என் மலர்
சேலம்
- ஏற்காட்டில் சாரல் மழை பெய்து கொண்டு இருந்தது.
- மழையின் காரணமாக வெப்பம் குறைந்து குளிர்ச்சியான சீதோஷ்ண நிலை ஏற்பட்டுள்ளது.
சேலம்:
சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கோடை காலம் போல பகல் நேரத்தில் வெயில் அதிகளவில் இருந்தது. குறிப்பாக வழக்கத்தை விட சுட்டெரிக்கும் அனல் காற்று வீசியது. இதனால் பொதுமக்கள் பகல் நேரத்தில் அவதிப்பட்டனர். இந்த நிலையில் திடீரென மாலை 4 மணியளவில் குளிர்ந்த காற்று வீச தொடங்கியது. பின்னர் திடீரென மழை கொட்டியது. சேலம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் இடி-மின்னலுடன் மழை கொட்டியது.
சேலம் அம்மாபேட்டை, உடையாப்பட்டி பகுதியில் சுமார் 30 நிமிடம் இடி-மின்னலுடன் பலத்த மழை கொட்டியது. இதனால் சாலைகளில் மழை வெள்ளம் ஆறாக செந்நிறத்தில் ஓடியது. இதே போல் வாழப்பாடி, ஆத்தூர், கெங்கவல்லி, ஏத்தாப்பூர், தம்மம்பட்டி, கரியகோவில், மேட்டூர், சங்ககிரி உள்பட மாவட்டம் முழுவதுமே பலத்த மழை கொட்டியது.
ஏற்காட்டில் நேற்று மாலை 3.50 மணிக்கு பெய்ய தொடங்கிய மழை சுமார் 20 நிமிடம் கொட்டியது. பின்னர் லேசாக மழை தூறிக்கொண்டே இருந்தது. பின்னர் மீண்டும் இரவு 7 மணிக்கு பெய்ய தொடங்கிய மழை இரவு 8 மணி வரை ஒரு மணிநேரம் கனமழையாக நீடித்தது. தொடர்ந்து விடிய, விடிய, மழை பெய்து கொண்டே இருந்தது. இன்று காலையும் ஏற்காட்டில் சாரல் மழை பெய்து கொண்டு இருந்தது.
தொடர்ந்து விடிய, விடிய மழை பெய்து வருவதால் ஏற்காட்டில் கடுமையான குளிர்நிலவி வருகிறது. இதே போல் பனிமூட்டமும் அதிகளவில் ஏற்பட்டு இருப்பதால் பொதுமக்கள் கடும் அவதியடைந்து வருகிறார்கள். சேலம் மாவட்டம் முழுவதும் பெய்த மழையின் காரணமாக வெப்பம் குறைந்து குளிர்ச்சியான சீதோஷ்ண நிலை ஏற்பட்டுள்ளது.
சேலம் மாவட்டத்தில் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:- சேலம்-6, ஏற்காடு-29, வாழப்பாடி-4.5, ஆனைமடுவு-29, ஆத்தூர்-41, கெங்கவல்லி-63, தம்மம்பட்டி-2, ஏத்தாப்பூர்-20, கரிய கோவில்-70, வீரகனூர்-40, நத்தகரை-28, சங்ககிரி-5.1, எடப்பாடி-2, மேட்டூர்-6.8, ஓமலூர்-3.5, டேனிஷ்பேட்டை-45.
இதே போல் நாமக்கல் மாவட்டத்திலும் பல்வேறு பகுதிகளில் மழை பெய்தது. கொல்லிமலை, சேந்தமங்கலம், திருச்செங்கோடு, பகுதிகளில் பலத்த மழை கொட்டியது. பரமத்திவேலூர் தாலுகா பெருங்குறிச்சி, குப்பிரிக்காபாளையம், சுள்ளிப்பாளையம், சோழசிராமணி, ஜமீன் இளம்பள்ளி, குரும்பல மகாதேவி ,கொத்தமங்கலம், சிறுநல்லி கோவில், திடுமல், தி.கவுண்டம்பாளையம், பெரியசோளிபாளையம், கபிலர்மலை, இருக்கூர், கோப்பணம் பாளையம், கொந்தளம், சேளூர், பிலிக்கல் பாளையம், அய்யம்பாளையம், ஆனங்கூர், வடகரை யாத்தூர், பாண்டமங்கலம், வெங்கரை, பொத்தனூர், பரமத்திவேலூர், பரமத்தி, நன்செய் இடையாறு, பாலப்பட்டி, மோகனூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நேற்று இரவு 10 மணிக்கு மேல் திடீரென சாரல் மழை பெய்ய ஆரம்பித்தது. அதனைத் தொடர்ந்து கடும் இடி மின்னலுடன் கூடிய கனமழை சற்று வேகமாக விடிய விடிய பெய்தது . இதன் காரணமாக இரவு முழுவதும் குளிர்ந்த காற்று நிலவியது.
மாவட்டத்தில் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-
சேந்தமங்கலம் - 97, கொல்லிமலை - 84, நாமக்கல் - 88, திருச்செங்கோடு - 74, பரமத்திவேலூர் - 65.50, எருமப்பட்டி - 40, கலெக்டர் வளாகம் - 34, மோகனூர்- 31, மங்களபுரம் - 20, குமாரபாளையம் - 1.20, புதுச்சத்திரம் 17, ராசிபுரம் - 10.
- கடந்த ஜூலை மாதம் பெய்த மழையின் காரணமாக மேட்டூர் அணை நிரம்பியது.
- மழை நின்றதால் நீர்வரத்தும் குறைந்து காணப்பட்டது.
சேலம்:
மேட்டூர் அணை மூலம் காவிரி டெல்டா மாவட்டங்கள், கிழக்கு, மேற்கு கால்வாய் மூலம் சேலம், ஈரோடு, நாமக்கல் மாவட்டங்கள் பாசன வசதி பெற்று வருகிறது. இதுதவிர ஏராளமான கூட்டு குடிநீர் திட்டப்பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கர்நாடகாவில் பெய்து வரும் மழையை பொறுத்து மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தும், குறைந்தும் வந்து கொண்டு இருக்கிறது.
இந்த நிலையில் கடந்த ஜூலை மாதம் பெய்த மழையின் காரணமாக மேட்டூர் அணை நிரம்பியது. பின்னர் மழை நின்றதால் நீர்வரத்தும் குறைந்து காணப்பட்டது. ஆனாலும் காவிரி டெல்டா மாவட்டங்கள் மற்றும் கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனத்துக்கு தொடர்ந்து தண்ணீர் திறக்கப்பட்டு வருவதால் மேட்டூர் அணையின் நீர்மட்டமும் வேகமாக குறைந்து வருகிறது.
இன்றுகாலை நிலவரப்படி மேட்டூர் அணையின் நீர்மட்டம் 93.40 அடியாக குறைந்து காணப்பட்டது. அணைக்கு நேற்று வினாடிக்கு 7 ஆயிரத்து 153 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்த நிலையில் இன்று அது 6 ஆயிரத்து 416 கனஅடியாக குறைந்தது. மேலும் அணையில் இருந்து டெல்டாவுக்கு 15 ஆயிரம் கனஅடியும், கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனத்துக்கு வினாடிக்கு 800 கனஅடியும் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. தற்போது அணையில் 56.62 டி.எம்.சி.தண்ணீர் இருப்பு உள்ளது.
- சென்னன் கோவிலுக்கு செல்வதற்காக தனது மகள் சுதா, பேரன் விஷ்ணு ஆகியோரை மோட்டார் சைக்கிளில் ஏற்றிக்கொண்டு சென்றார்.
- நாமக்கல் நோக்கி பருப்பு ஏற்றி வந்த லாரி அவர்கள் மீது மோதி விபத்தானது.
பனமரத்துப்பட்டி:
சேலம் மாவட்டம் பனமரத்துப்பட்டி அருகே உள்ள திப்பம்பட்டி காமராஜர் காலனியை சேர்ந்தவர் சென்னன் (65). இவரது மகள் சுதா (38). இவரை சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே உள்ள வெள்ளாள குண்டத்தை சேர்ந்த வெங்கடாசலம் என்பவருக்கு திருமணம் செய்து வைத்தார். சுதா-வெங்கடாசலம் ஆகியோருக்கு விஷ்ணு (12) என்ற மகன் இருந்தார். இவர் வெள்ளாள குண்டம் அரசு பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வந்தார்.
தற்போது விஷ்ணுவுக்கு காலாண்டு தேர்வு விடுமுறை என்பதால் சுதா தனது மகன் விஷ்ணுவை அழைத்துக்கொண்டு திப்பம்பட்டியில் உள்ள தனது பெற்றோர் வீட்டிற்கு வந்தார். இந்த நிலையில் சென்னன் தனது மகள் சுதா, பேரன் விஷ்ணு ஆகியோருடன் சமயபுரம் கோவிலுக்கு செல்ல முடிவு செய்தார்.
அதன்படி இன்று காலை சென்னன் கோவிலுக்கு செல்வதற்காக தனது மகள் சுதா, பேரன் விஷ்ணு ஆகியோரை மோட்டார் சைக்கிளில் ஏற்றிக்கொண்டு சென்றார். தனது மோட்டார் சைக்கிளை மல்லூரில் உள்ள ஒரு ஸ்டேண்டில் நிறுத்திவிட்டு பஸ்சில் செல்ல திட்டமிட்டு இருந்தார்.
இந்த நிலையில் இன்று காலை 7 மணியளவில் சென்னன் சேலம்-நாமக்கல் தேசிய நெடுஞ்சாலையில் மல்லூர் பிரிவு ரோட்டில் வந்தபோது சேலத்தில் இருந்து நாமக்கல் நோக்கி பருப்பு ஏற்றி வந்த லாரி அவர்கள் மீது மோதி விபத்தானது. இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்ட சென்னன், அவரது மகள் சுதா, பேரன் விஷ்ணு ஆகிய 3 பேரும் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பலியானார்கள்.
இதுபற்றி தெரியவந்ததும் மல்லூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விபத்தில் பலியான 3 பேரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்தை ஏற்படுத்திய நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் பகுதியை சேர்ந்த சுந்தரராஜன் (57) என்பவரை பிடித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழை நின்றதால் நீர்வரத்து குறைந்தது.
- இன்று காலை நிலவரப்படி மேட்டூர் அணையின் நீர்மட்டம் 95.30 அடியாக இருந்தது.
சேலம்:
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையை பொறுத்து தமிழகத்துக்கு காவிரியில் தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது. கடந்த ஜூலை மாதம் தொடக்கத்தில் பெய்த மழையின் காரணமாக நீர்வரத்து அதிகரித்து மேட்டூர் அணை நிரம்பியது.
பின்னர் நீர்வரத்து குறைந்ததாலும், அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீர் தொடர்ந்து வெளியேற்றப்பட்டு வந்ததாலும் அணையின் நீர்மட்டம் குறைந்தது. பின்னர் மீண்டும் பெய்த மழையின் காரணமாக நீர்வரத்து அதிகரித்து இந்த ஆண்டில் 2-வது முறையாகவும் மேட்டூர் அணை நிரம்பியது.
இதற்கிடையே நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழை நின்றதால் நீர்வரத்து குறைந்தது. ஆனாலும் பாசனத்துக்கு தொடர்ந்து தண்ணீர் திறக்கப்பட்டு வருவதால் அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென குறைந்து வருகிறது. கடந்த 3 நாட்களாக அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வருகிறது.
இன்று காலை நிலவரப்படி மேட்டூர் அணையின் நீர்மட்டம் 95.30 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு நேற்று 2 ஆயிரத்து 718 கனஅடியாக இருந்த நீர்வரத்து இன்று 3 ஆயிரத்து 284 கனஅடியாக அதிகரித்து காணப்பட்டது. அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு 15 ஆயிரம் கனஅடியும், கிழக்கு, மேற்கு கால்வாய் பாசன திட்டத்துக்கு 700 கனஅடியும் திறக்கப்பட்டு வருகிறது. தற்போது அணையில் 58.92 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது.
- மேற்கு கால்வாய் பாசனத்துக்கு 700 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
- அணையில் தற்போது 60.01 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது.
சேலம்:
மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 96.19 அடியாக இருந்தது. அணைக்கு நேற்று வினாடிக்கு 2 ஆயிரத்து 556 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்த நிலையில் அது இன்று 2 ஆயிரத்து 718 கனஅடியாக அதிகரித்து காணப்பட்டது.
அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு 15 ஆயிரம் கனஅடியும், கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனத்துக்கு 700 கனஅடியும் தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
அணையில் தற்போது 60.01 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது.
- காலையிலேயே சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்து காணப்பட்டது.
- படகு இல்லம் சுற்றுலாப் பயணிகள் கூட்டத்தால் களைகட்டியது.
ஏற்காடு:
ஏற்காட்டில் நிலவி வரும் குளுகுளு சீசனை அனுபவிக்க தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், கேரளா, கர்நாடகா மாநிலங்களில் இருந்தும் சுற்றுலாப் பயணிகள் அதிகளவில் வந்து செல்கிறார்கள்.
குறிப்பாக அரசு விடுமுறை நாட்கள், வார இறுதி நாட்கள், தொடர் விடுமுறை நாட்களில் சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்து காணப்படும்.
இந்த நிலையில் கடந்த ஒரு வாரமாக தமிழகத்தில் பள்ளிகளில் காலாண்டு தேர்வுகள் நடந்ததால் சுற்றுலாப் பயணிகள் இன்றி ஏற்காடு வெறிச்சோடியது.
இதற்கிடையே தற்போது பள்ளிகளில் காலாண்டு தேர்வு முடிந்து தொடர் விடுமுறை அளிக்கப்பட்டு இருப்பதாலும், இன்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதாலும் காலையிலேயே சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்து காணப்பட்டது.

அவர்கள் இங்குள்ள முக்கிய சுற்றுலா தலங்களான லேடிஸ் சீட், அண்ணாபூங்கா, ஏரிபூங்கா, ஐந்திணை பூங்கா, பொட்டானிக்கல் கார்டன், பக்கோடா பாயிண்ட் போன்ற இடங்களை கண்டு ரசித்து மகிழ்ந்தனர். மேலும் படகு இல்லத்தில் சுற்றுலாப் பயணிகள் படகு சவாரி செய்ய நீண்ட நேரம் காத்திருந்தனர்.
காலை நேரத்திலேயே படகு இல்லம் சுற்றுலாப் பயணிகள் கூட்டத்தால் களைகட்டியது. சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரிப்பு காரணமாக மலைப்பாதை, ஏற்காடு அண்ணா பூங்கா, ஏரி பூங்கா சாலையில் கடுமையான போக்கு வரத்து நெரிசல் ஏற்பட்டது.
- கொள்ளையடிப்பதில் கைதேர்ந்தவர்களை தேர்வு செய்து பல்வேறு குழுக்களாக பிரிந்து நாடு முழுவதும் கொள்ளையடித்து வந்தது தெரியவந்தது.
- கொள்ளை கும்பலுக்கு அரியானாவில் பயிற்சியும் அளிக்கப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.
சேலம்:
நாமக்கல்லில் பிடிப்பட்ட ஏ.டி.எம். கொள்ளை கும்பல் இந்தியா முழுவதும் கைவரிசை காட்டியிருப்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது. கண்டெய்னர் லாரிகளில் சென்று கூகுள் மேப் மூலம் ஸ்டேட் பாங்க் ஏ.டி.எம்.களை கண்காணித்து கொள்ளையடித்து வந்துள்ளனர்.
நாமக்கல்லில் பிடிப்பட்ட 5 பேரிடமும் தமிழகம், கேரளா, ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களை சேர்ந்த போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். அப்போது மகாராஷ்டிராவில் கடந்த 2021-ம் ஆண்டு கொள்ளையடிக்க முயன்ற போது இவர்கள் போலீசில் சிக்கியுள்ளனர். அப்போது அவர்களின் பெயர், முகவரிகளை மாற்றி தெரிவித்துள்ளனர். ஆனாலும் அவர்களின் புகைப்படம், கைரேகை பதிவாகி உள்ளது.
இவர்கள் கொள்ளையடிப்பதில் கைதேர்ந்தவர்களை தேர்வு செய்து பல்வேறு குழுக்களாக பிரிந்து நாடு முழுவதும் கொள்ளையடித்து வந்தது தெரியவந்தது. மேலும் ஏ.டி.எம்.களில் கொள்ளையடித்த பணத்தை யாரிடம் கொடுக்கிறார்கள். சொத்துக்கள் வாங்கி குவித்துள்ளார்களா? என்றும் போலீசார் விசாரணை நடத்தினர். மேலும் கொள்ளையர்களின் வங்கி கணக்குகள் குறித்தும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த கொள்ளை கும்பலில் 70 பேர் கொண்ட கும்பல் இருக்கும் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் கொள்ளை கும்பலுக்கு அரியானாவில் பயிற்சியும் அளிக்கப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.
- நாமக்கல் அருகே விபத்து ஏற்படுத்தி நிற்காமல் சென்றதால் பொதுமக்கள் போலீசில் தகவல்.
- டிரைவரிடம் விசாரணை நடத்தியபோது பணம் இருந்ததாக தகவல்.
கேரள மாநில ஏ.டி.எம். கொள்ளை
கேரள மாநிலம் திருச்சூரில் மாப்ராணம், கொளழி, சொரனூர் ரோடு பகுதிகளில் பாரத ஸ்டேட் வங்கிக்கு சொந்தமான ஏ.டி.எம். எந்திரங்கள் உள்ளன. இந்த ஏ.டி.எம்.மையங்களில் நேற்று இரவு யாரோ புகுந்து பணத்தை கொள்ளையடித்துள்ளனர். இன்று அதிகாலை அந்த வழியே சென்றவர்கள், ஏ.டி.எம். எந்திரங்கள் சேதப்படுத்தப்பட்டு இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.
இதுபற்றி போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அவர்கள் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். வங்கி அதிகாரிகளும் ஏ.டி.எம். மையங்களுக்கு வந்தனர். அவர்கள் ஏ.டி.எம். எந்திரங்களில் இருந்த ரூ.65 லட்சம் கொள்ளை போயிருப்பதாக தெரிவித்தனர்.
ஏ.டி.எம். மையங்களில் இருந்த கண்காணிப்பு கேமராக்களில் பெயிண்ட் அடித்து பதிவுகள் தடுக்கப்பட்டிருப்பது போலீசாரின் விசாரணையில் தெரிய வந்தது. இதனைத்தொடர்ந்து போலீசார் அந்த பகுதிகளில் உள்ள மற்ற கண்காணிப்பு காமிராக்களின் பதிவுகளை கைப்பற்றி போலீசார் ஆய்வு செய்தனர்.
அப்போது இன்று அதிகாலை 3 மணி முதல் 4 மணிக்குள் வெள்ளைநிற காரில் முகமூடி அணிந்த 4 பேர் வந்து இறங்குவதும், அவர்கள் கையில் கியாஸ் கட்டர் எடுத்து வந்திருப்பதும் தெரியவந்தது. 4 பேரும் ஏ.டி.எம். மையத்திற்குள் நுழைவதும் அங்குள்ள கண்காணிப்பு காமிரா மீது பெயிண்ட் அடிக்கின்றனர். பின்னர்தான் அவர்கள் கியாஸ் கட்டர் கொண்டு ஏ.டி.எம். எந்திரத்தை வெட்டி பணம் எடுத்துள்ளனர்.
- போலீசாரின் சோதனையில் பிடிபட்ட கண்டெய்னரில் கட்டுக்கட்டாக பணம எனத் தகவல்.
- கேரளா ஏ.டி.ஏம். மையங்களில் இருந்து கொள்கை அடிக்கப்பட்ட பணமாக இருக்கலாம் என சந்தேகம்.
நாமக்கல் மாவட்டம் வெப்படையில் 4 பைக், ஒரு காரை இடித்துத்தள்ளிய கண்டெய்னர் லாரி அதிவேகமாக நிற்காமல் சென்றது. இதனால் சந்தேகம் அடைந்த பொதுமக்கள் வெப்படை காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற குமாரபாளையம் மற்றும் வெப்படி காவல் நிலைய போலீசார் கண்டெய்னரை பின்தொரட்ந்தனர். சேலம் மாவட்டம் சன்னியாசிபட்டி அருகே கண்டெய்னர் லாரியை சுற்றி வளைத்தனர்.
அப்போது லாரியின் முன்பக்கத்தில் இருந்து நான்கு வட இந்தியர்களை பொதுமக்கள் கீழே இழுத்து தர்ம அடி கொடுத்தனர். டிஎஸ்பி மற்றும் போலீசார் பொதுமக்களிடம் இருந்து அவர்களை மீட்டனர். 500-க்கும் மேற்பட்ட மக்கள் அங்கு கூடியதால் 100-க்கும் மேற்பட்ட போலீசார் சம்பவ இடத்திற்கு அனுப்பி வைத்தனர்.
கண்டெய்னர் லாரி டிரைவரிடம் போலீசார் விசாரணை நடத்தியதில் கண்டெய்னரில் பணம் இருப்பதாக தெரிவித்தார். அத்துடன் கண்டெய்னருக்குள் துப்பாக்கியுடன் கொள்ளையர்கள் இருப்பதாகவும் தெரிவித்தார்.
இதனால் கண்டெய்னரை திறப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அந்த கண்டெய்னரை போலீசார் காட்டுப்பகுதிக்குள் கொண்டு சென்று அதிரடி மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
கேரளாவில் உள்ள மூன்று ஏ.டி.எம். மையங்களில் 65 லட்சம் ரூபாய் கொள்கை அடிக்கப்பட்டது. இந்த பணம் கண்டெய்னரில் இருக்குமா? என்ற சந்தேகம் எழும்பியுள்ளது.
- மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 98.03 அடியாக இருந்தது.
- தற்போது அணையில் 62.31 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது.
சேலம்:
மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 98.03 அடியாக இருந்தது. அணைக்கு நேற்று வினாடிக்கு 3 ஆயிரத்து 355 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்த நிலையில் அது இன்று 2 ஆயிரத்து 694 கனஅடியாக குறைந்தது.
அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு வினாடிக்கு 15 ஆயிரம் கனஅடியும், கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனத்துக்கு வினாடிக்கு 700 கனஅடியும் திறக்கப்பட்டு வருகிறது. தற்போது அணையில் 62.31 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது.
- மாணவி சேலம் மாவட்டம் தலைவாசல் பகுதியை சேர்ந்த 19 வயது வாலிபருடன் இன்ஸ்டாகிராம் மூலம் பழகி வந்தது தெரியவந்தது.
- மாணவியை மீட்ட போலீசார் அவரை சேலத்தில் உள்ள ஒரு காப்பகத்தில் ஒப்படைத்தனர்.
சேலம்:
சேலம் இரும்பாலையை சேர்ந்தவர் 14 வயது சிறுமி. இவர் அங்குள்ள தனியார் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகிறார்.
இந்த நிலையில் கடந்த 18-ந் தேதி வீட்டில் இருந்து பள்ளிக்கு சென்ற அந்த மாணவி பின்னர் வீடு திரும்பவில்லை. இதையடுத்து பெற்றோர் பள்ளிக்கு சென்று விசாரித்த போது அவர் பள்ளியில் இருந்து வீட்டுக்கு சென்று விட்டதாக தெரிவித்தனர்.
இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் பல இடங்களிலும் தேடினர். ஆனால் அவர் குறித்து எந்த தகவலும் கிடைக்காததால் பெற்றோர் சூரமங்கலம் அனைத்து மகளிர் போலீசில் புகார் கொடுத்தனர். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி அவரை தேடினர்.
விசாரணையில், அந்த மாணவி சேலம் மாவட்டம் தலைவாசல் பகுதியை சேர்ந்த 19 வயது வாலிபருடன் இன்ஸ்டாகிராம் மூலம் பழகி வந்தது தெரியவந்தது. இதையடுத்து அங்கு விரைந்து சென்று போலீசார் விசாரணை நடத்திய போது தலைவாசலை அடுத்த வேப்பநத்தம் பகுதியை சேர்ந்த யுவராஜ் (19) என்பவர் மாணவியை கடத்தி திருமணம் செய்து குடும்பம் நடத்தி வந்தது தெரிய வந்தது.
இதையடுத்து மாணவியை மீட்ட போலீசார் அவரை சேலத்தில் உள்ள ஒரு காப்பகத்தில் ஒப்படைத்தனர். யுவராஜை போக்சோ சட்டத்தில் கைது செய்து சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.
- சேலத்தில் உள்ள குழந்தைகள் நல ஆணையத்தை தொடர்பு கொண்டு தகவல் கூறி உள்ளார்.
- குழந்தைகளை விற்பனை செய்த விவரம் குறித்தும், அதற்கு துணையாக செயல்பட்ட புரோக்கர்கள் குறித்தும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
எடப்பாடி:
சேலம் மாவட்டம் எடப்பாடி ஒன்றியத்திற்குட்பட்ட சித்தூர் கிராமம், திம்பத்தியான் வளவு பகுதியைச் சேர்ந்தவர் சேட்டு (32). கரும்பு வெட்டும் கூலி தொழிலாளி. இவரது மனைவி குண்டுமல்லி இவர்களுக்கு கடந்த 7 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடைபெற்றது. இதுவரை இவர்கள் 6 குழந்தைகளை பெற்றெடுத்துள்ளனர்.
சேட்டு-குண்டுமல்லி தம்பதிக்கு அண்மையில் 6-வதாக பெண் குழந்தை பிறந்துள்ளது. அந்த பெண் குழந்தையை சேட்டு புரோக்கர்கள் மூலம் நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் பகுதியைச் சேர்ந்த ஒருவருக்கு ரூ.1 லட்சத்திற்கு விற்பனை செய்ய முயற்சி செய்து உள்ளார். ஆனால் அவர் இந்த குழந்தையை சட்டபூர்வமாகவே தான் தத்தெடுக்க முடிவு செய்துள்ளதாக கூறி, சேலத்தில் உள்ள குழந்தைகள் நல ஆணையத்தை தொடர்பு கொண்டு தகவல் கூறி உள்ளார்.
இது குறித்து சம்பந்தப்பட்ட அலுவலர்கள் சேட்டுவை பிடித்து விசாரணை மேற்கொண்ட போது, ஏற்கனவே தனக்கு பிறந்த 2 ஆண் குழந்தை மற்றும் ஒரு பெண் குழந்தையை தலா ரூ. 1 லட்சத்துக்கு புரோக்கர்கள் மூலம், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்தவர்களுக்கு விற்பனை செய்ததும், தற்போது பிறந்த பெண் குழந்தையை குமாரபாளையம் பகுதியைச் சேர்ந்தவருக்கு 1 லட்சம் ரூபாய்க்கு விற்பனை செய்ய முயற்சித்த போது போலீசாரிடம் சிக்கியதும் தெரியவந்தது. இதனை அடுத்து சேட்டுவை கைது செய்த போலீசார் தொடர்ந்து அவர்கள் குழந்தைகளை விற்பனை செய்த விவரம் குறித்தும், அதற்கு துணையாக செயல்பட்ட புரோக்கர்கள் குறித்தும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.






