என் மலர்
சேலம்
- வாழப்பாடி மற்றும் கருமந்துறை பகுதியில் 4 வீடுகளில் கைவரிசை காட்டியது தெரியவந்தது.
- திருட்டு கும்பலை சேர்ந்த மற்ற நபர்களை பிடிக்க தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
வாழப்பாடி:
சேலம் மாவட்டம் வாழப்பாடி அடுத்த சேஷன்சாவடி ரெயில்வே ஸ்டேஷன் பகுதியைச் சேர்ந்த செல்லம்மாள் என்பவர் வீட்டில், கடந்த மார்ச் 27-ந் தேதி பட்டப்பகலில், 9 பவுன் நகைகளை மர்ம கும்பல் கொள்ளையடித்துச் சென்றது.
இதேபோல், வாழப்பாடி செல்லியம்மன் நகர் பகுதியை சேர்ந்த ஓய்வு பெற்ற வட்டாட்சியர் சின்னசாமி என்பவர், குடும்பத்தோடு வெளியூருக்கு சென்றிருந்த நேரத்தில், இவரது வீட்டிற்குள் புகுந்த மர்மகும்பல், 6 பவுன் தங்க நகைகளை திருடிச் சென்றனர்.
மேலும் கல்வராயன் மலை கருமந்துறை பகுதியைச் சேர்ந்த சுகாதார ஆய்வாளர் சிசில்தேவன் என்பவரது வீட்டிலும், அதே பகுதியைச் சேர்ந்த மாது என்பவர் வீட்டிலும் இந்த மர்ம கும்பல் தங்க நகைகளை கொள்ளையடித்துச் சென்றது.
இதனையடுத்து, வாழப்பாடி பகுதியில் தொடர் கைவரிசை காட்டி வந்த இந்த திருட்டு கும்பலை பிடிக்க, வாழப்பாடி போலீஸ் டி.எஸ்.பி ஹரி சங்கரி தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. தீவிர விசாரணை நடத்திய தனிப்படை போலீசார், இந்த மர்ம கும்பல் குறித்து துப்பறிந்தனர்.
அதன்படி, வேறொரு திருட்டு வழக்கில் சிக்கி, புதுக்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டிருந்த, இந்த கும்பலைச் சேர்ந்த கருமந்துறை தாழ்வீதி தேவா (வயது 49). மற்றும் இவரது சிறை நண்பரான தூத்துக்குடி லாசர் (47) ஆகிய இருவரையும், 2 நாட்கள் நீதிமன்ற காவலில் எடுத்து, வாழப்பாடிக்கு கொண்டு வந்து போலீசார் விசாரணை நடத்தினர்.
இதில், இந்த கும்பல் வாழப்பாடி மற்றும் கருமந்துறை பகுதியில் 4 வீடுகளில் கைவரிசை காட்டியது தெரியவந்தது. இவர்களிடமிருந்த திருட்டு நகைகளை பறிமுதல் செய்த போலீசார், இருவரையும் கைது செய்து மீண்டும் புதுக்கோட்டை சிறைக்கு கொண்டு சென்று அடைத்தனர்.
மேலும் இந்த திருட்டு கும்பலை சேர்ந்த மற்ற நபர்களை பிடிக்க தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த கும்பலுக்கு மூளையாக செயல்பட்டவர் மற்றும் நகைகளை பதுக்கி வைத்திருக்கும் நபர்களை பிடித்து நகைகளை கைப்பற்றி, உரிமையாளர்களிடம் ஒப்படைக்க தனிப்படை போலீசார் திட்டமிட்டுள்ளனர்.
- மேட்டூர் அணையில் இருந்து காவிரியில் 1500 கன அடி தண்ணீர், குடிநீர் தேவைக்காக திறந்து விடப்பட்டுள்ளது
- மேட்டூர் அணைக்கு வரும் தண்ணீரை விட அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறந்து விடப்படுவதால் நீர்மட்டம் சரிந்து வருகிறது.
மேட்டூர்:
காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் மழை விட்டு விட்டு பெய்வதால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைவதும், அதிகரிப்பதுமாக உள்ளது.
இந்தநிலையில், நேற்று காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையால், மேட்டூர் அணைக்கு நேற்று விநாடிக்கு 715 கன அடியாக இருந்த நீர்வரத்து, இன்று காலை நிலவரப்படி விநாடிக்கு 1178 கன அடியாக அதிகரித்து வந்து கொண்டிருக்கிறது.
அணையில் இருந்து காவிரியில் 1500 கன அடி தண்ணீர், குடிநீர் தேவைக்காக திறந்து விடப்பட்டுள்ளது. அணைக்கு வரும் தண்ணீரை விட அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறந்து விடப்படுவதால் நீர்மட்டம் சரிந்து வருகிறது.
நேற்று 103.63 அடியாக இருந்த மேட்டூர் அணை நீர்மட்டம், இன்று மேலும் சரிந்து 103.59 அடியானது. இனிவரும் நாட்களில் நீர்வரத்து அதிகரிக்கும் பட்சத்தில் மேட்டூர் அணை நீர்மட்டம் உயர வாய்ப்புள்ளது.
- சேலம் அரசு மருத்துவமனையில் ஆவின் பாலகம் அமைத்து தருவதற்கு ஏற்பாடு செய்து தருவதாக கூறி, கடந்த ஜனவரி மாதம் என்னிடம் ரூ.5 லட்சம் பெற்றுக் கொண்டார்.
- ஆனால் இதுவரை ஆவின் பாலகம் அமைத்து தரவில்லை.
சேலம்:
சேலம் சாமிநாதபுரம் அர்த்தனாரி தெரு பகுதியை சேர்ந்த குணசேகரன் என்பவர் இன்று மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தார். கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தார். பின்னர் அவர் கூறியதாவது:-
நான் புதிய பஸ் நிலையம் பகுதியில் உள்ள தனியார் ஓட்டலில் வேலை பார்த்து வருகிறேன். சேலம் தி.மு.க. பிரமுகரின் மகன் சேலம் அரசு மருத்துவமனையில் ஆவின் பாலகம் அமைத்து தருவதற்கு ஏற்பாடு செய்து தருவதாக கூறி, கடந்த ஜனவரி மாதம் என்னிடம் ரூ.5 லட்சம் பெற்றுக் கொண்டார். ஆனால் இதுவரை ஆவின் பாலகம் அமைத்து தரவில்லை.
மேலும் அங்கு வேறு ஒருவர் ஆவின் பாலகம் நடத்தி வருகிறார். இது குறித்து கேட்டபோது, பணத்தை திருப்பி தராமல் இழுத்தடித்து வந்தார். பணத்தை திருப்பி கேட்டதற்கு ரவுடிகளை வைத்து கொலை மிரட்டல் விடுத்தும் வருகிறார்.
இது குறித்து அன்னதானப்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தும் எந்த நடவடிக்கை இல்லை. எனவே மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து, தி.மு.க பிரமுகரின் மகனிடம் இருந்து பணத்தை மீட்டு தர வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
- பிரபு (வயது 31). இவரது செல்போனுக்கு வந்த குறுந்தகவலில், ஆன்லைனில் வேலை தருவதாக கூறப்பட்டு இருந்தது.
- குறுந்தகவல் வந்த எண்ணிற்கு தொடர்பு கொண்டார். அப்போது அது போலியானது என்பது தெரியவந்தது.
சேலம்:
சேலம் தாதகாப்பட்டி நாகப்பன் மெயின் ரோடு புதுதெரு பகுதியை சேர்ந்தவர் கந்தசாமி. இவரது மகன் பிரபு (வயது 31). இவரது செல்போனுக்கு வந்த குறுந்தகவலில், ஆன்லைனில் வேலை தருவதாக கூறப்பட்டு இருந்தது.
அதை உண்மை என நம்பிய பிரபு, குறுந்தகவலில் கொடுக்கப்பட்ட லிங்கில் சென்று பார்த்தபோது, சில நிபந்தனைகளை பணம் கட்டி நிறைவேற்றினால் உடனடியாக வேலை தருவதாக கூறினர்.
இதையடுத்து பிரபு, மேற்கண்ட நபர்கள் கூறிய வங்கி கணக்கில் ரூ.2,01959 செலுத்துள்ளார். ஆனால் அவருக்கு எந்த ஒரு வேலையும் தராததால் சந்தேகம் அடைந்த பிரபு, மேற்கண்ட குறுந்தகவல் வந்த எண்ணிற்கு தொடர்பு கொண்டார். அப்போது அது போலியானது என்பது தெரியவந்தது.
இதனால் தான் ஏமாற்றப்பட்டது தெரிந்த பிரபு, இதுகுறித்து சேலம் மாநகர சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- நண்பர் ஜான் மரியா என்பவர் மூலம், கர்நாடக மாநிலம் பெங்களூர் சேர்ந்த பரத்வாஜ் என்பவர் அறிமுகமாகி உள்ளார்.
- 2020-ம் ஆண்டு ரூ.1 கோடியே 60 லட்சத்தை அவர் கூறிய நிதி நிறுவனத்தில் முதலீடு செய்தார்.
சேலம்:
சேலம் குகை மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் பெரியசாமி. இவரது மகன் விஜய் வெங்கடேஷ். இவரது நண்பர் ஜான் மரியா என்பவர் மூலம், கர்நாடக மாநிலம் பெங்களூர் சேர்ந்த பரத்வாஜ் என்பவர் அறிமுகமாகி உள்ளார்.
மேலும், பரத்வாஜ் தனது நிதி நிறுவனத்தில் முதலீடு செய்தால் பன்மடங்காக திரும்ப கிடைக்கும் என்று ஆசை வார்த்தை கூறியுள்ளார். இதை உண்மை என்று நம்பிய விஜய் வெங்கடேஷ், கடந்த 2020-ம் ஆண்டு ரூ.1 கோடியே 60 லட்சத்தை அவர் கூறிய நிதி நிறுவனத்தில் முதலீடு செய்தார்.
ஆனால் பரத்வாஜ் கூறியபடி எந்த ஒரு தொகையும் கூடுதலாக கிடைக்காததால், தான் கட்டிய பணத்தை விஜய்வெங்கடேஷ் திரும்ப கேட்டபோது தர மறுத்துள்ளார்.
இதையடுத்து விஜய் வெங்கடேஷ் சேலம் மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் செய்தார். இது குறித்து விசாரணை நடத்த சேலம் மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு உத்தரவிடப்பட்டது. அதன்பேரில் போலீசார் பெங்களூருவை சேர்ந்த பரத்வாஜ் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் பிறந்த நாளை முன்னிட்டு, அவரது முழு உருவச்சிலை, இரவோடு இரவாக வைக்கப்பட்டது.
- இதனிடையே அனுமதியின்றி இந்த சிலை வைக்கப்பட்டு இருப்பதாக வருவாய் துறையினருக்கு பல்வேறு புகார்கள் வந்தது.
ஆத்தூர்:
சேலம் மாவட்டம் ஏத்தாப்பூர் பேரூராட்சியில் நகரின் மையப் பகுதியில் கடந்த 3-ந் தேதி முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் பிறந்த நாளை முன்னிட்டு, அவரது முழு உருவச்சிலை, இரவோடு இரவாக வைக்கப்பட்டது.
இதனிடையே அனுமதி யின்றி இந்த சிலை வைக்கப்பட்டு இருப்பதாக வருவாய் துறையினருக்கு பல்வேறு புகார்கள் வந்தது. இதன் அடிப்படையில் தாசில்தார் அன்புச்செழியன் தலைமையில் ஆலோசனை நடத்தப்பட்டது.
இந்த சிலையை நிறுவியது யார்? எப்போது வைத்தனர்? என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டது. இதில் சிலை அனுமதி இன்றி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து உடனடியாக சிலையை அற்ற வேண்டும் என வருவாய்த் துறையினர் கடந்த 3 நாட்களாக கூறி வந்தனர்.
ஆனால் யாரும் சிலை அகற்ற முன்வராத நிலையில், நேற்று இரவு அந்த சிலையை ஏத்தாப்பூர் பேரூராட்சி நிர்வாகம் அப்புறப்படுத்தியது. தற்போது சிலை பேரூராட்சிக்கு சொந்தமான சமுதாயக்கூடம் பகுதியில் வைக்கப்பட்டு உள்ளது.
இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. மேலும் தற்போது சமுதாயக்கூடம் பகுதியில் வைக்கப்பட்டுள்ள கருணாநிதி சிலை பாதுகாப்பில்லாமல் இருப்பதால், அந்த சிலையை பாதுகாப்பான இடத்திற்கு மாற்ற வேண்டும் என ஏத்தாப்பூர் போலீசார் தரப்பில் கூறப்பட்டு உள்ளது.
- கோவிந்தராஜ் - மணி மேகலை. இவர்களது மகள் பத்மாவதி (வயது 38). இவரை பொம்மிடியில் திருமணம் செய்து கொடுத்தனர்.
- கடந்த மாதம் வீட்டை விட்டு வெளியே சென்ற பத்மாவதி, அதன் பின்னர் வீடு திரும்பவில்லை.
சேலம்:
சேலம் திருவாக் கவுண்டனூர் வசந்தம் பகுதியைச் சேர்ந்தவர்கள் கோவிந்தராஜ் - மணி மேகலை. இவர்களது மகள் பத்மாவதி (வயது 38). இவரை பொம்மிடியில் திருமணம் செய்து கொடுத்தனர். இவருக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.
இந்த நிலையில் பத்மாவதிக்கு 7 வருடம் முன்பு மனநிலை பாதிக்கப்பட்டது. இதற்காக தாய் மணிமேகலை வீட்டில் இருந்து பல்வேறு மருத்துவ மனைகளில் சிகிச்சை பெற்று வந்தார்.
கடந்த மாதம் வீட்டை விட்டு வெளியே சென்ற பத்மாவதி, அதன் பின்னர் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர், உறவினர்கள், அவரை பல்வேறு இடங்களில் தேடியும் பத்மாவதி கிடைக்கவில்லை.
புகார்
இதுகுறித்து சூரமங்கலம் போலீசில் தாய் மணிமேகலை புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து பத்மாவதியை தேடி வருகின்றனர்.
- 2018-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 11-ந்தேதி சேலத்தில் ரெயில் மறியல் போராட்டம் நடத்த முயன்றனர்.
- இந்த வழக்கு சேலம் ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு முதலாவது கோர்ட்டில் நடந்து வந்தது.
சேலம்:
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி அருள் எம்.எல்.ஏ. உள்பட பா.ம.க.வினர் கடந்த 2018-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 11-ந்தேதி சேலத்தில் ரெயில் மறியல் போராட்டம் நடத்த முயன்றனர்.
இதையடுத்து, ரெயில் மறியல் போராட்டம் நடத்த முயன்றதாக 5 பேர் மீது ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்களை கைது செய்தனர். இந்த வழக்கு சேலம் ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு முதலாவது கோர்ட்டில் நடந்து வந்தது.
நேற்று இந்த வழக்கில் விசாரணை முடிந்து தீர்ப்பு கூறப்பட்டது. இதில் குற்றம்சாட்டப்பட்ட, பா.ம.க. கவுரவ தலைவர் ஜி.கே.மணி, அருள் எம்.எல்.ஏ., மாநில வன்னியர் சங்க செயலாளர் கார்த்தி, மாநகர் மாவட்ட தலைவர் கதிர்ராசரத்தினம் உள்பட 5 பேரை விடுதலை செய்து நீதிபதி கலைவாணி உத்தரவிட்டார். வழக்கில் வக்கீல்கள் விஜயராசா, குமார் ஆகியோர் ஆஜராகினர்.
- கோவையில் இருந்து சேலம் வழியாக செவ்வாய், வியாழன், வெள்ளி, ஞாயிற்றுக்கிழமை ஆகிய நாட்களில் கோவை- திருப்பதி எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண் 22616) இயக்கப்படுகிறது.
- இந்த ரெயில்களில் கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக ரெயில்வே நிர்வாகம் தற்போது 2-ம் வகுப்பு சேர் கார் பெட்டிகள் 3 கூடுதலாக இணைத்துள்ளது.
சேலம்:
கோவையில் இருந்து சேலம் வழியாக செவ்வாய், வியாழன், வெள்ளி, ஞாயிற்றுக்கிழமை ஆகிய நாட்களில் கோவை- திருப்பதி எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண் 22616) இயக்கப்படுகிறது. மறு மார்க்கத்தில் திருப்பதியில் இருந்து, சேலம் வழியாக திங்கள், புதன், வியாழன், சனிக்கிழமை ஆகிய நாட்களில் திருப்பதி- கோவை எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண் 22615) இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரெயில்களில் கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக ரெயில்வே நிர்வாகம் தற்போது 2-ம் வகுப்பு சேர் கார் பெட்டிகள் 3 கூடுதலாக இணைத்துள்ளது. அதன்படி ஒரு ஏ.சி., சேர்கார் பெட்டி, 2-ம் வகுப்பு பெட்டி, பொதுப்பெட்டி, லக்கேஜ் கம் பிரேக் வேன் 2 பெட்டி களுடன் இயக்கப்படுவதாக சேலம் ரெயில்வே கோட்ட அலுவலகம் தெரிவித்து உள்ளது.
- சிவகுமார் (வயது 49). இவர், தனது கடையை மூடிவிட்டு வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் சென்றார்.
- 6 பேர் சாலையில் நின்று பேசிக்கொண்டிருந்ததாக தெரிகிறது.
ஏற்காடு:
ஏற்காடு டவுன் பகுதியில் காய்கறி கடை நடத்தி வருபவர் சிவகுமார் (வயது 49). இவர், தனது கடையை மூடிவிட்டு வீட்டிற்கு மோட்டார் சைக்கி ளில் சென்றார். அப்போது 6 பேர் சாலையில் நின்று பேசிக்கொண்டிருந்ததாக தெரிகிறது.
இதைக்கண்ட சிவ குமார், மோட்டார் சைக்கிளில் 'ஹார்ன்' அடித்தார். இதனால் சாலையில் நின்றவர்களுக்கும். சிவகுமாருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. தகராறு முற்றவே அவர்கள் சிவகுமாரை தாக்கி விட்டு தப்பி சென்றதாக கூறப்படுகிறது.
இதுதொடர்பான புகாரின் பேரில் ஏற்காடு போலீசார் விசாரணை நடத்தி 6 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்த னர். அவர்கள் யார் என்பதை அடை யாளம் காண அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சி களை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.
- 65 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் இறந்து கிடந்தார்.
- தகவல் அறிந்த அரசு ஆஸ்பத்திரி போலீசார் முதியவரின் உடலை மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரி பிணவறைக்கு அனுப்பி வைத்தனர்.
சேலம்:
சேலம் அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில் 65 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் இறந்து கிடந்தார். தகவல் அறிந்த அரசு ஆஸ்பத்திரி போலீசார் முதியவரின் உடலை மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரி பிணவறைக்கு அனுப்பி வைத்தனர். அவரது 2 கால் முட்டி பகுதிகளில் காயத்தழும்பு உள்ளன. முதியவர் இறந்தது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து முதியவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- அரசு துறைகளின் சார்பில் முடிவுற்ற வளர்ச்சித் திட்டப் பணிகளைத் தொடங்கி வைத்து, புதிய திட்டப்பணிகளைத் திறந்து வைக்கிறார்.
- குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணையிலிருந்து தண்ணீரை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார்.
சேலம்:
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகிற 11-ந்தேதி சேலம் மாவட்டத்திற்கு வருகிறார். ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் ஈரடுக்கு பஸ் நிலையமாக கட்டி முடிக்கப்பட்டு உள்ள சேலம், பழைய பேருந்து நிலையத்தினை அவர் பொதுமக்களின் பயன்பாட்டிற்குத் திறந்து வைக்கிறார்.
மேலும், சேலம் கருப்பூர் அரசினர் பொறியியல் கல்லூரியில் நடைபெறவுள்ள அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் 50 ஆயிரம் பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார்.
இந்நிகழ்ச்சியில் இளம்பிள்ளை கூட்டுக் குடிநீர் திட்டம், அரசு சட்டக்கல்லூரி மாணவ, மாணவியர் விடுதிகளுடன் கூடிய நிரந்தர கட்டம், சீர்மிகு நகரத் திட்டம், மறு சீரமைப்புப் பணிகள், பள்ளப்பட்டி ஏரி புனரமைக்கும் பணிகள் மற்றும் புதிய பாலப் பணிகள் உட்பட பல்வேறு அரசு துறைகளின் சார்பில் முடிவுற்ற வளர்ச்சித் திட்டப் பணிகளைத் தொடங்கி வைத்து, புதிய திட்டப்பணிகளைத் திறந்து வைக்கிறார்.
தொடர்ந்து 12-ந்தேதி காலையில் காவிரி டெல்டா பகுதி குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணையிலிருந்து தண்ணீரை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார். சேலம் மாவட்டத்துக்கு வரும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை உற்சாகமாக வரவேற்க சேலம் மாவட்ட தி.மு.க. வினர் மற்றும் மாவட்ட நிர்வாகத்தினர் ஏற்பாடு செய்து வருகிறார்கள்.






