என் மலர்tooltip icon

    சேலம்

    • நடைபயிற்சியை ஊக்குவிக்கவும் மாவட்டம்தோறும் "நடப்போம் நலம் பெறுவோம்" என்ற திட்டத்தை செயல்படுத்திட உத்தரவிட்டு உள்ளார்.
    • இந்த பாதையில் தடையின்றி நடைபயிற்சி மேற்கொள்ள ஏதுவாக சாலையானது புனரமைப்பு செய்யப்பட்டுள்ளது.

    சேலம்:

    தமிழ்நாடு முதல்-அமைச்சர் பொதுமக்களின் உடல் ஆரோக்கியத்தை காக்கவும், நடைபயிற்சியை ஊக்குவிக்கவும் மாவட்டம்தோறும் "நடப்போம் நலம் பெறுவோம்" என்ற திட்டத்தை செயல்படுத்திட உத்தரவிட்டு உள்ளார். அதன்படி சேலம் மாவட்டத்தில் இத்திட்டத்தினை செயல்படுத்தும் விதமாக சேலம், அஸ்தம்பட்டி ரவுண்டானாவில் தொடங்கி மாடர்ன் தியேட்டர் வளைவு வரை சென்று மீண்டும் அஸ்தம்பட்டி ரவுண்டானா முடிய 8 கிலோ மீட்டர் தூரம் கொண்ட சுகாதார நடைபயிற்சியில் மாவட்ட கலெக்டர் கார்மேகம், மாநகராட்சி மேயர் ராமச்சந்திரன், பார்த்திபன் எம்.பி., வடக்கு ராஜேந்திரன் எம்.எல்.ஏ., மேட்டூர் சதாசிவம் எம்.எல்.ஏ., மாநகராட்சி கமிஷனர் பாலச்சந்தர் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    இந்த பாதையில் தடையின்றி நடைபயிற்சி மேற்கொள்ள ஏதுவாக சாலையானது புனரமைப்பு செய்யப்பட்டுள்ளது. மேலும் நடைபயிற்சி மேற்கொள்ளும் பாதையின் இருபுறமும் நடைபயிற்சியின் பயன்கள் மற்றும் தொற்றா நோய் குறித்த விழிப்புணர்வு பதாகைகள், நடைபயண தூரம் குறித்த தகவல் பலகைகள் வைக்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட இடைவெளிகளில் இளைப்பார அமரும் வகையில் 8 இடங்களில் இருக்கைகள் அமைக்கப்பட்டு உள்ளது.

    இந்நிகழ்ச்சியில் உதவி கலெக்டர் (பயிற்சி) சுவாதிஸ்ரீ, துணை இயக்குநர் சுகாதார பணிகள் சவுண்டம்மாள்(சேலம்), யோகானயத்(ஆத்தூர்), துணை இயக்குநர் வளர்மதி, துணை இயக்குநர் கணபதி, மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் ராமச்சந்திரன், அஸ்தம்பட்டி மண்டல தலைவர் உமாராணி வெள்ளி கொலுசு கைவினைஞர்கள் சங்க தலைவர் ஆனந்த ராஜ் மற்றும் அரசு அலுவலர்கள், நடைபயண சங்கத்தை சார்ந்தவர்கள், சமூகஆர்வலர்கள், பொதுமக்கள், கல்லூரி மாணவ, மாணவிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    • சங்ககிரியில் லாரி தொழில் பிரதான தொழிலாக உள்ளதால் வாகனங்கள் நெரிசல் எப்போதும் மிகுதியாக இருக்கும்.
    • போலீஸ் நிலையம்எதிரே உள்ள சாலையானது 30 மீட்டர் அகலத்தில் போடப்பட்டுள்ளது. மேலும் 1 மீட்டர் நீளத்தில் பாதசாரிகள் நடக்க பாதை அமைக்கப்பட்டது.

    சங்ககிரி:

    சேலம் மாவட்டம் சங்ககிரியில் லாரி தொழில் பிரதான தொழிலாக உள்ளதால் வாகனங்கள் நெரிசல் எப்போதும் மிகுதியாக இருக்கும். இதனால் சில ஆண்டுக்கு முன் நகர் பகுதியில் பல சாலைகள் இருவழி சாலையாக மாற்றப்பட்டன. ஆனாலும் போக்குவரத்து நெரிசல் குறையவில்லை.

    இந்த நிலையில் கடந்த 3 மாதமாக தாலுகா, பி.டி.ஓ. அலுவலகம் மற்றும் போலீஸ் நிலையம் எதிரே உள்ள பிரதான சாலையில் பாதசாரிகளுக்கு இடையூறாக சரக்கு ஆட்டோக்கள், கார், கனரக வாகனங்களை நடைபாதையில் வாகன ஓட்டிகள் நிறுத்தி விட்டு செல்கின்றனர்.

    இதனால் பாதசாரிகள் வெள்ளை கோட்டை தாண்டி சாலையின் நடுவே நடந்து செல்லும் நிலை உள்ளது. 2 வாகனங்கள் ஒன்றாக வரும்பொழுது விபத்து ஏற்படும் அபாயமும் உள்ளது. இதையடுத்து மாவட்ட அதிகாரிகள் தலையிட்டு வாகன ஆக்கிரமிப்பை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

    இதுகுறித்து சங்ககிரி நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கூறும்போது, பி.டி.ஓ அலுவலகம், போலீஸ் நிலையம்எதிரே உள்ள சாலையானது 30 மீட்டர் அகலத்தில் போடப்பட்டுள்ளது. மேலும் 1 மீட்டர் நீளத்தில் பாதசாரிகள் நடக்க பாதை அமைக்கப்பட்டது. அதில் வாகனங்களை நிறுத்தி ஆக்கிரமிப்பு செய்துள்ளதால் பள்ளி, கல்லூரி மாணவர்கள், பொதுமக்கள் வெள்ளைக்கோட்டை தாண்டி சாலை நடுவே செல்லும் சூழல் ஏற்படுகிறது. அதனால் விபத்துக்கள் நடைபெற வாய்ப்பு உள்ளது. இதை கட்டுப்படுத்த போலீஸ் துறையினர் தான் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

    சங்கிரியை சேர்ந்த ராஜசேகர் என்பவர் கூறுகையில் இந்த சாலையில் காலை நேரத்தில் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ, மாணவிகள் ஏராளமானோர் நின்று செல்கின்றனர். சாலையை சரக்கு வாகனங்கள் காலை முதலே ஆக்கிரமித்துக் கொள்வதால் அந்த வழியாக நடந்து செல்வோர் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின்றனர். எனவே போலீசார் இந்த சாலையில் வாகனங்களை நிறுத்த விடாமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

    • சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது.
    • அதன் தொடர்ச்சியாக நேற்று மாவட்டத்தின் பல்வேறு பகுதகளில் கன மழை பெய்தது.

    சேலம்:

    சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக நேற்று மாவட்டத்தின் பல்வேறு பகுதகளில் கன மழை பெய்தது. குறிப்பாக வீரகனூர், தலைவாசல் பகுதிகளில் கன மழை பெய்தது. இந்த மழையால் தாழ்வான பகுதிகள் மற்றும் வயல்வெளிகளில் தண்ணீர் தேங்கியது. சேலம் மாநகரில் நேற்றிரவு சாரல் மழை பெய்தது. மழையை தொடர்ந்து குளிர்ந்த சீேதாஷ்ண நிலை நிலவியது. இன்று காலையும் மழை தூறிய படியே இருந்தது. மாவட்டத்தில் அதிக பட்சமாக வீரகனூரில் 20 மி.மீ. மழை பெய்துள்ளது. தலைவாசல் 18, சங்ககிரி 9, கெங்கவல்லி 7, கரியகோவில், பெத்தநாயக்கன்பாளையம் 6, ஆத்தூர் 3.2, தம்மம்பட்டி 2, ஆனைமடுவு 1 மி.மீ. என மாவட்டம் முழுவதும் 72.2 மி.மீ. மழை பதிவாகி உள்ளது.

    • சக்தி (42). இவர் சொந்தமாக லாரி வைத்து தொழில் செய்து வருகிறார்.
    • சக்திக்கு மது குடிக்கும் பழக்கம் உள்ளது. இதனால் மதுகுடித்து விட்டு வந்து அடிக்கடி வீட்டில் தகராறு செய்து வந்துள்ளார்.

    மேட்டூர்:

    சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே கொளத்தூர் கொசவன்கரடு பகுதியை சேர்ந்தவர் சக்தி (42). இவர் சொந்தமாக லாரி வைத்து தொழில் செய்து வருகிறார்.

    மதுபழக்கம்

    இவருக்கு மணிமுடி (35) என்ற மனைவியும், 11 வயதில் பெண் குழந்தையும் உள்ளனர்.

    சக்திக்கு மது குடிக்கும் பழக்கம் உள்ளது. இதனால் மதுகுடித்து விட்டு வந்து அடிக்கடி வீட்டில் தகராறு செய்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவும் சக்தி வழக்கம்போல் மதுகுடித்துவிட்டு வந்து வீட்டில் மனைவியுடன் தகராறில் ஈடுபட்டு உள்ளார்.

    அடித்து கொலை

    அப்போது அவர் மனைவி மணிமுடியை தாக்கியுள்ளார். இதை தடுக்க வந்த மகளையும் சக்தி தாக்க முயன்றுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மணிமுடி வீட்டில் இருந்த கடப்பாரையை எடுத்து கணவர் தலையில் பலமாக தாக்கினார். இதில் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் சக்தி சரிந்து விழுந்து இறந்தார்.

    இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்தவர்கள் கொளத்தூர் போலீசாருக்கு தகவல் அளித்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சக்தியின் உடலை மீட்டனர். மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி சக்தியின் மனைவி மணிமுடியை கைது செய்தனர். அப்போது அவர் போலீசில் அளித்த வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது:-

    வாக்குமூலம்

    எனது கணவர் குடித்துவிட்டு வந்து தினமும் வீட்டில் தகராறில் ஈடுபட்டு வந்தார். நேற்று முன்தினம் ஏற்பட்ட தகராறில் என்னை, மகளையும் தாக்க முயன்றதுடன் வீட்டில் கேனில் வைத்திருந்த மண்எண்ணையை எங்கள் மீது ஊற்றி தீ வைத்து எரிக்க முயற்சி செய்தனார். இதனால் ஆத்திரம் அடைந்த நான் கடப்பாரை எடுத்து கணவரின் தலையில் தாக்கினேன். இதில் அவர் சரிந்து விழுந்து இறந்துவிட்டார். இவ்வாறு அவர் தெரிவித்தார். இதையடுத்து போலீசார் மணிமுடியை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    • அணைக்கு வினாடிக்கு 2227 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது.
    • அணையில் இருந்து வினாடிக்கு 500 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    சேலம்:

    மேட்டூர் அணையில் இருந்து கடந்த ஜூன் மாதம் 12-ந் தேதியில் இருந்து டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதையடுத்து அணையின் நீர்மட்டம் குறைந்ததால் கடந்த மாதம் 10-ந்தேதியுடன் அணையில் இருந்து பாசனத்துக்கு திறந்து விடப்பட்ட தண்ணீர் நிறுத்தப்பட்டது.

    பருவமழை சரியாக பெய்யாததாலும், கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்துக்கு உரிய தண்ணீர் திறக்காததாலும் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைந்து காணப்பட்டது. இந்த நிலையில் தமிழக நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழை காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தும், குறைந்தும் வந்து கொண்டு இருக்கிறது.

    இதன் காரணமாக மேட்டூர் அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. இன்று காலை 8 மணி நிலவரப்படி மேட்டூர் அணையின் நீர்மட்டம் 53.16 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 2227 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது. அணையில் இருந்து வினாடிக்கு 500 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    • மேட்டூர் அனல் மின் நிலையம் முன்பு 8 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்து தொழிற்சங்க கூட்டு குழு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    • இ- டெண்டர் முறையை ரத்து செய்திட வேண்டும் என்பன உள்ளிட்ட 8 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தினர்.

    மேட்டூர்:

    சேலம் மாவட்டம் மேட்டூர் அனல் மின் நிலையம் முன்பு 8 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்து தொழிற்சங்க கூட்டு குழு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    இந்த ஆர்ப்பாட்டத்தில் மின்வாரியத்தில் உள்ள 32,000- க்கும் மேற்பட்ட ஆரம்ப நிலை பணியிடங்களை நிரப்ப வேண்டும். நுகர்வோருக்கு தரமான சேவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ஊதிய உயர்வு நிலுவைத் தொகையை 2-ம் பணி தொகுதி அலுவலர்களுக்கு வழங்க வேண்டும். 1.12.2019-க்கு பிறகு 16.5.2023 வரை பணியில் சேர்ந்த அனைத்து பணியாளர்களுக்கும் 6 சதவீதம் ஊதிய உயர்வை ஏற்றுக் கொண்டபடி வழங்கிட வேண்டும். இ- டெண்டர் முறையை ரத்து செய்திட வேண்டும் என்பன உள்ளிட்ட 8 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தினர்.

    இதில் அனைத்து தொழிற்சங்க தொழி லாளர்கள் 100-க்கும் மேற்பட்டோர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    • உழவர் சந்தைகளில் பல்வேறு புகார்கள் அதிகாரிகளுக்கு வந்த வண்ணம் இருந்தது.
    • அங்குள்ள விவசாயிகள், நுகர்வோர் உள்ளிட்டோரிடம் குறைகளை கேட்டறிந்தனர்

    அன்னதானப்பட்டி:

    சேலம் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் உழவர் சந்தைகளில் பல்வேறு புகார்கள் அதிகாரிகளுக்கு வந்த வண்ணம் இருந்தது. இந்த நிலையில் சேலம் மாவட்ட வேளாண் இணை இயக்குநர் சிங்காரம் மற்றும் அதிகாரிகள் தாதகாப்பட்டி உழவர் சந்தையில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது அங்குள்ள விவசாயிகள், நுகர்வோர் உள்ளிட்டோரிடம் குறைகளை கேட்டறிந்தனர். தொடர்ந்து குறைகளை உரிய முறையில் தீர்க்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என தெரிவித்தனர். இதில் சந்தை நிர்வாக அலுவலர், துணை வேளாண் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • சேலம் சீலநாயக்கன்பட்டி பைபாஸ் மேம்பாலம் அருகே, கடந்த சில தினங்க ளுக்கு முன்பு சுமார் 65 வயது மதிக்கத்தக்க முதியவர் மயங்கிய நிலையில் விழுந்து கிடந்தார்.
    • அன்னதானப்பட்டி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    அன்னதானப்பட்டி:

    சேலம் சீலநாயக்கன்பட்டி பைபாஸ் மேம்பாலம் அருகே, கடந்த சில தினங்க ளுக்கு முன்பு சுமார் 65 வயது மதிக்கத்தக்க முதியவர் மயங்கிய நிலையில் விழுந்து கிடந்தார். இதனைப் பார்த்த அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் அன்னதானப்பட்டி போலீ சாருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து போலீசார் அவரை மீட்டு சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் சிகிச்சைப் பலனின்றி நேற்று அவர் உயிரிழந்தார். அவர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்? என்பது குறித்த விவரங்கள் ஏதும் தெரியவில்லை. இது குறித்து அன்னதானப்பட்டி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மகளிர் உரிைம திட்ட பணிகளை செம்மையாக செய்திட மாவட்ட, வட்ட அளவில் அரசு புதிய பணியிடங்களை உருவாக்க வேண்டும்,
    • தேர்தலின் போது அரசு அளித்த வாக்குறுதிகளை உடனே நிறைவேற்ற வேண்டும் என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது

    சேலம்:

    சேலம் மாவட்ட வருவாய்த்துறை அலுவலர் சங்க கிளை மாநாடு சேலத்தில் நடந்தது. இதில் மாவட்ட தலைவர் பிரபு தலைமை தாங்கினார். மகளிர் உரிைம திட்ட பணிகளை செம்மையாக செய்திட மாவட்ட, வட்ட அளவில் அரசு புதிய பணியிடங்களை உருவாக்க வேண்டும், தாசில்தார், ஆர்.டி.ஓ. கலெக்டர் அலுவலகங்களுக்கு தேவையான கணினி, பிரிண்டர், ஜெராக்ஸ் மிஷின், இணைய தள வசதி ஏற்படுத்த வேண்டும். தேர்தலின் போது அரசு அளித்த வாக்குறுதிகளை உடனே நிறைவேற்ற வேண்டும் என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. மாவட்ட செயலாளர் அர்த்தனாரி, பொருளாளர் முருகபூபதி உள்பட பலர் பங்கேற்றனர்.  

    • எடப்பாடி சுற்று வட்டார பகுதிகளில் நேற்றிரவு 8 மணிக்கு தொடங்கிய மழை ஒரு மணி நேரம் கன மழையாக கொட்டியது. இந்த மழையால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது
    • மழையை தொடர்ந்து குளிர்ந்த காற்று வீசியது. மாவட்டத்தில் அதிக பட்சமாக எடப்பாடியில் 28.6 மி.மீ. மழை பெய்துள்ளது. சேலம் மாநகரில் 0.6 மி.மி. மழை பெய்தது

    சேலம்:

    சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக நேற்றும் மாவட்டத்தின் சில பகுதிகளில் மழை பெய்தது.

    குறிப்பாக எடப்பாடி சுற்று வட்டார பகுதிகளில் நேற்றிரவு 8 மணிக்கு தொடங்கிய மழை ஒரு மணி நேரம் கன மழையாக கொட்டியது. இந்த மழையால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.

    தாழ்வான பகுதிகள் மற்றும் வயல்வெளிகளில் தண்ணீர் தேங்கியது. இந்த மழை அந்த பகுதிகளில் பயிரிடப்பட்டுள்ள விவசாய பயிர்களுக்கு உகந்ததாக இருக்கும் என்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    சேலம் மாநகரில் நேற்றிரவு சாரல் மழை பெய்தது. இந்த மழையை தொடர்ந்து குளிர்ந்த காற்று வீசியது. மாவட்டத்தில் அதிக பட்சமாக எடப்பாடியில் 28.6 மி.மீ. மழை பெய்துள்ளது. சேலம் மாநகரில் 0.6 மி.மி. மழை பெய்தது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • கல்லூரியில் உள்ள விடுதியில் மதன்குமார் தங்கியிருந்து கல்லூரிக்கு சென்று வந்தார்.
    • கொலை நடந்த விடுதியை சோதனை செய்த போலீசார் அங்கிருந்த மதன்குமார் செல்போன் ஒன்றையும் கைப்பற்றினர்.

    சேலம்:

    நாமக்கல் மாவட்டம் வேலகவுண்டம்பட்டி அருகே உள்ள புத்தூரை சேர்ந்தவர் மதியழகன் காண்டிராக்டர். இவரது மனைவி பூங்கொடி. இந்த தம்பதிக்கு மதன்குமார் (29)என்ற மகனும், ஜனனிஸ்ரீ (24) என்ற மகளும் இருந்தனர். இவர் தனியார் கல்லூரியில் லேப் டெக்னீசியனாக வேலை பார்த்து வருகிறார்.

    எம்.பி.பி.எஸ். படித்துள்ள டாக்டர் மதன்குமாருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. எம்.பி.பி.எஸ். படித்த இவர் 2 ஆண்டுகள் திருச்செங்கோட்டில் உள்ள ஒரு ஆஸ்பத்திரியில் டாக்டராக பணியாற்றினார். தொடர்ந்து நீட் தேர்வு எழுதிய அவர் ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் உள்ள ராஜேந்திரா மருத்துவக் கல்லூரியில் தடயவியல் மருத்துவம் மற்றும் நச்சுவியல் மேற்படிப்பில் சேர்ந்தார்.

    தற்போது 2-ம் ஆண்டு படித்து வந்தார். கல்லூரியில் உள்ள விடுதியில் மதன்குமார் தங்கியிருந்து கல்லூரிக்கு சென்று வந்தார். இந்த நிலையில் திடீரென மதன்குமார் மாயமானார். சக மாணவர்கள் அவரை பல இடங்களில் தேடினர். அப்போது விடுதியின் பின்புறம் மதன்குமார் பிணமாக கிடந்தார். அவரது உடல் பாதி எரிந்த நிலையில் கிடந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த சக மாணவர்களும் கல்லூரி நிர்வாகத்தினரும் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

    சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் மாணவர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    விசாரணையில், விடுதியின் மாடியில் வைத்து டாக்டர் மதன்குமாரை கொலை செய்த மர்ம நபர்கள் அவரது உடலை தீ வைத்து எரித்துள்ளனர். பின்னர் பாதி எரிந்த நிலையில் உடலை தூக்கி கீழே போட்டதில் அந்த உடல் விடுதியின் பின்புறத்தில் விழுந்து கிடந்தது தெரிய வந்துள்ளது.

    சம்பவ இடத்தில் இருந்த தடயங்களை போலீசார் கைப்பற்றி உள்ளனர். மேலும் கொலை நடந்த விடுதியை சோதனை செய்த போலீசார் அங்கிருந்த மதன்குமார் செல்போன் ஒன்றையும் கைப்பற்றினர்.

    மேலும் அங்கு பதிவாகி இருந்த சில கை ரேகைகளையும் சேகரித்து ஆய்வுக்கு அனுப்பி உள்ளனர். விடுதியின் மேற்கூரையில் பதிவாகி இருந்த கால் தடங்களையும் போலீசார் பதிவு செய்துள்ளனர்.

    இது தவிர சம்பவ இடத்தில் இருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளையும் போலீசார் தீவிரமாக ஆய்வு செய்து வருகிறார்கள். மேலும் விடுதியில் இருந்த மாணவர்களிடமும் விசாரணை நடத்தி உள்ளனர்.

    கடந்த 31-ந் தேதி இரவு மதன்குமார் அவரது செல்போனில் இருந்து கடைசியாக பேசி உள்ளார். அவர் யாரிடம் பேசி உள்ளார் என்பது குறித்தும், என்ன பேசினார் என்பது குறித்தும் ஆய்வு செய்யப்பட்டு வருவதாக போலீஸ் அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகே டாக்டர் மதன்குமார் இறப்புக்கு உண்மையான காரணம் தெரிய வரும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும் மாணவர்கள் ஏதாவது போட்டியில் கொலை செய்திருக்கலாமா? என்ற சந்தேகமும் எழுந்துள்ளது. அதன்பேரிலும் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர்.

    இதற்கிடையே டாக்டர் மதன்குமார் இறந்த தகவல் நாமக்கல் அருகே புத்தூரில் வசிக்கும் அவரது பெற்றோருக்கு தெரிவிக்கப்பட்டது. அதனை கேட்டு கதறி துடித்த அவர்கள் உடனடியாக கோவைக்கு சென்று அங்கிருந்து விமானத்தில் டெல்லி சென்றனர்.

    தற்போது டெல்லியில் இருந்து ஜார்கண்டிற்கு சென்று கொண்டிருக்கிறார்கள். தொடர்ந்து அவர்கள் அளிக்கும் புகார்களின் அடிப்படையிலும் போலீசார் விசாரிக்கவும், நடவடிக்கை எடுக்கவும் தயாராகி வருகிறார்கள். மேலும் பெற்றோரிடம் ஒப்புதல் பெற்றதும் மதன்குமார் உடல் பிரேத பரிசோதனை இன்று மேற்கொள்ளப்பட உள்ளது.

    தொடர்ந்து மதன்குமார் உடலை நாமக்கல் கொண்டு வர மாவட்ட நிர்வாகம் சார்பில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதற்கான நடவடிக்கைகளில் அதிகாரிகளும், மதன்குமாரின் பெற்றோர்களும் இறங்கி உள்ளனர். இதையொட்டி அவரது சொந்த ஊரில் உறவினர்கள் திரண்டு உள்ளனர். இதனால் அந்த கிராமமே சோகத்தில் மூழ்கி உள்ளது.

    • ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்த சக்தி சம்பவ இடத்திலேயே துடி துடித்து இறந்தார்.
    • போலீசார் சக்தியின் மனைவி மணிமுடியிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மேட்டூர்:

    சேலம் மாவட்டம் மேட்டூர் அடுத்த கொளத்தூர் கொசவன்கரடு பகுதியை சேர்ந்தவர் சக்தி (42). லாரி டிரைவர். இவரது மனைவி மணிமுடி (35). இவர்களது மகள் கேந்திரியா (11) அங்குள்ள தனியார் பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வருகிறாள்.

    இந்த நிலையில் சக்தி குடி பழக்கத்திற்கு அடிமையானதால் தினமும் குடித்து விட்டு வந்து மனைவியுடன் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். நேற்று இரவும் குடித்துவிட்டு வந்து மனைவியிடம் தகராறில் ஈடுபட்டார். இருவருக்கும் இடையே தகராறு முற்றவே ஆத்திரமடைந்த மணிமுடி கணவர் சக்தியை வீட்டிலிருந்த இரும்பு கம்பியால் தலையில் பலமாக அடித்துள்ளார்.

    இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்த சக்தி சம்பவ இடத்திலேயே துடி துடித்து இறந்தார். இதுகுறித்து தகவல் அறிந்து கொளத்தூர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சக்தியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மேட்டூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் சக்தியின் மனைவி மணிமுடியிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×