களின் கனவை நனவாக்கும் வகையிலும், தங்களுக்கு குருவாக விளங்கி வரும் ஆசிரியர்களின் உழைப்பிற்கும், எண்ணத்தை பூர்த்தி செய்கின்ற பொறுப்பும் மாணவர்களுக்கு உள்ளது. எனவே, கல்வியில் வல்லமை மிக்கவர்களாகவும், அறிவு திறன் மிக்கவர்களாகவும் சிறந்து விளங்கி, திட்டங்களின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்திட வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்நிகழ்ச்சிகளில் வட்டாட்சியர் சாந்தி, வட்டார வளர்ச்சி அலுவலர் பத்மநாதன், கூடுதல் வட்டார வளர்ச்சி அலுவலர் சந்திரா, எஸ்.புதூர் ஒன்றிய செயலாளர் செல்வராஜ், தலைமை செயற்குழு உறுப்பினர் ஜெயராம்,நெற்குப்பை நகர செயலாளர் கே பி எஸ் பழனியப்பன், உலகம்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் சியாமளா கருப்பையா, கரிசல்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் ஷாஜகான், முசுண்டம்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் அடைக்கலசாமி, மின்னமலைபட்டி ஊராட்சி மன்ற தலைவர் அழகம்மாள் ஆண்டிச்சாமி,கூட்டுறவு சங்க தலைவர் மென்னன், சங்க செயலாளர் செல்வம், வாராப்பூர் வி என் ஆர் நாகராஜன், கரிசல்பட்டி தலைமை ஆசிரியர் பால கணேசன், மற்றும் மாவட்ட ஒன்றிய பேரூர் கழக நிர்வாகிகள், கூட்டுறவு சங்க நிர்வாகிகள், தலைமை ஆசிரியர்கள், வகுப்பு ஆசிரியர்கள், ஊர் முக்கியஸ்தர்கள் என பலரும் பங்கேற்றனர்.

    • கொலை சம்பவம் தொடர்பாக போலீஸ் சூப்பிரண்டு நேரில் சென்று விசாரணை நடத்தினார்.
    • கைதான 4 பேரும் நீதிபதி முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

    சிவகங்கை:

    சிவகங்கை அருகே 3 நாட்களுக்கு முன்பு காமராஜர் காலனியை சேர்ந்த சித்திரைசாமி மகன் ஆகாஷ் (வயது 25) என்பவர் மட்டாகுளம் கிராமத்தில் மர்ம நபர்களால் வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.

    இந்த கொலை சம்பவம் தொடர்பாக போலீஸ் சூப்பிரண்டு நேரில் சென்று விசாரணை நடத்தினார். மேலும் இந்த கொலையில் தொடர்புடையவர்களை விரைந்து கைது செய்ய உத்தரவிட்டார். அதன் பேரில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. இந்த தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.

    இந்த நிலையில் நேற்று மாலை சிவகங்கை-மதுரை சாலையில் உள்ள வீரவலசை கிராம விலக்கு ரோட்டில் வாகன சோதனை நடத்திய தாலுகா இன்ஸ்பெக்டர் ரமேஷ் தலைமையிலான போலீசார், இருசக்கர வாகனத்தில் வந்த 4 பேரை சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரணை நடத்தினர். இதில் அவர்கள் மட்டாகுளத்தைச் சேர்ந்த துரைராஜ் மகன் வினோத்குமார் (29), மானாமதுரையைச் சேர்ந்த முத்துமணி மகன் புலிப்பாண்டி என்ற முத்துக்குமார் (21), முத்துப்பட்டி கிராமத்தை முத்தையா மகன் கார்த்திக் ராஜா (25), கீரைத்துரை கிராமத்தை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி மகன் வசந்தகுமார் என்ற பாம்பு வசந்த் (23) என்பதும், அவர்கள் ஆகாஷை கொலை செய்தவர்கள் என்பதும் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அவர்களை போலீசார் கைது செய்தனர்.

    போலீசாரின் விசாரணையில் கடந்த 2021-ம் ஆண்டு மார்ச் மாதம் மானாமதுரை அக்னிராஜ் கொலை வழக்கில் ஆகாசும் சம்பந்தப்பட்டவர் என்பதும், இது தொடர்பாக அவர் நிபந்தனை ஜாமீனில் வெளிவந்து மானாமதுரை போலீஸ் நிலையத்தில் கையெழுத்து போட்டு வந்ததும் தெரியவந்துள்ளது.

    முன் விரோதத்தில் அக்னிராஜ் தரப்பினர் 2 பேரை போலீஸ் நிலையம் முன்பு வைத்து சரமாரியாக வெட்டியுள்ளனர்.இந்த சம்பவத்தில் அருண்நாதன் என்பவர் சம்பவ இடத்திலேயே இறந்தார். வினோத்கண்ணன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று குணமடைந்தார்.

    இந்த வழக்கில் போலீசார் 9 பேரை கைது செய்து ஜெயிலில் அடைத்தனர். இதில் மானாமதுரையைச் சேர்ந்த தங்கமணி மகன் அக்னிராஜ் (19) 9-வது குற்றவாளியாக சேர்க்கப்பட்டிருந்தார். ஜாமீனில் வெளியே வந்த அவர் தினசரி மானாமதுரை போலீஸ் நிலையத்தில் கையெழுத்துபோட்டு வந்தார்.

    சம்பவத்தன்று காலை அவர் கையெழுத்து போட்டுவிட்டு இருசக்கர வாகனத்தில் வந்தபோது போலீஸ்நிலையம் அருகில்ஆகாஷ் தரப்பினர், அக்னிராஜை மானாமதுரை கோர்ட்டு வாசல் முன்பு மறித்து கீழே தள்ளி அவரை கொலை செய்துவிட்டு தப்பிச்சென்று விட்டனர். இந்த சம்பவத்திற்கு பழிக்குப்பழி வாங்கும் நிலையில் ஆகாஷ் கொலை செய்யப்பட்டுள்ளார்.

    இந்த சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட 4 பேர் மீதும் பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது. இவர்களில் 2 பேர் கூலி படையாக செயல்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். இந்த கொலை சம்பவத்தில் மேலும் பலருக்கு தொடர்பு இருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கைதான 4 பேரும் நீதிபதி முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

    • அரசு பள்ளியில் பயில்வது பெருமை என்ற சூழ்நிலை உருவாக்கப்பட்டுள்ளது என்று அமைச்சர் பெரியகருப்பன் பேசினார்.
    • சிவகங்கை கோட்டையூர் தஞ்சாவூர்அருணாச்சலம் செட்டியார் அரசு மேல்நிலைப்பள்ளியில் இலவச சைக்கிள்-ஊக்கத்தொகை வழங்கும் விழா நடந்தது.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்டம் கோட்டையூர் பேரூராட்சிக்கு உட்பட்ட தஞ்சாவூர்அருணாச்சலம் செட்டியார்அரசு மேல்நிலைப்பள்ளியில், தமிழக அரசின் சார்பில் மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

    கலெக்டர் மதுசூதன் ரெட்டி தலைமை தாங்கினார். இதில் சிறப்பு விருந்தினராக அமைச்சர் பெரியகருப்பன் கலந்து கொண்டு விலையில்லா சைக்கிள்களை வழங்கி பேசினார். அவர் பேசும்போது கூறியதாவது:-

    தற்போது அரசுப்பள்ளி யில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு உயர்கல்வி கற்பதிலும் வேலைவாய்ப்புக்களிலும் சிறப்பு ஒதுக்கீடுகள் வழங்கப்பட்டுள்ளன. அரசுப்பள்ளியில் பயில்வதே ஒரு பெருமை என்ற சூழ்நிலை உருவாக்கப்பட்டுள்ளது.

    பெற்றோர்கள் தனியார்பள்ளிகளில் தங்களது குழந்தைகள் கல்வி கற்பது பெருமை என்ற தவறான எண்ணத்தினை களைந்து அரசுப்பள்ளியில் தங்களது குழந்தைகளை சேர்க்க முன்வர வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்நிகழ்ச்சியின் போது, மேற்கண்ட அரசுப்பள்ளியில் 2021-2022-ம் ஆண்டு பொதுத்தேர்வில், பள்ளி அளவில் முதல் 3 இடங்களை பெற்ற மாணவ-மாணவிகளுக்கு அமைச்சர் பெரியகருப்பன் தனது சொந்த நிதியிலிருந்து முதல் பரிசுத்தொகையாக ரூ.5 ஆயிரம், 2-ம் பரிசுத்தொகையாக ரூ.3 ஆயிரம், 3-ம் பரிசுத்தொகையாக ரூ.2 ஆயிரம் வழங்கினார்.

    விழாவில் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் சுவாமிநாதன், பேரூராட்சித் தலைவர் கார்த்திக் சோலை, பள்ளி தலைமையாசிரியர் மற்றும் ஆசிரியர்கள், மாணவ-மாணவிகள், மின்வாரியத்துறை அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • முதல்-அமைச்சர் கட்டுப்பாட்டை மீறி அமைச்சர்கள் செயல்படுகின்றனர் என செந்தில்நாதன் எம்.எல்.ஏ. குற்றம் சாட்டியுள்ளார்.
    • சிவகங்கையில் அ.தி.மு.க. பொன்விழா ஆண்டு பொதுக்கூட்டம் நடந்தது.

    சிவகங்கை

    சிவகங்கையில் அ.தி.மு.க. பொன்விழா ஆண்டு பொதுக்கூட்டம் மாவட்ட செயலாளரும், எம்.எல்.ஏ.வுமான செந்தில்நாதன் தலைமையில் அரண்மனை வாசல் முன்பு சண்முகராஜா கலையரங்கத்தில் நடந்தது.

    கூட்டத்தில் செந்தில்நாதன் எம்.எல்.ஏ. பேசும்போது கூறியதாவது:-

    தமிழ்நாட்டின் காவல் துறை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கட்டுப்பாட்டில் இல்லை. அவரால் நியமிக்கப்பட்ட அமைச்சர்களும் அவரது கட்டுப்பாட்டில் இல்லை. அவர் தன்னை மீறி பேசுகின்ற எந்த ஒரு அமைச்சர் மீதும் நடவடிக்கை எடுக்க தயக்கம் காட்டுகிறார்.

    அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுத்தால் எம்.எல்.ஏ.க்களை பிரித்து சென்று விடுகிறார்கள் என்று அச்சப்படுகிறார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த கூட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் ராஜலெட்சுமி, பாஸ்கரன் மற்றும் நடிகர் சிங்கமுத்து ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.

    கூட்டத்தில் முன்னாள் எம்.எல்.ஏ. நாகராஜன், குணசேகரன், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் பொன்பாஸ்கரன், மாநில நிர்வாகிகள் கருணாகரன், தமிழ்செல்வன், நகர செயலாளர் ராஜா, மாவட்ட அவைத்தலைவர் நாகராஜன், ஒன்றிய செயலாளர்கள் தசரதன், செல்லமணி, ஸ்டீபன், சேவியர், சிவாஜி, கோபி, பாரதிராஜன், ஜெகதீஸ்வரன், பழனிசாமி, எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் சிவதேவ்குமார், எம்.ஜி.ஆர்.மன்ற துணை செயலாளர் இளங்கோவன், பாசறை மாவட்ட செயலாளர் பிரபு, மாவட்ட பொருளாளர் சரவணன், மாவட்ட எம்.ஜி.ஆர்.இளைஞரணி துணைச் செயலாளர் மணிமாறன், ஒன்றிய எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் ராஜாங்கம், நகர, ஒன்றிய, மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். முடிவில் நகர தலைவர் பாண்டி நன்றி கூறினார்.

    • மானாமதுரை பகுதியில் தற்போது பெய்து வரும் மழை காரணமாக வைகைஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது.
    • கண்மாய் கரை பாதுகாப்பிற்காக மணல் மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டு உள்ளது.

    மானாமதுரை

    சிவகங்கை மாவட்டம் மானாமதுரை வைகை பாசன பகுதியாகும். தற்போது பெய்து வரும் மழை காரணமாக வைகைஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது.

    இதனால் கண்மாய் மற்றும் நீர்ப்பிடிப்பு பகுதியில் தண்ணீர் நிரம்பி வருகிறது. பார்த்திபனூர் மதகு அணையில் இடதுபுற கால்வாய் மூலம் தண்ணீர் செல்லும் பெரிய கண்மாய்யாக உள்ள மேலெநெட்டூர் கண்மாய் தற்போது நிரம்பி மறுகால் பாய்கிறது.

    கண்மாய் கரை பாதுகாப்பிற்காக மணல் மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டு உள்ளது. இங்கிருந்து செல்லும் கால்வாய்களிலும் தண்ணீர் அதிகம் அளவில் செல்கிறது. இப்பகுதியில் தொடர்ந்து பலகண்மாய்களுக்கு நீர்வரத்து அதிகமாக உள்ளதால் விவசாயிகள் பணிகளை மும்முரமாக செய்து வருகின்றனர்.

    வைகை ஆற்று கரை யோரம் உள்ள முத்தனேந்தல், கிருங்காகோட்டை, கீழமேல் குடி மானாமதுரை கண்மாய்களுக்கு வரும் கால்வாய், மதகுகள் பராமரிக்கப்படாதால் தண்ணீர் வராத நிலையும் உள்ளது. தற்போது தொடர்ந்து நல்ல மழை பெய்து வருவதால் ஆற்றில் வீணாக சென்று கடலில் சென்று கலக்கும் தண்ணீரையும் விவசாயம் மற்றும் குடிநீர் திட்டங்களுக்கு பயன்படுத்தும் வகையில் வைகைஆற்றில் புதிதாக தடுப்பணை கட்ட வேண்டும். தண்ணீர் செல்லாத கால்வாய்களில் சீரமைப்பு மற்றும் மராமத்து பணிகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • சிவகங்கை மாவட்டம் சிராவயலில் புதிய ஊராட்சி மன்ற கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டு விழா நடந்தது.
    • கல்லல் பகுதியில் பல்வேறு திட்ட பணிகளை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் தொடங்கி வைத்தார்.

    நெற்குப்பை

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் தாலுகா கல்லல் ஒன்றியத்துக்கு உட்பட்ட சிராவயலில் புதிய ஊராட்சி மன்ற கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டு விழா, பாதரக்குடியில் புதிதாக கட்டி முடிக்கப்பட்ட கலையரங்கம், கீழ பட்டமங்கலம் ஊராட்சிக்கு உட்பட்ட தெற்கு தெரு பகுதியில் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியில் ரூ.6 லட்சம் மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்ட பயணிகள் நிழற்குடை மற்றும் கண்டன மாணிக்கம் ஊராட்சியில் 2021-22-ம் ஆண்டிற்கான நமக்கு நாமே திட்டத்தின் கீழ் ரூ. 12 லட்சத்து 60 ஆயிரம் மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்ட புதிய நூலக கட்டிடம் திறப்பு விழா ஆகியவை நடைபெற்றது.

    இந்த நிகழ்ச்சிகளுக்கு மாவட்ட கலெக்டர் மதுசூதன ரெட்டி தலைமை தாங்கினார். இதில் அமைச்சர் கே.ஆர்.பெரிய கருப்பன் கலந்து கொண்டு திட்ட பணிகளை தொடங்கி வைத்தார்.

    விழாவில் வட்டாட்சியர் வெங்கடேசன், மண்டல துணை வட்டாட்சியர் செல்லமுத்து, சிராவயல் ஊராட்சி மன்ற தலைவர் சரோஜாதேவி குமார், பாதரக்குடி ஊராட்சி மன்ற தலைவர் பாண்டி மீனா அழகப்பன், கீழ பட்டமங்கலம் ஊராட்சி மன்ற தலைவர் பிரமிளா கார்த்திகேயன், கண்டரமாணிக்கம் ஊராட்சி வளர்ச்சி குழு தலைவர் கே.ஆர்.மணிகண்டன், ஊரக முகமை, வருவாய் துறை அலுவலர்கள், மாவட்ட, ஒன்றிய, பேரூர் நிர்வாகிகள், ஊராட்சி மன்ற துணைத்தலைவர்கள், வார்டு உறுப்பினர்கள், ஊர் முக்கியஸ்தர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

    • சிவகங்கை மாவட்டத்தில் நடந்த கிராமசபை கூட்டங்களில் பொதுமக்கள் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.
    • இதுபோன்று சட்டமன்ற கூட்டத்தையும் பார்வையிட வேண்டும் என்று மாணவர்கள் விருப்பம் தெரிவித்தனர்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்டத்தில் நேற்று கிராமசபை கூட்டங்கள் நடந்தன. ஆண்டுதோறும் குடியரசு தினம், தொழிலாளர் தினம், சுதந்திர தினம், காந்தி ஜெயந்தி உள்ளிட்ட நாட்களை தொடர்ந்து நேற்று உள்ளாட்சி தினத்தை யொட்டி இந்த கூட்டம் நடந்தது.

    சிவகங்கை மாவட்டத்தில் 400-க்கும் மேற்பட்ட அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டங்களை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது.தமிழக அரசு உத்தரவின்படி. ஊராட்சி எல்லைக்குட்பட்ட வார்டுகளில் சுழற்சி முறையைப் பின்பற்றி கூட்டம் நடந்தது.

    இதில் டெங்கு பரவுவதை கட்டுப்படுத்துதல், பருவமழை முன்னெ ச்சரிக்கை குறித்து விவாதிக்கப்பட்டது. சிவகங்கை மாவட்டம் மதகுபட்டி ஊராட்சியில் செந்தில்நாதன் எம்.எல்.ஏ. தலைமையில் கிராம சபை கூட்டம் நடந்தது. இதில் எம்.எல்.ஏ. பேசுகையில், கிராமங்களில் உள்ள பெண் குழந்தைகளை உயர்கல்வி படிக்க வைத்து சிறந்த ஆட்சியாளராகவும், ஜெயலலிதா போன்றும் உருவாக்க வேண்டும். ஜெயலலிதா 7 மொழிகள் பேசக் கூடியவர்.

    அவரை போல் பெண் குழந்தைகளை உருவாக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். முன்னதாக சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து கொடுக்கப்பட்ட பணிகளுக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    கொரோனா காலங்களில் சிறப்பாக பணியாற்றிய கிராம ஊழியர்களுக்கு பொன்னாடை அணிவித்து கவுரவிக்கப்பட்டனர். இதில் மாவட்ட கவுன்சிலர் கோமதி தேவராஜ், ஊராட்சி மன்ற தலைவர் சரஸ்வதி முத்துகுமார் உள்பட அ.தி.மு.க. நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    விட்டனேரி ஊராட்சி ஒன்றிய பள்ளியில் ஊராட்சி மன்ற தலைவர் கவிஞர் வரதன் தலைமையில் நடந்த கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. விட்டனேரியில் இருந்து செல்லும் அய்யம்பட்டிக்கு மெட்டல் சாலை, சாத்தனி பள்ளி வளாகத்தில் பேவர் பிளாக் சாலை, புதிய அங்கன்வாடி கட்டிடம், உடையவயல் பள்ளியில் சுற்றுவர் கட்டுவது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    தூய்மை பணியா ளர்களுக்கு ரொக்க பரிசும், மகளிர் குழுக்களுக்கு சால்வையும் அணிவித்து ஊராட்சி மன்ற தலைவர் வரதன் மரியாதை செலுத்தினார். ஊராட்சி செயலாளர் முருகப்பன், தலைமை ஆசிரியர், மகளிர் குழுக்கள், வருவாய் துறை ஒன்றிய அலுவலர், கிராம மக்கள் கலந்து கொண்டனர்.

    சிவகங்கை அருகே உள்ள காஞ்சிரங்கால் ஊராட்சியில் கிராம சபை கூட்டம், ஊராட்சி மன்ற தலைவர் மணிமுத்து தலைமையில் நடந்தது. இதில் ஏராளமான பெண்களும், அரசு பள்ளி மாணவ மாணவிகளும் கலந்து கொண்டனர்.

    கிராம மக்களின் சார்பில் எழுப்பப்பட்ட கோரிக்கைகளுக்கு, அதி காரிகளும், ஊராட்சி மன்ற தலைவரும் பதில் அளித்தனர். இதில் பேசிய மாணவர்கள், கிராம சபை கூட்டத்தில் கலந்து கொண்டது புதிய அனுபவமாக அமைந்த தாகவும், மக்களின் தேவை யும், அதிகாரிகளின் பதிலும் அரசின் நடவடிக்கையை தங்களுக்கு வெளிப்படு த்தியதாகவும் தெரிவித்தனர்.

    இதுபோன்று சட்டமன்ற கூட்டத்தையும் பார்வையிட வேண்டும் என்று மாணவர்கள் விருப்பம் தெரிவித்தனர். இதனை ஏற்று வரும் சட்டமன்ற கூட்டத்தில் அரசு பள்ளி மாணவர்களை அழைத்துச் செல்வதாக ஊராட்சி மன்ற தலைவர் மணிமுத்து உறுதியளித்தார்.

    மேலும் புதிய ஊராட்சி மன்ற கட்டிடத்தில் மரக்கன்றுகளும் நடப்பட்டன.

    வாணியங்குடி ஊராட்சி மன்ற தலைவர் புவனேசுவரி சுரேஷ்குமார் தலைமையில் ஊராட்சி அலுவலகத்தில் நடந்த கிராம சபை கூட்டத்தில் ஊராட்சி செயலாளர் பாலகிருஷ்ணன் மற்றும் வருவாய்த்துறை, மருத்துவ பணியாளர்கள், வட்டார வளர்ச்சி அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    • சேதமடைந்த அங்கன்வாடி மையத்தை சீரமைக்க கோரி கூட்டத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டது.
    • சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் நகர பகுதி சபை கூட்டம் நடைபெற்றது.

    சிங்கம்புணரி

    சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் நகர பகுதி சபை கூட்டம் நடைபெற்றது. 1-வது வார்டில் நடைபெற்ற நகர பகுதி சபை கூட்டத்திற்கு சிங்கம்புணரி நகர் சேர்மனும் 1-வது வார்டு உறுப்பினருமான அம்பலமுத்து தலைமை தாங்கினார். செயல் அதிகாரி ஜான் முகமது முன்னிலை வகித்தார். இதில் 1-வது வார்டு பொதுமக்கள் திரளான அளவில் பங்கேற்றனர்.

    கூட்டத்தில் பொது மக்களின் குறைகள் கேட்டறியப்பட்டு அதற்கான தீர்வுகள் செய்து தருவதாக சேர்மன் அம்பலமுத்து உறுதியளித்தார். அதை தொடர்ந்து அந்த வார்டு பொதுமக்கள் கூறுகையில், அங்கன்வாடி மையம் சமுதாய கூடத்தில் செயல்பட்டு வருகிறது. அந்த சமுதாயக்கூடமும் இடிந்து விழும் நிலையில் உள்ளது. மின்சார வசதி கிடையாது. ஆகவே சமுதாய கூடத்தை சிறந்த முறையில் பராமரிப்பு செய்து மின் இணைப்பு வழங்க வேண்டும். அப்போது பேரூராட்சி சேர்மன் அம்பலமுத்து அங்கன்வாடி மையம் உடனடியாக சரி செய்யப்படும் என உறுதியளித்தார்.

    • சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே உள்ள இலுப்பக்குடி கிராம சபை கூட்டம் நடந்தது.
    • கிராமத்தின் பல்வேறு பகுதி மக்களும் அடிப்படை தேவைகள் குறித்து கோரிக்கை விடுத்தனர்.

    காரைக்குடி

    சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே உள்ள இலுப்பக்குடி கிராமத்தில் உள்ளாட்சி தினத்தை முன்னிட்டு கிராம சபை கூட்டம் ஊராட்சி மன்ற தலைவர் வைரமுத்து அன்பரசன் தலைமையில் நடந்தது. உதவி திட்ட அலுவலர் (வீடுகள் மற்றும் சுகாதாரம்) விசாலாட்சி, வட்டார வளர்ச்சி அலுவலர் கேசவன் முன்னிலை வகித்தனர். பொன்நகர், திருமலை நகர் பகுதிகளில் வசிப்பவர்கள் சாலை வசதி மற்றும் தெருவிளக்கு, நியாய விலைக் கடை அமைக்கக்கோரி தலைவரிடம் மனு கொடுத்தனர்.வேளாண்மை உதவி இயக்குநர் சண்முக ஜெயந்தி, வேளாண்துறை சார்ந்த அரசின் நலத்திட்டங்களை எடுத்துக் கூறினார். கிராமத்தின் பல்வேறு பகுதி மக்களும் அடிப்படை தேவைகள் குறித்து கோரிக்கை விடுத்தனர்.

    இலுப்பக்குடி அரசு பள்ளி தலைமையாசிரியர் பேசுகையில், பள்ளிக்கு கணிப்பொறி வாங்கித்தந்த யூனியன் தலைவர் சரண்யா செந்தில்நாதன் மற்றும் பள்ளி வளர்ச்சிக்கு பல்வேறு உதவிகளை செய்துவரும் தலைவர் வைரமுத்து அன்பரசன் உள்ளிட்ட பலருக்கு நன்றி தெரிவித்ததுடன், பள்ளிக்கு சுற்றுச்சுவர் அமைத்துதர கோரிக்கை விடுத்தார். கொரோனா காலத்தில் சிறப்பாக செயல்பட்ட தூய்மை பணியாளர்கள் கவுரவிக்கப்பட்டனர். தலைவர் வைரமுத்து அன்பரசன் பேசுகையில், மக்களின் கோரிக்கைகள் படிப்படியாக நிறைவேற்றப்படும்.வடகிழக்கு பருவமழை வர இருப்பதால் அனைத்து பகுதிகளிலும் நீர் தேங்காமல் இருக்கவும், கண்மாய் கரைகளை பலப்படுத்தவும் தேவையானவற்றை செய்து வருகிறோம் என்றார்.

    சாக்கோட்டை மேற்கு ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர் செந்தில்நாதன், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் அன்பரசன், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள், மகளிர் குழு உறுப்பினர்கள், கிராம நிர்வாக அலுவலர் விக்னேஷ், பொதுமக்கள் கலந்து கொண்டனர். ஊராட்சி செயலர் வீரப்பன் நன்றி கூறினார்.

    ×