என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சிவகங்கை அருகே பழிக்கு பழியாக வாலிபர் கொலை
    X

    சிவகங்கை அருகே பழிக்கு பழியாக வாலிபர் கொலை

    • கொலை சம்பவம் தொடர்பாக போலீஸ் சூப்பிரண்டு நேரில் சென்று விசாரணை நடத்தினார்.
    • கைதான 4 பேரும் நீதிபதி முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

    சிவகங்கை:

    சிவகங்கை அருகே 3 நாட்களுக்கு முன்பு காமராஜர் காலனியை சேர்ந்த சித்திரைசாமி மகன் ஆகாஷ் (வயது 25) என்பவர் மட்டாகுளம் கிராமத்தில் மர்ம நபர்களால் வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.

    இந்த கொலை சம்பவம் தொடர்பாக போலீஸ் சூப்பிரண்டு நேரில் சென்று விசாரணை நடத்தினார். மேலும் இந்த கொலையில் தொடர்புடையவர்களை விரைந்து கைது செய்ய உத்தரவிட்டார். அதன் பேரில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. இந்த தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.

    இந்த நிலையில் நேற்று மாலை சிவகங்கை-மதுரை சாலையில் உள்ள வீரவலசை கிராம விலக்கு ரோட்டில் வாகன சோதனை நடத்திய தாலுகா இன்ஸ்பெக்டர் ரமேஷ் தலைமையிலான போலீசார், இருசக்கர வாகனத்தில் வந்த 4 பேரை சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரணை நடத்தினர். இதில் அவர்கள் மட்டாகுளத்தைச் சேர்ந்த துரைராஜ் மகன் வினோத்குமார் (29), மானாமதுரையைச் சேர்ந்த முத்துமணி மகன் புலிப்பாண்டி என்ற முத்துக்குமார் (21), முத்துப்பட்டி கிராமத்தை முத்தையா மகன் கார்த்திக் ராஜா (25), கீரைத்துரை கிராமத்தை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி மகன் வசந்தகுமார் என்ற பாம்பு வசந்த் (23) என்பதும், அவர்கள் ஆகாஷை கொலை செய்தவர்கள் என்பதும் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அவர்களை போலீசார் கைது செய்தனர்.

    போலீசாரின் விசாரணையில் கடந்த 2021-ம் ஆண்டு மார்ச் மாதம் மானாமதுரை அக்னிராஜ் கொலை வழக்கில் ஆகாசும் சம்பந்தப்பட்டவர் என்பதும், இது தொடர்பாக அவர் நிபந்தனை ஜாமீனில் வெளிவந்து மானாமதுரை போலீஸ் நிலையத்தில் கையெழுத்து போட்டு வந்ததும் தெரியவந்துள்ளது.

    முன் விரோதத்தில் அக்னிராஜ் தரப்பினர் 2 பேரை போலீஸ் நிலையம் முன்பு வைத்து சரமாரியாக வெட்டியுள்ளனர்.இந்த சம்பவத்தில் அருண்நாதன் என்பவர் சம்பவ இடத்திலேயே இறந்தார். வினோத்கண்ணன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று குணமடைந்தார்.

    இந்த வழக்கில் போலீசார் 9 பேரை கைது செய்து ஜெயிலில் அடைத்தனர். இதில் மானாமதுரையைச் சேர்ந்த தங்கமணி மகன் அக்னிராஜ் (19) 9-வது குற்றவாளியாக சேர்க்கப்பட்டிருந்தார். ஜாமீனில் வெளியே வந்த அவர் தினசரி மானாமதுரை போலீஸ் நிலையத்தில் கையெழுத்துபோட்டு வந்தார்.

    சம்பவத்தன்று காலை அவர் கையெழுத்து போட்டுவிட்டு இருசக்கர வாகனத்தில் வந்தபோது போலீஸ்நிலையம் அருகில்ஆகாஷ் தரப்பினர், அக்னிராஜை மானாமதுரை கோர்ட்டு வாசல் முன்பு மறித்து கீழே தள்ளி அவரை கொலை செய்துவிட்டு தப்பிச்சென்று விட்டனர். இந்த சம்பவத்திற்கு பழிக்குப்பழி வாங்கும் நிலையில் ஆகாஷ் கொலை செய்யப்பட்டுள்ளார்.

    இந்த சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட 4 பேர் மீதும் பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது. இவர்களில் 2 பேர் கூலி படையாக செயல்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். இந்த கொலை சம்பவத்தில் மேலும் பலருக்கு தொடர்பு இருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கைதான 4 பேரும் நீதிபதி முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

    Next Story
    ×