என் மலர்tooltip icon

    சேலம்

    • கடந்த சில நாட்களாக அணைக்கு வரும் தண்ணீரை விட அதிகளவில் தண்ணீர் திறக்கப்பட்டு வருவதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் குறைந்து வருகிறது.
    • அணையில் தற்போது 82.01 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது.

    மேட்டூர்:

    கர்நாடகாவில் உள்ள காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்யும் மழையின் தீவிரத்தை பொறுத்து மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தும், குறைந்தும் வந்து கொண்டு இருக்கிறது. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக அணைக்கு வரும் தண்ணீரை விட அதிகளவில் தண்ணீர் திறக்கப்பட்டு வருவதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் குறைந்து வருகிறது.

    இன்று காலை மேட்டூர் அணைக்கு வினாடிக்கு 6 ஆயிரத்து 208 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்த நிலையில் அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு வினாடிக்கு 12 ஆயிரம் கனஅடியும், கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனத்துக்கு வினாடிக்கு 400 கனஅடி தண்ணீரும் திறக்கப்பட்டு வருகிறது.

    இதன் காரணமாக அணையின் நீர்மட்டம் 112.50 அடியாக குறைந்து காணப்பட்டது. அணையில் தற்போது 82.01 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது.

    • எஸ்ஐஆர் பணிகளில் பல்வேறு இடங்களில் குளறுபடி நடப்பதாக புகார் வருகிறது.
    • 4ம் வகுப்பு வரை மட்டுமே படித்தவர்களை மாநில அரசு எஸ்ஐஆர் பணிகளில் ஈடுபடுத்துகின்றனர்.

    சேலம் விமான நிலையத்தில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    எஸ்ஐஆர் மூலம் நேர்மையான வாக்காளர் பட்டியல் தயாராகும். உண்மையான வாக்காளர்கள் பட்டியலில் இடம்பெற் வேண்டும் என்பதற்காகவே எஸ்ஐஆர் பணி மேற்கொள்ளப்படுகிறது.

    நேர்மையான முறையில் தேர்தல் நடைபெற்றால் உண்மையான வாக்காளர்கள் வாக்களிக்க வாய்ப்பு கிடைக்கும். மாநிலம் முழுவதும் நடைபெறும் எஸ்ஐஆர் பணிகளில் பல்வேறு இடங்களில் குளறுபடி நடப்பதாக புகார் வருகிறது.

    தமிழ்நாட்டில் எஸ்ஐஆர் பணிகள் சுணக்கமாக நடைபெற்று வருகிறது. எஸ்ஐஆர் பணிகள் முறையாக நடைபெற கூடாது என அதிகாரிகள் சிலர் செயல்படுவதாக புகார் எழுகிறது.

    எஸ்ஐஆர் பணிகளில் குளறுபடி செய்ய அப்பணிகளில் ஈடுபடும் மாநில அரசு அலுவலர்களுக்கு மாநில அரசு வாய்மொழி உத்தரவை பிறப்பித்துள்ளது.

    4ம் வகுப்பு வரை மட்டுமே படித்தவர்களை மாநில அரசு எஸ்ஐஆர் பணிகளில் ஈடுபடுத்துகின்றனர். ஒவ்வொரு தொகுதிகளிலும் பல்லாயிரக்கணக்கான இறந்த, போலி வாக்காளர் பெயர்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ளது. போலி வாக்காளர்களை வைத்து கள்ளஓட்டு போட்டு திமுக வெற்றி பெற்று வருகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • காங்கிரஸ் கூட்டணிக்கு சரியான பதிலடியை பொதுமக்கள் கொடுத்துள்ளனர்.
    • பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, பீகார் முதல்வர் நிதிஷ்குமாருக்கு வாழ்த்துகள்.

    சேலம் விமான நிலையத்தில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    பீகார் சட்டசபை தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி சரித்திர சாதனை வெற்றி பெற்றுள்ளது.

    பீகார் சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கூட்டணிக்கு சரியான பதிலடியை பொதுமக்கள் கொடுத்துள்ளனர்.

    பீகார் தேர்தல் வெற்றி பாஜக கூட்டணி மீது மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கையை உறுதி செய்துள்ளது.

    பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, பீகார் முதல்வர் நிதிஷ்குமாருக்கு வாழ்த்துகள்.

    பாஜக கூட்டணி பீகார் மாநிலத்தின் முன்னேற்றத்தையும், பொது நலனையும் துரிதப்படுத்தும் என நம்புகிறேன்.

    பல்வேறு விமர்சனங்கள், எஸ்ஐஆர் முறைகேடுகள் என கூறப்பட்ட பொய்களையும் தாண்டி பீகாரில் சிரத்திர வெற்றிப் பெற்றுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • மேகதாது பகுதி இரண்டு மலைகளுக்கு நடுவில் உள்ளது.
    • தமிழக மலைப்பகுதியில் பெய்யும் மழை நீர் ஒகேனக்கல் வழியாக மேட்டூருக்கு நேரடியாக வருகிறது.

    கர்நாடக மாநிலம் குடகு மாவட்டத்தில் உற்பத்தியாகும் காவிரி ஆறு அங்குள்ள கிருஷ்ணராஜசாகர், கபினி, ஹாரங்கி ஆகிய அணைகளை நிரப்புகிறது. பின்னர் அங்கிருந்து திறக்கப்படும் உபரிநீர் தமிழகத்துக்கு காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டு ஒகேனக்கல் வழியாக தமிழகத்துக்குள் நுழைகிறது. பின்னர் அங்கிருந்து பயணிக்கும் காவிரி ஆறு மேட்டூர் அணையை வந்தடைகிறது.

    மேட்டூர் அணை மூலம் தமிழகத்தில் சேலம், நாமக்கல், ஈரோடு, திருச்சி, தஞ்சாவூர், கரூர், திருவாரூர், அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, நாகை, கடலூர், மயிலாடுதுறை ஆகிய 13 மாவட்டங்களில் சுமார் 16 லட்சம் விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்று வருகிறது.

    இதற்காக ஒவ்வொரு ஆண்டும் தண்ணீர் இருப்பை பொறுத்து மேட்டூர் அணையில் இருந்து ஜூன் மாதம் 12-ந் தேதி முதல் ஜனவரி மாதம் 28-ந் தேதி வரை தண்ணீர் திறக்கப்படும். இதன் மூலம் குறுவை, சம்பா, தாளடி ஆகிய முப்போக விளைச்சல் நடைபெறும். இது தவிர பல்வேறு கூட்டு குடிநீர் திட்டப்பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கர்நாடகாவின் குடகு மாவட்டத்தில் உற்பத்தியாகும் காவிரி ஆறு மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகாரில் கடலில் கலக்கிறது.

    இதற்கிடையே தமிழக-கர்நாடகா இடையே நீர்பங்கீடு பிரச்சனை சுமார் 50 ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்து வருகிறது. மழைக்காலங்களில் உபரிநீரை காவிரியில் திறந்து விட்டு தமிழகத்துக்கான பங்கீட்டை அளவுக்கு அதிகமாக வழங்கி விட்டதாக ஒவ்வொரு முறையும் கர்நாடக அரசு கூறி வருகிறது.

    இந்த நிலையில் பெங்களூரு மாநகரின் குடிநீர் பிரச்சனையை தீர்ப்பதற்காக காவிரி ஆற்றின் குறுக்கே ராம்நகர் மாவட்டம் மேகதாது என்ற இடத்தில் கர்நாடக அரசு புதிய அணையை கட்ட 2018-ம் ஆண்டு மத்திய நீர்வள ஆணையத்திடம் விரிவான திட்ட அறிக்கையை தாக்கல் செய்தது. இந்த திட்டத்தின் மதிப்பு ரூ.14 ஆயிரத்து 500 கோடியாகும். மேலும் இந்த அணைக்காக 4,716 ஹெக்டேர் காடுகளும், 280 ஹெக்டேர் வருவாய் நிலங்களும் கையகப்படுத்தப்பட்டுள்ளது. இது தவிர மேகதாது அணையில் 67 டி.எம்.சி. தண்ணீரை சேமித்து வைக்கவும், இதன் மூலம் பாசனம் மற்றும் குடிநீர், 400 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யவும் முடிவு செய்துள்ளனர்.

    கர்நாடகாவின் மேதாது திட்டத்துக்கு தமிழக அரசு மற்றும் பல்வேறு விவசாய சங்கங்களும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இது தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டிலும் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் நேற்று நீதி பதி தீர்ப்பு வழங்கினார்.

    அதில் மேகதாது அணைக்கான விரிவான திட்ட அறிக்கைக்கு மத்திய நீர்வள ஆணையம் ஒப்புதல் அளித்தால், சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து சட்டப்படியான நடவடிக்கையை தமிழ்நாடு அரசு முன்னெடுக்கலாம், எனவே கர்நாடக அரசு கடந்த 2018-ம் ஆண்டு சமர்பித்த விரிவான திட்ட அறிக்கையை நிராகரித்து திருப்பி அனுப்ப மத்திய நீர்வள ஆணையத்திற்கு உத்தரவிடக்கோரிய தமிழ்நாடு அரசு உள்ளிட்ட மனுக்கள் உரிய நேரத்துக்கு முன்பே தாக்கல் செய்துள்ளதை கருத்தில் கொண்டு மனுக்கள் முடித்து வைத்து தள்ளுபடி செய்யப்படுகின்றன என்று அந்த உத்தரவில் கூறப்பட்டு இருந்தது. இந்த தீர்ப்புக்கு கர்நாடக அரசு வரவேற்று உள்ளது.

    இந்த தீர்ப்பு குறித்து கர்நாடக துணை முதல்-மந்திரி டி.கே. சிவகுமார் கூறும்போது, மேகதாது திட்டம் கர்நாடகாவை விட தமிழ்நாட்டிற்கு அதிக நன்மை பயக்கும். கடினமான காலங்களில் தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறந்து விட இந்த திட்டம் உதவும். எனவே இந்த தீர்ப்பு தமிழ்நாட்டிற்கு கிடைத்த வெற்றி என்று குறிப்பிட்டு இருந்தார்.

    இந்த நிலையில் காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணை கட்டினால் டெல்டா மாவட்டங்கள் பாலைவனமாக மாறிவிடும் என விவசாய சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

     

    இதுகுறித்து தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு கூறியதாவது:-

    1924-ம் ஆண்டில் அப்போதைய சென்னை மாநில அரசுக்கும் மைசூர் அரசுக்கும் இடையே ஏற்பட்ட ஒப்பந்தத்தின்படி கர்நாடகம் 5 லட்சத்து 90 ஆயிரம் ஏக்கரில் மட்டுமே காவிரியில் விவசாயம் செய்ய அனுமதி வழங்கப்பட்டது. தமிழகத்தில் 30 லட்சம் ஏக்கரில் சாகுபடி செய்ய அந்த ஒப்பந்தம் அனுமதி வழங்கியது.

    அதேபோன்று 400, 500 டி.எம்.சி. தண்ணீர் தமிழகத்துக்கு கிடைத்தது. மேலும் அந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் மேட்டூரில் தமிழக அரசும், கிருஷ்ணராஜ சாகரில் கர்நாடக அரசும் அணைகளை கட்டிக் கொண்டது.

    அதன்படி 50 ஆண்டுகள் நமக்கு எந்த பிரச்சனையும் இல்லாமல் தண்ணீர் கிடைத்தது. அதன் பின்னர் 1974 முதல் 78 வரை தமிழக அரசியல்வாதிகள் தூங்கிக் கொண்டிருந்ததால் கர்நாடகம் கபினி, ஹேரங்கி, ஹேமாவதி, ராம தீர்த்தம், லட்சுமண தீர்த்தம் ஆகிய 5 அணைகளை கட்டி இன்றைக்கு 28 லட்சம் ஏக்கரில் விவசாயம் செய்கிறது.

    நமது சாகுபடி பரப்பளவு சுருங்கியது. பின்னர் தமிழகத்தில் ஏற்பட்ட வறட்சி காரணமாக விவசாயிகளும், தமிழக அரசும் விழித்துக் கொண்டு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த காரணத்தினால் 2007-ல் காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டது.

    அதன் பின்னர் 2018 உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் ஜனவரி, பிப்ரவரி, மார்ச், ஏப்ரல், மே மாதங்களில் தமிழகத்துக்கு காவிரியில் 2.5 டிஎம்சி தண்ணீர் திறந்து விட வேண்டும் என தீர்ப்பளித்தது. ஆனால் தண்ணீர் அவர்கள் முறையாக திறப்பதில்லை.

    தற்போது மேகதாதுவில் அணை கட்டினால் காவிரி டெல்டா மாவட்டங்கள் பாலைவனமாக மாறிவிடும். அதன் மூலம் பெட்ரோல், டீசல், ஹைட்ரோ கார்பன் போன்ற திட்டங்களை இங்கு செயல்படுத்துவதற்கு மத்திய அரசுக்கு வசதியாக இருக்கும்.

    மேகதாது பகுதி இரண்டு மலைகளுக்கு நடுவில் உள்ளது. இந்த மலையின் ஒரு பகுதி கர்நாடகத்திலும் இன்னொரு பகுதி தமிழகத்திலும் உள்ளது. அதன் நீர் வழித்தடம் கர்நாடகாவில் உள்ளது.

    தற்போது தமிழக மலைப்பகுதியில் பெய்யும் மழை நீர் ஒகேனக்கல் வழியாக மேட்டூருக்கு நேரடியாக வருகிறது. மேகதாதுவில் அணை கட்டும் போது அந்த நீர் நமக்கு வராது.

    அதுமட்டுமல்லாமல் காவிரியில் நமக்கு கிருஷ்ணராஜ சாகர் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடுவதே அளவாக உள்ளது. தற்போது மேகதாது அணை அந்த வழித்தடத்தில் கட்டப்படுவதால் நமக்கு வரும் தண்ணீரின் அளவும் தெரியாமல் போய்விடும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் கூறியதாவது:-

    பாராளுமன்றத்தில் பெரும்பாலான உறுப்பினர்களின் ஆதரவோடு காவிரி நடுவர் மன்றம் அமைக்கப்பட்டது. இது உச்சநீதிமன்றத்துக்கு இணையான அதிகாரம் உடையது. இதற்கு முன்பு தமிழகம் மற்றும் கர்நாடகா அரசுகள் காவிரிநீர் தொடர்பான பிரச்சனை வழக்குகளை விசாரித்த உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்து காவிரி நடுவர் மன்றத்தில் முறையிடுங்கள் என கூறியது வரலாறு. அப்படி இருக்கையில் தற்போது மேகதாது அணை கட்ட திட்ட அறிக்கைக்கு கர்நாடகாவுக்கு உச்சநீதிமன்றம் தடைவிதிக்க மறுத்தது அரசியல் சட்ட சாசனத்தை மீறும் செயலாகும்.

    இந்த விவகாரம் தொடர்பாக தமிழக முதலமைச்சர் இதுவரை எந்த பதிலும் அளிக்காமல் மவுனமாக உள்ளார். மேகதாதுவில் அணை கட்டினால் சென்னை உள்பட 22 மாவட்டங்களில் குடிநீர் ஆதாரம் பறிபோகும். 25 லட்சம் ஏக்கர் விளை நிலங்கள் பாலைவனமாகி விடும். டெல்டா விவசாயிகள் அகதிகளாக வெளியேறும் சூழ்நிலை உருவாகும்.

    எனவே தமிழக முதலமைச்சர் உடனடியாக அமைச்சரவை கூட்டத்தை கூட்டி மேகதாது விவகாரம் தொடர்பாக உறுதியான முடிவை எடுக்க வேண்டும். இந்த பிரச்சனையில் தமிழக அரசு நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய போகிறதா? சட்டப்படி என்னென்ன நடவடிக்கைகள் எடுக்க உள்ளோம் ? என்பதை உடனே தெளிவுப்படுத்த வேண்டும். எந்த காரணத்தை கொண்டும் கர்நாடக அரசை மேகதாதுவில் அணை கட்ட விடக்கூடாது. அதனை தடுத்து தமிழகத்தின் உரிமையை மீட்க உறுதியான நடவடிக்கையை அரசு எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • மாநகர போலீஸ் உயர் அதிகாரிகள் உத்தரவின் பேரில் கலெக்டர் அலுவலகத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.
    • மோப்பநாய் ரூபியையும் அழைத்துச் சென்று மெட்டல்டிடெக்டர் உள்ளிட்ட வெடிகுண்டு கண்டுபிடிக்கும் கருவிகள் உதவியுடன் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

    சேலம்:

    சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு ஏற்கனவே 3 முறை வெடிகுண்டு மிரட்டல்கள் வந்த நிலையில் மீண்டும் இன்று கலெக்டர் அலுவலக மெயிலுக்கு வெடிகுண்டு மிரட்டல் மின்னஞ்சல் மூலமாக விடுக்கப்பட்டுள்ளது.

    கலெக்டர் அலுவலகத்திற்கு வந்த அந்த மெயிலில் மதியம் ஒரு மணிக்கு குண்டு வெடித்து சிதறும் என கூறப்பட்டுள்ளது. இதனை பார்த்த கலெக்டர் அலுவலக ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக மாநகர போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதனைத் தொடர்ந்து மாநகர போலீஸ் உயர் அதிகாரிகள் உத்தரவின் பேரில் கலெக்டர் அலுவலகத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.

    தொடர்ந்து வெடிகுண்டு கண்டுபிடிப்பு மற்றும் தடுப்பு பிரிவு அதிகாரிகள் இன்ஸ்பெக்டர் கோவிந்தராஜ் தலைமையில் அதிரடியாக சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    மேலும் மோப்பநாய் ரூபியையும் அழைத்துச் சென்று மெட்டல்டிடெக்டர் உள்ளிட்ட வெடிகுண்டு கண்டுபிடிக்கும் கருவிகள் உதவியுடன் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

    இதனால் கலெக்டர் அலுவலக வளாகத்தில் பரபரப்பு நிலவி வருகிறது.

    ஆனாலும் கலெக்டர் அலுவலக ஊழியர்கள் வழக்கம் போல பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    ஏற்கனவே 3 முறை கலெக்டர் அலுவலகத்திற்கு மிரட்டல் விடுத்த நிலையில் மீண்டும் தற்போது கலெக்டர் அலுவலகத்திற்கு விடுக்கப்பட்ட வெடிகுண்டு மிரட்டலால் மிரட்டல் விடுப்பவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்பது கலெக்டர் அலுவலக ஊழியர்களின் பெரும் எதிர்பார்ப்பாக உள்ளது.

    • காற்றை எப்படி தடைபோட முடியாதோ., அப்படி எவராலும் அதிமுக-வை தடுத்து நிறுத்த முடியாது.
    • அதிமுக-வை தாக்க தாக்க வளர்ந்து கொண்டேதான் இருக்கும்.

    ஓமலூரில் அதிமுக 54-ம் ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:-

    * எத்தனை எட்டப்பன்கள், துரோகிகள் நம் இயக்கத்தில் இருந்து கொண்டே நம்மை வீழ்த்த முயற்சி செய்தார்கள். மக்கள், தொண்டர்கள் துணையோடு அனைத்து துரோகங்களையும் முறியடித்து உள்ளோம்.

    * என்ன பூச்சாண்டி காட்டினாலும் எடப்பாடி பழனிசாமி பயப்படமாட்டார்

    * அதிமுகவை எந்த கொம்பனாலும் அசைக்கவோ.. ஆட்டவோ முடியாது.

    * காற்றை எப்படி தடைபோட முடியாதோ., அப்படி எவராலும் அதிமுக-வை தடுத்து நிறுத்த முடியாது.

    * திமுக ஒரு கட்சி அல்ல. அது ஒரு கார்ப்பரேட் கம்பெனி.

    * அதிமுக-வை தாக்க தாக்க வளர்ந்து கொண்டேதான் இருக்கும்.

    * 2026 சட்டமன்றத் தேர்தலில் பெரும்பான்மையான இடங்களில் அதிமுக வெற்றி பெறும்.

    * பழுத்த மரத்தில்தான் கல்லடி படும் என்பதுபோல் அதிமுக மீது அவதூறு பிரசாரம்.

    * எந்த இயக்கத்திலும் இப்படி ஒரு பிரச்சனை வந்தது கிடையாது.

    * ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு நிறைய சோதனைகளை சந்தித்துக் கொண்டிருக்கிறோம்.

    இவ்வாறு எடப்பாடி பழனிசாமி பேசினார்.

    • கொலை செய்துவிட்டு உடலை கல்குவாரியில் வீசிய நபரை போலீசார் சுட்டுப்பிடித்துள்ளனர்.
    • மூதாட்டிகள் இருவரும் நகைக்காக கொலை செய்யப்பட்டது விசாரணையில் தெரியவந்தது.

    சேலம் மாவட்டம் இளம்பிள்ளை அருகே கல்குவாரியில் 2 மூதாட்டிகள் சடலமாக மீட்கப்பட்டனர். மூதாட்டிகள் இருவரும் நகைக்காக கொலை செய்யப்பட்டது விசாரணையில் தெரியவந்தது.

    கொலை குற்றவாளிகளை போலீசார் தேடி வந்தன நிலையில், 2 மூதாட்டிகளை கொலை செய்துவிட்டு உடலை கல்குவாரியில் வீசிய நபரை போலீசார் சுட்டுப்பிடித்துள்ளனர்.

    நகைக்காக மூதாட்டி பாவாயி, பெரியம்மாளை கொலை செய்து குவாரி குட்டையில் வீசிய அய்யானர் என்பவரை போலீசார் சுட்டுப்பிடித்துள்ளனர்.

    இரண்டு மூதாட்டிகளை கொலை செய்த அய்யனாரின் காலில் துப்பாக்கியால் காவல்துறையினர் சுட்டு பிடித்துள்ளனர்.

    • சேலம் மாநகரில் இன்று அதிகாலை 2 மணியளவில் தொடங்கிய மழை விடிய விடிய சாரல் மழையாக பெய்தது.
    • மழையை தொடர்ந்து மாவட்டம் முழுவதும் குளிர்ந்த காற்று வீசியது.

    சேலம்:

    சேலம் மாவட்டத்தில் கடந்த வாரம் பரவலாக மழை பெய்த நிலையில் பின்னர் வறண்ட வானிலையே நிலவியது. இதனால் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது.

    இந்த நிலையில் சீதோஷ்ண நிலையில் திடீர் மாற்றம் ஏற்பட்டு நேற்றிரவு வானில் திடீரென கரு மேகங்கள் திரண்டன. பின்னர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் சாரல் மழையாக பெய்தது.

    குறிப்பாக ஏற்காட்டில் நேற்றிரவு 11 மணிக்கு தொடங்கிய மழை சாரல் மழையாக இன்று காலையும் பெய்தது. இதனால் ஏற்காட்டில் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கி உள்ளது. மேலும் தொடர் மழையால் ஏற்காட்டில் நேற்றிரவு முதல் கடும் குளிர் நிலவி வருகிறது. இதனால் ஏற்காட்டில் வசிக்கும் பொதுமக்கள் கடும் அவதி அடைந்துள்ளனர். விடிய, விடிய பெய்து வரும் சாரல் மழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டு உள்ளது.

    சேலம் மாநகரில் இன்று அதிகாலை 2 மணியளவில் தொடங்கிய மழை விடிய விடிய சாரல் மழையாக பெய்தது. இந்த மழையால் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது. இன்று காலையிலும் மழை பெய்ததால் பள்ளி, கல்லூரிக்கு செல்லும் மாணவ-மாணவிகள் மற்றும் வேலைக்கு செல்பவர்களும் அவதி அடைந்தனர்.

    இதே போல டேனீஸ்பேட்டை சுற்றுவட்டார பகுதிகளிலும் விடிய விடிய மழை பெய்தது. இந்த மழையால் வயல்வெளிகள் மற்றும் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது. மழையை தொடர்ந்து மாவட்டம் முழுவதும் குளிர்ந்த காற்று வீசியது.

    மாவட்டத்தில் அதிகபட்சமாக ஏற்காட்டில் 26.4 மி.மீ. மழை பதிவாகி உள்ளது. சேலம் மாநகர் 9, டேனீஸ்பேட்டை 25.2 மி.மீ. மழை என மாவட்டம் முழுவதும் 61.6 மி.மீ. மழை பதிவாகி உள்ளது. இன்று காலையும் சேலம் மாநகர் மற்றும் மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் மழை தூறிய படியே இருந்தது.

    நாமக்கல் மாவட்டத்திலும் கொல்லிமலை செம்மேடு, புதுச்சத்திரம், சேந்தமங்கலம், ராசிபுரம், உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-

    மங்களபுரம்-20.20, புதுச்சத்திரம்-9, ராசிபுரம்-32, சேந்தமங்கலம்-2.20, கொல்லிமலை செம்மேடு-17 என மாவட்டம் முழுவதும் 80.40 மி.மீட்டர் மழை பெய்தது.

    • 2 பேரின் உறவினர்களும் பல்வேறு இடங்களில் தேடிப்பார்த்தனர்.
    • குட்டையில் காணாமல் போன மூதாட்டிகள் பாவாயி, பெரியம்மாள் ஆகியோர் பிணமாக கிடப்பதாக மகுடஞ்சாவடி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

    சேலம்:

    சேலம் இளம்பிள்ளை அருகேயுள்ள இடங்கணசாலை நகராட்சிக்குட்பட்ட தூதனூர் பகுதியைச் சேர்ந்தவர் பாவாயி (70) விவசாய கூலி தொழிலாளி. அதே பகுதியைச் சேர்ந்தவர் பெரியம்மாள் (75) ஆடுகளை வளர்த்து வாழ்ந்து வந்தார். இவர்கள் 2 பேரும் நேற்று காலை 9 மணியளவில் வீட்டை விட்டு வெளியே சென்றனர். பின்னர் அவர்கள் இரவு வரை வீடு திரும்பவில்லை. இதையடுத்து 2 பேரின் உறவினர்களும் பல்வேறு இடங்களில் தேடிப்பார்த்தனர். ஆனால் அவர்கள் காணவில்லை. இதுகுறித்து மகுடஞ்சாவடி போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது.

    இந்த நிலையில் தூதனூர் பகுதியில் அம்மாசி என்பவருக்கு சொந்தமான கல்குவாரியில் உள்ள தண்ணீர் குட்டையில் காணாமல் போன மூதாட்டிகள் பாவாயி, பெரியம்மாள் ஆகியோர் பிணமாக கிடப்பதாக மகுடஞ்சாவடி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

    இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற மகுடஞ்சாவடி போலீசார் தீயணைப்பு துறை வீரர்கள் உதவியோடு 2 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் மூதாட்டிகள் அணிந்திருந்த நகைகள் காணாமல் போனதால் நகைக்காக 2 மூதாட்டிகளையும் மர்ம நபர்கள் கொலை செய்து கல்குவாரி தண்ணீரில் வீசி சென்றார்களா? என்ற கோணத்தில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் சேலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • அருள் பெத்தநாயக்கன்பாளையம் அருகே வடுகம்பட்டி பகுதியில் கட்சி நிர்வாகி துக்க வீட்டிற்கு சென்றார்.
    • அருள் எம்.எல்.ஏ. தாக்குதல் நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி சேலம் மாவட்ட சூப்பிரண்டு அலுவலகத்துக்கு புகார் கொடுக்க வந்தார்.

    சேலம்:

    சேலம் மேற்கு தொகுதி பா.ம.க. எம்.எல்.ஏ. அருள் இன்று தனது ஆதரவாளர்களுடன் காரில் சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள பெத்தநாயக்கன்பாளையம் அருகே வடுகம்பட்டி பகுதியில் கட்சி நிர்வாகி துக்க வீட்டிற்கு சென்றார். பின்னர் அங்கிருந்து மீண்டும் சேலம் வந்து கொண்டிருந்தார்.

    அப்போது அன்புமணி ஆதரவாளர்கள் அங்கு நின்று கொண்டிருந்தனர். திடீரென அவர்கள் கார்களை வழிமறித்து நிறுத்தி அருள் எம்.எல்.ஏ.வுடன் வாக்குவாதம் செய்தனர். பின்னர் திடீரென அவர்கள் அருள் எம்.எல்.ஏ. சென்ற கார் மற்றும் அவருடன் சென்ற 15-க்கும் மேற்பட்ட கார்கள் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். இதில் அந்த கார்களின் கண்ணாடி உடைந்து சேதமானது.

    இதனால் அங்கு பதட்டமான சூழ்நிலை நிலவியது. இந்த மோதல் பற்றி தெரியவந்ததும் சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து சென்றனர். பின்னர் அவர்கள் அருள் எம்.எல்.ஏ.வை மீட்டு அனுப்பி வைத்தனர். இதையடுத்து அருள் எம்.எல்.ஏ. தாக்குதல் நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி சேலம் மாவட்ட சூப்பிரண்டு அலுவலகத்துக்கு புகார் கொடுக்க வந்தார். அருள் எம்.எல்.ஏ. கூறும்போது, என்னை கொலை செய்யும் முயற்சியில் தாக்குதல் நடத்தினர் என்று தெரிவித்தார்.

    • வேண்டுமென்றே திட்டமிட்டு ஒரு குற்றச்சாட்டை செங்கோட்டையன் கூறினார்.
    • செங்கோட்டையன் தி.மு.க.வை எதிர்த்து சட்டமன்றத்தில் ஒரு வார்த்தை கூட பேசியது கிடையாது.

    சேலம்:

    சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்த அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியதாவது:-

    * வேண்டுமென்றே திட்டமிட்டு ஒரு குற்றச்சாட்டை செங்கோட்டையன் கூறினார்.

    * செங்கோட்டையன் தி.மு.க.வை எதிர்த்து சட்டமன்றத்தில் ஒரு வார்த்தை கூட பேசியது கிடையாது.

    * சந்தர்ப்ப சூழ்நிலைக்கு ஏற்றவாறு தங்களை மாற்றிக் கொள்பவர்கள்தான் ஓபிஎஸ், செங்கோட்டையன் போன்றோர்.

    * தி.மு.க.வை ஆட்சியில் அமர்த்த ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் விரும்புகிறார்கள்.

    * 2026 தேர்தலில் தி.மு.க.வுக்கு பி டீமாக செயல்படுவது தான் அவர்களின் விருப்பம் என்றார்.

    • ஈரோடு பகுதியில் மாய உலகத்தை உருவாக்கி சிற்றரசு போல செயல்பட்டவர் செங்கோட்டையன்.
    • அ.தி.மு.க.வில் முறையாக உட்கட்சி தேர்தல் நடத்தி பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டவன் நான்.

    சேலம்:

    அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்டது குறித்து விளக்கம் அளித்த செங்கோட்டையன், எடப்பாடி பழனிசாமி மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.

    இதையடுத்து சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்த அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியதாவது:-

    * கிட்டத்தட்ட 6 மாதங்களாக செங்கோட்டையனின் நடவடிக்கை கட்சிக்கு எதிரானதாக இருந்தது.

    * ஜெயலலிதா விசுவாசியாக இருந்தால் செங்கோட்டையன் ஏன் அமைச்சரவையில் இருந்து விடுவிக்கப்பட்டார்.

    * நான் முதலமைச்சராக ஆன பின்னர் தான் செங்கோட்டையன் மீண்டும் அமைச்சரானார்.

    * ஈரோடு பகுதியில் மாய உலகத்தை உருவாக்கி சிற்றரசு போல செயல்பட்டவர் செங்கோட்டையன்.

    * ஜெயலலிதாவின் புகைப்படம் இல்லாததால் விழாவில் பங்கேற்கவில்லை என செங்கோட்டையன் கூறியிருந்தார்.

    * குற்றவாளி சசிகலா, தப்பித்தது தமிழகம் என சமூக வலைத்தளத்தில் பதிவிட்டவர் ஓ.பன்னீர்செல்வம்.

    * அ.தி.மு.க. பொதுக்குழுவில் சிறப்பு தீர்மானம் நிறைவேற்றி ஓ.பன்னீர்செல்வம் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார்.

    * சேர்க்க வேண்டுமென செங்கோட்டையன் கூறியவர்கள் உறுப்பினர் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டவர்கள், பிரிந்து சென்றவர்கள் அல்ல.

    * அ.தி.மு.க.வில் முறையாக உட்கட்சி தேர்தல் நடத்தி பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டவன் நான்.

    * அ.தி.மு.க.வின் சட்டவிதிப்படி தான் அனைத்தும் நடக்கிறது என்பது செங்கோட்டையனுக்கு தெரியாதா?

    * அ.தி.மு.க. தலைமைக்கு எதிராக செயல்பட்டால் வேடிக்கைப் பார்த்துக் கொண்டு இருக்க மாட்டோம்.

    * அதிமுகவைப் பற்றி பேச டிடிவி தினகரனுக்கு எந்த தகுதியும் இல்லை.

    * கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் அ.தி.மு.க. ஆட்சியில் சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்பட்டது என்றார்.

    ×